PDA

View Full Version : அறிமுகமில்லாதவள்..!!



பூமகள்
19-05-2011, 02:32 PM
http://4.bp.blogspot.com/-3ct5hD174bY/TdUjBQ4D9XI/AAAAAAAACv0/YHEzEw3z1I4/s400/birdlady.jpg (http://4.bp.blogspot.com/-3ct5hD174bY/TdUjBQ4D9XI/AAAAAAAACv0/YHEzEw3z1I4/s1600/birdlady.jpg)





அவசரம் பூசி
அவதியாய் பேருந்தேற..

நடுவயது யுவதி
நட்பில் மலர்ந்தாள்
இதழ்..

நட்பு காட்ட
என் கையிலும்
மழலைச் சிரிப்பு..

நல்ல ஆங்கிலம்
பேசும் சீனப் பெண்
அவள்..

ஹோம் அலோன்
படத்தில் புறாக்களுக்கு
உணவூட்டும்
தாய் முகம் நினைவூட்டியது
அவள் முகம்..

பேருந்தேறும்
அனைவரோடும்
பேசினாள்..

அன்பு, கண்டிப்பு
என அளவாய்
வாயாடினாள்..

முதியவரும், இளைஞனும்
ஒருங்கே ஏற..
இளைஞன் இருக்கையை
எழுப்பி முதியவர்
அமரச் செய்தாள்..

எதிரமர்ந்து நாம்
தலையசைக்க..
எதையெல்லாமோ
புலம்பினாள்..

கால் பட்ட புண் காட்டி..
அலைபேசி படம் காட்டி..
அருகமர்ந்த குழந்தை மிரட்டி..
என் மழலை அடம் நிறுத்தி..

இப்படியாக
அவள் வாய் மட்டும்
ஓயவே இல்லை..

திடீரென எனைப் பார்த்து,
இந்தியரா என்றாள்..
என் பதிலசைப்பில்..
"செக்சன் இலக்கம் பகர்ந்து,
பெண் கொடுமை,
வரதட்சணை சட்டம் தெரியுமா?"
என்றாள்..

அவளளவு சொல்ல
தெரியாததால்
தெரிந்தும் தெரியுமென
சொல்ல வெட்கப்பட்டது
மனம்..

ஏதேதோ பேசி..
காற்றில் பாதி கரைய..
மீதி எங்களுக்கு புரிய..
இறங்கும் இடம் வர..
விடைபெற்றாள்..

அருகிருப்போர் மிரட்சியில்
சொன்னார்கள்..
அவள் ரொம்ப பேசுகிறாள்..
பைத்தியம் போல..

எனக்கும் மட்டும்
அன்பும் கண்டிப்பும் மிகுந்த
அற்புத ஆசானாகத் தான்
அறிமுகமாகியிருந்தாள் அவள்..!!

அக்னி
19-05-2011, 02:47 PM
ஒரு குறும்படம் போலக் காட்சி ஓட்டம்...

எனது வேலை நகரத்தில் ஒருவர்...
ஒரு கடையின் அருகில் எப்போதும் வைன் போத்தலும் பிளாஸ்டிக் கோப்பையுமாய் அமர்ந்திருப்பார்.
வைன் குடிப்பதற்கு... பிளாஸ்டிக் கோப்பை பிச்சை கேட்காமல் விரும்புவோர் காசு போடுவதற்கு...

போய் வரும் பல்கலைக்கழக மாணவர்களோடு, அவர்களின் பாடங்கள் தொடர்பாகவும் பேசுவார்.
அவர் பேசுவது சரியா தவறா என எனது மொழியறிவு சொல்லாதபோதும்,
அவர் பேசுபவர்களின் வியப்பான முகப்பாவனை என்னையும் வியக்கவைக்கும்.

படித்த அவர் ஏன் இப்படி...???

விடையில்லா வினாக்களோடு இன்னுமொரு வினாவும் சேர்ந்துகொண்டது.

இப்படியும் சிலர்...

உங்கள் அழகுத் தமிழ் கவிதையில்,
தவிர்க்க முடியாதது: ஹோம் அலோன்
தவிர்க்கக் கூடியது: செக்சன்

பூமகளுக்குப் பாராட்டுக்கள்...

kulirthazhal
19-05-2011, 03:40 PM
உண்மைதான்! உண்மைதான் ! நாம் பேசப்போவதை எல்லாம் சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள்.......

Nivas.T
19-05-2011, 05:27 PM
மனதில் கலங்கமில்லாத
மொழியின் தடங்கலில்லாத
உணர்வின் புரிதலுக்கு
நிகரேது, மனிதநேயமும்
பாசமும் வெவ்வேறல்ல

பாராட்டுகள் பூமகள்

அமரன்
19-05-2011, 06:23 PM
தளும்பித் தெறிக்கும் பாத்திரங்கள்
ததும்பி வழிவதும் உண்டு..

இவள் எந்த இரகம்....?

ஒயாமல் அசையும் வாயும்
அசைந்து எழும் ஓசையும்
தாண்டி
இதயங்கள் பேசிக் கொள்வதும் மொழிதான்..!

அவள் மொழி புரிந்த இவள்
அவல் சுவை சொரியும் தமிழ்!

வாழ்த்துகள்.

கீதம்
20-05-2011, 12:23 AM
அவள் அவளாகவே இருந்திருக்கிறாள்.
அதுதான் அங்கும் இங்கும் அதிசயமாயிற்று.
அழகிய கவிதையுமாயிற்று.

மனம் தொட்டக் கவிதையை
சற்றே விலக்கி எழுகிறதோர் ஐயம்.
நான் எப்போதேனும்
நானாகவே இருந்திருக்கிறேனா?

பொறாமை கடந்து புன்னகைத்துக்கொள்கிறேன்,
சுயபரிசோதனைக்கு வித்திட்ட
அவளுக்கும், இவளுக்கும் நன்றி சொல்லி!

ஆதவா
20-05-2011, 05:52 AM
அக்னியின் பின்னூட்டம் தாண்டி எனக்கு எழுத்தே எழுத வரவில்லை!!
கவிதையினுள் சிறுகதை படித்த உணர்வு.
உங்களது சமீபத்திய கவிதைகள் ஒரு வட்டத்தினுள் சிக்கியிருப்பதாக உணருகிறேன்.. இது என்னோட உணர்வுதான். தவறாகவும் இருக்கலாம்!

கீதம், அமரன், அக்னி..... பாராட்டுக்கள் பேபீஸ்!!! :icon_rollout: