PDA

View Full Version : சித்திரையின் சித்திரங்கள்..!! - 2



பூமகள்
19-04-2011, 03:42 PM
*
அன்று..

வெயில்
அவர்களுக்காகக்
காத்திருந்தது..

அம்மா முந்தானையின்
காற்றாய் வீசும் மரத்தினடி
அவர்கள்..!!

இன்று..

வெயில்
அவர்களுக்காக
காத்திருந்தது..

தார்ச் சூடு தாங்காமல்
ப்ளாஸ்டிக் கூரையடி
அவர்கள்..!!

################

*

மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..

மரப் பஞ்சம்..!!

*

அமரன்
19-04-2011, 03:49 PM
மரத்தடி
தாயின்மடி
முதல் கவியடி
கோடைக் கும்மியடி!

கழுத்தே இல்லையாம்
எப்படி இருக்கும்
கூடு ஆரங்கள்!
எங்கும் முளைத்திருந்தன
கூடாரங்கள்!
ம்.... தினமும் பிக்னிக்!

Nivas.T
19-04-2011, 03:58 PM
மரங்களை வெட்டிவிட்டு
மழைக்காக காத்திருப்பவர்களை
என்னவென்று சொல்வது?


கருத்து கவிதை
அழகுடன்

பூமகள்
19-04-2011, 04:09 PM
கழுத்தே இல்லையாம்
எப்படி இருக்கும்
கூடு ஆரங்கள்!
எங்கும் முளைத்திருந்தன
கூடாரங்கள்!
ம்.... தினமும் பிக்னிக்!

*

கழுத்தறுந்த மரக் கொம்பு
தவித்து நிற்கும்
கூடிழந்த பறவைகள்..

எங்கும் கூடாரங்கள்..
குருவிகளுக்கெங்கே
வாழ்வாதாரங்கள்??!!

*

கீதம்
20-04-2011, 12:58 AM
*

கழுத்தறுந்த மரக் கொம்பு
தவித்து நிற்கும்
கூடிழந்த பறவைகள்..

எங்கும் கூடாரங்கள்..
குருவிகளுக்கெங்கே
வாழ்வாதாரங்கள்??!!

*

மனமறுக்கும் நிதர்சனம்!

கூடிழந்த பறவைகளாய்
மனம் அரற்றச் செய்யும்
மகத்தான வரிகள்!

பாராட்டுகள் பூமகள்.

ஜானகி
20-04-2011, 02:44 AM
சித்திரை வெய்யிலின் கொடுமையைவிடச் சுடுகிறது உண்மைகள்....!

இளைய தலைமுறையின் விழிப்பால், உலகம் மீண்டும் துளிர்க்கட்டும், பூக்கட்டும்.....காத்திருப்போம்...!

இளசு
20-04-2011, 07:55 PM
அருமையான படைப்பு பாமகளே...

அமரனின் கூட்டிசை இணைந்த அழகு..



வெயிலூராம் வேலூரில் மரம் நட்டு வெப்பம் தணித்ததாமே எக்ஸ்னோரா..
பாமகளின் பாடல் கேட்டு பரவாதா இப்பழக்கம் ஊர் ஊரா?

krishna1988
20-04-2011, 10:17 PM
மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..
மரப் பஞ்சம்..!! மருத்துப்போன பஞ்சம் !!

பூமகள்
21-04-2011, 04:17 AM
*

இளஞ்செடி பதியனாம்
கார்தொடும் மரம்
இழந்தபின்..

மரக்கன்றுகள் நடவேனும்
நிலம் கொஞ்சம்
விடுவாரில்லை..

அக்னிச் சூட்டில்
காரையிட்டு காரும் விட்டு
நகரும் நரகமானது
நகரம்...

*

பனையோலை நொங்கும்..
பதமான பதநீரும்..
இளைப்பாற தென்னைநிழலும்..
விளையாட உண்டிவில்லும்..
இல்லாத கோடை..
நெஞ்செங்கும் நிறைக்கிறது
வெயிலினும் வெம்மை..!!

*

ஆதவா
21-04-2011, 05:26 AM
கலக்கல்ஸ் பூமகள்!! இரண்டாவது கவிதை நெத்தியடி அல்ல சுத்தியடி!!! அவ்வளவு பலம்!

@ அமரன்... சூப்பருங்க. இப்பல்லாம் மரத்தை நிர்வாணமாக்கி நிர்மூலமாக்கி ரசிக்கிறார்கள்!!

தொடருங்க தொடருங்க..

ஷீ-நிசி
21-04-2011, 01:12 PM
*

*

மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..

மரப் பஞ்சம்..!!

*


மரப் பஞ்சம் வார்த்தை புதுமை...

எனக்கு இதில் சிறு குழப்பம்..

பிரசவிக்காமலே இருந்திருந்தால் அதை மலடெனலாம்...

அவ்வபோது பிரசவித்த ஒன்று பிரசவிக்காமல் போனால்..

குடும்பக் கட்டுபாடோ?!!!

ஷீ-நிசி
21-04-2011, 01:13 PM
பனையோலை நொங்கும்..
பதமான பதநீரும்..
இளைப்பாற தென்னைநிழலும்..
விளையாட உண்டிவில்லும்..
இல்லாத கோடை..
நெஞ்செங்கும் நிறைக்கிறது
வெயிலினும் வெம்மை..!!


அட...ஆமாம்ல... இப்படி இருந்தா எப்படி இருக்கும்.... மனம் பேசியது..

அழகு!

இளசு
21-04-2011, 09:36 PM
குளிர்தேனாய் கவிதைகள்..


பாமகளுக்கு குளிர்வாழ்த்து!


நொங்கு நொங்கு என்று நொங்கிய பின் எஞ்சிய
நுங்குநீரை முதுகில் ஊற்றி வேர்க்குரு வேதனை தணித்த
இளங்கோடைக் காலங்கள் நினைவாடலில்..

Nycil - Not that nice!