PDA

View Full Version : (3)பள்ளிக்கூட கலாட்டாக்கள்-நீ வருவாய் என...



lavanya
07-12-2003, 10:57 AM
(இந்த கதையில் வரும் சரோஜா டீச்சருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்)

பள்ளிப்பருவங்களில் பதினோராம்,பனிரெண்டாம் வகுப்புகளை கடந்து வரும்
எல்லோர்க்கும் ஏதாவது ஒரு சம்பவம் நிச்சயமாக மனதில் அழுத்தமாய் பதிந்து போயிருக்கும். அது சுகமான அடல்சண்ட் அனுபவமாக சைட் அடித்த அல்லது சைட் அடிக்கப்பட்ட அனுபவம்,அல்லது சுற்றுலா போயிருந்த போது மறக்க முடியாத நிகழ்வு, இப்படி ஏதாவது ஒன்று நிகழ்ந்திருக்கும். எனக்கு கடவுள் உதவியால் எல்லாவற்றிலுமே கொஞ்சம் நிகழ்ந்திருக்கிறது.அதெல்லாம் நேரம் கிடைத்தால் பின்னால் எழுதலாம் என்றிருக்கிறேன். ஆனால் இந்த சம்பவம் மேற்சொன்னவைகளில் அல்ல..கொஞ்சம்
வித்தியாசமாக.....

நாங்கள் படித்த அந்த அரசு பள்ளி கூடத்தில் நான் +1 - ல் கணிதப் பிரிவு எடுத்திருந்தேன். கணக்கு பாடத்தில் அவ்வளவாக ஆர்வமில்லை எனினும் அது படித்தால்தான் பின் கல்லூரி போக கொஞ்சம் பயனுள்ள படிப்பை தேர்ந்தெடுக்க முடியும் என்று ஏதோ ஒரு ' அதி மேதாவி ' என் அம்மாவிடம் போட்டு கொடுத்ததால் அப்படி ஒரு அபாயகரமான வகுப்பு சேர வேண்டியதாய் போனது. எங்கள் வீட்டில் எப்போதும் மதுரை ஆட்சி என்பதாலும் அப்பா வெளியிலிருந்து ஆதரவு தரும் கூட்டணி கட்சி நிலையில் இருந்ததாலும் நான் விரும்பிய காமர்ஸ் வகுப்பெல்லாம் எடுக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.பெரிதாக
ஆடிட்டரோ,இஞ்சினியரோ லட்சியம் ஏதும் அப்போது இல்லை. சின்ன வயசில நான் அதுபடிக்க ஆசைப்பட்டேன்,இது படிக்க ஆசைப்பட்டேன் என்றெல்லாம் 'சுற்ற' விரும்ப
வில்லை.அடியேனுடைய பத்தாம் வகுப்பு பிராக்ரஸ் கார்டை பார்த்தாலே எல்லோர்க்கும் அந்த காரணம் புரியும். பதினோராம் வகுப்பு கணித பிரிவுக்கு செல்லையன் ஸார்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணித வாத்தியார் எங்களின் கஷ்ட காலம் அவர்தான் கிளாஸ்
வாத்தியாரும் கூட....!

மொத்தமே எங்கள் வகுப்பில் 24 பேர்தான். 16 பையன்கள்,8 பெண்கள்.ஆனால்
காமர்ஸ் வகுப்பில் ஆணும் பெண்ணுமாய் 62 பேர்கள். (இப்போது வரை அந்த ரேஞ்சில்தான்
இரண்டு வகுப்புகளிலும் என்று கேள்விபட்டேன்). வகுப்புக்கு அவர் வந்த முதல் நாளே
'உங்க ஜாதகம் எல்லாம் எனக்கு வேணாம்.உங்க பேரும் டென்த்ல மேத்ஸ் மார்க் என்னான்னும் சொல்லிட்டு உட்கார்ங்க' என்று கேட்க எனக்கு சங்கடமாகிப் போனது. ஆஹா ....மொதோ கிளாஸ்லயே மானம் கப்பலேறப் போகுது என்று நினைத்தேன். அப்புறம் சக
மாணவர்கள் சொல்ல ஆரம்பித்தவுடன் எனக்கு கொஞ்சம் நிம்மதியாகப் போய்விட்டது.ஏனெனில் நாப்பது ஐம்பது மார்க் எடுத்தவர்கள் எல்லாம் இந்த குரூப் எடுத்திருந்தார்கள்.நான் சுமார் அறுபதுக்கு பக்கத்தில் இருந்ததால் கொஞ்சம் ரிலாக்ஸாக உணர்ந்தேன். கடைசியாக ஆண் வரிசையில் இருந்த ஒரு அப்பாவி மாணவன் எழுந்து பேர் சொல்லி மேத்ஸ்ல 36 மார்க் என்று சொல்ல '36 மார்க் எடுத்துட்டு ஏன் இங்க வந்தே ....................
போயிருக்கலாம்ல...' என்று சொல்ல கிளாஸே கொல்'லென சிரித்தது.அந்த பையன் முகம் உடனே வாடி வதங்கி போனது.எனக்கு கணக்கு ஸார் மேல் அருவெறுப்பு படிந்த முதல் நாள் அதுதான்....இன்று வரை அந்த பாடத்தின் மீது ஒரு தீராத வெறுப்பு இருப்பது அதனால்
கூட இருக்கலாம்.

அந்த பையன் பதில் பேசாது நின்றிருந்தான். 'சொல்டா கேட்டுகிட்டிருக்கேன்ல
பெரிய ................ட்டம் நின்னுகிட்டிருக்கே ' என்று சொல்ல மீண்டும் ஒரு சங்கடம்
எல்லோர்க்கும் வந்து போனது.ஆனால் அப்போதுதான் தெரிந்தது.அவருடைய மேனரிஸம்
அதுதான். ரோமத்தின் கொச்சைப் பெயரை கொண்டு நிமிஷத்திற்கு மூன்று முறை அதை
பயன்படுத்துவார்.அத்தோடு மட்டுமல்ல .பெண்களை என்னல, வாலே , போலே என்றுதான்
பேசுவார்.சமயத்தில் வாடி போடி என்றும் பேசுவார்.(இதெல்லாம் பின்னால் தெரிய வந்தது) ஒருவழியாக அந்த வகுப்பை ஒப்பேற்றி விட்டு போய் விட்டார். அதற்கு பின் அந்த பையன் அந்த வகுப்பில் முகத்தை மூடி அழுது கொண்டிருந்த காட்சி இப்போது நினைத்தால் கூட மனசை பிசையும்.

அதற்கு பிறகு வகுப்பில் அவர் என்னதான் அருமையாக நடத்தினாலும் எங்களின்
அந்த முதல் கோணல் பார்வையில் விழுந்த அவரின் மதிப்பு மாறவே இல்லை. அரசு பள்ளிக் கூட சட்டங்களில் 10 ஆம் வகுப்பு தாண்டிய பெண்களை கை தொட்டு அடிக்க கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டம் இருப்பது எங்களுக்கு எல்லாம் தெரியவே இல்லை. ஏனெனில் எங்கள் காதுகளை எல்லாம் பிடித்து திருகுவார். ஆனால் அவரின் செய்கைகள்,
பார்வைகள் இதிலெல்லாம் துளி கூட ஆபாசமில்லை.அது போல் வகுப்பில் பாடம்
நடத்தாமல் வெட்டி கதையும் பேச மாட்டார். இப்படியாக வகுப்புகள் போய் கொண்டிருந்தது.ஆனால் அந்த முதல் நாள் சம்பவத்திற்கு பிறகு அந்த பையனுடன் நாங்கள் எல்லாம்
வாஞ்சையோடு பழகினோம். ஒரு வித பரிதாபம்தான் காரணம். ஆனால் ஆச்சரியம் அவன் தான் கொஞ்சம் நன்றாக படிக்க தொடங்கியிருந்தான்.

நடுவில் ஒரு 15 நாட்கள் அந்த ஸார் லீவில் இருந்த போது அந்த வகுப்புகள்
எல்லாம் எங்களுக்கு பெரும்பாலும் �பிரீயாவே இருக்கும்.அது போன்ற வகுப்புகளில்
எல்லாம் ஓவிய ஆசிரியர், நீதி போதனை ஆசிரியர் இப்படி யாரையாவது அனுப்பி
வைப்பார்கள். இவர்கள் வந்து பெரும்பாலும் ஸ்டா�ப் ரூமில் செய்யும் பணியை இங்கு செய்து கொண்டிருப்பார்கள். அதாவது தூங்கி கொண்டிருப்பார்கள். அந்த நீதி போதனை டீச்சர் பெயர் சரோஜா (இவர் பெயரும் மாற்றியிருக்கிறேன்).கொஞ்சம் அழகாக இருப்பார்...ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயமாக செல்ல கூடியவர்.மற்ற வகுப்புகளுக்கு ஆக்டிங் டீச்சர் ஆக போவார். நீதி போதனை என்ற பெயரில் 'அசாதரண' கதைகள் சொல்லி 'அறுக்காமல்' இயல்பான நிகழ்வுகள் எல்லாம் சொல்லி எல்லோரையும் கவர்ந்து வைத்திருந்தார். நிறைய உலக விஷயங்கள் எல்லாம் சொல்லி எங்களுடன் நெருக்கமானார்.ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் எங்களுக்கு அவர் மீது நெருடல் இருந்தது.இன்னும் அவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.அப்போதே அவருக்கு வயது 30க்கு மேல் இருக்கலாம்.பட்டுகோட்டை பிரபாகரின் கதையில் வரும் டிசம்பர் பூ டீச்சரை எங்களுக்கு அந்த வயதில் ஞாபகப்படுத்திய முகம்.அமைதியான சுபாவம்.பசங்களா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் 'ஏம்மா வாம்மா போம்மா என்றுதான் பேசுவார்' .

ஒரு நாள் தஞ்சையில் ஒரு திரையரங்கில் பறவைகள் - வன விலங்குகள் தொடர்பான
ஒரு திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். அதற்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வரி
விலக்கு அளித்து குறைந்த கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். 6 முதல் 10 வகுப்பு வரை ஒரு நாளும் 11,12 ஒரு நாளும் என திட்டமிட்டிருந்தார்கள். இதில் நாங்கள் கட்டாயம் ஒரு டீச்சரோடு செல்ல வேண்டும்.எங்கள் முதல்வரிடம் இந்த நீதி போதனை டீச்சரை
சிபாரிசு செய்து அழைத்து போனோம். பதினோர் மணி காட்சி படம் முடிந்து நாங்கள் தஞ்சை சிவகங்கை பூங்கா போவதாய் சின்ன பிளான். அங்கு போய் மதிய உணவுக்கு பின் ஒரு வட்டமாய் எங்கள் மாணவர்கள் 24 பேரும் வட்டமாய் உட்கார்ந்து பேசத் தொடங்கினோம்.

பேச்சின் சுவாரஸ்யத்தில் கொஞ்சம் துடுக்காய் என் சக தோழி அனிதா திடீரென
அந்த டீச்சரிடம் ' ஏன் இன்னும் நீங்க கல்யாணம் பண்ணிக்கலை ...'என்று கேட்டாள்
அந்த டீச்சரின் முகம் உடனடியாக ஒரு மாற்றத்திற்கு போய் மீண்டும் திரும்பி வந்தது....
நாகராஜ் என்ற மாணவன் உடனே 'டீச்சர் ரொம்ப பர்சனல்னா வேணாம்...'என்று உடனே
சொல்ல நாங்களும் ' ஆமா டீச்சர்' என தயங்கியபடியே சொல்ல அவர்கள் ஒரு வினாடி
யோசித்து 'இல்லைப்பா சொல்றேன் ' என்று ஆரம்பித்தார்கள்.

அவர்கள் சொன்ன விதத்தை கொஞ்சம் சுருக்கமாக சொல்லி விடுகிறேன். அவர்களின்
கல்லூரி காலகட்டத்தில் சக நண்பனை பெரிதும் விரும்பியிருக்கிறார்கள். ஆனால் அவரிடம் சொல்லவேயில்லையாம்.சொல்லாத காதல் செல்லாது என தோழிகள் வற்புறுத்தி அவரிடம் கல்லூரி இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்.ஆச்சரியம் அவரும் இவர்களை
விரும்பியிருக்கிறார்கள். ஆனால் பிரச்னை என்னவெனில் அந்த சக தோழர்க்கு ஒரு தங்கை இருப்பதாகவும் அவர் கல்யாணம் முடிந்த பிறகு தான் இவர் கல்யாணம் என்றும் உறுதியாக சொல்லி விட்டாராம். பின்பு உறவுகளில் ஒருவருக்கு ஏகப்பட்ட வரதட்சணை எல்லாம் கொடுத்து டீச்சரின் காதலர் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அதன்
பொருட்டு அவரின் வீட்டையே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாம். எனவே எவரோ ஏற்பாடு செய்த விசாவில் சிங்கப்பூர் போயிருக்கிறாராம்.அவருக்காக டீச்சர் காத்திருக்கிறார்.எங்களுக்கு அப்போது அந்த காதல் மீது பெரும் மரியாதை அழுத்தமாய் விழுந்தது...
ஏழு வருடமாக ஒருவருக்காக காத்திருக்கும் எங்கள் டீச்சர் மீது எங்களுக்கு அளவிட
முடியாத அன்பு... ஆனால் 3000 மைல்களுக்கு இடையில் அந்த காதல் உறுதியாக
இருப்பதாக டீச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

நாங்கள் அதற்கு பிறகு டீச்சருடன் மிக நெருக்கமாக ஆனோம். இரண்டு வருடங்களுக்கு பிறகு பள்ளி பிரிவு நாளில் நாங்கள் எல்லோரும் அந்த டீச்சரை
பிரியா விடை பெற்று கொண்டு அவர் கல்யாணம் நடக்க பிரார்த்தித்தோம்.எங்களின்
முகவரிகள் எல்லாம் டீச்சர் பெற்று கொண்டு கல்யாணத்தின் போது பத்திரிக்கை
அனுப்புவதாகவும் அவசியம் வந்து வாழ்த்தும்படியும் கேட்டுக் கொண்டார்.அதற்கு பிறகு
கல்லூரி காலங்களில் எப்போதாவது அந்த டீச்சரின் நினைவு வரும். ஆனால் போய்
பார்க்கும் அளவிற்கு எனக்கு சூழ்நிலை எல்லாம் அமையவில்லை. நடுவில் நாகராஜை
ஒரு தரம் சந்தித்த போது 'லாவ்..சரோஜா டீச்சர் இப்ப நம்ம ஸ்கூல்ல இல்லைப்பா...
ட்ரான்ஸ்�பர்ல சேலம் போய்ட்டாங்களாம்..' என்றான். எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாக
இருந்தாலும் அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.நம்பிக்கைதானே வாழ்க்கை...

அதற்கு பிறகு என் MCA இறுதி வருடத்தில் தஞ்சையின் ஒரு முக்கிய சந்திப்பில்
முதல் நாள் கிளாசில் அழுதான் என்று சொன்னேன் சொல்லவா அந்த மாறனை சந்தித்தேன்..
ஆச்சரியம் +2 மார்க் ஸீட் வாங்க பள்ளிக்கு வந்த போது பார்த்தது....இப்போது மணலி
பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக இருப்பதாக சொன்னான்.எனக்கு சந்தோஷமாக
இருந்தது... அவன் இன்னொரு எதிர்பாராத இன்னொரு விஷயமும் சொன்னான்... லாவ்
விஷயம் தெரியுமா ... சரோஜா டீச்சர் இங்கதான் ...................பள்ளிகூடத்தில் வேலை
பார்க்கிறாங்க...சேலத்தில முன்னாடி வேலை பார்த்தாங்களாம்...இப்ப மறுபடி நாலு
வருஷத்திற்கப்புரம் இங்க வந்திருக்காங்க....என்று சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்க மெடிக்கல் காலேஜ் �பர்ஸ்ட் கேட்லதான் தங்கியிருக்காங்க....'
போய் பார்த்துட்டு வா என்று சொல்லி முகவரி தந்தான். உலகம் உருண்டை என்பது
எவ்வளவு பெரிய உண்மை என்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது...கல்யாணம் பண்ணி
கிட்டாங்களாப்பா என்றேன்...'அதெல்லாம் பண்ணிக்கிட்டாங்க லாவ் அவங்க லவ் பண்ண ஆளோட கம்யூனிகேஷன் நடுவிலேயே நின்னு போச்சாம்.... ...நான் நினைக்கிறேன் அந்த ஆள் வேற யாரையோ கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆயிட்டான் போல...இவங்க இன்னும் அந்தாளுக்காக காத்துக்கிட்டிருந்து லேட் மேரேஜ் பண்ணிருக்காங்க...'என்று
சொன்னான். ஆர்வம் மேலிட நானும் அனிதாவும் சித்ராவை அழைத்துகொண்டு ஒரு
ஞாயிற்று கிழமையில் டீச்சர் வீட்டுக்கு போனோம்.

இப்போது டீச்சர் நிறைய மாறிப்போயிருந்தார்கள்.தலை முடியில் வெள்ளிக் கம்பிகள்
புதிது புதிதாய் முளைத்திருந்தன.நிறைய மாற்றம் எதிர்பார்த்து போயிருந்த எங்களுக்கு
அது மிக ஆச்சரியமாக இருந்தது.. எங்களை அடையாளம் கண்டு கொள்வதில் டீச்சருக்கு
நிறைய சிரமமிருக்க வில்லை.. குழந்தை ஏதும் இல்லை. டீச்சரின் கணவர் இந்திய உணவு கழகத்தின் தஞ்சை பிரிவில் கணக்காளராக இருப்பதாக சொன்னார்கள்.நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது டீச்சரா ஏதும் சொல்வார் என்று காத்து கொண்டிருக்க அவர் இந்த சப்ஜெக்ட்டை தொடவே இல்லை என்பதால் நாங்கள் மெதுவாய் ஆரம்பித்தோம்


டீச்சர் நீங்க சொன்னவர் சிங்கப்பூர்லேயிருந்து வரலையா....?

இல்லைப்பா....

ஏன்......?

அங்க ஏதோ பிரச்னை... ஒளிஞ்சி வேலை பார்க்கிறதா ஒரு லெட்டர் வந்திச்சி...

சரி.....

எங்க வீட்ல ரொம்ப பிரச்னை பண்ணிட்டாங்க...எத்தனை வருஷம்தான் காத்திருப்பேன்னு...ஒரு நேரத்தில அம்மா ரொம்ப பயப்படற மாதிரியான முடிவுக்கு வர்ற மாதிரி
தெரிஞ்சதால கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்...ஆனா....

சொல்லுங்க டீச்சர்.....

கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால வரைக்கும் நான் அவருக்காக வெயிட்
பண்ணேன்.அவர் சொன்ன அட்ரஸ்க்கு லெட்டர் போட்டேன்..பதறிக்கிட்டிருந்தேன்...
ஆனா அங்கேர்ந்து எந்த ரெஸ்பாண்ஸ�ம் வரலை...எல்லாம் விதிப்படி நடக்கட்டும்னு
ஒத்துகிட்டேன்.

லேசாக கண் கலங்க ஆரம்பித்திருந்தார்.நாங்கள் கிளம்ப ஆயத்தமானோம். டீச்சர் செய்தது சரியா தவறா என எங்களுக்கு தெரிய வில்லை. ஆனால் புறப்படும்போது டீச்சர்
எங்களிடம் 'இன்னும் 2 மாசத்துல என் ஹஸ்பெண்டுக்கு பூனாவுக்கு ட்ரான்ஸ்�பர் வந்திடும்...நானும் வேலையை ரிசைன் பண்ணிட்டு கூடப் போயிறலாம்னு முடிவு
பண்ணிருக்கேன்....

நாங்கள் திடுக்கிட்டோம் .. "ஏன் டீச்சர்...?"

"இல்ல .... கால ஓட்டத்துல எங்கையாவது அவரை பார்க்கலாம்... ஏதோ ஒரு ரோட்டு
முனையில், பஸ்ஸில், ஏதோவொரு தருணத்தில் அவரை நான் சந்திக்க நேரலாம்.."

" சரி அதனால் என்ன...?"

"அவர் ஒரு வேளை கல்யாணம் பண்ணிக்காம இன்னும் உனக்காகத்தான்
காத்துகிட்டிருந்தேன்னு சொல்லிட்டா.....?"

முற்றும்

முத்து
07-12-2003, 11:44 AM
லாவண்யா அவர்களே ...
அருமை ... கடைசியில் ஒரு திடுக் வைத்துவிட்டீர்கள் ...
அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் .....
நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் ....

பாரதி
07-12-2003, 03:54 PM
காதலை உயர்த்துகிறதா...? இல்லை காதலின் வலியை சொல்கிறதா...? இல்லை காதலனின் வலியை தவிர்க்க உதவுகிறதா...?
நீ வருவாய் என ...சுவையுடன்தான் இருக்கிறது. ஆனால் என்ன... சுவை கொஞ்சம் உப்புக்கரிக்கிறது... கண்ணீரால்.

இளசு
07-12-2003, 10:29 PM
விரல்கள் சன்னல் கம்பிகளை வருடினாலும்
விழிகள் நட்சத்திரங்களை வருடியபடியே...
-கவிஞர் மேத்தா.

அடல்சண்ட்... சைட் அடிப்பது, அடிக்கப்படுவது என்ற
அந்த வயதின் பரவச மணற்பரப்பில் கால்கள் புதைய நடைபோடும்போதே
நட்சத்திரமாய் உயர்ந்த சரோஜா டீச்சரின் காதலை
புரிந்து, உணர்ந்து, சிலாகித்த உங்கள் நட்புக்குழுவின் உயர்ந்த பார்வை
எண்ணி வியக்கிறேன் லாவ்.
அந்த வயதில் ஆண்கள் மட்டும் படிக்கும் மேல்நிலைப்பள்ளி விட்டு
வரும் வழியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவலாளிக் கண்ணில்
மண்ணைத்தூவிவிட்டு எலந்தப்பழம் பறித்துத் திரிந்த எனக்கு
நாகராஜின் மெல்லுணர்வு சிலிர்ப்பைத் தருகிறது..
பெண்மையின் சிநேகம் தரும் மென்மை அது..மேன்மை அது..
பொதுவாய் ஆண்களை விட உய்த்துணரும் சக்தி விரைவில் பெற்றுவிடும்
பெண்மையிடம் ஆண் கற்றுக்கொள்ள எந்த வயதிலும் விஷயம் உண்டு..
"ஆம்பள" என்ற போர்வையை விலக்கினால்..இல்லையா லாவ்?

கிரைம், திரில்லர், சயன்ஸ் பிக்ஷன், கற்றதும் பெற்றதும் என்று முழுவட்டம் வந்து பின் மறுபடி ஆரம்பிக்க கிரியா ஊக்கி சுஜாதாவுக்கே ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்தான்...

அனுபவத்தை அச்செடுத்தாற்போல் அழகாய் சொல்வது ஒரு வரம்..
அதுவும் ஜன்னல் திறந்தவுடன் மழை இரவு முடிந்து வரும் அதிகாலை
தூயக்காற்று போல்..புத்துணர்ச்சி தரும் நடையில்..
சேரன் சொன்னார் - பழமையும் புதுமையும் சந்திக்கும் எழுத்தென்று..
அது உங்கள் பாடல் தொகுப்புகளில்..
மகாதேவியும், பிதாமகனும் பக்கத்து பக்கத்தில் வரும்...

இந்த வகைப் பதிவுகள் வயதை வென்றவை..வயதில்லாதவை..

காதலன் பொய்யாகலாம்..
காதல் பொய்யாவதில்லை..
சரோஜா டீச்சரின் அம்மன அமைவுக்கு என் வந்தனம்..

வாழ்த்துகிறேன் லாவ்..தொடர்க..

நிலா
07-12-2003, 11:06 PM
லாவண்யா மிகவும் அருமை!
இயல்பானநடை!அழகாய் சொல்லிவிட்டு எளிதாய் சென்றுவிட்டீர்கள்.எங்கள் மனபாரம் ஏறியதை உணராதவாறு!

பாராட்டுகள்!தொடரட்டும் உங்கள் கலாட்டாக்கள்!

lavanya
08-12-2003, 03:30 PM
நன்றிகள் பல நண்பர்கள் பாரதி,முத்து ,இளசு,தோழி நிலா....உங்கள்
எல்லோர்க்கும்...

சேரன்கயல்
08-12-2003, 04:01 PM
இனிய லாவ்ஸ்...
சரோஜா டீச்சரின் கதை படித்து...

இளமைத் துடிப்பில் செய்த அட்டகாசங்களும்...அட்டகாசங்களுடன் வெட்டிவிட்ட தோழமைகளும், துண்டித்துக்கொண்ட மதில் மேல் சுவர் நேசங்களும்...நெஞ்சில் அலைமோதத் தொடங்கிவிட்டன...
குடும்பம், ரசனை, கொள்கை என்று பல விதிகளை தடைக்கற்களாக அமைத்துக்கொண்டு இதோ இதுநாள் ஓடி வந்தாயிற்று...எப்போதாவது தனிமையில் வெறுமை உறுத்தும் தருணங்களில் வலம் வரும் முகங்களில்...சரோஜா டீச்சர் நினைத்ததுபோல...யாரையாவது பார்க்கப் போய்...அவர் மாற்றத்திற்காய் காத்திருந்தேன் என்று சொல்லினால்...உடைந்துபோக மாட்டேனா...என்று எண்ணுவதுண்டு...(மனைவிதான் அடிக்கடி என்னை தேற்றிவிடுவாள், அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என)...
அந்த எண்ணத்தை இந்தப் பதிவு கலவரமாக்கியிருக்கிறது...

அருமையான அனுபவங்களை வரிசைப்படுத்தும் உங்களை வாழ்த்துகிறேன் லாவ்ஸ்...

lavanya
09-12-2003, 12:22 AM
நன்றி... சேரன்கயல்...உங்கள் பதிவை பார்த்தால் உங்களுக்கும்
இது போல் அனுபவம் நிறைய இருக்கும் போல் இருக்கிறதே...

இளசு
09-12-2003, 12:25 AM
ஆமாம் லாவ்,
சரோஜா டீச்சரின் ஆண்பால் பதிப்பு சேரனின் அடிமனதில் புதைஞ்சிருக்கு

அலை...
09-12-2003, 12:55 AM
லாவண்யா...

உங்கள் சினிமாப்பதிவை மட்டுமே படித்திருக்கிரேன்...அழகுக் கவிதை இந்தப் பதிவு...

இப்படியே சிறு சிறு சம்பவங்களாய் தொடர்ந்து எழுதுங்கள்



அலை...

சேரன்கயல்
09-12-2003, 11:34 PM
ஆமாம் லாவ்,
சரோஜா டீச்சரின் ஆண்பால் பதிப்பு சேரனின் அடிமனதில் புதைஞ்சிருக்கு

அப்படியே சரோஜா டீச்சர் போல இல்லை...
சந்தர்ப்ப சூழ்நிலைகள்..கிட்டதட்ட அந்த மனநிலைக்கு என்னை தள்ளியிருக்கின்றன...

(ஒரே நிம்மதி...எல்லா மேட்டரும் திருமதிக்கு தெரியும்...இல்லைனா என்னைக்காச்சு ஏதாச்சும் தெரியப் போக...நான் தப்பே செய்யாத போதும்...வாங்கி கட்டிக்கவேண்டியிருக்கும்...நல்ல வேளை தப்பிச்சிட்டேன்...)

puppy
07-01-2004, 08:56 PM
என்ன லாவ் அடுத்தது எல்லாம் எங்கே.........