PDA

View Full Version : சாம்பல் நிற கழுகு.



சசிதரன்
11-04-2011, 05:48 AM
வெகு உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது
ஒரு சாம்பல் நிற கழுகு.

இறகுகளில் எந்த அசைவுமின்றி
ஒரு துறவியின் மௌனம் போல்
அத்தனை இலகுவாய் பறக்கிறது.

காற்றை கிழித்தபடி பறக்கும்
அதன் வேகம் ரசிக்கும்படியாகவும்
இரை தேடும் அதன் கண்களின் கூர்மை
பயப்படுத்தும்படியாகவும் இருக்கிறது.

மெல்ல மெல்ல உயரம் குறைத்து
தரையிறங்கும் போது
சிறு புள்ளியென இருந்தது
தூறல் மழையாதல் போல்
உருவம் கொண்டது.

பதுங்க முயன்று தோற்ற
ஒரு கோழிக்குஞ்சை
காற்றின் வேகத்தில் கடத்தி
சட்டென தூரம் கடந்த நொடியில்

வியப்பின் எல்லைக்கு கண்களை விரித்து
மிக உற்சாகமாய் சொல்கிறாய்
இதுவரை நீ காணாத
மிக அழகிய காட்சி இதுவென.

கலாசுரன்
11-04-2011, 05:56 AM
நல்லா இருக்கு சசிதரன்..!!

வாழ்த்துக்கள் :)

உமாமீனா
11-04-2011, 07:37 AM
அருமை - தொடரட்டும்

Nivas.T
11-04-2011, 08:13 AM
அழகு கவிதை சசிதரன்

கீதம்
11-04-2011, 11:51 AM
சாம்பல் நிறக் கழுகு
தன் குணம் தப்பவில்லை,
தவறுதலாய் அதன் குரூரம் மட்டும்
கடத்தப்பட்டுவிட்டது
உன் கருநிறக் கண்களில்!

அழகான கவிதை. பாராட்டுகள் சசிதரன்.

பிரேம்
11-04-2011, 12:23 PM
கவிதை அருமை..கவியின் கண்கள் கழுகையும் விட்டு வைக்கவில்லை..
அருமை அருமை..
ஆமா யாருசார் அப்டி உங்கள்ட்ட சொன்னது..?

செல்வா
11-04-2011, 01:09 PM
ரொம்ப நாளைக்கப்புறம் சசியின் கவிதை.

விவிலியத்தில் ஒரு வாசகம் வரும். கடவுள் தான் படைத்த அனைத்தையும் சுற்றிப்பார்த்தார். அனைத்தும் நல்லதெனக் கண்டார்.

இறைவன் படைப்பில் அனைத்துமே அழகு.

வசீகரிக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் சசி.

சிவா.ஜி
11-04-2011, 02:01 PM
ரொம்ப நாளைக்கப்புறம் சசியோடக் கவிதை. உங்களுக்கே உரித்தான அழகான வரிகளில். வாழ்த்துக்கள் சசி.

ஜானகி
11-04-2011, 03:46 PM
கழுகுப் பார்வையையும் ரசித்த கண்களையும், வர்ணித்த வரிகளையும்....பாராட்ட வேண்டியதுதான்.

த.ஜார்ஜ்
11-04-2011, 04:22 PM
கடத்தப்படுவது நானாக இல்லாதவரை
காட்சிகள் அழகுதான்..
இத்தனை நாள் சசியை யார் கடத்திப் போனார்கள்?

இளசு
11-04-2011, 08:41 PM
மயில் கறி சமைத்த இரு அழகிய மென்மை + மேன்மையான இரசனை மிக்க உயர்தட்டு சகோதரிகளைப் பற்றிய சுஜாதாவின் சிறுகதை நினைவுக்கு வந்தது..

ரோஜாவுக்குள்ளும் முள்..
அழகுத் தோற்றத்துக்குள்ளும் அசாதரண ''இரசனை'!

கீதம், ஜார்ஜ் - பின்னூட்டங்கள் ஜிலீர்ப்பு!


பாராட்டுகள் சசி...

அமரன்
11-04-2011, 09:07 PM
வியப்பின் எல்லைக்கு கண்களை விரித்து
மிக உற்சாகமாய் சொல்கிறாய்
இதுவரை நீ காணாத
மிக அழகிய காட்சி இதுவென
அருகினில்
என்னை வைத்துக் கொண்டு..:)

அழகியல் குழைத்த வண்ணம் கொண்டு கவிதை வரைந்தால்
அனைவரும் தான் விழித்தோகை விரிப்பர், வியப்பு மழை கண்டு.

சமகாலக் கசமுசாக்களை கண்களில் தூவிச் செல்லவும் தவறில்லை கவிதை.

பாராட்டுகள் சசி.

சசிதரன்
12-04-2011, 04:50 AM
நன்றி கலாசுரன், உமாமீனா, நிவாஸ், கீதம், பிரேம், செல்வா, சிவா அண்ணா, ஜானகி, ஜார்ஜ், இளசு அண்ணா மற்றும் அமரன்... :)

நீண்ட நாட்களுக்கு பின் உறவுகளின் பின்னூட்டம்,,, மகிழ்ச்சியாக இருக்கிறது,..:)

பூமகள்
12-04-2011, 08:48 AM
அருமை சசி..


பதுங்க முயன்று தோற்ற
ஒரு கோழிக்குஞ்சை
காற்றின் வேகத்தில் கடத்தி
சட்டென தூரம் கடந்த நொடியில்]

இவ்வரிகள் சொல்லும் கவிதையின் மொத்தத்தையும்..



ஓர் இளம் குஞ்சை கவ்வும் கழுகு
அப்போதே பிறந்த தன் குட்டியைத் தாமே உண்ணும் தாய் பூனை
மானை வேட்டையாடும் புலி



- இயற்கைச் சங்கிலியின் படி இவை சரியென்றாலும்..

மனித மனங்களுக்கு ஏனோ வருந்தவைப்பவையாகவே இன்னும்..

அழகான உருவங்களுக்கு அப்பால் இருக்கும் குரூரம் அறிய முயற்சிக்கையில் நம்மில் ஏற்படும் விளைவுகள் ஆபத்தே.

கார்டூன் சண்டை பார்க்கும் குழந்தை..
வன்முறைப் படம் பார்க்கும் சிறுவன்..

என நீளும் பட்டியலில் குரூரங்களின் உச்சம் நாளுக்கு நாள் ஏற்றமடைகின்றன..

விளைவு..

வீதியில் ரத்தம் வழியும் நபர் பார்க்கினும்.. மனம் பதைக்கா நிலை..

மனிதாபிமானம் குன்றியிருக்கும் காலம் இது..

சமநிலையை எடுத்தியம்பும் கவிதையாக இதைக் கொள்ளலாம் சசி..

இப்படி எல்லாம் நினைக்க வைத்த கவிதை.. தொடருங்கள்..

பாராட்டுகள். :)

Ravee
12-04-2011, 10:38 PM
வெகு உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது
ஒரு சாம்பல் நிற கழுகு............

பதுங்க முயன்று தோற்ற
ஒரு கோழிக்குஞ்சை
காற்றின் வேகத்தில் கடத்தி
சட்டென தூரம் கடந்த நொடியில்

வியப்பின் எல்லைக்கு கண்களை விரித்து
மிக உற்சாகமாய் சொல்கிறாய்
இதுவரை நீ காணாத
மிக அழகிய காட்சி இதுவென.

.பல முறை அனிமல் பிளானெட்டில் கண்டு வியந்த காட்சி சசி.... சபாஷ் என்று மெய் சிலிர்த்து போய் இருக்கிறேன் ஆனால் கவிதை முடிவில் தொட்டது இயற்கைதான் என்றாலும் இப்போது எங்கோ வலிக்கிறது

சசிதரன்
13-04-2011, 04:07 PM
உங்கள் விரிவான பார்வைக்கு நன்றிகள் பல பூமகள்... :)

மிக்க நன்றி ரவி அண்ணா ... :)