PDA

View Full Version : தமிழை உண்டவன்- அத்யாயம் ஆறு - மந்திராலோசனை



dellas
11-04-2011, 02:02 PM
தமிழை உண்டவன்- அத்யாயம் ஆறு - மந்திராலோசனை

படுக்கையில் புரண்டு எதைப்பற்றியோ யோசித்துக் கொண்டிருந்த நம் கொங்கு இளவலுக்கு நடு சாமம் ஆகியும் தூக்கம் வராத காரணம் என்னவோ! கடந்த சில நாட்களாக கண்விழித்துக்கொண்டே கனவில் மிதக்கிறார். உடல்சோர்ந்து கண்ணயர முயற்சிக்கும் சொற்ப நாளிகையிலும் அந்த அழகு முகம் வந்து தூக்கத்தை கலைத்தது ஏனோ? இதுவரை உணராத ஒரு உணர்வு. இதுவரைப் பெற்றிருந்த போற்பயிற்சியும், தேகத்தை இரும்பென மாற்றும் கடும் தேகப் பயிற்சியும் தராத ஒரு வேதனை. யோகாசனம் செய்தால், கூண்டடைபட்ட கிளிபோல் உறங்கிய மனது, இன்று காட்டின் குரங்குக் கூட்டம்போல் துள்ளித் தாவிப்பாய்ந்து கட்டுக்கடங்காமல் போனது எப்படி.? ஒரு நாழிகை பொழுதாகிலும் முழுதுமாக பழகிடாத அப்பெண்ணின் மதுரக் குரலோசை அசரீரீ போல் காதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பது எவ்வாறு? தோட்டத்தில் சந்தித்தவளை மீண்டும் காண மணம் ஏங்குவது ஏனோ! நட்பு நாடிவந்த இடத்தில் மனதின் ஆசைகளை அலைபாயவிடுவது நற்செயல் ஆகுமா? நட்பாகப் பழகும் சேரனின் உயிரைப் பறிப்பது போன்ற செயலல்லவா இது. ? நம்பிக்கைகள் பொய்த்துப் போகுமாயின், நட்பு எப்படி நிலைக்க முடியும்? என் மனதின் அபிலாசைகள் நட்புக்கு ஊறு விளைவிக்குமெனில் அதை மெல்லக் கட்டுப்படுத்துவதே நலமாக இருக்கும். ஆனால் இந்த பாழ்மனது அல்லாட விடுகிறதே.

இதுபோன்ற குழப்பமான சிந்தனைகளில் மூழ்கிப்போய் தவித்துக்கொண்டிருந்த நம் இளவலின் அறைக்கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு மெல்ல எழுந்தார்.

கதவு திறந்து பார்க்க ஆச்சரியப் பட்டுப் போனார். அங்கே சேர அரசர் நின்று கொண்டிருந்தார்.

" அரசே நீங்களா? என்ன ஆச்சர்யம். அதுவும் இந்த நடு இரவில் " மிகுந்த ஆச்சர்யமாய் கேட்டார் நம் இளவல்.

" நீங்கள் சற்று நேரத்தில் தயாராக வேண்டும். நமக்கு ஒரு அதிமுக்கியமான ஆலோசனை இருக்கிறது." என்றார் சேரர்.

" உத்தரவு அரசே" என்றார் இளவல்.

" நண்பர்களுக்கு நான் உத்தரவிடுவதில்லை. இது வேண்டுகோள். " என்று இளவலின் தோள்தொட்டு கூறினார். சேரர்.

" இதோ கணத்தில் தயாராகிவிடுகிறேன். எங்கே வரவேண்டும் என்று தாங்கள் கூறவில்லையே?"

" உங்களை அழைத்துப்போகத்தான் நான் வந்துள்ளேன். நான் இங்கே காத்திருக்கிறேன் நீங்கள் உடைமாற்றி வாருங்கள்"

"தாங்கள் என் அறைவாயிலில் காத்திருப்பதா? வேண்டாம் அரசே. உள்ளே வந்தாவது அமரலாமே"

" பாதகமில்லை நண்பரே. என்னைக் காக்க வைப்பதாக நீங்கள் எண்ணவேண்டாம். மேலும் நண்பருக்காக காத்திருப்பதில் என்ன வந்துவிடப் போகிறது"

" இதோ வருகிறேன்" என்றபடியே அறையினுள் சென்ற நம் இளவல் வெகு விரைவாக உடைமாற்றி தயாராக வந்தார். சேரர் தன் கைகளை இளங்கோவின் தோள்களில் படித்தவாறு பேசியபடியே வந்தார்.

" தாங்களைப் பார்த்தால் தூக்கம் வராமல் படுக்கையில் வெறுமனே புரண்டுகொண்டிருந்ததைபோல் அல்லவா தெரிகிறது. " என்று கேட்டார் சேரர்.

" அதெப்படி " என்று வினவினார் இளவல்.

" முதலில் உங்கள் கண்கள் தூக்கத்தைத் தழுவாமல் இருக்கிறதை அதன் சிவப்பு மூலம் காட்டுகிறது. உங்கள் முகம் இப்போதும் ஏதோ சிந்தனை வயப்பட்டதைப்போல் தெரிகிறது. மேலும் நான் மெல்ல கதவைத் தட்டியதுமே நீங்கள் எழுந்து கொண்டது. " என்றார் சேரர்.

" உண்மைதான் அரசே பலவிதமான சிந்தனைகள். வீட்டை விட்டுவந்து நாட்கள் பலவாகிவிட்டதல்லவா?" என்று கூறினார் இளவல்.

" உங்கள் கூற்றும் சரிதான். ஆனால் நடுயாமம் வரையில் சிந்திக்க வேண்டுமா? வாலிப வயதில் உறக்கம் கொள்ளாமல் இருப்பதற்கு இது சரியான காரணமில்லையே நண்பரே? " சிரித்தவாறு பேசிக்கொண்டே இருவரும் ஆலோசனைக் கூடத்தை அடைந்தார்கள்.

அந்த கூடம் மிகப்பெரிய நீள அகலங்களைக் கொண்டிருந்தது. ஏறக்குறைய இருநூறு இருக்கைகள் போடுமளவிற்கு இடமிருந்தாலும், கூடத்தின் மத்தியில் இருபதுக்குள்ளேதான் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. விளக்கெண்ணையால் ஏற்றப்பட்ட தீபங்களின் தீட்சண்யம் இல்லாத ஒளி கூடம் முழுவதும் வியாபித்திருந்தது. எதிரெதிரில் இரண்டு அரைவட்ட வடிவில் போடப்பட்டிருந்த இருக்கைகளின் வட்ட மையத்தில் ஒரு பெரிய அளவிலான முக்காலி இடப்பட்டு அதில் ஒரு தீபம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முன்பே வந்துவிட்ட அனைவரும், மன்னரின் வருகைக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட மன்னர் அவர்களை அமரச்சொல்லிப் பின் தான் அமர்ந்தார். அவரின் வலப்புறமாக இருந்த இருக்கையில் கொங்கு இளவல் அமர்ந்துகொண்டார்.

மன்னரின் பார்வை சுற்றி இருந்தவர்களை வலம் வந்தது.

அமைச்சர் , சேனாதிபதி , அரண்மனைக் காரியக்காரன் , கருவூல அதிகாரி, ஒற்றர் படைத்தலைவன் என ஐந்து ஆண்களும், சேரனின் சிற்றன்னை பூங்கொடி மற்றும் சேரனின் தங்கை நீலவேணி என இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர். நீலவேணியின் பார்வையைத் தீண்டிச் சென்றதும் நம் இளவலின் கண்கள் வேறுதிசை நோக்கியது. ஆச்சர்ய பார்வை தோன்றி மறைந்த நீலவேணியின் கண்கள் அவளையுமறியாது இளங்கோவை திம்பத்திரும்ப நோக்கியது.

தொண்டையைச் சொருமிய இரண்டாம் செங்குட்டுவன் தன் உரையைத் துவங்கினார்.

" அன்னை காளிதேவியின் அருளோடு இந்த மந்திராலோசனயைத் துவங்குகிறேன். அனைவருக்கும் வணக்கம். இன்று நம்மோடு நமது பக்கத்து தேசத்து கொங்கு இளவலான இளங்கோவும் கலந்து கொள்வதில் நமெக்கெல்லாம் மகிழ்ச்சியே. நமது நாட்டோடு நட்புகொண்டு தங்கள் வர்த்தகத்தை நம்மோடு ஏற்படுத்திக் கொள்ளவும், நமக்கு எந்நேரத்திலும் உறுதியான உதவிக்கு தோள்கொடுக்கவும் மேலும் நமது அரசியலமைப்பு , ஆட்சி முறை பற்றி தெரிந்து கொள்ளவும் வந்திருக்கிறார். சிறந்த வீரர். இவரைப்பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்." என்று கூறி நிறுத்தினார்.

உடனே இளங்கோ எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் கூறி அமர்ந்தார்.

இப்போது கருவூல அதிகாரி செம்மலார் எழுந்து தானிய இருப்பு மற்றும் நாணய கையிருப்பு மாத வருவாய் உட்பட அனைத்து செய்திகளையும் நீண்ட உரையாக கூறிமுடித்தார். சேனாதிபதி படைநிலவரங்களைத் தெளிவுபடுத்தினார். அரண்மனை காவலுக்கு மேலும் ஆட்களைத் தேர்வு செய்யும்படி கோரிக்கைவைத்து அரணமனைக் காரியக்காரன் உரையை முடித்தார். அமைச்சர் பரிதி தன் உரையைத் துவங்கினார்.

" மாண்புமிகு மன்னருக்கும் அவையோருக்கும் என் வணக்கம். நாட்டு மக்கள் நலமோடுதான் உள்ளார்கள். ஆனால் நமது மேற்குக் கடற்கரையோரம் நாம் விரும்பத்தகா வண்ணம் செயல்கள் நடந்தேறி உள்ளன. அதாவது, கோவில்களின் சிலைகளை அதன் கருவறைக்குள் புகுந்து யாரோ உடைத்து வருவதாக வந்த செய்திகளை நமது ஒற்றர் படைத் தலைவர் கலியவன் உறுதிசெய்துள்ளார். உள்ளூர் கலவரங்களைத் தூண்டிவிட யாரோ சிலர் திட்டமிட்டு தொடர்ந்து செய்துவரும் செயல்போன்றுதான் தெரிகிறது. இது முளையிலே கிள்ளப்படல் வேண்டும். மேலும் தொண்டியிலிருந்து கிழக்காக நம் நகருக்குள் வரும் பெருஞ்சாலையில் பாரம் ஏற்றிவரும் வண்டிகள் அடிக்கடி குடைசாய நேருவதோடு, சில வழிப்பறிகளும் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். இதனை உடனே களையவேண்டுமென வணிகர்கள் நேரடியாக என்னை சந்தித்து பிராது கொடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக அயல்தேசத்தவரின் நடமாட்டம் தலைநகரில் அதிகமாகயுள்ளது. இதற்கு நமது ஒற்றர்தலைவர்தான் விளக்கமளிக்கவேண்டும்." என்றுகூறி முடித்தார்.

ஒற்றர் படைத்தலைவன் கலியவன் எழுந்து உரையைத் தொடர்ந்தார். " மாமன்னருக்கும் அவையினருக்கும் வணக்கம். அமைச்சர் கூறியவை அனைத்தும் உண்மையே. கோவில் சிலை உடைப்பும், வழிப்பறிகளும் நடந்துள்ளது. கோடியாக்கரையில் உள்ள நமது ஒற்றன் வலியவேலன் தந்த தகவலின் அடிப்படையில் ஈழத்திலிருந்து வந்த ஐந்துபேர் வரை அமரக்கூடிய படகு ஓன்று கருவேலங்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த கிழமையில் நமது நகரின் பூஞ்சோலையில் நடந்த ஒரு சிறிய கைகலப்பில் ஒரு ஈழவன் போன்றவன் நமது படைவீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த சண்டையை நமது சிற்றரசர் சிருங்காரன் தலையிட்டு முடித்து வைத்ததாகவும் ,அந்த இளைஞன் தற்போது அரண்மனைக்கு பூக்கள் வழங்கிக்கொண்டிருக்கும் முதியவர் பெருமாளன் வீட்டில் தங்கியிருப்பதாகக் கேள்வி. அந்த முதியவரின் மகள் தேன்மொழி நம் இளவரசியாரின் தோழியார் ஆவார். சோழ அரசரின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்கள் தொடங்கவிருக்கும் இவ்வேளையில் நமது தளபதியார் செங்கோடனும் அவருடன் சென்றிருக்கும் வீரமல்லன் மற்றும் இரண்டு நாட்டியப் பெண்களும் சாமர்த்தியமாக சோழ நாட்டிற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதாக நேற்றிரவு அவரோடு சண்டையிட்ட நமது ஒற்றன் தகவல் கூறினான். மேலும் தலைநகரை அடுத்துள்ள புறநகர் மறைவிடங்களில் ரகசியமாகக் கூடும் இளைஞர்கள் சிற்றரசர் சிருங்கார சேரனின் வழிநடத்துதலில் போர்ப்பயிற்சி பெறுகிறார்கள். வாழ்க மாமன்னர் வளர்க சேர நாடு" என்று கூறி முடித்தார் ஒற்றர் தலைவன்.

" சிற்றன்னையே , தங்கையே ஏதாவது செய்திகள் உள்ளதா உங்களிடம்." என்று கேட்டார் சேரர்.

" இல்லை. எங்களிடம் செய்திகள் எதுவுமில்லை " என்றார் அவர்.

மீண்டும் மன்னர் பேசத் துவங்கினார்.

" கோவில்களில் சிலை உடைப்பது வருந்தத் தக்க செயல். வழிப்பறியும் அவ்வாறே. இந்த செயல்களைக் கண்டறிந்து அதை வேரறுக்க வேண்டும். இதற்கு நான் நமது நண்பர் இளங்கோவின் உதவியை எதிர்பார்கிறேன். நண்பருக்கு சேனாதிபதி வேண்டிய உதவிகளைச் செய்வார். இதை விரைந்து முடிக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பியபடியே சேரநாட்டையும் அதன் அழகுகளையும் கண்டு இன்புற்றுத் திளைக்க மிகுந்த நேரம் கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் புறப்படலாம். மற்றவைகள் பற்றி தற்போது கவலை கொள்ள தேவை இல்லை. உங்களுக்கு சம்மதமா நண்பரே ? " என்று கூறி இளங்கோவை நோக்கினார் அரசர்.

" என் பாக்கியம் அரசே மேலும் தாங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்" எனப் பகிர்ந்தார் இளவல். தொடர்ந்து

" ஒரு சந்தேகம் அரசே, உங்களால் பணி நீக்கம் செய்யப்பட தளபதி செங்கோடன் எப்படி சோழ நாட்டிற்குள் புகுந்தார். இது எனக்கு விந்தையாக உள்ளதே." என்றார்.

" அதை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகச் சொல்கிறேன் இப்போது சபை கலையலாம்." என்று கூறி விடைபெற்றார் அரசர்.

சற்று குழம்பிய மனதோடு இளவல் நிற்கையில் அவர்பின்னால் யாரோ செருமும் சப்தம் கேட்கவே திரும்பினார். அங்கே இளவரசி நீலவேணி நின்று கொண்டிருந்தாள்.

" யோசனை பலமாக இருக்கிறதே " என்றாள்.

" அரசரின் திட்டங்கள்தான் எனக்குப் புரியவே இல்லை. அதைத்தான் யோசனை செய்துகொண்டிருந்தேன் இளவரசி." என்றார்.

" என் பெயர் நீலவேணி. அவ்வாறு அழைத்தால் போதும். அப்புறம் நீங்கள் யாரென்று தெரியாமல் பேசிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றாள்.

" அதனால் ஒன்றும் பாதகமில்லை " என்றவாறே மெதுவாகத் தன் அறையின் திசை நோக்கி மெதுவாக நடந்தார்.

பின்தொடர்ந்த நீலவேணி, " என்னிடம் பேசுவதில் உங்களுக்கு விருப்பமில்லையா? பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் சொல்லாமல் போவது அழகா" என்று வினவினாள்.

" உங்களிடம் பேசுவதற்கு விருப்பமில்லை என்று சொல்ல நான் என்ன குருடனா? இப்போது அதற்கெல்லாம் நேரமில்லையே. விரைவில் நான் புறப்படுவதற்கான ஆயத்தம் செய்யவேண்டும். மிகப்பெரிய பணி எனக்குத் தரப்பட்டுள்ளதே." என்றார்.

" ஒ..பணி என்று வந்துவிட்டால் மற்றதெல்லாம் இரண்டாவதுதனோ?"

" அதிலென்ன சந்தேகம் இளவரசி ? கடமை முக்கியமில்லையா? கடமைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்."

" நல்ல கடமை வீரர்தான். ஆனால் கல்நெஞ்சக்காரர் நீங்கள்."

" என்ன சொல்கிறீர்கள் இளவரசி? நான் கல்நெஞ்சக் காரனா? ஒருபோதும் இல்லை. அப்படி எதாவது தவறாக நீங்கள் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை"

" பொறுப்பில்லைதான். நான்தான் தவறாக நினைத்து மனதை தொலைத்துவிட்டேன்." என்றபடியே தலை கவிழ்ந்தவாறு நீலவேணி விலகி நடந்தாள்.

" இளவரசி " என்றவாறு சற்றுதூரம் அவள் பின்னால் போன இளவல் மேற்கொண்டு பேச்சு எழாமல் நீலவேணி போவதையே பார்த்துக்கொண்டு நின்றார்.

தொடரும்...

கீதம்
12-04-2011, 04:03 AM
முடிச்சுகள் பலமாய் விழத்தொடங்கியுள்ளன. மனங்களுக்குள்ளும் முடிச்சுகள். அவிழவேண்டாத முடிச்சுகள். நன்றாக கதை நகர்த்துகிறீர்கள்.

பாராட்டுகள். தொடருங்கள்.

dellas
12-04-2011, 04:47 AM
நன்றி கீதம் அவர்கட்கு.

Nivas.T
12-04-2011, 06:20 AM
பிரமாதம் டெல்லாஸ்

கதையில் இன்னும் விறுவிறுப்பு கூடுகிறது, கதையின் நகர்வு அருமையா உள்ளது நண்பரே

இதுபோல் உடனுக்குடன் பதிப்பிட்டால் கதையின் சுவாரசியம் குறையாமல் இருக்கு

தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்

dellas
12-04-2011, 08:32 AM
நன்றி நிவாஸ். அடுத்த அத்யாயம் விரைவில்.