PDA

View Full Version : ஆணழகன்......ரங்கராஜன்
09-05-2011, 12:50 PM
ஆணழகன்......


ஹாய் தக்ஸ் எப்படி இருக்கீங்க

யாரு......

செல்லில் பெயரை பார்க்கலையா

நான் செல்லையே பார்க்கலை........ தூங்கிட்டு இருக்கேன்....... நீங்க.....

நான் பரமேஷ்வர்......

கண்கள் பிரகாசமடைந்தன..... கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தேன்..... இதுவரை நான் யாருக்காகவும் அப்படி எழுந்ததில்லை... எங்க பாஸாக இருந்தாலும்,,, சார் தோ கிளம்பிட்டேன், பைக்கை ஸ்டார்டு பண்ணிட்டேன்......... டுர்டூரர்ர்ர்ர்ர்ர்ர் என்று வாயாலே சத்தம் கொடுப்பேனே தவிர........ அலறி பிடித்து எல்லாம் எழுந்தது கிடையாது.........

சார் நீங்களா, எப்படி சார் இருக்கீங்க......... என்ன திடீர்னு போன் எல்லாம்.......

இல்லப்பா, கடந்த ஒரு மாசமா உன்னை ஜிம் சைடு காணுமே என்று தான் நான் போன் செய்தேன்.

இல்ல சார் கொஞ்சம் வேலை, எலைக்ஷ்ன் வேறு இருக்கு இல்லையா.... அதான் வரமுடியவில்லை.......

ஏம்மா எலைக்ஷ்ன் முடிச்சி இரண்டு வாரம் ஆகப்போகுது இன்னும் என்ன எலைகஷ்ன் உனக்கு.....

பழக்க தோஷத்தில் சொன்ன வார்த்தை வினையாகிப் போனது....

இல்ல சார், கொஞ்சம் பர்சனல் ஒர்க்....

சரி இன்னைக்கு உனக்கு லீவு தானே...... வியாழன் ஆச்சே

ஆமா சார்.....

சரி நாளைக்கு காலை ஜீவா பார்கில் சந்திப்போம். சரியா........ வெள்ளி தான் உனக்கு ஆஃப் ஆச்சே.......

சரி சார், வந்துடுறேன்...... போனை அனைத்து மறுபடியும் தூங்கப்போனேன்.

வணக்கம் உறவுகளே...

நலம், நலமறிய ஆவல்... சமீபகாலமாக சிறுகதைகளோ, கட்டுரைகளோ எழுத மனம் ஒத்துழைக்க மறுக்கிறது. மனமும், மூளையும் உண்மையை தேடி அலைகிறது, என்னுடைய பணி அவ்வாறானதாக இருப்பதினாலோ என்னவோ உண்மை சம்பவங்களில் மனம் அதிகமாக ஈடுபடுகிறது...... தேடுகிறது. ஊடகத்துறை மூலமாகவோ, செய்தித்தாள் மூலமாகவோ உங்களை அடையும் செய்திகள் பெரும்பாலானவைகள் திரித்து சொல்லப்பட்டதாகவும், திரிப்பதற்காகவோ படைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. ஆனால் இந்த ஊடகத்துறையில் இருப்பவர்களின் சாபக்கெடு என்னவென்றால், அவர்களுக்கு, தங்கள் முகத்தில் அறையும் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அதிகாரம் இருக்காது. அதனாலே நம் மன்றத்தில் விவாதிக்கப்படும் அரசியல், சினிமா உள்ளிட்ட பல விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. காரணம் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த நிர்வாண உண்மைகள், தொழில் ரீதியாக தெரியும் என்பதால் தான் நான் அந்த திரிகளில் இருந்து எப்போதும் ஒதுங்கி நிற்கிறேன்.

மன்றமே இப்போது எனக்கு சுருங்கி விட்டது. நிஜ சம்பவங்களில் மட்டும் என்னுடைய பங்களிப்பு இருக்கும் படி ஆகி விட்டது. அதுவும் கடந்த சில மாதங்களாக என் படைப்புகள் எல்லாம் இந்த பகுதியில் மட்டும் தான் இடம் பிடித்து வருகிறது. அந்த விரிசையில் இதோ இன்னோரு பதிவு.

பிடிச்சு வந்த பிள்ளையார் கணக்கான வேலை, என்பதால் உடலில் வியர்வை வருவதே அரிதான காரியமாகி விட்டது. சுற்றளவும் தங்கத்தின் விலையைப் போல ஏறிக் கொண்டே வருவதால், ஒரு முடிவெடுத்தேன், ஜிம்மில் சேரலாம் என்று, ஒரு பிரபலமான ஜிம்மிற்கு சென்று விசாரித்தேன்.

போனவுடனே அட்ரஸ், போன் நம்பரை அவர்களின் டைரியில் எழுத சொன்னார்கள். எதுக்கு என்று கேட்டேன். சும்மா என்றாள் கண்ணை சிமிட்டியபடி வரவேற்பரையில் அமர்ந்திருந்த பெண். இவ்வாறான வரவேற்பரை பெண்களைப் பார்க்கும் போது, எனக்கு பரிதாபம் தான் வரும், நாள் முழுவதும் வரும் கஸ்டமரோ, அலுவலக ஊழியர்களோ, நிறுவனத்தாரோ யாராக இருந்தாலும் பொய்யான ஒரு சிரிப்பை உதட்டில் உதித்தப்படி அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அவள் சிரித்துக் கொண்டு கண்ணை சிமிட்டியவுடன், நானும் பதில் பேசாமல் என் விவரத்தை டைரியில் எழுதினேன். உள்ளே இருந்து ஒரு பெண் வந்தாள். கல்யாணத்தில் ஐநூறு பேருக்கு பந்தி வைக்க ஒரு குண்டானில் சோறு ஆக்குவார்களே அந்த சைசில் இருந்தாள். பார்த்தவுடன் நான் அதிர்ந்தேன். நான் பரவாயில்லை என்று கடவுளுக்கு நன்றி கூறினேன்.

வந்தாள்

வந்தாள்

வந்துக் கொண்டே இருந்தாள்.

பத்தடி தூரத்தை தாண்ட பத்து நிமிடம் ஆனது. என்னிடம் அவள் வந்து சேருவதற்குள் முக்கில், நெற்றியில், கழுத்தில், முக்குக்கும் வாயிக்கும் நடுபகுதி ஆகிய பகுதிகளிலும் வியர்த்து விட்டது. என்னை வந்து அடைந்தவள்........

ப்ளீஸ் கம் சார் என்று என்னை உள்ளே அழைத்தாள். அவளை பார்க்க பாவமாக இருந்தாலும், இவளை ஏன் வேலைக்கு எடுத்தார்கள் என்று எனக்கு கஷ்டமாக இருந்தது. எப்படி மார்க்கெட்டில் பொருட்களை விற்க, ஊமையை வேலைக்கு அமர்த்துவது குற்றமோ, அப்படி தான் உடல் மெருகு நிலையத்தில் இவ்வாறான குண்டுகளை வேலைக்கு வைப்பது குற்றம்........ ஒருவேலை அவர்களைப் பார்த்து நாம் நம்முடைய உடலை குறைக்க வேண்டும் என்று சைக்காலஜிக்கலாக சிந்தித்து அந்த குண்டு பெண்ணை பணியில் அமர்த்தினார்களோ இல்லையோ எனக்கு தெரியாது..... அந்த பெண் உள்ளே சென்று எம்ஜிஆரின் நினைவு இல்லைத்தை சுற்றிக் காட்டுவது போல, சொன்னாள்

இதுதான், அது, அதுதான் இது.......... இதை இப்படி பயன்படுத்தலாம், அதை அப்படி பயன்படுத்தலாம்...... இவ்வாறு இதை செய்யக்கூடாது....... அவ்வாறு அதை செய்யக்கூடாது.....என்று பெண் பார்க்கும் படலம் போல அவள் கூறிக் கொண்டு இருந்தாள்.

எனக்கு தலைவலித்தது......... இந்த பெண் பிடிக்கவில்லை.. ஊருக்கு போய் லெட்டர் போடுகிறோம் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆகலாம் என்று ஆகிவிட்டேன்......

இரண்டு நாட்கள் கழித்து ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது, அந்த பெண் பேசினாள், அந்த குண்டு பெண்ணின் குரல் கேட்டது...... ஏன் வந்து சேரவில்லை என்று விசாரித்தாள். வேலை பளு என்றேன். பத்து நிமிடத்திற்கு மேல் என்னிடம் பேசினால், நான் அதை பலமுறை தவிர்த்தேன்...... கடைசியாக...

“சார் நீங்க வந்து இந்த ஜிம்மில் சேர்ந்தீர்கள் என்றாள் எனக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைக்கும்” என்றாள்.

“ஏம்மா உனக்கு கமிஷன் கிடைக்கும் என்பதற்காக நான் ஜிம்மில் சேர முடியுமா....... அதற்கு பதில் நீயே சேர்ந்து இருந்தாள், உனக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்காதே... ஹா ஹா ஹா” என்று சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை.... பொறுமையாக...

“ இல்ல சார், என் தங்கச்சிக்கு கல்யாணம் வைத்து இருக்கிறேன், நீங்க சேர்ந்தாள் கொஞ்சம் யூஸ்புள்ளா இருக்கும்” என்றாள்.

வழக்கம் போல என் முகத்தில் அறையும் என் மனசாட்சி இந்த முறையும் தவறாமல் அறைந்தது. பதில் பேசவில்லை......... சிறிது நேரம். அவளும் பேசவில்லை.......

“சாரி டூ டிஸ்டர்ப் யூ சார்” என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்து விட்டாள். மறுபிடியும் போன் செய்ய என் தன்மானம் தடுத்தது. இரண்டு நாட்கள் கழிந்தது, அந்த குண்டு பெண்ணின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது என் காதில். மூன்றாவது நாள் அந்த ஜிம்மில் சேர சென்றேன், மாதத்திற்கு நான்காயிரம் ரூபாய் என்றார்கள்.

நான்காயிரம் ரூபாயா...... என்னுடை இரண்டு மாச மளிகை செலவு, ஆறு மாச காய்கறி செலவு, இரண்டு வருட தீபாவளி டிரஸ் செலவு, எட்டு முறை தண்ணி அடிக்கும் செலவு, கண்கள் இருண்டன.......

சார் எல்லாம் உங்க உடம்பு நல்லதுக்கு தான், கவலைப்படாமல் கொடுங்க....... என்றாள், அந்த சிரிப்பு வரவேற்பறை பெண் ரோபோ......

உடம்புக்கு நல்லது தான். இந்தாலும் பர்ஸுக்கு நல்லது மாதிரி எதாவது டேரிஃப் இருக்கா,

ஹா ஹா ஹா ....... சிரித்தாள்,அவளின் உண்மையான சிரிப்பு எனக்கு அழகாக தெரிந்தாலும் நான்காயிரம் ரூபாய்க்கு முன் அதனை ரசிக்கமுடியவில்லை.

பேசிக் கொண்டே என்னுடைய டெபிட் கார்டை எடுத்து மிஷினில் தேய்த்து விட்டாள். கரும்பு மிஷினில் என்னுடை கழுத்தை விட்டு தேய்த்தது போல இருந்தது, அந்த நோடி........ பலாப்பழத்தில் இருந்து கொட்டை பிதிதுக்கும் போது, வெளியே வருமே அப்படி லாவகமாக வந்தது, தேய்க்கும் மிஷினில் இருந்து பில்.........

இந்த நான்காயிரம் ரூபாய் சம்பாதிக்க எத்தனை இரவு, எத்தனை பகல், நாயா, பேயா, கணிணியின் முன்னாடியும், தொலைக்காட்சியின் முன்னாடியும், தினசரிகளின் முன்னாடியும் உக்கார்ந்து அலசி ஆராய்ந்து கஷ்டப்பட்டு இருப்போம். மனம் குமுறியது....... இப்படி சம்பாதித்த அந்த நான்காயிரம் ரூபாய், சில நொடிகளிலே இப்போது வேறு ஒருத்தவன் கையில்,......... எல்லாம் இந்த பாழாய் போன உடம்பால் தானே, ஒழுங்கா நடந்து, ஓடி உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் இந்த நான்காயிரம் ரூபாய் சென்று இருக்குமா...........

அதென்னவோ........ ஷாப்பிங் மஹாலிலும், மல்டிஃப்லக்ஸ் தியெட்டரிலும் செலவு செய்யும் ஐநூறு ரூபாய்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனால், பிச்சைப்போடும் போதும், செருப்பு தைக்கும் போதும் ஐந்து ரூபாய் பெரிய விஷயமாக தெரிகிறது........ கண் கோளாறா இல்லது எண்ணக் கோளாறா...... தெரியவில்லை........

ஜிம்மில் சேர்ந்தேன், இரண்டு நாட்கள் ஆர்வமாக சென்றான், காரணம் எனக்காகவோ, ஆர்வ கோளாறோ அல்ல....... நான்காயிரம் ரூபாய் கொடு்த்து இருக்கேனே அதற்காக..... இரண்டு நாட்கள் எல்லா கருவிகளிலும் ஏறி நின்றேன், குதித்தேன், நடந்தேன், வளைந்தேன், எல்லாத்தையும் செய்தேன். ஒரு கருவியையும் விடவில்லை, அங்கிருந்த மியூசிக் செட்டைக்கூட மாற்றி அமைத்து வேறு பாடலை ஒலிக்க விட்டேன்.......... நான்காயிரம் ரூபாய் கொடுத்து இருக்கேன் இல்லையா.....சும்மாவா.....

அங்கு என்னை கவர்ந்தவர்களில் மிக முக்கியமானவர்...... தான் இந்த பரமேஷ்வர்....... பீமா படத்தில் வரும் விக்ரமைப் போல உடலை முறுக்கேற்றி வைத்திருந்தார். அவர் பக்கத்தில் போய் நின்றாலே அனல் அடிக்கும் அந்த அளவு ஜிம்மில் வேலை செய்வார். அழகான மீசை. அருமையான உடல் வாகு, கோதுமை நிறம், தவறிக்கூட ஒரு கிராம் கொழுப்பு அவர் உடம்பில் எக்ஸ்ட்ரா இருக்காது அந்தளவு கட்டுக்கோப்பான உடல் வாகு............ ஆனால் என்ன வயது தான் 61....... மனிதனை பார்த்தவுடன் பேசவேண்டும் போல இருந்தது, பேசினேன்.........

என்ன சார் இந்த வயசிலும் உடம்பை சூப்பரா வச்சி இருக்கீங்க.......

எனக்கு என்ன வயசாகும்னு நினைக்கிறிங்க.....

என்ன ஒரு ஐம்பது ஐம்பத்தைந்து........

உங்களை விட நாலு வயசு பெரியவன்.

அப்ப உங்களுக்கு 17 வயசு தானா ஆவுது......

ஹா ஹா ஹா....... இப்படி வளர்ந்தது எங்களின் நட்பு........நான் சேர்ந்த சில நாட்களாகவே அந்த குண்டு பெண் தேடினேன்......... காணவில்லை..... அந்த சிரிக்கும் ரோபோட் கிட்ட கேட்டேன்.........

அவங்க வேலையை விட்டு போயி, ஒரு வாரம் ஆகுதுனு சொன்னாங்க.....

பாலுன்றது உங்க பேரு...... தேவர்ன்றது நீங்க வாங்கி பட்டமா......... வேதம் புதிது....... சின்னப்பையன் ஜிம்மில் வந்து என்னை அடித்து விட்டு சென்றான். அதன் பிறகு சில நாட்கள் ஜிம்மிற்கு சென்றேன்,.... உடலில் எலும்பின் இணைப்புகள் எங்கெல்லாம் இருக்கோ அந்த இடத்தை எல்லாம் என்னால் மடக்க முடியவில்லை. என் வேலை கணிணியி்ல், வேலையில் கணிணியின் பட்டனை அமுக்கும் போது, மற்றொரு விரலின் உதவியால் தான் பட்டனை அமுக்க முடிந்தது. அந்தளவிற்கு வலி........ உயிர் போனது..... இதுவேலைக்கு ஆவாது என்று முடிவு செய்தேன்..., பரமேஷ்வர் சாரைப் அன்று மாலை பார்த்து....

“சார் முதலுக்கே மோசமாகி விடும் போல, என்னால் வேலைகளில் கைகளையே உபயோகப்படுத்த முடியவில்லை” என்றேன்.

“தக்ஸ் அதையெல்லாம் பெரிசா எடுத்துக் கொள்ளக்கூடாது, நான் பாரு ரிடிரயர் ஆயிட்டு உடம்பை எப்படி கன் மாதிரி வச்சிட்டு இருக்கேன் பாரு, எவ்வளவு வலியை தாங்கி இருப்பேன், பாரு கன்னுனு இருக்கு உடம்பு”

“அந்த கன்னை வச்சி வேறு எங்கையாவது சுடுங்க சார், நம்பலால தாங்க முடியாது”

“எப்பா வயசு பையன் நீ இப்படி பயந்தா எப்படி, அடுத்த மாசம் நான் ஜிம் சாம்பியன்ஷி்ப் போட்டியில் கலந்துக் கொள்ளப் போறேன் தக்ஸ் அதுக்காக தான் இந்த உழைப்பு, என் கனவு அது”

“கண்டிப்பா உங்க கனவு நினைவேறு சார், எங்க சாம்பியன்ஷிப் போட்டி நடக்குது”

“காஞ்சிபுரத்தில், அடுத்த மாசம் 5 ஆம் தேதி, அதாவது மே ஐந்தாம் தேதி”

“ஆல் தி பெஸ்டு சார், கண்டிப்பா நீங்க வின் பண்ணுவீங்க, உங்களை விட உடல் அளவில் மற்றவர்கள் திடமாக இருந்தாலும், மனதளவில் நீங்கள் தான் சூப்பர் சார்”

“தாங்க்ஸ் பா”

இதுதான் நான் கடைசியாக பேசிய பேச்சு அவருடன், அதன்பின் பல நாட்கள் நான் அந்த ஜிம்முக்கு போகவில்லை, வேலைக்கே உலை வைக்கும் வேலையாக இருந்ததால், எப்படி அதனை நாம் செய்வது, விரலை கூட தூக்க முடியவில்லை அப்புறம் எதுக்கு அந்த ஜிம்முக்கு போகவேண்டும் என்று நான் செல்லவில்லை.

அப்புறம் பல நாட்கள் கழித்து அவர் பேசியது தான் நான் இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடல். அவர் கூறினார் என்று வெள்ளிக்கிழமை அந்த பார்க்குக்கு சென்றேன், ஓடினேன், கரைந்தேன், மூச்சு வாங்கினேன், சோர்வடைந்தேன். நான் அமர்ந்தபின் பல ரவுண்டுகள் ஓடி விட்டு அவர் நான் அமர்ந்த இடத்திற்கு பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

“சார் கேட்க மறந்துட்டேன், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றீர்களா இல்லையா”

“எந்த சாம்பியன்ஷிப் பட்டம்”

“சார் மே ஐந்து அன்னிக்கு காஞ்சிபுரத்தில் நடக்கும் சாம்பியன்ஷிப் பட்டம் சார், கலந்துக்கிட்டீங்களா இல்லையா”

“இல்லை”

“ஏன் சார் அது உங்க கனவுனு சொன்னீங்க, உங்க வயசுக்கு இப்படி யாரு கட்டுக்கோப்பான உடலுடன் இருந்ததில்லை சார், என்னைப் பாருங்க வெயில் கிடக்கும் ஐஸ்கிரீமைப் போல என் பாகங்கள் உருகி நிற்கின்றன”

“தக்ஸ் என் கனவு அதுவல்ல தக்ஸ், சும்மா உன்னை தொடர்ந்து ஜிம்முக்கு வரவைக்க பொய் சொன்னேன், ஆனால் அதிலும் தோற்றுவிட்டேன், நீ ஜிம்முக்கு தொடர்ந்து வரவில்லை”

“ஐய்யோ சாரி சார், இதை நீங்க நேரா சொல்லி இருந்தாலே நான் வந்து இருப்பேனே சார் எதுக்கு இந்த பொய்யெல்லாம்”

“உண்மைக்கு இந்த காலத்தில் யார் மரியாதை தருகிறார்கள் தக்ஸ்”

“நான் தருவேன் சார்”

சிறிது நேரம் மௌனமாக இருந்தார், பூங்காவில் உள்ள குயிலின் குரலை வான் நோக்கி பார்த்தவர், சிரித்தபடி சொன்னார்..........

“அப்ப எங்க வீட்டுக்கு வந்து ஒரு காபி சாப்பிட்டு போ”

“இல்ல சார் வாக்கிங் போய் ஒரே வியர்வையா இருக்கு, இன்னோரு நாளைக்கு வரேன் சார்”

“உண்மைக்கு மரியாதை தருவேன் என்றாய்” என்றார். இந்த பதிலை நானும் உங்களைப் போலவே எதிர்ப்பார்க்கவில்லை.

“சரி சார்” என்று அவரின் பைக் முன்னால் செல்ல, நானும் பின்னால் சென்றேன்.

சென்னையில் மரங்கள் நிறைந்த வீடுகள் உடைய பகுதி அது, அவரின் வீட்டு கேட்டை திறந்தவுடன், வீட்டின் முன்புற தோட்டத்தில் உள்ள செம்பருத்தி பூவும், ரோஜா பூவும் என்னை வரவேற்றது. முன்பகுதியில் அழகான மர ஊஞ்சல் தொடங்கவிடப்பட்ட வாசலை அடைந்தேன், நீண்ட நேரம் செருப்பை அவிழ்காமல் நின்றிருந்தேன். முகத்தை கழுவியபடி சிறிது நேரம் கழித்து வந்த பரமேஷ்வர்

“என்ன தக்ஸ் வாசலிலே நிக்குறீங்க, உள்ளே வாங்க” என்று பதறினார்.

“இல்ல சார், அறிமுகம் இல்லாத ஆளைப் பார்த்து, உங்க மிஸஸ் பயப்பட போறாங்னு பயந்து.... நான் இங்கையே நின்னுட்டேன், நியாயப்படி உங்க மிஸஸை கூப்பிட்டு நீங்க தான் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும்”

“இல்லப்பா அவங்க வேலையா இருக்காங்க”

“சரி சார் பரவாயில்லை”

“நான் கிளம்பட்டுமா”

“இருப்பா காபி குடிச்சிட்டு போ”

“பரவாயில்லை சார், இன்னோரு நாள் பார்க்கலாம்”

“அன்னைக்கு நான் உன்னை வீட்டிற்கு கூப்பிடனுமே ஹா ஹா ஹா”

“ஹா ஹா ஹா என்ன சார் அசிங்கப்படுத்துறீங்க, சரி காபியை குடுங்க குடிச்சுட்டு போறேன்”

“ஹா ஹா சும்மா விளையாட்டுக்கு தக்ஸ்”

“தெரியும் சார், உங்க வார்த்தை பொய்யாக இருந்து இருந்தால் நான் உங்க வீட்டிற்கே வந்து இருக்க மாட்டேன்”

காபி வந்தது குடித்தேன். சார் உங்க மேடம் வீட்டில் இல்லையா சார், என்றேன்.

ஆம் இல்லை என்றார்........

“பரவாயில்லை சார், வந்தவுடன் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளவும், அடுத்தமுறை கண்டிப்பாக நீங்களும் மேடமும் என் வீட்டுக்கு சாப்பிட வரவும், சைவம், அசைவம் என்று எல்லாத்தையும் நல்லா சமைப்பேன் சார் நான்” என்றேன்.

“கண்டிப்பா வரணும்”

“சத்தியமா வரோம்”

“நீங்களும் உண்மைக்கு மரியாதை தருவீர்கள் என்று நம்புறேன்” என்றேன்.

“சரி” என்று என்னை வாசல் வரை வழியனுப்பி வைத்தவர். திடீரென என்னை ஒரு நிமிடம் மேலே வா, என்று மாடிக்கு அழைத்து சென்றார். அங்கே சென்றேன், கட்டிலில் யாரோ ஒருவர் படுத்துக் கொண்டு இருந்தார், என்னைப் பார்த்தும் அந்த படுத்திருந்த ஐம்பது வயது மதிக்கதக்க பெண் கண்களை மூடிக் கொண்டாள்.

“ஜானு, ஏய் ஜானு எனக்கு தெரிந்தவர் தான், கண்ணை திற” கண்கள் ஓரமாக திறந்தன.

“நான் ஜிம்மில் ஒரு குண்டு பையனை பார்ப்பேனு சொன்னேனே அவன் தான் இவன் பெயர் தக்ஸ்”

கண்கள் மட்டும் அசைந்தன.

நான் வணக்கம் கூறினேன், மறுபடியும் கண்கள் அசைந்தன.

கீழே வந்தேன்.

“என் மனைவி தான் தக்ஸ், பெராலிஸ் அட்டாக்... பல வருடங்களாக நடக்க முடியாது....... ஆரம்பத்தில் அவளைப் பார்த்துக் கொள்வது கஷ்டமாக இருந்துச்சு, இப்போ இல்லை......... நல்ல எக்ஸைஸ் பண்றேன், அதனால் அவளை ஈஸியா தூக்க முடியுது, அவளுக்கு ஒத்தாசை செய்ய முடியுது...... தக்ஸ்”

நான் பதில் எதுவும் சொல்லவில்லை,....... வீட்டை நோக்கி என் பயணத்தை மேற்கொண்டேன். நடந்ததால் என் உடலில் ஏற்பட்ட வியர்வையைவிட, என் மனதில் அதிகமான வியர்வை ஏற்பட்டது.......

உண்மையில் பரமேஷ்வர் ஆணழகன் தான்..........


தொடர்ந்து என்னை எழுத தூண்டும் அம்மாவுக்கும், என் அக்காவுக்கும் சமர்ப்பணம்..இந்த பதிவு சமர்ப்பணம்..........

நன்றி.......

sarcharan
09-05-2011, 01:31 PM
என்ன (கருத்து) சொல்ல தகஸ்...

ஒன்று கேட்கட்டுமா? இது போன்ற நிகழ்வுகளை சந்திக்கும்பொழுது உங்களது மனநிலை எப்படி இருக்கும்? சட்டென்று இவர்களை கண்டால் மனம் கலங்கிவிடுவீர்களா?


சில நிருபர்களை நான் சந்தித்ததுண்டு, ஏண்டா இந்த வேலைக்கு வந்தோமுன்னு இருக்கும்னு சொல்வதுண்டு

ரங்கராஜன்
09-05-2011, 01:40 PM
என்ன (கருத்து) சொல்ல தகஸ்...

ஒன்று கேட்கட்டுமா? இது போன்ற நிகழ்வுகளை சந்திக்கும்பொழுது உங்களது மனநிலை எப்படி இருக்கும்? சட்டென்று இவர்களை கண்டால் மனம் கலங்கிவிடுவீர்களா?


சில நிருபர்களை நான் சந்தித்ததுண்டு, ஏண்டா இந்த வேலைக்கு வந்தோமுன்னு இருக்கும்னு சொல்வதுண்டு

அதே நானும் சொல்றேன், சார்....... தினமும் காலையில் நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டு, ஆபிஸுக்கு சென்ற பின், பெரும்பாலும் முதல் செய்தியாக வருவது........

மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் தலையிலும் கல்லைப் போட்டு கொன்ற கணவன் கைது.........

கள்ளக்காதலனை கைப்பிடிக்க கணவனையும் குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்ற மனைவி கைது.......

குடிக்க பணம் தர மறுத்த பெற்றோரை அடித்துக் கொன்ற மகன் கைது....

காதலுடன் மகள் ஓடியதால், மொத்த குடும்பமே தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட கொடூரம்.......

இப்படி செய்தி வந்தால் நான் என்ன செய்வது...... உங்கள் நிருபர்கள் நண்பர்கள் சொல்வதையே நானும் சொல்கிறேன்.....

ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம் என்று நானும் தினமும் வருத்தப்படுகிறேன்......

பேசாமல் நானும், மதி மாதிரியோ, ஆதன் மாதிரியோ, சசி மாதிரியோ வேலைக்கு போய் இருக்கலாம் என்று நினைக்காத நாளில்லை....... இவர்களிடம் வேலை வாங்கிக் கொடுங்க என்று கேட்காத நாளும் இல்லை........ ஹா ஹா ஹா

யாருக்கு எது வாய்க்குமோ அது தான் வாய்க்கும்.........

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சார்.........

அக்னி
09-05-2011, 02:07 PM
ஏதேனும் பதிவிடவேண்டும். ஆனால் எப்படிப் பதிவிடுவது எனத் தெரியாமல்...
இதை எழுதுவதற்கிடையிலேயே, 10 தடவைகளுக்கு மேல் எழுதி, அழித்து... என்றாகிவிட்டது.

இப்போதைக்கு நானும் உங்கள் பதிவின் கடைசி வரிகளையே மேற்கோளிட்டுச் சொல்கின்றேன்.
"உங்களை எழுதத் தூண்டும் அனைவருக்கும் எனது நன்றி"

ஜானகி
09-05-2011, 05:36 PM
நீங்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள், உங்களைப் பாதிப்பவையாக அமையாமல், உங்களை உற்சாகமூட்டுபவையாக அமைய, உங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும், அம்மாவையே வேண்டிக்கொள்கிறேன்...எழுத்துப் பணி தொடரட்டும்....

கீதம்
10-05-2011, 05:50 AM
ரங்கராஜன்,

இந்தப் பதிவு பல விதத்திலும் என்னுள் உணர்வுத்தாக்கத்தை உண்டுபண்ணியது.

நான்காயிரம் ரூபாய் கொடுத்ததாலேயே உடற்பயிற்சிக் கூடத்தின் எல்லாக் கருவிகளிலும் ஏறி நின்று விளையாடியது போன்ற இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்.

வரவேற்பாளினி மற்றும் அந்தக் குண்டுப் பெண் பற்றிய செய்திகளைப் பகிர்கையில் அவர்களை எண்ணி பரிதாபப்பட்டேன்.

பெரியவர் பரமேஷ்வர் உடற்பயிற்சியின்மீது காட்டிய ஈடுபாடு கண்டும், உங்கள் மீது காட்டிய அக்கறை கண்டும் வியந்தேன்.

முடிவில் அந்த மகா மனிதரின் பெரிய மனம் அறிந்து பேச்சிழந்து நின்றேன். எத்தனை உயரிய குணம்! படுக்கையில் கிடக்கும் கணவருக்குச் சேவை செய்யும் பல மனைவியரைப் பார்த்திருக்கிறேன். இதுபோல் மனைவிக்காக தன் உடல் மட்டுமல்ல, மனதளவிலும் ஆரோக்கியமும் வலிமையும் கொண்ட மனிதரை சந்தித்தது உங்கள் பாக்கியமே.

பல பாடங்களைக் கற்றுத் தருகிறது அவர் வாழ்க்கை. வாழ்வில் சந்திக்கும் இதுபோன்ற அற்புத மனிதர்களை அனைவரும் அறியத்தரும் உங்கள் எழுத்தாக்கம் பாராட்டுக்குரியது. நெகிழ்வான பாராட்டுகள்,ரங்கராஜன்.

Mano.G.
10-05-2011, 11:49 AM
எனகென்னமோ நீ அடிக்கடி மன்றத்தில் எழுத
வேண்டும் அதை நான் வாசிக்க வேண்டும் என ஒரு
பேராசை எனக்குள் உண்டு.
ஒவ்வோருமுறையும் மன்றத்தை திறக்கும் பொழுது
உனது பதிவு இருக்கின்றதா என பார்பதே வேலையாகி போனது.

உன்னை நேரில் சந்திக்காமல் இருந்தால் இந்த பாதிப்பு வந்திருக்குமா தெரியவில்லை.

உனக்குள் எத்தனை எத்தனை சோகங்கள் அனைத்தையும் இவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்கிராய்.

உன் படைப்புக்களை காண காத்திருக்கும்
அண்ணன்
மனோ.ஜி

ரங்கராஜன்
11-05-2011, 02:34 AM
ஏதேனும் பதிவிடவேண்டும். ஆனால் எப்படிப் பதிவிடுவது எனத் தெரியாமல்...
இதை எழுதுவதற்கிடையிலேயே, 10 தடவைகளுக்கு மேல் எழுதி, அழித்து... என்றாகிவிட்டது.

இப்போதைக்கு நானும் உங்கள் பதிவின் கடைசி வரிகளையே மேற்கோளிட்டுச் சொல்கின்றேன்.
"உங்களை எழுதத் தூண்டும் அனைவருக்கும் எனது நன்றி"

மனதை தொடும் பின்னூட்டங்களை இட்டு மகிழ்வித்தற்கு நன்றி அக்னி...


நீங்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள், உங்களைப் பாதிப்பவையாக அமையாமல், உங்களை உற்சாகமூட்டுபவையாக அமைய, உங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும், அம்மாவையே வேண்டிக்கொள்கிறேன்...எழுத்துப் பணி தொடரட்டும்....

நன்றி ஜானகியம்மா...

இவ்வாறான சம்பவங்களை நான் பதிப்படையும் சம்பவங்களாக பார்ப்பதை விட பாடமாக தான் பார்க்கிறேன். மனைவியிடத்தில் என்றும் அன்புடன் பாசத்துடன் இருக்க, அவள் மனைவியாக இல்லாமல் வெறும் மரமாக படுத்திருந்தாலும் என்பதை இந்த சம்பவத்தில் இருந்து நான் கற்றுக் கொண்டே அம்மா.... வாழ்க்கையையும், காலத்தையும் விட பெரிய ஆசிரியர் யாராக இருக்க முடியும்,..... நான் பயில விரும்பும் பாடங்களை மன்றத்தில் யாராவது ஒருவருக்கு பயனாக இருக்கும் என்று தான் இங்கு அதனை பதிவிடுகிறேன்........ பரமேஷ்வரைப் பார்த்து நான் இன்ஸ்பயர் ஆனதை போல வேறு யாராவது ஆகி மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு இல்லையா...... அதனால் தான் ம்மா.......

தொடர்ந்து என்னை உற்சாகமூட்டுவதற்கு நன்றி..
பல பாடங்களைக் கற்றுத் தருகிறது அவர் வாழ்க்கை. வாழ்வில் சந்திக்கும் இதுபோன்ற அற்புத மனிதர்களை அனைவரும் அறியத்தரும் உங்கள் எழுத்தாக்கம் பாராட்டுக்குரியது. நெகிழ்வான பாராட்டுகள்,ரங்கராஜன்.

நன்றி கீதம் அக்கா....

என் எழுத்தை எப்போதும் நம்பும் உங்களின் நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்....
உன் படைப்புக்களை காண காத்திருக்கும்
அண்ணன்
மனோ.ஜி

வழக்கமான அண்ணன் தம்பி பாச மரபை மீறியதை நம் உறவு......... அதற்காக கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்..... உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறிய கதையை நீங்கள் கூறி நான் கேட்ட பின், உங்களிடம் நான் கேட்ட முதல் கேள்வி (ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்)

அண்ணா உங்க சுயசரிதத்தை நான் எழுதட்டுமா.......(வெட்கப்பட்டு குழந்தைப் போல சிரித்தபடி, கருப்பு கன்னம் சிவக்க சொன்னீங்க.......)

அப்படி ஒண்ணும் நான் சாதித்து விடவில்லை... என்று....

அப்போது என் மனதில் தோன்றிய முதல் விஷயம்.... இப்படி வாழ்க்கையையே போராடி வெற்றி பெற்று சைலண்டா சாதிச்சவங்களோட பெயர் வெளியவே தெரியமாட்டுது, ஆனால் சும்மா பத்து பெப்ஸியை ஒரே நேரத்தில் குடிச்சவன், பத்து நிமிஷத்தில் இருபது பேருக்கு சவரம் செய்தவன் பெயர் எல்லாம் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறதே என்ற ஆற்றாமை தான்

இவ்வாறான மனிதர்களை வெளிச்சம் போட்டு காட்டும் சிறு முயற்சிகள் தான் என்னுடைய பதிவு....

என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றி....அண்ணா...

Nivas.T
11-05-2011, 05:17 PM
உண்மையில் நீ மிகவும் கொடுத்துவைத்தவன் பங்காளி

உனக்குமட்டும் வாழ்க்கையில் இப்படி நல்ல நல்ல அனுபவங்களாக, நல நல்ல மனிதர்களாக சந்திக்கும் வாய்ப்பை ஆண்டவன் கொடுக்கிறார். மன்னிக்கவும் வாய்ப்பு அதுவாக அமைகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம் இவையெல்லாம் உன்னை மேலும் மேலும் செம்மை படுத்தும் என்னும் எனது நம்பிக்கை கண்டிப்பாக வீண்போகாது.

வழக்கம் போல் எழுத்துக்கள் மிக அழகு
தொடர்ந்து எழுதவும்

அன்புடனும், செல்லப் பொறாமையுடனும் நான்