PDA

View Full Version : ஒரு சித்திரக்காரனும், வர்ணப்பெட்டியும் சில தூரிகைகளும் - (2)



செல்வா
19-05-2011, 04:59 AM
நான் வர்ணப்பெட்டி பேசுகிறேன்...

உங்கள் பார்வைக்கு உருளையாயிருக்கும் என்னைப் பார்க்கும் பலரும் முகம் சுளிக்கலாம். உடல்முழுதும் பலவித வர்ணங்கள் கொட்டிக் கொட்டி இயல்பான என் தோல் முழுவதும் மறைக்கப்பட்டு விட்டது. பல வித வர்ணங்களும் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடப்பதால் இந்த பூமியின் அமைப்பைப் போன்ற ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கு என் உடலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தெரியும்.

ஒழுங்கற்ற ஒழுங்கு என்றதும் நினைவிற்கு வருகிறது. இந்த உலகை ஒழுங்கற்ற ஒழுங்காக்கியவன் இயற்கை என்று சிலர் சொல்கின்றனர் இறைவன் என்று பலர் சொல்கின்றனர். பூமியை ஒழுங்கற்ற ஒழுங்கிற்குள்ளாக்கியது இயற்கையோ இறையோ எனக்கு இன்றுவரைத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் என்னை இத்தகைய ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு நிலைக்கு ஆளாக்கியவனை எனக்கு நன்றாய்த் தெரியும். அவன் ஒரு சித்திரக்காரன்.

ஓவியன் என அழகான ஒரு தமிழ்ச்சொல் இருக்க சித்திரக்காரன் என்று சொல்கிறேனே என நீங்கள் கோபம் கொள்ளலாம் அல்லது ஆச்சரியப் படலாம். சிலர் அதைப்பற்றிக் கவலைப்படாமலே கூட இருக்கலாம். அருவி என்ற அழகானத் தமிழ்ப்பெயரை நீர்வீழ்ச்சி என்று ஆங்கிலப்படுத்தி அழைப்பதையும் இதையும் ஒன்றாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.

அவன் ஒரு ஓவியன் மட்டுமல்ல பல விசித்திரங்கள் நிறைந்தவன். விசித்திரமான பல ஓவியங்களுக்குச் சொந்தக்காரன். ஏன் அவனும் அவன் வாழ்க்கையும் கூட விசித்திரமானவையே. விசித்திரமான ஒரு ஓவியனை நான் விசித்திரக்காரன் என அழைக்க ஆரம்பித்து அதுவே சித்திரக்காரனாக மருவிவிட்டது என்று நான் சொல்வதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம்.

என்னைக் கைக் கொண்டிருந்த சி்த்திரக்காரனின் வாழ்வும் அவன் வரையும் சிக்கலான சித்திரம் போன்றே சிக்கலாயிருந்தது. ஒரு சிக்கலான மனிதன் தன் சிக்கலான வாழ்க்கையை மிக எளிதாக எளிமையாக வாழ்ந்தான் என்பதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.
அவனோடு கூட முப்பது ஆண்டுகளாகச் சுற்றிக்கொண்டிருந்தேன் என்ற முறையில். அவனோடு கூட ஒரே அறையில் அவன் போகுமிடமெங்கும் அவனோடு கூடச் சென்று திரும்பியவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.

அவன் கரங்களுக்கு நான் அகப்பட்டதே ஒரு சுவையான அனுபவம் தான். இங்கிருந்து சுமார் 5கிலோ மீட்டர்கள் சென்றால் அழகான ஒரு ஆற்றங்கரையை நீங்கள் அடையலாம். காவியங்களில் சொல்லப்பட்ட கங்கையையும் காவிரியையும் இன்னபிற நதிகளையும் எண்ணிக் கொண்டு அங்கே நீங்கள் சென்றீர்களென்றால் நீங்கள் ஏமாறுவது திண்ணமே. ஆற்றின் கரையையும் ஆற்றையும் நீங்கள் வேற்றுமைப் படுத்திப் பார்ப்பதே உங்களுக்குச் சிரமம் தான். என்றோ ஓடியத் தண்ணீர்களின் தடங்களை வைத்து இன்னும் ஆறு என்றே மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் மணல் ஓடிக் கொண்டிருந்த ஆற்றை மணலாறு என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தேன். மணல் முழுதும் கொள்ளையடிக்கப் பட்டுவிட மறுவில்லா முகம் கொண்ட இளமங்கையின் கன்னம் போல் வழவழப்பாகக் காட்சியளித்த மணலாறு, அம்மை கண்ட சுருக்கம் விழுந்த கன்னம் குழிவிழுந்த பழங்கிழவியின் முகமாய் விகாரம் காட்டியது. இப்போது அதைப் பார்ப்பதென்ன மனதால் நினைப்பது கூடக்கிடையாது.

அத்தகைய ஒரு ஆற்றங்கரையில் ஏதோ ஒரு மரத்தில் எப்போதோ வந்தமர்ந்த ஒரு பறவையின் தயவால் விழுந்த பலாக் கொட்டையிலிருந்து முளைத்து வளர்ந்தச் செடியானது பெருமரமாகிப் பருத்து நீண்டிருந்தது. மணலாற்றின் மகிமையால் சுற்றியிருந்த அனைத்துச் செடி கொடிகள் முதல் பெருமரங்கள் வரை வாடி வதங்கிக் கொண்டிருக்க இந்த மரம் மட்டும் தளைத்துச் செழித்து அடிமுதல் நுனிவரை பெருங்காய்களாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தற்குக் காரணம் கடவுள் என்றோ இயற்கை என்றோ ஈசன் என்றோ அல்லது அந்த மங்கிக் கிடக்கும் மணலாறு என்றோ எந்தப் பெயர் வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு நான் எந்தப் பல்கலைக் கழகத்திலும் சென்று படித்துப் பட்டம் வாங்கவில்லை.

பல்கலைக் கழகத்தைப் பற்றி எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? அதை எனக்குச் சொன்னவன் அந்தக் காற்றுதான். அவன் மட்டும் அன்று வரவில்லை என்றால் நான் இந்நிலைக்கு ஆளாயிருக்க மாட்டேன். அது என்ன கதை என்று கேட்கிறீர்களா? அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேனே...

அன்புரசிகன்
19-05-2011, 05:44 AM
கதையோட்டத்திற்கு வர சிக்கி முக்கி திண்டாடுகிறேன். அடுத்தபாகத்தில் தெளிகிறதா என்று பார்ப்போம். தொடருங்கள்.

கீதம்
19-05-2011, 08:30 AM
தூரிகையொன்றின் சுயபுராணமெனத் தோன்றுகிறது. தலைப்பிலேயே கதாபாத்திரங்களை சொல்லிவிட்டதால் இந்த யூகம். அசத்தலான எழுத்தோவியம். தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன். புத்துணர்வுடன் களமிறங்கியதற்குப் பாராட்டுகள் செல்வா.

அட, இப்போதுதான் கவனிக்கிறேன், ஆரம்பத்திலேயே வர்ணப்பெட்டி பேசுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்களே... கவனிக்கத் தவறிவிட்டேன்.

அக்னி
19-05-2011, 09:42 AM
வாசிக்கையில் ஏதோ ஒரு வித்தியாசமான உலகத்திற்குள் இழுக்கப்படும் உணர்வு.
முழுமையாக உள்நுழையவிடாமல் இந்த உலகத்தின் ஈர்ப்பு இழுத்துக்கொண்டிருக்கின்றது.
அடுத்த பாகத்தில் இந்த இழுவை இல்லாமற்போய், விடுபட்டு,
முழுமையாய் இந்தப் பதிவுலகிற்குள் வந்துவிடுவேன் என நம்புகின்றேன்.

ஆதவா
19-05-2011, 09:51 AM
ரொம்ப நாளல்ல.... ரொம்ப்ப்ப்ப்ப நாள் கழித்து புது(மணத்) தெம்புடன் வந்திருக்கிறீர்கள்.

முதல்பாகம் என்பதால் எழுத்து செலுத்தும் பாதையில் குறியீடுகளை அவதானிக்க முடியவில்லை. அடுத்தடுத்த பாகங்கள் தெளிவாகிவிட வாய்ப்பிருக்கிறது. அங்கங்கே மேலோட்டமான சாடல்களும் ரசிக்கத்தக்கவை. ஒருசில வரிகள் இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன!!

வர்ணப்பெட்டிகளும், பூச்சுகளும், துணிகளும், ஓவியங்களும் நிறைந்தது எங்கள் வீடு.. ஒருவேளை இக்கதை எங்களைப்பற்றியதாகக் கூட இருக்கலாம்!!! தொடருங்கள் பாஸ்



நான் வர்ணப்பெட்டி பேசுகிறேன்...

பல வித வர்ணங்களும் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடப்பதால் இந்த பூமியின் அமைப்பைப் போன்ற ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கு என் உடலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தெரியும்.

மணல் முழுதும் கொள்ளையடிக்கப் பட்டுவிட மறுவில்லா முகம் கொண்ட இளமங்கையின் கன்னம் போல் வழவழப்பாகக் காட்சியளித்த மணலாறு, அம்மை கண்ட சுருக்கம் விழுந்த கன்னம் குழிவிழுந்த பழங்கிழவியின் முகமாய் விகாரம் காட்டியது. இப்போது அதைப் பார்ப்பதென்ன மனதால் நினைப்பது கூடக்கிடையாது.



:icon_b::icon_b:

செல்வா
26-05-2011, 04:22 AM
கதையோட்டத்திற்கு வர சிக்கி முக்கி திண்டாடுகிறேன். அடுத்தபாகத்தில் தெளிகிறதா என்று பார்ப்போம். தொடருங்கள்.

தெளிவாகச் சொல்ல முயற்சிக்கிறேன். பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி.


தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன். புத்துணர்வுடன் களமிறங்கியதற்குப் பாராட்டுகள் செல்வா.


பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அக்கா.


வாசிக்கையில் ஏதோ ஒரு வித்தியாசமான உலகத்திற்குள் இழுக்கப்படும் உணர்வு.
முழுமையாக உள்நுழையவிடாமல் இந்த உலகத்தின் ஈர்ப்பு இழுத்துக்கொண்டிருக்கின்றது.
அடுத்த பாகத்தில் இந்த இழுவை இல்லாமற்போய், விடுபட்டு,
முழுமையாய் இந்தப் பதிவுலகிற்குள் வந்துவிடுவேன் என நம்புகின்றேன்.

முயற்சிக்கிறேன் அக்னியாரே...! பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி


தொடருங்கள் பாஸ்


காலையில் தோன்றிய ஏதோ ஒரு சின்ன பொறி கவிதையாக முயற்சித்து வெற்றி காணாமல் இப்படி ஆகியிருக்கிறது. இதையும் முடித்து விடுவேன் என்று உங்களைப் போலவே நானும் நம்புகிறேன்.

ஊக்கத்திற்கு நன்றி பாஸ்.

கீதம்
26-05-2011, 05:00 AM
பின்னூட்டத்துக்கு பதில் போடத்தான் வந்தீங்களா? அடுத்த பாகம் எப்போ?

செல்வா
26-05-2011, 06:10 AM
ஒரு வறண்ட பூமியில், நகர ஆரவாரங்களிலிருந்து விலகி மணலாற்றங்கரையில் தனியே நின்றிருந்த ஒரு பெருமரத்தின் கிளையாக சுகபோக ஜீவனம் செய்து கொண்டிருந்த எனக்கு நகர வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் அந்தக் காற்று வழியாகவே கிடைத்தது.

உலகெங்கும் சுற்றிவரும் காற்று எப்பொதும் ஊளையிட்டுக்கொண்டே வருபவன். என்னை நெருங்கியதும் இரகசியமாய் கிசுகிசுப்பான். என் தலையைக் கோதி மெல்லிய தாலாட்டைப் பாடலோடு கொடுக்கும் போது கண் மூடி மனம் கிறுகிறுத்து மயக்கத்தில் ஆழ்வேன் நான். மூச்சுத் திணறடிக்கும் கான்கிரீட் காடுகளைத் தாண்டி மணலாற்றின் மகிமையால் வெட்ட வெளியாகிப் போன இந்த இடத்தை அடையும்போது, தடுக்க யாருமே இல்லாததால் குதியாட்டம் போட்டுக்கொண்டு ஓடிவருவான்.
அவனது உற்சாக ஓட்டைத்தில் என்னையும் மறந்து அவனோடு கூத்தாட ஆரம்பிப்பேன். அப்போதெல்லாம் என்னை இழுத்து நிலைப்படுத்துவதோடு என் ஆட்டத்தையும் அடக்கி வைக்கும் பெரும் பொறுப்பு எனது தாய்மரத்திற்கு.

மற்ற கிளைகள் எல்லாம் இந்தக் காற்றின் வருகையைக் கண்டு கொள்ளாத போது நான் மட்டும் எப்போதும் இப்படி காற்றோடு சேர்ந்து கூத்தடிப்பது அவளை எப்போதும் கோபமுறச் செய்யும். என்னோடு கூட நான் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஆடும் போது அவள் தூக்கம் கலைவதாக என்னைப் பலமுறை திட்டியிருக்கிறாள்.

எப்போதும் அவள் மீது வந்தமரும் பறவைகள் மீது பெரும் கரிசனை அவளுக்கு. அவளது மிரட்டலுக்கு அஞ்சிய மற்றக் கிளைகள் எல்லாம் பறவைகள் வந்து தங்க இடம் கொடுத்து அவற்றின் கூடுகளைத் தாங்கிக் கொண்டு முட்டையிடவும் குஞ்சு பொரிக்கவும் அவற்றின் குஞ்சுகள் சுற்றிவரவும் வசதியாக அமைதியாகவே இருக்கப் பழகிக் கொண்டன.

எனக்கு இந்தப் பறவைகளைக் கண்டாலே பிடிக்காது. எப்போது வந்தமர்ந்தாலும் அடுத்த நிமிடமே எச்சமிட்டு என்னுடலைக் கெடுத்துவிடும். என் தாயைக் கேட்டாலோ அதுதான் அழகு என்று கூறுவாள். எனக்கு அவற்றின் கூச்சலும் எச்சங்களும் எப்போதும் எரிச்சல் தரக் கூடியது. பல நேரங்களில் என்மீது கூடுகட்ட முயன்ற பல பறவைகளின் கூட்டை இந்தக் காற்றின் துணையோடு கீழேத் தள்ளியிருக்கிறேன். ஆரம்பத்தில் என் தாயிடம் குறைகூறிக் கொண்டிருந்த பறவைகள் இப்போதெல்லாம் என் பக்கம் வருவதே இல்லை. காற்றுக்கும் எனக்கு மான நட்பு இன்னும் இன்னும் பலமாய் இறுகியது.

அவன் ஒவ்வொருமுறை என்னைத் தாண்டுகையில் என்னிடம் சொல்லும் பலவிதமான கதைகள் என்னை எப்போதும் கவரக் கூடியவை. அவன் கூறிய கதைகளிலிருந்து தான் மணலாற்றங்கரையின் அந்தப் பக்கம் இருக்கும் பெரிய நகரைப் பற்றியும் அங்கேத் தங்கியிருக் கும் வித விதமான மனிதர்கள், கட்டிடங்கள், பெரிய பெரிய பாலங்கள் செயற்கையாகக் கட்டப் பட்ட நீரூற்றுகள், குளங்கள் ஆறுகள் என்று பலவற்றைப் பற்றியும் நான் தெரிந்து கொண்டேன்.

இவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்தது என் இனமான மரங்களைப் பற்றிய ஒரு விந்தையானச் செய்தி. என்னை மிகவும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திய அந்தச் செய்தி அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் தூண்டியது. அது குறுமரங்கள். அந்த நகரில் பல வீடுகளிலும் அவன் என்னைப் போன்ற பெரு மரங்களை சிறிய சிறிய தொட்டிகளில் பார்த்தானாம். எல்லாம் என் கிளையை விட பலமடங்கு சிறிய அளவிலேயெ இருந்தனவாம். முதலில் நான் அதை நம்பவில்லை. இதைக் கேட்டதும் அவன் இதுவரை சொன்ன எல்லாமே கட்டுக் கதையாக இருக்குமோ? என்று கூட ஒரு முறை எனக்குத் தோன்றியது.

இத்தனை பெரிய மரத்தை ஒரு சின்ன தொட்டியில் வளர்ப்பதைப் பற்றிய கற்பனையே என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. என் சிரிப்பொலியால் தூக்கம் கலைந்த தாய் சற்றேக் கண்ணைத் திறந்து உற்றுப் பார்த்ததும் என் சிரிப்பை அடக்க முயன்றேன் அப்படியும் முடியவில்லை. என் ஏளனத்தால் சீண்டப்பட்ட காற்று என்னைப் பார்த்துக் கூறியது. நீ நம்பவில்லை என்றால் என்னோடு வா நான் உனக்குக் காட்டுகிறேன் என்றது.

நானா? நான் எப்படி வரமுடியும்? என்று கேட்டேன்.

உன்னை விடவும் பெரிய கிளைகளை என் தலையில் தூக்கிக் கொண்டு போயிருக்கிறேன். உன்னைத் தூக்குவதா பிரமாதம் என்று தோள் தட்டினான். எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது. என்னை நீ தூக்குவதாவது! ஏதோ உன் தாலாட்டிற்கு நானாக அசைகிறேன். என்பதால் நீ என்னை தூக்குமளவிற்கு உன்னால் முடியுமென்று நினைத்து விட்டாயே என்று சிரித்தேன்.

என் சிரிப்பால் சீண்டப்பட்ட காற்று கோபம் கொண்டான். அவனது கோபத்தை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். பார்த்தேன் என்பதை விட அனுபவித்தேன். இப்போது நினைத்தாலும் மனதில் கலவரத்தைத் தோற்றுவிக்கும் அந்த நிகழ்வை நான் சொல்லியாக வேண்டும்.

என் வாழ்க்கையை மட்டுமல்ல அந்த வெளியையேப் புரட்டிப் போட்ட நிகழ்வு அது.

Nivas.T
26-05-2011, 07:29 AM
வர்ணப்பெட்டியின் வர்ணமான விரிவுரை

சித்திரக்காரனைப் பற்றி வர்ணப்பெட்டியின் பார்வை வண்ணமயமாய்

அருமை தொடருங்கள்
ஆர்வத்துடன் நான்

நாஞ்சில் த.க.ஜெய்
26-05-2011, 03:47 PM
வர்ண பெட்டியின் சுயவர்ணை ...வித்யாசமான வர்ணை ..தொடருங்கள்

கீதம்
26-05-2011, 11:30 PM
தாயின் கட்டுப்பாட்டில் வளரும் கிளைமகவின் குறும்புத்தனம், காற்றோடு ரகசிய சிநேகம், குறுமரம் பற்றிய பெரும் வியப்பு என அனைத்து வரிகளிலும் அமிழ்ந்துகிடக்கும் ரசனையை நானும் ரசித்தேன், செல்வா.

சினம் கொண்ட காற்று சீற்றமாய் எழுந்ததோ? புயலானதோ? பெரும் சூறாவளியானதோ?

அடுத்தடுத்தப் பகுதிகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

ஆதவா
27-05-2011, 05:51 AM
வர்ணப்பெட்டியின் மூலக் கதை நன்றாகவே செல்கிறது. திடீரென மரம் கதை சொன்னது போல இருந்தாலும் மரத்தின் ஒருபாகம்தானே பெட்டி என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பலவிதமான சிந்தனைகளுடன் கதைப்போக்கு செல்வதால் சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள்!!!

சிவா.ஜி
27-05-2011, 05:24 PM
வாங்க இலக்கியச்”செல்வ”ரே.....எம்புட்டுநாளாச்சு உங்க இந்த இலக்கியத்தர எழுத்துக்களைப் பார்த்து.... தொடருங்க செல்வா.....அழகான உங்கள் தமிழையும், சுவையான கதையையும் சுவைக்கக் காத்திருக்கிறேன்.

அக்னி
28-05-2011, 01:21 AM
முயற்சிக்கிறேன் அக்னியாரே...! பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி
வர்ணப்பெட்டி சொல்வதில் எந்தவித தொய்வும் இல்லை.
முயற்சிக்க வேண்டியது நான்தான் செல்வா...

பலமாக வீசிய காற்றில்
முறிந்த ஒரு கிளையில்
செய்யப்பட்ட ஒரு வர்ண மரப்பெட்டி...

இதற்குள்ளும் ஒரு இலக்கியம் செறிந்திருக்குமா...
என்பதன் ஆதாரம் இத்திரி...

செல்லலாம்வா...

ஜானகி
28-05-2011, 03:37 AM
வண்ணங்களின் சேர்க்கையில் ஓர் ஓவியம் உருவாகும்...இங்கு

வார்த்தைகளின் கோர்வையில் ஓர் காவியம் உருவாகிறதே....அதிசயம்தான் !

Ravee
28-05-2011, 09:49 AM
செல்வாவின் எழுத்து வடிவத்தை இப்போதுதான் முதலில் படிக்கிறேன். சிறுவயதில் மஞ்சரி , கணையாழி , அமுத சுரபி, கலைமகள் ,தினமணி சுடர் , இவற்றில் வரும் கட்டுரைகளை போல உள்ளது உங்கள் எழுத்து நடை ... புரியும் போல் இருக்கும் ஆனால் புரியாது .... புரியாதது போல இருக்கும் ஆனால் புரியும் அனுபவப்படும் போது. தொடருங்கள் செல்வா ..... வளமாக செல்லட்டும் மண வாழ்க்கை பயணம் .... :)