PDA

View Full Version : சிவப்பி

கீதம்
15-04-2011, 06:53 AM
குளம் சிவப்பியின் குற்றச்சாட்டுகளுக்குக் காதுகொடுத்தபடி சலனமற்று இருந்தது. சிவப்பி குளத்தை அமைதியாய் இருக்கவிடுவதே இல்லை. நீருக்கு மேலிருந்த தன் கழுத்தை சற்றே உள்ளிழுத்து வாய் கொள்ளா நீரை உறிஞ்சி தலையைத் தூக்கி எட்டிய வரைக்கும் வேகமாய்க் கொப்பளித்துத் துப்பினாள். அவளுள் இருபது வருட கோபம் இன்னும் அடங்கியபாடில்லை. குளம் எப்போதும்போல் பொறுமையாய் இருந்தது.

முன்னெல்லாம் குளமும் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. 'என்னை நம்பு, உன்னைபோலவே நானும் ஒரு பெண், நான் அப்படிச் செய்வேனா?' என்றெல்லாம் அவளுக்குப் புரியவைக்க முயன்றது. ஆனால் சிவப்பி அதன் பேச்சுக்கு செவிசாய்க்கவே இல்லை. குளத்து நீரைக் கோழை என்றாள். கொலைகாரி என்று அழுதாள். அவளுக்காகப் பரிதாபப்பட்டு குளமும் அழுதது. அதன் கண்ணீர் வெளித்தெரியாக் காரணத்தால் சிவப்பிக்குக் குளத்தின் துயரம் புரியவில்லை.

யாருமற்றப் பொழுதுகளில் குளத்துடன் ஆவேசத்துடன் சண்டையிடும் அவள், குளக்கரையில் எவருடைய நடமாட்டமாவது தென்பட்டால் அமைதியாகிவிடுவாள்.

இன்றும் சிவப்பி, தன் மனக்குமுறலைக் குளத்தில் கொட்டிக்கொண்டிருந்த வேளை, கொலுசுச்சத்தம் கேட்கவும் தீர்க்கமானாள். ஒரு இளம்பெண் அழுக்குத் துணிகள் அடைத்த அலுமினிய அன்னக்கூடையை இடுப்பில் அணைத்துப் பிடித்தபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.

தண்ணீரில் பூத்துநிற்கும் தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல் தண்ணீர் முழந்தாளளவு இருந்தாலும் சரி, ஆளை மூழ்கடிக்கும் அளவு இருந்தாலும் சரி, சிவப்பிக்கு எல்லாமே கழுத்தளவுதான்.

அவள் சிவப்பியைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்தே இந்தக் குளமும் சிவப்பியும் பரிச்சயம். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டிவிட்டு மற்ற உடைகளைக் களைந்து, கொண்டுவந்த துணிகளோடு துவைத்துவிட்டு பின் குளத்துநீரில் மிதந்த சோப்புநுரைகளைக் கைகளால் விலக்கியபடி நீரில் இறங்கினாள்.

அவளுக்கு வயது பதினெட்டு முதல் இருபதுக்குள் இருக்கலாம். சிவப்பி அவளைப் பார்த்தால் சற்று இளகித்தான் போவாள். சிவப்பிக்கு தன் வயது தெரியாது. குளத்துக்கும் அதன் வயது தெரியவில்லை. ஊற்றெடுக்கத் துவங்கிய நாளைப் பற்றிய எந்தக் குறிப்பும் அதன் நினைவேட்டில் இல்லை. சிவப்பி மட்டுமே இருபது வருடங்களாய் அதன் நினைவை, எண்ணத்தை, சிந்தனையை ஆக்கிரமித்திருந்தாள். அவளைக் குளிர்விப்பது மட்டுமே குளத்தின் அன்றாடக் குறிக்கோளாக இருந்தது. செய்யாத தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம் வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்தது.

அந்தப் பெண் சிவப்பியிடமிருந்து பாதுகாப்பான தூரத்திலேயே குளித்துக்கொண்டிருந்தாள். சிவப்பி கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிவப்பி இதுபோல் அமைதியாய் இருக்கும் வேளைகளில்தான் குளம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளமுடிகிறது. எதையும் யோசிக்க முடிகிறது. இப்போதும் குளம் யோசித்தது. சிவப்பியின் மகளும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இவள் வயதில் தானே இருப்பாள்? இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குள் மூழ்கத்தொடங்கியிருந்தது.

சிவப்பிக்கும் இந்தக் குளத்துக்கும் அப்படி என்ன உறவும் பகையும்? அதற்குமுன் சிவப்பியைப் பற்றிச் சொல்லவேண்டும். நதிமூலம் போல் சிவப்பியின் மூலமும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிவப்பியின் மூலமாகவும் அது தெரியவரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பருவ எழில்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையென ஊருக்குள் தோன்றினாள். தெருக்களில் அரைகுறை ஆடையுடன் திரிந்துகொண்டிருந்த அவளைப் பார்த்தவுடனேயே பெண்கள் பதைபதைத்தனர். பல்லிளித்தனர் பல ஆண்கள். காட்டிய பற்களைப் பதம் பார்த்தன அவள் கையெறிந்த கற்கள். அசுரத்தனத்தோடு நின்றவளை மிருகத்தனத்தோடு தாக்கினர் மக்கள். மூர்க்கத்துடன் திரிந்தவள், ஆச்சர்யப்படுத்தும்விதமாய் பசிக்கும்போது மட்டும் அமைதியடைந்தாள். இரவுநேரங்களில் குளக்கரைப் படிகட்டுகளில் படுத்துக்கொண்டாள்.

அவள் நல்ல நிறமாக இருந்தாள். நடையின் நளினம் மேல்தட்டுப் பெண்களை நினைவூட்டியது. அவள் பெரும்பாலும் கடைவீதியின் முனையில் இருந்த டீக்கடை வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கவென்றே ஒரு கூட்டம் கடைக்கு வரத் தொடங்கியது. டீக்கடைக்காரர் எத்தனை விரட்டியும் இவள் நகரவில்லை. 'ஏ... சிவப்பி...இந்தா' டீக்கடைக்காரர் கொடுத்த ஒற்றை ரொட்டியோடு இவளுக்கு சிவப்பி என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது.

பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர். அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது.

வீங்கிய வயிறு வெளித்தெரியும்படி சுற்றிய அவளைப் பார்த்த பார்வைகளில் பரிதாபம், இளக்காரம், அருவருப்பு, சமூகத்தின் மேலான கோபம், வெறுப்பு போன்ற பல உணர்வுகள் தென்பட்டன. ஆனால் அவளுக்கு உதவும் குணம் எவரிடத்தும் தென்படவில்லை.

ஒருநாள் சிவப்பி காணாமற்போனாள். சிலர் கவலைப் பட்டனர், சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அவளைப் பற்றிய பேச்சில்லாமல் மறந்திருந்த ஒருநாளில் கைப்பிள்ளையுடன் மீண்டும் ஊருக்குள் பிரவேசமானாள்.

இம்முறை அவள் ஆங்காரத்தின் உச்சத்தில் இருந்தாள். பசிக்கு வேண்டுவதையும் மிரட்டிக் கேட்டாள். குழந்தைகள் உண்ணுவதை பறித்து உண்டாள். கடைவீதியில் பலர் மத்தியில் திறந்த மார்பில் குழந்தைக்குப் பாலூட்டினாள். அதைப் பார்த்த சில வக்கிரக் கண்கள் பசியாற்றிக்கொண்டன.

குட்டிக்குரங்கு தன் தாயை இறுகப் பற்றியிருப்பதுபோல் குழந்தையை எந்நேரமும் இறுகப்பற்றியிருந்தாள் அவள். கொடிய உலகத்தில் பிறந்திருக்கும் உணர்வற்று குழந்தை அவ்வப்போது சிரித்தது. அழகிய விக்கிரகம் மாதிரி ஒரு பெண்குழந்தையைப் பைத்தியக்காரி ஒருத்தி பெற்றிருப்பதைக் கண்டு, மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட ஒருத்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். குழந்தை அவளைப் பார்த்தும் சிரித்தது.

ஒரு விடியற்காலையில் ஊரே சிவப்பியின் அலறலில் கண்விழித்தது. உரத்தக் குரலில் ஓலமிட்டபடி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீதிகளில் வெறிபிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தாள், சிவப்பி. கையில் குழந்தை இல்லை, உடலில் ஒட்டுத்துணியில்லை. நிர்வாணமாக.... நிராதரவாக.... ஓலமிட்டபடி ஓடியவளை நிர்தாட்சண்யமின்றி கல்லெறிந்து விரட்டிக்கொண்டிருந்தன, சில கல்நெஞ்சங்கள்.

குழந்தை எங்கே? என்னவாயிற்று? ஏன் இந்த அலங்கோலம்? எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் கொடுக்கப்படவில்லை.

சொல்லாவிட்டாலும் விடைகள் கிடைத்தன. குட்டிகளோடு இருக்கும் பெண்மிருகங்களை தம் இச்சைக்கு உட்படுத்த ஆண் மிருகங்கள் முதலில் செய்வது குட்டிகளைக் கொல்வதுதானாமே.... இங்கேயும் ஒரு மிருகமோ... பல ஒன்றிணைந்தோ.... அந்தக் காரியத்தை ஆற்றியிருக்கின்றன என்பது குளத்தில் மிதந்துவந்த குழந்தையின் சடலம் உறுதிப்படுத்தியது.

குழந்தையைக் கொன்றது குளம்தான் என்று உறுதியாக நம்பினாள் சிவப்பி. அந்தக் குளத்து நீரைக் கால்களால் மிதித்தாள், கைகளால் அறைந்தாள். கையில் குவித்து வாய் நிறைய உறிஞ்சி வேகமாய் உமிழ்ந்தாள். குழறிய வார்த்தைகளால் வசவுகளைக் கொட்டினாள். குமுறி அழுதாள். என்ன செய்தும் அவள் உக்கிரம் தணியவில்லை. ஊர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தது.அவளது விம்மிய மார்பகங்களின் வலியைத் தீர்க்க இயலாத வெறுமையை எண்ணி குளம் கலங்கியது.

சிவப்பி குளத்தினுள் முங்கி முங்கி தன் சிசுவைத் தேடினாள். ஒவ்வொருமுறையும் எதையோ பற்றியபடி மேலே வந்து ஆர்வம் தெறிக்கும் கண்களால் வெறித்தாள். அது பெரும்பாலும் பழந்துணியாகவோ.... பாறாங்கல்லாகவோதான் இருக்கும். ஆனாலும் அவள் அசரவில்லை.

அன்றிலிருந்து குளமே அவள் குடியிருப்பானது. அவளுக்காக குளம் அழுதது. கொஞ்சநாள் சிவப்பிக்குப் பயந்து குளக்கரைப் பக்கம் புழக்கம் தவிர்த்திருந்த ஊர், இப்போது அவளை அலட்சியப்படுத்தி மீண்டும் புழங்கத்தொடங்கியது.

அன்று கோரதாண்டவம் ஆடியபடி குளத்தினுள் குதித்தவள்தான். இன்றுவரை குளத்தைத் தன் குழந்தையைக் கொன்ற கொலைகாரியாகவே பார்த்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள். அவளைக் குளிர்விக்கத்தானோ என்னவோ கோடையிலும் குறைந்த அளவு தண்ணீரையாவது தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கியது குளம்.

இருபது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் அவள் சோகத்தைக் கரைக்க முடியவில்லை குளத்து நீரால். சிவப்பி ஓய்ந்துவிட்டாள். முன்பு போல் இப்போது சிவப்பியால் முங்கியெழ முடியவில்லை. என்றாவது தன் குழந்தையைக் கண்டுபிடிதுவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவளுள் தளரத் தொடங்கியது. வெறுமனே குளத்திடம் சண்டையிட்டபடி தன் குழந்தையைத் திருப்பித் தரும்படி வேண்டிக்கொண்டிருக்கிறாள்.

சலனம் கேட்டு குளம் தன்னினைவுக்கு வந்தது. அந்தப்பெண் குளித்துமுடித்துவிட்டு மேற்படிக்கட்டில் நின்றபடி உடைமாற்றிக்கொண்டிருந்தாள். கொண்டுவந்திருந்த ஒரு பையிலிருந்து பொட்டலம் ஒன்றை எடுத்து படிக்கட்டில் வைத்துவிட்டு சிவப்பியைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனாள்.

சிவப்பி ஆர்வத்துடன் குளத்தினின்று வெளியேறி அதை நோக்கிப் போக... அவள் நிர்வாணத்தை தன் நீர்த்துளிகளால் மறைக்க முயன்று தோற்றது குளம்.

(இன்று பதிவிட எண்ணி எழுதிவைத்திருந்த கதை. இதே நாளில் பாடகி சித்ராவின் குழந்தையும் குளத்து நீரில் தவறி விழுந்து மறைய.... என்னுள் எழும் வேதனையை விவரிக்க வார்த்தையில்லை. குழந்தை நந்தனாவுக்கு இக்கதை சமர்ப்பணம்.)

M.Jagadeesan
15-04-2011, 08:08 AM
கற்பனை என்றாலும் இதுபோன்ற கதைகளைப் படிக்கும்போது மனதை சோகம் பிசைகிறது.பாராட்டுக்கள் கீதம்!

Nivas.T
15-04-2011, 09:30 AM
கதை மிக அருமையா உள்ளது

எனக்கு தெரிந்த வரையில் பணப் பைத்தியம், காமப் பைத்தியம், பதிவிப் பைத்தியம் இவைகளை விட உண்மைப் பைத்தியங்கள் எவ்வளவோ மேல்.

கதைக்கான கரு உண்மையா இல்லை கற்பனையா? கற்பனை என்றால் மிகவும் சந்தோசப் படுவேன்

ஜானகி
15-04-2011, 10:37 AM
கற்பனையே என்றாலும், இவ்வளவு தத்ரூபம் வேண்டாமே........நிஜ வாழ்வில்தான் இதுபோல சம்பவங்களை எதிர்கொள்ளவேண்டிய அவசியம்..... கற்பனையிலாவது, சற்று மகிழ்ச்சியானவற்றைப் பேசலாமே....சோகம் திகட்டுகிறது....மன்னிக்கவும்....மீண்டும் உங்களது சொல்நயத்திற்கு ஓர் அத்தாட்சி

முரளிராஜா
15-04-2011, 11:08 AM
கீதம் அவர்களின் கதையை படிக்கும் முன் :medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-002:
கதையை படித்த பின்:medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:

கீதம்
16-04-2011, 01:31 AM
கற்பனை என்றாலும் இதுபோன்ற கதைகளைப் படிக்கும்போது மனதை சோகம் பிசைகிறது.பாராட்டுக்கள் கீதம்!

கதை மிக அருமையா உள்ளது

எனக்கு தெரிந்த வரையில் பணப் பைத்தியம், காமப் பைத்தியம், பதிவிப் பைத்தியம் இவைகளை விட உண்மைப் பைத்தியங்கள் எவ்வளவோ மேல்.

கதைக்கான கரு உண்மையா இல்லை கற்பனையா? கற்பனை என்றால் மிகவும் சந்தோசப் படுவேன்

கற்பனையே என்றாலும், இவ்வளவு தத்ரூபம் வேண்டாமே........நிஜ வாழ்வில்தான் இதுபோல சம்பவங்களை எதிர்கொள்ளவேண்டிய அவசியம்..... கற்பனையிலாவது, சற்று மகிழ்ச்சியானவற்றைப் பேசலாமே....சோகம் திகட்டுகிறது....மன்னிக்கவும்....மீண்டும் உங்களது சொல்நயத்திற்கு ஓர் அத்தாட்சி

கீதம் அவர்களின் கதையை படிக்கும் முன் :medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-002:
கதையை படித்த பின்:medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:

பின்னூட்டமிட்ட ஜெகதீசன் ஐயா, நிவாஸ், ஜானகி அம்மா, முரளிராஜா அனைவருக்கும் நன்றி.

இக்கதையின் மூலம் உங்கள் அனைவரையும் மனவருத்தத்துக்கு ஆளாக்கியதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன். உண்மையில் இக்கதை முழுக்க முழுக்க என் கற்பனை அல்ல.

என்னைப் பாதித்த இருவேறு சம்பவங்களை இணைத்துக் கதையாக்கியிருக்கிறேன். விரும்பினால் இங்கு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=522854&postcount=57)அந்த விபரத்தைக் காணலாம்.

எனினும் இனி இதுபோல் வாசகர்களின் மனம் நோகச் செய்யும் கதைகளைப் பதிப்பதைத் தவிர்க்க முயல்கிறேன்.

இதுபோன்ற மனந்திறந்த கருத்துக்களையும் விமர்சனங்களையும் இனிதே வரவேற்கிறேன்.:)

Mano.G.
16-04-2011, 07:39 AM
மனதை தொட்ட கதைகளில் இதுவும் ஒன்று, சோகங்கஙளின் எத்தனை வகை
அதில் இந்த சோகமும் அடங்கும்.

Ravee
16-04-2011, 09:23 AM
ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் கதையிலும் சிவப்பியை போல ஒரு கதாபாத்திரம் வரும். படிப்பவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் கதாபாத்திரம். உண்மையில் இந்த மாதிரி ஆண்களையோ பெண்களையோ பார்க்கும் போது உதவி செய்ய முற்படும் போது அவர்கள் பேசும் அசிங்கமான பேச்சுக்கே ஒதுங்கி வந்திருக்கிறேன். அவர்கள் வாழும் உலகம் வேறாகவே இருக்கிறது.... :frown:

இளசு
16-04-2011, 11:07 PM
வாசித்து முடிந்ததும் சிலையாய்ச் சமைந்தேன் சில நேரம்..

வலிந்து சோகமூட்டும் ஊளைச்சதைக் கதையன்று இது..

இது... இப்படி... நடக்கலாம்.. நடந்தது என மனம் தைத்த நெருஞ்சி விதை..

கீதம் வருந்தத்தேவையில்லை.. வாசகர் மனம் கனிந்து விழி கசிந்ததற்காக..

வந்த பின்னூட்டங்கள் ஆசிரியருக்கு பாராட்டுகள்தாம்..

படைப்பாளியாய் உங்களின் பயணப் பாதையில் உடன் வரலாமே தவிர
பாதை திருப்பும் எண்ணம் வாசகருக்கிருக்காது என நம்புகிறேன்..

-----------------------------------------------------------------------

குளத்துக்கும் சிவப்பிக்குமான உறவை உருவகித்து எழுத்தாக்கிய
உங்கள் உள்ள வளத்துக்கு என் சிறப்பு வந்தனம்..

ஜானகி
17-04-2011, 01:31 AM
பின்னூட்டமிட்ட ஜெகதீசன் ஐயா, நிவாஸ், ஜானகி அம்மா, முரளிராஜா அனைவருக்கும் நன்றி.

இக்கதையின் மூலம் உங்கள் அனைவரையும் மனவருத்தத்துக்கு ஆளாக்கியதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன். உண்மையில் இக்கதை முழுக்க முழுக்க என் கற்பனை அல்ல.

என்னைப் பாதித்த இருவேறு சம்பவங்களை இணைத்துக் கதையாக்கியிருக்கிறேன். விரும்பினால் இங்கு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=522854&postcount=57)அந்த விபரத்தைக் காணலாம்.

எனினும் இனி இதுபோல் வாசகர்களின் மனம் நோகச் செய்யும் கதைகளைப் பதிப்பதைத் தவிர்க்க முயல்கிறேன்.

இதுபோன்ற மனந்திறந்த கருத்துக்களையும் விமர்சனங்களையும் இனிதே வரவேற்கிறேன்.:)

கதையில் தெரிந்த உண்மை சுட்டதால் வந்த பின்னூட்டம்.....தவறாக நினைக்கவேண்டாம். சோகமும் ஓர் ரசம் தான். தொடர்ந்து எழுதுங்கள். எழுத்துக்களின் தத்ரூபத்திற்குக் கிடைத்த பாராட்டுதான் அது.

Nivas.T
17-04-2011, 05:38 AM

இங்கு எதுவும் தவறில்லை என்னுபோழுது மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை தானே?

உங்கள் கதையின் தாக்கம் நன்றாகவே உள்ளது. எந்தவொரு நிகழ்வையும் செய்தியாய் சொல்வதைவிட கதையாய் சொன்னால் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கு, இதை உங்கள் கதைகளில் நன்கு உணரமுடிகிறது. இந்த அளவுக்கு நீங்கள் கதைமூலம் ஒரு பதிப்பை கொடுக்க முடியுமெனில் அது உங்களின் எழுத்துக்கு கிடைத்த வெற்றியே.

நீங்கள் எந்த கட்டுக்கோப்பும் வைத்துக்கொள்ள வேண்டாம், வழக்கம்போல் தங்களுக்கு தோன்றுவதை பதியுங்கள், படிக்க நாங்கள் இருக்கிறோம்.

அமரன்
17-04-2011, 05:12 PM
இங்குள்ளதை மீறிக் கதை பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை என்னிடம்..

உண்மைகளை உணர்ந்து ஊமையாகிப் போன தருணங்களில் இக்கதை படித்த நேரங்களும் அடக்கம்.

தலைப்புத் தொடங்கிப் பல வித்தியாசங்கள்.. இந்த மாதிரியான ஒரு முதன்மைப் பாத்திரத்துக்கு சிவப்பி என்ற கவர்ச்சித் தலைப்பை வைக்க பலரும் முன்வருவதில்லை.. அதில் தொடங்கி சொற்பயன்பாடு வரை உங்கள் படிமாற்றம் பளிச்சிடுகிறது.

உங்கள் கதைகளின் அடைவில் இயல்பான கதை மாந்தரும், இயல்பான உடையாடல்களும், பொருத்தமான சொற்பயன்பாடும் பெரும் பங்காற்றுகின்றன. இந்தக் கதையில் அது அடுத்த பரிமாணத்தை அடைந்ததாக உணர்கிறேன். அது சில சமயங்களில் கதையுடன் அன்னியப்பட ஒரு சில வாசர்களைத் தூண்டலாம். இன்னும் சிலரை ஆழமாகப் பற்றலாம்.

ஒவ்வொருவருவரது திருப்தியும் வேறுபடும். அது வாசகனாக இருந்தாலும்.. எழுத்தாளனாக இருந்தாலும். எல்லாரையும் உங்கள் எண்ணங்கள் சென்றடைய ஒரேதட்டில் இல்லாமல் மாற்றி மாற்றி எழுதத் தலைப்படும் உங்கள் முயற்சி வெற்றி அளிக்கட்டும்.

பொதுவாக உங்கள் படைப்புகளுக்கு பெருந்தொகையான பின்னூடங்கள் பட்டென்று கிடைத்து விடும். இதற்கு மட்டும் விலக்களிக்கப்பட்டதாக தெரிகிறது. படித்தவர்கள் பாரமாகி மனம் விசும்பிப் போயிருக்கலாம் என்றும் தோன்றினாலும் ஒரு வித பயம் எழாமல் இல்லை அக்கா.

கீதம்
18-04-2011, 11:53 PM
மனதை தொட்ட கதைகளில் இதுவும் ஒன்று, சோகங்கஙளின் எத்தனை வகை
அதில் இந்த சோகமும் அடங்கும்.

மிகவும் நன்றி மனோஜி அண்ணா. உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன்.

ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் கதையிலும் சிவப்பியை போல ஒரு கதாபாத்திரம் வரும். படிப்பவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் கதாபாத்திரம். உண்மையில் இந்த மாதிரி ஆண்களையோ பெண்களையோ பார்க்கும் போது உதவி செய்ய முற்படும் போது அவர்கள் பேசும் அசிங்கமான பேச்சுக்கே ஒதுங்கி வந்திருக்கிறேன். அவர்கள் வாழும் உலகம் வேறாகவே இருக்கிறது.... :frown:

நன்றி ரவி, இதுபோன்ற மனிதர்களைப் பார்க்கும்போது பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. என்னுடைய குருகாணிக்கை மற்றும் நிறக்குருடு கதைகளில் இம்மாதிரி மனிதர்களை சித்தரித்திருப்பேன். குறைந்த நேரம் பார்த்தாலும் அவர்கள் நமக்குள் பெரும்பாதிப்பை உண்டாக்கிவிடுகிறார்கள்.

வாசித்து முடிந்ததும் சிலையாய்ச் சமைந்தேன் சில நேரம்..

வலிந்து சோகமூட்டும் ஊளைச்சதைக் கதையன்று இது..

இது... இப்படி... நடக்கலாம்.. நடந்தது என மனம் தைத்த நெருஞ்சி விதை..

கீதம் வருந்தத்தேவையில்லை.. வாசகர் மனம் கனிந்து விழி கசிந்ததற்காக..

வந்த பின்னூட்டங்கள் ஆசிரியருக்கு பாராட்டுகள்தாம்..

படைப்பாளியாய் உங்களின் பயணப் பாதையில் உடன் வரலாமே தவிர
பாதை திருப்பும் எண்ணம் வாசகருக்கிருக்காது என நம்புகிறேன்..

-----------------------------------------------------------------------

குளத்துக்கும் சிவப்பிக்குமான உறவை உருவகித்து எழுத்தாக்கிய
உங்கள் உள்ள வளத்துக்கு என் சிறப்பு வந்தனம்..

தேற்றலுக்கு நன்றி இளசு அவர்களே....

கதையின் கருவோடு எழுத்தையும் விமர்சித்திருப்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. நான் மிகவும் எதிர்பார்ப்பதும் அதுவே... அதைச் சுட்டியவிதத்தில் மிகுந்த நிறைவைத் தந்துவிட்டீர்கள். நெகிழ்வான நன்றி.

கீதம்
19-04-2011, 12:00 AM
கதையில் தெரிந்த உண்மை சுட்டதால் வந்த பின்னூட்டம்.....தவறாக நினைக்கவேண்டாம். சோகமும் ஓர் ரசம் தான். தொடர்ந்து எழுதுங்கள். எழுத்துக்களின் தத்ரூபத்திற்குக் கிடைத்த பாராட்டுதான் அது.

இங்கு எதுவும் தவறில்லை என்னுபோழுது மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை தானே?

உங்கள் கதையின் தாக்கம் நன்றாகவே உள்ளது. எந்தவொரு நிகழ்வையும் செய்தியாய் சொல்வதைவிட கதையாய் சொன்னால் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கு, இதை உங்கள் கதைகளில் நன்கு உணரமுடிகிறது. இந்த அளவுக்கு நீங்கள் கதைமூலம் ஒரு பதிப்பை கொடுக்க முடியுமெனில் அது உங்களின் எழுத்துக்கு கிடைத்த வெற்றியே.

நீங்கள் எந்த கட்டுக்கோப்பும் வைத்துக்கொள்ள வேண்டாம், வழக்கம்போல் தங்களுக்கு தோன்றுவதை பதியுங்கள், படிக்க நாங்கள் இருக்கிறோம்.

நன்றி ஜானகி அம்மா...நன்றி நிவாஸ்...

எதுவும் அளவு மீறினால் திகட்டத்தானே செய்யும்? நீங்கள் சொன்னதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொடர்ந்து ஒரே சுவையைக் கொடுப்பதினும் வேறுபட்ட சுவைகளைப் படைப்பது சுவாரசியத்தை அதிகப்படுத்தும்தானே.... நிச்சயமாய் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவேன்.

கீதம்
19-04-2011, 12:09 AM
இங்குள்ளதை மீறிக் கதை பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை என்னிடம்..

உண்மைகளை உணர்ந்து ஊமையாகிப் போன தருணங்களில் இக்கதை படித்த நேரங்களும் அடக்கம்.

தலைப்புத் தொடங்கிப் பல வித்தியாசங்கள்.. இந்த மாதிரியான ஒரு முதன்மைப் பாத்திரத்துக்கு சிவப்பி என்ற கவர்ச்சித் தலைப்பை வைக்க பலரும் முன்வருவதில்லை.. அதில் தொடங்கி சொற்பயன்பாடு வரை உங்கள் படிமாற்றம் பளிச்சிடுகிறது.

உங்கள் கதைகளின் அடைவில் இயல்பான கதை மாந்தரும், இயல்பான உடையாடல்களும், பொருத்தமான சொற்பயன்பாடும் பெரும் பங்காற்றுகின்றன. இந்தக் கதையில் அது அடுத்த பரிமாணத்தை அடைந்ததாக உணர்கிறேன். அது சில சமயங்களில் கதையுடன் அன்னியப்பட ஒரு சில வாசர்களைத் தூண்டலாம். இன்னும் சிலரை ஆழமாகப் பற்றலாம்.

ஒவ்வொருவருவரது திருப்தியும் வேறுபடும். அது வாசகனாக இருந்தாலும்.. எழுத்தாளனாக இருந்தாலும். எல்லாரையும் உங்கள் எண்ணங்கள் சென்றடைய ஒரேதட்டில் இல்லாமல் மாற்றி மாற்றி எழுதத் தலைப்படும் உங்கள் முயற்சி வெற்றி அளிக்கட்டும்.

பொதுவாக உங்கள் படைப்புகளுக்கு பெருந்தொகையான பின்னூடங்கள் பட்டென்று கிடைத்து விடும். இதற்கு மட்டும் விலக்களிக்கப்பட்டதாக தெரிகிறது. படித்தவர்கள் பாரமாகி மனம் விசும்பிப் போயிருக்கலாம் என்றும் தோன்றினாலும் ஒரு வித பயம் எழாமல் இல்லை அக்கா.

தலைப்பிலிருந்து சொற்பயன்பாடுவரை ஒவ்வொன்றையும் உள்வாங்கி விமர்சித்திருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது அமரன். நிலவையொத்து அலைகளின் எழுச்சியும் தாழ்வும் போல் பின்னூட்டங்களைப் பொறுத்தே எழுவதும் சரிவதும் எழுத்துகளுக்கு அமைகிறது. என் எழுத்து மட்டும் விதிவிலக்கா என்ன?

எழ உதவியதற்கு நன்றி அமரன்.

அன்புரசிகன்
19-04-2011, 04:14 AM
அன்றே கதையை படித்துவிட்டேன். பதிலிட முடியவில்லை. காட்சி விபரிப்புக்கள் கதையை இறுதிவரை படிக்கத்தூண்டுமளவுக்கு வடிவாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

கீதம்
19-04-2011, 11:19 PM
அன்றே கதையை படித்துவிட்டேன். பதிலிட முடியவில்லை. காட்சி விபரிப்புக்கள் கதையை இறுதிவரை படிக்கத்தூண்டுமளவுக்கு வடிவாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்புரசிகன்.

lolluvathiyar
26-04-2011, 10:44 AM
சோக கதை ஆரம்ம்பம் முதல் முடிவு வரை சோகத்தை தவிர வேறு எதையும் பிரதிபலிக்கவில்லை. அதே போல் சமூகத்தை சாடி கொன்டே கதை போனது. ஒரு தலையான கருத்துகள் மட்டுமே இடம் பெற்றிருப்பது ஒரு குறை.
சிவப்பியின் இந்த அவல நிலைக்கு சிவப்பியும் ஒரு காரனம் என்று நம் சிற்றரிவுக்கு ஏன் எட்டாமல் போனது. ஒருவேலை சிவப்பியிடமும் தப்பு இருந்திருக்கலாம் வருங்காலத்தில் சிவப்பிகள் உருவாகாமல் திருந்த வேன்டும் என்ற கோனத்தில் எழுது நினைக்கும் போது சமூகத்தை திட்டினதூ நிப்பாட்டாமல் சிவப்பியையும் கொஞ்சம் திட்டி இருக்கலாமே.

குட்டிகளோடு இருக்கும் பெண்மிருகங்களை தம் இச்சைக்கு உட்படுத்த ஆண் மிருகங்கள் முதலில் செய்வது குட்டிகளைக் கொல்வதுதானாமே....
எல்லா விலங்கும் அல்ல சில விலங்குகள் தான் (பாலூட்டிகளில் சிங்கம், சிம்பன்சி குரங்கு மட்டும் தான் இவ்வாரு செய்யும்)

கதை எழுதிய திறமையை பற்றி சில வரிகள்
இதை படித்த பலர் ஸ்தம்பித்திருப்பார்கள் உள்ளுக்குள் கன்னீர் வடித்திருப்பார்கள் அப்படி தத்ரூபமாக எழுதி இருக்கிறார் கீதம். கீதித்தின் திறமையை கூட பாராட்ட முடியால காரனம் இத்திரியில் பாராட்டு அருமை என்ற வார்த்தைகளை போட உனர்ச்சிகள் இடம் கொடுக்காது.

கற்பனையே என்றாலும், இவ்வளவு தத்ரூபம் வேண்டாமே.....
இங்கு இம்பேக்ட் ஏற்படுத்தியதே இந்த தத்ரூபம் தானே. இல்லை என்றால் சிவப்பியின் உனர்ச்சி நம் செவியோடு ரிபலெட் ஆகி போய்விடும்

கற்பனை என்றால் மிகவும் சந்தோசப் படுவேன்
கற்பனைக்கும் சந்தோச படலாமா? கோவிச்சுக்காதீங்க ஜஸ்ட் நக்கல்.

எனினும் இனி இதுபோல் வாசகர்களின் மனம் நோகச் செய்யும் கதைகளைப் பதிப்பதைத் தவிர்க்க முயல்கிறேன்.
வாசகர்களுக்காக உங்க கற்பனைக்கு கடிவாளம் போட வேன்டாம் அவுங்க அவுங்க உனர்ச்சிகளை சொல்லி இருக்காங்க. அவ்வளவுதான், நீங்க தொடருங்கோ.

இந்த மாதிரியான ஒரு முதன்மைப் பாத்திரத்துக்கு சிவப்பி என்ற கவர்ச்சித் தலைப்பை வைக்க பலரும் முன்வருவதில்லை..
கவர்ச்சியா தெரியும் அனைத்துக்குள்ளும் சந்தோசம் என்பது இல்லை என்று இப்படி ஒரு தலைப்பை வச்சிருப்பாங்களோ.

ஆதவா
26-04-2011, 10:45 AM
இக்கதையைப் படித்ததும் எனக்கு சட்டென ஞாபகம் வந்தது ஒரு பெண் தான்.. அந்தப் பெண்ணை நான் என் பள்ளிப் பருவத்தில் ஒரு பூங்காவில் பார்த்தேன். முதன்முதலாக ஒரு மனநிலை சரியில்லாதவளோடு பழக்கம் ஏற்பட்டது அப்பொழுதுதான்.. இன்னும் மறக்கமுடியாத நிகழ்வு அது!!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19526

இக்கதையில் வரும் குளம் எனும் பாத்திரத்தினோடு உரையாடல் பொதுவாக நம் எல்லோருக்கும் இருக்கும். நாம் நமது உள்மனத்தோடு எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டுதானிருக்கிறோம்!!

வாழ்த்துகள்!

கீதம்
28-04-2011, 08:00 AM
சோக கதை ஆரம்ம்பம் முதல் முடிவு வரை சோகத்தை தவிர வேறு எதையும் பிரதிபலிக்கவில்லை. அதே போல் சமூகத்தை சாடி கொன்டே கதை போனது. ஒரு தலையான கருத்துகள் மட்டுமே இடம் பெற்றிருப்பது ஒரு குறை.
சிவப்பியின் இந்த அவல நிலைக்கு சிவப்பியும் ஒரு காரனம் என்று நம் சிற்றரிவுக்கு ஏன் எட்டாமல் போனது. ஒருவேலை சிவப்பியிடமும் தப்பு இருந்திருக்கலாம் வருங்காலத்தில் சிவப்பிகள் உருவாகாமல் திருந்த வேன்டும் என்ற கோனத்தில் எழுது நினைக்கும் போது சமூகத்தை திட்டினதூ நிப்பாட்டாமல் சிவப்பியையும் கொஞ்சம் திட்டி இருக்கலாமே.

விமர்சனத்துக்கு நன்றி லொள்ளுவாத்தியார்.

சிவப்பியைச் சாடவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள். சாடினாலும் அதை உணரும் நிலையில் அவள் இல்லை என்பதுதானே உண்மை. ஒரு பிச்சைக்காரியாகவோ... விலைமாதுவாகவோ இருந்திருப்பாளாயின் சமூகத்தோடு அவளையும் சாடுவதில் அர்த்தம் உண்டு. தன்னிலை அறியாதவளை என்னவென்று சொல்லிச் சாடுவது?

கொள்ளையடித்தவனுக்குத் தண்டனை கொடுப்பதோடு கொள்ளையடிக்கத்தக்கப் பொருளை உன்னிடத்தில் வைத்திருந்தது உன் தவறு என்று சொல்லி பொருளைப் பறி கொடுத்தவனையும் தண்டிப்பது நியாயமில்லையே....

எல்லா விலங்கும் அல்ல சில விலங்குகள் தான் (பாலூட்டிகளில் சிங்கம், சிம்பன்சி குரங்கு மட்டும் தான் இவ்வாரு செய்யும்)

பொதுவாக விலங்குகள் என்று குறிப்பிட்டது தவறெனில் சில விலங்குகள் என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருக்குமா? துருவக்கரடி, நீர் யானை போன்ற விலங்குகளும் இந்தக் காரணத்துக்காகக் குட்டிகளைக் கொல்வதைப் பற்றிப் படித்திருக்கிறேன்.

கதை எழுதிய திறமையை பற்றி சில வரிகள்
இதை படித்த பலர் ஸ்தம்பித்திருப்பார்கள் உள்ளுக்குள் கன்னீர் வடித்திருப்பார்கள் அப்படி தத்ரூபமாக எழுதி இருக்கிறார் கீதம். கீதித்தின் திறமையை கூட பாராட்ட முடியால காரனம் இத்திரியில் பாராட்டு அருமை என்ற வார்த்தைகளை போட உனர்ச்சிகள் இடம் கொடுக்காது.

உங்கள் விமர்சனமே எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது. பாராட்டு எதுவும் தேவையில்லை. படித்துவிட்டுக் கதைப் பற்றிப் பதியும் கருத்துகளே போதுமானவை. அந்தவகையில் உங்கள் விமர்சனம் எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது.

வாசகர்களுக்காக உங்க கற்பனைக்கு கடிவாளம் போட வேன்டாம் அவுங்க அவுங்க உனர்ச்சிகளை சொல்லி இருக்காங்க. அவ்வளவுதான், நீங்க தொடருங்கோ.

நன்றி லொள்ளுவாத்தியார்.

கவர்ச்சியா தெரியும் அனைத்துக்குள்ளும் சந்தோசம் என்பது இல்லை என்று இப்படி ஒரு தலைப்பை வச்சிருப்பாங்களோ.

நான் பார்த்த மனநிலை தவறிய பெண்ணொருத்தி நல்ல நிறமாகவும் அழகாகவும் இருந்ததும் காரணம்.

கீதம்
28-04-2011, 08:27 AM
இக்கதையைப் படித்ததும் எனக்கு சட்டென ஞாபகம் வந்தது ஒரு பெண் தான்.. அந்தப் பெண்ணை நான் என் பள்ளிப் பருவத்தில் ஒரு பூங்காவில் பார்த்தேன். முதன்முதலாக ஒரு மனநிலை சரியில்லாதவளோடு பழக்கம் ஏற்பட்டது அப்பொழுதுதான்.. இன்னும் மறக்கமுடியாத நிகழ்வு அது!!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19526

இக்கதையில் வரும் குளம் எனும் பாத்திரத்தினோடு உரையாடல் பொதுவாக நம் எல்லோருக்கும் இருக்கும். நாம் நமது உள்மனத்தோடு எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டுதானிருக்கிறோம்!!

வாழ்த்துகள்!

நீங்கள் குறிப்பிட்ட பெண்ணைப் பற்றிப் படித்தேன் ஆதவா. மனம் கனத்தது உண்மை.

நாம் உள்மனதோடு வெளியுலகம் அறியாவண்ணம் நமக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம். சிலர் மற்றவர்களைப் பற்றிய பிரக்ஞையற்று சத்தமாகப் பேசிக்கொள்கின்றனர். வித்தியாசம் அவ்வளவே.

கருத்திட்டதற்கு நன்றி ஆதவா.

இளசு
26-06-2011, 08:54 PM
வாழ்த்துகள் கீதம்.

விகடன் இணையப்பக்க முகப்பில் சிவப்பி எனப் படக்கட்டச் சுட்டி கண்டு
மனம் துள்ளி சுட்டினேன்.

உங்களின் இப்படைப்பு அங்கே நேர்த்தியாய் கண்டு பூரித்தேன்.

நம் இல்லக் குழந்தை மாநகர அரங்க மேடையில் ஒளிவட்டத்தில் நிற்கக் கண்ட மனநிலை...

மீண்டும் என் வாழ்த்துகள்.

கீதம்
26-06-2011, 09:55 PM

இனிய அதிர்ச்சியோடு உங்கள் வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றி நவில்கிறேன் இளசு அவர்களே...

யூத்ஃபுல் விகடனில் இக்கதை வெளிவந்ததைச் சுட்டி முதல் வாழ்த்துத் தெரிவித்த கோவிந்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
27-06-2011, 02:08 PM
விகடனில் பிரசுரம் ஆகிய சிவப்பி ,வக்கிர மிருகங்களினால் பாதிக்க பட்ட பெண்ணின் நிலையினை கூறும் இப்பதிவு என்னில் ஒரு பாதிப்பை உருவாகியதென்றால் மிகையாகாது ...வாழ்த்துகள் கீதம் அவர்களே .

கீதம்
28-06-2011, 10:30 PM
விகடனில் பிரசுரம் ஆகிய சிவப்பி ,வக்கிர மிருகங்களினால் பாதிக்க பட்ட பெண்ணின் நிலையினை கூறும் இப்பதிவு என்னில் ஒரு பாதிப்பை உருவாகியதென்றால் மிகையாகாது ...வாழ்த்துகள் கீதம் அவர்களே .

மிகவும் நன்றி ஜெய்.

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே (http://new.vikatan.com/article.php?aid=7465&sid=209&mid=10) சொடுக்குங்கள்.

Ravee
29-06-2011, 06:57 PM
சிகப்பி கதைக்கு விகடன் குழுமத்தில் கிடைத்த அங்கிகாரம் கீதம் அக்காவின் தாயுள்ளத்திற்கு கிடைத்த அங்கிகாரம் .... ஒரு முறை கண்ட அந்த கதாபாத்திரத்துடன் வாழ்ந்து அவளை முழுமையாய் பிரசவித்தது அவளின் நிலைக்கான தாக்கத்தை அனைவரின் மனதிலும் எழ வைத்த ஆக்கம் வெறும் மூளையில் இருந்து கை வழி வந்ததல்ல ..... இதயத்தில் இருந்து இறங்கியது ...... இன்னும் பல உணர்ச்சி பூர்வமான வெற்றி படைப்புக்களை தாருங்கள் அக்கா .... :)

innamburan
29-06-2011, 08:48 PM
1. எதற்காக சிவப்பியை சாடவேண்டும்.
2. விலங்கினங்களை பற்றி கொஞ்சம் அறிவேன். அவை மனிதனுக்கு மேன்பட்டவை.

கீதம்
08-07-2011, 01:43 AM
சிகப்பி கதைக்கு விகடன் குழுமத்தில் கிடைத்த அங்கிகாரம் கீதம் அக்காவின் தாயுள்ளத்திற்கு கிடைத்த அங்கிகாரம் .... ஒரு முறை கண்ட அந்த கதாபாத்திரத்துடன் வாழ்ந்து அவளை முழுமையாய் பிரசவித்தது அவளின் நிலைக்கான தாக்கத்தை அனைவரின் மனதிலும் எழ வைத்த ஆக்கம் வெறும் மூளையில் இருந்து கை வழி வந்ததல்ல ..... இதயத்தில் இருந்து இறங்கியது ...... இன்னும் பல உணர்ச்சி பூர்வமான வெற்றி படைப்புக்களை தாருங்கள் அக்கா .... :)

உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி ரவி.

1. எதற்காக சிவப்பியை சாடவேண்டும்.
2. விலங்கினங்களை பற்றி கொஞ்சம் அறிவேன். அவை மனிதனுக்கு மேன்பட்டவை.

பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா. சிவப்பியைச் சாடவேண்டிய தேவை இல்லை என்பதையே நானும் வலியுறுத்தியுள்ளேன். மிருகங்கள் நம்மை விடவும் பல வழிகளில் மேன்மையானவை என்பதை இக்கவிதையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23164) சுட்டியுள்ளேன்.