PDA

View Full Version : மூழ்கி எடுத்த முத்துக்கள்



M.Jagadeesan
11-05-2011, 03:53 AM
திருக்குறள் என்னும் ஆழ்கடலில் கண்டெடுத்த சில முத்துக்கள்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இக்குறளில் கொம்பு உள்ள எழுத்து கிடையாது. இதுபோல 17 குறட்பாக்களில் கொம்பு கிடையாது.

நமக்கு ஒரு "கால்" இல்லையென்றால் நம்மால் நிற்க இயலாது. கடந்த 2000க்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் ஒரு குறள் கால் இல்லாமல் நின்று கொண்டிருக்கிறது.அது

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

(இக்குறளில் நெடிலுக்குறிய துணைக்கால் இல்லை.)

1330 குறட்பாக்களில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் கொண்ட குறள்

காத லவரில ராகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.

இக்குறளில் 22 எழுத்துக்கள் மட்டுமே வருகின்றன. மேலும் ஒற்று எழுத்துக்கள் 2 மட்டும் (ன்,ஞ்)வருவது இதன் மற்றொரு சிறப்பு.

ஓரே எழுத்தை கடைசி சீராகக் கொண்டு முடியும் குறள்

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

ஈற்றடியில் வெறும் 7 எழுத்துக்களைக் கொண்டு முடியும் குறட்பாக்கள் இரண்டு.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

ஒரே குறளில் மூன்று பகாஎண்கள் வரும் குறள்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

இந்தக் குறளில் ஒன்று,ஐந்து,ஏழு என்னும் பகாஎண்கள் வருகின்றன.


துறவு என்று வந்துவிட்டால் உலகத்திலுள்ள எந்தப் பொருளிடத்தும் ஒட்டோ, உறவோ இருக்கக்கூடாது.உதட்டிற்கும் உதட்டிற்கு மிடையே கூட ஒட்டுறவு இருக்கக் கூடாது என்பதற்காக

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்ற குறளை,"துறவு" என்னும் அதிகாரத்தின் முதல் குறளாக அமைத்தார். உதடு ஒட்டாமல் வரும் குறட்பாக்கள் எண்கள் வருமாறு:

240,286,310,341,419,427,472,489,516,523,678,679,894,1080,1082,1177,1179,1211,1213,1219,1236,1286,1296 ஆகியன.

திருவள்ளுவர் அவருடைய பத்து உடைமைகளை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.
அவையாவன:

1.அன்புடைமை
2.அடக்கமுடைமை
3.ஒழுக்கமுடைமை
4.பொறையுடைமை
5.அருளுடைமை
6.அறிவுடைமை
7.ஊக்கமுடைமை
8.ஆள்வினையுடைமை
9.பண்புடைமை
10. நாண் உடைமை

இந்தப் பத்தும் மிகப்பெரிய சொத்தாகும்.

ஆமை புகுந்த வீடு ஆகாது என்பார்கள். ஆனால் நம் மனமென்னும் வீட்டினுள் 17 ஆமைகளைப் போற்றி வளர்க்கவேண்டும்.அவையாவன:

1.பிறன் இல் விழையாமை
2.அழுக்காறாமை
3.வெஃகாமை
4.புறங்கூறாமை
5.பயனில சொல்லாமை
6.கள்ளாமை
7.வெகுளாமை
8.இன்னா செய்யாமை
9.கொல்லாமை
10.சிற்றினம் சேராமை
11.பொச்சாவாமை
12.வெருவந்த செய்யாமை
13.இடுக்கண் அழியாமை
14.அவை அஞ்சாமை
15.பெரியாரைப் பிழையாமை
16.கள்ளுண்ணாமை
17.பிரிவாற்றாமை

அடுத்து 18 வதாக உள்ள ஆமை கல்லாமை. இந்த ஆமையை நம் மனத்துக்கண் நுழைய நாம் அனுமதிக்கக் கூடாது.

நாம் உணர்ந்து பாடங்கற்க வேண்டிய ஆமை நிலையாமை.

திருக்குறள் பொதுவறம் கூறும் நூலாதலின் "தமிழ்","கடவுள்", மற்றும் சாதிப்பெயர்கள் சுட்டாவண்ணம் மிகவும் எச்சரிக்கையாகத் தன் நூலைத் திருவள்ளுவர் எழுதியுள்ளார். "தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பது போல அவரையும் மீறி அவருடைய தமிழ்ப்பற்று சில இடங்களில் வெளிப்பட்டுவிட்டது.

முதற்குறளை மொழிக்கு முதல் எழுத்தாகிய "அ" கரத்தில் தொடங்கியுள்ளமை.

அகர முதல எழுத்தெல்லாம்...

அதுபோல் இறுதிக் குறளை தமிழ் நெடுங்கணக்கின் இறுதி எழுத்தாகிய,"ன்" என்னும் எழுத்தில் முடித்துள்ளமை,

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

நம் மொழியின் மூன்று இனப்பகுப்பையும் சுட்டிக்காட்டும் வண்ணம், முதல் அதிகாரத்தில் அடுத்தடுத்த குறட்பாக்களை அடுத்தடுத்த இன எழுத்துக்களில் தொடங்கியுள்ளமை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்...."க" வல்லினம்.
மலர்மிசை ஏகினான்........................................."ம" மெல்லினம்.
வேண்டுதல் வேண்டாமை................................."வே" இடையினம்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்.

இக்குறளில், "எனல்" என்ற ஒரே சொல்லை முதல் அடியில் எதிர்மறைச் சொல்லாகவும் (எனல்=என்று சொல்லாதே) அடுத்த அடியில் உடன்பாட்டுச் சொல்லாகவும் (எனல்=என்று சொல்) பயன்படுத்தியிருப்பது காண்க.

அடுத்து கொஞ்சம் இலக்கணம் பார்க்கலாமா?

நாள் என்னும் வாய்பாட்டில்........174
மலர் என்னும் வாய்பாட்டில்.......665
காசு என்னும் வாய்பாட்டில்........200
பிறப்பு என்னும் வாய்பாட்டில்.....291 குறட்பாக்களும் உள்ளன.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

இக்குறட்பாவில் வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்) மட்டும் பயின்று வருகிறது.இதுபோல இயற்சீர் வெண்டளை ( விளம் முன் நேர், மா முன் நிரை) மட்டும் பயின்று வரும் குறட்பாக்கள் 99 உள்ளன. மீதியுள்ள 1230 குறட்பாக்களில் எல்லாமே கலந்து வருகின்றன.

உதவிய நூலகள்: திருக்குறள் பரிமேழலகர் உரை மற்றும் "கேட்டதும் கிடைத்ததும்"என்ற இரா.கனகசுப்பு ரத்தினம் அவர்கள் எழுதிய நூல்.

கீதம்
11-05-2011, 05:07 AM
மூழ்கி எடுத்ததோடு அம்முத்துக்களைக் கோத்தும் அணிசெய்தமை பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

குணமதி
14-05-2011, 10:31 AM
அரிய தொகுப்பு!
அளித்த வகையும் சிறப்பு!

M.Jagadeesan
14-05-2011, 10:38 AM
கீதம், குணமதி ஆகியோரின் பாராட்டுக்களுக்கு நன்றி!

முரளிராஜா
14-05-2011, 02:47 PM
மூழ்கி எடுத்த முத்துக்கள் அனைத்தும் அருமை ஜெகதீசன் சார்

M.Jagadeesan
14-05-2011, 03:22 PM
நன்றி மு.ரா.

சிவா.ஜி
14-05-2011, 05:38 PM
மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன். அழகான அருமையான முத்துக்கள்.....

மனம் நிறைந்த பாராட்டுக்கள் உங்கள் உழைப்புக்கும், ஞானத்துக்கும்.

M.Jagadeesan
15-05-2011, 02:25 AM
நன்றி சிவா.ஜி அவர்களே!

Nivas.T
15-05-2011, 09:18 AM
அழகான பதிவு
நல்ல தகவல்
பாராட்டுகள் மற்றும் நன்றி ஐயா

M.Jagadeesan
15-05-2011, 10:54 AM
நன்றி நிவாஸ்!