PDA

View Full Version : அவையறிந்து பேசுக.



M.Jagadeesan
21-05-2011, 03:38 AM
செல்வந்தர் ஒருவர் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அதைக் கவனித்துக் கொள்ள வேலைக்காரன் ஒருவனை ஏற்பாடு செய்திருந்தார்.ஒருநாள் வேலைக்காரன் வரவில்லை.எனவே தானே அதற்கு உணவு கொடுக்க விரும்பினார்.ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி, ஒரு தேக்கரண்டியில் எடுத்து அதன் வாயில் ஊட்ட முனைந்தார்.அந்த நாயோ தனக்குப் பொருந்தாத எதையோ கொடுப்பதாக நினைத்து, உண்ண மறுத்து திமிறிக்கொண்டு இருந்தது. செல்வந்தரோ விடாப்பிடியாக பாலை ஊட்ட முயன்றார். இருவருக்கும் நடந்த போராட்டத்தில், கிண்ணம் தவறிக் கீழே விழுந்து பால் முழுவதும் தரையில் கொட்டியது.இதனால் வெறுப்படைந்த செல்வந்தர் நாயைத் திட்டிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தார்.

அமர்ந்தவர் அடுத்து நடந்த நிகழ்வைப் பார்த்து, பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்.கீழே கொட்டியிருந்த பாலை அவரது செல்ல நாய் ஆவலுடன் நக்கிக் குடித்துக் கொண்டிருந்தது. நாயின் இயல்புக்கு ஏற்றவாறு கொடுக்காமல், தான் எண்ணியவாறு கொடுக்க நினைத்த தம் அறியாமையை எண்ணி வெட்கப்பட்டார்.

அவையில் தம் கருத்தைச் சொல்ல முற்படுபவர்கள் அவையின் தன்மை அறிந்து பேசவேண்டும். பாமரர்கள் நிறைந்துள்ள அவையில் உயர்ந்த நடையில் பேசுவதால் பயன் இல்லை.கற்றுத் துறைபோகிய சான்றோர்கள் நிறைந்த அவையில் வித்தக நடையில் பேசவேண்டும்.பேரறிஞர் அண்ணாவின் வெற்றிக்குக் காரணம் அவர் அவை அறிந்து பேசியதுதானே!

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

கருத்து:அறிவுடையார் முன்பு, தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற பேசவேண்டும். நூலறிவற்ற பாமரர்கள் முன்பு, தாமும் வெண்மையுடையராகக் காட்ட வேண்டும்.

ஒளியார்= அறிவுடையோர். வெளியார்= அறிவிலே வெண்மை கொண்டவர்கள்.
வான்சுதை=வெண்மை நிறம்.

கீதம்
22-05-2011, 08:51 AM
ஆழ்ந்த கருத்துள்ள குறள். அன்று சொன்னதை இன்றும் பலர் கடைப்பிடிப்பதில்லை. குறளை விளக்கும் கதை மிக அருமை. பாராட்டுகள் ஐயா.

முரளிராஜா
22-05-2011, 08:54 AM
கதையோடு கருத்தை விளக்கிய விதம் அருமை ஜெகதீசன் சார்

M.Jagadeesan
22-05-2011, 09:04 AM
கீதம்,மு.ரா.ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
22-05-2011, 01:17 PM
இன்றைய காலத்தவர் புரிந்து கொள்ள முயற்சிக்காத குறள் கூறும் நல் கருத்துகள் சிறு கதை மூலம் கூறும் அழகு அருமை...

M.Jagadeesan
22-05-2011, 01:43 PM
பாராட்டுக்கு நன்றி! ஜெய்!!

சிவா.ஜி
22-05-2011, 03:29 PM
நல்லக் கருத்து....தற்போதைக்குத் தேவையானக் கருத்து.

வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

M.Jagadeesan
22-05-2011, 03:37 PM
நன்றி சிவா.ஜி அவர்களே!

சொ.ஞானசம்பந்தன்
23-05-2011, 10:43 AM
சிறப்பாய் விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.

M.Jagadeesan
23-05-2011, 10:50 AM
நன்றி ஐயா!