PDA

View Full Version : மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)



பாரதி
09-04-2011, 04:01 PM
அன்பு நண்பர்களே,

தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை குறித்த செய்தி எனக்கு சில தினங்களுக்கு முன்னரே கிடைத்தது. முன்பு மக்கள் தொலைக்காட்சியில் அவரது நேர்காணலை வாய்ப்பு அமையும் போதெல்லாம் பார்த்த எனக்கு, மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தடைபட்ட போது மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. இப்போது அவரது கட்டுரைகள் வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. அக்கட்டுரைகளை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.



மொழிப்பயிற்சி - 1:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்


கவிக்கோ ஞானச்செல்வன்



ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...



அச்சுறுத்த வேண்டா:-
"தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.


தமிழில்,

"எழுத்தெனப் படுவ


அகரமுதல் னகர இறுவாய்


முப்பஃது என்ப...''*


என்றார் தொல்காப்பியர்.


ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.
கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?

ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை.

அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும். சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை.
என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.

தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.

தமிழ் இயற்கை மொழி:-
மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை - எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி - இயற்கைமொழி தமிழேயாகும்.

எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து "என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?'' என்போமன்றோ? வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "அ". சற்று அதிகம் திறந்தால் "ஆ" தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே - இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

ஒலிப்பு - உச்சரிப்பு:-
இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும்.
நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை.
தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர்.


தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம்.

தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள்.
தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள்.


"தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.

"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர்.


நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்"சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும்.


இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

நுண்ணொலி வேறுபாடுகள்:-
தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.

அதனால், "சார் இங்கே என்ன "ல"னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர்.

பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள்.

மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல"கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள"கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ"கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.

இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

எடுத்துக்காட்டுகள்:-


தால் - நாக்கு, தாள் - எழுதும் தாள், பாதம் (அடி);


தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);


வால் - தூய்மை (வெண்மை)


வாலறிவன், வாலெயிறு;

வாள் - வெட்டும் கருவி,

வாழ் - வாழ்வாயாக

இப்படிப்பல காட்டலாம்.


தமிழ் வளரும்.....



நன்றி : தினமணிக்கதிர்

இளசு
10-04-2011, 12:22 AM
நன்றி பாரதி...

மன்றச் சீத்தலைச் சாத்தனார் நீ..

இப்பதிவைக் பகிரப் பொருத்தமானவனும் நீ..

பிழையின்றி தமிழ் எழுதப், பேசத்தெரிவதில் பெருமிதம் உண்டெனக்கு..
அதையொட்டி நான் கிறுக்கிய கவிதை - என்ன தெரியும் எனக்கு?

பாரதி
10-04-2011, 06:35 AM
நன்றி கூறுதல் அவசியமா அண்ணா...?:)
--------------------------------------------------------------------------------------

மொழிப் பயிற்சி- 2:- பிழையின்றித் தமிழ் - பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்


இடையின ரகரம், வல்லின றகரம்:-
இவற்றைச் சின்ன "ர" பெரிய "ற" என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது. பெரியவருக்குச் சின்ன "ர" போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய "ற" போடவேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வர்.

ய,ர,ல,வ,ழ,ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று "ர".
க,ச,ட,த,ப,ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று "ற".
தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.

சுவர் என்னும் சொல்லுடன் "இல்" உருபு சேர்த்தால் சுவர் + இல் = சுவரில் என்றுதான் ஆகும். ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு + இல் = சுவற்றில்) தவறாக எழுதுகிறார்கள்.

சோறு + இல் = சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்)

கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர் வியாபாரம்).

"ண"கர, "ந"கர, "ன"கரங்கள்:-

மூன்று சுழி "ண"னா, இரண்டு சுழி "ன"னா, காக்கா மூக்கு "ந"னா என்றெல்லாம் சொல்லுவதை விட்டு விடுவோம்.

தமிழ் எழுத்துகளின் வரிசையில்
"ட" பின் வருவது டண்ணகரம்;
"த"பின் வருவது தந்நகரம்;
"ற"பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும்.

இந்த மூன்றும் இடம்மாறி - எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகி விடும். பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும். ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

பனி - குளிர்ச்சியானது
பணி - பணிந்து போ, தொண்டு
பதநி - (பதநீர்) இளநி (இளநீர்) - பருகுபவை
அன்னை - தாய்; அண்ணன் - தமையன்; அந்நாள் - அந்த நாள்.

எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம். இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் - பிழைகள் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்:-
1. கோர்வை, கோர்த்து:-
அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு "ர்" சேர்ப்பது தவறு.
சான்று:- நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான்'' (வில்லி).

2. முகர்ந்து:-
மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள் கொண்டது.

முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது. மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது. மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா? மோப்பநாய், "மோப்பக்குழையும் அனிச்சம்" என்பன காண்க.

3. முயற்சிக்கிறேன்:-
"உனக்காக நான் முயற்சிக்கிறேன்" என்று பேசுகிறார்கள்.
உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன் என்பது பிழை. முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும் சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது.

ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே. ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?

4. அருகாமையில்:-
என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம். அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும்.
இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் "ஆ" எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

5. முன்னூறு:-
"நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்" என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும்.
முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும்.
மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி மு + நூறு = முந்நூறு ஆகும்.

இலக்கியச்சான்று:- "பாரியின் பறம்பு முந்நூறு ஊர் உடைத்தே".

(தமிழ் வளரும்)

நன்றி : தினமணிக்கதிர்

இளசு
10-04-2011, 07:43 AM
தனிப்பட்ட அன்புக்கு நன்றி தேவையில்லை..
தமிழ்ப்பணிக்கு சொல்லலாம்... பாரதி..

----------------------------

சுவற்றில், அருகாமை, முகர்ந்து --- சரிபோல உலவும் பிழைகள்..

தகர்+ஆறு = அழிவு வழி... பொருள் கற்றேன்..


நற்பணி தொடர்க!

பாரதி
10-04-2011, 06:05 PM
அண்ணா, கவிக்கோ அவர்களின் உரையைக்கேட்கும் போது அருமையாக இருக்கும். இப்போதைக்கு கட்டுரையாவது கிடைக்கிறதே என்று ஆறுதல் அடைய வேண்டியதிருக்கிறது. நான் தேடியதில் பகுதி - 3 இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கும் போது அதை இங்கு இணைப்பேன்.

இப்போது பகுதி - 3 ஐ இங்கு பதிக்கிறேன். அருமை நண்பர் திரு.இராஜேஸ்வரன் அவர்கள் கவிக்கோவின் புத்தகத்தை வாங்கி பகுதி-3ஐ எனக்கு தட்டச்சி அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் நன்றி. அவருடைய தமிழ்த்தொண்டிற்கு தலை வணங்குகிறேன்.(14.05.2013)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மொழிப்பயிற்சி - 3:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

6. சில்லரை :-

ஒரு ரூபாயில் சிறிய பகுதிகளோ, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனும் எந்தத் தொகையிலும் வரும் சிறிய பகுதிகளே அவை. சிலவாக அறுக்கப்பட்டவை (பிரிக்கப் பட்டவை) ஆதலின் சில்லறை என்றே எழுதுதல் வேண்டும். சில அரை எனில் அரை அரையாகத்தான் அளவிடல் முடியுமன்றி கால், அரைக்கால் என்னும் சிறியவற்றை அது குறிப்பிடல் இயலாது. 10 காசு 50 காசு முதலியவை ஒரு ரூபாயில் சில்லறை; 50 ரூபா 100 ரூபா ஆயிரத்துள் சில்லறை. இப்படியே அடுக்கிஸ் செல்லலாம். ஆதலின் சில்லறையே சரியான பொருள் கொண்ட சொல்.

7. கருப்பு :-

கருப்பினத்தலைவர், கருப்புப்பணம் என்றெல்லாம் செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கறுப்பினத்தலைவர், கறுப்புப்பணம் என்று வல்லினம் இட்டு எழுத வேண்டும். கருப்பு என் இடையினம் போட்டால், பஞ்சம் என்று பொருள். கரிய, கருமை என்னும் போது இடையின 'ர' வரினும் கறுப்பு என்று எழுதும் போது மட்டும் வல்லின 'று' தான் போட வேண்டும்.

தமிழ்ப் பேரகராதி, சிற்றகராதி எதிலும் சரிபார்த்துக் கொள்க. கருப்புப் பட்டியல் எனில், பஞ்சப்பட்டியல் என்றே பொருளாம்.

8. மேனாள் :-

இப்போதெல்லாம் முன்னாள் அமைச்சர், முன்னாள் தலைவர் என்று குறிப்பிட்டு வந்த இடங்களில், மேனாள் அமைச்சர், மேனாள் தலைவர் என்று எழுதுகிறார்கள். புற நானூற்றில் வந்துள்ள மேனாள் என்னும் சொல்லுக்கு நேற்றைக்கு முந்திய நாள் (மேல்+நாள்) எனும் பொருளே காண்கிறோம். 'நெருநல் உற்ற செருவிற்கு.....' என்ற வரியின் முன் 'மேனாள் உற்ற செருவிற்கு.....' எனும் வரி இடம் பெற்றுள்ளது.

முன்னாள் எனில் அது நேற்றாகவும், பல நாள் முன்னாகவும், பல திங்கள், பல ஆண்டு முன்னதாகவும் பொதுத் தன்மை கொண்டுள்ளது. இந்தப் பொருள் மேனாளில் இல்லை. இதனை எழுதத் தெரியாதவர் மேநாள் என்று எழுதிவிட்டால், அது மே தினத்தைக் (மே-1) குறிக்கும். பழைய நாளில் பதவியில் இருந்தோரை முன்னாள் என்றே குறிப்போமாக.

9. இயக்குனர் :-

இயக்குநர், நடத்துநர், ஓட்டுநர் போன்ற சொற்களை இப்போதும் இயக்குனர், நடத்துனர், ஓட்டுனர் என்று பிழையாக எழுதுகிறார்கள். இச்சொற்களைப் பிரித்து (இயக்கு + அன் + அர்) பின் சேர்த்தால் இயக்கனர், நடத்தனர் என்றுதான் வரும் ('கு' வில் உள்ள உகரம் கெட்டு 'க' ஆகிவிடும்). மாறாக இயக்கு, நடத்து, ஓட்டு எனும் சொற்களோடு 'நர்' எனும் சிறப்பு விகுதியைச் சேர்த்தால், எந்த மாற்றமும் வராது. 'கேட்குந போலவும், கிளத்துந போலவும்' என்று தொல்காப்பியம் தொடங்கி, உப்புவிலை பகருநர், மீன்விலை பகருநர், நெடுந்தேர் ஊருநர், செம்பு செய்நர், மணி குயிற்றுநர் என்று சிலப்பதிகாரத்திலும் கண்டு கொள்க.

10. உளமாற :-

நீடுழிவாழ உளமாற வாழ்த்துகிறேன் என்று சிலர் எழுதுகிறார்கள். உள்ளம் மாறிவிட வாழ்த்துகிறேன் என்பது இதன் பொருளாகும். (உளம் + மாற) ஆனால், நினைத்த பொருள் இதுவா? மனம் நிரம்ப வாழ்த்துகிறேன் என்பதுதானே நம் கருத்து. ஆதலின் மனம் + ஆர (ஆர = நிரம்ப, பொருந்த) எனும் பொருளில் 'மனமார வாழ்த்துகிறேன்' என் எழுதுதல் வேண்டும்.

11. அளப்பறியன :-

அவர் ஆற்றிய பணிகள் அளப்பறியனவாகும் என்றும் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர் ஆற்றிய பணிகள் அளப்பதற்கு முடியாத (நிறைந்த) பணிகள் என்பதுதானே நாம் கருதும் பொருள். அப்படியாயின் அளப்பரியன என்றுதானே எழுதிட வேண்டும். இதை விட்டு அளப்பறியன என்றால் ஒரு பொருளும் இன்றிக் குழப்பம் தோன்றும். எதை அறிய.....? எதை அளக்க....?

அளப்ப + அரிய = அளப்பரிய என்பதுதான் சரியான சொல்.

12. அன்னாளைய தலைவர் :-

முன் ஒரு சமயம் தலைவராய் இருந்தவரைக் குறிக்க ஒரு சிலர் அன்னாளைய தலைவர் என்று ஏடுகளில் எழுதி வருகிறார்கள். அ+நாள்=அந்நாள் என்பது சரியான சொல். அந்தநாள் தலைவர் என்னும் பொருளை மனதில் எண்ணி, அன்னாள் என்று எழுதுவது பிழையன்றோ? இது ஏதோ ஒரு பெண்ணின் பெயரைப் போல் தோன்றுகிறதே! இவ்வாறே இப்போது தலைவராய் இருப்பவர் இந்நாள் தலைவர் ஆவார். இவரை இன்னாள் ஆக்கிவிட்டால், இல்லாதநாள் தலைவர் ஆகிவிடுவார். கவனம் வேண்டும்.


======================================================


மொழிப்பயிற்சி - 4:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


13.பண்டகசாலை:-
பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம்.

பின் ஏன் சாலை என்று ஒரு சொல்? உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.

14.பதட்டம்:-
நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப்பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.

15.கண்றாவி:-
இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம். மிகக் கொடிய காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம். இது கண் அராவும் காட்சி. ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)

ஊர்ப் பெயர்த் திரிபுகள்:-
பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள். இவ்வாறே பல ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.

அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள். பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம்.
அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள். இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது. அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா? எவ்வளவு பெரிய தவறு இது?

செய்ய நீர் (சிவந்தநீர் - புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு. அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள். செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு. என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?

தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது. இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள். திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா? அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை "திருவை" என்று பாமரர் சொல்லுவர். இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது? ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன.

காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?

வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன.

(பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர். இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று "க்" போடாமல் எழுத வேண்டும். (கோடுதல் - வளைதல்; கோட்டம் - வளைவு) ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை.

"ட" எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.

தமிழ் வளரும் ...

நன்றி:- தினமணி கதிர்

அமரன்
10-04-2011, 06:15 PM
ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்தேனும் இருக்க வேண்டியது.

படிக்காமல் பதிலிடும் முறை இல்லை என்னிடம்.

ஆனால் படிப்புக்குப் பாராட்டும் உற்சாகமும் கொடுக்க முறை தவறுகிறேன் இப்போது..

நன்றியும் பாராட்டும் பாரதிண்ணா!

தொடருங்க\ள்.

பாரதி
11-04-2011, 07:33 AM
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அமரன். உங்கள் பாராட்டு கவிக்கோ அவர்களையே சாரும்.
=====================================================


மொழிப்பயிற்சி - 5:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!



கவிக்கோ.ஞானச்செல்வன்


தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் (அமிர்தம்) தோன்றியதன்றோ? அந்த அமிர்தத்தைக் குடத்தில் கொண்டு வந்து திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யப் பெற்ற ஈசன் பெயர் அமிர்தகடேசுவரர்.(கடம் - குடம்). அந்தப் பெருமான் அருள்பாலிக்கும் ஊர் திருக்கடவூர். "திரு" எனும் அடைமொழி, தலங்களைச் சார்ந்து வருதல் அறிவோம். (அமிர்த) கடம் கொண்டு பூசிக்கப்பெற்ற ஊர் கடவூர். இந்த அழகான பெயர் இன்று என்ன ஆயிற்று? திருக்கடையூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
- அறுபது அகவை நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி)
- எண்பதகவை நிறைவு (சதாபிஷேகம்)
விழாக்கள் செய்திட மிகச் சிறந்த புனிதத் திருத்தலம் - மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வரம் தந்த சீர்த்தலம், கடையூரா? கடைப்பட்ட ஊரா?
சிந்தியுங்கள்; பிழையைத் திருத்துங்கள்.

சோலை ஒன்றில் ஒரு சிலந்தியும், ஆனையும் (யானையும்) சிவனை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் திருவானைக்கா. திருச்சிராப்பள்ளி நகரில் திருவரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் இது. ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது. (கா - சோலை) "திரு" என்னும் அடைமொழியோடு திருவானைக்கா ஆயிற்று. இந்நாளில் இத்தலத்தின் பெயரைத் திருவானைக்கோவில் என்றும் திருவானைக் காவல் என்றும் எழுதுகிறார்கள். எழுத்தாளர்களும் தவறான பெயருக்கு விளக்கம் வேறு தருகிறார்கள். இது சரிதானா? திருத்தப்பட வேண்டாவா?

நல்லவேளை; மயிலாடுதுறை இன்று தப்பித்துக் கொண்டது. மயில்கள் ஆடுகின்ற வளமார்ந்த காவிரித்துறையுடைய ஊர் மயிலாடுதுறை என்று சொல்லப் பெற்றது. இதனை மாயூரம் என்று பின்னாளில் வடமொழியால் குறித்தனர். (மயூரம் - மயில்). இந்த மயூரத்தை மக்கள் மாயவரம் ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கும் இந்தப் பெயரைப் பலரும் சொல்கிறார்கள். மாய்வதற்கு (சாவதற்கு ) வரம் தரும் ஊரா இது?

ஒப்பார் இல் அப்பன் - ஒப்பிலியப்பன் என்று பெருமாளுக்குப் பெயர் சூட்டிப் பாடிப் பரவினர் அடியார்கள். பரம்பொருள், ஒப்பு - நிகர் அற்றது அன்றோ? இப்பெருமான் எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் என்ன தெரியுமா? உப்பிலியப்பன்கோவில்.

ஒப்பு இலி என்பதைப் பேச்சு வழக்கில் உப்பு இலி - உப்பிலி என்று ஆக்கி, அந்தப் பெருமாளுக்கே உப்பில்லாத திருவமுது படைத்து வழிபடுகிறார்கள். கடவுளுக்கே உப்பில்லாப் பத்தியமா? தமிழை அறியாத கொடுமையல்லவா இது?

ஒற்று மிகுதலும் மிகாமையும்,ஒற்று மிகுதலை வலி மிகுதல் என்று இலக்கண நூலார் சொல்வர்.

வல்லெழுத்து ஆறனுள் க,ச,த,ப என்னும் நான்கு மட்டுமே மொழி முதல் எழுத்தாக வரும்.
ஒரு சொல்லிருக்க (நிலை மொழி) மற்றொரு சொல் வந்து சேரும்போது சில இடங்களில் இந்த க,ச,த,ப - என்பவை மிகும்.
சில இடங்களில் மிகா.
சிறந்த தமிழறிஞர்களின் நூல்களைப் படித்தாலே, மிகுதல், மிகாமைப் பற்றி இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.

எதற்கையா இந்த வம்பு?
க்,ச், த்,ப் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதிவிட்டால் என்ன என்று கருதுபவர் இருக்கிறார்கள். வாழை பழம், கீரை கறி - படித்துப் பாருங்கள், இயல்பாக உச்சரிக்க முடிகிறதா? வாழைப்பழம், கீரைக்கறி என்று சொன்னால்தான் நிறைவாக உணர்கிறோம். இந்த ஒற்றெழுத்து மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு என்பதைத் தமிழர் அறிய வேண்டும். பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.

மருந்து கடை - மருந்தைக் கடை
மருந்துக்கடை - மருந்து விற்கும் கடை

ஏழை சொல் - ஏழையின் வார்த்தை
ஏழைச்சொல் - ஏழு எண்ணிக்கையைச் சொல்

வேலை தேடு - ஒரு வேலையைத் தேடிக் கொள்
வேலைத் தேடு - வேல் என்னும் ஆயுதத்தைத் தேடு

நடுகல் - செத்தார்க்கு நடப்படுவது
நடுக்கல் - நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்)

சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு, மரணம்

கைமாறு - ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறுவது
கைம்மாறு - நன்றிக்கடன்

பொய் சொல் - பொய் சொல்வாயாக
பொய்ச்சொல் - பொய்யான சொல்

தமிழ் வளரும்...

நன்றி:- தினமணி கதிர்

M.Jagadeesan
11-04-2011, 07:44 AM
பல ஊரின் பெயர்கள் இதுபோல மாற்றம் பெற்றுள்ளன."மாமல்லபுரம்" "மஹாபலிபுரம்" ஆயிற்று."திருமுதுகுன்றம்" "விருத்தாசலம்"ஆயிற்று."திருமறைக்காடு","வேதாரண்யம்" ஆயிற்று."பூவிருந்தவல்லி","பூந்தமல்லி" ஆயிற்று."திருவல்லிக்கேணி","ட்ரிப்லிகேண்" ஆயிற்று."மயிலாடுதுறை","மாயவரம்" ஆயிற்று.மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" " "அம்பட்டன் வாராவதி" என்று மாறி பிறகு ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.

பாரதி
11-04-2011, 07:53 AM
கூடுதல் விளக்கத்திற்கு நன்றி ஐயா.
மைலாப்பூர், பூவிருந்தவல்லி ஆகிய ஊர்களை அவ்விதம் அழைப்பது பிழை எனவும் அவற்றை முறையே மயிலாப்பூர், பூந்தண்மலி என்றழைப்பதே சரி என அவர் விளக்கி இருக்கிறார். பின்னர் வரும் பகுதிகளில் அவை வரும்.

Nivas.T
11-04-2011, 08:11 AM
மிகவும் பயனுள்ள தகவல்

நாம் தமிழில் ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக தமிழ் வார்த்தைகளை கொணர்வது பற்றி யோசிக்கிறோம் ஆனால் பயன்படுத்தப்படும் தமிழ் வார்த்தைகளில் எத்தனைப் பிழைகள் அவற்றை முதலில் அறிந்து, நீக்கி செம்மை செய்ய வேண்டும்

இத்தனைப் பதிப்புவரை
இதை அறியாமல் தவறிழைத்தேன்

தொடருங்கள் பாரதி அவர்களே

இளசு
11-04-2011, 09:23 PM
அரிய பணிக்குப் பாராட்டு பாரதி...

சிந்துபூந்துறை -- பூந்துறையாகி, பூத்துறையாகி, பூத்ரை ஆன கதை எல்லாம் உண்டு..

மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வகைக் கட்டுரைகள் முதல் படி..

தொடர்க...

பாரதி
12-04-2011, 01:31 AM
ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு நன்றி நிவாஸ், அண்ணா.
====================================================


மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது.

அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்:- சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை. சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது.
சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும்.

சின்னத் திரை என்றால் சின்னம் + திரை - ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும். சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.

தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை.
பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே?

கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு. கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம். கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே? ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ?

கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும் சொல். எப்படி இந்தக் கைபேசி வந்ததோ? இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை. ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.

வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?

2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை

3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்

4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்

5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்

6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,

7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.

8.பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.

9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்

10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.

தமிழ் வளரும்....

நன்றி:- தினமணி கதிர்

M.Jagadeesan
12-04-2011, 02:18 AM
அரிய விளக்கம்! பகிர்தலுக்குப் பாராட்டு பாரதி அவர்களே!

கீதம்
12-04-2011, 03:08 AM
தமிழறிந்த அனைவரும் தவறாது அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களும் திருத்தங்களும். அறிந்ததோடு அவற்றைத் தவறாது கடைப்பிடிக்கவும் வேண்டும். கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கும், பகிர்ந்துகொள்ளும் பாரதி அவர்களுக்கும். நன்றி.

இளசு
12-04-2011, 06:38 AM
முத்துப்பல் சிரிப்பல்லவோ
கோடைக்காலக் காற்றே
வெள்ளைக் கமலத்திலே
வரச் சொல்லடி
திருக்கோவில் வரும் சிலையோ..


திரைப்பாடல் வரிகளால் வல்லெழுத்து மிகும் இடங்களை மீள்பார்வை பார்த்துக்கொண்டேன் பாரதி..

தொடர்க உற்சாகமாய்..

Nivas.T
12-04-2011, 08:55 AM
:sprachlos020: தொடருங்கள் அண்ணா

பாரதி
12-04-2011, 04:47 PM
ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி ஐயா, கீதம், அண்ணா, நிவாஸ்.

-------------------------------------------------------------------------


மொழிப்பயிற்சி - 7:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


வல்லெழுத்து மிகா இடங்கள்
1.​ அது,​​ இது,​​ எது ​ முன் மிகாது.
(எ-டு)​ அது பெரிது,​​ இது சிறிது,​​ எது கரும்பு?

2.​ அவை,​​ இவை,​​ எவை ​ முன் மிகாது.
(எ-டு) அவை சென்றன,​​ இவை கண்டன,​​ எவை தின்றன?

3.​ அவ்வாறு,​​ இவ்வாறு,​​ எவ்வாறு?
(எ-டு)​ அவ்வாறு சொன்னார்,​​ இவ்வாறு செப்பினார்,​​ எவ்வாறு கண்டார்?

4.​ ஒரு,​​ இரு,​​ அறு,​​ எழு என்னும் எண்களின் முன் மிகாது.
(எ-டு)​ ஒரு கோடி,​​ இரு தாமரை,​​ அறுபதம்,​​ எழுசிறப்பு.

5.​ பல,​​ சில முன் மிகாது.
(எ-டு)​ பல சொற்கள்,​​ சில பதர்கள்,​​ பல தடைகள்,​​ சில கனவுகள்.

6.​ உகர ஈற்று ​ வினையெச்சங்கள் முன் மிகாது.
(எ-டு)​ வந்து சென்றான்,​​ நின்று கண்டான்.

7.​ அத்தனை,​​ இத்தனை முன் மிகாது.
(எ-டு)​ அத்தனை குரங்குகள்,​​ இத்தனை பசுக்களா?

குறிப்பு:​- அத்துணை முன் மிகும்.
(எ-டு)​ அத்துணைப் பெயர்களா?​ இத்துணைச் சிறப்பா?

8.​ பெயரெச்சம் முன் மிகாது.
(எ-டு)​ ஓடாத குதிரை,​​ வந்த பையன்,​​ பறந்த புறா

குறிப்பு:​- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு)​ ஓடாக் குதிரை,​​ பாடாத் தேனீ

9.​ என்று,​​ வந்து,​​ கண்டு முன் மிகாது.
(எ-டு)​ என்று சொன்னார்,​​ வந்து சென்றார்,​​ கண்டு பேசினார்.

வல்லொற்று மிகுமிடங்கள்,​​ மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை. சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது.
இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வேற்றுமை உருபுகள் ​(2 முதல் 7 முடிய)​ விரிந்து ​(வெளிப்படையாக)​ இருப்பின் வேற்றுமை விரி எனப்படும்.
நூலைக் கற்றான் -​ இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது.

உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும்.
பால் பருகினான் -​ இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.

ஒரு வினைச் சொல் நிற்க,​​ ​ அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து,வேறொரு வினைச்சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம்.
(எ-டு)​ வந்து ​(முற்றுப் ​ பெறாத வினை)​ நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும்.

இதுபோல் முற்றுப் பெறாத வினை,​​ ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்.
வந்த ​(முற்றுப் பெறாத வினை)​ பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது. இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து ​(வினையின் கடைசி எழுத்து)​ இல்லாமற் போயிருந்தால் ​(கெட்டிருந்தால்)​ அது ஈறு கெட்ட பெயரெச்சம்;​ அதுவே எதிர்மறைப் பொருளும் ​(இல்லை என்பது)​ தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு)​ உலவாத் தென்றல் -​ உலவாத தென்றல் என்பதில் "த்" என்னும் ஈற்றெழுத்துக்கெட்டு ​(இல்லாமற் போய்)​ உலவா என நின்று "த்" வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று. தென்றல் உலவும் ​(அசையும்)​ இது உலவாத ​(அசையாத)​ என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.

ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை. பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும். "மை" விகுதியும் கெட்டிருக்கும்.
(எ-டு)​ செந்தாமரை -​ இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும்.

இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
​(எ-டு)​ வட்டக்கல் -​ வட்டமாகிய கல்.​ கல்லே வட்டம்.​ வட்டமே கல்.

தமிழ் வளரும் .....

நன்றி : தினமணிக்கதிர்

நாஞ்சில் த.க.ஜெய்
13-04-2011, 01:27 PM
அன்றய பாரதி மொழிக்காக இன்றைய பாரதி மொழி வளச்சிக்காக .....ஆஹா அற்புதம் தொடருங்கள் நண்பரே

Nivas.T
13-04-2011, 02:25 PM
அண்ணா இதை ஒரே தொகுப்பாக வடிவமைத்து நமது மன்ற இ-புத்தக பகுதியில் ஏற்றிவிட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

இளசு
13-04-2011, 08:08 PM
மிகா இடங்களை மிக அழகாக விளக்கிய பாகம்.


பகிர்தலைத் தொடர்க பாரதி. கவிக்கோ அவர்களுக்கு நன்றி..

பாரதி
14-04-2011, 05:35 PM
ஊக்கங்களுக்கு நன்றி ஜெய், நிவாஸ், அண்ணா.
அன்பு நிவாஸ், இத்தொடர் இன்னும் கவிக்கோ அவர்களால் தொடரப்படுகிறது. கட்டுரை நிறைவு பெறும் வேளையில் கண்டிப்பாக உங்கள் விருப்பப்படி செய்ய முயற்சிப்போம்.



மொழிப்பயிற்சி - 8:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


இலக்கண விளக்கம் எழுதிக் கொண்டே போனால் அது விரிந்து கொண்டே செல்லும். எளிதாகவும்,​​ சுருக்கமாகவும் சிலவற்றை அறியுமாறும் எழுதினோம். ஒற்றுமிகுதல் தொடர்பாக அறியத்தக்க மற்றும் இரண்டு செய்திகளையும் தருகிறோம்.

உவமைத் தொகை என்பது ஒன்று. ஒன்றை மற்றதற்கு உவமையாகச் சொல்லும் போது உவமை உருபு ​(போல,​​ ஒத்த,​​ அனைய, நிகர்த்த ) மறைந்திருப்பது உவமைத் தொகை.
​(எ-டு)​ முத்துப்பல் என்பது முத்து போன்ற பல் எனும் பொருளது.
இங்கே உவமைத் தொகையில் சந்தி "ப்" மிகுந்தது. உவமை விரியில் மிகவில்லை.

குற்றியலுகரம் என்பதும் அறிய வேண்டிய ஒன்று. இதை விளக்கவே பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். இயன்றவரை சுருக்கமாகச் சொல்வோம்.

குறைந்த ஓசையுடைய "உ" எனும் எழுத்து.
உகரத்திற்கு ஒரு மாத்திரை.
குறைந்த உகரத்திற்கு அரை மாத்திரை.

தொடர் வகையான ஆறு வகைப்படும்,​​ சொல்லின் ஈற்றில் வல்லொற்றின் மீது உகரம் ஏறி ​(சேர்ந்து)​ வருதல் இதன் இயல்பு.
(எ-டு)​ குரங்கு -​ இச்சொல்லின் "கு"வில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்கும்.

முழுமையான உகரம் எது?
அது முற்றியலுகரம்.
பசு-​ "சு"வில் உள்ள உகரம் முழுமையானது.

வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லொற்று மிகும் என முன்னர் சொல்லியிருக்கிறோம்.
பத்து -​ இதில் உள்ள "உ" ​(த் + உ)​ அயலில் "த்" என்ற வல்லெழுத்தை நோக்க வன்தொடர்க் குற்றியலுகரமாம்.
பத்துப்பாட்டு இங்கே வல்லொற்று மிகுதலைக் காண்கிறோம்.
எட்டுத்தொகையும் இவ்வாறே.
எழுத்து என்பதில் வன்தொடர்க் குற்றியலுகரம் உள்ளது.

"கள்" எனும் பன்மை விகுதி சேரும்போது வல்லொற்று மிகுமா? "கள்" ஒரு தனிச் சொல் அன்று;​ பன்மை காட்டும் விகுதி.
ஆதலின் எழுத்துகள் என்பதே இயல்பானது. இவ்வாறே தலைப்புகள்,​​ இனிப்புகள் என்று இயல்பாக எழுதுவதே பொருத்தம்.
ஆயினும் பழந்தமிழ்ப் புலவர் ​(பரிமேலழகர் உள்ளிட்டவர்)​ "எழுத்துக்கள்" என்று எழுதியுள்ளார்கள்.
ஆதலின் இருவேறு முறையிலும் எழுதலாம். ஆயினும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன எனும்போது இனிப்புச் சுவையுடைய "கள்" எனும்
பொருள் காணக்கூடும். ஆதலின், "இனிப்புகள்" என்றே எழுதுக.

வலி மிகுதல் -​ மிகாமை சில குறிப்புகள்:-

தமிழ் பேசு,​​ தமிழ்ப் பேச்சு:​​-
மேற் ​கா​ணும் இரண்​டி​லும் தமிழ் என்பது நிலைமொழி.
பேசு,​​ பேச்சு என்பன வருமொழி.
ஒன்று இயல்பாகவும்,​​ ஒன்று "வலி" மிகுந்தும் வந்திருப்பது ஏன்?
தமிழ் பேசு என்பது தமிழில் பேசு என விரியும். ஆதலின் ஐந்தாம் வேற்றுமைத் தொகை.
தமிழ்ப் பேச்சு என்பது தமிழில் ஆகிய பேச்சு அல்லது தமிழில் பேசப்பட்ட பேச்சு என விரியும். இதனில் "இல்" உருபோடு பிறிதொரு சொல்லும் மறைந்திருப்பதால் உருபும், பயனும் உடன் தொக்க தொகை.

தமிழ் படி-​ தமிழைப் படி -​ இரண்டாம் வேற்றுமைத் தொகை தமிழ்ப்படி -​ தமிழில் உள்ள படி -​ உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
தமிழ்ப் படம்,​​ தமிழ்ப்பாடம்,​​ தமிழ்ப் பேராசிரியர் என்பவற்றை விரித்துப்பொருள் காண்க.

ஊர்ப் பெயர்களின் முன்னர் க,ச,த,ப வந்தால் வல்லெழுத்து மிகும்.
(எ-டு)
1. திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
2. சென்னைக் கம்பன் கழகம்
3. அம்பத்தூர்த் தொழிற்பேட்டை

ய்,ர்,ழ் ஈறாக வரும் சொற்கள் முன் வல்லெழுத்து பெரும்பாலும் மிகும்.
(எ-டு)
1. தாய்ப்பாசம்,
2. வேர்க்கடலை
3. யாழ்ப்பாணம்
4. நாய்க்குட்டி
5. நீர்ச்சோறு
6. கூழ்ச்சட்டி

காய்கதிர் - வினைத் தொகையில் மிகவில்லை ​(காய்ந்த கதிர்,​​ காய்கின்ற கதிர், காயும் கதிர்)
மோர் குடி -​ வேற்றுமைத் தொகையில் மிகவில்லை ​(மோரைக் குடி)
தாழ் சடை -​ இதுவும் வினைத் தொகை -​ மிகவில்லை.
வேய்ங்குழல் என்று வல்லொற்று மெல்லொற்றாகத் திரிதலும் உண்டு ​(வேய்-​ மூங்கில்)

"இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்",என்பது பொதுவிதி.
உயிரோசை இறுதியில் சொற்கள் முன் வரும்.​ க,ச,த,ப க்கள் மிகும்.
(எ-டு)
1. வரச் சொன்னான் ​(ர் + அ = ர)
2. பலாப் பழம் -​ ​(ல் + ஆ = லா)
3. கரிக்கட்டை -​ ​(ர் + இ = ரி)

எதிர்மறைப் பெயரெச்சத்தில் ​(வலி)​ மிகாது.
(எ-டு)
வாடாத பூ ​(த் + அ = த)
அண்ணாதுரையா?​ அண்ணாத்துரையா?
துரை என்​பது ​(Dur​ai)​ வட​சொல். மெல்லொலி கொண்டது. ஆதலின் "த்" மிகாது.
ஆனால் துரை ​(Thurai) என்று அழுத்தி ஒலித்தால் தமிழ் வல்லெழுத்தாகி அண்ணாத்துரை என்று வரும்.
ஒலிக்கும் முறையை ஒட்டி "வலி" மிகுதலும் மிகாமையும் ஏற்படுகின்றன.

தமிழ் வளரும்....

நன்றி:- தினமணி கதிர்

இளசு
14-04-2011, 07:49 PM
பாரதி


வாழ்த்துகள், பாராட்டுகள் சரியா?

பாரதி
15-04-2011, 04:46 PM
பாரதி

வாழ்த்துகள், பாராட்டுகள் சரியா?

அண்ணா..
மீண்டும் குழப்பம் ஏற்படுத்துவதாக கருத வேண்டாம்.

கவிக்கோவின் கருத்துப்படி சொற்களைப் பிரித்து பொருள் கொள்ளும் வகையில் பார்த்தால், வாழ்த்துகள், பாராட்டுகள் என்பதே சரி என தோன்றுகிறது.

ஆனால் ....
தமிழாசிரியர் சாம்பவி அவர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தின் படி பார்த்தால், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என்பதே சரி!! (ஒருமைக்கு வாழ்த்து, பாராட்டு என்பதே முறை என்பதையும் மறக்க வேண்டாம்.)


வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து :smilie_abcfra:.. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.

கீழ்க்கண்ட திரியை மீண்டும் ஒரு முறை பாருங்களேன் அண்ணா.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8640&page=2

பாரதி
15-04-2011, 04:53 PM
மொழிப்பயிற்சி - 9:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


ஞானசம்பந்தர் -​ ஞானச் செல்வர்
இரண்டிலும் ஞான என்பது நிலைமொழி.
ஒன்றில் ஒற்று மிகாமலும்,​​ ஒன்றில் மிகுந்தும் வந்துள்ளதேன்?

சம்பந்தர் ​(சம்பந்தம்)​ வடசொல். 'sa' என்ற ஒலியை உடையது.​ செல்வர் என்பது தமிழ்ச்சொல். செ ​(che)​​ என அழுத்தி ஒலிக்கப்படுதலின் வல்லெழுத்து மிகுந்தது.
ஞானச்சம்பந்தர் என்பதும் ஞான செல்வர் என்பதும் பிழையாகும்.
ஞானபீடம் -​ இலக்கியப் பீடம்
ஞான பீட விருது என்கிறோம்.​ இங்கே ஒற்று மிகவில்லை.
இலக்கியப் பீடம் இதழ் என்கிறோம்.​ இங்கே ஒற்று மிகுந்துள்ளது.​ ஏன்?
ஞானம்,​​ பீடம் இரண்டும் வடசொற்கள்.
B - பீடம் என்பது இருக்கை.​ "இலக்கியம்" தமிழ்.​ B - பீடத்தையும்,​​ P - பீடம் எனத் தமிழ் ஒலிப்படுத்தி உரைத்தலால் இலக்கியப்பீடம் என்று ஒற்று மிக்கது. மற்றும் பீடு + அம் என்றும் பிரித்துப் பெருமை,​​ அழகு எனப் பொருள் காணலும் ஆகும்.​ ​(அம்-விகுதி)

ஒருகால் -​ ஒருக்கால்
"உன்னால் ஒருக்காலும் இதைச் செய்ய முடியாது" என்று பேசுகிறோம்.
ஒரு பொழுதும்,​​ எந்தச் சமயத்திலும் முடியாது என்பதே இதன்பொருள்.
ஆனால் இச்சொல் ஒருகாலும் என்றிருப்பதே முறை,​​ நெறி.​ இங்கே வல்லொற்று மிகாது.

ஒரு பொழுதும் என்பதை,​​ ஒருப்பொழுதும் என்று சொல்லுவோமா?
இலக்கியச் சான்று:​-
"ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்".
எதிர்க்கட்சி -​ எதிர்கட்சி
எதிரில் உள்ள கட்சி அல்லது எதிரியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி.

ஒரு விளையாட்டில் இரண்டு கட்சிகள் மோதும்போது எதிர் எதிரே இருந்து மோதுவதால் எதிர்க்கட்சி எனல் சரியே.
இவ்வாறே சட்டமன்றத்திலும் ஆளும் கட்சிக்கு ​ வரிசைக்கு எதிரே இருப்பது எதிர்க்கட்சி எனல் பொருத்தமே.
ஆனாலும் எதிர்க்கட்சி என்ன செய்கிறது?
நேற்று எதிர்த்தது,​​ இன்று எதிர்க்கிறது,​​ நாளையும் எதிர்க்கும்.
எதிர்த்த,​​ எதிர்க்கிற,​​ எதிர்க்கும் கட்சியை எதிர்கட்சி என வினைத்தொகையாகச் சொல்லுதலும் சரியாகுமன்றோ?

ஒற்று இரட்டித்தல்:​​-
ஒற்று​மிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.
சோறு + பானை = சோறுப்பானை என்று எழுதுவதில்லை.​ சோற்றுப்பானை என்கிறோம்.
ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம்.
சோறு,​​ ஆறு என்பவற்றுள் ​(ற் + உ= று)​ உள்ள "ற்" மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம்.
சோ+ ற் + ற் + உ = (சோற்று) ஒற்று இரட்டித்த பின் வலி ​(வல்லொற்று)​ மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது.
அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும். அடையாறில் என்று எழுதுவது பிழை.

ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம்.​ ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே.
மாடு + சாணம் = மாட்டுச்சாணம் என்கிறோம்.
வீடு + சோறு = வீட்டுச் சோறு என்கிறோம்.
இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.

தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை. தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது,​​ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது? தமிழ்நாடு அரசு ஏன் வந்தது? தமிழ்நாட்டரசு என்று மாற்றுக.

கிணறு + தவளை = கிணற்றுத் தவளை.
காடு + பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு + அரசு = நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?
கட்டுப்பாடு + அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க.
மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க.
நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.
விளையாட்டு செய்திகள் என்று தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். விளையாட்டுச் செய்திகள் என்று வல்லொற்று மிகுதல் வேண்டும்.
விளையாட்டைப் பற்றிய செய்திகள் என உருபும் பயனும் உடன் தொக்க தொகை இதுவாம். விளையாட்டுச் செய்திகளை விளையாட்டாய் எண்ணாதீர் ​(இக்குறிப்பில் ஒற்று இரட்டித்தல் இல்லை.​ வல்லொற்று மிகுதல் மட்டுமே)

தமிழ் வளரும்....


நன்றி:- தினமணி கதிர்

பாரதி
16-04-2011, 02:04 PM
மொழிப்பயிற்சி - 10:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


சொற்றொடர் அமைப்பு:-​​
பத்தி​ரிகையாளரும்,​​ வானொலி,​​ தொலைக்காட்சி ஊடகத்தாரும் பள்ளி ஆசிரியர்களும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று சொற்றொடர் ​(வாக்கியம்)​ அமைப்பு. முக்கியமாக ஒருமை, பன்மை மயக்கம் சொற்றொடர்களில் இருத்தல் ஆகாது. ஆங்கிலத்தில் ஒருமை, பன்மை மயங்க எழுதினால் ஏளனம் செய்கிறோம். இடித்துரைக்கிறோம். தமிழில் மிகத் தாராளமாக இப்பிழையைப் பலரும் செய்கிறார்கள்.

1.​ பிரேசில் நாட்டில் பெரும்பாலான இடங்கள்​ வெள்​ளத்​தால் சூழப்பட்டுள்ளது. ​(ஒரு செய்​தித்​தா​ளில்)
2.பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலைகள்​ தெரி​விக்​கப்​பட்டது.
இடங்​கள் என்​னும் பன்​மைச் சொல்​லுக்​கேற்​பச் சூழப்​பட்​டுள்​ளன என்​றும், கவ​லை​கள் என்​னும் சொல்​லுக்​கேற்ப தெரிவிக்கப்பட்டன என்றும் முடிக்க வேண்டும் என்று அறியாதவர்களா?​ அல்லது அக்கறையின்மையா?

1.ஒவ்வொரு சிலையும் வண்ண வண்ணமாக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.​ ​(ஒரு தொலைக்காட்சி செய்தி)
2.இந்த மன்றத்தின் செயற்பாடு ஒவ்வொன்றும் பாராட்டிற்குரியன ​(ஒரு சிற்றிதழில்)
ஒவ்வொரு சிலையும் எனும் ஒருமைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், செயற்பாடு ஒவ்வொன்றும் எனும் ஒருமைக்கேற்ப பாராட்டிற்குரியது என்று முடித்தல் வேண்டும்.

இந்த நுட்பமெல்லாம் நம்மவர் சிந்திப்பதில்லை.
'அர்' எனும் பலர்பால் விகுதி கொண்டு முடிய வேண்டிய வாக்கியங்களைச் செய்தி படிப்பவர் சிலர் முழுமையாகப் படிக்காமல் அஃறிணைப் பன்மை கொண்டு முடிக்கிறார்கள். இது ஒரு பாணி போலும்.

1.விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தன.​ ​(ர்)
2.​ பலநாட்டுப் பிரதிநிதிகளும் வந்திருந்தன.​ ​(ர்)
முடி​வில் உள்ள 'ர்' ஒலியை விழுங்கிவிடுகிறார்கள். கேட்கும் நம் செவியில் அச் செய்தி தேளாய்க் கொட்டுகிறது.

ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ளார்:​- ''ஓய்வாக இருக்க முடியாத நிலையில் ஏதாவது​ வேலைகளைச் செய்து கொண்டிருப்பீர்கள்''.
இந்த வாக்கியத்தில் ஏதாவது என்பது ஒருமை,​​ வேலைகள் என்பது பன்மை. ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருப்பீர்கள் என்று எழுத வேண்டும். சொற்றொடர் அமைப்பில் கருத்துப் பிறழ உணருமாறு நேர்ந்துவிடக் கூடாது.

ஒரு நூல் மதிப்புரையில் ஓர் எழுத்தாளர் எழுதியுள்ளார்:-
''மனுதர்ம சாஸ்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டுள்ளவர்க்கும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும்''.

"மனுதர்ம சாத்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டவர்கள் -​ அந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும்'' என்று இருந்தால் இச்சொற்றொடர் சரியானதாகும். மதிப்புரை செய்துள்ளவரின் கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும். எழுதப்பட்டுள்ளபடி 'தவறான எண்ணம் கொண்டவர்க்கும் இந்நூல் பயன்படும்' என்பது தவறான கருத்தன்றோ?

ஒரு விழா பற்றி அறிவிப்பாளர் சொல்லுகிறார்:-
''இன்றைய விழா சரியாக மாலை ஆறு மணியளவில்​ நடை​பெ​றும்.'' இத்​தொ​ட​ரில் பிழையுள்ளதா?
உள்ளது.
எப்படி?
சரியாக என்று சொன்னால் ஆறு மணி அளவில் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? சரியாக ஆறு மணிக்கு என்றோ ஆறு மணியளவில் என்றோ ​ சொல்லுதலே சரியாகும். சரியாக என்று சொல்லிவிட்டு ஏறத்தாழ ​(அளவில்)​ என்பது முரணன்றோ?

ஒரு கூட்டத்தில் பேச்சாளர் பேச்சைத் தொடங்குகிறார்:-
''இங்கு கூடியுள்ள அனைவர்க்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்''. அதென்ன?​ வணக்கத்தில் முதற்கண் வணக்கம்,​​ இடைக்கண் வணக்கம்,​​ இறுதிக் கண் வணக்கம் என்றெல்லாம் உண்டா? என்னுடைய வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன் என்றால் வாக்கியம் சரியான பொருளில் அமையும். வணக்கத்தை ஏன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்? அனைவர்க்கும் வணக்கம் என்றோ,​​ அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் என்றோ தொடங்கினால் அழகாக இருக்குமே.

தமிழ் வளரும்....

நன்றி:- தினமணி கதிர்

இளசு
16-04-2011, 10:53 PM
வாங்களேன் நேரம் பா(ர்)த்து
வந்து எனைக் காப்பாத்து...


பன்மையில் விளித்து
ஒருமையில் முடித்த
இப்பாடல் வரி ஓர் எடுத்துக்காட்டு..


இசையில் சுரபேதம் எப்படி சோற்றுக்கல் போல் இடறுமோ
அப்படியே இச்சொற்றொடர் பிழைகளும்..

தவிர்க்க உதவும் இப்பாகமும் அருமை..


தொடர்க பாரதி..

பாரதி
17-04-2011, 12:33 PM
பதிவிற்கேற்றது போல பாடல்கள் எப்படியண்ணா உங்களுக்கு கிடைக்கின்றன..! “கள்”ளில் உண்டான மயக்கம் தீர்ந்ததா அண்ணா..?:aetsch013:

===============================================================


மொழிப் பயிற்சி - 11:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


பேசும்போதும், எழுதும்போதும் சொற்றொடர்கள் அமைப்பதில் "அத்து" எனும் சாரியைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. ஒரு திருமடத்தின் தலைவரைக் (அதிபர்) காண புலவர் பலர் வந்தனர். இறுதியாக வந்தவர் சோழநாட்டின் கடைமடைப் பகுதியைச் சார்ந்தவர். மடாதிபதி சற்றே கேலியாக அந்தப் புலவரை நோக்கி, "வாரும் கடை மடையரே'' என்றார்.
புலவர் என்ன ஒன்றும் அறியாதவரா? "வந்தோம் மடத் தலைவரே'' என்று திருப்பியடித்தார்.

இப்படி இருபொருள் தோன்றத் தமிழில் நிரம்பச் சொல்லலாம்.
மடத்தலைவர் என்று சொல்லாமல், மடத்துத் தலைவரே என்று சொல்லியிருந்தால் பொருள் நேராக அமையும். இதற்கு "அத்து" என்ற சாரியைப் பயன்படுகிறது. சார்ந்து வருவது சாரியை. இதற்குத் தனியே பொருள் இல்லை.

மனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ).
இச்சொல்லுடன் "இல்" உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன்?
மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.
குளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது.
பணத்தில் பாதி என்று சொல்லுகிறோம்.
இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது.
ஆக, தமிழில் "அம்" என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.
இன்னும் வேண்டுமா?

- குலம் - குலத்தில்
- நலம் - நலத்தில்
- இனம் - இனத்தில்
- வலம் - வலத்தில்

இப்படி எல்லாவற்றிலும் "இல்" உருபு சேர்த்தால் "அத்து" சேர்வதைப் பார்த்தோம். அத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா?
இல்லை.
"உடன்" எனும் உருபு சேர்த்துப் பாருங்கள்.
- நலம் + உடன் = நலத்துடன்
- சினம் +உடன் = சினத்துடன்

இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.

சொற்றொடர் முடித்தல் வாக்கியங்களை முடிக்கும்போது ஒருமை, பன்மை மாறாதிருத்தல் வேண்டும் என்பதோடு ஐம்பால் வினைமுடிவுகள் பொருத்தமாக அமைத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக:-
- அவன் நல்லவன் அல்லன் (ஆண்பால்)
- அவள் நல்லவள் அல்லள் (பெண்பால்)
- அவர் நல்லவர் அல்லர் (பலர் பால்)
- அது நல்லது அன்று (ஒன்றன் பால்)
- அவை நல்லவை அல்ல (பலவின் பால்)

காலப்போக்கில் இந்த இலக்கணத்தைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. அல்லது மறந்து போயினர் என்று சொல்லலாம்.
எல்லா பால், இடங்களிலும் நாம் இப்போது பயன்படுத்தும் ஒரே சொல் "அல்ல" என்பது மட்டுமே.
- நானல்ல
- அவரல்ல
- அதுவல்ல
- அவையல்ல
என்றுதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.
இல்லை, அல்ல இன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

புத்தகம் மேசை மீது இல்லை - இது சரியான வாக்கியம்.
"நான் அப்படிப்பட்ட மனிதன் இல்லை" - இது பிழையுடைய வாக்கியம்.
இது "நான் அப்படிப்பட்ட மனிதன் அல்லன்" என்று இருந்தால் சரியாகும்.
- மரத்தில் காய்கள் இல்லை
- வயிற்றுக்குச் சோறு இல்லை
என்பன போன்று இன்மைப் பொருளை உணர்த்தவே இல்லை எனும் சொல் பயன்பட வேண்டும்.

"இன்று பள்ளி இல்லை" என்பது பிழை. "இன்று பள்ளிக்கு விடுமுறை" என்பதே சரியானது.
"அல்லன்", "அல்லள்" என்பனபோல் "அல்லை" எனும் சொல்லும் உயர்திணைப் பயன்பாட்டில் நம் இலக்கியங்களில் காண முடியும்.
மந்தரையிடம் கைகேயி உரைக்கின்றாள்:-
"எனக்கு நல்லையும் அல்லை என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை தருமமே நோக்கில்,
உனக்கு நல்லையும் அல்லை.''
என்று முன்னிலை இடத்தில் வந்து நல்லவள் ஆகமாட்டாய் எனப் பொருள் தந்தது.

தமிழ் வளரும்.....

நன்றி:- தினமணி கதிர்

இளசு
17-04-2011, 09:51 PM
[QUOTE=பாரதி;522952]பதிவிற்கேற்றது போல பாடல்கள் எப்படியண்ணா உங்களுக்கு கிடைக்கின்றன..!

“கள்”ளில் உண்டான மயக்கம் தீர்ந்ததா அண்ணா..?:aetsch013:

===============================================================


நான் அவன் '' இல்லை''!!!!!!:icon_b:

பாரதி
18-04-2011, 06:21 AM
மொழிப் பயிற்சி - 12:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


குறைந்த படிப்புடைய வாசகர்களுக்கு மட்டுமல்லாது, நிரம்பப் படித்தவர்களும் ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் அறிய வேண்டும் என்றே சில நுட்பமான செய்திகளையும் இப்பகுதியில் எழுதி வருகிறோம். நம் பேச்சு வழக்கிலுள்ள சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

"அவர்தான் இப்படிச் சொன்னார்."
இவ்வாக்கியம்,"அவர்தாம் இப்படிச் சொன்னார்" என்றிருத்தல் வேண்டும்.
அவன்தான், அவர்தாம், அதுதான், அவைதாம் என்பனவற்றை நோக்குக.

"அதுகளுக்கு என்ன தெரியும்?" "இது பற்றியெல்லாம் அதுகளுக்கு என்ன தெரியும்?" என்று இயல்பாகப் பேசுகிறோம். அவர்களுக்கு என்ன தெரியும் என்று சரியாகச் சொல்ல வேண்டும்.

உயர்திணையை அஃறிணையாக்கிப் பின் பன்மையை ஒருமையாக்கும் இரண்டு பிழைகளைத் தவிர்க்க வேண்டும். இந்தச் செயலுக்கு "நான் பொறுப்பல்ல" என்று முடித்தல் தவறு. "நான் பொறுப்பல்லேன்" என்று முடித்தல் வேண்டும். பன்மையில் சொன்னால் யாம் (நாம்) "பொறுப்பல்லோம்" அல்லது "பொறுப்பல்லேம்" என முடித்தல் வேண்டும்.

"அவர் தன் நாட்டிற்காக மிக அரும்பாடுபட்டார்". இந்த வாக்கியத்தில் பிழையுண்டா?
உண்டு.
"அவர் தம் நாட்டிற்காக" என்று திருத்துதல் வேண்டும்.
- அவன், அவள், அது வரும்போது "தன்" என்றும்,
- அவர் அவை வரும்போது "தம்" என்றும் இணைப்புச் செய்க.

"திருவள்ளுவர் தன் திருக்குறளில் சொல்லாத அறம் இல்லை". இவ்வாக்கியத்தில், "திருவள்ளுவர் தம் திருக்குறளில்" என்று ஒரு சிறிய திருத்தம் செய்தால் பிழையற்றதாகும்.

கவிதாயினி - சரிதானா?
பேராசிரியர், தலைமையாசிரியர் என்று ஆண்களைக் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை என்று பெண்களைக் குறிப்பது ஏன்?
பெண்ணுரிமை பேசும் மகளிரே கூட இது தம்மை குறைவு செய்கிறது என உணர்வது இல்லை. பெண்ணைப் பேராசிரியை, தலைமையாசிரியை எனக் குறிப்பிட்டால், ஆணைப் பேராசிரியன், தலைமையாசிரியன் என்று அன் விகுதி போட்டுச் சொல்ல வேண்டும்.
கவிதாயினி என்றும் பெண்ணுக்கு அடைமொழி தருகிறார்கள்.
கவிஞர் என்பது ஆண், பெண் இருவர்க்கும் பொதுதானே?
(அர்-மரியாதைப் பன்மை)
கவி,தா, இனி - இனிமேலாவது கவி தருக என்று பொருளாகாதோ?

மருத்துவர், பொறியாளர், முதல்வர், எழுத்தாளர் என்றெல்லாம் ஆண், பெண் இருபாலரையும் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை, கவிதாயினி என்று சிலவற்றைப் பெண்களுக்குரியதாகப் பயன்படுத்துதல் ஏனோ? ஆண் ஆசிரியர் ,பெண் ஆசிரியர் என்று வேறுபடுத்தி அறிவதற்காக இப்படிக் குறிக்கிறோம் என்பார் சிலர்.

அந்த அடைமொழிக்குப் பின் வருகின்ற பெயரை வைத்து, அவர் ஆண் அல்லது பெண் என்று அறியமுடியுமே!

"உம்" என்னும் இடைச்சொல்பெயர், வினை, இடை, உரி எனும் நான்கு வகைச் சொற்களுள் பெயரும் ஆகாது, வினையும் ஆகாது, குணம் சுட்டும் உரிச்சொல்லும் ஆகாது, பெயர்க்கும், வினைக்கும் இடையே நின்று செயற்படுபவை இடைச் சொற்கள்.

உவமை உருபுகள் (போல, போன்ற, ஒத்த, நிகர்த்த) அசைநிலைகள் ஏகாரம், ஓகாரம் போன்றவை.
உம் எனும் இணைப்புச் சொல். இவையெல்லாம் இடைச்சொற்கள் எனப்படும்.

"முத்தும், மணியும், பவளமும் நிறைந்திருந்தன".
இவ்வாக்கியத்தில், வரும் "உம்" என்பது இடைச்சொல்.

- கபிலரும், பரணரும் வந்தனர்.
- பூரியும் கிழங்கும், பொங்கலும் வடையும்

இவற்றில் வருகின்ற "உம்" இணைப்பை உண்டாக்கும் ஓர் இடைச்சொல். ஆனால் இந்நாளில், "கடிதம் போடவும், வந்து செல்லவும், ஐயாவைப் பார்க்கவும்" என்று பலரும் சொல்லி வருகிறோம். ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு சொல்லை கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப்
பயன்படுத்துகிறோம். இது பிழையன்றோ?

ஆங்கிலமொழியின் தாக்கம் காரணமாக, "உம்" பயன்படுத்த வேண்டிய இடத்தில் புதிதாக "மற்றும்" என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
தமிழில்,"மற்று" எனும் அசைச் சொல் உண்டு.
மற்றொன்று - வேறொன்று என்ற பொருள் உண்டு.
ஆனால், "இந்நாளில் பேச்சு, பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும்" என்று ஆங்கிலத்தில், சிலவற்றைச் சொல்லி இறுதிக்கு முன்னதாக "and" சேர்ப்பது போல் "மற்றும்" சேர்த்து வருகிறோம். இது சரிதானா?

"சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடைபெறும்"
இந்த மற்றும் தேவைதானா?

அருவி - நீர்வீழ்ச்சி எல்லாப் பொருள்களுக்கும் தமிழில் சொல் உண்டு.
நமக்குப் புதிதாக அறிமுகமான வந்தேறிய பொருள் என்றால் அதற்கும் ஓர் ஆக்கச் சொல்லைக் கண்டறிவது தமிழில் எளிதே. கடல், மலை, அருவி எல்லாம் தமிழில் என்றென்றும் இருப்பவை. மலையிலிருந்து நீர் கொட்டுவதை "அருவி" என்று தமிழன் குறித்தான். நீர் உயரத்திலிருந்து ...கீழே விழுவதால் "வாட்டர் ஃபால்ஸ்" என்று ஆங்கிலத்தில் குறித்தார்கள். இதை மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்று சொல்வது சரியா? அருவி இருக்க நீர்வீழ்ச்சி எதற்கு? தாய்ப்பால் இருக்கப் புட்டிப் பால் கொடுப்பதேன்?

தமிழ் வளரும்.....

நன்றி:- தினமணி கதிர்

Hega
18-04-2011, 10:43 AM
அருமையான தொடர்.

பகிர்வுக்காக நன்றி.

இளசு
19-04-2011, 04:41 AM
கவிதாயினி வேண்டாம். கவிஞர் போதும். சரி!

கவிஞனுக்கு ஈடான பெண்பாற் சொல்? கவிஞை?

ஆசிரியர் , ஆசிரியை - பால் பேதம் சொல்லில் அறியத்தரக்கூடாது என்பது இக்கால நோக்கமாகி வருகிறது.

ஆங்கில ஏடுகளில் ஆக்டர் என்றே நடிகைகளையும் குறிப்பிடுகிறார்கள். நடிகர் தமன்னாவின் இரசிகன் ஆதவா - இப்படித்தான் எழுதவேண்டும்?

ஆங்கிலத்தில் Ms என எழுதி மணமான பெண்ணா என்றக் குறியீட்டை மறைக்கும்படி எழுதுகிறார்கள். அதுபோல் தமிழிலும்?


சிந்திக்க வைக்கும் தொடர். தொடர்க பாரதி.

sarcharan
20-04-2011, 09:55 AM
கவிதாயினி வேண்டாம். கவிஞர் போதும். சரி!

நளாயினி புருசனை எப்படி கூப்பிட? சந்திராயன் மாதிரி ஆகிடுமே...



ஆங்கில ஏடுகளில் ஆக்டர் என்றே நடிகைகளையும் குறிப்பிடுகிறார்கள். நடிகர் தமன்னாவின் இரசிகன் ஆதவா - இப்படித்தான் எழுதவேண்டும்?


நடிகர் தமன்னாவா? என்ன கொடுமை சார் இது?

ஆண்களோட ஆடைகளைத்தான் போட்டுக்கறீங்கன்னா, பட்டத்தையுமா?



ஆங்கிலத்தில் Ms என எழுதி மணமான பெண்ணா என்றக் குறியீட்டை மறைக்கும்படி எழுதுகிறார்கள். அதுபோல் தமிழிலும்?


சிந்திக்க வைக்கும் தொடர். தொடர்க பாரதி.

ஆரு(r) இல்லையேன்னு ஆராவது கீக முடியுமா? :frown:
ஆறாவ்து படிக்குற பையன் கூட கேக்க முடியாது.:cool:

பாரதி
20-04-2011, 04:40 PM
அருமையான தொடர். பகிர்வுக்காக நன்றி.
நல்லது நண்பரே.


கவிதாயினி வேண்டாம். கவிஞர் போதும். சரி!

கவிஞனுக்கு ஈடான பெண்பாற் சொல்? கவிஞை?

ஆசிரியர் , ஆசிரியை - பால் பேதம் சொல்லில் அறியத்தரக்கூடாது என்பது இக்கால நோக்கமாகி வருகிறது.

ஆங்கில ஏடுகளில் ஆக்டர் என்றே நடிகைகளையும் குறிப்பிடுகிறார்கள். நடிகர் தமன்னாவின் இரசிகன் ஆதவா - இப்படித்தான் எழுதவேண்டும்?

ஆங்கிலத்தில் Ms என எழுதி மணமான பெண்ணா என்றக் குறியீட்டை மறைக்கும்படி எழுதுகிறார்கள். அதுபோல் தமிழிலும்?

சிந்திக்க வைக்கும் தொடர். தொடர்க பாரதி.
ஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி அண்ணா.

கவிக்கோவின் எல்லாக்கருத்துக்களுக்கும் நாம் உடன்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது கருத்துக்களை எதிர்க்கும் ஆக்கப்பூர்வ கருத்துக்களையும் படிக்கத்தான் செய்கிறேன்.

இப்போது இப்படியெல்லாம் பெயர் வைப்பார்கள் என அக்காலத்தில் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.


நளாயினி புருசனை எப்படி கூப்பிட? சந்திராயன் மாதிரி ஆகிடுமே...
நடிகர் தமன்னாவா? என்ன கொடுமை சார் இது?
ஆண்களோட ஆடைகளைத்தான் போட்டுக்கறீங்கன்னா, பட்டத்தையுமா?
ஆரு(r) இல்லையேன்னு ஆராவது கீக முடியுமா? :frown:
ஆறாவ்து படிக்குற பையன் கூட கேக்க முடியாது.:cool:
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

பாரதி
20-04-2011, 04:45 PM
மொழிப் பயிற்சி - 13:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


ஞாயிறுதோறும்:-
ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கி​ழமையும் விடுமுறை நாளாகும் என்பதை 'ஞாயிறுதோறும் விடுமுறை' என்று அறிவிப்பார்கள். இது சரிதான். ஆனால் சில இடங்களில் 'ஒவ்வொரு ஞாயிறு தோறும் விடுமுறை' என்று எழுதியுள்ளார்களே! 'தோறும்' எனும் சொல் ஒவ்வொரு எனும் பொருளையே தருவதால்,​​ இப்படி இரு சொற்களை ஒரு பொருள் குறிக்கப் பயன்படுத்துதல் வேண்டா.

இதுபோலவே 'பணமாகவோ அல்லது காசோலையாகவோ' தரலாம் என்று சில அறிவிப்புகளைக் காண நேர்கிறது. 'ஓ' என்பது இங்கு அல்லது எனும் பொருளில் வரும் போது,​​ இரண்டையும் ஏன் சேர்க்க வேண்டும்? 'பணம் அல்லது காசோலை' தரலாம்,​​ பணமாகவோ காசோலையாக என்றோ ஒன்றை மட்டும் குறித்தல் நன்று.

நினைவுகூறுதல்:​​-
'நம் தலை​வ​ருடைய பணிகளைப் -​ புகழை நாம் என்றென்றும் நினைவு கூறுதல் வேண்டும்' என்று எழுதுகிறார்கள். கூறுதல் என்றால் சொல்லுதல் எனும் பொருள்தரும் என்றறிவோம்.
கூர்தல் என்றால் மிகுத்தல்.
அன்பு கூர்தல் என்றால் அன்பு மிகுத்து ​(மிக்க அன்பு கொண்டு)​ என்று பொருள்.
ஒருவர் புகழை,​​ அவர்தம் பணிகளை நினைவு கூர்தல் என்றால்,​​ மிகவும் நினைத்தல் ​(நிரம்ப நினைத்தல்)​ என்று பொருள்.
ஆதலின் தலைவருடைய புகழை நாம் என்றும் நினைவு கூர்தல் வேண்டும் என்றெழுதுவதே சரியாகும். முன்னரே இதுபோலவே,​​ உளமார,​​ அளப்பரிய என்பவற்றை உளமாற,​​ அளப்பறிய என்றெழுதுவது பிழை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இந்த 'ர'கர 'ற'கரம் பற்றி என்னும்போது,​​ பல ஆண்டுகள் முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பில் இரண்டு திரைப்படங்களின் பெயர்கள் தவறாக எழுதிக்காட்டப்பட்டன.

1.​ பெருமைக்குறியவள் (பெருமைக்கு உரியவளை) -​ பெருமைக் குறியவள் என்றெழுதி மிகத் தவறான ஒரு பொருள்தோன்றச் செய்துவிட்டார்கள்.

2.கொம்பேரி மூக்கன் -​ கொம்பில் ஏறுகின்ற ஒருவகைப் பாம்பின் பெயரை கொம்பேறி மூக்கன் என்றெழுதிடாமல்,​​ கொம்பேரி மூக்கன் என்றெழுதிக் காட்டினார்கள்.
ஏரி ​(நீர்நிலை)​ இங்கு எப்படி வந்தது?
ஏன் வந்தது?
எழுதுபவர் மொழியறிவு இல்லாதவர் என்றால்,​​ எழுதிய பின் அறிந்த ஒருவர் மேற்பார்வையிட்டுத் திருத்தியிருக்க வேண்டாவா?

இப்போதும் ஏடுகளில் பார்க்கிறோம்.
'வரட்சி நிவாரண ​ நிதி' என்று வருகிறது.
இது வறட்சி நிவாரண நிதி என்றிருக்க வேண்டும்.
வறள்,​​ வறட்சி என்பன சரியான சொற்கள்.

ஒருவர் மீது கொண்ட அல்லது ஒரு செயலில் கொண்ட முழுமையான ஈடுபாட்டை அக்கறை எனல் வேண்டும். இப்போதும் சிலர் இதனை "அக்கரை" என்றெழுதுகிறார்கள். அந்தக் கரை ​(ஆற்றங்கரை)​ அன்று இது. மொழி மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.

கண்டவை -​ கேட்டவை:-
திருக்கோ​வில்​க​ளில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி சன்னதி என்று முன்னாட்களில் எழுதி வந்தனர். பின்னர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி சன்னதி என்று எழுதினார்கள். "ஸ்ரீ" யை விட்டு "அருள்மிகு" எனும் பொருள் பொதிந்த நற்றமிழ் அடைமொழியைச் சேர்த்தது நன்று. ஆனால், இந்நாளில் சில திருக்கோவில்களில் அருள்மிகு என்பதைச் சுருக்கி "அ/மி" மருந்தீசுவரர் என்பது போல எழுதியிருப்பதைப் பல இடங்களில் ​ காண நேர்கிறது. "மே/பா" ​(c/o)போடுவது போல தெய்வப் பெயர்களை இப்படி இழிவு செய்யலாமா?
அடுத்தது "சன்னதி" என்ற சொல். இது "சந்நதி" என்று இருத்தல் வேண்டும். சந்நிதானம் என்னும் போது இவ்வாறே கொள்க.
சில அகராதிகளில் "சன்னிதி" என்றும் காணப்படுகிறது. எப்படியாயினும் சன்னதி என்பது பிழையே.

அருள்மிகு "வினா"யகர் திருக்கோவில் எனப் பல இடங்களில் எழுதியிருப்பதைக் காண்கிறோம்.
வி + நாயகர் = விநாயகர் எனில் மேலான தலைவர்.
பூதி -​ சாம்பல்,​​ விபூதி -​ மேலான சாம்பல் ​(திருநீறு)​ தமக்கு மேல் ஒரு தலைவரற்றவர் விநாயகர். மூல முதல் என்று போற்றப்படுபவர். அவரின் பெயரை வினாவுக்கு உரியவராகச் சிதைக்கலாமா?​ திருத்துவீர்களா?

இந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டது என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திரையின் அடிப்பாகத்தில் எழுத்தில் காட்டுகிறார்கள்.
இது சித்திரிக்கப்பட்டது என்றிருத்தல் வேண்டும். சித்திரம் என்பது சொல். இதிலிருந்து வருவதே சித்திரிக்கப்பட்டது எனும் தொடர்.
சித்திரத்தைச் சித்தரம் ஆக்கலாமா?

ஓர் இசையரங்கில் ஒருவர் பாடுகின்றார். விநாயகர் வாழ்த்து அது.
நந்தி மகன்தனை,​​ ஞானக்கொழுந்தனை என்று இசைக்கிறார்.
ஞானத்தின் கொழுந்தாக இருப்பவனை-​ ஞானக் கொழுந்தினை அந்த இசைஞர் கொழுந்தன் ஆக்கிவிட்டார். கணவன் உடன் பிறந்தான் கொழுந்தன் எனப்படுவான். இப்படித் தமிழைச் சிதைக்கலாமா?
எண்ணுங்கள்.​

தமிழ் வளரும்........

நன்றி:- தினமணி கதிர்

selvaaa
20-04-2011, 05:01 PM
அருமையான தொடர்..... இது போன்ற தொடர்களை படித்து நானும் கொஞ்சம் தமிழை ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் ஆசை!

அது இங்கு கிடைப்பதில் மன நிறைவு.

நன்றி தொடர் முகப்பாளரே.

இளசு
20-04-2011, 07:15 PM
இந்த பாகம் அருமை. சந்நிதி, ஞானக்கொழுந்தினை என நல்ல பாடங்கள்.

கலைஞர் தொலைக்காட்சியில் அன்னியச் செலாவணி எனக் காட்டுகிறார்கள்.
அந்நியனா/ அன்னியனா?


தொடர்க பாரதி..


கவிக்கோவுடன் முரண்பட அப்படி எழுதினேன் அல்லன்.
சிந்தனைத் தூண்டலே அவர் எழுத்துதானே..



----------------------------

இந்தப் பாகத்துக்கான திரைப்பாடல்:


அக்கரையில் அவரிருக்க
இக்கரையில் நானிருக்க
அக்கறையில்லாததேன் கடலலையே..


சுசீலா பாடலின் படப்பெயர் சொன்னால் 100 இ-பணம் பரிசு...!

பாரதி
21-04-2011, 06:07 PM
ஊக்கத்திற்கு நன்றி செல்வா.

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் அண்ணா!
பாடல் அடிக்கடி கேட்டதைப் போன்று தோன்றுகிறது. தேடிப்பார்க்கிறேன் அண்ணா.

பாரதி
21-04-2011, 06:13 PM
மொழிப் பயிற்சி - 14:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


மரபுவழிப்பட்ட செவிகளில் உறுத்தலாக ஏதாவது ஒலி கேட்டால் மனம் வருந்துகிறது. கூடியிருந்தனர் என்பதில் "அர்" ஒலியை முழுமையாக ஒலிக்காமல் "ன" உடன் முடிப்பவர் பற்றி முன்னர் எழுதியுள்ளோம். வேறு சிலர் அரை மாத்திரையில் ஒலிக்க வேண்டிய குற்றியலுகர ஒலியை முழு மாத்திரையளவு ஒலித்து குற்றியலுகரம் எனும் இலக்கணத்திற்குப் பொருள் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் (த் + உ) உகரம் முழுமையாக ஒலிக்காது. ஆனால் சிலர் இந்த உகரத்தை அழுத்தி தூஉ என அளபெடையிட்டு ஒலிக்கிறார்களே (செய்திகளைப் படிப்பவர்கள் சிந்திப்பார்களா?)

பேச்சாளர் சிலர் அறிஞ்சர், கலைஞ்சர் என்றோ, அறிநர், கலைநர் என்றோ உச்சரித்துப் பேசுகிறார்கள். காதில் வந்து தேள் கொட்டுவதுபோல் இருக்கும் அந்த நேரங்களில். சற்றே முயற்சி செய்தால் சரியாக உச்சரிக்க முடியும்.
முயற்சி செய்வார்களா?


- (P) பம்பரத்தை (B) பம்பரம் என்றும்
- (k) குடிசையை (g) குடிசை என்றும்
- (k) கும்பல் (g) கும்பல் என்றும்
- (Poo) பூம்புகாரை (boo) பூம்புகார் என்றும்
மிகப்பலர் குறிப்பாகச் சென்னையில் வாழ்வோர் ஒலிக்கிறார்கள்.

போல இருக்கும் (po) போலியை (bo) போலி என்றும், வேறொன்றும் இல்லாது காற்று (கால்) உள்ள இடத்தைக் காலி (ka) என்று சொல்லாமல் காலி (ga) என்பதும் கேட்கப் பொறுக்கவில்லை. உன்னால் (ba) பயனில்லை என்று பேசுவதைக் கேட்கும்போது நாம் என்ன எழுதி என்ன (pa) பயன் என்று எண்ணத் தோன்றுகிறது.

மரியாதை அடைமொழிகள்:-
மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபாதேவி பாட்டீல், மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி - இவ்வெடுத்துக்காட்டுகள் மூன்றும் பிழையற்ற வாக்கிய அமைப்பை உடையவை.

இவ்வமைப்பைச் சற்றே மாற்றி இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு பிரதிபாதேவி பாட்டீல், தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி என்றெழுதினால் இவை பொருட்பிழை கொண்ட வாக்கியங்களாகும்.
- மேதகு எனில் "மேன்மை தங்கிய" என்று பொருள்.
- மாண்புமிகு எனில் மாட்சிமை மிகுந்த என்பது பொருள்.
ஆங்கில மொழியின் தாக்கத்தால் தமிழில் உருவாக்கப்பட்ட நல்ல தமிழ்ச் சொற்கள் இவை. கனம், மகாகனம் போன்ற சொற்கள் நாம் பயன்படுத்திய வட சொற்கள். இந்த மரியாதைக்குரிய அடைமொழிகள் அவற்றைத் தாங்குகின்ற பதவிப்பொறுப்புகளுக்கேயன்றி, பொறுப்புகளை ஏற்றுள்ள ஆள் (நபர்)களுக்கு அல்ல. பதவிப் பொறுப்புகள் பறிபோகுமானால் அடைமொழிகளும் போய்விடும்.
ஆதலின் மாண்புமிகு, மேதகு போன்ற ஆட்சிசார்ந்த அடைமொழிகளை ஒருவர் பெயரோடு சேர்த்து எழுதுகின்ற, பேசுகின்ற முறையை விட்டுவிடுக.கீர்த்தி எனில் புகழ். கீர்த்தி எனும் வடசொல்லுக்கு நிகரான தூய தமிழ்ச் சொல் சீர்த்தி. உயர்ந்த பெருமைகளுக்கு உரியவரைப் பாராட்ட சீர்த்திமிகு எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம்.

மிக்க புகழும், பெருமையும் உடைவர்களைப் பாராட்ட உயர்சீர்த்தி எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம். இச்சொல் சங்க இலக்கியத்துள் காணப்படும் பழந்தமிழ்ச் சொல்.துறவுநிலையில் மேன்மையுற்ற ஆதினங்கள், திருமடங்களின் தலைவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ-ல-ஸ்ரீ என்று முன்னர் எழுதி வந்தோம். இப்போது நல்ல தமிழில் தவத்திரு என்றோ சீர்வளர் சீர் என்றோ சொல்லி வருகிறோம். தவத்திரு என்பதில் தவம் - தவநிலையைக் குறிப்பதோடு "தவ" என்னும் உரிச்சொல்லாக நின்று மிகுந்த எனும் பொருளையும் காண்க.

கிறித்துவப் பாதிரியார்கள் பெயர்களின் முன்னே அருள்திரு என்றோ அருள்தந்தை என்றோ அடைமொழி சேர்க்கப்பட்டு வருகிறது. சிலர் இவற்றை எழுதும்போது அருட்திரு என்றும், அருட்தந்தை என்றும் எழுதுகிறார்கள். நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.

(எ-டு)
- பல் +பொடி= பற்பொடி
- முள் + செடி= முட்செடி

ஆனால் வருமொழி முதலில் தகரம் (த)வரின் அதுவும் றகர, டகரமாக மாறும் என்பது நுணுக்கமான ஒன்று.
(எ-டு)
- புல் + தரை = புற்றரை
- வாள் +தடங்கண் = வாட்டடங்கண்

மிகவும் கடினமாகப் போவதுபோல் தோன்றுகிறதா? சற்றே மனம் செலுத்துங்கள். எளிதில் புரியும்.

என்ன சொல்கிறோம் என்றால் அருட்தந்தை, அருட்திரு என எழுதுதல் பிழையாம். பின்? அருட்டந்தை, அருட்டிரு என எழுதுதல் பிழையற்றதாம்.

எதற்கு வம்பு என்று எண்ணினால் இயல்பாக அருள்தந்தை, அருள்திரு என்று எழுதிவிடுங்கள். இதில் பிழையில்லை.

தமிழ் வளரும்......



நன்றி:- தினமணி கதிர்

இளசு
21-04-2011, 09:12 PM
அbbaளம் என்பார் சிலர்..
அழுத்திச் சொன்னால்
அது நொறுங்கக்கூடும் என்பதாலா?????

-----------------------------------------------------

மாண்புமிகு என்பது மேல்துண்டு..
.................... என்பது வேட்டி..

-------------------------------------------



தமிழை 'அரம் அறுக்கும்'
கரகர ஒலிமொழி எனச் சொல்லும்
ஆந்திரக் காதலியிடம்
புற்றரையில் அமர்க
வாட்டடங்கண் ஆரணங்கே என்றால்
காதல் காததூரம் ஓடிவிடலாம்..

புல்தரை மட்டுமே மிஞ்சும்..

--------------------------------------------------


இப்பாகத்தை வாசித்து எழுந்த எண்ணங்கள்...

தொடர்க பாரதி!

பாரதி
23-04-2011, 01:35 AM
புள்ளிகளும்.... புரிய வைக்குமோ அண்ணா!:)

ஆந்திரா புரியலையே அண்ணா...:mini023:

கவிக்கோவின் பார்வையின்படி பார்த்தாலும் புற்றரை என்பதை பிரித்து பொருள் கொள்ள நேரும் போது புற்று+அரை என்றும் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது..ஹும்...

பாரதி
23-04-2011, 01:39 AM
மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்

நாள்களா? நாட்களா?
நாள்+காட்டி= நாட்காட்டி, நாள்+குறிப்பேடு= நாட்குறிப்பேடு. இவை சரியானவை.
ஆனால் நாள்+கள்=நாட்கள்-பிழையுடையது. கள் என்பது இங்கே பன்மை விகுதி மட்டுமே. சொல்லோடு சொல் சேர்ந்தால் புணர்ச்சி விதி வேண்டும். ஒரு சொல்லோடு "கள்' என்பது சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது. "கள்' என்பது பெயர்ச் சொல்லாயின் மயக்கம் தரும் ஒரு குடிவகைப் பெயர் என அறிவோம். கள் பழந்தமிழ்ப் பொருள். நாட்கள் எனில் நாள்பட்ட கள்- மிகப் பழைய கள் என்று பொருளாம். நாள் பட்ட கள் "சுர்' என்று கடுப்புமிக்கதாய் இருக்கும் என்பர் பட்டறிவுடையோர். ஆகவே நமக்கெதற்கு நாட்கள்? நாள்கள் என்று இயல்பாக எழுதுவோமே?

பவழமா? பவளமா?
தமிழில் "ழ' கரம் தனிச்சிறப்புடைய ஒலி. அதனால் இதற்குச் சிறப்பு ழகரம் என்று பெயர். தமிழைத் தவிர, வேறு எந்த மொழியிலும் இவ்வெழுத்தை ஒலி மாறாமல் உச்சரிக்க முடியாது. தமிழர் எவரும் ழகரத்தைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது என்று முன்னரே நாம் வலியுறுத்தியுள்ளோம். சரி... அதற்கென்ன இப்போது?
பவழம் என்றாலும் பவளம் என்றாலும் பொருள் ஒன்றே. பவழம் என்று உச்சரிக்கத் தெரியாதவர்கள்- உச்சரிக்க முடியாதவர்கள் பவளம் என்று பிழையாக ஒலிக்கிறார்கள் என்று ழகரப் பற்றுக் காரணமாக உரைப்பார் உளர். அவர்களின் கருத்துப் பிழையானது. தமிழில் எந்த அகரமுதலியை (அகராதியை) எடுத்துப் பார்த்தாலும் பவழம்- பவளம் என்றுதான் போட்டிருக்கிறார்கள். பவளம்- பவழம் என்று எழுதியிருப்பதோடு ஒன்பான் மணிகளுள் (நவரத்தினங்களுள்) ஒன்று என்றும் எழுதியிருக்கிறார்கள். "மணிமிடைப்பவளம்', "பவளக் கூர்வாய் செங்கால் நாராய்' போன்ற பழந்தமிழ்த் தொடர்களைச் சான்றாகக் கொள்க. "பவழத்தன்ன மேனி ' எனும் தொடரும் பழந்தமிழில் உண்டு. ஆதலின் பவழம், பவளம் இரண்டும் ஒன்றே.
ஆதலின் எழுபத்தைந்தாம் அகவை நிறைவு கொண்டாடுபவர்கள் பவள விழா அழைப்பிதழ் என்று அச்சடித்திருந்தால், அவர்கள் மீது சீற்றம் கொள்ள வேண்டாம். தமிழ் அறியாதவர்கள் என்று வெற்றுரையும் வீச வேண்டாம்.

இழிவு- இளிவு இரண்டும் ஒன்றா?
இழிவு என்பதில் சிறப்பு ழகரம். இளிவு என்பதில் பொது ளகரம். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இரு சொற்களையும் காணலாம். தமிழில் ஆழமாக எதுவும் அறியாமல், ழ மீது கொண்ட மிகையார்வம் காரணமாக, இளிவை இழிவு என்று திருக்குறளிலும் மாற்றிவிட்டார்கள் என்று திருக்குறள் பதிப்பாசிரியர்கள் மீது, ஏன்... திருவள்ளுவர் மீதே குற்றம் சாட்டுகிறவர் உண்டு.

இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் ஒன்று உண்டு. அது தாழ்வு அல்லது கீழான எனும் பொருளாகும். ஆனால் இரு சொற்களுக்குமிடையே நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு. இழிதல் என்றால் இறங்குதல். மலையிலிருந்து அருவி கீழே இறங்கினால், "இழி தரும் அருவி' என்றனர். தலையின் இழிந்த மயிரனையர் என்றார் திருவள்ளுவர். தலையிலிருந்து கீழே இறங்கிய (கொட்டிய) மயிர் என்பது உவமை. அதற்கு என்ன மரியாதை உண்டு?அதுபோலவே தம் நிலையிலிருந்து கீழே இறங்கியவரும் (தாழ்ந்தவரும்) ஆவார் என்பது பொருள்.

ஆனால் இளிவு வேறு. எண் சுவையுடன் சாந்தம் என்று ஒன்று கூட்டி நவரசம் என்பர் வட நூலார். தொல்காப்பியம் உரைக்கும் மெய்ப்பாடுகள் எட்டுள் இளிவரல் என்பதும் ஒன்று. "நகையே அழுகை இளிவரல் மருட்கை' என்று அந்த நூற்பா தொடங்குகிறது. இந்த இளிவரல்தான் இளிவு. இதன்பொருள் அருவருப்பு. திருக்குறளில், "இளிவரின் வாழாத மானமுடையார் ஒளிதொழு தேத்து முலகு' என்றும் குறட்பா மானம் அதிகாரத்துள் உள்ளது. மானக்கேடு நேர்ந்தால் வாழாதவர்கள் மானம் உடையவர்கள். இளிவு என்பது மானக்கேடு (அவமானம்) என்ற பொருளில் வந்தமை காண்க. நிலையிலிருந்து தாழ்ந்தாலும் (இழிவு), இளிவு எனும் மானக்கேடும் நுட்பான பொருள் வேறுபாடு கொண்டுள்ளமை அறிக. இழிவினும் கீழான அருவருப்பாவது இளிவு.

திருக்குறளில் வரும் இளிவு எனும் சொல்லை எடுத்துவிட்டு, இழிவு என்னும் சொல்லைச் சேர்த்திட நாம் யார்? நமக்கு என்ன உரிமை இருக்கிறது? திருக்குறளில் கைவைக்கும் அளவுக்கு நாம் பேரறிவாளரா? என்று சிந்திக்க வேண்டும், இப்படியொரு சிந்தனையைக் கிளப்பியவர்கள்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணி கதிர்

இளசு
23-04-2011, 03:54 AM
தொடரும் பணிக்குப் பாராட்டு பாரதி.


சுந்தரத் தெலுங்கு, இந்தியாவின் இத்தாலி என அழைக்கப்படும் பெருமிதத்தால் ஆந்திர மக்கள் தமிழை கரகரப்பான ஒலி கொண்ட மொழி என அழைக்கிறார்கள் - எனக் கேட்டிருக்கிறேன்.

ஆந்திரப் பெண்ணைத் தமிழ் இளைஞன் காதலித்து
புற்றரை, வாட்டடணங்கண் எனப் பேசினால் என்னாகும் என யோசித்தேன்..:)
--------------------------------------------------------------------------------
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை


----------------------------------------

முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடிவைக்கலாமா?


இரண்டு பாடல்களையும் இயற்றியவர் கண்ணதாசன்...

கீதம்
23-04-2011, 09:35 AM
தாள் - தாள்கள்

தோள் - தோள்கள்

இப்படி எழுதுவது சரியென்னும்போது நாள்கள் என்பதும் மிகச்சரியென்று இப்போது உரைக்கிறது.

பவழம், பவளம்

சந்தேகம் நீங்கியது.

முகம் சுளித்தான், முகம் சுழித்தான்

இவற்றில் எது சரி, இரண்டுமே சரியா என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

கீதம்
23-04-2011, 09:40 AM
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை


----------------------------------------

முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடிவைக்கலாமா?


இரண்டு பாடல்களையும் இயற்றியவர் கண்ணதாசன்...

எடுத்துக்காட்ட இப்படிப்பட்டப் பாடல்வரிகள் எப்படிதான் உங்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருகின்றனவோ? மிகவும் வியப்போடு பாராட்டுகிறேன் இளசு அவர்களே.

பாரதி
24-04-2011, 01:17 AM
ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு நன்றி அண்ணா, கீதம்.

“கள்” பன்மை விகுதி சேரும் போது புணர்ச்சி விதி பொருந்தாது என கவிக்கோ கூறிய பின் மீண்டும் சற்று மயக்கம் வரத்தான் செய்கிறது.:mini023:

சுழித்தல் என்றால் ”சுழி” எண்ணை எழுதுதல் என்று எண்ண வாய்ப்பு இருக்கிறது. இன்று இணைய அகராதிப்பகுதி பிழைச்செய்தியை காட்டுவதால் சரியா என பார்க்கவும் இயலவில்லை. முயன்று பிழை களைவோம்.

பாரதி
24-04-2011, 01:22 AM
மொழிப் பயிற்சி -16:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


பொருத்து - பொறுத்து:- ஒரு விளக்கம்

பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல்.
"செய்" என்னேவல் வினை முற்று என்பர் இலக்கணப் புலவர்.
பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்). இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும். நீரின் அளவைப் பொறுத்து தாமரை உயரும். இந்த எடுத்துக்காட்டில் பொறுத்து எனும் சொல் உயரும் என்ற சொல் கொண்டு முடிந்தது.
என்னைப் பொறுத்தவரையில் என்றால் நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு பார்க்கும்போது எனும் பொருள் தருவதைக் காணலாம்.
என்னைப் பொருத்தவரையில் என்றெழுதினால் என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) வரையில் (அளவில்) வாக்கியம் சரியாக எப்பொருளும் தராமல் சிதறிப் போகிறது.

கருநாடகச் சட்டப் பேரவைப் பெரும்பான்மை பற்றிய முடிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும். இந்தச் சொற்றொடர் தெளிவாக இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாங்கி அல்லது ஏற்று முடிவு காணப்படும் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தே என்றால் தீர்ப்பைப் பொருத்து - சேர்த்துவிடு என்று ஏவல் முடியும் சொல்லில் "ஏகாரம்" பொருத்தே எப்படிப்பொருந்தும்?

பொருப்பு எனும் சொல்லுக்குப் பக்கமலை அல்லது மலை என்று பொருள்.
பொறுப்பு எனில் கட்டாயக் கடமை (உத்திரவாதம்).
இந்தச் செயலுக்கு யார் பொறுப்பு?
இந்த நிலையத்தின் பொறுப்பாளர் யார்? போன்ற தொடர்களை நோக்குக.

- பொறை - பொறுமை;
- பொறுத்தல் - பிழையை மன்னித்தல் (தாங்கிக் கொள்ளுதல் எனக் காண்க)

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை".
நிலம், தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டி எடுப்பவர்களையும் சாய்த்துவிடாமல், தாங்கிக் கொள்வது போல (வெட்டுபவர் அந்த நிலம் மீது நின்றே வெட்டுகிறார்) தம்மையே இகழ்ந்து - பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு.

நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளிவிட முடியாது. அதனையும் தாங்கித் தன் பெரும்பான்மை பற்றி முடிவு செய்யப்படும் என்றால் இதில் என்ன பிழையிருக்கிறது ஐயா?

உறவும், உடைமையும் நமக்கு உறவாக இருப்பவர்கள் நம் குடும்பத்தார், சுற்றத்தார் இவர்களைச் சுட்டிச் சொல்லும்போது எப்படிச் சொல்லுவது? எழுதுவது? வழக்கமாக, எனது மைத்துனர், எனது தம்பி, எனது மாமா என்று எழுதுகிறார்கள். இப்படி எழுதுதல் பிழை.

திருமண அழைப்பிதழ்களில் எனது மகன், எனது மகள் என்று குறிப்பிடுவார்கள். என் மகள், என் மகன் என்றே குறிப்பிட வேண்டும்.
அல்லது எனக்கு மகன், எனக்கு மகள் என இலக்கணத்தோடு இயம்பலாம். எனது புத்தகம், எனது வீடு, எனது நிலம் என்று உடைமைப் பொருள்களைச் சுட்டலாம். உறவுப் பெயர்களைச் சுட்டுதல் பிழை.

திருமண அழைப்புகளில் மற்றொரு பிழை வழக்கமாக அச்சேறி வருகிறது. திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்று கூடாத இடத்தில் ஒரு "ச்" சேர்த்துவிடுகிறார்கள். திருவளர் செல்வன், திருவளர் செல்வி என்று வினைத் தொகையாக (திருவளர்ந்த, வளருகின்ற, வளரும்) எழுதுவதே சரி.

பிழையும், திருத்தமும் நூல்கள் அச்சிட்டு முடித்தபின் மீண்டும் ஒரு முறை சரிபார்த்துப் பிழைகளைப் பட்டியலிட்டுத் திருத்தமும் வெளியிடுவார்கள்.

ஊர்ப் பெயர்களில் ஏற்பட்டுவிட்ட பிழைகள் பற்றி ஒரு பட்டியல் முன்னரே கொடுத்துள்ளோம். விட்டுப்போன ஊர்கள் சில பற்றி நினைவு வந்தது.

திருவொற்றியூர்:-
சென்னை மாநகரின் வடபகுதியில் அமைந்த திருத்தலம், சுந்தரர் வரலாற்றில் இடம் பெற்றது. இத்தலத்து ஈசனை "வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம்" எனச் சுந்தரர் பாடி உருகினார். திரு ஒற்றியூர் என்பதைத் திருவெற்றியூர் என்று கற்றவர்களும், ஊடகச் செய்தியாளரும் சொல்லும்போது மனம் வருந்துகிறது.

மயில் தொடர்புடைய தலபுராணம் கொண்ட மயிலாப்பூரும் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணுருவாக்கிய இடம் இது. மயிலா என்பதை மைலா ஆக்கிவிட்டார்கள். மைலாப்பூர் என்று எழுதுவது பெருந்தவறு.
மயிலாப்பூர் என்னும்போது ஒலிக்கின்ற மயில் - மைலாப்பூர் என்னும்போது ஒளிந்து கொண்டதே.

பூந்தமல்லி:-
பூந்தமல்லி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஊரினைக் கற்றவர்கள் பூவிருந்தவல்லி என்று திருத்தமாகச் சொல்லுவதாக எண்ணி மாற்றியுள்ளார்கள். வல்லி எனில் கொடி. பூக்கள் நிரம்பப் பூத்திருந்த கொடி என்று விளக்கம் சொல்லுவார்கள். பூந்தண்மலி - பூக்களின் தண்மை (குளிர்ச்சி) மலிந்திருக்கும் (நிறைந்திருக்கும்) ஊர் என்பதே சரியான பழைய பெயராகும்.


தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

இளசு
24-04-2011, 04:57 AM
பொறுத்து, பொருத்து --- தெளிந்தேன்.

இனி பொருளைப் பொறுத்து, வாக்கியத்தில் தக்கச் சொல்லைப் பொருத்துவேன்.

--------------------------------

பூந்தண்மலி --- பூவிருந்தவல்லியை விட அழகு.

--------------------------------------------------

''கள்'' மயக்கம் உனக்குத் தீர்ந்து, நீ எனக்கும் தெளிவிக்கும் நாள் விரைவில் வர வாழ்த்துகிறேன் பாரதி..

-------------------------------------------

பாராட்டுக்கு நன்றி கீதம் அவர்களே..

பாரதி
25-04-2011, 01:47 AM
பொருத்தமான பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணா.

-----------------------------------------------------------------------


மொழிப் பயிற்சி -17:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

அமஞ்சிக்கரை என்ற ஊரைத் திருத்தமாகச் சொல்லுபவர்கள் அமைந்தகரை என்று குறிப்பார்கள். கரை என்பது ஆற்றுக்கோ, குளத்திற்கோ மக்களால் அமைக்கப்படுவது. தானாகக் கரை அமையுமா? அமைந்தகரையோ, அமைக்கப்பட்ட கரையோ எதுவும் அங்கில்லை. அமஞ்சி எனும் சொல் பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இந்நாளில் இலவசம் என்று சொல்வதற்கு நிகரான சொல் இது. கரை என்பது சிற்றூர்ப் பகுதிகளையும் குறிப்பதுண்டு. யாரோ ஒரு வள்ளலால் பணம் பெறாமல் அமஞ்சியாகத் தரப்பட்ட இடமே இது என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓர், ஒரு - சிறிய விளக்கம்:-
ஆங்கிலத்தில் a, e, i, o, u என்னும் ஐந்தும் உயிரெழுத்துகள் எனக் கொண்டு,இவ்வெழுத்துகளுள் ஒன்றை முதலெழுத்தாகக் கொண்ட சொல்லின் முன் ஒன்று என்பதைக் குறிக்க ஹய் என்று எழுத வேண்டும் (an apple). a போடக்கூடாது என்ற விதி சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். நம் தாய்த் தமிழிலும் இப்படி ஒரு விதியிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பேர் இவ்விதியைக் கடைப்பிடித்து எழுதுகிறார்கள்?

தமிழில் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன. (அ முதல் ஒள முடிய). இவ்வெழுத்துகளுள் ஒன்று ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தால் அச்சொல்லின் முன் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க ஓர் பயன்படுத்த வேண்டும்.
- ஓர் அணில்
- ஓர் இரவு
- ஓர் உலகம்
- ஓர் ஏடு
- ஓர் ஐயம்
என்று காண்க.

உயிரன்றிப் பிற உயிர்மெய் முதலில் வருமானால் ஒரு சேர்க்க வேண்டும்.
(எ-டு) ஒரு வீடு, ஒரு தோட்டம், ஒரு பள்ளி.

இம்முறையை மாற்றி ஓர் வீட்டில் ஒரு அம்மா இருந்தாள் என்று எழுதுவது பிழை. நூலெழுதுவோர், பத்திரிகையாளர் பலரும் இப்பிழையைப் பொருட்படுத்துவதில்லை. தம்போக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் போக்கை. ஈண்டு இன்னொரு குறிப்பும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அஃறிணைப் பெயர்களோடு மட்டுமே இந்த ஓர், ஒரு (மற்றும் எண்கள் எவையும்) இணைத்தல் வேண்டும். உயர் திணையில் இப்படிப் பயன்படுத்தக் கூடாது. என்ன?விளங்கவில்லையா?
ஒரு பேராசிரியர் எனல் தவறு, பேராசிரியர் ஒருவர் எனல் சரி.
மூன்று பெண்கள் எனல் தவறு. பெண்கள் மூவர் எனல் சரி.
பஞ்சபாண்டவர் என்பது வழக்கிலிருப்பினும் பாண்டவர் ஐவர் நூற்றுவர் கன்னர் (சிலம்பு) என்பதே தமிழ் மரபு.

கிருட்டிணமூர்த்தி என்றெழுதல் சரியா? இப்படி எழுதுவது பிழையாகும். கிருஷ்ணமூர்த்தி எனும் வடமொழிப் பெயரில் உள்ள "ஷ்" என்ற எழுத்தை நீக்கிவிட்டு கிருட்டிண என்று எழுதுகிறார்கள்.
கிருட்டி என்று ஒலித்த பின் அதனோடு ணகரம் இணைத்துக் கிருட்டிண என்றொலிப்பதற்குப் பெரும் முயற்சி வேண்டியுள்ளது.
கிருட்டினமூர்த்தி என்று டண்ணகரத்திற்குப் பதில் றன்னகரம் போட்டு ஒலித்துப் பாருங்கள். இயல்பாக இனிமையாகச் சொல்ல வரும்.
தமிழ்மொழி ஒலியியல் பற்றியும் அறிந்தவர்கள் இதனை நன்கறிவர். இதற்கு வலுவூட்ட வேறொரு சொல்லை நாம் பார்க்க வேண்டும்.

நாகப்பட்டினம், சென்னைப் பட்டினம். கடற்கரையில் அமைந்த நகரங்களைப் பட்டினம் எனல் வேண்டும். பட்டணம் என்று சொல்வது பிழை. பட்டணம் நகர் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல். மதுரை பெரிய பட்டணம் ஆகும் என்று சொல்வது பொருந்தும். இங்கு பட்டினம் என்று "டி"யுடன் "ன" சேர்வதையும் பட்டணம் என்று "ட"வுடன் சேர்வதையும் கருதுக. ஆதலின் கிருட்டினமூர்த்தி என்றெழுதுவதே சரியானது.

சரி, இப்பெயரைத் தூய தமிழில் மொழி பெயர்த்தால் என்னவாம்?
கறுப்புக் கடவுள் என்பதாம். கிருஷ்ணம் என்றால் கறுப்பு. மூர்த்தி - கடவுள். தேய்பிறைக் காலத்தை கிருஷ்ணபட்சம் என்பதன் பொருள் புரிகிறதா?

இன்னும் மனம் இசைவு பெறவில்லையா?
கிருஷ்ணவேணி என்பதன் தமிழ்ப் பெயர் தெரியுமா? கருஞ்சடை (கிருஷ்ண - கருமை; வேணி- சடை) மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.

கரியநிறம், கருமை நிறம் என்றெல்லாம் இடையினம் வரினும் கறுப்பு எனும்போது வல்லினமே இட வேண்டும். யாழ்ப்பாணம் பெரும்புலவர் நா.கதிரைவேல் பிள்ளை பேரகராதியிலிருந்து, கழகத் தமிழ்க் கையகராதி வரை எதில் வேண்டுமாயினும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

"கறுப்பும், சிவப்பும் வெகுளிப் பொருள"எனும் தொல்காப்பியச் சூத்திரம் நாமும் அறிவோம்.
ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது இயல்பே.
கறுப்பு - கரிய நிறம், சினம், வஞ்சனை என்று அகர முதலிகளில் காண்க.

தமிழ் வளரும் ......

நன்றி:- தினமணி கதிர்

இளசு
25-04-2011, 05:03 AM
ஒரு அம்மா இருந்தாள் - தவறு
ஓர் அம்மா இருந்தாள் - தவறு
அம்மா ஒருவர் இருந்தாள் - தவறு
அம்மா ஒருத்தி இருந்தாள் - சரி...
அம்மா ஒருவர் இருந்தார் - சரி..

---------------------------------------------

இரு தேவியர் முருகனுக்கு - தவறு!

தேவியர் இருவர் முருகனுக்கு - சரி!

-------------------------------------------------------------

கண்ணா கருமை நிறக்கண்ணா...

கறுப்புதான் எனக்குப் பிடித்த ........


------------------------------------

பட்டணந்தான் போகலாமடி....

-------------------------------------------------
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா? -- வாலி

என் தங்கை என்றேன் .. என் தம்பி சென்றான் - கண்ணதாசன்

------------------------------------------

இக்கட்டுரைப் பகுதிகளை வாசித்தபின் ,
பல பாடல் வரிகள் சந்த சுகம் தாண்டி இலக்கணப் பாடங்களாகவும்.

----------------------------

எனது பாராட்டு என் தம்பிக்கு!

M.Jagadeesan
28-04-2011, 12:49 AM
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்"

இங்கு, " ஓர் பாலம் " என்று பாரதி பாடியுள்ளார். இது இலக்கண விதிப்படி சரியா?

பாரதி
29-04-2011, 08:08 AM
பழைய பாடல்களைக்கொண்டே பிழைகளை களையலாம் என்பதை அழகாக சுட்டிக்காட்டும் அண்ணாவிற்கு நன்றி.

ஜெகதீசன் ஐயாவிற்கு,
பெரிய கவிஞர்களின் கவிதையை அலசும் அளவிற்கு நான் புலமை பெற்றவன் அல்லேன். பொதுவாக கவிதை நயம் மற்றும் இசைக்காக சில விதிவிலக்குகளை அனுமதிப்பது உண்டு என எண்ணுகிறேன். இது அவ்வகையில் இருந்திருக்கலாம். சரியான விடை கிடைக்கும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா. நன்றி.

பாரதி
29-04-2011, 08:19 AM
மொழிப் பயிற்சி -18:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ.ஞானச்செல்வன்

அ, இ, உ சேர்க்கும் முறைமை:-
தமிழில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ஒரு சொல்லின் முதலெழுத்தாக வரலாம். ஆனால் உயிர்மெய் எழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங எனும் பத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரக் கூடியவை. இவற்றுள் "ங" மொழி முதலில் எப்படி வரும் என்று ஐயம் தோன்றலாம். அ,இ,உ, எ, யா என்பனவற்றோடு இணைந்து அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என வரும் என இலக்கணம் இயம்புகிறது.

"ஞ" எனும் எழுத்து ஞாயிறு, ஞாலம், ஞான்று, ஞிமிறு (வண்டு) ஞமலி (நாய்) எனப் பல சொற்களில் வருதல் காணலாம்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது, ராமன், லட்சுமணன், ரங்கநாயகி, லோகநாதன் போன்ற பெயர்களைப் பற்றித்தான். இவை போன்ற வடமொழிப் பெயர்களாயிரம் தமிழில் நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருபவை. "ல,ள, ர, ற" இப்படியான எழுத்துகள் மொழி முதலில் வாரா. பின் எப்படி இவற்றை எழுதுவது?

முன்னரே நாம் அறிந்து கடைப்பிடிக்கும் முறைதான். மீண்டும் நினைவூட்டுகிறேன். இத்தகைய பெயர்களின் முன்னெழுத்தாக அ, இ, உ ஆகியவற்றை இடமறிந்து, பொருத்தமறிந்து இணைத்து இச்சொற்களை எழுத வேண்டும்.

(எ-டு) இராமன் (இ), இலட்சுமணன் (இ), அரங்கநாயகி (அ), உலகநாதன்(உ). இப்படிப் பொருத்தமாகச் சேர்க்க வேண்டும்.

இலட்சுமணன் என்ற பெயரைத் தமிழ் ஒலிப்படுத்தி இலக்குவன் என்றே கம்பர் எழுதினார். லட்சுமணன் என்ற பெயரை அலட்சுமணன் ஆக்கிவிடக்கூடாது.

ரங்கசாமி என்ற பெயரை அரங்கசாமி என்றெழுதிட வேண்டும். இரங்கசாமி ஆக்கிவிடக்கூடாது.

ஸ்ரீ ரங்கம் - திருவரங்கம்.
உலகநாயகி என்ற பெயரை அலகநாயகி என்றோ, இலக நாயகி என்றோ ஆக்கிடல் ஆகாது. பெரும்பாலும் நம் மக்கள் பயன்பாட்டுத் தமிழில் சரியாகவே காண்கிறேன். சிலர் ஏனோ இரங்கசாமி என்று எழுதி வருகிறார்கள். இராமசாமியை யாரும் அராமசாமி என்று இதுவரை ஆக்கவில்லை.

இறும்பூதும், இறுமாப்பும்:-
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் உரைகளில் எழுத்துகளில் இவ்விரு சொற்களும் நிரம்ப இடம் பெற்றிருக்கும். இறும்பூது என்னும் சொல்லுக்கு வியப்பு, அற்புதம், பெருமை, வண்டு, மலை, தாமரைப்பூ எனப் பல பொருள் உண்டு. "உங்கள் வளர்ச்சி கண்டு நான் இறும்பூதடைகிறேன்'' என்றால் பெருமையடைகிறேன் என நல்ல பொருளில் கொள்ள வேண்டும். நான் வியப்படைகிறேன் என்று பொருள் கொண்டால், பாராட்டு மாறிப் பழிப்பாகிவிடும்.

இறுமாப்பு என்பது, செருக்கு, அகந்தை, பெருமிதம், நிமிர்ச்சி, ஆணவம் என்று பலவாறு பொருள் சொல்லப்பட்டாலும், ஏறத்தாழ ஒரே பொருள் தருவன அச்சொற்கள்.

அரிய பல நல்லவற்றை, ஆற்றலை, வெற்றியைப் பாராட்டும்போதும், வியப்பான செய்திகளைக் கேட்டபோதும் இறும்பூது என்னும் சொல்லை ஆளுதல் நன்றாம்.

இறுமாப்பு - பெருமிதம் என்ற பொருளில் மனிதர்க்கு இருக்க வேண்டிய நற்பண்புகளுள் ஒன்றே. ஆனால் அது அகந்தையாய், ஆணவமாய் ஆகிவிடக்கூடாது. கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு மாந்தரிடையே இருப்பது இயற்கையே. இவ்விரு சொற்களும் தக்கவாறு இன்றும் பயன்படுத்தப்படுமானால் தமிழுக்கு ஆக்கமாம்.

கோவிலா? கோயிலா?
தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது.
நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் "ய், வ்" என்றிரண்டு.

கோ (க் + ஓ) இல் (இ) கோ என்பதில் "ஓ" எனும் உயிரும், இல்லில் "இ" எனும் உயிரும் இணையுமிடத்தில் "வ்" எனும் மெய்யெழுத்து தோன்றும்.
ஆதலின் கோ + வ் + இல் = கோவில் என்பதே சரியானது.

கோயில் என்னும்போது கோ + ய் + இல் = கோயில் என்று "ய்" உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், "இ, ஈ, ஐ" வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் "ஏ" முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்."

கோவில் ஓகாரம் இருப்பதால் "வ்" உடன்படு மெய்தான் வர வேண்டும்.
ஆயினும், மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது.
இது ஏற்கத்தக்க பிழையே.

மணி + அடித்தான் = மணியடித்தான் (இகரத்தின் முன் "ய்" உடம்படு மெய் வந்துள்ளது.)
தே + ஆரம் = தேவாரம் (ஏகாரத்தின் முன் வ் உடம்படு மெய் வந்தது.)
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "வ்" உடன்படு மெய் வந்தது)
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "ய்" உடம்படுமெய் வந்தது. அவனேயழகன் என்றானது.
போதும் எனக் கருதுகிறோம். இலக்கணம், படிப்பவர்க்குச் சுமை ஆகிவிடாமல் சுவை பயத்தல் வேண்டும் எனும் நோக்கில்தான் எழுதிவருகிறோம்.

தமிழ் வளரும்.......

நன்றி:- தினமணி கதிர்

Nivas.T
29-04-2011, 08:45 AM
இதுவரை நான் காட்டுமன்னார்கோயில் என்றே பயன்படுத்தி வந்தேன். அது பிழை என்பதால் திருத்தியமைத்து கட்டுமன்னார்கோவில் என்றே பயன்படுத்துவேன்.

மிக்க நன்றி அண்ணா
தொடருங்கள்

aathma
29-04-2011, 11:21 AM
பயிற்சி அருமை

அமரன்
30-04-2011, 08:17 AM
மின்னூலாக்கி மன்றத்தில் வைப்பீர்கள்தானே அண்ணா.

பாரதி
01-05-2011, 08:39 AM
இதுவரை நான் காட்டுமன்னார்கோயில் என்றே பயன்படுத்தி வந்தேன். அது பிழை என்பதால் திருத்தியமைத்து கட்டுமன்னார்கோவில் என்றே பயன்படுத்துவேன்.

நண்பரே. ஊக்கத்திற்கு நன்றி. காட்டு மன்னார்கோவில் என்றும் கூட பயன்படுத்தலாம்தானே..:)


பயிற்சி அருமை
நன்றி நண்பரே.


மின்னூலாக்கி மன்றத்தில் வைப்பீர்கள்தானே அண்ணா.
உங்கள் விருப்பம் அதுவானால் கண்டிப்பாக செய்வேன் அமரன்.

பாரதி
01-05-2011, 08:56 AM
மொழிப் பயிற்சி -19:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா?
"இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?"
இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன?
மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு?
ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி?
மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ?
ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?
ஏனிந்தப் பிழைகள்?

வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு.
வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர்.
வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே.
அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது.
வழிபாட்டை - வழிப்பாட்டு ஆக்க வேண்டா.

தமிழ் கற்றவரே சிலர் தம் ஏடுகளில் "நாநிலம்" என்றெழுதுகிறார்கள். இதன்பொருள் நாக்கு ஆகிய நிலம் என்பதன்றோ? முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் நால்வகை நிலங்களினாலான உலகத்தை "நானிலம்" எனல் வேண்டும்.
நான்கு+ நிலம்= நானிலம்.

இவ்வாறே தன்நலம் என்றெழுதுகிறார்கள்.
தன் + நலம் = தன்னலம் என்றாகும்.
தம் + நலம் = தந்நலம் என்றாகும்.
இரண்டுமின்றி தன் நலம் எனல் விட்டிசைக்கிறது.

இவ்வாறே,
- என்+ தன் = என்றன் எனவும்,
- எம்+ தம் = எந்தம் எனவும்
ஆகுதல் இலக்கணம்.
எந்தன் என்றெழுதுவது பிழையாகும்.

தேசீயம், ஆன்மீகம், காந்தீயம் என்றெல்லாம் எழுதுகிறார்களே? சரியா?
இல்லை. இவற்றை நெடில் போட்டு நீட்டாமல்,
- தேசியம்
- காந்தியம்
- ஆன்மிகம்
என்றே எழுதிடல் வேண்டும்.

இஸம் - தமிழில் இயம் என்றாகும்.
மார்க்சிஸம் - மார்க்சியம் என்றாகும்.
தேசியம், காந்தியம் இவற்றுள்ளுள் இயம் இருத்தல் காண்க.

தன்வினை செய்வினையா?
திருவாரூரிலிருந்து தமிழாசிரிய நண்பரொருவர் தொலைப் பேசி வழியாக வினவினார்:-
"ஐயா, தன்வினை, பிறவினை என்றும், செய்வினை செயப்பாட்டு வினையென்றும் இலக்கணம் கற்பிக்கிறோமே, இவற்றுள் தன் வினையும், செய்வினையும் ஒன்றுபோல்தானே உள்ளன? இவற்றிடையே வேறுபாடு என்ன?''
இஃது அறிவினாவா? அறியா வினாவா? என்று நம்மால் சொல்ல இயலவில்லை.

மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தன்வினை தன்னைச் சுடும் என்பதும், யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்பதும் அல்லவா?
தன்வினையாவது? செய்வினையாவது? எல்லாம் உங்கள் வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுதல் முறையா?

செயப்பாட்டு வினை வடிவம் என்பது தமிழ்மொழிக்குப் புதியதே ஆகும்.
பள்ளிப் பாட நூலில் செய்வினை, செயப்பாட்டு வினை என்று வந்தாலும் அது ஆங்கில மொழியின் தாக்கத்தால் விளைந்ததே.
சற்றே விளக்கமாக அறிவோமா?

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இது செய்வினை வாக்கியம்.
திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது செயப்பாட்டு வினை வாக்கியம்.

இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். இது தன்வினை வாக்கியம்.
இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் - இது பிறவினை வாக்கியம்.

செய்வினை வாக்கியமும், தன்வினை வாக்கியமும் அமைப்பில் ஒன்றுபோலவே இருக்கும்.
ஆனால் செய்வினையை செயப்பாட்டுவினையாக மாற்றுகிறபோது படு - பட்டது என்ற துணைவினை சேர்கிறது.
எழுவாய் இருந்த இடத்தில் செயப்படுபொருள் வந்துவிடுகிறது.
ஆல் எனும் உருபு (ஒட்டுச் சொல்) இணைகிறது.

தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும்போது "வி, பி" என்னும் இரண்டு எழுத்துகளுள் ஒன்று ஒட்டிக் கொள்கின்றது.
திருமுழுக்குச் செய்வித்தனர்.
- செய்தனர் - தன்வினை
- செய்வித்தனர் - பிறவினை (வி சேர்ந்தது)

பாடம் படிப்பித்தனர்.
- படித்தனர் - தன்வினை
- படிப்பித்தனர் - பிறவினை (பி சேர்ந்தது)

செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மாற்றும் போது அத்தொடரின் பொருள் மாறாது.
ஆனால், தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும் போது அந்தத் தொடரின் பொருளே மாறிவிடும்.
- திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றாலும்,
- திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்றாலும் பொருள் ஒன்றே.

- இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை,
- இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.

தமிழ் வளரும் .......

நன்றி:- தினமணி கதிர்

கீதம்
01-05-2011, 09:17 AM
ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா?
"இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?"
இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன?
மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு?
ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி?
மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ?
ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?
ஏனிந்தப் பிழைகள்?

மெனக்கெட்டு என்பதன் பொருளை அறிந்தேன். நன்றி பாரதி அவர்களே.

வேலைமெனக்கெட்டு என்கிறார்களே... அதன் பொருள் என்னவாக இருக்கலாம்?


வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு.
வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர்.
வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே.
அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது.
வழிபாட்டை - வழிப்பாட்டு ஆக்க வேண்டா.

இறை வணக்கத்தை வழிபாடு என்கிறோம். அத்தகைய கூட்டத்தை வழிபாட்டுக்கூட்டம் என்பது சரியா? வழிப்பாட்டுக்கூட்டம் என்பது சரியா? இந்த இடத்தில் இன்னும் ஐயம் உள்ளது. தெளிவுபடுத்துங்களேன்.

M.Jagadeesan
01-05-2011, 09:30 AM
செய்வினை வாக்கியம் தமிழில் அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை.
பல ஐயங்களுக்கு விடை கண்டேன்.வேலைகெட்டு வீணாக அலைந்தேன் என்பது முற்காலத்தில், "வினைகெட்டு வீணாக அலைந்தேன்" என்று இருந்திருக்கலாம். அதுவே காலப்போக்கில்,"மெனக்கெட்டு அலைந்தேன்" என்று மாறியிருக்கலாம் என்பது என் கருத்து. இக்கருத்து தவறாகவும் இருக்கலாம்.

Nivas.T
01-05-2011, 09:49 AM
[CENTER][SIZE="4"]
- இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை,
- இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.


அழகான எடுத்துக்காட்டு

பாரதி
02-05-2011, 05:15 PM
கருத்துக்களுக்கு நன்றி கீதம், ஜெகதீசன் ஐயா, நிவாஸ்.

காலப்போக்கில் பல சொற்கள் மருவி விடுகின்றன. பழக்கத்தில் இருப்பதால் அதுவே சரியென வாதிடத்தோன்றும். எடுத்துக்காட்டாக முன்பே கவிக்கோ சொன்னது போல, கோ+இல் அரசனின் வீடு என்பது தெய்வம் இருக்குமிடம் என்ற பொருளில்தான் இப்போது வழங்கப்படுகிறது.

வழிப்பாட்டு, வழிபாடு என்பதில் கீதமவரின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. கவிக்கோவின் கூற்றுப்படி வழிபாடு என்பது தவறு என பொருள் கொள்ள வேண்டி இருந்தாலும் வழிபாடு என்றழைப்பதே சரி என மனம் வாதிடுகிறது!

பாரதி
02-05-2011, 05:21 PM
மொழிப் பயிற்சி - 20:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

தன்வினை வாக்கியத்தைப் பொருள் மாறாமல் பிறவினை வாக்கியமாக மாற்ற முடியாது. ஆனால் செய்வினை வாக்கியத்தைப் பொருள் மாறாமல் செயப்பாட்டு வினையாக மாற்ற முடியும். இந்த வேறுபாட்டின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் இவ்விலக்கணக் குழப்பங்கள் ஏற்படாது.

மாரனும், மாறனும்:-
- மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும்.
- மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும்.
முன்னது வடசொல்.
பின்னது தமிழ்ச்சொல்.

மன்மதனுக்குத் தனித் தமிழ்ச் சொல் "வேள்" என்பது. வேட்கையை உண்டாக்குபவர் என்பது பொருள்.
மன்மதன் கருநிறம் கொண்டவன். சிவந்த நிறமுடைய "வேள் செவ்வேள்" எனும் முருகப் பெருமான் ஆவான்.

சுகுமாரன் என்பது "அழகிய மன்மதன்" என்னும் பொருள் கொண்ட வடசொல். இதனைச் சிலர் சுகுமாறன் என்றெழுதுகிறார்கள். இது சரிதானா?
- திருமாறன்
- நெடுமாறன்
- நன்மாறன்
இப்பெயர்கள் எல்லாம் தனித்தமிழ்ப் பெயர்கள்.
இந்தப் பெயர்களில் உள்ள மாறன் (பாண்டியன்) எனும் தமிழ்ப் பெயரை "சுகு" என்ற வடசொல்லோடு ஒட்டலாமா?
அது சுகுமாரன் என்றே எழுதப்பட வேண்டும். சுகுமாறன் என்று இருமொழியும் இணைத்துப் பொருளற்றதாக ஆக்கிவிடுதல் பிழை.

வள்ளி - வல்லி எது சரி?
இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்ட தமிழ்ப் பெயர்களே.
முருகன் காதல் மணம் செய்து கொண்ட குறமகள் வள்ளி.
வள்ளிக் கிழங்கு என்றொரு கிழங்கு உண்டு. அக்கிழங்கைத் தோண்டி எடுத்த பின் இருந்த குழியில் கிடந்தவள் குழந்தை வள்ளி.
இன்றும், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு பயன்பாட்டில் உள்ளன.
வள்ளி தமிழ்ப் பெயரே.
வல்லி எனின் கொடி என்பது பொருள். வல்லிக் கொடி என்று (ஒரு பொருட் பன்மையாக) இணைத்தும் சொல்லுவதுண்டு.
- இன்பவல்லி
- அமுதவல்லி
- மரகத வல்லி
எனும் பெயர்களில் பெண்கள் கொடி போன்றவர் எனும் மென்மை பற்றிய குறிப்பை அறிக.
ஆகவே, வள்ளி, தெய்வயானை பற்றிக் குறிக்கும் இடங்களில் மட்டுமே வள்ளி வர வேண்டும்.
பிறவாறு பெண் பெயர்களில் வல்லி வர வேண்டும். இவற்றை மாற்றிச் சேர்ப்பது சரியாகாது.

கைமாறு - கைம்மாறு:-
திருட்டுப் பணம் கைமாறிவிட்டது.
இத்தொடரில் வரும் "கைமாறு" என்னும் சொல், ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு மாறிவிடுவதைக் குறிக்கிறது.
"தாங்கள் செய்த பேருதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?"
இத்தொடரில் வரும் கைம்மாறு எனும் சொல்லுக்கு "உதவிக்கு மறு உதவி" எனும் பொருள் அமைதல் காண்க.
ஆயினும் எழுத்தாளர் பலரும் இந்த நுட்பம் அறியாமல், "கைம்மாறு" என்று எழுத வேண்டிய இடத்தில் "கைமாறு" என்று பிழையாக எழுதுகிறார்கள்.
ஒரு மெய்யெழுத்து (ம்) விட்டுப் போவதால் எத்தகைய பொருள் மாற்றம் ஏற்படுகிறது.
"கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு,
என்னாற்றும் கொல்லோ உலகு.''
எனும் திருக்குறள் ஈண்டு நினைக்கத்தக்கது.

கேள்வியும், வினாவும்:-
ஏடுகளில், இதழ்களில் கேள்வி - பதில் பகுதி வெளிவருகிறது.
தேர்வில் எத்தனை கேள்விகளுக்குப் பதில் எழுதினாய்? என்று வினவுகிறோம்.
என் கேள்விக்கு என்ன பதில்? என்று பாட்டெழுதுகிறார்கள்.
வினா - வினவுதல் என்னும் பொருளில் இங்கெல்லாம் கேள்வி எனும் சொல் பயன்பட்டு வருகிறது.
ஆனால் கேள்வி எனும் சொல்லின் பொருள் வேறு.
கண்ணால் காணப்படுவது காட்சி என்பதுபோல் காதால் கேட்கப்படுவது கேள்வி.
காதுகளில் கேட்டல் என்பதுவே கேள்வி. அதனால்தான் கேள்விச் செல்வம் என்றனர்.
பேச்சு வழக்கிலும், "நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்று பேசுகிறோம்.
"அவர் வெளிநாட்டிற்குப் போய்விட்டதாகக் கேள்வி" என்று சொல்லுகிறோமே? என்ன பொருள்?
ஆகவே, தேர்வில் எத்தனை வினாக்களுக்கு விடை எழுதினாய்?
இந்தப் பத்திரிகையில் வினா - விடைப் பகுதி வெளிவருகிறதா?
என் வினாவிற்கு நீ விடை சொல்லியே ஆக வேண்டும்?
இப்படிச் சரியாகப் பேசவும் எழுதவும் முற்படுவோமா?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே:-
இப்படி மகாகவி பாரதியார் பாடிய காரணம் என்ன?
தமிழின் சொல்வளம் ஈடு இணையற்றது.
ஒரு செடியின் இலையைக் குறிக்க அந்த இலையின் பருவத்தையும் உணர்த்தக் கூடிய சொற்கள் தமிழில் உண்டு.
- துளிர் (செடியில் துளிர்விடும் நிலை)
- தளிர் (சற்றே வளர்ந்து தளிர்க்கும் நிலை)
- கொழுந்து (இன்னும் வளர்ந்து இளம் பச்சை நிறத்தில் உள்ள இலை)
- இலை (பச்சை நிறத்தில் முழுமை பெற்ற நிலை)
- பழுப்பு (பச்சை மாறி மஞ்சள் நிறமாகப் பழுத்த இலை)
ஆங்கிலத்தில் இவற்றைச் சொல்ல வேண்டுமானால் - அனைத்தையும் சொல்ல முடியாது, சில சொல்லலாம் - ஒட்டுச் சொற்களை இணைத்தே சொல்ல முடியும்.
Young le​af,​​ Grow le​af,​​ ​ Yellow le​af,​​ Dry le​af *உடன் அடைமொழி சேர்த்தே சொல்ல முடியும்.

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

பாரதி
04-05-2011, 08:30 AM
மொழிப் பயிற்சி - 21:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ.ஞானச்செல்வன்

சகோதரர் எனும் சொல்லுக்கு உடன்பிறந்தவர் என்பது பொருள்.
சக + உதரர் (உதரம் - வயிறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர்.
தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல்.

ஆனால் தமையன், தமக்கை, தம்பி, தங்கை எனும் சொற்கள் அமைந்த தமிழின் சிறப்பு என்னே?
- தம் + ஐயன் - தமக்கு மூத்தவன் = தமையன் (அண்ணன்)
- தம் + அக்கை = தமக்கை - தமக்கு மூத்தவள் - அக்கா
- தம் + பின் = தம்பி
எனத் திரிந்தது.
- தம்பின் பிறந்தவன் - தம்பி
- தம் + கை = தங்கை - தமக்குச் சிறியவள் - தங்கை (கை எனும் சொல் சிறிய எனும் பொருளில் வந்தது.)
இப்படியெல்லாம் ஆங்கில மொழியில் சொல்லிட முடியுமா?

நந்தமிழில் ஒவ்வொரு நிலைக்கும் தனித் தனிச் சொற்கள் இருக்கும்போது, ஆங்கில மொழியின் தாக்கம் காரணமாக இளைய சகோதரர், மூத்த சகோதரர் என்று தமிழர்கள் பேசுவது சரியா?

குழந்தைப் பருவம் என்று சொல்லுகிறோம். இந்தக் குழந்தைப் பருவத்திலேயே பத்துப்பிரிவுகளைக் கண்டவர்கள் தமிழர்கள். பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகை அறிவீர்கள்.
ஆண்பால் பிள்ளையாயின்
01. காப்புப் பருவம்
02. செங்கீரைப் பருவம்
03. தாலப் பருவம்
04. முத்தப் பருவம்
05. சப்பாணிப் பருவம்
06. அம்புலிப் பருவம்
07. வருகைப் பருவம்
08. சிற்றில் பருவம்
09. சிறுதேர்ப் பருவம்
10. சிறுபறைப் பருவம்
என்றும்,

பெண்பால் பிள்ளைத் தமிழாயின், இறுதி மூன்றும் மாறுபட்டு,
08. கழங்கு (தட்டாங்கல்)
09. அம்மானை
10. ஊசல் (ஊஞ்சல்)
என்றும் பகுத்துப் பிரித்தவர்கள் தமிழர்கள்.
பெண்களின் பருவத்தையும், வயதிற்கேற்ப ஏழு பருவங்களாகப் பிரித்தனர்.
அவை,
01. பேதை
02. பெதும்பை
03. மங்கை
04. மடந்தை
05. அரிவை
06. தெரிவை
07. பேரிளம் பெண்
என்பன.
(ஏழு வயதில் தொடங்கி நாற்பது வயதுவரை).
இவை பற்றியெல்லாம் விரிக்கிற் பெருகும். இந்த அளவே போதும் எனக் கருதுகிறேன்.

எழுத்துப் பிழைகள்:-
சொற்களின் பொருள் பற்றிய சிந்தனையின்மையால் ஊடகங்களில் பற்பல எழுத்துப் பிழைகளை அவ்வப்போது செய்து வருகிறார்கள்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மங்கையர்கரசி என்று பெயர் எழுத்தில் காட்டப்பட்டது.

மங்கையர்க்கு + அரசி = மங்கையர்க்கரசி என்று சரியாக எழுதத் தோன்றவில்லை போலும்.
ஒரு செய்தித்தாளின் இணைப்பு வார இதழில் அங்கயர்க்கண்ணி என்று எழுதியிருந்தார்கள்.
அம் + கயல் + கண்ணி = அங்கயற்கண்ணி என்றாகும்.
அழகிய மீன் போன்ற கண்களுடையாள் என்பது பொருள்.
கயற்கண்ணியைக் கயர்க்கண்ணி ஆக்குதல் அழகா?
"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்" என்று ஒரு நிகழ்ச்சி எழுத்தில் காட்டப்பட்டது.
தேனீர் எனில் தேன் கலந்த நீர் (இனிய நீர்) என்று பொருள்.
இச்சொல் தேநீர் என்றிருத்தல் வேண்டும்.
தே(யிலை) + நீர் = தேநீர் ஆனது.
இன்னும் சரியாகச் சொன்னால் Te என்பதன் தமிழ் ஒலி தே இதனோடு நீர் சேர்த்துத் தேநீர் என்று டீயைச் சொல்லுகிறோம்.
இவ்வாறே காஃபியைக் காப்பி என்றுரைத்தல் சாலும். மூக்கைத் தலையைச் சுற்றிப் பிடிப்பதுபோல், மாட்டுக் குளம்பின் வடிவில் (பிளவுபட்டு) காப்பிக் கொட்டை இருப்பதால் அதனைக் குளம்பி எனல் சரியானதுதானா? விவரம் தெரியாதவர் இதனைக் குழம்பி என்றுரைத்துக் குழப்பிவிடுகிறார்கள்.

படித்தவர்களும் ஐந்நூறு என்னும் சொல்லை ஐநூறு என்றெழுதுகிறார்கள். இதழ்களில் வருகின்ற கவிதைகளில் கதைகளில் இச்சொல்லைப் பலமுறை பார்க்க நேர்கிறது.
ஐந்து + நூறு = ஐந்நூறு ஆதல் இலக்கண நெறி.
"ஐ! நூறு" என்று வியத்தல் பொருளில் ஐநூறு விளங்குகிறது.
ஐ - நூற்றை விட்டு இனி, ஐந்நூற்றைப் பிடிப்போம்.

சாமித்துரை என்ற பெயரை சாமித்துறை என்று ஒரு செய்தியேட்டில் காண நேர்ந்தது.
துரையாக (பிரபு) இருப்பவரை ஒரு நீர்த்துறை - படித்துறை ஆக்குதல் சரியா?
மற்றொரு செய்தித்தாளில் கழுத்தை அறுத்துக் கொள்ளப்படும் என்று படித்தபோது மனம் பதறியது.
கழுத்தை அறுத்துக் கொல்லப்படும் ஆடுகளை விட்டு விட்டுத் தமிழை ஏன் கொல்லுகிறார்கள்?
தொலைக்காட்சி - சிறுவர் தொடர்களில் அடிக்கடி போடா கொய்யா என்ற சொல்லைக்கேட்டுள்ளேன். இஃது என்ன சொல்?
ஒன்றும் புரியவில்லை.
அண்மையில் பழங்களின் விலை விவரம் பற்றித் தொலைக்காட்சியில் கூறியவர் கொய்யா (எர்) என்றபோதுதான் ஓகோ! நமது கொய்யாப் பழம்தான் இது என்று புரிந்து கொண்டேன்.
கொய்யாவை - கொய்யா என்பதும் ஒலிப்புப் பிழை.

தமிழ் வளரும்.......

நன்றி:- தினமணி கதிர்

M.Jagadeesan
04-05-2011, 12:47 PM
" கலாய்த்தல் " என்ற சொல்லை இளவயதினர் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் பொருள் "கோபித்தல்" என்பதாகும்.தமிழ் அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

பாரதி
05-05-2011, 06:09 PM
விளக்கத்திற்கு நன்றி ஐயா.

பாரதி
05-05-2011, 06:14 PM
மொழிப் பயிற்சி - 22:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தமிழ் விழாவுக்கான அழகான அழைப்பிதழ் ஒன்று வந்தது. அதில் "ராம காதையை உ"றை"த்திடக் கேட்போரும், படிப்போரும் நரகமெய்திடாரே" என்று இறுதியில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. உ"ரை"த்திட என்னும் இடையின "ர" கரத்திற்கு மாறாக உ"றை"த்திட வல்லினம் போட்டு அழுத்திவிட்டார்கள்.

ஐகாரம் நெட்டெழுத்து என்று அறிவோம். இதனை "அய்" என்று எழுதும்போது அரை மாத்திரை குறைகிறது என்று முன்னரே
சொல்லியுள்ளோம். சிலர் இந்த "ஐ" போட்டுக் கூடவே ஒரு "ய்" போட்டு "ஐய்"யங்கார் பேக்கரி என்று விளம்பரப் பலகையில் எழுதி வைத்துள்ளார்கள்.
ஏன் இவரை இப்படி அழுத்த வேண்டும்!

ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகரின் பெயரை வெண்"ணீரா"டை என்று எழுதிக் காட்டினார்கள். வெண்"ணிற" ஆடை என்ற பொருள் பொதிந்த சொல்லை வெண்"ணீரா"டை என்று ஒரு பொருளும் அற்றதாக ஆக்கியதை என்ன சொல்ல? இப்படியெல்லாம் தமிழைச் சிதைப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம், நாம்தாம் தமிழர்கள்!

பொருட் பிழைகள்:-
காட்டு வேடனாகிய திண்ணன், தன் சிவபக்தி காரணமாகத் தன் கண்ணை எடுத்துக் குருதி வந்த சிவலிங்கத்தின் கண்ணில் அப்பியதால் (அப்புதல் - அழுத்திவைத்தல்) அவன் அவராகிக் கண்ணப்பர் ஆனார். திண்ணன் என்றால் தின் என்று மிக்க உடல் வலிமை கொண்டவன். உறுதி மிகக் கொண்டவன் என்று பொருள் சொல்லலாம்.

கண்ணப்பநாயனார் கதையை ஓர் ஊடகத்தில் ஒருவர் சொல்லும்போது, கண்ணப்பரது பழைய பெயர் திண்ணப்பர் என்று சொன்னார். திடுக்கிட்டோம்.
இது என்ன? பொருள் புரியாமல் பேசுகிறாரா? புரிந்துதான் பேசுகிறாரா? எனும் ஐயம் எழுந்தது.

வைணவ சமய வரலாற்றில் திருக்கோட்டியூர் குறிப்பிடத்தக்க சிறப்பு மேவிய தலம். இந்தத் "திருக்கோட்டியூரை", இந்நாளில் பலரும் "திருக்கோஷ்டியூர்" ஆக்கிவிட்டார்கள். "கோஷ்டி" எனில் ஒரு குழுவை, கும்பலைக் குறிக்கும் சொல். ஏன் இங்கு கோஷ்டி வந்தது? நீளமாகத் தறியில் நெய்து, வெட்டி, வெட்டி எடுக்கப்பட்டதைத் தமிழர் "வேட்டி" என்றனர். இந்த வேட்டியைப் பிற்காலத்தில் "வேஷ்டி" ஆக்கினார்கள் அல்லவா? அப்படித்தான் கோட்டியூர் --- கோஷ்டியூர் ஆயிற்று
(துண்டுதுண்டாகத் துண்டிக்கப்பட்டது துண்டு என்பதும் அறிக).

"ஏமாந்து போனான்" என்று பலரும் எழுதுகிறோம். பேசுகிறோம். இது சரியான சொல்தானா?
ஏமம் எனில் பாதுகாப்பு. "ஏம வைகல் எய்தின்றால் உலகே" எனக் காண்க.
விளைவு, இன்பம், ஏமம் என்பார் திருவள்ளுவரும்.
ஏமாற்றுதல் என்னும் சொல் பொருளுடையது. வஞ்சித்தல், நம்பிக்கையைக் கெடுத்தல் என்று சொல்லலாம்.
வஞ்சிக்கப்பட்டவனை, நம்பிக்கை தொலைந்தவனைத்தான் நாம் ஏமாந்தான், ஏமாந்து போனான் என்று சொல்கிறோம்.
"கம்பன் ஏமாந்தான்" என்று திரைப்பாடலும் எழுதிவிட்டார்கள். ஆனால் இது பிழையான சொல்.
"ஏமாறினான், ஏமாற்றப்பட்டான்" என்பனவே சரியான சொற்கள்.

திருக்காளத்தி கோவில் கோபுரத்தில் விரிசல் கண்டபோது அதனை ஒரு தீய சகுனமாகக் (வருந்தீமைக்கு முன்னறி குறி) கருதினர் மக்கள்.
அதுபற்றிச் செய்தித்தாளில், அதனை "உட்பாதம்" என்று எழுதியிருந்தனர்.
அஃது "உட்பாதம்" அன்று; அஃது "உற்பாதம்" (வடசொல்).
உள்பாதம்தான் --- உட்பாதம் (அடி) ஆகும்.

இப்படித்தான் வைகுண்ட "ஏகாதசி" (பதினோராம் திதி) என்பதை, "ஏகாதேசி" என்று செய்தியாளர் சிலர் தொலைக்காட்சியில் படித்தார்கள்.
ஏகம் - ஒன்று; தேசம்- தேசி - தேசத்தான்.
ஒரே நாட்டினன் என்று "ஏகாதேசி" என்பதன் பொருள் ஆகிவிடும், இசையால் பொருள் கெடல் உண்டு.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்பது அனைவரும் அறிந்த தொடர்.
"கேளிர்" என்பதற்கு உறவினர் என்று பொருள்.
கேள் - கேளிர்.
ஆனால், அதனை நீட்டிக் "கேளீர்" எனில் கேட்பீராக என்பது பொருள். "யாவரும் கேளீர்" என்று இசையின் பொருட்டு நீட்டப்படும்போது, பொருள் சிதைந்து குன்றிவிடுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

ஒருவராகத் தனித்திருப்பவரை "ஒண்டிக்கட்டை" என்று சொல்லும் வழக்கமிருக்கிறது. எங்காவது சென்று மறைந்து கொள்வதை "ஒண்டுதல்" எனலாம்.
ஒண்டுதல், ஒட்டிக் கொள்ளுதல் என்றும் சொல்லலாம். ஒற்றையாளை இந்தச் சொல் எப்படிக் குறிக்கும்? ஒன்றிக்கட்டை என்றிருந்தால் இச்சொல் சரியாக இருக்கும். ஒன்றியாய் என்றால் ஒருவனாகவோ, ஒருத்தியாகவோ இருக்கலாம். ஒன்று என்பதிலிருந்து வந்த சொல்.

சங்ககால ஒளவையார் வேறு; நீதிநூல்கள் பாடிய ஒளவையார் வேறு. இச் செய்தியறியாமல் ஓர் இலக்கியச் சிற்றிதழில் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில் ஒளவையார் என்ற சங்கப் புலவர் இயற்றிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை போன்ற நூல்களை நாம் அவசியம் படிக்க வேண்டும் என்றிருந்தது. எவ்வளவு பெரிய பொருட்பிழை!

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

பாரதி
07-05-2011, 01:38 AM
மொழிப் பயிற்சி - 23:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

நுட்பச் செய்திகள்:-
சபா, சபை என்று வடசொற்களால் குறித்தவற்றை இந்நாளில் நாம் மன்றம், அரங்கம் என்று சொல்லி வருகிறோம்.
- மன்றம் என்பது ஓர் அமைப்பையும்
- அரங்கம் என்பது விழா நடைபெறும் கூடத்தையும்
பொதுவாகக் குறிக்கும்.
- மாமன்றம்
- பெருமன்றம்
- பேரவை
- முற்றம்
என்னும் சொற்களும் நல்ல தமிழில் இன்று வழக்கத்தில் உள்ளன.
பழைய நாட்களில் மரத்தடியையும், தொழுவத்தையும் கூட "மன்றம்" என்றனர். அப்போதெல்லாம் மரத்தின் அடியில் (நிழலில்) பலர் கூடிப் பேசியிருந்தமையால் - பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்து - நாட்டாண்மையெல்லாம் - மரத்தடியில் நிகழ்ந்தமையால் மன்றம் எனும் சொல்லின் பொருள் பொருத்தமடைகிறது.
ஆனால் தொழுவம் என்பது மாடுகளைக் கட்டும் இடம். மாட்டுத் தொழுவம் என்ற பொருள் இந்நாளின் மன்றத்தோடு பொருந்தவில்லை.

அரங்கம் என்பது சிலம்ப விளையாட்டு நிகழும் இடத்தைக் குறித்தது. சிலம்ப விளையாட்டைத் திறந்த வெளியிலோ ஒரு பெரிய கூடத்திலோ இன்றும் நிகழ்த்தக் காண்கிறோம்.
அரங்கம், பெரிய கூடத்தை உணர்த்தும் சொல்லாகப் பொருந்துகிறது. ஆனால் அதற்குச் சுடுகாடு என்ற பொருளும் உண்டு என்று அறியும் போது நமக்கு அச்சம் ஏற்படுமன்றோ?

ஆகியோர், முதலியோர்:-
ஆகியோர், முதலியோர் எனும் இரண்டு சொற்களை இடவேறுபாடு கருதாமல் பொருத்தம் இல்லாமல் இந்நாளில் பலர் எழுதி வருகிறார்கள்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடியவர் ஆவர். ஆகிய என்ற சொல்லை வரையறுத்த எண் முற்றிலும் குறிக்கப்படும் இடங்களில்தான் பயன்படுத்த வேண்டும்.
கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்ட நாயனார், அப்பூதியடிகளார் முதலிய நாயன்மார்களைப் பற்றிப் பெரிய புராணம் பேசுகிறது.
கண்ணப்பர், சிறுத்தொண்டர், அப்பூதியோடு முடியவில்லை. இன்னும் பலர் (அறுபத்து மூவர்) இருப்பதால் முதலிய எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.
இவற்றை மாற்றிப் பயன்படுத்துதல் பிழை.

ஆகிய, ஆகியோர் என்று சொல்லும்போது அத்தொகுப்பில் உள்ளவர் அனைவர் பெயரும் இடம் பெற வேண்டும். ஒரு தொகுப்பில் உள்ள சிலவற்றைச் சொல்லி, பிற சொல்லாமல் விடும்போது முதலிய (முதலாகவுடைய) என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப் பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
"ஆகிய" எட்டு நூல்களும் எட்டுத் தொகை எனப்படும்.

1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப் படை .......
"முதலிய" பத்து நூல்கள் பத்துப்பாட்டு எனப்படும்.
எட்டுத் தொகையில் எட்டு நூல்களும் சொல்லப்பட்டனவாதலின் "ஆகிய" எனும் சொல் பயன்பட்டது.
பத்துப்பாட்டில் இரண்டு மட்டுமே குறித்ததால் "முதலிய" எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.

இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் "தீப ஒளி"த் திருநாள் என்ற சொல்லாட்சி கண்டு, கேட்டு வருகிறோம்.
தீபாவளி எனும் சொல் பிழையான சொல்லா?
தீபம் + ஆவளி = தீபங்களின் வரிசை என்பது இதன் பொருள்.
வடபுலத்தில் தீபங்களை (விளக்குகளை) வரிசையாக நிரம்ப ஏற்றி வழிபடும் பழக்கத்தால் வந்த சொல் இது.
நாமும் கூட, திருக்கார்த்திகை நாளில் தீபங்களை நிரம்ப ஏற்றுகிறோம் அல்லவா?
தீப ஒளியென்பதற்கு "விளக்கின் வெளிச்சம்" என்பது பொருள்.
விளக்கில் வெளிச்சம் வருவது இயல்புதானே?
இதில் என்ன சிறப்பு இருக்கிறது?
உண்மையில் பட்டாசுகளின் இரைச்சலும், வெளிச்சமும்தான் காணுகின்றோம். ஆதலின் தீபாவளியைத் தீப ஒளி ஆக்குதல் வேண்டுமா?

செருக்கு, தருக்கு:-
செருக்கு, தருக்கு என இரு சொற்கள் ஒன்றுபோல் இருப்பவை. ஆனால் நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு.
- ஒருவர்க்குத் தாம் கற்ற கல்வியால் செருக்கு இருக்கலாம். இருக்கவேண்டும்.
"ஞானச் செருக்கு" என்பான் பாரதி.
- ஆனால் நிரம்பக் கற்றுவிட்டோம் என்று தருக்கித் திரிதல் தகாது.
செருக்கு ஒரு பெருமிதம். அது கல்வியாலோ, கொடையாலோ, வீரத்தாலோ உண்டாகலாம்.
ஆனால் எதனாலும் மனிதர்க்கு தருக்கு உண்டாதல் தகாதாம். தன்னை விஞ்சியவர் எவருமிலர் என்னும் தருக்கு அழிவைத் தரும்.

பிழை தவிர்த்தல்:-
பேசுவதிலும், எழுதுவதிலும் ஏற்படக்கூடிய பிழைகளைத் தவிர்த்தல் எப்படி?
ஒற்றுப் பிழைகளைப் பொறுத்தவரையில் நாம் இயல்பாக வாய்விட்டுப் பேசிப் பார்த்தாலே எங்கு வல்லொற்று (க்,ச்,ட்,த்,ப்) மிகும் என்பதை அறியக் கூடும்.
வலிந்து நாமாக ஒற்றைத் திணித்தல் சரியன்று:-
ஒற்றை விட்டுவிட்டாலும் பொருட்சிதைவோ, விட்டிசைத்தலோ ஏற்படும்.
நிரம்பப் படித்தவர்களின் நூல்களில் கூட, ஒற்றுப் பிழைகளைக் காணும்போது அவை அச்சுப் பிழைகளா? அன்றி அறியாப் பிழைகளா என்று ஐயமுற நேர்கிறது!

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

கீதம்
07-05-2011, 08:31 AM
செருக்கும் தருக்கும் வேறுபடும் விதம் அறிந்தேன். ஆகிய, முதலிய இவற்றிடையே உள்ள பொருள் வேறுபாடு குறித்த ஐயம் தெளிந்தது. பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
08-05-2011, 01:39 AM
நன்றி கீதம்.

----------------------------------------------------------


மொழிப் பயிற்சி - 24:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ.ஞானச்செல்வன்

"நான்கு கட்டுரை"க்" கொண்ட இந்த நூலில்" என்று ஒரு தொடரைக் கண்ணுற்றேன்.
"கட்டுரைக்கொண்ட" - சொல்லிப் பாருங்கள். இயல்பாக உள்ளதா? இல்லை! ஏன்?
அது "கட்டுரை கொண்ட" என இயல்பாக இருத்தல் வேண்டும்.
நான்கு கட்டுரைகளைக் கொண்ட - என்று வேற்றுமை உருபு விரிந்து வரும்போது வல்லொற்று மிகுதல் தானாகவே ஏற்படுகிறது.

இப்படி மற்றொன்று:-
"ஆழ்"க்"கடல் ஆய்வு செய்யும் குழுவினர்" என்று அறிஞர் ஒருவர் நூலில் படித்தேன். இஃது ஆழ்கடல் ஆய்வு என்று வல்லொற்று மிகாது அமைதல் வேண்டும். இதனை வினைத்தொகை எனலாம்.
- ஆழமாய் இருந்த கடல்
- ஆழமாய் இருக்கும் கடல்
- ஆழமாய்ப் போகும் கடல்
முக்காலத்தும் கடல் ஆழம் உடையதே.
கடல் ஆய்வு பற்றிய நூலில் நாம் சொல்லாய்வு செய்கிறோம்.

"ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி"ப்" பெற்றுள்ளன".
இப்படி ஒரு செய்தி படித்தோம். பாசன வசதி பெற்றுள்ளன என்று ஒற்று நீக்கி எழுதிட வேண்டும். பாசன வசதியைப் பெற்றுள்ளன எனில் சரியாம். வசதியை (ஐ) இரண்டாம் வேற்றுமை உருபு விரி என்று சொல்லுவோம். இவ்விடத்து வல்லொற்று மிகும்.
சற்றே கவனம் போதுமே.

ஒருமை, பன்மை வேறுபடும் நிலைகளை நாம் முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். ஆயினும் மேலும் மேலும் ஒருமை, பன்மைச் சிதைவுகளைப் பார்க்கும்போது மீண்டும் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது.

"இந்தியாவின் கவலை"கள்" தெரிவிக்கப்பட்டது" என்று செய்தி படிக்கிறார்கள். கவலைகள் என்று பன்மையில் உள்ளதே, தெரிவிக்கப்பட்டன எனப் பன்மையில் முடிப்போம் என்று ஏன் அவர் உணரவில்லை. சற்றே கவனம் செலுத்தினால் போதுமே.

பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சியில் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றுகிறார். தமிழில் ஒருமை, பன்மை என்று ஓர் அமைப்பு உண்டு. அதனை இலக்கணம் உரைக்கிறது என்ற நினைவே தோன்றாதா? ஆங்கிலத்தில் ஒருமை, பன்மை கெட வாக்கிய அமைப்புகள் செய்வார்களா?

”சிலப்பதிகாரத்தில் மூன்று காண்டங்கள் உள்ளது. அக்காப்பியத்தில் முப்பது காதைகள் உள்ளது. அதில் மூன்று நீதிகள் சொல்லப்பட்டுள்ளது.”

மூன்று தொடர்களிலும் இப்படித் தவறு செய்கிறாரே! தப்பித் தவறி ஒருமுறையாவது உள்ளன என்று சரியாகச் சொல்லமாட்டாரா என்று மனம் ஏங்குகிறது.

ஓர் இலக்கிய விழா அழைப்பிதழில் பேராசிரியர் ஒருவர் பெயரைத் தவறாக அச்சிட்டிருந்தார்கள். எப்படி?
சிட்சபேசன் என்று.
அவர் பெயர் சித்சபேசன்.
சித்+ சபை+ ஈசன் = சித்சபேசன்.
"சித்" என்பது அறிவு. அறிவாளர் அவைக்குத் தலைவன் அவன். தில்லைப் பொன்னம்பலத்தையே சித்சபை என்போம். அந்த நடராசப் பெருமானே சித்சபேசன். இந்த அருமையான பெயரை இப்படிச் சிதைக்கலாமா?

தனித்தமிழ் நாளேடு ஒன்றில் போனஸ் - "கொடுபடா ஊதியம்" என்று தமிழ்ச்சொல் அளித்திருந்தார்கள். ஊதியப் பாக்கியைத்தான் (அரியர்ஸ்) கொடுபடா ஊதியம் என்று சொல்லுதல் பொருந்தும். போனஸ் என்பது ஆக்கத்தில் (இலாபத்தில்) தரப்படும் பங்குப் பணம். அஃதாவது, ஊதியத்தின் மேல் தரப்படும் "மேலூதியம்" ஆகும். உயர்படிப்புக்காகத் தரப்படும் "இன்சென்டிவ்" என்பதை "ஊக்க ஊதியம்" எனலாம்.

கருத்துச் சிதைவுகள்:-
கண்ணகி கோவலனோடு சில மாதங்களே குடும்பம் நடத்தினாள் என்று ஒருவர் பேசக் கேட்டேன். சில மாதங்கள் அன்று; சில ஆண்டுகள் கண்ணகி கோவலனோடு அன்புற்று, இன்புற்று வாழ்ந்தாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. "தனிமனை வாழ்க்கையில் யாண்டு சில கழிந்தன கண்ணகி தனக்கு", என்பார் இளங்கோவடிகள்.
உலகின் நிலையாமையை உணர்ந்து எல்லா இன்பமும் இப்போது துய்த்திட வேண்டும் என்பது போல் இன்பம் துய்த்தார்களாம்.

"கருத்து யுத்த"மாம்; இப்படி ஒரு பேச்சு நிகழ்ச்சி. ஏன்?
கருத்துப் போர் எனில் யாருக்கும் புரியாதோ?
போரைவிட யுத்தம் பெரிது என்று கருதினார்களோ?
நல்ல தமிழிருக்க யுத்தத்தில் நாட்டம் ஏனோ?

இது போகட்டும்.
நாம் எழுத நினைத்தது வேறு ஒன்று. அது நிகழ்வில் பேசிய ஒருவர் சொல்லிய கருத்து.
அவர் சொன்னார்:-
"அரண்மனைக்கு வந்த சோதிடன் ஒருவன் இளங்கோ அரசனாவார், அவர் தம்பிக்கு அரசாட்சி இல்லை என்றபோது, இளங்கோ தம்பி அரசாளட்டும் என்று சொல்லித் துறவியானார்''. கதையையே மாற்றிவிட்டார். மூத்தவன் இருக்க இளையவன் அரசனாவான் என்றான் சோதிடன். இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டென்றான். அண்ணன் செங்குட்டுவன் மனம் நோகும் என்பதால், அப்போதே அரண்மனை விட்டகன்று துறவு மேற்கொண்டார் என்பது வரலாறு.

தமிழ் வளரும்.......

நன்றி:- தினமணி கதிர்

பாரதி
09-05-2011, 01:27 AM
மொழிப் பயிற்சி - 25:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


இரவு மணி எட்டு:-
தன் பேச்சைத் தொடங்கிய பேச்சாளர் "இந்த இனிய மாலை நேரத்தில்" என்று தொடங்கினார்.
உடனே, இல்லை மாலை நேரம் போய்விட்டது. இப்போது இரவாயிற்று என மாற்றினார்.
உண்மையில் பத்துமணி வரை மாலை என்பதுதான் தமிழர் வகுத்துள்ள கணக்கு.
- காலை (மணி 6 - 10)
- நண்பகல் (10 - 2)
- எற்பாடு (2 - 6)
- மாலை (6 - 10)
- யாமம் (10 - 2)
- வைகறை (2 - 6)
என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.

(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்), இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓராண்டின் ஆறு பருவங்கள். (கார் - மழை, கூதிர் - குளிர்)

"சமுதாயச் சிக்கல்களும் சித்தர் ஆய்வுத் தீர்வைகளும்" எனும் தலைப்பில் ஒரு நூல் நமது மதிப்புரைக்காக அனுப்பப்பட்டு வந்திருந்தது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு நம்மைத் திகைக்க வைத்தது. நீளமாக இருப்பதால் அன்று. ஆய்வு தீர்வை எனும் சொல் கண்டு மலைத்தோம்.

ஆயத் தீர்வை நாம் அறிந்ததுண்டு. இஃது என்ன ஆய்வுத் தீர்வை? ஆய்வுத் தீர்வுகள் எனும் சொல்லைத் தீர்வைகள் (நிலவரி) ஆக்கியமை எத்துணை பெரிய தவறு!

நூல்கள் பதிப்பாளர் கூட்டத்தில் உரையாற்றிய பொது நூலகத்துறை இயக்குநரை ---பொதுநலத்துறை இயக்குநர் என்று ஒரு நாளிதழ் அச்சிட்டிருந்தது. சில எழுத்துகள் மாறி அச்சுப் பிழை நேர்ந்திருக்கலாம். ஆனால் எவ்வளவு பெரிய பொருள் வேறுபாடு?
நூலகத்துறையை நலத்துறையாக ஆக்கிவிட்டதே!
ஆங்கிலப் பத்திரிகைகளில் இப்படி வந்திருந்தால் ஆசிரியர்க்குக் கடிதம் எழுதி கிழி, கிழி என்று கிழித்திருக்கமாட்டார்களா?

பத்து ஆண்டுகள் முன் ஒரு வார ஏட்டில் ஒரு கவிதை படித்தேன்.
அதில் "அக்கினிப் பிரவேசம் அயோத்தியில் நடந்தது" என்று ஒரு வரி. இராமன் இராவணனைக் கொன்ற பின், சீதையை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பும் முன்பு, சீதை அப்பழுக்கற்றவள் எனக் காட்டத் தீக்குளிக்கச் சொன்னான். அந்த அக்கினிப் பிரவேசம் இலங்கையில் நடைபெற்றது. இவரோ அயோத்தியில் என்று எழுதியுள்ளார். அரைகுறையாய் அறிந்த செய்தி கொண்டு மோனை அழகுக்காக இப்படி எழுதினாரோ!

தஞ்சை மாவட்டத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றில், "பஸ் நின்ற பின் இரங்கவும்" என்று எழுதியிருக்கிறார்கள். "ஐயோ இந்த ஓட்டைப் பேருந்தில் பயணம் செய்தோமே" என்று தன்னிரக்கம் கொள்ள வேண்டியதுதான்.

இதுமட்டுமன்று; "டிரைவருக்கு இடையூராகப் பேசாதீர்" என்று ஓர் அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது. பட்டுக்கோட்டையில் ஏறினால் தஞ்சாவூரில்தான் இறங்க வேண்டும் போலும். இடையில் உள்ள ஊர்கள் பற்றிப் பேசக் கூடாதாம். தமிழ் எப்படி விளையாடுகிறது!
"தொகையும் விரியும்" - வேற்றுமை உருபு விரிந்து வரும்போது என்று எழுதியுள்ளீர்கள்?

விரிந்து வருதல் என்றால் என்ன என ஓர் அன்பர் வினவினார்.
- தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்)
- விரி எனில் விரிந்து வருதல் (வெளிப்படையாக வருதல்) மறைந்தும் வெளிப்படையாகவும் வரும் என்றால் விளங்கவில்லையே! எவை அப்படி வரும்?
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை என ஐந்து.
இவற்றின் உருவுகள் மறைந்துவந்தால், வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்பர் இலக்கண நூலார்.

"வீடு சென்றான்" எனில் வீட்டிற்குச் சென்றான் எனப் பொருள்.
இதில் "கு" எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம்.

வீடு சென்றான் என்பதை வீட்டிற்குச் சென்றான் என எழுதும்போது இது வேற்றுமை விளி.

எரிந்த, எரிகின்ற, எரியும் தழல் எரிதழல் - இது வினைத் தொகை.
நேற்றும் எரிந்த தழல்; இன்று எரிகின்ற தழல், நாளை எரியும் தழல் என முக்காலமும் உணர்த்தும்.

எரிகின்ற தழலில் எண்ணெய் ஊற்றினாற் போல - எரிகின்ற என்பதில் காலம் வெளிப்படை. இது தொகையாகாது.

செந்தாமரை - இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம்.

கபில பரணர் வந்தார்.
இது கபிலரும், பரணரும் வந்தார்கள் என்று விரியும்.
உம் எனும் இடைச் சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.
"உம்" வெளிப்பட்டு நின்றால் அது விரி.

புலிப் பாய்ச்சல் புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள் தரும்.
போன்ற எனும் உவமை உரு, மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை.

தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.

தமிழ் வளரும்.......

நன்றி:- தினமணி கதிர்

பாரதி
10-05-2011, 05:22 PM
மொழிப் பயிற்சி - 26:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

புலிப்பாய்ச்சல் - புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள்தரும். போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை.

தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.
பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை.
ஒரு வாக்கியத்தில் உள்ள எழுவாய் (பெயர்) வேறுபடாத நிலையில் முதல் வேற்றுமை.
(எடுத்துக் காட்டு) முருகன் வந்தான்.
- இரண்டாம் வேற்றுமை - முருகனை வணங்கினான் (ஐ)
- மூன்றாம் வேற்றுமை - முருகனால் முடியும் (ஆல்)
- நான்காம் வேற்றுமை - முருகனுக்குக் கொடு (கு)
- ஐந்தாம் வேற்றுமை - முருகனின் வேறு (இன்) (பிரித்தல் பொருள்)
- ஆறாம் வேற்றுமை - முருகனது வேல் (அது) உடைமைப் பொருள் - ஏழாம் வேற்றுமை - முருகனிடம் சென்றான் (இடம்)
- எட்டாம் வேற்றுமை - முருகா வா - விளித்தல்

இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை மறைதலே வேற்றுமைத் தொகை.
எந்த வேற்றுமை உருபு மறைந்துள்ளதோ, அதனைச் சொல்லிக் (நான்காம் வேற்றுமைத் தொகை என்பதுபோல்) குறிப்பிடல் வேண்டும்.

வினைத் தொகையில் காலம் மறைந்து வரும்.
உவமைத் தொகையில் உவம உருபுகள் மறைந்து வரும்.
போல, போன்ற, ஒத்த, நிகர்த்த, புரைய, ஒப்ப, அனைய - ஏதாகினும் ஓர் உருபு மறைந்து வரலாம்.

பண்புத் தொகையில் "மை" எனும் விகுதியும் "ஆகிய" எனும் உருபும் மறைந்திருக்கும். "உம்" எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை. இந்த ஐந்து தொகைகளின் வழியாக இவற்றுள் அடங்காத மற்றொரு சொல் மறைந்திருப்பது அன்மொழித் தொகை எனப்படும். அல் + மொழி + தொகை (அல்லாத சொல் மறைதல்)

எ-டு:- தேன்மொழி வந்தாள் - தேன் போன்ற சொல் பேசும் பெண் வந்தாள் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தேன்மொழி எனும் பெயருடைய பெண் வந்தாள்) பெண் எனும் சொல் ஈண்டு அன்மொழி.
பைந்தொடி கேளாய் - பசிய (பச்சைநிற) வளையல் அணிந்த பெண்ணே கேள் (பெண் அன்மொழி)

இப்போதைக்கு இதுபோதும், இலக்கணச் சுமையை ஏற்றுதல் நம் நோக்கமன்று.

துவக்கமா? தொடக்கமா?
ஊராட்சி துவக்கப்பள்ளி, விழாவைத் துவக்கி வைத்தார் என்று பார்க்கிறோம், கேட்கிறோம். தொடக்கப்பள்ளி, தொடங்கி வைத்தார் என்றும் காண்கிறோம். எது சரி?

தொடு - தொட - தொடக்கு - தொடங்கு என்று பார்த்தால், ஒன்றைத் தொடங்கும்போது கைகளால் தொட்டு அல்லது சொற்களால் தொட்டுத்தானே ஆக வேண்டும். ஆதலின் தொடக்கம், தொடங்கினார் என்பன சரியான சொற்கள்.
(தொடு - (பள்ளம்) தோண்டு; தொட்டு - (பள்ளம்) தோண்டி எனும் பொருள் உண்டு.)
துவ - துவக்கு என்று பார்த்தால் "துவ" என்பதன் பொருள் ஒன்றுமில்லை. துவள் எனும் பகுதி உண்டு.
இது துவளுதல் - துவண்டு போதல் ஆகும்.
ஆதலின் துவக்கினார் என்பதும், துவக்கப்பள்ளி என்பதும் பிழையெனத் தோன்றவில்லையா?

அறிக்கை - அறிவிக்கை
இவ்விரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்டவை.
அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுக்கிறார்கள். ஓர் ஆய்வுக் குழு தமது பரிந்துரை அல்லது தீர்ப்பை அறிக்கையாக வெளியிடுகிறது. ஆதலின் ஆங்கிலத்தின் ரிப்போர்ட் என்பதை அறிக்கை எனலாம்.

அரசு அவ்வப்போது சில செய்திகளை மக்களுக்கு அறிவிக்கிறது.
நிறுவனங்கள் மக்களுக்கு அறிவிக்கும் செய்திகள் உண்டு.
வங்கிகள் நகைகளுக்கு ஏலமிடுதல்பற்றி அறிவிப்புச் செய்கிறது.
இந்த வகையானவை அறிவிக்கை எனலாம்.
ஆங்கிலத்தில் நோட்டீஸ் (Notice) என்பதுதான் அறிவிக்கை.

தப்பு - தவறு - பிழை
சரியா? தப்பா? என்று பேசுகிறோம்.
சரியா? தவறா? என்று வினவுகிறோம்.
தப்புத் தவறு செய்ததில்லை என்று சொல்கிறார்கள்.
தப்பித் தவறியும் கெட்ட வார்த்தை பேசமாட்டேன் என்பார் சிலர்.
தப்பும் தவறும் உடன் பிறந்தவை. ஒரே பொருள் கொண்டவை.
ஆனால் "தப்பு"வில் தப்பித்தல் எனும் பொருள் அடங்கிக் கிடக்கிறது.
உங்கள் கருத்து தவறு என்று சொல்கிறோம். தவறான செய்தி என்கிறோம். தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதுகிறோம். ஆகத் தப்பு என்பதனினும் தவறு அழுத்தம் உடையதாக அறிகிறோம். அறியாமல் செய்வது தப்பு என்றும், அறிந்தே செய்வது தவறு என்றும் சொல்வாருளர்.

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

பாரதி
13-05-2011, 02:31 PM
மொழிப் பயிற்சி - 27:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

பிழை என்பது சந்திப் பிழை, எழுத்துப் பிழை, சொற்பிழை, சொற்றொடர்ப் பிழை (வாக்கியப் பிழை) என்றெல்லாம் தமிழாசிரியர்கள் வழக்கில் மிகுதியாகப் பயன்படும் சொற்கள்.

"பிழையின்றித் தமிழ் பேசு" என்பதா? "தவறின்றித் தமிழ் பேசு" என்பதா? எது சரி?
இரண்டும் சரிதாம்.
இல்லை, தவறின்றி எனல் தவறு. மொழியைப் பொறுத்துப் பிழை என்று சொல்லுதலே சரி என்பார் உளர்.
ஐயா, பிழையைத் தவறு எனல் பொருந்தாது என்கிறீர். பிழையைக் குற்றம் என்றே இலக்கணம் சொல்லுகிறதே.
சொற்குற்றம், பொருட்குற்றம் என்றெல்லாம் சொல்லுகிறார்களே.
நூலில் வரக்கூடாதவற்றைப் பத்துக் குற்றங்கள் என்று நன்னூல் பேசுகிறதே.
"குன்றக் கூறல், மிகைப்படக் கூறல், கூறியது கூறல், மாறுபடக் கூறல்" முதலியன குற்றங்களாம்.
ஆதலின் கொலை, களவு போன்றவைதாம் குற்றங்கள் எனக் கருதுவது நமது மனப்பான்மையாகும்.
"தப்பு"வில் தப்பித்தல் பொருளும் உண்டாதல் போல, பிழை என்பதில் பிழைத்தல் எனும் பொருள் உண்டாகும்.
தப்பிப் பிழைத்தேன் என்றும் சொல்லுவோம். பிழைத்தல் என்றால் தவறு செய்தல் என்ற பொருளும் உண்டே.
சான்றோர்ப் பிழைத்தல் என்றால் சால்புடைய பெரியார்க்குத் தவறிழைத்தல் என்று பொருள்.
(உயிர் பிழைத்தல் வேறு. உயிர் வாழ்தல் வேறு என்று விளக்கம் பல தருவோம். இதுவேறு)
முடிவாக பிழை, தவறு, குற்றம் எல்லாம் ஒரே பொருள் தருவன எனினும் இடமறிந்து
தக்கவாறு பயன்படுத்துதல் வேண்டும் என அறிக.
என்ன ஒரே குழப்பமா? ஊன்றிப் படியுங்கள். தெளிவு பிறக்கும்.

வன்னம் - வண்ணம்:-
இரு சொற்களுக்கும் நிறம், அழகு எனும் பொருள் உண்டு.
இருப்பினும் நிறத்தைக் குறிக்க நாம் வண்ணம் எனும் சொல்லையே பயன்படுத்துகிறோம்.
இரண்டிற்கும் வேறுபாடான பொருளும் உண்டு.
"வன்னம்" எனில் எழுத்து.
"வண்ணம்" எனில் இசைப்பாட்டு வகை என்று இருவேறு பொருள் காணலாம்.
இவ்வண்ணம், இவ்வாறாக என்ற பொருளிலும் பயன்பாட்டில் உள்ளது.
இராமபிரானின் கைவண்ணம், கால் வண்ணம் பற்றியெல்லாம் கம்பன் பாட்டில் கண்டு மகிழலாமே.
வன்மை - வண்மை = வன்மை என்பது வலிமையாகும்.
உடல் வன்மை வேண்டும் என்போம். சொல்வன்மை, அனைத்து வன்மையிலும் உயர்ந்தது என்று சொல்லுவோம்.
வன்மை, வலிமை, வல்லமை எல்லாம் ஒன்றே.
வல்லரசு நாடுகள் என்றால் போர் வன்மை மிக்க நாடுகள் எனப் பொருளன்றோ?
வண்மை என்பது வளத்தைக் குறிப்பது. வழங்குதலையும் குறிக்கும்.
அஃதாவது வள்ளல் தன்மை வண்மை எனப்படும்.
"வறுமையின்மையால் வண்மையில்லை கோசலத்தில்" என்பான் கம்பன். (வண்மையில்லை நேர் வறுமையின்மையால்)
வன்மையும், வண்மையும் உடையதாக ஒருநாடு திகழுமாயின் அது நன்னாடு ஆகும்.

கன்னன் - கண்ணன்:-
இரண்டும் இருவரது பெயர்கள்.
- முன்னவன் கர்ணன்,
- பின்னவன் கிருஷ்ணன்.
தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் = கன்னன் எனவும், கிருஷ்ணன் = கண்ணன் எனவும் ஆயினர்.
ஆக்கியவர் வில்லிபுத்தூரார். இப்படியாக்கிட வழியுரைத்தவர் தொல்காப்பியர்.
"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே''.
- கர்ணம் என்பது காதைக்குறிக்கும் வடசொல்.
- கிருஷ்ணம் என்பது கருமை குறித்த வடசொல்.

பத்துமணி செய்தியா? பத்துமணிச் செய்தியா?:-
பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தி, பத்துமணி செய்தி என்று வல்லொற்றுமிகாமல் இயல்பாகச் சொல்லுதலே சரி.
பத்து மணிச் செய்தி என்றால் "மணியான செய்தி பத்து" என்று பொருள் மயக்கத்திற்கு இடமாகும். (மணிச் செய்தி - மணியான செய்தி)
மணிச்செய்திகள் என்றால் மணி, மணியான செய்திகளன்றோ? மற்றொன்று இந்த நிகழ்ச்சி இரவு பத்து முப்பது மணிக்கு என்று சொல்லுகிறார்களே!
இது சரியா? சரியன்று.
பத்து முப்பது மணி (10:30) - மணி என்றால் பத்து மணிக்கா, முப்பது மணிக்கா? மணி என்னும் சொல், பத்தோடும், முப்பதோடும் இயைவு கொள்ளுமே!
பின்,எப்படிச் சொல்லுவது?
இரவு மணி பத்து முப்பதிற்கு (10:30) எனலாம். இதற்குப் பத்துமணி முப்பது நிமிடத்திற்கு என்று பொருள் கொள்ளலாகும்.

மறுதேர்வு, மறுத்தேர்வு:-
ஒரு முறை தேர்வு நடத்தி அதில் ஏதோ தவறு நேர்ந்து மீண்டும் அத்தேர்வு நடத்தப்படுவதை மறுதேர்வு எனல் வேண்டும்.
ஆனால், சில பத்திரிகைகள் மறுத்தேர்வு நடைபெற்றது என எழுதுகின்றன. மறுத்தேர்வு என்றால் மறு (மாசு - குற்றம்) உடைய தேர்வு என்று பொருள் தரும். ஆதலின் ஒற்றுப் போட்டு அழுத்த வேண்டாம்.

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

பாரதி
15-05-2011, 01:52 PM
மொழிப் பயிற்சி - 28:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டன என்ற செய்தியை ஒரு பத்திரிகை நோயுற்ற வாழ்வு வாழ்வதற்கான என்று அச்சிட்டிருந்தது. ஓர் எழுத்து மாற்றம் எவ்வளவு பெரிய பொருள் மாற்றத்தைத் தருகிறது என உணர்வோமா?
(அற்ற - இல்லாத; உற்ற- பெற்ற) எப்போதும் நோய் அற்றவராகவே இருப்போம்.

வெகுளிப் பெண்
கள்ளம், கபடம் அறியாத சூது, வாது தெரியாத (அப்பாவிப்) பெண்ணை வெகுளிப் பெண் என்று சொல்லி வருகிறோம்.
பெண்ணை மட்டுமன்று, "அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது" என்று ஆண் பிள்ளையையும் சுட்டுவதுண்டு. ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது, கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம் (கோபம்) என்பதுதான் பொருள்.

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது"
ஆகக் "கோபக்காரியை" "அப்பாவி" ஆக்கிவிட்டோம். அப் பாவி என ஆக்காமல் விட்டோமே!

குண்டுமணி:-
காட்டுச் செடி ஒன்றின் விதையைக் குண்டுமணி என்கிறோம்.
பெருமளவு சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் உடையது அது.
"ஒரு குண்டுமணி" தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.
பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்தியதுண்டு.
குண்டு மணி என்று உடல் மிகக் குண்டாக இருக்கும் ஒரு நடிகருக்குப் பெயருண்டு.
முன் சொன்ன குண்டு மணி என்ற சொல் சரியானதா?
இல்லை. அதன் பெயர் குன்றிமணி.

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது.
"புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து"
என்பது ஒரு குறள்.

குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து.

"கேவரு" தெரியுமா உங்களுக்கு?
அதுதான் கேவரகு.
இச்சொல்லி இடைக்குறையுள்ளது.
அஃதாவது கேழ்வரகு என்னும் சொல்லில் இடையில் உள்ள "ழ்" எனும் எழுத்துக் குறைந்துவிட்டது.
சரியாகச் சொன்னால் கேழ்வரகு எனும் சிறு தானியம் இது.
உடலுக்கு நல்ல ஊட்டம் தருவது.
என்ன தமிழோ இது?

"வெள்ள நிவாரணமாக ஒவ்வொருவர்க்கும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டது" என்று செய்தி படித்தார்கள்.
தலா என்பதன் பொருள் தலைக்கு என்பதாம். இது தலையுடைய மனிதரைக் குறிக்கும்.
தலைக்கு ஆயிரம் ரூபா என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபா என்றாலும் பொருள் ஒன்றே.
ஒவ்வொருவர்க்கும் எனச் சொன்னால் தலா வேண்டாம்.
தலா போட்டால் ஒவ்வொருவர்க்கும் எனல் வேண்டாம்.

கல்வி கண் போன்றது; கல்விக் கண் கொடுத்த கடவுள் - இவ்விரண்டு தொடரும் பிழையற்றவை.
ஆனால் ஒரு புத்தகத்தில் கல்விக் கண் போன்றது என்றும், ஒரு சிற்றிதழில் கல்வி கண் கொடுத்த கடவுள் என்றும் படிக்க நேர்ந்தபோது என்ன தமிழோ இது? என்று மனம் வருந்தினேன்.
கல்வியானது மனிதருக்குக் கண்ணைப் போன்றது என்பது முதல் தொடரில் பொருள்.
கல்வியாகிய கண்ணைக் கொடுத்த கடவுள் இரண்டாம் தொடரின் பொருள்.
கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்தும்போது கல்விக்கண் (வல்லொற்று) மிகுதல்
சரியாம்..
உருவகம் என்றால் கல்வி வேறு கண் வேறு இல்லை.
கல்வியே கண்ணாம் என்று கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்துதல்.
கல்வி கண் போன்றது எனும் போது கல்வியானது கண்ணைப் போன்றது எனக் கல்விக்குக் கண்ணை உவமை சொல்கிறோம்.
இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் வல்லொற்றுப் போட்டால், கல்விக் கண் என்று உருவகமாகிவிடுகிறது.
பின் போன்றது எனும் சொல்லுக்குப் பொருளில்லாமல் போகும்.
இஃதன்றி, மற்றொரு தொடரில், கல்வி கண் கொடுத்த என்றிருப்பது கல்வியும், கண்ணும் கொடுத்த என்று வேறு பொருள் உருவாக்கிடும்.
ஆதலின் கல்விக் கண் கொடுத்த என்று எழுதுதல் முறையாம்.
எங்கே எப்படி இந்த ஒற்றெழுத்துகளைப் போடுவது என அறிய நல்லறிஞர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.

பிறமொழிக் கலப்பு:-
தமிழர் தம் எழுத்திலும், பேச்சிலும் இந்நாளில் மிகுதியாகக் கலந்துள்ள மொழி ஆங்கிலம்.
முதலில் தமிழில் கலந்த பிறமொழி, சமக்கிருதம் எனும் வடமொழியே.
அளவிறந்த வடசொற்கள் தமிழில் கலந்த போது அதற்கு இலக்கணம் வரையறுத்தது தொல்காப்பியம்.
வடமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப ஒலித்திரிபு செய்து வடவெழுத்துகளை விலக்கித் தமிழாக்கிக் கொள்வதே அந்நெறி.

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

M.Jagadeesan
15-05-2011, 03:32 PM
மொழிக்கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பேச்சு வழக்கில் நாம் செய்யும் தவறுகளை அறிந்துகொள்ள நேரிட்டது. தொடரட்டும் தங்களின் நன் முயற்சி.

கீதம்
17-05-2011, 05:02 AM
வெகுளியின் பொருள் அறிந்து வியந்தேன். பல இடங்களிலும் அப்பாவித்தனம் என்பதற்கு வெகுளி என்ற வார்த்தை இயல்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிரடித் தாக்குதல் என்று பொருள்படும் ஆங்கிலவார்த்தையான assault என்பதற்கு அலட்சியமாக இருந்தான் என்று தவறான பொருள் கொள்வது போலத்தான் இதுவும் போலும்.

அசட்டையாக இருந்தான் என்பதைத்தான் அசால்ட்டாக இருந்தான் என்று மாற்றிவிட்டனரோ?

பல தவறுகளை அறிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
17-05-2011, 08:36 AM
கருத்துக்களுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா, கீதம்.
-----------------------------------------------------------

மொழிப் பயிற்சி - 29:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


சமக்கிருதம் அல்லாது பல்வேறு மொழிகள் காலந்தோறும் தமிழில் வந்து கலந்தன. அராபிய, பாரசீக, இந்துஸ்தானிச் சொற்களும், போர்ச்சுக்கீசியச் சொற்களும், உருது, தெலுங்கு, கன்னடச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன. ஆங்கில மொழிச் சொற்கள் மிகுதியாகத் தமிழில் கலந்து இந்நாளில் ஆதிக்கம் (மேலாண்மை) செய்கின்றன.

இப்போதெல்லாம், நமஸ்காரம், ஸந்தோஷம், சுபமுகூர்த்தப் பத்திரிகை, வந்தனோபசாரம், ஷேமம், அக்கிராசனர், காரியதரிசி, பொக்கிஷதாரர், பாஷை போன்ற சொற்களைப் பயன்படுத்துவோர் தமிழகத்தில் குறைவாகவே உள்ளனர்.

இவற்றை நல்ல தமிழில் வணக்கம், மகிழ்ச்சி, திருமண அழைப்பு, நன்றி நவிலல், நலம், தலைவர், செயலாளர், பொருளாளர், மொழி என்று சொல்லுதல் பெருகியுள்ளது. மிகச் சிலரே நமஸ்காரம், ஸந்தோஷம் என்பனவற்றை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இதற்கு இணையாக - இன்னும் மேலாக ஆங்கிலச் சொற்கலப்பு அன்றாடம் தமிழர் வாழ்வில் நிகழ்கிறது.

காலையில் குட்மார்னிங், மாலையில் குட் ஈவினிங், இரவில் குட் நைட் என்பதோடு, லஞ்ச், டின்னர், டிபன், தாங்ஸ், சாரி, வெரி நைஸ், சூப்பர், ஓகே ஓகே, மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி, ஷோ, நியூஸ்,ரைஸ், ஃபிரை, மட்டன், ஃபிஷ் இப்படி எத்தனை எத்தனையோ!

யாரும் முழுமையாகத் தமிழில் பேசுவதில்லை.
ஒருவர் தம் தங்கையின் திருமண அழைப்பைக் கொடுக்கிறார்.
"சார் நம்ப சிஸ்டர் மேரேஜ் தஞ்சாவூர்ல கம்மிங் ஃபிரைடே நடக்குது சார், நீங்க ஷியூரா வந்துடணும்''!
இப்படிச் சொல்லி அழைக்கிறார்.

இன்னொருவர் பேசுகிறார்:-
"டியர் ஃபிரண்ட்ஸ், உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ். எனக்கு பெங்களூர்ல நல்ல ஜாப் கிடைச்சிருக்கு, வர்ற மண்டே ஜாயின்ட் பண்றேன். அதுக்காக டுடே ஈவினிங் உங்களுக்கெல்லாம் மேரீஸ் ஓட்டல்லே ட்ரீட் கொடுக்கறேன், மிஸ் பண்ணாம வந்திடுங்க"!
இப்படித்தான் நம் தமிழர் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு வகைப் பேச்சும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. அது ஒருவகையான தமிழ். பண்ணித் தமிழ்! சினவாதீர்! சிரிக்காதீர்! இதோ கேளுங்கள்:
"நாம வாக் பண்ணி, அந்தப் பார்க்கிலே மீட் பண்ணி, அதப்பத்தி திங் பண்ணி அவனுக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி, அப்படியே போய் ஓட்டல்ல டிபன் பண்ணி, ரூமுக்குப் போய் லைட்டை ஆஃப் பண்ணி, ஃபேனை ஆன் பண்ணி... ''
இப்படி எத்தனை பண்ணிகளை இணைத்து நாம் தமிழ் பேசுகிறோம்... எண்ணிப் பார்த்ததுண்டா?

நமது தொலைக்காட்சிகளில் பல நேரங்களில் கீழ்வருமாறு வருணனையாளர் பேசுவதைக் கேட்கிறோமே.
"ஹலோ வியூவர்ஸ் குட் ஈவினிங்... இந்தப் புரொகிராம் வெரி நியூ. ரொம்பப் புதுசு.. நீங்கள்லாம் நல்லா எஞ்சாய்ப் பண்ணணும் ஜாலியா இருக்கணும். அதான் எங்க எய்ம்ம்... அதுக்காக ரொம்ப ரிச்சா, ரிஸ்க் எடுத்துப் பண்ணிருக்கோம்... நீங்க இதிலே பார்ட்டிசிபேட் பண்ணணுமா? எங்களுக்கு டயல் பண்ணுங்க. னைன் எய்ட் த்ரி ஒன் ஜீரோ ஃபோர் சிக்ஸ் எய்ட்.'' இப்படித்தான் ஊடகங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது.

நம்மில் பலரும் தமிழ்ச் சொல் என்று கருதுகின்ற பிறமொழிச் சொற்கள் பலவுண்டு. அவை ஏராளமாகத் தமிழில் கலந்துள்ளன. ஈண்டு ஏராளமாக என்ற சொல் உள்ளதே அது தெலுங்குச் சொல். அதற்குத் தமிழ் ”மிகுதியாக” என்பதே.

எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டன என்று சொல்லுகிறோம். "கச்சிதம்" தெலுங்குச் சொல். இதற்கு ஒழுங்கு என்பதே பொருள்.
கெட்டியாகப் பிடித்துக் கொள் என்பதில் "கெட்டி"யாக எனும் சொல் தமிழில்லை என்று யாராவது நினைப்பார்களா?
அதுவும் தெலுங்கே. அதன் பொருள் " உறுதி"யாக.

"அக்கடா" என்று கிட என்று சொல்லுகிறோமே. இந்த அக்கடா என்பது கன்னடச் சொல். இதற்கு "வாளா இருத்தல்" என்பதே தமிழ்.

"தராசு" என்பதற்கு துலாக்கோல் என்போம். தராசு எந்த மொழிச் சொல்? பாரசீகச் சொல் இது.

"தயார்" என்பதைத் தமிழில் ஆயத்தம் எனலாம். தயார் என்பதும் பாரசீகச் சொல்லே.

"மைதானம்" என்பது அரபிச் சொல். திடல் என்பது தமிழ்.
விலை ரொம்ப "ஜாஸ்தி" என்பதும் அரபிச் சொல்லே. மிகுதி என்பது தமிழ்.

அறைகூவல் எனும் பொருளுடைய "சவால்" என்பதும் அராபியே.
"பஜார்" என்பது கடைத்தெரு என்போம். இந்தப் பஜார் இந்துஸ்தானி.
"மிட்டா மிராசு" (நிலக்கிழார்) இந்துஸ்தானிச் சொற்களே.
"முலாம்" (மேற்பூச்சு) அராபியச் சொல்.
"மாமூல்" என்பதும் அராபி. பழைய வழக்கப்படி என்று தமிழில் சொல்லலாம்.
இப்போதெல்லாம் தயிர்ச்சோற்றைக் கூடத் தமிழில் நாம் சொல்லுவதில்லை. பகாளாபாத் என்கிறோம். "பாத்" எனில் சோறு.
பகாளபாத் - இந்துஸ்தானிச் சொல். (இந்தி வேறு, இந்துஸ்தானி வேறு)
- அலமாரி (பேழை)
- சாவி (திறவுகோல்)
- ஜன்னல் (காலதர்- காற்று வழி)
- பாதிரி (கிறித்துவத் தொண்டர்)
இவை போர்த்துக்கீசியச் சொற்கள்.

- நிம்மதி (கவலையின்மை)
- சரக்கு (வணிகப் பொருள்)
- தொந்தரவு(தொல்லை)
- வாடகை (குடிக்கூலி)
- எச்சரிக்கை (விழிப்பாயிரு)
எல்லாம் தெலுங்குச் சொற்கள்.

தமிழ் வளரும்.......

நன்றி:- தினமணி கதிர்

பாரதி
19-05-2011, 01:43 AM
மொழிப் பயிற்சி - 30:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


நாம் மறந்துவிட்ட தமிழை, மறக்காத தமிழர்கள்!
தாய்த் தமிழ்நாட்டு மக்களைவிட, ஈழத் தமிழர்களும், மலேசியத் தமிழர்களும் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அவர்களின் உரையாடல்களில் ஆங்கிலக் கலப்பு நம்மைவிடக் குறைவாகவே உள்ளது.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உலகம் முழுதும் பரவியுள்ளார்கள். அவர்களின் தமிழ் ஒலிப்பு முறை சற்றே வேறுபட்டிருக்கும். அதனால் நமக்குச் சில சொற்கள் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கலாம். ஆயினும் கூடிய வரை அவர்கள் தமிழில் "கதை"க்கிறார்கள்.

இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து மலை நாட்டிற்கு (மலாயா) வேலை தேடிச் சென்றவர்களின் வழித் தோன்றல்கள் - மூன்றாம், நான்காம் தலைமுறையினர் மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்கள். தோட்டம், தொழில், வணிகம், அலுவல் சார்ந்த அனைத்து நிலைகளிலும் நல்ல வண்ணம் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மறந்துவிட்ட தமிழை மறக்காமல் இருக்கும் அம்மக்கள் பாராட்டிற்குரியவர்கள்.
மொழியை மட்டுமன்று, நமது விருந்தோம்பல், ஒப்புரவு, இனிய பேச்சு, கடவுள் வழிபாடு முதலிய பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிக் காத்து வருகிறார்கள்.
"ஐயா பசியாறிட்டீங்களா?'' என்று உசாவும் குரல் மலையகத் தமிழர் குரலாகத்தான் இருக்கும். (தமிழ்நாட்டு முசுலிம் மக்களிடமும் இத்தொடர் வழக்கில் உள்ளது) நாம் என்றால், "என்ன சார் டிபன் ஆயிடிச்சா?" என்போம்.

சோறு என்று சொல்லுவதற்கே வெட்கப்படுபவர் நம் மக்கள்!
சோற்றைச் சாதம் என்போம். அதுவும் போய் இப்போது எங்கும் "ரைஸ்" வந்துவிட்டது. உணவு விடுதியில் நாம் ரைஸ் கொண்டு வா என்று சொல்ல, அரைகுறை ஆங்கிலம் அறிந்த ஆள் அரிசியைக் கொண்டு வந்து கொட்டினால் நாம் சினம் கொள்ள முடியாது.
மலேசியத் தமிழர்கள் இப்போதும் சோறு என்றுதான் சொல்லுகிறார்கள்.

தேநீர், காப்பி, குளிர்பானம் எல்லாம் அங்கே தண்ணீர்தான். முதலில் "தண்ணி என்ன வேண்டும்?" என்றுதான் வினவுகிறார்கள்.
நம்மூரில் உணவு பரிமாறுபவரை "ஹலோ" என்று கூவி அழைப்போம். அல்லது "மிஸ்டர்" என்போம். வேறு சிலர், "வெயிட்டர்" இங்கே வாப்பா என்பார்கள். ஆனால் மலேசிய மக்கள் உணவு விடுதிகளில் பணி செய்பவர்களை அண்ணன் என்றோ அக்கா என்றோ அழைக்கிறார்கள். (மேசை துடைத்தல் போன்ற பணிகளை மகளிர் செய்கிறார்கள்) "வணக்கம் நலமாக இருக்கிறீர்களா?" என்று ஒருவரையொருவர் நலம் கேட்பதும், தொலைபேசியில் அழைத்தால் ”வணக்கம், ஐயா வெளியில் சென்றுள்ளார்கள். இரவுதான் வருவார்கள், நாளை காலையில் பேச இயலுமா?" என்று வீட்டில் உள்ளவர்கள் பேசுவதும் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

"சாரு எங்கியோ மீட்டிங்னு போயிருக்கார், நைட்டுதான் வருவார், காலையிலே கூப்புடுங்க" இப்படித்தான் நம்மூர்ப் பேச்சு இருக்கும். நாம் சந்திக்கும் உரையாடும் வட்டம் தமிழ் வட்டமாக இருப்பதால், தமிழ் ஆர்வலர்கள் இப்படி இருக்கலாம். பொதுமக்கள் எல்லாரும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று கருதக்கூடும். ஆனால் உண்மையில் எல்லா இடங்களிலும் மிகுதியாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள்.

சில மலாய் மொழிச் சொற்கள் மிகக் குறைவான அளவில் அவர்கள் பேச்சில் கலந்து வருகின்றன. நம் செவிக்கு எட்டியவரை, நகரம், சிற்றூர், ஆலயம், வணிக வளாகம் எவ்விடத்தும் மக்கள் ஆங்கிலச் சொற்கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள்.

மலாய் மொழிக்கென்று தனி எழுத்துவடிவம் இல்லை. வெறும் பேச்சுமொழிதான். மலாய் மொழிச் சொற்களை ஆங்கில எழுத்துகளில்தான் எழுதி வைத்துள்ளார்கள். எழுத்து வடிவம் இல்லாத அம்மொழி அந்நாட்டின் ஆட்சி மொழி. மலேசிய மக்களில் மலாய் இனத்தவரையடுத்துச் சீனர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். அதனை அடுத்த நிலையில் இந்தியர். அவருள் பெரும்பான்மையர் தமிழர்.

சீனர்கள் ஒருவரோடு ஒருவர் சீனமொழியில்தான் பேசுகிறார்கள்.
இந்தியருள் தமிழர்களை அடுத்துச் சீக்கியர் (பஞ்சாபியர்), தெலுங்கர் இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் ஒற்றுமை நம் தமிழரிடையே இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
அங்கும் நம் தமிழர்கள் புத்துணர்வு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

குணமதி
19-05-2011, 03:21 AM
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்"

இங்கு, " ஓர் பாலம் " என்று பாரதி பாடியுள்ளார். இது இலக்கண விதிப்படி சரியா?

பாடல்களில் (செய்யுளில்) அப்படி வரலாம் என்று இலக்கணம் இசைவளிக்கிறது.

பாரதி
20-05-2011, 09:05 AM
மொழிப் பயிற்சி - 31:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


ஆறாம் வகுப்பு முடிய மலேசியாவில் தொடக்கக் கல்விக்கான பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன.
தமிழ்ப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், மலாய்ப் பள்ளிகள் என அவை பிரிந்து இயங்குகின்றன.
அவரவர் தாய்மொழியைக் கற்க, தாய்மொழியில் படிக்க அங்கே வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
நம்மூரில் அனைத்து வசதிகளும் கொண்ட உயர்தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை விடச் சிறந்த வசதிகளோடு தொடக்கப் பள்ளிகள் இயங்குவதை நம் நாட்டில் காண்பது எப்போது என்ற ஏக்கமே தோன்றுகிறது.

சிறுவர்கள் தமிழ் கற்பதில் ஆர்வமும், ஊக்கமும் உடையவர்களாக இருக்கிறார்கள். மம்மி, டாடி, ஆன்ட்டி, அங்கிள் எல்லாம் நம் காதுகளை எட்டவில்லை. ஆலய வழிபாடுகள் முறையாகச் செய்யப்படுகின்றன. நம் கலாசாரம் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆலயங்கள் அழகாகவும், தூய்மையாகவும், வசதிகளோடும் விளங்குகின்றன. தேவாரம், திருவாசகம் மகளிர் குரல் வழியாக நம் செவிகளில் நிறைகின்றன. செய்தி ஏடுகளில் (நாளிதழ்களில்) ஆடவர் நால்வர் சிறை செய்யப்பட்டனர். மகளிர் இருவர் தப்பிச் சென்றனர் என்றும் பதின்ம வயதினர் (டீன் ஏஜ்காரர்) என்றும், அகப்பக்கம் (இணையத்தில்) என்றும் அருந்தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் உள்ளமை வியப்பைத் தருகிறது.

தமிழில் வடசொற் கலப்பு:-
தமிழில் கலந்துள்ள பல்வேறு மொழிகளுள் மிகப் பழைமை வாய்ந்த மொழி வடமொழி எனத் தக்க சமற்கிருதம்.
தமிழில் கலந்த சமற்கிருதச் சொற்களைத் தாம் வடமொழி, வடசொல் என இலக்கண நூலார் இயம்பினர்.
சங்க இலக்கியங்களிலேயே செந்தமிழோடு, வடசொற்களும் விரவியுள்ளன. "தமிழ்மொழி வரலாறு" எனும் நூல் எழுதிய சூரியநாராயண சாத்திரியார், பரிதிமாற்கலைஞர் எனத் தம் பெயரைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டார். அவர், அந்நூலுள் பலவிடங்களில் "தமிழ் பாஷை" என்றே குறிப்பிடுகிறார். அந்த நாளில் தமிழ்மொழி என்பதனினும் தமிழ் பாஷை என்பதே வலுப்பெற்று இருந்துள்ளது.
பரிதிமாற் கலைஞருக்குப் பின், சுவாமி வேதாசலம் எனும் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டவர் பற்றி நாமறிவோம்.
இவ்விருவர்க்கும் முன்பே, எங்கோ இத்தாலியில் பிறந்து தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் உடன்குடி என்ற ஊரில் சமயப் பரப்புரை செய்ய வந்த கான்ஸ்டான்டைன்டின் ஜோசப் பெஸ்கி எனும் கிறித்துவப் பாதிரியார் தம்பெயரை முதலில் தைரியநாதசாமி என்று வைத்துப் பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்ட வரலாறும் ஈண்டு நினைக்கத்தக்கது.

தமிழில் காலம் காலமாகக் கலந்துள்ள எண்ணற்ற வடசொற்களுள் சில பலவற்றுக்குக் கீழ் வரும் பட்டியலில் தமிழ்ச் சொற்கள் தந்துள்ளோம். இவற்றுள் பல சொற்கள் இப்போது எழுத்திலும், பேச்சிலும் ஆளப்பட்டு வருகின்றன. ஆயினும் அவற்றை நினைவுகூர்தல் அல்லது சில சொற்கள் அறிமுகப்படுத்தல் எனும் வகையால் கொள்க.

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

Nivas.T
20-05-2011, 09:15 AM
பட்டியலை பதிப்பிடுங்கள் அண்ணா

முடிந்தவரை தூய தமிழ் வாரத்தைகளை பயன்படுத்த முயற்ச்சிக்கலாம்

பாரதி
21-05-2011, 08:40 AM
கருத்துகளுக்கும் விளக்கத்திற்கும் நன்றி குணமதி, நிவாஸ்.
----------------------------------------------------------------------


மொழிப் பயிற்சி - 32:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


வடசொல் தமிழ்ச் சொல்
கிரமம் ஒழுங்கு
கிராமம் சிற்றூர்
சக்தி ஆற்றல்
சகோதரன் உடன்பிறந்தான்
சந்நிதி திருமுன்(பு)
சபதம் சூளுரை
சந்தோஷம் மகிழ்ச்சி
ஜலதோஷம் நீர்க்கோவை
சாபம் கெடுமொழி
சிநேகம் நட்பு
சுத்தம் தூய்மை
சுபாவம் இயல்பு
சேவை தொண்டு
தாகம் வேட்கை
நிபுணர் வல்லுநர்
பகிரங்கம் வெளிப்படை
பரிகாசம் நகையாடல்
பந்தபாசம் பிறவித்தளை
பிரசாரம் பரப்புரை
மந்திரம் மறைமொழி
மிருகம் விலங்கு
முகூர்த்தம் நல்வேளை
யுத்தம் போர்
இரகசியம் மறைபொருள்
வயது அகவை
வாகனம் ஊர்தி
வாதம் சொற்போர்
விகிதம் விழுக்காடு
விக்கிரகம் திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம் மறை
வேகம் விரைவு
ஜாதகம் பிறப்புக் கணக்கு
ஜெபம் தொழுகை
ஜென்மம் பிறவி
ஜோதிடன் கணியன்
ஸ்தாபனம் நிறுவனம்
ஷேத்ரம் திருத்தலம்
யாகம் வேள்வி
போகம் நுகர்வு
மோகம் விருப்பு

கவிக்கோ ஞானச்செல்வன் வழக்கில் வழுக்கியவை:-
மக்கள் தம் பேச்சு வழக்கில் வழுக்கி (தவறாக) எழுதப்படும், சொல்லப்படும் சொற்களையும் சரியாக எப்படி எழுதவேண்டும், சொல்ல வேண்டும் என்பதையும் கண்டோம்.
"முழிக்கிற முழியைப் பாரு, திருட்டுப் பயல்" என்று பேசுகிறார்கள்.
"ஏன்டா முளி முளின்னு முளிக்கிறே, ஒண்ணும் விளங்கலியா?" என்று வினவுகிறார்கள்.
இந்த முழியும், முளியும் சரியானவையா?
அல்ல.
விழிக்கிற விழியைப் பாரு, விழி விழி என்று விழிக்கிறாய் என்று இருக்க வேண்டியவை இப்படி வழக்கில் வழுக்கி உள்ளன.
"ஒரே நாத்தமடிக்குது, சகிக்க முடியலே"
இந்த நாத்தம் என்பது நாற்றம் என்பதன் வழுக்கல்.
அவ்வாறே பீத்தல் என்றால் பீற்றல் (பீற்றுதல்) - பெருமை பேசுதல் என்பதன் வழுக்கல்.
இப்படி நம் வழக்கிலுள்ள வழுவுடைய சொற்களையும் அவற்றில் திருத்தமுடைய சொற்களையும் அடக்கி ஒரு சிறு பட்டியலில் தருகிறோம்.
வழு திருத்தம்
அடமழை அடைமழை
அடமானம் அடைமானம்
உடமை உடைமை
உத்திரவு உத்தரவு (ஆணை)
ஊரணி ஊருணி
எகனைமுகனை எதுகை மோனை
ஏமாந்தான் ஏமாறினான்
ஒருவள் ஒருத்தி
ஒருத்தன் ஒருவன்
கத்திரிக்கோல் கத்தரிக்கோல்
காத்தாலே காலை
கார்க்கும் (கடவுள்) காக்கும் (கடவுள்)
கிராணம் கிரகணம்
குத்துதல் (நெல்) குற்றுதல்
கேழ்க்கிறார் கேட்கிறார்
கோடாலி கோடரி
சம்மந்தம் சம்பந்தம் (தொடர்பு)
சுந்திரமூர்த்தி சுந்தரமூர்த்தி

தமிழ் வளரும்.......

நன்றி:- தினமணி கதிர்

பாரதி
22-05-2011, 05:20 PM
மொழிப் பயிற்சி-33: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!


கவிக்கோ. ஞானச்செல்வன்

ஞானச்செருக்கு

"திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையே' என்றான் மகாகவி பாரதி. ஆழ்ந்தகன்ற அறிவினால் வரும் பெருமிதத்தையே பாரதி ஞானச் செருக்கென்றான். மெய்யறிவுத் திறமுடையார் செருக்குடன் இருப்பது இயற்கையே. நம் தமிழறிவு பெருகினால் பிழைகள் நீங்கும்; பிழைகள் நீங்கிடில் தமிழ்மொழி சிதையாமல் செழிக்கும். மொழி செழிப்புற்றால் தமிழர் வாழ்வு வளம் பெறும். "நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வே' என்றார் பாவேந்தர். "நன்னிலை உனக்கென்றால் எனக்கும்தானே' என்றும் அவர் தமிழோடு பேசுகிறார். இந்த அடிப்படை நினைவை உணர்வை நாம் எப்போதும் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கணச் செய்தியொன்று பார்ப்போமா?
நேற்று வந்தவன் இன்றும் வந்தான்.
இத்தொடரில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர். வந்தான் என்பது வினைமுற்று. வருதல் என்பது தொழிற்பெயர். ஒன்றும் புரியவில்லையா? உயர்நிலைப் பள்ளிப் பருவநினைவுகளை மனத்திரையில் ஓடவிடுங்கள். தமிழாசிரியர் இவற்றைப் பற்றி விளக்கியிருப்பாரே!

பெயர்ச்சொல் என்னவென்று உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயர்ச்சொல்லில் ஆறுவகை தெரியுமோ? எடுத்துக்காட்டுகளை நோக்குக.
ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்
சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்
காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்
இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்
செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்
ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர்
ஆகப் பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும். இவற்றுள் தொழிற் பெயர் என்று ஒரு பெயர் வருகிறது. அஃது என்ன?

வந்தான் - வினைச்சொல் (வினை முற்று) இவன் வருதல் ஆகிய வினையைச் செய்தவன். இப்படிக் குறிக்க வேண்டுமாயின் வந்தவன் என்போம். இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர். அவன் என்ன செய்தான்? வந்தான் என்னும் போது வினைச் சொல். வருதல் அவன் செய்த தொழிலுக்கு (வினைக்கு)ப் பெயர். ஆதலின் அது தொழிற்பெயர். ஆக வினைச் சொல் வேறு, தொழில் பெயர் வேறு எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்ற பெயர் ஆதலின் இது வினையாலணையும் பெயராயிற்று.

மீண்டும் எடுத்துக்காட்டுகள் காண்போம்.
பாடினாள் - வினைமுற்று, பாடுதல் - தொழிற்பெயர், பாடியவள் - வினையாலணையும் பெயர்.
ஒரு தொழிலுக்கு (செயலுக்கு)ப் பெயராக வருவது தொழிற்பெயர். அத்தொழிலைச் செய்தவர்க்குப் பெயராக வருவது வினையாலணையும் பெயர். தொழிற் பெயர் காலம் காட்டாது. வினையாலணையும் பெயர் காலம் காட்டும். தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் (ஆண், பெண், பலர்) பாகுபாடுகள் இரா. வினையாலணையும் பெயரில் இவையுண்டு.

தேடியவன் - ஆண்பால் வினையாலணையும் பெயர்.
நாடியவள் - பெண்பால் வினையாலணையும் பெயர்.
வந்தவர்கள் - பலர்பால் வினையாலணையும் பெயர்.
தேடுதல்- தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, ஆண், பெண், பலர் எனும் பாகுபாடு காண முடியாது.


வழு - திருத்தம்
சுவற்றில் - சுவரில்
சோத்துப்பானை - சோற்றுப்பானை
திரேகம் - தேகம் (உடல்)
தொந்திரவு - தொந்தரவு(தொல்லை)
துகை - தொகை
தேவனாதன் - தேவநாதன்
நிலயம் - நிலையம்
(அகல) நிகளம் - நீளம்
புத்து - புற்று
புண்ணாக்கு - பிண்ணாக்கு
புழுக்கை- பிழுக்கை
முழுங்கி - விழுங்கி
வயறு - வயிறு
வரவு சிலவு - வரவு செலவு
வலது, இடது - வலம், இடம்(வலப்பக்கம்,இடப்பக்கம்)
வெய்யில் - வெயில்
வெண்ணை - வெண்ணெய்
வைக்கல் - வைக்கோல்
கண்ணாலம் - கலியாணம் (திருமணம்)
கயட்டி, களட்டி - கழற்றி
குசும்பு - குறும்பு
சொலவடை - சொல் வழக்கு
சொரண்டு - சுரண்டு
சுளட்டி - சுழற்றி

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

கீதம்
22-05-2011, 09:49 PM
நாம் இதுவரை புழங்கிக்கொண்டிருக்கும் பல பிழைகளை இக்கட்டுரை மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

குசும்பும் குறும்பும் வெவ்வேறு என்றல்லவா நினைத்திருந்தேன்! குறும்பு என்பது செய்கை அடிப்படையிலும், குசும்பு என்பது பேசுவதன் அடிப்படையிலும் செய்யப்படும் வம்புவிளையாட்டு என்று பொருள் கொண்டிருந்தேன்.

பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

கடைசிப் பதிவில் ஆசிரியரின் பெயர் மாற்றிப் பதியப்பட்டுள்ளது. கவனிக்கவும்.

பாரதி
23-05-2011, 01:38 AM
கருத்துக்கு நன்றி கீதம்.
பிழையை சுட்டியமைக்கு நன்றி. இப்போது சரி செய்து விட்டேன்.

பாரதி
24-05-2011, 01:49 AM
மொழிப் பயிற்சி - 34: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம்

ஒருவினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) கற்றான், நின்றாள், சென்றார், வந்தது, வந்தன. ஐம்பால் வினைமுற்றுகள் இவை.
இவ்வாறு வினைமுற்றி நில்லாமல் எஞ்சி நிற்பது (முடியாமல் இருப்பது) எச்சம் எனப்படும். முற்றுப் பெறாத ஒருவினைச் சொல். ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம். படித்த எனும் சொல் முற்றுப் பெறவில்லை. பையன் என்ற பெயர்ச் சொல்லைச் சேர்த்தால் படித்த பையன் என்று முற்றுப் பெறுகிறது. ஆதலின் படித்த என்பது பெயரெச்சம். (படித்த என்ற சொல்லோடு, பையன் எனும் பெயர் எஞ்சியுள்ளது) படித்த என்பதைப் படித்து என்று மாற்றினால் அதுவும் முற்றுப் பெறவில்லை. வந்தான் என்றொரு வினைச் சொல்லைச் சேர்த்தால் அது முற்றுப் பெறும். அஃதாவது படித்து வந்தான் என்றாகும். ஆதலின் இது வினை எஞ்சிநின்ற சொல் ஆதலின் வினையெச்சம் எனப்படும். (படித்து என்ற சொல்லுடன் வந்தான் எனும் வினை எஞ்சியுள்ளது) ஓரளவு புரிந்திருக்க வேண்டுமே!
நினைவிற் கொள்க:
படிப்பறிவில்லாத சிற்றூரில் வாழும் ஒரு பெண்ணும் கூட,"ரோட்டு ஓரமாப் போ, பாத்துப் போ' எச்சரித்துத் தன் மகனை அனுப்புகிறாள். தமிழ்மொழியின் அழுத்தமான ஓரிலக்கணம் ஆங்கிலச் சொல்லில் கூட ஏற்றிப் பேசப்படுகிறது. ரோடு + ஓரம் = ரோட்டோரம், ஆறு+ கரை =ஆற்றுக்கரை (ஆத்துக்கரை), சோறு + இல் = சோற்றில் (சோத்தில்), காடு + வழி = காட்டு வழி என்றெல்லாம் தமிழில் வல்லொற்று இரட்டித்தல் பற்றி முன்னரே எழுதியுள்ளேன்.
அடையாற்றில் கூட்டம் நடைபெற்றது என்பதை அடையாறில் கூட்டம் நடைபெற்றது எனில் அடை ஆறு (6) என எண்ணைச் சுட்டும். திருவையாற்றில் இசை விழா என்பதைத் திருவையாறில் என்றெழுதினால் திரு - ஐ - ஆறு ஐந்து ஆறு (5,6 இல்) இசைவிழா என்று எண்ணையே சுட்டும். இடத்தைச் (ஊரை)சுட்டாது. ஆற்றில் எனில் நீரோடும் ஆற்றையும், ஆறில் எனில் ஆறு எனும் எண்ணில் வேறோர் எண்ணைக் கழித்துச் சொல்லுதலையும் குறிக்கும். (ஆறில் நான்கு போனால் மீதம் என்ன?) இதழாளர்கள், செய்தியாளர்கள் கவனத்தில் கொள்க.

ஆடிக் கிருத்திகை (கார்த்திகை) என்று எழுதுகின்ற எழுத்தாளர் தை கிருத்திகை என்று எழுதுகிறார். ஏன்? தைக் கிருத்திகை என்பதுதானே இயல்பான ஒலி. ஒற்று மிக வேண்டிய போது விட்டும், மிக வேண்டாத இடத்தில் "கண்டுக் கொண்டேன்' என ஒற்று (மெய்) இட்டும் எழுதும் வழக்கத்தை மாற்றிட வேண்டுமன்றோ?

காடி தமிழ்ச் சொல்லா?
ஆம். யாழ்ப்பாணம் நா.கதிரைவேல் பிள்ளையின் தமிழ்மொழி அகராதியிலும், சைவ சித்தாந்தக் கழகத்தின் தமிழ் அகராதியிலும், பிறவற்றிலும் இச்சொல்லுக்குப் பொருள்கள் எழுதப்பட்டுள்ளன. காடி - புளித்தநீர், ஒரு வகை வண்டி, ஒரு மருந்து, நெய், கள் எனப் பல பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.

மலேசியத் தமிழர் வண்டி எனும் பொருளில் காடியைச் சொல்லுகிறார்கள். தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆறுமுகமுதலி என்பவரும் அவருடன் ஐவரும் தமிழகம், சென்னை வந்திருந்தார்கள். தமிழ்மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்கள், மறந்துவிட்டவர்கள். அவர்களும் காடி ஏற்பாடு செய்யுங்கள் என்று பேசினார்கள்.

காடி எனும் சொல் இந்தியன்றோ? இந்தியில்தான் வண்டியைக் காடி என்பார்கள். இந்தி தமிழ்நாட்டில் நுழைவதற்கு முன்னே இருநூறு, முந்நூறு ஆண்டின் முன்புலம் பெயர்ந்த தமிழர்களின் வழிமுறையினர் தாம் மலேசியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் வாழுகின்றார்கள். 1918}இல் முதல் பதிப்பு கதிரைவேல் பிள்ளை அகராதி வந்துள்ளது. இவர் இலங்கை யாழ்ப்பாணத்தார்.
இந்தி மொழி பல மொழிச் சொற்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டுள்ள மொழி. அந்த வகையில் தமிழ்க் காடிதான் இந்தியிலும் காடி ஆகியுள்ளது. ஆனால் தமிழ்க் காடி ஒலியிலிருந்து சற்றே வேறுபட்டு இந்தி காடி ஒலிக்கிறது. மலேசியத் தமிழர்களின் தமிழ்ப் பேச்சுக்குக் காடியும் ஓர் எடுத்துக்காட்டு.

மின்சார விசிறி, மின்விளக்குப் போன்றவற்றை நாம் ஆன் பண்ணு என்கிறோம். அல்லது சுவிட்சைப் போடு என்கிறோம். லைட்டைப் போடு, ஃபேனைப் போடு என்பதும் உண்டு.

விசிறியைத் தட்டிவிடப்பா, வெளிச்சம் தட்டிவிடப்பா என்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். அந்நாட்டில் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் உணர்வு மங்காமல் வாழ்கிறார்கள் போலும்.

தமிழ் வளரும்.....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
25-05-2011, 01:51 AM
மொழிப் பயிற்சி-35: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்

அண்மையில் ஒரு தலைவரைப் போற்றிப் பாராட்டிய மற்றொரு தலைவர், ஒப்புயர்வற்ற தலைவர்களில் ஒருவர் இவர் (பெயர்) என்று பேசியதாகச் செய்தி போட்டிருந்தார்கள். ஒப்பு, உயர்வு அற்ற என்றால் அந்தத் தலைவருக்கு ஒப்பானவர்களோ உயர்வானவர்களோ வேறுயாரும் இலர் என்பதுதானே பொருள்! அப்புறம் எப்படித் தலைவர்களுள் ஒருவர் என்றுரைப்பது! பலருள் ஒருவர் ஒப்பும் உயர்வும் அற்றவர் ஆவாரா?

பொருள் மாறிவிட்ட பழந்தமிழ்ச் சொற்கள்:
"மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்' எனும் பிசிராந்தையார் பாட்டு வரிக்கு, "செத்துப்போன என் மனைவியும் பெருகிய பிள்ளைகளும்' என்று இந்நாளில் பொருள் கொள்ளக் கூடும். மாண்ட எனில் மாட்சிமையுடைய (மேலான) என்பது பழந்தமிழ்ப் பொருள். நிரம்பினர் என்பதற்கு கல்வி, அறிவு நிரம்பியவர்கள் என் பிள்ளைகள் என்பதுதான் சரியான பொருளாகும்.

துஞ்சிய என்றால் தூங்கிப் போய்விட்ட என்ற பொருள் இந்நாளில் கருதக்கூடும். "குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது' என வருமிடத்தில் குளமுற்றம் என்ற ஊரில் மாண்டுபோன (இறந்த) கிள்ளிவளவன் என்பதே சரியான பொருளாம்.

மடப்பயல் என்றால் முட்டாள் பையன் - அறிவற்றவன் என்று பொருள் கொள்கிறோம். மடம் என்பது இளமையைக் குறிக்கும் ஒரு சொல். (பூசை செய்யும் மடம் என்பது வேறு)
மானே மட மகளே என்றால்,மான் போன்ற இளம் பெண்ணே என்று பொருள். மடக்கொடி கேளாய் எனில் கொடி போன்ற மெல்லிய இளம் பெண்ணே கேட்பாயாக என்பதே பொருள். பெண்ணிற்குச் சிறந்த நான்கில் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) மடம் என்பது இளமையைக் குறிப்பதேயாகும். (காணாத ஒன்றைக் கண்டபோது ஒருவகையான வியப்பு ஏற்படும். அதுவே பயிர்ப்பு எனப்பட்டது.

எழுத்துப் பிழை தரும் இடர்ப்பாடுகள்
ஒரு திருக்கோவிலின் விழா அழைப்பிதழில் அணைவரும் வருக எனக் கண்டோம். (அனைவர்- எல்லாரும், அணைவர் - அணைப்பவர்) இப்படிப் பொருள் கெடலாமா?

மற்றொரு பெரிய இசை நிறுவனம் ஒன்றின் அழைப்பு மடலில் வருக! இசையின்பம் பெருக! என்றிருந்தது.
"இசையின்பம் பெற்றிட வருக' என்பதுதான் அவர்தம் கருத்து. ஆனால் பெறுக, பெருக எனப் பிழையாகிவிட்டது. இசையின்பம் பெருகிட வருக என்றெல்லாம் மழுப்பலாம். பருகிட என்று சொன்னாலாவது பொருத்தமாகும். அப்படியாயின் வருக, இசையின்பம் பருக என்றிருக்க வேண்டும்.

நல் +நாடு= நன்னாடு; சிலர் நன்நாட்டில் என எழுதுகிறார்கள். நல்ல நாட்டில் என்றெழுதலாம். புணர்ச்சி விதிப்படி நன்னாடு என்றெழுதுதலே சரியாகும். முன்னரே நான்கு நிலம்- நானிலம் என்பதைச் சிலர் நாநிலம் என்றெழுதுகிறார்கள். இது தவறு. நான்கு ஆகிய நிலம் என்று இதற்குப் பொருள் என்றெழுதியுள்ளோம்.

ஒரு பத்திரிகையில் வந்த விளம்பரம்: "குழந்தைப் பேரின்மையா?' இதைக் கண்டு வருந்தினோம். குழந்தைப் பேறின்மையா? என்று சரியாக எழுத வேண்டும்.
பேறு - பெறுதல். குழந்தைப் பேறு- பிள்ளையைப் பெறுதல். இதனைப் பேரில்லையா எனில் குழந்தைக்குப் பெயர் (பேர்) இல்லையா என்று பொருள் ஆகாதோ? குழந்தைப் பேறு என்று "ப்' என்ற மெய்யெழுத்தும் மறக்காமல் இடப்பட வேண்டும்.

சாற்றி, போற்றி, ஏற்றி
சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள். ஒரு சாமிக்கு கூர்ம பதக்கம் சாற்றி என்று செய்தித்தாளில் பார்க்க நேர்ந்தது. கூர்ம பதக்கம் சாத்தி என்றே எழுத வேண்டும். இவ்வாறே விழாக்களில் "பொன்னாடை போற்றி' என்று சொல்லுகிறார்கள். பொன்னாடை (?) போர்த்தி என்றே சொல்ல வேண்டும். உச்சரிப்பில் அச்சம் வருமெனில் அணிவித்து மகிழ்கிறோம் என்று சொல்லலாமே!

ஏத்துதல்- பாராட்டுதல், போற்றுதல் என்று பொருள் தரும் சொல். இறைவனை ஏத்திப் பாடினார் என்றால் இறைவனைப் போற்றிப் பாடினார் என்று பொருள். இதனை ஏற்றிப் பாடுதல் எனல் பிழை. ஏத்துதல் என்பதை ஏற்றுதல் எனச் சொன்னால் பொருளே மாறிவிடும். கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் எனுமிடங்களில் ஏற்றுதல் வரும். வணங்குதல், துதித்தல், போற்றுதல் யாதாயினும் ஏத்துதல் எனல் வேண்டும்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
27-05-2011, 01:38 AM
மொழிப் பயிற்சி - 36:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்



பிழைகள், பிழைகள், பிழைகள்


ஒரு வழக்கறிஞர் தொலைக்காட்சிச் செய்தியில் பேசுகிறார்:-

"உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது", இந்தத் தொடரை மூன்று முறைக்கும் மேல் அந்நிகழ்வில் அவர் பயன்படுத்தினார். "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்று சொல்ல வேண்டிய அவர், உச்சநீதிமன்றத்திற்கே யாரோ உத்தரவிட்டுள்ளது போலச்
செயப்பாட்டு வினையாக்கிப் பேசினார். அன்றியும் உத்தரவு - உத்திரவு ஆதலும் பிழை.

அந்த நற்செயலில் ஈடுப்படுவது, ஈடுப்படுவது என்று பலமுறை ஓர் அறிஞர் ஒரு தொலைக்காட்சியில் உரையாற்றும்போது சொன்னார்.
ஈடுபடுவது என்பதை ஈடுப்படுவது என்று அழுத்த வேண்டா. இயல்பாய் இருக்கட்டும்.

மற்றுமொருவர் உரையாற்றுகையில் அவரது தமிழ் உச்சரிப்பு நம்மை அதிர வைத்தது. நாம் அந்த கொள்கைகளைக் கட்டி காக்க வேண்டும். அந்தக் கொள்கைகளைக் கட்டிக் காக்க வேண்டும் என்று சொல்லத் தெரியாதவரா அவர்?

"சமூகத்தில்... அதன் வளியை நாமுணர முடியாது" என்றார். வலி, வளியாகிவிட்டது. (வலி - துன்பம், வளி - காற்று)

மேலும் பேசும்போது கவிதை குழந்தைகள் என இருமுறை சொன்னார். கவிதைக் குழந்தைகள் என்று அல்லவா சொல்ல வேண்டும்?

இன்னும் தொடர்கிறார்:-

"புள், மரம், செடியெல்லாம்..." இங்கே புல், மரம், செடி எனச் சொல்ல வேண்டியதைப் புள், மரம், செடி என்றார். (புல் - மண்ணில் வளரும் சிறு தழை; புள் - பறவை)

லகர, ளகர வேறுபாடின்றி அல்லது லகரத்திற்கு ளகரம், ளகரத்திற்கு லகரம் ஒலித்தல் பெருங்கேடாம். இவ்வாறே ழகரத்தை ளகரமாக, லகரமாக ஒலித்தலும் மிகப் பெருங்கேடே.

இதுவும் தொலைக்காட்சி ஒன்றில் கேட்டதுதான்:-

"மாளிகை மேடை (மேட்டை, மேடை என்றார்) ஒட்டிய பகுதியில் ஆதாரங்கள் இருக்கிறது... கோவில்கள் இருக்கிறது.... பள்ளிக்கூடங்கள் இருக்கிறது.... அடையாளங்கள்
இருக்கிறது", ஓரிடத்திலாவது இருக்கின்றன என்ற பன்மையில் முடிக்கவில்லை. முடிவில் ஓரிடத்தில் குறிகோள் இல்லாமல் போய்விட்டது என்றார். குறிக்கோள் எனச் சொல்ல நா எழவில்லை போலும்.

ஒரு நூலில் படித்த சொற்றொடர்:-

"அந்தச் சந்தையைப் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், இயற்கையாகவும் இருந்தன". அதெப்படி வித்தியாசமாக இருப்பது, இயல்பாக இருக்க முடியும்? இது கருத்துப் பிழை. கடைசியில் இருந்தன என்று பன்மையில் முடித்துள்ளார். ஏன்? சந்தை ஒருமைதானே? வித்தியாசமாக, இயற்கையாக என்பதால் பன்மையில் முடித்தார் போலும்!

"புல்லாங்குழல்கள் சில நீளமானது; சில குட்டையானது". சில என்றால் நீளமானவை, குட்டையானவை எனப் பன்மையில்தான் முடிக்க வேண்டும்.

ஒலித் திரிபுப் பெயர்கள்:-

சட்டை - ஷர்ட் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஒலியே இது. பழந்தமிழில் மெய்ப்பை எனும் ஒரு சொல்லுண்டு.

பொத்தான் - பட்டன் என்னும் சொல் தமிழ் ஒலியேற்றுப் பொத்தான் ஆயிற்று. பொத்தலில் மாட்டப்படுவது என்பது வலிந்து சொல்லுதல் ஆகும்.

ஆஸ்பத்திரி - ஹாஸ்பிடல் எனும் சொல்லே ஆஸ்பத்திரியாயிற்று. (மருத்துவமனை - தமிழ்ப் பெயர்)

போத்தல் - பாட்டில் என்பதன் தமிழ் ஒலியே போத்தல். சீசா என்றொரு வழக்குச் சொல் உண்டு.

சால்வை - ஷால் எனும் சொல் சால்வை என்றாயிற்று.

புத்தகம் - புஸ்தகம் என்பதன் தமிழ் வடிவம் இது. (சுவடி, நூல், ஏடு என்பன தனித்தமிழ்ச் சொற்கள்) ஓலைச் சுவடியின் ஓரத்தில் பொத்தல் இட்டு ஓலைகளை அடுக்கிச் சேர்ப்பது.

பொத்தல் அகம் - புத்தகம் என்று வலிந்து சொல்வார் உளர்.

வங்கி - பேங்க் என்பதன் தமிழ் ஒலியமைப்பே இது.

ப - வ ஆதல் தமிழில் பல உண்டு.

பீமன் - வீமன்
இரபீந்திரநாத் - இரவீந்திரநாத்.

பேங்க் என்பதைப் பாங்கு என்றே சொல்லலாம். பணத்தைப் பாங்காக வைக்கும் இடம் என்பதால்.

உலகு - உலகம் எனும் சொல் திருமுருகாற்றுப்படை தொடங்கிப் பல்வேறு தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ள சொல். லோகம் என்பது வடசொல். லோகநாதனை உலகநாதன் என்போம். லோகம் உலகமாயிற்று என்பது ஒரு கருத்து. இல்லை உலகிலிருந்தே லோகம்
வந்தது என்பார் உளர்.

உல், உல்கு என வேர்ச்சொல் காண்பர் அவர். வையம், ஞாலம், பார் என்பன தூய தமிழ்ச் சொற்கள்.


தமிழ் வளரும்.......

நன்றி:- தினமணி கதிர்

பாரதி
28-05-2011, 03:54 PM
மொழிப்பயிற்சி-37: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்

""அவர் ஏன் இப்படி ரொம்ப கீழே குனிஞ்சு வணக்கம் சொல்லுறார்?'' - ""அதுவா? அவர் தன்னோட தாழ்வான வணக்கத்தைத் தெரிவிச்சுக்கிறாராம்''

தமிழிலிருந்து...
ஆங்கில மொழி அகராதியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. கட்டுமரம் (ஒரு வகைப் படகு) என்பது கட்டமரான் என்றும் மிளகுநீர் (ரசம்) முலிகுடவ்னி என்றும் காணலாம். பாதை எனும் தமிழ்ச்சொல்லே பாத் என ஆங்கிலத்தில் ஆகியது. இவ்வாறே நாசி என்பது நோஸ் என்றும் காசு என்பது கேஷ் என்றும் ஆயின எனக் கொள்ளலாம். சந்தனம், சாண்டல் என்றும் அரிசி, ரைஸ் என்றும் ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்றன.

கட்டுமரம், மிளகுநீர், சந்தனம், அரிசி போன்ற பொருட் பெயர்களை அப்படியே தம் மொழியில் தம்மொழி இயல்புக்கேற்ப ஏற்றினர் ஆங்கிலேயர்.

பாதை என்பது வழி, ஆறு (ஆற்றுப்படை), அதர் என்றும் தமிழில் வழங்கக் காணலாம். (ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்) நாசி, மூக்கு என்றே நற்றமிழில் வழங்கப்பட்டு வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறி என்போம். இப்பொறிகளால் உணரப்படுவன ஐம்புலன் என்போம். காசு எனும் சொல்லிற்குக் குற்றம் என்ற பொருளும் உண்டு. ஆசு, மாசு, காசு என்பன ஒரே பொருள் கொண்டவை.

பொற்காசு, வெள்ளிப் பணம் என்பவை (காசு, பணம்) மக்கள் பேச்சிலும் எழுத்திலும் இன்றும் இருப்பவை. வாசி தீரவே காசு நல்குவீர் எனத் தேவாரத்தில் காசு (பணம் எனும் பொருளில் இடம் பெற்றுள்ளது)

முத்தமிழ் என்று இயல், இசை, நாடகம் எனப் பிரித்ததுபோல் இன்றைய எழுத்தாக்கத்தில் அச்சியல், கணினியல், வடிவியல் எனும் மூவகைப் பிரிவுகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இந்த மூவகையானும் கூட மொழி சிதைந்திட வாய்ப்புகள் உள்ளன. இவற்றாலும் தமிழ்மொழியின் தனித்தன்மை கெடாமல், விழிப்பாக நாம் இருந்திட வேண்டும்.

நேரmo பத்tharai வருவற்ட்ர் நித்thirai என்பதுபோல் எழுத்துக் கலப்புச் செய்து புதுமை செய்கிறார்களாம். வேண்டாம் ஐயா இந்தப் போக்கு.
இது என்ன தமிழ்?

அண்மையில் நிகழ்ந்த தேர்தல் விளம்பரங்களுள் ஒன்று- தொலைக்காட்சி ஒன்றில் எழுத்தில் காட்டினார்கள்:
கண்ணியம் குழையாமல்...
கண்ணியத்தைக் குலைக்காமல் (கெடுக்காமல்) என்று நினைத்துக் கொண்டு இப்படி எழுதியுள்ளார்கள். குழைதல் என்றால் சோறு குழைதல் (மிகவும் வெந்து போவது) பற்றிச் சொல்லலாம். குழைந்து குழைந்து பேசுபவர் பற்றிச் சொல்லலாம். சுழற்றிச் சுழற்றி வீசுவதைச் சொல்லலாம். (குழைக்கின்ற கவரியின்றி- கம்பன்)

ஒருவர் பேசுகிறார்: "எல்லார்க்கும் எனது தாழ்வான வணக்கம்'. நல்ல உயர்வான வணக்கத்தை அவர் சொன்னால் என்ன? ஏன் தாழ்வான வணக்கம் சொல்ல வேண்டும். அவர்தம் வணக்கத்தை மிகவும் பணிவோடு (தாழ்மையுடன்) சொல்லுகிறாராம். இந்தத் தமிழ் வேண்டாம் அய்யா... வேண்டாம்!

பலமுறை எழுதிவிட்டோம். ஒருமை, பன்மை பற்றிக் கவலையின்றி வாக்கிய அமைப்புச் செய்கிறார்கள். ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள நூலில், "அவரது அனுபவ உரை எனக்குப் பெரிதும் பயன் தந்தன' என்று எழுதியுள்ளார். அனுபவ உரை பயன் தந்தது என்றுதானே எழுத வேண்டும்? அல்லது அனுபவ உரைகள் பயன் தந்தன எனலாம். ஏன் இப்படி எழுதுகிறார்கள். அவரே மேலும் ஓரிடத்தில்: "எனக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடிய நூல்கள் எவையெனத் தாங்கள் நினைக்கிறீர்களோ, அதை வாங்கித் தாருங்கள்'. நூல்கள் எவை எனத் தொடங்கி அதை என முடித்துள்ளார். அவற்றை என்று எழுதத் தெரியவில்லையா? அக்கறை இல்லை. நாவல் இலக்கியம் என்ற சொல்லாட்சியும் பல இடங்களில் அந்நூலில் பார்த்தோம். புதினம் என்று தமிழில் எழுதலாகாதோ?

மற்றொரு மூத்த பேராசிரியர் நூலுள் பார்த்தோம்: "வீரம், தன்னம்பிக்கை, நாவன்மை, புத்திக் கூர்மை அனைத்தும் அவனிடம் உள்ளது'. அனைத்தும் உள்ளன என்று முடித்திடத் தெரியாதவரா? ஆங்கில மொழியில் எழுத்தாளர் எவரும் இப்படி எழுதுவார்களா? தமிழ் என்றால் அத்துணைத் தள்ளுபடியா?

"முதுகலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. நான் முதல் வகுப்பில் முதல் மாணவனாக பல்கலைக் கழக அளவில் வெற்றிப் பெற்றேன்' முனைவர் பட்டம் பெற்றவரின் நூலொன்றில் தன்னைப் பற்றி இப்படி எழுதியுள்ளார். மாணவனாகப் பல்கலைக் கழக அளவில் என்று ஒற்றுமிக வேண்டும். அதை விட்டுவிட்டார். வெற்றி பெற்றேன் என்று இயல்பாக (ஒற்று மிகாமல்) வர வேண்டிய இடத்தில் ஒற்றைச் சேர்த்துவிட்டார்!

தமிழ் வளரும்....

நன்றி :- தினமணிக்கதிர்

பாரதி
01-06-2011, 06:50 AM
மொழிப் பயிற்சி - 38:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

ஒரு தமிழ் ஆர்வலர் நம்மிடம் பேசும்போது பலமுறை இப்படிச் சொல்லியுள்ளார்:-
"வடச்சொல் கலவாமல் பேச வேண்டும்.."
ஐயா, இது வடச்சொல் அன்று; வடசொல் என்று அழுத்தாமல் சொல்லுங்கள் என்று நாமும் பலமுறை சொல்லிவிட்டோம். மனிதர் மாற்றவில்லை. என் செய்வது?

அவருக்கு லகர, ளகர உச்சரிப்பும் சரியாக வருவதில்லை.
"புளி வாளைப் பிடித்த கதைதான்" என்றாரே ஒரு நாள். சிரிப்புத்தான்; வேதனைச் சிரிப்பு.
புலி - புளியாகவும், வால் - வாளாகவும் அவர் ஒலிப்பில் மாறி நம்மைக் கொல்கின்றன.
இந்த நிகழ்வுகள் யாவும் உண்மையில் நிகழ்ந்தவை. ஒன்றும் கற்பனையன்று. சற்றே அக்கறையோடு முயன்றால் இத்தகைய பிழைகளைத் தவிர்த்துப் பேச முடியும். எழுத முடியும்.

அண்மையில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தோம். "பக்தர்கள் தவரவிடும் பொருள்களுக்கு ஆலய நிர்வாகம் பொருப்பல்ல", என்று பலகை எழுதி வைத்துள்ளார்கள். எல்லாரும் தமிழை முறையாகப் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் ஒரு பட்டதாரியான செயல் அலுவலர் அங்கிருப்பாரே - அவர் பார்த்திருக்கமாட்டாரா? பார்த்தும், அவருக்கும் தவறு தெரியவில்லையா? "பக்தர்கள் தவற விடும் பொருள்களுக்கு ஆலய நிர்வாகம் பொறுப்பன்று" எனத் திருத்தி எழுதுங்கள் என்று எழுதிக் கொடுத்து வந்தோம். திருத்தி எழுதியிருப்பார்களா?

ஓர் இலக்கியக் கூட்டம்.
நாம் தலைமையேற்றிருக்கிறோம்.
கல்வியின் சிறப்பு, மேன்மை பற்றி பேசினார் ஒருவர்.
"யாதானும் நாடாமல் யாதானும் ஊராமல் சாந்துணையும் கல்லாதது ஏன்?" என்று திருக்குறளைச் சிதைத்து வினாவெழுப்பினார்.
நாடாமல் - விரும்பாமல், தேடிச் செல்லாமல்,
ஊராமல் - என்ன பொருள் என்றே சொல்ல முடியவில்லை.
(ஊர்ந்து செல்லாமல் எனலாமோ?)
"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு".
என்பது திருக்குறள்.

கற்றவர்க்கு எல்லா நாடும் எல்லாம் ஊரும் தம் சொந்த நாடாகவும், சொந்த ஊராகவும் ஆகிவிடும்.
அவ்வளவு சிறப்புமிக்க கல்வியைச் சாகும் வரையில் ஒருவன் கல்லாதிருப்பது ஏன்?
நாடு + ஆம் + ஆல்
ஆல் என்பது அசை நிலை (பொருளற்றது)
ஊர் + ஆம் + ஆல்
ஆல் என்பது அசைநிலை.
நாடாம், ஊராம் என்பது பொருள்.

கையெழுத்தும், கையொப்பமும்:-
"கடிதத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கையெழுத்து இல்லை. என்றாலும் அவரது கையெழுத்தையும், கடிதத்தில் உள்ள கையெழுத்துகளையும் சரி பார்த்தபோது இரண்டும் பொருந்தி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்" - இது பத்திரிகைச் செய்தி.
இச்செய்தியில் கையெழுத்து எனும் சொல் இரண்டு பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆனால் புரிந்து கொள்ள இயலாதவர்க்கு ஒரே குழப்பமாக இருக்கும்.

இதனை - கடிதத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கையொப்பம் இல்லை என்று மாற்றிவிட்டால் செய்தி தெளிவாகிவிடும். கையொப்பத்தையும் கையெழுத்து என்று எழுதுவதால் குழப்பமே உண்டாகும்.
ஒருவர் ஒரு கடிதம் எழுதுகிறார். கடித வாசகம் அவர்தம் கையெழுத்தினால் ஆனது. அவ்வாசகத்தின் முடிவில் தம் பெயரை ஒப்பமிடுகிறாரே - அது கையொப்பம்.

சில்லென்று காற்று - ஓர் ஆராய்ச்சி:-
"சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாலே", இந்தப் பாடல் வரிகள் பலருக்கும் தெரியும்.
திரைப்பாடலாகப் பாடப்பட்டிருப்பினும் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இருக்கும் தமிழ்ப்பாட்டு இது.

தண்ணி சில்லுன்னு இருக்கு என்று பேசுகிறோம்.
"சில்லுன்னு காத்து வீசுது" என்பதுவும் பேச்சு வழக்கில் உள்ளது.
இந்தச் சில் தமிழா?
தமிழில் சில் என்பதற்கு அற்பம், சிதறிய பகுதிகள், சில எனும் பொருள்கள் உண்டு.
சில் + சில = சிற்சில.
சில்லறை (பாக்கி, சொச்சம்)வழக்கத்தில் உள்ளது.

ஆங்கிலத்தில்தான் Chill எனும் சொல் மிகக் குளிரானது எனும் பொருளில் காணப்படுகிறது. சிலுசிலுவென நீர் ஓடியது - சில் ஒலிக்குறிப்பாய் வருதல் உண்டு.
- "சும்மா ஜில்லுன்னு இருக்கணும்"
- "ஜில் ஜில் ஜிகர்தண்டா"
என்பன மிகக் குளிர்ச்சியைக் குறிக்க நம் புழக்கத்தில் உள்ள கிரந்த எழுத்தோடு (ஜி) கூடிய சொற்கள்.
சிலீர்னு காற்றடிக்குது என்றும் சொல்கிறோம்.
இந்தச் சில், சிலீர், ஜில், Chill எல்லாம் ஒன்றா?
ஒரே மாதிரிச் சொற்கள் பலமொழிகளில் இருப்பது உண்மையே.
ஆயினும் தமிழ் மிகத் தொன்மைவாய்ந்த மொழி. தமிழிலிருந்து பல சொற்கள் பிறமொழிகளில் கலந்துள்ளன. குறிப்பாகத் தமிழிலிருந்து ஆங்கிலம் ஆகி, மீண்டும் அது தமிழ் வடிவம் பெற்றமையும் உண்டு.

தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

பாரதி
03-06-2011, 01:04 PM
மொழிப் பயிற்சி - 39: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்

கவிக்கோ ஞானச்செல்வன்


குறுக்கு என்றால் நாமறிவோம். நகரங்களின் விரிவாக்கப் பகுதிகளில் "கிராஸ் ஸ்ட்ரீட்' என்று காண்கிறோம். இதனைத் தமிழில் குறுக்குத் தெரு என்போம். கிறித்துவ சமய அடையாளம் கிராஸ் எனப்படுகிறது. இந்தக் கிராஸ் - குறுக்கு எனும் சொல்லின் திரிபேயாகும். இந்தக் கிராஸ், பின்னர் குருசு என்று பாதிரிமார்களால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் சிலுவை எனப் புதிய சொல் உண்டாயிற்று.

நாமம் (பெயர்) எனும் சொல்லிலிருந்தே நேம் (name) வந்தது. பிதா (தந்தை) ஃபாதர் ஆனார். மாதா (அன்னை) மதர் ஆனார். தந்தையெனும் தூய தமிழ்ச் சொல்லே டாடி(dady ) ஆயிற்று. அம்மா எனும் தமிழ்ச் சொல்லே மம்மி ஆயிற்று.


ஒன்று - ஒன் என்பதும், திரிகடுகம் (திரி-மூன்று) திரி- திரீ என்றாகியிருப்பதும், எட்டு - எயிட் என்பதும், பெருமை "புரெவுடு' ஆனதும், பழம்-ஃபுரூட் ஆனதும் ஒப்புநோக்கத்தக்கன.

ஏனிந்த ஒலிப்பு?

சிவன், சிவா, சக்தி இச்சொற்களை நாமறிவோம். இவற்றை ஷிவன், ஷிவா, ஷக்தி என்று இப்போது சிலர் பேசி வருகிறார்கள். ஏன்? நான் "ஷத்தியமாய்ச் சொல்றேன்' என்றார் ஒருவர். ச வரும் இடங்களில் எல்லாம் ஷ உச்சரிப்பது சிலரது வழக்கமாக உள்ளது. ஷெய்தி என்னவென்றால், என்று பேசுகிறார்கள். சண்முகம் - இதனை ஷண்முகம் என்பது வழக்கம்தான். ஷண்முகத்தை, சண்முகம் என்பது சரியே. ஷண் என்பது ஆறு எனப் பொருள்படும். ஷண் மதம் அறுவகைச் சமயம் என்போம். ஷண்முகத்தை ஆறுமுகம் என்போம்.

இப்போது வேடிக்கை (வேதனை?) என்னவென்றால் ஒரு திரைப்பட இயக்குநர் தம்பெயரை ஷெல்வன் என்று வைத்துக் கொண்டுள்ளார். செல்வன் என்பது தனித்தமிழ். தூய தமிழ்ச் சொல். இதனை ஷெல்வன் என்றாக்கியது கொடுமையன்றோ? சங்கர் - ஷங்கர் ஆகலாம். செல்வன், ஷெல்வன் ஆகக்கூடாதா? என்று சிலர் வினவுவர். ஆம், ஆகக் கூடாது. ஷங்கர் வடசொல். தமிழில் சங்கர் என்றோம். சரி. செல்வன் தமிழ்ச்சொல். இதை ஷெல்வன் ஆக்கலாமா?

ஷெல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பறவையின் கூட்டை ஷெல் என்பர். சிப்பியையும் ஷெல் எனலாம். ஷெல்வன் எனும் சொல்லுக்கு வடமொழியிலாவது பொருளுண்டா? இல்லை.

பெயர் புதுமையாக இருக்க வேண்டும். பொருளைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை என்ற மனப்போக்கு வரவேற்கத்தக்கதா? சிவம்- செம்மை, தூய தமிழ்ப் பெயர். சிவத்தை ஷிவம் ஆக்குவது தவறு. சிவத்தினின்று வந்த சொல் சைவம். ஷிவ ஷக்தி என குழகுழ பேச்சு எதற்கு? தமிழைச் சிதைப்பதற்கா? அந்தச் சமயத்தில் என்பதைக் கூட அந்த ஷமயத்தில் என்கிறார்களே! அறிவாளர்(அறிவுஜீவி)களுக்கு அழகா இது?

தகவல் பிழை:

ஓர் எழுத்தாளர்- கட்டுரையாளர் தாம் எழுதும் செய்தியில் பிழையான அல்லது தவறான தகவல்களை வாசகர்களுக்குத் தந்திடல் ஆகாது. தரும் தகவலில் தவறு இருப்பின் அது தகவு+அல் (தகவல்லாத) பிழையாகிவிடும்.

""தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டபோது நடைபெற்ற விழாவிற்கு வந்த தலைவர்.... '' வேறொரு பொருள் பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள இத்தகவல் தவறு. தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்கள் தமிழ்நாட்டோடு இணைக்கப்படவே இல்லை. இணைக்கப்பட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணை பற்றிய சிக்கலே எழாது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் இப்போது உள்ளன. தேவிகுளம் பகுதியில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. மூணாறு எனும் மலை வாழ்விடமும் உள்ளது. தமிழர்களே மிகுதியாக வாழும் இப்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இணைக்கப்படவில்லை. நல்லவேளை, அப்போது தமிழ்நாட்டு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் முயற்சியால் பெரியாற்று நீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை நிலைநாட்டப்பட்டது.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
05-06-2011, 04:16 PM
இப்போது பகுதி - 40 ஐ இங்கு பதிக்கிறேன். அருமை நண்பர் திரு.இராஜேஸ்வரன் அவர்கள் கவிக்கோவின் புத்தகத்தை வாங்கி பகுதி-40ஐ எனக்கு தட்டச்சி அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் நன்றி. அவருடைய தமிழ்த்தொண்டிற்கு மீண்டுமொரு முறை தலை வணங்குகிறேன்.(17.09.2013)


மொழிப் பயிற்சி-40: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்


திருவிதாங்கூர் கொச்சி -
(திரு-கொச்சி) தமிழர்கள் தமிழகத்தோடு இணைய விரும்பினார்கள். திரு-கொச்சி காங்கிரஸ் தலைவர் நேசமணி, தமிழ்நாடு காங்கிரஸ் உடன் திரு-கொச்சி காங்கிரஸை இணைக்க வேண்டும் என் வற்புறுத்தி வந்தார். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைமை இதனை ஏற்கவில்லை. தெற்கெல்லையில் கிளர்ச்சி வலுத்தது. தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமையில் தொண்டர்கள் திரண்டு போராட்டம் பல நடத்தினார்கள். மறியல் செய்தார்கள். பட்டம் தாணுப்பிள்ளை ஆட்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பதினொரு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நெடிய போராட்டத்தின் பின், நடுவணரசு (நேரு) தலையிட்டு, ஒரு நடுவர் ஆயம் (பசல் அலி கமிஷன்) அமைக்கப்பட்டது.

அதன் விளைவாகக் கேரள மாநிலத்திலிருந்து கல்குளம், விளவங்கோடு, அகத்தீசுவரம், தோவாளை எனும் நாங்கு வட்டங்கள் பிரிக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டமாக தமிழகத்தோடு இணைக்கப்பட்டன. தேவிகுளம் பீர்மேடு பகுதிகள், கேரளாவிலேயே நீடிக்கும் என அறிவிக்கப் பட்டது.

பின்னர் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்பதற்காக அனைத்துக் கட்சி போராட்டம் (காங்கிரஸ் தவிர) நடை பெற்றது. கட்சிகளிடையே ஒற்றுமையில்லாமல் போராட்டம் வெற்றி பெறவில்லை. அன்று மட்டும் வலுவாகப் போராடி வென்றிருந்தால் முல்லைப் பெரியாற்றில் அணையை உயர்த்த நாம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை, தொங்கிக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

தெற்கெல்லை, வடக்கெல்லைப் போராட்ட வரலாறு மிகப் பெரியது. ஆந்திரரிடம் திருப்பதியைக் கொடுத்து விட்டு சென்னையை நாம் பெற்றுக்கொண்டோம் என்றும், கேரளரிடம் தேவிகுளம், பீர்மேட்டை கொடுத்து கன்னியாகுமரியை பெற்றோம் என்றும் இன்று முழுமையான வரலாறு அறியாதவர்கள், தவறான தகவல் தருகிறார்கள். இது தகவுஅல் பிழை.

பார்த்தல் - நோக்குதல் - கவனித்தல்

பொருள் ஒன்று போலத் தோன்றினாலும், நுட்பமான வேறுபாடுகளை உடையன இச்சொற்கள். போகிற போக்கில் நம் கண்ணால் பார்ப்பன எல்லாம் நம் நினைவில் நிற்பதில்லை. பார்த்தல் என்பது மேம்போக்கான ஒன்று. உங்களை எங்கோ பார்த்த மாதிரி தெரியுது. ஆனால் நினைவுக்கு எட்டவில்லை என்று சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம்.

நோக்குதல் அப்படியன்று. ஒரு நோக்கத்தோடு ஆழமாகப் பார்த்தலே நோக்குதல் ஆகும். சரியான - உருப்படியான கொள்கையில்லாதவரை, ஒரு நோக்கமும் இல்லையா? என்று வினவும் போதும் இதன் ஆழம் வெளிப்படுகிறது. அருள் நோக்கு, காதல் நோக்கு, வணிக நோக்கு என்பவற்றின் பொருள் நுட்பம் காண்க.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

என்றார் திருவள்ளுவர்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்றார் கம்பநாட்டாழ்வார்.

கவனித்தல் என்பது பார்த்தல், நோக்குதல் இரண்டினும் மேம்பட்ட ஒன்று. மாணாக்கர் பாடங்களாகக் கற்கும் போது ஆசிரியர் சொல்லுபவற்றை - எழுதுபவற்றைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். (எதிலும் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்வதில்லையா?). ஒன்றில் கவனம் தவறினால், விளைவு பெரும் தீங்காகும். ஓட்டுநர், பேருந்தைக் கவனமாக ஒட்டவில்லையானால், பயணிகள் கதி என்னாவது?


தமிழ் வளரும் ....

-----------------------------------------------------------------------

மொழிப் பயிற்சி-41: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

உண்மை, வாய்மை, மெய்ம்மை
இம்மூன்றும் ஒன்று போலத் தோன்றும் சொற்கள். ஆனால் வேறுபாடு உண்டு. இம் மூன்றாலும் மனிதன் தவறின்றி வாழ வேண்டும். இதனை "மன, மொழி, மெய்களால் தவறாது நடப்பேன்' என்று உறுதி கொள்ள வேண்டும் எனச் சான்றோர் உரைத்தனர். (மனோ, வாக்கு, காயம் என்பது வடமொழி) உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை, உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழியாக- சொல்லாக- பேச்சாக வெளிப்படுவது வாய்மை.
வாய்மை மொழி மாறாமல் நடப்பது மெய்ம்மை (மெய்- உடம்பு- செயற்படுதல்)
உள்ளத்தில் இருப்பது உண்மை.
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை.

நடைவேறுபாடுகள்:
ஈண்டு நடை எனும் சொல் எழுத்து நடை, பேச்சு நடை இரண்டையும் குறிக்கும். தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் எழுத்து நடையும், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும் அறிஞர் மு.வ.வின் எழுத்து நடையும் இலக்கணம் பிறழாத இலக்கியமாகத் திகழ்தலின் இவற்றையும், இவை போல்வன பிறவற்றையும் இலக்கிய நடை எனலாம். இப்போது நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒளி பரப்பப்படும் பல புராண, இதிகாச மொழிபெயர்ப்புத் தொடர்களில் அமைந்த உரையாடல்கள் இலக்கிய நடையாக இருப்பதைத் கேட்கலாம். தம் அறிமுகம்? (நீங்கள் யார் என்று பொருள்?) ""தாம் வந்துள்ள நோக்கத்தை நாமறிவோம். ஆயினும் அது நிறைவேறக் கூடுமா என்பது ஐயமே'' இப்படித் தொடர்வதைக் கேட்டுப் பாருங்கள். (இம்மொழிபெயர்ப்பு உரையாடல் சிற்சில இடங்களில் பொருத்தம் இன்றி இருப்பதும் உண்டு)

மராத்தி எழுத்தாளர் காண்டேகரின் பற்பல புதினங்களைத் தமிழில் தந்துள்ள கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் எழுத்து நடை இயல்பாக இருக்கும். கல்கியின் வரலாற்றுப் புதினங்களின் நடையும், தீபம் நா.பார்த்தசாரதியின் நடையும் இயல்பான இலக்கிய நடைத் தமிழே. இந்நாளில் உரை வீச்சுகளும், குறும்பா எனும் ஒன்றும் மற்றும் பல எழுத்துகளும் இலக்கியம் என்றே பேசப்பட்டாலும் இலக்கியம் என்பது இலக்கினைக் (குறிக்கோள்) கொண்டது. வடிவம், கருப்பொருள், வெளிப்பாடு இவற்றில் சிறந்திருப்பதேயாம். மொழிநடைத்தன்மையும் சிதைவின்றிச் சீர்மையுடன் இருத்தல் வேண்டும். வட்டார வழக்கு, சாதிய வழக்குகளை மொழியில் தவிர்த்தல் ஆக்கம் தருவதாகும்.

மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது பேச்சு நடைத் தமிழாம். பேச்சு நடையிலேயே பற்பல பிரிவுகள் உள்ளன. மண்ணின் மணம் கமழ எழுதியுள்ள கி.ராஜநாராயணன் (கரிசல்), தி.ஜானகிராமன் (தஞ்சை) போன்றவர்கள் பேச்சு நடைத் தமிழையே இலக்கியமாக வடித்தவர்கள். புதுமைப்பித்தன், விந்தன் போன்றோரின் தமிழும் இப்பிரிவில் அடங்கும்.

மூன்றாவது ஒன்றுண்டு; அது கொச்சை நடை. பச்சையாகச் சில பல கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதும் பேசுவதுமாகும். அவையல் கிளவி (சபையில் சொல்லக் கூடாத சொற்கள்) கொச்சை வழக்கில் மிகுந்திருக்கும். இதற்கான எடுத்துக்காட்டுகள் வேண்டா என விடுத்திடுவோம்.

இவ்வளவு எதற்காகவெனில் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, கொச்சை வழக்கு எனும் மூவகையாலும் தமிழில் பேசவும், எழுதவும் இயலும். ஆயினும் எழுத்தாளர், பேச்சாளர் கடமையாதெனில், கொச்சை வழக்கை விட்டு, பேச்சு வழக்கைக் குறைத்து, இலக்கிய வழக்கில் பிழையின்றி எழுதுவதும், பேசுவதும் ஆகும். இது பிற்காலத் தமிழ் மக்களுக்கு, இளைய தலைமுறைக்கு என்றும் வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

அவர்கள் வந்துவிட்டார்கள்.
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைக் கீழ்காணும் பேச்சு வழக்குகளிலும் கேட்டிருப்பீர்கள்.
அவுங்க வந்துட்டாங்க. காத்துக் கொண்டிருக்காங்க
அவொ வந்திட்டாவொ காத்திட்டிருக்காவொ
அவா வந்திட்டா காத்திண்டிருக்கா
ஒரே பொருள் தரும் எத்தனை வகையான பேச்சுமுறைகள் நம்மிடம் உள்ளன பார்த்தீர்களா?

அவ்விடத்தே அல்லது அங்கே என்பதை அங்கிட்டு, அந்தாண்டே, அங்ஙனே என்பதுவும், அதற்காக என்பதை அதுக்கொசரம் என்பதும் என்னென்று சொல்வது என்பதை என்னன்னு சொல்லறது?, என்னென்டு சொல்லறது? என்பது போன்ற பேச்சு நடைகள் பல உண்டெனினும் இயன்றவரை திரிபு இல்லாத சொற்களையே கொள்ளுவோமாக.

திரிபு என்றால் எப்படி? ஐயம் தோன்றலாம்.
ஒரு சொல் - ஒரே ஒரு சொல் காட்டுகிறோம். புரிந்து கொள்ளுங்கள்.
இருக்கிறது என்னும் சொல்லை இருக்குது என்பார் மதுரை மக்கள். இருக்கு என்பார் தஞ்சைக்காரர். கீது என்பார் சென்னை மக்கள் (சிலர்). இப்படிச் சொல் திரிபு அடைவது மொழிக்குத் தீங்கு என அறிக.

புத்தகம் தமிழ்ச்சொல்லே; புஸ்தகத்தின்று பெற்றதன்று என்று ஓர் அன்பர் மடல் விடுத்துள்ளார். தமிழ்ச் சொல்லை, வடசொல் என்று எழுதுவதில் எமக்கென்ன மகிழ்ச்சி? வடசொற்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்தே தமிழில் கலந்து விட்டன என்பதைத் தொல்காப்பியம் கொண்டே நாம் அறியலாம். இதுபற்றி விரிவாக முன்னரே எழுதியிருக்கிறோம். அன்பர் காட்டியுள்ள பொத்தகம் (பெருங்கதை- 9 ஆம் நூற்றாண்டு), புத்தகக் கவளி (பெரியபுராணம்- 12 ஆம் நூற்றாண்டு) எல்லாம் பிற்கால நூல்கள். நம் தமிழில், நற்றமிழில் நூல், ஏடு, சுவடி எனப் பல சொல் இருக்கப் புத்தகம் தமிழே என்பதில் என்ன தனிப்பெருமை? சங்க இலக்கியங்களுள், திருக்குறளில் - வேறு பழைய இலக்கிய இலக்கணத்துள் புத்தகம் உண்டா?

புதன்கிழமை எனும் பெயரை அறிவன் கிழமை என்கிறோம். புதன் - புத்தி - புத் வடசொல் என்பதால். புஸ்தகம் - தமிழ் ஒலி பெற்றுப் புத்தகம் ஆயிற்று என்றால் அன்பர் ஒருவர் மறுக்கிறார். போந்து, போத்து, ஒகரம் உகரமாதல் என்கிறார். போ -பொ எனக் குறுகவும் ஓ - உ ஆகவும் விதி (நூற்பா) என்ன? விடுங்கள் ஐயா, புத்தகம் எனும் சொல்லை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லையே. புத்தகம் என்பது பொதுப்படையானது. நூல் என்பது இலக்கணம் பற்றியது என்று வேறுபடுத்திச் சொல்வாரும் உளர்.

"புஸ்தகம் ஹஸ்த பூஷணம்' - இது முற்றிலும் வட சொற்களால் ஆன தொடர் (பழமொழி). புத்தகம் கைக்கு அணி என்பது பொருள். நூலோர் மரபு என்றும், நூலோர் முடிவு என்றும், நூலிற்கு அழகு என்றும்
"நுண்ணிய நூல் பல கற்பினும் தத்தம்
உண்மை அறிவே மிகும்' என்பதும் போன்ற பழமையான சான்றுகள் தமிழில் புத்தகம் எனும் சொல்லுக்கு இல்லை என்பதே நம் முடிவு.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

கீதம்
06-06-2011, 08:12 AM
உண்மைக்கும் வாய்மைக்கும் உள்ள வேறுபாடு அறிந்தேன். மெய்ம்மை என்னும் சொல்லின் பொருளையும் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
11-06-2011, 05:10 PM
கருத்துக்கு நன்றி கீதம்.

---------------------------------------------------------------


மொழிப் பயிற்சி-42: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்


திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் ஊர் திருவெறும்பூர் ஒரு சிவத்தலம். "பெல்' புகழ்மிகு ஆலை அருகில் அமைந்திருப்பதால் மேலும் பெருமை பெற்றது இவ்வூர். ஆயினும் இவ்வூரின் பெயரை திருவரம்பூர் என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். வரம்பு என்றால் எல்லை, இஃதென்ன எல்லை அறுக்கப்பட்ட ஊரா? திரு எனும் மங்கலச் சொல் எதனைக் குறிக்கிறது?

இது திருவரம்பூர் அன்று; திருவெறும்பூர் (திரு+எறும்பு+ஊர்) எறும்பு ஒன்று சிவனை வழிபட்டு முத்தி பெற்ற தலம் இது. திரு என்னும் மங்கலச்சொல் தலப் பெயரில் இணையும் என்பதை அறிவீர்கள். ஆதலின் எறும்பூர், திருவெறும்பூர் ஆயிற்று.

தஞ்சை மாவட்டத்தில் மறவர்க்காடு என்ற ஊர் உள்ளது. இதனை இந்நாளில் மரவக்காடு என்று பிழையாகச் சொல்கிறார்கள். வீர மறவர்கள் வாழ்ந்த (ஊர்) வெறும் மரங்களின் காடாக மாறிவிட்டதா?

அபிராமபுரம் சென்னையில் உள்ளது என அறிவோம். அபிராமம் எனும் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகில் இருக்கிறது. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த பசும்பொன் எனும் சிற்றூர் அபிராமத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இங்கிருந்து அபிராமம் செல்ல வேண்டிய மடல்தனை கவனக் குறைவால், அபிராமபுரம் என்று எழுதிவிட்டால் மடல் சென்னைக்கே வந்துவிடும். அபிராமம் எனில் மிக அழகு என்று பொருள். (ராம - ராமன் - ரம்மியமாக இருப்பவன்) அபிராமத்தில் இறுதியில் "அம்' விகுதி உள்ளது. அபிராமபுரத்தில் புரம் எனும் ஒட்டுச் சொல் இணைந்துள்ளது.

ஒரு புதிய சொல்
வணிக நிலையங்களின் பெயர்களைத் தமிழில் எழுத வேண்டும் என்ற கட்டாயம் சென்னையில் சில திங்கள் முன்னர் நிகழ்த்தப்பட்டது. அதன் விளைவாகப் பல விளம்பரப் பலகைகளில் தமிழ் விளையாடுகிறது. மிட் நைட் மசாலா என்றொரு உணவு விடுதியின் தமிழ்ப் பெயர் நள்ளிரவுக் கதம்பம். நள்ளிரவு சரி, கதம்பம் எப்படி? பல மலர்களின் சேர்க்கையைக் கதம்பம் என்போம். பல்வகை உணவுகளையும் கதம்பம் என்றாக்கியுள்ளனர்.
என்றாலும் மசாலாவின் காரசாரம் இதில் இல்லை.

அழகாக ஒரு சொல். அறைகலன் என்று ஓரிடத்தில் பார்த்தோம். அணிகலன்கள் நமக்குத் தெரியும். உடம்பில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களே அவை. (ஆபரணம் - நல்ல தமிழில், அணிகலன்) அறைகலன் என்பது என்ன? அறையை - கூடத்தை அழகு செய்வது அறைகலன். அஃதாவது ஃபர்னிச்சர் என்ற ஆங்கிலச் சொல்லை அறைகலன் என்றாக்கியது நன்று.

பழமுதிர் சோலை - பழமுதிர்ச்சோலை?
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஓரிடம் பழமுதிர் சோலை. மதுரை அருகில் அழகர்கோவில் மலையில் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பழச்சாறு விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றுக்குப் பெயராகப் பழமுதிர் சோலை என்றும் பழமுதிர்ச்சோலை என்றும் பெயரிட்டுள்ளார்கள். உதிர்த்த (பறித்த) பழங்களைக் கொண்டு சாறு பிழியும் இடங்கள் பழமுதிர் சோலைகளா? பழம் + உதிர்+ சோலை என்றால் பழங்கள் உதிர்கின்ற (கொட்டுகின்ற) சோலை என்று பொருள். பழம் + முதிர்+ சோலை என்றால் பழங்கள் முற்றிய (முதிர்ந்த) சோலை என்று பொருள். முற்றினால்தானே பழம்?

இரு தொடர்களில் உள்ள வேறுபாடு எழுத்தில் ஒரு "ச்' மட்டுமே. பழமுதிர்ச்சோலை என்று வல்லொற்று மிக்கு வந்தால் முதிர்ந்த சோலை. பழமுதிர்சோலை என்று (ஒற்று மிகாமல்) இயல்பாக வந்தால் பழம் உதிரும் சோலை என்று பொருள். இரண்டும் பெரிதும் வேறுபாடு இல்லாத ஒரு பொருளையே சுட்டுகின்றன. ஆனால் பழச்சாறு நிலையங்களுக்கு இந்தப் பெயர் எப்படிப் பொருந்தும்? எல்லாம் ஓர் அழகு (ஈர்ப்புக்காக) என்று கொள்வோமே.

சொல்லருமை:
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது நூற்பா. தமிழ்ச் சொற்கள் பலவும் அவற்றின் பொருளை உணர்த்தும் அழகு வியக்க வைப்பது. தறி என்பது நெசவு செய்யப் பயன்படும் கருவி. இந்தத் தறியில் நீளமாக நெய்து வேண்டிய அளவில் வெட்டி எடுக்கப்பட்டதே வேட்டி என்பது. வேட்டியிலும் சிறிதாகத் துண்டு செய்யப்பட்டது துண்டு ஆகும். ஆக வேட்டி, துண்டு என்பவை காரணப்பெயர்களாய் அமைதல் காண்க. சில தமிழ்ச் சொற்கள் வடமொழியிலிருந்து வந்தவைபோல் தோற்றம் தருவதுண்டு. வேட்டி எனும் சொல்லைச் சிலர் வேஷ்டி என்றனர். இதைப் பார்த்து நுட்பம் தெரியாமல் வேஷ்டிதான் வேட்டியாயிற்று என்றுரைத்தல் பிழை.

தமிழ் வளரும்....

நன்றி: தினமணிக்கதிர்

பாரதி
14-06-2011, 08:04 PM
மொழிப் பயிற்சி-43: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

கச்சை, கச்சு என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். "கச்சை வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டான்' என்று பேசுகிறோம். இடை (இடுப்பு) ஆடைதான் கச்சை. "நீலக்கச்சை பூவார் ஆடை' என்பது சங்க வரி. கச்சு பெண்கள் மார்பில் கட்டுவது. இக்காலத்து "பிரா' போன்றது. பழைய புராண வரலாற்றுப் படங்களில் இப்படியொரு ஆடையைக் காணலாகும். "கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று பாடினார் பாரதியார். "நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று கச்சைக்கு நச்சை (நஞ்சு - விடம்) எதுகையாக்கிப் பாடினார் மகாகவி.

மீண்டும் ஒருமை பன்மை மயக்கம்
"வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன' என்று செய்தியாளர் தொலைக்காட்சியொன்றில் படித்தார். எண்ணிக்கை, நடைபெறவுள்ளது என்று ஒருமை முடிவுதான் சரியானது. பல தொகுதிகள் என்பதால் உள்ளன என்று பன்மையில் முடித்தாரா? அப்படிக் கருதினால் தவறு.
மற்றொரு செய்தி அறிக்கையில்,"அவற்றுக்கு இறுதி முடிவு ஏற்படமாட்டா' என்று செய்தியாளர் படித்தார். முடிவு என்னும் சொல்லுக்கு ஏற்ப, மாட்டாது என்றே முடித்திட வேண்டும். அவற்றுக்கு எனும் பன்மை கருதி மாட்டா என்று பன்மை முடிவு கொடுத்தார் என்று கருதுகிறோம்; இதுவும் பிழையே.

வினை முற்று (முடிக்கும் சொல்) பொருளுக்கு ஏற்ப அமைத்தல் வேண்டும்.
"திருத்தேர் இன்று நிலைக்கு வாராது (வராது)' - இஃது ஒருமை.
"பூனைகள் இங்கு வாரா (வர மாட்டா)' } பன்மை
"ஒவ்வொரு கருத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகும்' (ஒருமை)
"கருத்துகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியன' (பன்மை)
"வழுக்கு மரம் முதலிய வீர விளையாட்டுகள் பயிற்சி முகாமில் நடைபெற்றது'
இங்கு விளையாட்டுகள் நடைபெற்றன என்று பன்மையில் முடித்தல் வேண்டும்.

"தமிழகத்தின் பல பாகங்களில் வெப்பநிலை கூடியே காணப்பட்டன'
வெப்பநிலை கூடியே காணப்பட்டது என்பதே சரி. பல பாகங்களில் என்பதை மனதில் நினைத்து இப்படி முடித்தார் போலும்.
இந்தக் குழப்பம் எல்லாம் சற்றே நினைத்துப் பார்க்க அகன்று போகும். சரியாக இருக்க வேண்டும் என்னும் அக்கறையை மனத்தில் கொள்ள வேண்டும். இது நம் பரிந்துரை. "ஆமாம் ஐயா, எல்லாம் என்று தொடங்கி போகும் என முடித்துள்ளீர்கள். சரியா?' சரியே. அது போகும் } அவை போகும் } ஒரே சொல்தான்.
சொற்றொடர் (வாக்கிய) வகைகள்
வாக்கிய அமைப்பில் கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும், அமைப்பைப் பொறுத்து ஒருவகையாகவும் இரண்டு கூறுகளைக் காண்போம். முதலில் கருத்து வாக்கியம் என்பதுள் அடங்கும் பிரிவுகள் பற்றி அறிவோம்.

1. ஒரு செய்தியை உணர்த்துவது செய்தி வாக்கியம்.
(எ-டு) உழைத்தால் வாழ்வில் உயரலாம்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால் ஆட்சி நிலைக்காது. ஈண்டு செய்தி - நியூஸ் - அன்று; ஒரு கருத்து எனக் கொள்க.

2. எதுபற்றியேனும் யாரிடமேனும் வினவுகின்ற வகையில் அமைவது வினா வாக்கியம்.
(எ-டு) மாநாட்டுக்கு நீ போய் வந்தாயா?
நாளை கல்லூரிக்கு அவர் வருவாரா?

3. நமது விருப்பத்தை - விழைவை - வெளிப்படுத்தும் தன்மை கொண்டது விழைவு வாக்கியம்.
(எ-டு) வாழிய பாரதத் திருநாடு
வாழிய செந்தமிழ்- (வாழ்த்து)
நாளை எமதில்லம் வருக - (வேண்டுகோள்)
உனது சான்றிதழ்களைக் கொண்டு வா - (கட்டளை)
கயவன் அழிக - (ஆற்றாமை } சபித்தல்)

4. நமது உணர்ச்சியைப் புலப்படுத்தும் வண்ணம் அமைவது உணர்ச்சி வாக்கியம்.
(எ-டு) நீயே போன பின் நான் மட்டும் இருந்தென்ன!
முத்தமிழ்த்துறையில் முறைபோகிய வித்தக வருக!

! இப்படி ஒரு குறியிட்டால், இதனை ஆச்சரியக்குறி என்பார்கள். ஆச்சர்யம் (வியப்பு). வியப்பு மட்டுமன்று; எத்தகைய உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும் ! இக்குறி இடப்படுதலின் இதை உணர்ச்சிக்குறி எனல் தக்கது.

தமிழ் வளரும்.....

நன்றி : தினமணிக்கதிர்

கீதம்
15-06-2011, 09:33 AM
தமிழைத் தவறு களைந்து பேச விரும்பும் எவரும் மனவேட்டில் பதித்து, பின்பற்றவேண்டிய உபயோகமான பதிவு. பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 02:05 PM
தூய தமிழினை ஒரு தமிழனாக பேச விரும்புபவனின் குரல் ....அருமை தொடருங்கள் தோழரே..

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 05:49 PM
நண்பர் பாரதி அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் ..அவனுக்கு விவஸ்தையே இல்லை என்று ஒருவனை சுட்டி காட்டி பேசும் போது இதில் விவஸ்தை என்பதன் தூய தமிழ் வாத்தை என்னவென்று கூறமுடியுமா ...

பாரதி
17-06-2011, 08:56 AM
நண்பர் பாரதி அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் ..அவனுக்கு விவஸ்தையே இல்லை என்று ஒருவனை சுட்டி காட்டி பேசும் போது இதில் விவஸ்தை என்பதன் தூய தமிழ் வாத்தை என்னவென்று கூறமுடியுமா ...

தூய தமிழ் வாத்தா..?:)

பொதுவாக வழக்கில்,” அவனுக்கு வெட்கம் இல்லை - அவனுக்கு அறிவு இல்லை” என்ற பொருளில் விவஸ்தை கையாளப்படுகிறது என கருதுகிறேன்.

ஒரு பேரகராதியில் விவஸ்தை = பகுத்தறிவு என கூறப்பட்டிருக்கிறது.

கீதம்
17-06-2011, 09:40 AM
விவஸ்தை என்பதை இங்கிதம் என்றால் பொருந்துமா? இங்கிதம் என்பது தமிழ் வார்த்தைதானா என்பது தெரியவில்லை.

பாரதி
17-06-2011, 10:38 AM
அகர முதலியில் ”இங்கிதம்” என்ற தமிழ்ச்சொல்லுக்கு விளக்கமாக கீழ்க்கண்டவை தரப்பட்டுள்ளன.

சூழ்நிலைக்கும் பிறர் இயல்புக்கும் ஏற்ற இணக்கம், (http://www.tamillexicon.com/ta/%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html) நாசூக்கு
இனிய மன (http://www.tamillexicon.com/ta/%E0%AE%AE%E0%AE%A9.html) உணர்ச்சி
கருத்து; நோக்கம்
இனிய நடத்தை; (http://www.tamillexicon.com/ta/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88.html) இனிமை
சமயோசித நடை
குறிப்பு

======================================
இவ்விடத்து இது பொருத்தம், இது பொருத்தமில்லை, அல்லது இது அழகு, இது அழகன்று என்று அறிந்து செயல்படுதலே "இங்கிதம்" என்று சொல்லப்படும்.

இங்கு+ இது + அம். = இங்கிதம்.

அம் = அழகு.

நன்றி: சிவமாலா வலைப்பூ
========================================

அகராதி தளத்தில் ”விவஸ்தை” என்பதற்கு வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ளும் பக்குவமும் அறிவும் என விளக்கம் தந்திருக்கிறார்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 10:49 AM
தூய தமிழ் வாத்தா..?:)
வார்த்தை என்பது வாத்தாகி விட்டது...தவறை சுட்டிக்காட்டி எனது சந்தேகம் தீர்த்த நண்பர் பாரதி அவர்களுக்கு என் நன்றிகள்...

பாரதி
19-06-2011, 05:41 PM
மொழிப் பயிற்சி - 44:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

அமைப்பு வகைப் பிரிவுகள்:-
தமிழில் மிக நெடிய சொற்றொடர்கள் அமைத்துப் பேசுவோர், எழுதுவோர் உள்ளனர்.

இறையனார் களவியல் (அகப்பொருள்) உரை என்னும் நூலில் ஒரு பக்கம், இரண்டு பக்கம் அளவுக்கு ஒரு சொற்றொடர் நீண்டு செல்லும்.

குறிஞ்சி நில வருணனை உரையை ஓரிரு மணித்துளியளவுக்கு அடுக்கிப் பேசும் பேச்சாளர்கள் உள்ளனர்.

இவற்றுள் வாக்கியம் முடிவு இன்றித் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தவர், தம் மேடை பேச்சு சொற்றொடர் முடிவு இன்றிப் போய்க் கொண்டே இருக்கும். எங்கே முடிப்பார்? எப்படி முடிப்பார் என்று எவருக்கும் தெரியாது. இந்தப் போக்கு அவ்வளவாக இப்போது இல்லை. மாற்றிக் கொண்டனர் தம் பேச்சை.
இங்கு நாம் எழுத நினைப்பது மேற்கண்ட செய்தி பற்றியன்று.
ஆங்கிலத்தில் வாக்கிய வகைகள் இருப்பதுபோல் தமிழில் அமைப்பு முறையில் வாக்கிய வகைகள் உள்ளனவா என்பது பற்றியே சிந்திக்கலானோம்.

கீழ்வரும் எடுத்துக்காட்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.
1. கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதினார்.
2. திருவள்ளுவர் திருக்குறளையும், சேக்கிழார் பெரியபுராணத்தையும், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் இயற்றினார்கள்.

முதல் வாக்கியத்தில் கம்பர் எனும் எழுவாய் எழுதினார் என்னும் பயனிலை கொண்டு முடிந்தது. (ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தது)

இரண்டாம் வாக்கியத்தில் பல எழுவாய்கள் ஓரே பயனிலை கொண்டு முடிந்துள்ளன.

இவ்வாறு ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம் (ஆங்கிலத்தில் simple sentence) இன்னும் சில எடுத்துக்காட்டுகளைப் படியுங்கள்.
1. பொருளீட்டல் மட்டுமே வாழ்வின் குறிக்கோளன்று; அறநெறி பிறழாமையும் வேண்டும்.
2. வாழ்க்கை என்றால் நன்மைகளும் உண்டு; அதேபோல் தீமைகளும் வருவதுண்டு.
3. அவன் வேலையை ஒழுங்காகப் பார்ப்பதில்லை; அதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
4. காலையில் கதிரொளி எங்கும் பரவிற்று; கவ்வியிருந்த பனிப்படலம் நீங்கிற்று.
5. உண்ணும் உணவு அளவாக இருத்தல் வேண்டும்; உடம்புக்கு ஒவ்வும் வகையில் இருத்தல் வேண்டும்; ஊட்டமும் சத்தும் உடையதாக இருத்தல் வேண்டும்.
இப்படிப் பற்பல காட்டுகளை எழுதிக் கொண்டே போகலாம்.

இவை தொடர் வாக்கியம் எனும் வகையின் பாற்படும். ஒன்றுக்கும் மேற்பட்டவை ஏதோ ஒரு வகையில் இணைக்கப் பெற்றுத் தொடர்வது இது. "ஆகையால், ஏனெனில், அதனால், எனினும், இருப்பினும்", போன்ற சொற்களால் இவை இணைக்கப்படலாம்.
தனித்தனியே பல வாக்கியமாயினும் கருத்துத் தொடர்பால் ஒரு வாக்கியமாதலே தொடர் வாக்கியம் எனப்படுவது (ஆங்கிலத்தில் compound sentence). ஒரே எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது இவ்வகை என்றும் குறிப்பிடலாம்.

இனி வேறு ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
1. மொழிப்பற்று மட்டும் இருந்தால் போதாது என்றும் மொழியைத் திருத்தமாய்ப் பேசவும் எழுதவும் பயிற்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் அறிஞர் கூறுவர்.
2. திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைக் காணவில்லை என்றதும் தாயானவள் பதறித் துடித்தாள்; அலறினாள்; காவலரிடம் முறையீடு செய்ய ஓடினாள்.

இவ்விரு வாக்கியங்களும் தொடர் வாக்கியங்கள் போலவே கருத்தால் தொடர்ந்து செல்கின்றன. ஆனால் ஒரு செய்தி முதன்மையாகவும் மற்றவை அதைச் சார்ந்தும் வருவதைப் பார்க்கிறோம்.

அறிஞர் கூறுவர் என்பது முதன்மையானது.
"போதாது, பயிற்சி பெற்றிருப்பது", என்பவை சார்ந்து வருபவை.
தாய் முறையீடு செய்ய ஓடினாள் என்பது முதன்மை வாக்கியம், திருவிழாவில் "காணாமற் போனதும், அலறித் துடித்ததும்", சார்புநிலை வாக்கியங்கள். எல்லாம் இணைந்து ஒரே வாக்கியம் ஆகியுள்ளமை காண்க.

இவ்விரண்டு எடுத்துக்காட்டுகளையும் கலவை வாக்கியம் (ஆங்கிலத்தில் complex sentence) எனச் சொல்லலாம்.
சுருக்கமாகச் சொன்னால் ஓர் எழுவாய் அல்லது ஓரிரு எழுவாய் ஒரே பயனிலை கொண்டு முடிவது "தனிநிலை வாக்கியம்".
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம். பல எழுவாய்கள் பல பயனிலைகள் கொண்டு முடிவது "கலவை வாக்கியம்".


தமிழ் வளரும்.......


நன்றி:- தினமணி கதிர்

மாதவர்
21-06-2011, 06:58 AM
கவிக்கோ. ஞானச்செல்வன் அய்யா அவர்களிடம் இரண்டு ஆண்டுகள் பள்ளியில் தமிழ் படிக்க(1979-1981) எனக்கு வாய்ப்பு கிடைத்தது . அது இன்று வரை எனக்கு சோறு போடுகின்றது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

பாரதி
28-06-2011, 09:44 AM
அன்பு மாதவர், நீங்கள் கொடுத்து வைத்தவரய்யா..!!! உங்களின் நன்றியுணர்வு மிகவும் போற்றத்தக்கது.

---------------------------------------------------------------------------------------


மொழிப்பயிற்சி - 45 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் !


கவிக்கோ ஞானச்செல்வன் (http://www.dinamani.com/edition/searchresult.aspx?AliasName=E3iRz3iyNPwC6gBZ3qKjCujcim|EqyXkkAQDxetg9aqRlMfEunuTLnU6NHxTRnU8wOvj|YYj1lKx6cW7xMj1uA==)




உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சிலப்பதிகாரத்துக்கு ஒரு பெயருண்டு. அதனால் உரைநடை சங்கச் சார்புக் காலத்திலேயே தமிழில் தோன்றிற்று. இறையனார் களவியலுரையும் பழந்தமிழில் உள்ள உரைநடை. அடியார்க்கு நல்லார் உரை, பரிமேலழகர் உரை, சேனாவரையர் உரை என்றெல்லாம் பழந்தமிழ் உரைநடைகள் பல உண்டெனினும், ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே தமிழில் உரைநடை வளர்ச்சி பெற்றது. உரைநடையில் புதினங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள் என்று பலவும் தோற்றம் பெற்றன. ஆதலின் வாக்கிய அமைப்புப் பற்றிய செய்திகள் ஆங்கில மொழியைத் தழுவியே ஈண்டு எழுதப்பட்டுள்ளன.
ஈண்டுரைக்கப்பட்ட வாக்கிய அமைப்புகள் பல இந்நாளில் சிதைவுற்றுப் போயின. தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் இரண்டும் இணைந்த தொடர் கலவை வாக்கியங்கள் நிரம்ப எழுத்துகளில் வந்துவிட்டன. பொதுவாகச் சிறிய சிறிய வாக்கியங்களாக அமைத்து எழுதுதல் நல்லது. மிக நீண்ட வாக்கியங்கள் படிப்பவர்க்குக் குழப்பத்தையும் மலைப்பையும் உண்டாக்கக்கூடும்.

எழுத்தாளர் சிலர், "எப்படி எழுதினால் என்ன? பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுத வேண்டுமா?' என்று பேசி வருவது நன்றாகாது. பல்லுடைக்கும் தமிழ் எங்குள்ளது? எவர் அறிவார்? தமிழ் எழுத வராதவர்கள் தாம் தப்பித்துக் கொள்ளச் செய்கின்ற வாதம் இது. ஆங்கில நாளிதழ்களில் மொழியறிவு, புலமை இல்லாதவர் எழுத முடியுமா? பிழையான ஆங்கிலத்தைத் தமிழர்கள் ஏற்பார்களா? தமிழ் என்றால் மட்டும் ஏனோ புறக்கணிப்பு?

உரை வகை நடை என்னும் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. செய்யுளியலில் "பாட்டிடை வைத்த குறிப்பினானும் பாவின்று எழுந்த கிளவியானும்... எனத் தொடங்கி உரைவகை நடை நான்கு என மொழிப' என்றார் தொல்காப்பியர். பாட்டின் உரைக்குறிப்புகள், பாக்கள் அல்லாது தோன்று சொல்வகையாக உலக வழக்கில் நிகழும் உரையாடல் என்று பலவாறு விளக்கம் தரப்படுகிறது. ஆயினும் முற்றிலும் இஃது உரைநடைத் தமிழ் பற்றிய செய்தி ஆகாது. உரையாப்பு வகை என்று இது குறிக்கப்படுகிறது. விரிவு விரும்புவோர் தொல் - நூற்பா 1429 ஐ காண்க. கிளவி - சொல்.

தமிழின் சீர்மை

தமிழகத்தில் இயற்கையாய் இருக்கும் அனைத்துப் பொருளுக்கும் தமிழில் சொற்கள் உள்ளன. கருவிகளுக்கும், பண்டங்களுக்கும் சொற்கள் உள்ளன. சொற்பெருக்கம் உடைய மொழி நம் தமிழ். மிகப் பழங்காலம் தொட்டு, நம் நாட்டிற்குப் புதிதாக வந்தவற்றுக்கு எப்படிப் பெயர் அமைத்தார்கள் எனச் சில காட்டுகள் வழியாகக் காண்போம்.

குதிரை பண்டு தொட்டுத் தமிழகத்தில் இருக்கவில்லை. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் புதிதாக வந்தபோது அது குதித்துக் குதித்து ஓடுவது கண்டு தமிழர்கள் அதற்குக் குதிரை எனப் பெயரிட்டனர்.

நம்நாட்டில் மிளகு இருந்தது. கார்ப்புச் சுவைக்கு (காரம்) இதனையே பயன்படுத்தி வந்தோம். உடல் நலனுக்கும் ஏற்றதாய் இருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு காய் புதிதாய் வந்தது. அது கார்ப்புச் சுவை கொண்டது. அதனால் முன்னிருந்த மிளகை அடிச்சொல்லாகக் கொண்டு மிளகாய் என்று புதிய சொல்லை உண்டாக்கினர்.

பலவகை இலைகள் நம் நாட்டிலே உண்டு. புதிதாக ஓர் இலை இறக்குமதியாயிற்று. அந்த இலையைப் பயன்படுத்திப் புகை வரச் செய்து பயன்படுத்தினார்கள். புகைவரக் கூடிய இலையைப் புகையிலை என்று சொல்லலாயினர்.

தட்டச்சு, பேருந்து, தொடர்வண்டி, நடைமேடை, அலுவலகம், கணினி, குறுஞ்செய்தி, குறுவட்டு, மின்னஞ்சல், முகப்பக்கம், இணையதளம் என்பனபோல் நூற்றுக்கணக்கான சொற்கள் காலந்தோறும் தமிழில் உருவாகி வந்துள்ளன; வருகின்றன.

இப்போது புதிதாகத் தமிழ்ச்சங்கமம், இசைச் சங்கமம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். சங்கமம் என்பது வடசொல். கூடல் என்பதே தமிழ்ச் சொல். மூன்று ஆறுகள் சேருமிடம் "திரிவேணி சங்கமம்' என்பதைத் திருமுக்கூடல் என்றே தமிழர் சொல்லி வந்தனர். கூடலுடன் ஒரு "திரு' சேர்த்துக் கொண்டால் சொல்ல அழகாய் இருக்கும். இலக்கியத் திருக்கூடல் எப்படி?

தமிழ் வளரும்.....

நன்றி : தினமணிக்கதிர்

M.Jagadeesan
28-06-2011, 12:11 PM
தமிழ்ப் பற்றுடைய ," கவிக்கோ ஞானச் செல்வன் " தம்முடைய பெயரை ," கவிக்கோ அறிவுச் செல்வன் " என்று மாற்றிக் கொண்டிருக்கலாம். "ஞானம் ' வட சொல்லாயிற்றே. பாரதி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

M.Jagadeesan
28-06-2011, 12:21 PM
விவஸ்தை என்பதை இங்கிதம் என்றால் பொருந்துமா? இங்கிதம் என்பது தமிழ் வார்த்தைதானா என்பது தெரியவில்லை.


ஒரு சொல்லில் ஐந்து எழுத்துக்கள் இருந்தால் அது தமிழ்ச் சொல்லாக இருக்காது.

கௌதமன்
03-07-2011, 05:55 PM
சுடர் விடும் விளக்கில் ஒளி தரும் திரியாக இத்திரி விளங்குகிறது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை!

கவிக்கோவின் படைப்புக்கும் பாரதியின் முயற்சிக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!!

பாரதி
05-07-2011, 06:15 PM
தமிழ்ப் பற்றுடைய ," கவிக்கோ ஞானச் செல்வன் " தம்முடைய பெயரை ," கவிக்கோ அறிவுச் செல்வன் " என்று மாற்றிக் கொண்டிருக்கலாம். "ஞானம் ' வட சொல்லாயிற்றே. பாரதி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஐயா,

இதில் நான் தவறாக எடுத்துக்கொள்ள ஏதுமில்லை. இதற்கு என்னால் சரியான விடையளிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. கவிக்கோவின் பெற்றோர் இட்ட பெயரை அவர் மாற்ற வேண்டும் என்ற நமது வேண்டுகோள் சரியோ..? அவர் இடும் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம் எனில் அது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.


சுடர் விடும் விளக்கில் ஒளி தரும் திரியாக இத்திரி விளங்குகிறது என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை!

கவிக்கோவின் படைப்புக்கும் பாரதியின் முயற்சிக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!!
மிக்க நன்றி கெளதமன்.

பாரதி
05-07-2011, 06:19 PM
மொழிப்பயிற்சி-46: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்


(19.6.2011) பெங்களூரு நாகராசன் என்பவர் "வேட்டி' எனும் சொல் பொருளை மறுத்து எழுதியுள்ளார்.


எல்லாத் துணிகளும் தறியில் நீளமாகத்தான் நெய்யப்படுகின்றன என்ற அவரது கருத்தே தவறு. விசைத்தறிகளில், இன்றைய துணி ஆலைகளில் அப்படிச் செய்யப்படலாம். கைத்தறியில் அதுவும் பழங்காலத்தில் நான்கு முழ வேட்டிகள் நான்கை ஒன்றாக நெய்து பின் வெட்டி எடுப்பார்கள். நான்கு கொண்டது ஒரு மடி. புடைவை ஒவ்வொன்றாகத்தான் கைத்தறியில் நெசவு செய்தனர். புடை என்பது பக்கம்; புடைவை உடலின் எல்லாப் பக்கமும் சுற்றிக் கட்டப்படுவது. சிறிதாகத் துண்டித்து எடுத்து துண்டு ஆக்கினர் என்றோம். "வேஷ்ட' வேட்டி என்றாயிற்று எனில் துண்டு எப்படி வந்தது என்று அவர் ஏன் எழுதவில்லை?


ஜவுளி வர்த்தகம் என்பதை அறுவை வணிகம் என்பர் தமிழறிஞர். அறுவை (அறுக்கப்படுதல்) ஜவுளியின் தமிழ்ப் பெயர். வேட்டி, துண்டு, அறுவை எல்லாம் முன்னரே அறிஞர்கள் கண்டு சொல்லியவை. எமது புதிய கருத்துகள் அல்ல.

பிரபலமானவர்களின் முகவரி என்று புத்தகம் வெளியிடுகிறார்கள். பிரபல நடிகர், பிரபல தொழில் மேதை என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தப் பிரபலம் தமிழா? இல்லை! பிரபலமானவரை, புகழ்பெற்றவர் என்று சொல்லலாம். மிக உயர்ந்த புகழ் உடையவராயின் "மீப்புகழ்' என்னும் அடைமொழி சேர்த்தல் போதுமானது. (மீ - மேலான)

பிரமுகர் என்ற சொல்லும் நம் பயன்பாட்டில் உள்ளது. தனித் தமிழில் பேசும் இயல்புடையவரும் பிரமுகர் என்றுரைப்பது கேட்டுள்ளோம். பிரமுகர் எனும் சொல்லும் வட சொல்லே. ஓர் உயர்ந்த இடத்தை, மதிப்பை மக்களிடம் பெற்றிருப்பவரையே பிரமுகர் என்போம். மேன்மையர் என்று தனித் தமிழில் சொல்லலாமே! (சில பிரமுகர் மேன்மையர் எனும் சொல்லுக்குப் பொருந்தாதவராய் இருக்கலாம்; இருக்கட்டுமே. நடக்க முடியாத ஒருவர்க்கு நடராசன் என்று பெயர் இல்லையா?)

தமிழில் பெயர்கள் அமைந்த வகை வியப்பூட்டுவதாக இருக்கிறது. அடுதலுக்கு (அடுதல் - சமைத்தல்) உரியது அடுப்பு. பாம்புகள் ஒன்றோடொன்று தழுவிக் கொண்டு அணைத்து இன்புறும் என்பர். அன்புடன் தழுவி வாழ்தல் என்பதை நம் தமிழ் அரவணைத்தல் என்று சுட்டுகிறது. (அரவு - பாம்பு)

ஒருவர் உயரத்தில் சரி பாதியாக இருப்பது இடுப்புப் பகுதியாகும். ஆதலின் இடுப்பை அரை என்றனர் (அரைஞாண் - இடுப்புக் கயிறு)

அறுத்தல் எனும் சொல்லிலிருந்து ஆறு எண்ணம் சொல் வந்தது. நிலத்தை அறுத்துக் கொண்டு நீர் ஓடுவது ஆறு எனப்பட்டது. அப்படி ஓடும் ஆறு ஒரு வழியை உண்டாக்கிவிடும். அதனால் ஆறு என்பதற்கு வழி (பாதை) என்ற பொருளும் உண்டு. (ஆற்றுப்படை - வழிப்படுத்துதல்)

வீட்டில் பல பகுதிகள் உண்டு. அப்படிப் பகுதி பகுதியாக அறுக்கப்பட்ட (பிரிக்கப்பட்ட காரணத்தால்) அறை என்னும் சொல் வந்தது. (சமையலறை, படுக்கையறை)

பெரிய கட்டையைப் பிளப்பதற்கு இடையில் திணித்து அடிக்கப்படுவது ஆப்பு. ஆழ்+பு என்பது ஆப்பு ஆயிற்று.

எல்லாப் பொருளிலும் இடத்திலும் தங்கி (உறைந்து) இருப்பவன் இறைவன் (இறை - தங்குதல்)

உயிருக்கு உடைபோல் அமைந்திருப்பதால் உடம்பு. உள்ளுதலுக்கு இடமாக இருப்பதால் உள்ளம். (உள்ளுதல் - நினைத்தல்). மக்களால் உண்ணப்படும் நீரையுடையது ஊருணி (ஊர் + உணி)

எள்+நெய் - எண்ணெய் ஆயிற்று. இக்காலத்தில் பொருள் மாறி எண்ணெய் பலவகைப் பொதுப் பெயர் ஆகிவிட்டது.

ஏர்த் தொழிலுக்கு (உழவுக்கு) உதவுவது எருது. ஒத்து இருக்கும் வகையில் அமைவது ஒத்திகை (நாடக ஒத்திகை)

கோள் - கொள்ளுதல் என்னும் பொருளது. இதற்கு வலிமை என்றொரு பொருளும் உண்டு. வீட்டில் வளரும் நாய் அறிவோம். கோள் + நாய் - கோணாய் என்பது ஓநாய் என மருகியது; இது காட்டில் இருப்பதாம்.

கடப்பதற்கு அரியது என்னும் பொருளுடையது கடல். சாலையின், வீதியின் கடைசியில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது கடை (விற்பனை அகங்கள்). யானை, கரிய நிறமுடையதாக இருப்பதால் அதற்குக் கரி என்ற பெயர் உண்டு. எல்லாவற்றையும் காணும் இடமாக இருப்பதால் கண் (கண் - இடம்).


தமிழ் வளரும்....

நன்றி: தினமணிக்கதிர்

கீதம்
06-07-2011, 10:02 PM
பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே. அரவணைத்தல், அரை, அறை, ஆப்பு, ஊருணி போன்ற பல பெயர்ச்சொற்களின் காரணம் அறிந்தேன். நாற்காலி என்பதைக் காரணப் பெயர் என்பது போல் இவற்றையும் காரணப் பெயர் என்று சொல்லலாமா?

பாரதி
08-07-2011, 12:19 PM
சொல்லலாம். கதிரை, குரிசில் ஆகியவையும் நாற்காலியே. எனக்கு ஏற்படும் வியப்பு என்னவெனில் தமிழ் மொழியில் மட்டுமே மிகப்பெரும்பாலானவற்றிற்கு காரணத்துடன் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன.(என்றெண்ணுகிறேன்.)

பல மொழிகளையும் கற்றால் தமிழ்மொழியின் சிறப்பு சொல்லாமலே புலப்படும் என்று தோன்றுகிறது.

கருத்துக்கு நன்றி கீதம்.

பாரதி
17-07-2011, 03:39 PM
மொழிப்பயிற்சி-47: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்


வாக்கிய அமைப்புகள் பற்றி முன்னர் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து நிறுத்தக் குறிகள் பற்றி அறிவதும் அவசியம் ஆகும்.

பலவற்றை அடுக்கிச் சொல்லிப் பின்னர் முற்றுப்புள்ளி வைக்கிறோம். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கால் புள்ளி (,) இடுதல் முறை. (எ-டு) மா, பலா, வாழை முக்கனிகள். மூன்றில் இரண்டின் பின் கால்புள்ளி இடல் வேண்டும். மூன்றாம் சொல் அடுத்த சொல்லோடு இணைக்க முடியும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன ஐந்திணைகள் ஆகும். இதனையே முல்லையும் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும் பாலயும் என்று இணைத்து எழுதும் போது கால் புள்ளி இடல் வேண்டாம். பெரிய வாக்கியங்களில் ஒரு செய்தியை சற்றே நிறுத்துமிடத்தும் கால் புள்ளி இடல் வேண்டும். (எ-டு) இப்போது, தாய்மைக் கனிவைப் பலப்படுத்தி நடிப்பதில், காலத்திற்கேற்ற கண்ணம்பாவாகத் திகழ்கிறார்.

நெடிய வாக்கியத்தில் ஒரு கருத்து முற்றுப் பெறும் நிலையில் மேலும் தொடரும் போது அரைப்புள்ளி ( ; ) இடல் வேண்டும். (எ-டு) சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விடுதலைப் போராட்ட வீர மறவர் மட்டுமல்லர்; சிறந்த தமிழறிஞரும் தமிழ்ப் போராளியுமாவார்.

(எ-டு) கயவன் என்னும் சொல்லுக்கு நிகராகப் பெண்பாற் சொல்லைக் கம்பன் நமக்குக் காட்டுகிறான்; அது கயத்தி என்பதாகும்.

ஒரு கருத்து பற்றி - பொருள் பற்றிப் பின்னர் விளக்கம் வரும்போது அல்லது ஒருவரது பேச்சை நேர்க் கூற்றாக எழுதும் போது - அதன் முன்னர் வரும் வாக்கிய முடிவில், முக்கால் புள்ளி ( : ) இடல் வேண்டும்.

(எ-டு) கல்வியே அழியாத செல்வம் என்னும் கருத்தை விளக்கும் செய்திகளை இனிக் காண்போம்:

(எ-டு 2) இராமனை முதற் சந்திப்பில் கண்ட அனுமான், அரிய சொல்லாற்றலுடன் அழகாகப் பின்வருமாறு பேசினான்:

ஒரு வாக்கியத்தின் முடிவில், முற்றுப் புள்ளி (.) இடல் வேண்டும் என்பது நாமறிவோம். (எ-டு) தமிழ் மொழி இலக்கியச் சிறப்பும் இலக்கணக் கட்டுக்கோப்பும் தொன்மையும் வன்மையும் உடைய மொழி.

வினவுதல் கருத்துடைய வாக்கிய முடிவில், வினாக் குறி (?) இடல் வேண்டும். (எ-டு) ஓராண்டின் பெரும் பொழுதுகள் எவை? ஒரு நாளின் சிறுபொழுதுகள் எவை? உன் பெயர் என்ன?

ஏதாவதோர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வாக்கிய முடிவில், உணர்ச்சிக் குறி (!) இடல் வேண்டும்.

(எ-டு) அந்தோ! ஈழத்தமிழர் பற்றி எண்ணும் போதே உள்ளம் கொதிக்கிறதே!

அடடா! இந்தக் காட்சியின் அழகு என்னே!

வாழிய பாரத மணித்திருநாடு!

[வியப்பு (ஆச்சரியம்) என்பதும் ஓர் உணர்ச்சி. உணர்ச்சிக் குறியை ஆச்சரியக் குறி என்று, தவறாக சொல்லி வருகிறோம்]

முன்னோர் மொழியை ஒரு சில சொல் அல்லது ஓரடியில் எழுதும் போது, ஒற்றை மேற்கோள் குறி இட வேண்டும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

சிறிய நேர்க்கூற்றுகளையும் இப்படிச் சுட்டிக் காட்டலாம்.

'நீ வராதே போய்விடு' என்றான் அவன்.

பிறர் கூற்றை அல்லது பாட்டு வரிகளை எடுத்து எழுதும் போது, இரட்டை மேற்கோள் குறி இடல் வேண்டும்.

(எ-டு) "ஒன்று பரம் பொருள் நாமதன் மக்கள்
உலகு இன்பக் கேணி" - என்றார் பாரதியார்.

"நெஞ்சில் உரம், நேர்மைத் திறம், மனத்தில் உறுதி, தளராத உழைப்பு, சிந்தனைக் கூர்மை இருந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம்" என்று, அறிவுரை புகன்றார் அவர்.

ஒருவர் கூற்றாக அமைந்த பெரிய வாக்கியத்தில், இன்னொருவர் கூற்று இடையில் வந்தால், இரட்டை மேற்கோள் குறிகள் அமைந்த பகுதியின் நடுவே, ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.

(எ-டு) "நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றே ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அப்பா சொல்லிவிட்டார், 'உன்னை இனிமேல் கல்லூரிக்கு அனுப்ப முடியாது' என்று. அதனால் படிப்பை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று.

நன்றி: இப்பகுதியை பொறுமையாக தட்டச்சி, எனக்கு தனிமடலில் அனுப்பி இங்கு பதிக்குமாறு பணித்த அன்பு நண்பர் இராஜேஸ்வரனுக்கும், அவருடைய தமிழ்ப்பற்றுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம். (18.10.2013)

-----------------------------------------------------------------------


மொழிப்பயிற்சி-48: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்



எழுதிவரும்போது இடையில் சில பகுதிகளை விட்டுவிட்டு எழுதுவதைக் காட்ட (.....) தொடர் விடுபாட்டுக் குறியிடல் வேண்டும்.

ஒரு சொல் அல்லது பகுதிக்கு விளக்கம் கீழே தரப்பட்டிருந்தால் அச்சொல்லோடு * உடுக்குறி இடல் வேண்டும். ஒரு கருத்தை மீண்டும் எழுதும்போது அல்லது ஒருவர் பெயரே மீண்டும் வரும் போது மேற்படிக் ('') குறியிடல் வேண்டும்.

ஒரு வாக்கியத்தில் அமைந்த சொற்களுக்கு இடையே - விளக்கம் தரும் வகையில் வேறொரு சொல் இடைப்பட வரும்போது இடைப்பிறவரல் குறி (-......-) இடல் வேண்டும்.

(எ-டு) நீ எப்போதும் வெற்றி பெறுவாய் - நேர்மையாக நடந்தால் - என்பதை மறவாதே.

ஒரு சொல்லுக்கு விளக்கம் தர வேறொரு சொல் எழுதப்பட்டால் சிறுகோடு (-) இடப்படுதல் வேண்டும்.

(எ-டு) அந்தக் காட்சி அளவிடற்கரிய வியப்பை - ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

அது அவன் மனதில் பசுமையாக - அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

அடைப்புக்குள் எழுதப்படும் செய்திகளுக்குப் பிறைக்குறி இட வேண்டும். சில இடங்களில் அடைப்புக் குறிக்கும் மேல் பகர அடைப்பு ள ன வருதலும் உண்டு.

விளிப்பெயர்களில் காற்புள்ளிதான் இட வேண்டும்.

உணர்ச்சிக்குறிகளைப் போட்டு எழுதுதல் பிழை. இராமா, முருகா, நண்பா, அண்ணா என்பதுபோல் வர வேண்டும். இராமா! முருகா! நண்பா! அண்ணா! என்றெழுதிட வேண்டா.

மாற்றமும் மகிழ்ச்சியும்
நமது செய்தி ஏடுகளில் பல்லாண்டுகளாக எழுதப்பட்ட கருப்பு எனும் சொல் இப்போது கறுப்பு எனச் சரியாக எழுதப்படுகிறது. இயக்குனர் எனும் தவறான சொல்லும் இயக்குநர் என்று சரியாக எழுதப்படுகிறது. தொலைக்காட்சி எழுத்துகளிலும் இம்மாற்றம் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. இன்னும் மேலாக, ""உங்களைப் பாதுகாப்பது மிகவும் இடரான வேலையாகிவிடும்'' என்ற வாக்கியத்தைப் பார்த்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

"கஷ்டமான வேலையாகிவிடும்' என்பதுதான் நடைமுறையில் இருந்தது. வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது என்பதைப் பார்த்தபோதும் மகிழ்ச்சியே. பதட்டம் என்றே எழுதிவந்தார்கள். மாற்றம் வரவேற்கத்தக்கது. வன்முறை நிகழ்வுகளால் (சம்பவங்களால்) என்று எழுதியிருப்பின் இன்னும் சிறப்புடைத்தாகும்.

"குழந்தையின்மைக்குக் காரணிகள் என்ன?' ஏதோ ஒரு விளம்பரத்தில் படித்ததாக நினைவு. எவை என்னும் பன்மைச் சொல்லைப் பொதுவாகப் பலரும் மறந்துவிட்டோம். "விலைவாசி உயர்வுக்குக் காரணங்கள் என்ன?' " ஊழல் பெருகிவிட்டதன் அடிப்படைகள் என்ன?' என்றே பலகாலும் கேட்க நேர்கிறது. பன்மையில் "கள்' ஈறு பெற்று வரும்போது எவை எனச் சொல்ல வேண்டும் என்பதை மறக்கலாமா? அடிப்படை என்ன? என்றால் போதுமே. அடிப்படைகள் என்று தேவையின்றிக் "கள்' விகுதி ஏன்?

ஓர் ஐயமும் விளக்கமும்
செய்தி ஏடுகளில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது என்று எழுதுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஆர்ப்பு என்றால் ஒலித்தல் (ஓலி). ஆட்டம் என்பது ஆடுவது. கறுப்புக் கொடிக்கும் ஒலித்து ஆடுவதற்கும் என்ன தொடர்பு? இவ்வாக்கியம் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றிருந்தால் சரியாயிருக்கும். ஆர்ப்பாட்டம் என்பதும் தொடர் முழக்கம் (கோஷம் போடுதல்) என்பதையே குறிக்கிறது போலும்! எப்படியோ நம்மவர்க்கு இத்தொடர் நன்கு பழகிவிட்டது.

புறமும் புரமும்
நாட்டுப்புறப் பாடல்கள் என்று சொன்னால் நன்கறிவோம். கிராமியப் பாடல்கள் என்றும் சொல்வதுண்டு. அண்மையில் ஒரு பாட நூலில் நாட்டுப்புரப் பாடல்கள் என்று அச்சிட்டிருப்பதாக அறிகிறோம். நாட்டுப்புரம் என்பதே சரி என்றும் வாதிடுகிறார்களாம் சிலர். புறம் என்பது தூய தமிழ்ச் சொல்; புறநானூறு நாமறிவோம். புறஞ்சேரி இறுத்த காதை சிலப்பதிகாரத்தில் உள்ளது. இந்நாளில் புறநகர் என்று சொல்லுகிறோமே அதுவே புறஞ்சேரி எனப்பட்டது.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

கீதம்
21-07-2011, 11:32 PM
விளிப்பெயர்களில் காற்புள்ளிதான் இடவேண்டும் என்ற செய்தி இப்போதுதான் அறிந்தேன். இதுவரை ஆச்சர்யக்குறி (உணர்ச்சிக்குறி) பயன்படுத்தி வந்துள்ளேன். இனி திருத்த முயல்வேன். மற்ற குறிகளுக்கான தமிழ்ப்பெயர்களும் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
24-07-2011, 09:04 AM
மொழிப்பயிற்சி-49: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்






நகர்ப்பகுதிக்கு வெளியே அமைந்ததே நாட்டுப்புறம் என்று சொல்லப்பட்டது. அஃதாவது சிற்றூர் (கிராமம்) சார்ந்தவை அவை. அந்த மக்களின் இசை, நடனம் முதலிய கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனப்பட்டன. புரம் என்பது வடசொல். வாழ்விடம் என்னும் பொருள் கொண்டது. புரம் - கோட்டை எனும் பொருளிலும் வரும். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்பர் சிவபெருமானை. இந்நாளில் பெரிய நகரங்களின் உள் பகுதிகளுக்குப் புரம் என்று பெயர் அமைத்துள்ளார்கள். (எ-டு) சீனிவாசபுரம், மன்னார்புரம். பெருநகரில் அண்ணாநகர், பெசன்ட் நகர் என்று சொல்லுகிறோமே அதுபோன்றது புரம் என்பதும்.


அந்தநாளில் மன்னர்களின் அரண்மனையில் அரசியார் இருக்குமிடம் அந்தர்ப்புரம் எனப்பட்டது. (அந்தப்புரம் என்பது பிழை) அந்தர்ப்புரம் என்பதே சரி. (கதிரைவேற் பிள்ளையின் பேரகராதி காண்க) இச்சொல்லுக்கு உள் வீடு, அரசியார் மாளிகை என்று பொருள் கொள்ளலாம். நாட்டுப்புறத்தோடு - புரத்தைச் சேர்ப்பது பொருந்தாது.

முன்னர் எழுதினோம்: மாறன் - தமிழ்ச்சொல் (பாண்டியன்). மாரன் - வடசொல் (மன்மதன்). ஆதலின் சுகுமாரனைச் சுகுமாறன் என்றெழுதுதல் பிழை என்பதாக. (திருமாறன், நன்மாறன், நெடுமாறன் - நற்றமிழ்ச் சொற்கள்) அதுபோன்றே நாட்டுப்புறம் என்பதை நாட்டுப்புரம் எனல் பிழையேயாகும்.


மீண்டும் மீண்டும் பிழைகள்:

இருபது முப்பது ஆண்டுகள் முன்னர் வெளிவந்த நூல்களில், ஏடு, இதழ்களில் இன்றுபோல் பிழைகள் மலிந்திருக்கவில்லை. கையால் அச்சுக் கோப்பவர் மிகக் கவனமாகத் தம் பணியைச் செய்தார்கள். தமிழில் எழுத்தறிவு, சொல்லறிவு நிரம்பியிருந்தார்கள். அப்படியே பிழைகள் இருப்பினும் பிழை திருத்துவோர் அவற்றைத் திருத்திவிடுவார்கள். அத்தகைய புலமை உடையவர்கள் பிழை திருத்துபவராக இருந்தனர். இதற்கும் மேல் எப்படியோ சில பிழைகள் நூலில் இருந்துவிட்டால் கடைசிப் பக்கத்தில் "பிழையும் திருத்தமும்' ஓர் அட்டவணையிட்டு வெளியிடுவார்கள்.


இந்நாளில் கணினி வழியாக எழுத்துகளைத் தட்டி உருவாக்கும் முறையில் நிரம்பக் கவனக் குறைவு, மொழியறிவு இன்மை, தமிழ்தானே என்னும் புறக்கணிப்பு எண்ணம் ஆகியவை மிகுந்துள்ளன. விளைவு, பிழை மலிந்த ஏடுகள், புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுள்ளன.


ஒரு சிறந்த மனிதரைப் பற்றி எழுதும்போது, "மத்திய அரசு தமக்கு வழங்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்தார்' என்று ஒரு புத்தகத்தில் ஒரு நல்ல எழுத்தாளர் எழுதியிருப்பதைப் படித்தேன். மத்திய அரசால் வழங்கப்படவிருந்த என்றோ, மத்திய அரசு வழங்கவிருந்த என்றோ இருப்பின் இந்த வாக்கியம் பிழையற்றதாகும். இதே புத்தகத்தில் வேறு ஒரு பக்கத்தில் "... நிறுவனத்தில் இவர் வேலைப் பார்த்து வந்தார்' என்றும் இருக்கிறது. வேலை பார்த்தார் என்று ஒற்று (ப்) மிகாமல் எழுதிட வேண்டும். வேலைப் பார்த்தார் எனில் வேல் என்ற கருவியைப் (வேல் +ஐ) பார்த்தார் என்று பொருளாகும். இவ்வாறே வெற்றி பெற்றார் என்பதை, வெற்றிப் பெற்றார் என்றும் எழுதுகிறார்கள்.


பயிர்த்தொழில் என்பது ஒன்று. உழவுத் தொழில் என்றும் உரைப்போம். இந்த உழவுத் தொழில் உலகுக்கெல்லாம் பேருதவியாக (உபகாரமாக) இருப்பதால் இத்தொழிலை வேளாண்மை என்றும் குறிப்பிடுவோம். (வேளாண்மை - உபகாரம் - பேருதவி)

பயறு ஒருவகை உணவுப் பொருள். பாசிப் பயறு, தட்டைப் பயறு, மொச்சைப் பயறு எனப் பல பயறுகள் உண்டு. இந்தப் பயறு என்னும் சொல்லைப் பயிறு ஆக்கக் கூடாது. ஆனால், அரசு விளம்பரம் ஒன்று அரசுத் தொலைக் காட்சியில் வருகிறது. அதில், பயிறு வகைப் பயிர்களுக்கு.... என்று எழுத்தில் காட்டுகிறார்கள். இது பிழை. இவ்வாறே பயிர்களுக்கு என்னும் சொல்லை பயிறுகளுக்கு என்றெழுதுவதும் பிழையே. பயறு வகைப் பயிர் என்பதே சரியானது.



தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

நாஞ்சில் த.க.ஜெய்
24-07-2011, 03:27 PM
ஆச்சர்ய குறியிட்டு எழுதி வந்த எனக்கு அது தவறு என்று சுட்டிகாட்டியது இத்தொடர் ...அதுபோல் மாறன் மாரன் ஒரேழுத்து மாறுபாடு மற்றும் பயிறு பயறு என்பதன் மாறுபாடு தெளிவாக அறிய முடிந்தது ...மிக்க நன்றி தோழர் ..

பாரதி
01-08-2011, 10:35 AM
கருத்துக்கு நன்றி ஜெய்.

----------------------------------------------------------------------


மொழிப்பயிற்சி-50: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்

வீணை என்ற சொல்லோடு கலைஞர் எனும் சொல் சேரும்போது "க்' வருமா? என்று ஓர் அன்பர் தொலைப்பேசியில் வினவினார். ஆம். க் வரும் - கண்டிப்பாய் மிக வேண்டும் என்றேன். வீணை (ஐ) உயிர் ஈறு, (க,ச,த,ப நான்கில்) "க' வல்லெழுத்து வருமொழி. வீணையை மீட்டும் கலைஞர் என்று பொருள் விரித்தல் வேண்டும். இரண்டாம் வேற்றுமை உருபும் (ஐ) பயனும் (மீட்டும்) உடன் தொக்க தொகை இது என்றேன்.

அப்படியானால் வீணை என்பதோடு கற்றான் எனும் சொல் சேரும்போது "க்' வருமா? என்றார். "வராது' என்றேன். இங்கும் வருமொழி க - தானே? ஏன் மிகாது? வீணையைக் கற்றுக் கொண்டான். ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மட்டும் தொக்கி வருவதால் வலி மிகாது என்றேன். தமிழ் கற்றான்- தமிழைக் கற்றான்; தமிழ்ப் பேராசிரியர்- தமிழில் வல்ல பேராசிரியர், தமிழைக் கற்ற பேராசிரியர் என்பதும் ஈண்டு நினைக்கத்தக்க எடுத்துக்காட்டுகள்.

சந்தி பிரித்தெழுதல்
பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்புச் செய்பவர் நன்கு பொருள் விளங்க வேண்டும் என்பதற்காக செய்யுள் அடிகளில் அமைந்த சீர்களைச் சந்தி பிரித்து எழுதுகிறார்கள். சந்தி பிரிப்பதால் பொருள் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக,

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'

கொழுநற்றொழுதெழுவாள்- கொழுநனை (கணவனைத்) தொழுது எழுவாள் என்று பொருள் தரும் இதனைக் "கொழுநன் தொழுது எழுவாள்' என்று பிரித்து எழுதினால் என்ன ஆகும்? கொழுநன் (கணவன்) வந்து தன்னைத் தொழுதிடப் பின் எழுவாள் அவள் என்று ஆகிவிடும்.

வாள்+தடங்கண்= வாட்டடங்கண்; புல்+தரை= புற்றரை. இதனை வாள்த்தடங்கண், புல்த்தரை என்று எழுதுதல் தவறாம். இவ்வாறே பற்பொடி, கற்கண்டு இவற்றை பல்ப்பொடி, கல்க்கண்டு என்றெழுதுதல் பிழை.

அவற்கு, அவட்கு, அவர்க்கு - இம்மூன்று சொற்களின் வேறுபாட்டை இந்நாளில் பலர் அறியார். அவன்+கு= அவற்கு (ஆண்பால்) அவள்+கு= அவட்கு (பெண்பால்), அவர்+கு= அவர்க்கு (பலர் பால்). அங்கு வந்தவற்கு எனின், வந்தவன் ஒருவன் மட்டுமே. அங்கு வந்தவர்க்கு எனில், வந்தவர் பலராவார். இப்போது நாம் இச்சொல்லை வந்தவர்களுக்கு எனக் "கள்' விகுதி சேர்த்து எழுதிப் பழகிவிட்டோம்.

பொன்+தாமரை= பொற்றாமரை என்று ஆவதைவிட்டு பொன் தாமரை என்று எழுதினால் பொன் வேறு, தாமரை வேறு என்று இருபொருளைக் குறிப்பதுபோல் ஆகிவிடக் கூடும். புணர்ச்சி இலக்கணம் மிக விரிவானதொன்று. சில குறிப்புகளை ஆங்காங்கே தருகிறோம்.

கவிஞர்களுக்கு ஒரு குறிப்பு:
புதுக்கவிதை வாணர் பற்றி நாம் எதுவும் எழுதுவதற்கில்லை. மரபுப் பாவலர்களுள் இருவகையினர் உள்ளனர். யாப்பு இலக்கணம் முற்றிலும் அறிந்து எழுதுபவர்கள் ஒருவகை. இலக்கணம் அறியாமலே மரபுக் கவிதைப் பயிற்சியால் எழுதுபவர் மற்றொருவகை. வெண்பா எழுதுவதற்கு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் எனக் கவிஞர் அறிவர். மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை. விளம் முன் நேர், காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை என்னும் இவ்விரு தளையன்றிப் பிற வாரா என்பது ஒருவிதி. அவ்வாறே இறுதியில் நாள் (நேர்), மலர் (நிரை), காசு(நேர்பு), பிறப்பு (நிரைபு) எனும் நான்கு அமைப்பில் ஏற்ற ஒன்றைக் கொண்டு முடிதல் வேண்டும். நாள், மலர் என்பன போல் ஓரசைச்சீர் வரும். ஈரசைச் சீராயின் இரண்டாம் அசை குற்றியலுகரமாக இருத்தல் வேண்டும்.

"தேடு பரம்பொருளாம் தெய்வம்' என்பது போலக் கவிஞர் சிலர் ஈற்றடி எழுதிவிடுகிறார்கள். தெய்வம் (நேர்நேர்) தேமாச்சீர் ஆகும். இப்படி வருதல் பிழை. குற்றியலுகர "யதி' வழு வராமலும் எழுத வேண்டும். "அன்பு அகத்திருக்க ஆர்வம் பெருகி வர' என்று வெண்பாவின் முதலடி அமைக்கிறார் ஒருவர். அன்பு இதில் உள்ள உகரம் கெடும். அன் பகத்திருக்க - முதற்சீர் ஓரசையாய் நின்று யாப்பு அழிந்தது. அன்ப கத்திருக்க என்று சிலர் பிரித்தாலும் யாப்பு சிதைகிறது. இத்தகைய இடையூறு நேராதவாறு சொற்களை ஆள வேண்டும்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2011, 06:17 PM
அவற்கு, அவட்கு, அவர்க்கு - இம்மூன்று சொற்களின் வேறுபாட்டை இந்நாளில் பலர் அறியார். அவன்+கு= அவற்கு (ஆண்பால்) அவள்+கு= அவட்கு (பெண்பால்), அவர்+கு= அவர்க்கு (பலர் பால்). அங்கு வந்தவற்கு எனின், வந்தவன் ஒருவன் மட்டுமே. அங்கு வந்தவர்க்கு எனில், வந்தவர் பலராவார். இப்போது நாம் இச்சொல்லை வந்தவர்களுக்கு எனக் "கள்' விகுதி சேர்த்து எழுதிப் பழகிவிட்டோம்.

ஆண்பால் பெண்பால் பலவின்பால் என்பதனை மிக தெளிவாக விளக்குகிறது .அதுபோல் வெண்பா எழுதும் போது பிறழும் பிழைதனையும் சுட்டிகாட்டுகிறது ... .....எனக்கு ஒரு சந்தேகம் பேரண்டம் என்பதனை எவ்வாறு பிரித்து எழுதுவது ...இதனை பெருமை +அண்டம் அல்லது பெரிய +அண்டம் என்று எழுதுவது இதில் எது சரி ....

M.Jagadeesan
02-08-2011, 03:15 AM
மிகவும் பயனுள்ள கட்டுரை. " புதுமனைப் புகுவிழா " " புதுமனை புகுவிழா " இவற்றில் எது சரி? ஒற்று மிகுமா? அல்லது மிகாதா? போன்ற ஐயங்களுக்குத் தக்க விடை தெரிந்துகொண்டேன். நன்றி பாரதி.

Nivas.T
02-08-2011, 04:16 PM
"தேடு பரம்பொருளாம் தெய்வம்' என்பது போலக் கவிஞர் சிலர் ஈற்றடி எழுதிவிடுகிறார்கள். தெய்வம் (நேர்நேர்) தேமாச்சீர் ஆகும். இப்படி வருதல் பிழை. குற்றியலுகர "யதி' வழு வராமலும் எழுத வேண்டும். "அன்பு அகத்திருக்க ஆர்வம் பெருகி வர' என்று வெண்பாவின் முதலடி அமைக்கிறார் ஒருவர். அன்பு இதில் உள்ள உகரம் கெடும். அன் பகத்திருக்க - முதற்சீர் ஓரசையாய் நின்று யாப்பு அழிந்தது. அன்ப கத்திருக்க என்று சிலர் பிரித்தாலும் யாப்பு சிதைகிறது. இத்தகைய இடையூறு நேராதவாறு சொற்களை ஆள வேண்டும்.


இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் எப்படி சரிசெய்து எழுதவேண்டும் என்று சொன்னால் இன்னும் தெளிவாகும்

மிக்க நன்றி அண்ணா தொடருங்கள்

ஆதி
02-08-2011, 05:25 PM
இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் எப்படி சரிசெய்து எழுதவேண்டும் என்று சொன்னால் இன்னும் தெளிவாகும்

மிக்க நன்றி அண்ணா தொடருங்கள்

பரம்பொருளாம் தெய்வத்தை தேடு

அன்பே அகத்திருக்க ஆர்வம் பெருகிவர*

இது சீர்கள் சரி செய்யப்பட்டிருக்கு, முந்தைய அடிகள் தெரியாததால் பொருள் திரியலாம்...

Nivas.T
03-08-2011, 05:17 AM
பரம்பொருளாம் தெய்வத்தை தேடு

அன்பே அகத்திருக்க ஆர்வம் பெருகிவர*

இது சீர்கள் சரி செய்யப்பட்டிருக்கு, முந்தைய அடிகள் தெரியாததால் பொருள் திரியலாம்...

நன்றி ஆதன்

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் யாப்பிலக்கணம் படிக்கத்தொடங்கி இருக்கிறேன்

:icon_b:

பாரதி
05-08-2011, 04:07 PM
கருத்துக்களுக்கும் விளக்கத்திற்கும் நன்றி ஜெய், ஜெகதீசன் ஐயா, நிவாஸ், ஆதன்.

கட்டுரை ஆசிரியர் ஞானச்செல்வன் அவர்களின் கருத்திற்கு மாறுபட்ட கருத்தைக்கொண்ட திரு.பசுபதி என்பவரின் கூற்றையும் நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

முற்றியலுகரத்தில் முடியும் ஒரு திருக்குறள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் ; மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு.

ஓசை நயம் கருதி, குற்றியலுகரத்தில் பல வெண்பாக்கள் முடிந்தாலும், வெண்பா இலக்கணம் முற்றியலுகரத்தையும் ..அருகி வந்தாலும் ..அனுமதிக்கிறது.

ஈரசைச் சீராயின் இரண்டாம் அசை குற்றியலுகரமாக இருத்தல் வேண்டும்.
வேண்டியதில்லை.
உகரத்தில் முடிந்தால் போதும்.பெரும்பாலும் குற்றியலுகரத்தில் முடிந்தாலும் , ‘சொல்லு’,’எண்ணு’ ‘கதவு’ போன்ற முற்றியலுகரங்களும் வரலாம்.

பாரதி
05-08-2011, 04:13 PM
எனக்கு ஒரு சந்தேகம் பேரண்டம் என்பதனை எவ்வாறு பிரித்து எழுதுவது ...இதனை பெருமை +அண்டம் அல்லது பெரிய +அண்டம் என்று எழுதுவது இதில் எது சரி ....
அகராதியில் பெரிய உலகம் என்பதைத்தான் பேரண்டத்திற்கு பொருளாக கூறி இருக்கிறார்கள்.

பாரதி
05-08-2011, 04:18 PM
மொழிப்பயிற்சி-51: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்


விருத்தப் பாக்கள் எழுதும்போதும் கவனம் வேண்டும். எண்சீர் விருத்தம்,அறுசீர் விருத்தம் எழுதும்போது (பெரும்பாலும் எழுதப்படுபவை இவை) மேலே ஒரு வரியும் பின் கீழே உள் வாங்கி ஒரு வரியும் எழுதுகிறோம். இரண்டு வரிகளில் எட்டுச் சீர்கள் இருந்தால் எண்சீர் விருத்தம்; ஆறு சீர்கள் இருந்தால் அறுசீர் விருத்தம்.

இவ்விருத்தங்களுக்குக் கட்டளை என்னும் அமைப்பு உண்டு. அது மாறாமல் எழுத வேண்டும்.

காய் - காய் -மா - தேமா என்பது ஒரு கட்டளை.

இரண்டு காய்ச்சீர்கள் அடுத்து ஒரு மாச்சீர் (தேமா, புளிமா இரண்டில் ஒன்று) இறுதியில் தேமா என முடியும் (நேர் நேர்) சீர். இவ்வமைப்பு முதல் வரியில் தொடங்கி இறுதிவரை மாறாமல் இருத்தல் வேண்டும்.

""தடியூன்றும் காந்திக்கேன் அஞ்சு கின்றீர்?
சர்ச்சிலினைக் கேட்டார்கள் அவரும் சொன்னார்''

இவ்விரண்டு வரிகள் (ஓரடி) மேற்காணும் கட்டளையில் அமைந்தவை.

""விண்ணுயரும் தமிழர்தம் நெறிகள் எல்லாம்
வீச்சாக ஆற்றும் நம் மறவர் உறவே''

இவ்விரண்டு வரிகளில் இறுதியில் "உறவே' என்று முடித்திருப்பது பிழை. எட்டுச் சீரில் கட்டளையின்படி நான்காவது சீரும், எட்டாவது சீரும் தேமா வாக மட்டுமே முடிதல் வேண்டும். உறவே- புளிமாச் சீர் (நிரைநேர்)

அறுசீர் விருத்தங்களிலும் இப்படியே மா - மா- காய் எனும் அமைப்பில் மூன்று சீர்களைத் தொடுத்து அதைத் தொடர்ந்து இதே கட்டளையில் எட்டுவரிகளும் அமைத்திட வேண்டும். மூன்றும் மாச்சீர்களாகவும் (மா -மா - மா) அமைக்கலாம். ஆனால் இடையில் கட்டளை மாறக் கூடாது. காய் - மா - தேமா என்று அமைக்கலாம். விளம் - மா -தேமா என்றமைக்கலாம். எதுவாயினும் முதல் வரி தொடங்கி இறுதி வரி வரை கட்டளையை மாற்றிடல் தவறு.

""எந்தையே முருக வேளே (விளம் - மா- தேமா)
இணையடி வணங்கு வேனே'' என்றிருத்தல் சரி.

ஆனால், ""கன்னியர் கயமை நாடகம் ( விளம்-மா-விளம்)
காதலன் வழியே அரங்கேற்றம்'' (விளம் - மா - காய்) என்றவாறு எழுதுதல் பிழையாம் என்றறிக.


வீறுதமிழ்ச் சொற்கள்
முன்னரே "அவதாரம்' என்பதைக் "கீழிறங்குதல்' என்று விளக்கி எழுதியிருந்தோம். பொருள் விளக்கம் எழுதினோமன்றி அதற்கான தூய தமிழ்ச் சொல் அப்போது நாம் காட்டவில்லை. அண்மையில் படித்த நூலொன்றில் அவதாரம் - திருவிறக்கம் எனக் கண்டு மனம் மகிழ்ந்தோம். திருவிறக்கம் அழகிய தமிழன்றோ? சில சொற்களை - ஒலியமைப்பை மாற்றித் தமிழாக்கிக் கொள்ளலாம் என்று முன்னர் எழுதியுள்ளோம். அப்படி ஒரு சொல்: வலுவந்தம். இது பலவந்தம் எனும் சொல்லின் தமிழ் வடிவம். இன்றும் நம் மக்கள் வழக்கில் இச்சொல் - "வலுவந்தம் செய்தார்கள்' என்று பயன்பாட்டில் உள்ளது.

"எனல்' எனும் ஒரு சொல் "என்று சொல்லு' என்றும், "என்று சொல்லாதே' என்றும் இருவேறு பொருள்தரும் அருமை தமிழுக்கே பெருமை.

பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்

மகன் எனல்- மகன் (மனிதன்) என்று சொல்லாதே. பதடி எனல் - பதர் (உள்ளீடு அற்றது) என்று சொல்லு எனல் என்பதை ஒலிக்கும் முறையால் வேறுபாட்டை உணரலாம்.

இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம். ஒரு வினாடி (செகண்ட்) என்பதோ ஒரு நொடி அறுபது நொடி - ஒரு மணித்துளி (நிமிடம்) அறுபது மணித்துளி ஒரு மணி. பழங்காலத்தில் மணிக்கணக்கில்லை. நாழிகை மட்டுமே. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. ஒரு நாள் - அறுபது நாழிகை. இரண்டரை நாழிகைப் பொழுது, இப்போதுள்ள ஒரு மணி. காலை மணி பத்தாகும்போது, நாழிகையும் பத்தேயாகும். எப்படி? காலை ஆறு மணிக்கு முதல் நாழிகை தொடக்கம். 10 மணிக்கு இடையில் நான்கு மணி நேரம். நான்கு மணியை இரண்டரையால் பெருக்கினால் (4x 21/2) பத்து வரும். ஆகப் பத்து மணி என்னும் நேரம் அந்த நாளின் பத்தாவது நாழிகையும் ஆகும்.

தமிழ் வளரும்..

நன்றி : தினமணிக்கதிர்

Nivas.T
08-08-2011, 01:39 PM
திருவிறக்கம், எனல், நாழிகை

மிக அருமை

தமிழ் மொழிபோல் இனிதாய் எங்கும் காணோம்

மிக்க நன்றி அண்ணா

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2011, 06:42 PM
நாழிகையின் கால நிர்ணயங்களை மிகதெளிவாக கூறும் பதிவு
...

பாரதி
12-08-2011, 11:59 AM
நன்றி நிவாஸ், ஜெய்.

-----------------------------------------------------------------------

மொழிப்பயிற்சி-52: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்


வழக்குகளும் தேர்தல்களும் மோதல்களும் அன்றாட வாழ்வில் இடம் பெற்றுவிட்டன. வழக்கு, சிறைப்பிடித்தல், அடுத்த கட்டம் ஜாமீன். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் பிணை சில வழக்குகளில் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் இழப்பீடு. சிலர் போட்டியாளர் இன்றியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை "அன்னப்போஸ்ட்' (un opposed) என்போம். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் எதிரிலி.

நாளிதழ்களில் அடிக்கடி வரும் ஒரு சொல் குளறுபடி. ஒன்றும் புரியாமல் குழப்பங்கள் நிறைந்த ஒரு நிலையை இப்படிச் சொல்கிறோம். (தெளிவில்லாமல் இருப்பது) இச்சொல் பேச்சு வழக்கில் திரிந்த ஒன்று. சரியான சொல் குழறுபாடு. செயற்பாடு போன்றதொரு சொல்லாக்கம் இது. குழப்பம் - ழ தானே?

மருத்துவ விளம்பரங்கள் சிலவற்றில் தலைச்சுற்றல் என்னும் சொல் பார்க்கிறோம். பல சுற்றுகள் (ரவுண்டுகள்) இருக்கும் ஒரு விளையாட்டில் முதல் சுற்றைத் தலைச்சுற்று எனலாம். ஆனால் இங்கு அந்தப் பொருளில் வரவில்லையே. உங்களுக்குத் தலைச்சுற்றல் இருக்கிறதா? நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்பது விளம்பரம். அதாவது தலை சுற்றுகிறதா? மயக்கம் வரும்போல் இருக்கிறதா? என்பதே இதன் பொருள். சில சிக்கல்கள் வரும் போது, "அப்பா ஒன்றுமே புரியவில்லை, தலைசுற்றும் போல் இருக்கிறதே' என்பதும் கேட்டிருக்கிறோம். ஆகத் தலைசுற்று என்பதை தலைச்சுற்று ஆக்க வேண்டாம்; அது பிழை.

என்னதான் சொல்லுவதோ?

"நீங்கள் கேட்டவை', "தேன்கிண்ணம்', "சான்றோர் வீதி' என்றெல்லாம் பார்த்துக் கேட்டவர்கள் நாம். இப்போது கூட, "காலைத்தென்றல்', "வணக்கம் தமிழகம்', "நமது விருந்தினர்', "சந்தித்தவேளையில்' போன்றவை வந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் இவை குறைவே. தொலைக்காட்சி ஊடகத்தார் உரையாடல்கள், வருணனைகள் எல்லாம் முக்கால் ஆங்கிலம் ஆகிவிட்டதை முன்னரே எழுதினோம். படபடவென விரைந்து பேசி அடித்து நொறுக்கிவிடுகிறார்கள்.

நிகழ்ச்சிகளின் தலைப்பிலாவது தமிழ் உள்ளதா? "கிங்ஸ் ஞச் காமெடி', "Beach Girlz'' இப்படிச் சில தலைப்புகள். எழுத்திலும் தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கலப்பதில் என்ன மகிழ்ச்சியோ? ஆங்கில எழுத்தில் கூடப் புரட்சி செய்கிறார்கள்; ள் க்குப் பதில் க்ஷ் போட்டு! எல்லாம் புதுமை என்னும் பெயரால் நடக்கும் மொழிச் சீரழிவு.

"சூப்பர் சிங்கர்' Just Dance, "ஹோம் ஸ்வீட் ஹோம்' என்றெல்லாம் (இன்னும் பலப்பல) ஆங்கிலத் தலைப்புகளை அள்ளி விடுகிறார்கள். ஆங்கில வார்த்தை, தமிழ் எழுத்தில் அல்லது ஆங்கிலத்திலேயே. தமிழ்நாட்டில், தமிழ் மக்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகள் இவை. தமிழர்கள்தாம் பெரிய மனம் கொண்டவராயிற்றே. மொழித் தூய்மை பற்றிப் பேசினால் "சின்னபுத்தி' என்பார்கள்.

தமிழுக்காக - தமிழ் பற்றியே நடக்கும் விவாதங்களில் கருத்துப் போர்களிலாவது தமிழ் முழுமையாகச் சரியாக இடம் பெறுகிறதா? அங்கும் தமிழ்ச் சிதைவுகள் - ஆங்கிலக் கலப்பு உரையாடல்கள். ஆங்கிலம் சார்ந்த பின்புலம். விளம்பரம் ஆங்கிலத்தில். விளக்கம் ஆங்கிலத்தில். ஆப்பக்கடை விளம்பரம் கூட ஆங்கிலத்தில்தான் செய்யப்படுகிறது. உண்ண வருபவர்கள் தமிழே அறியாதவர்கள் அல்லவா? அதனால்தான். அழகான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு அதையும் ஆங்கிலத்தில் எழுதி மகிழும் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழரசன் - தமிழ் நம்பி - திருமாறன் போன்ற பெயர்களையும் Tamilarasan, Tamilnambi, Tirumaran என்று எழுதுகிறார்கள்.

கையொப்பம் இடுகிறார்கள். இந்தக் கொடுமை மாற்றப்பட வேண்டாமா? கந்தசாமிக்குப் பிறந்த நல்ல தம்பி, க.நல்லதம்பி என்றுதானே கையொப்பமிட வேண்டும்? ஏன் கே.நல்லதம்பி ஆகிறார்? எப்படி வந்தது இந்தப் பழக்கம்? இதை முற்றிலும் களைந்திட வேண்டாமா?

தமிழ் வளரும்...


நன்றி : தினமணிக்கதிர்

நாஞ்சில் த.க.ஜெய்
13-08-2011, 07:00 PM
எதிரிலி எனும் சொல்லின் விளக்கம் தலைசுற்று தலைச்சுற்று இரண்டின் மாறுபாடு தெளிவாக கூறியது ...நம் தமிழின் அருமை உணராது தாய் மொழியாம் தமிழை மறந்தவன் பேசும் வார்த்தைகள் ஆங்கிலம் அதுதான் இன்று அவனுடைய கவுரவம் ...என்றும் மாறாது இந்த அடிமை புத்தி ..எண்கணித அடிப்படையில் மாற்றுகிறோம் உங்கள் தலையெழுத்தை என்று பெயரை சீரழிவு செய்யும் இந்த எண்கணித ஜோதிடம் எங்கிருந்து வந்தது ...

பாரதி
27-08-2011, 01:28 PM
கருத்துக்கு நன்றி ஜெய்.
பகுதி-53 கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கும் போது இங்கே இணைக்கப்படும். (அன்பு நண்பர் திரு. இராஜேஸ்வரன் அவர்களின் உதவியால் பகுதி-53 இப்போது பதிக்கப்படுகிறது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி.-03.11.2013)

மொழிப்பயிற்சி - 53: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்


ஒரு முயற்சி செய்து பார்ப்போம்.

மாநகரப் பிள்ளைகளுள் மிகப் பெரும்பாலோர், ஆங்கில வழிப் பள்ளிகளில் பயில்கிறார்கள். அப்பள்ளியில் எல்லாம் ஆங்கிலமே. வீட்டிலும் ஆங்கிலம் பேசிப் பெற்றோர்கள் தகுதி மேம்படுத்துகிறார்கள். பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாமற் போய்விடுகிறது. ஒன்று செய்யலாமா? முதலில் பெற்றோர் வீட்டிலும், வெளியிலும் இயன்றவரை தமிழில் பேசுவோம் என்று முடிவெடுத்து, ஒரு திங்கள் முயற்சி செய்யுங்கள். முதலில் கடினமாக, முடியாததாகத் தெரியும். பின்னர் நன்கு பழகிவிடும்.

பிள்ளைகளைத் தினம் ஒரு திருக்குறள் படித்துச் சொல்லுமாறு கூறுங்கள். அக்கறையுடன், சரியாக சொல்லுகிறானா? சொல்லுகிறாளா? என்று கவனித்துப் பிழையிருப்பின் திருத்துங்கள். முதலில் நீங்கள் அந்த குறளைப் படித்திருக்க வேண்டும். காலையில் குட்மார்னிங், இரவில் குட்நைட் சொல்லுவதற்குப் பதிலாக வணக்கம், தூங்கப் போகிறேன் என்று சொல்லுமாறு பழக்குங்கள். பள்ளிக்குச் செல்லப் புறப்படும்போது டாடா, பைபை என்று சொல்லாமல் அம்மா போய் வரேன், அப்பா வரட்டுமா? என்று சொல்லச் செய்யுங்களேன்.

டிபன் என்பதற்குப் பதிலாகச் சிற்றுண்டி என்றும், லஞ்ச் என்பதற்கு மாற்றாக மதிய உணவு அல்லது சாப்பாடு என்றும் ஸ்நாக்ஸ் - தின்பண்டம் என்றும், லஞ்ச் பிரேக் உணவு இடைவேளை என்றும், ஹோம் ஒர்க்கை - வீட்டுப்பாடம் என்றும், மார்னிங், ஈவினிங் என்பதை காலை, மாலை என்றும், சன்டே, மன்டே - ஞாயிறு, திங்கள் என்றும் இப்படிச் சொல்லிச் சொல்லி பழக்கப்படுத்திப் பாருங்கள். முதலில் கேலியாக - சிரிப்பாக இருக்கும். நாளடைவில் இப்பழக்கம் படிந்துவிடும். செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை மறவாதீர்கள். புத்தகம், குறிப்பேடு என்பனவும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஹலோ என்பதை விட்டு, எவ்வளவு பேர் இப்போது வணக்கம் சொல்லுகிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. பஸ்ஸில் வந்தேன், ஆட்டோவில் வந்தேன் என்பதை பேருந்தில் வந்தேன், தானியில் வந்தேன் என்று சொல்லுங்கள். நான்கு நாட்கள் மிகவும் சிரமமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். பின்னர் அது வாடிக்கையாகிவிடும். ட்ரிப்ளிக்கேன் என்று சொல்லி பழகிய நாக்கு, திருவல்லிக்கேணி என்று சொல்ல மறுக்கும். திரும்பத் திரும்ப முயன்றால், திருவல்லிக்கேணி வந்து ஒட்டிக்கொள்ளும்.

எக்மோர் என்பதை விட்டு, எழும்பூர் என்று சொல்லிச் சொல்லிப் பழகுங்கள். உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம், நடுவணரசு என்றெல்லாம் ஊடகங்களில் கேட்கும், படிக்கும் நாம், எழும்பூர் என்று சொல்லுவதில் சிக்கல் ஒன்றும் இல்லையே. ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் - வணிக வளாகம் என்றும், டூர் போகிறோம் - சுற்றுலா போகிறோம் என்றும் ட்ரெயினில் என்பதைத் தொடர் வண்டியில் என்றும் சொல்லிப் பாருங்கள் எல்லாம் நம் ஊடகங்களில் புழக்கத்தில் இருக்கும் சொற்களே. தமிழர்கள் மனம் வைத்தால் எதையும் செய்து முடிப்பார்கள். ஆனால் மனம் வைக்க வேண்டும்.

லெட்டர் வந்ததா என்று சொல்லாமல், மடல் வந்ததா? என்றும், டிரைவர் வந்து விட்டாரா என்று சொல்லாமல் ஓட்டுநர் வந்து விட்டாரா? என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். சில சமயம் நம்மைக் கிறுக்கர் என்று பிறர் எடை போடக்கூடும். கூச்சப்பட வேண்டாம். தமிழ் கிறுக்கன் ஆவதில் தவறில்லை. ஃபிரண்டு என்னாது நண்பர் என்று சொல்லுங்கள். (நண்பர் - நண்பி என்று பயன்படுத்தலாம்). மகிழுந்து அல்லது தானி (ஆட்டோ) ஓட்டுநரிடம் வழி சொல்லும்போது லெப்ட், ரைட் என்று சொல்வது எளிதாக இருக்கிறது. அவர்களுக்கும் புரிகிறது. இதனை மாற்றி இடப்பக்கம், வலப்பக்கம் என்று சொல்லி பாருங்கள். முதலில் இடராகத்தான் இருக்கும். நாமும் சொல்லி இடர்ப்பட்டோம். இப்போது பழகி விட்டதே, நீங்களும் முயன்று பாருங்கள்.
-----------------------------------------------------------------------

மொழிப்பயிற்சி - 54: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

ஆயகலை, தூய தமிழ் அண்மையில், ஒரு தொலைக்காட்சி நிறுவன அறிவிப்புப் பார்த்தோம். அதில், ""எப்போதும் தூயத் தமிழ் பேசுபவரா நீங்கள்? தொடர்பு கொள்ளுங்கள்'' என்று எழுத்தில் காட்டித் தொலைப்பேசி எண் தந்திருந்தார்கள். நல்ல தமிழார்வமும் பற்றும் உடையவர் தாமும் வழுக்கிடும் இடம் "வலி மிகுதல்' இலக்கணத்தில்தான். தூய தமிழ் என்று எழுத வேண்டிதைத் தூயத் தமிழ் என்று வலி மிகுந்து எழுதியிருந்தனர். தூய என்பது முற்றுப் பெறாத சொல், அது தமிழ் என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிகிறது. ஆதலின் இது பெயரெச்சமாகும். பெயரெச்சத்தில் (க்,ச், த், ப்) வல்லொற்று மிகாது. தூய தமிழ், ஆயகலை, தீயசிந்தை என்னும் எடுத்துக்காட்டுகள் காண்க. (ஓடிய குதிரை, பாடிய பெண் போன்றனவும் கருதுக)

"யார்கொலோ முடியக் கண்டார்?' இத்தொடரில் முடிய என்னும் சொல்லோடு "க்' வல்லொற்று மிகுதல் ஏன்? தூய என்பதிலும் முடிய என்பதிலும் "அ' ஓசை உள்ளது. இதனை அகர ஈறு என்போம். இரண்டிலும் வருமொழியில் வல்லெழுத்து உள்ளது. ஏன் ஒன்றில் மிகவில்லை? ஒன்றில் மிகுகிறது? நிலைமொழி (தூய, முடிய) ஒரு தன்மைத்தாயினும், வருமொழி வேறுபடுகிறது. "தமிழ்' பெயர்ச்சொல். "கண்டார்' வினைச் சொல். முடிய என்னும் எச்சம் கண்டார் என்னும் வினை கொண்டு முடிதலின் இது வினையெச்சம்.

அகரவீற்றுப் பெயரெச்சம் முன் வல்லொற்று மிகாது. அகர வீற்று வினையெச்சம் முன் வல்லொற்று மிகும். காயக் காண்பது, உலவச் சென்றான், வலியத் திணித்தார் என்பனவும் காண்க.

இப்படித்தான் முன்னர் ஒருகால், "தமிழ்ப்பேசு, தங்கக்காசு' எனத் தலைப்பிட்டு, நம்மை நடுவராகப் பணியாற்ற அழைத்தனர். நாம் சென்ற பின், தலைப்பைத் "தமிழ் பேசு, தங்கக்காசு' எனத் திருத்தினோம். தமிழ் பேசு- தமிழில் பேசு, தமிழைப் பேசு வேற்றுமைத் தொகையில் மிகாது. தமிழ்ப் பேராசிரியர் - தமிழில் வல்ல பேராசிரியர்- தமிழைக் கற்ற பேராசிரியர் - உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லொற்று மிகும்.

திருத்தம், மாற்றம் செய்யலாமா?

"தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்' - என்பது திருக்குறள். ஒருவர் தக்கவர் (சிறந்தவர்) என்பதும், தகுதி அற்றவர் என்பதும் அவர் வாழ்க்கைக்குப் பின் எஞ்சியிருக்கும் சொல் கொண்டு தீர்மானிக்கப்படும் என்பது இதன்பொருள். எச்சம் - எஞ்சியிருப்பது- புகழோ? இகழோ? எச்சம் என்பதற்கு மக்கள் என்று பொருள் கொண்டார் பரிமேலழகர். ஒருவருக்குப் பின் அவர்தம் மக்களே (பிள்ளைகள்) அவர் பெயர் சொல்பவர்கள் என்பது கருத்து.

இதனைப் படித்த நல்லறிஞர், தமிழ் படித்த ஆர்வலர் "எல்லீஸ்துரை' இத்திருக்குறளில் எச்சம் எனும் சொல்லை நீக்கிவிட்டு மக்கள் என்னும் சொல்லைப் போட்டுவிட்டார். இது சரியா? திருக்குறளில் கைவைக்க இவருக்கென்ன உரிமை? திருக்குறளைத் திருத்திட இவர் யார்? என்று தமிழறிஞர் உலகம் சினந்தெழுந்தது.

தக்கார் எனும் சொல்லுக்கேற்பவே மக்கள் என்பதில் எதுகை (க்) சிறப்பாக அமைகிறது. சீர் இலக்கணம் சிதையவில்லை. (எச்சத்தால் - தேமாங்காய்; மக்களால் - கூவிளம். காய் முன் நேர், விளம் முன் நேர் இரண்டிலும் வெண்டளையே). ஆயினும் எச்சம் என்பதன் முழுமையான - சிறப்பான பொருள் மக்களில் இல்லையன்றோ? ஒருவருடைய மறைவிற்குப் பின்னரும் அவர் பற்றிய நினைவு - புகழ் நிற்குமானால் (எச்சமானால்) அவர் மேலானவர். இல்லெனின் அவர் தகவு அற்றார் என்க.

எமது வாழ்விலும் - எமது எழுத்துகளில் நேர்ந்த ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர்வோம். திரு.வி.க. அவர்களின் "வேட்டல்' நூல்கள் பற்றி ஒரு சிறப்பு மலருக்குக் கவிதை எழுதி அனுப்பியிருந்தோம். எண் சீர் விருத்தங்களாக அமைந்த நெடுங்கவிதை அது. முதல் விருத்தத்தின் தொடக்கம், "மலையிடையே அரும்பியதாம் மக்கள் வாழ்வு மாநதிகள் வீழருவி மணக்குஞ் சோலை'

என்று இருந்ததில், மாநதிகள் என்னும் சொல்லை நீக்கிவிட்டு பேராற்றின் என்று மாற்றிவிட்டார் மலர் பதிப்பு ஆசிரியர். நதிகள் வடசொல்லாம், ஆதலின் பேராறு என்று மாற்றினோம் என்றார் அவர். வந்ததே எமக்குச் சினம்! "எம் படைப்பை மாற்ற உமக்கென்ன உரிமை? மலையிடையே, மாநதிகள், மோனை அழகுடன் இருப்பதைக் கெடுத்துவிட்டீரே! பொருளாவது சரியாகப் பொருந்துகிறதா? பேராற்றின் வீழருவி என்றால் ஆற்றிலிருந்து அருவி விழுவதாகப் பொருள்தரும். அருவி வீழ்ந்துதான் ஆறாக ஓடும். பொருளும் கெட்டுவிட்டதே' என்று பொங்கினோம்.

தமிழ் வளரும்.....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
04-09-2011, 09:10 AM
மொழிப்பயிற்சி - 55: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

உரத்த சிந்தனை' சிற்றிதழுக்கு ஒரு கவிதை கேட்டார்கள், சில ஆண்டுகள் முன்பு. "தணியாத வேட்கை' எனும் தலைப்பில் நாம் கவிதை அனுப்பி வெளிவந்த பின், சில திங்கள் கழித்து கேரள (மலையாள) தமிழ் அமைப்பு வெளியிட்ட ஒரு மலரில் எமது அதே கவிதை, எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. தலைப்பைத் "தணியாத தமிழ் வேட்கை' என மாற்றிவிட்டார்கள்.

"மின்மினிகள் ஒருநாளும் வெயிலோன் ஆகா' என்ற முதல் வரியில் வெயிலோன் எனும் சொல்லை எடுத்துவிட்டு சூரியன் எனும் சொல்லைப் போட்டிருந்தார்கள். வெயிலோன் தூய தமிழ்ச் சொல். சூரியன் வடசொல். அன்றியும் மின்மினிகள் என்பதற்கேற்ப வெயிலோன் என்பதில் ஓசையின்பம் (மோனை) உள்ளது. அதையும் கெடுத்துவிட்டார்கள். தமிழ்ச்சொல், வடசொல் என்று நாம் பாகுபாடு செய்து, தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை. ஆயினும் பொருத்தமான சொல்லை மாற்றிட இவர்களுக்கு என்ன அதிகாரம்? இத்தகைய செயலும் பிழையே என்பதைச் சுட்டிக்காட்டவே இவற்றை எழுதினோம். இதுபற்றி விரிவாக இத்தொடரில் எழுத வேண்டாமே என்று விடுத்திடுவோம்.

முருகன் அவதாரமா?

வைகாசி விசாகம் வரும்போதெல்லாம் நமது செய்தி ஏடுகளில் முருகனைப் பற்றி கட்டுரைகள் வரும். வந்து கொண்டுள்ளன. விசாகம், முருகன் அவதாரம் செய்த நாள் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காட்சி ஊடகத்தில் முருகப் பெருமான், கிழவனாக அவதாரம் செய்து வள்ளியிடம் சென்றான் என்றும் சொன்னார்கள். கிழவனாக உருமாறியதையும் அவதாரம் என்றார்கள்.

வைணவநெறியில் அவதாரம் உண்டு. பரம்பொருள் (பெருமாள்) பூமிக்கு இறங்கி வந்து மனிதனாகப் பிறப்பெடுப்பார். பிற உயிரினங்களாகப் பிறப்பெடுத்தலும் உண்டு. அவதாரம் எனில் "கீழே இறங்கி வருதல்' என்று பொருள். வானிலிருந்து தேவன் பூமிக்கு வருதலே அவதாரமாம்.

சைவசித்தாந்த நெறியில் அவதாரக் கொள்கையில்லை. பரம்பொருள் (சிவன்) மனித வடிவில் வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்; காட்சி தருவார்; மறைந்து போவார். சிவன் வேறு, முருகன் வேறல்லர்.

""ஆதலின் நமது சக்தி அறுமுகன் அவனும் யாமும்

பேதகம் அன்றால் நம்போல் பிறப்பிலன் யாண்டும் உள்ளான்'' என்பது சிவன் கூற்றாகக் கந்தபுராணம் சொல்லுவது.

"பிறவன் இறவான் பெம்மான் முருகன்' என்றார் அருணகிரியார். அதனால்தான்,"ஒருதிரு முருகன் வந்து உதித்தனன் உலகம் உய்ய' என்றார் கச்சியப்பர். கதிரவன் உதிப்பான்; மறைவான். மீண்டும் உதிப்பான். பிறப்பு வேறு, உதித்தல் வேறு. பிறப்பு உண்டு எனில் இறப்பும் உண்டு. பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததன்றோ?

இராமபிரானைப்போல், கண்ணபிரானைப் போல் முருகப் பெருமான் உயிர்நீத்தமை (சிறப்பு) சொல்லப்படவில்லை. ஆதலின் முருகன் அவதாரம் செய்தார் என்றும் அவதார நட்சத்திரம் விசாகம் என்றும் ஆன்மிகப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் பேசாமலும் எழுதாமலும் இருத்தல் நல்லது என்று பணிவோடு வேண்டுதல் விடுக்கிறோம்.

முறையாகுமா இந்த மொழிக்கலப்பு?

வேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத் தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே. ஆனால் மொழிக் கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு காலம் காலமாக நடந்து வருவதுதான். ஆனால் இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன் எப்போதும் நடந்ததில்லை.

ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம். படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள். பள்ளிப் பிள்ளைகள், வீட்டிலிருந்து புறப்படும்போது, "அம்மா போயிட்டு வர்றேன்' என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். "மம்மி பை பை, டாடி பை பை' என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள். மதிய உணவு என்பதைக் கூட "லஞ்ச்' என்று சொல் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

யாரும் இப்போது வீட்டிலிருந்து எழுந்து விடை பெறும்போது "போய் வருகிறேன்', அல்லது "வரட்டுமா?' என்று சொல்லுவதில்லை. எல்லாரும் "பை பை' தான். ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும் என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. வாழ்ந்து மறைந்த - வாழ்ந்து கொண்டுள்ள சாதனையாளர்கள் - அப்துல்கலாம் போன்றவர்கள் யாவரும் தமிழில் படித்தவர்கள் என்பதை மறந்து விடுகிறோம்.


தமிழ் வளரும்....


நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
15-09-2011, 03:37 PM
மொழிப்பயிற்சி - 56: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்
வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது, நமக்கு, இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள். நாம் உடனே "இந்தி மாலும் நை' என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம். அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். தெரிகிறது. நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள். ஆனாலும் நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். ""நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை?'' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச் செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்க்கு) ஏன் இந்தப் பற்று இல்லை?

நம்முடைய காட்சி ஊடகங்களில், இசை, நாட்டியம், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சியின் வருணனையாளர்- அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள் - இப்படி யாராக இருப்பினும் தமிழில் பேசுகிறார்களா? தமிழில் தொடங்குவார்கள். பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால் கூட ஏற்றுக் கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாக உடையவரும் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது.

நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டுமென்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள். இருப்பதைக் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம். "ஜாலியோ ஜிம்கானா' பாடல் கேட்டிருக்கிறோம். "டடடா டடடா டட்டாடடா' பாட்டும் நாம் அறிவோம். "மேலே பறக்கும் ராக்கெட்டு, மின்னல் பூச்சி ஜாக்கெட்டு' என்றும் நம் காதுகளில் தேள் கொட்டியுள்ளது. இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது:

"யூ வான்ட் டு சீல்மை கிஸ்

பாய் யூ கான்ட் டச் திஸ்

எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக்

சூப்பர் சானிக்

சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்' இப்படிப் போகிறது தமிழ்ப் படப்பாட்டு. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்?

"பூஜ்ஜியம் என்னோடு
பூவாசம் இன்றோடு
மின்மினிகள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு'

ஏனிந்தக் கலப்படம்? இது ஒரு சோறுதான். பானைச் சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் தான் மானியம் கிட்டும் என்றார்கள். தமிழ்ப் பத்திரிகைகள் பல தம் தமிழ்ப் பெயரோடு ஆங்கிலத்தையும் இணைத்துக் கொள்வது ஏன்?

"ஃகாபி வித்...', "இன்டர்வியூ', "ஹிட்சாங்ஸ்', "ஓல்டு ஈஸ் கோல்டு' இப்படிப் பல தலைப்புகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவை தவிர பிறமொழித் தொடர்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு, "கன்னாபின்னா' என்று தமிழில் வந்து கொண்டுள்ளன. யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? தமிழன்... தமிழன் என்று பேசுவது வீண் பேச்சு. தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி - அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும், சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே! "நாம் தமிழர்' என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா?

இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழிவெறி என்று தூற்றுவது முறையா? ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள்; சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை - உலக நாடுகளில் - இல்லை, இல்லவே இல்லை.

நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது; மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தானும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளதே!

காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகின்ற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது.

"ஓகே, ஓகே', "வெரி நைஸ்', "ஒன்டர்புல்', "சூப்பர்', "தாங்யூ சோ மச்', "ஃபென்டாஸ்டிக் ', "ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன. உலகம் போகிற போக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா? சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா?


தமிழ் வளரும்....


நன்றி : தினமணிக்கதிர்

seguwera
15-09-2011, 04:25 PM
"ஓகே, ஓகே', "வெரி நைஸ்', "ஒன்டர்புல்', "சூப்பர்', "தாங்யூ சோ மச்', "ஃபென்டாஸ்டிக் ', "ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன.

அருமையான,தேவையான பதிவு

பாரதி
18-09-2011, 06:09 PM
கருத்துக்கு நன்றி சேகுவேரா.
-----------------------------------------------------------------------

மொழிப்பயிற்சி - 57: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

நிலஅபகரிப்பும் நிலப்பறிப்பும்: செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சியிலும் நில அபகரிப்பு வழக்குகள் பற்றிய செய்திகள் நிரம்ப வந்து கொண்டுள்ளன. மற்ற எல்லாரும் நில அபகரிப்பு என்றே வழங்கிவர, நமது தினமணியில் மட்டும் நிலப்பறிப்பு என்று தூய தமிழ் ஆளப்படுவது கண்டு மகிழ்ச்சி. சிலர், சில நேரங்களில் நில அபகரிப்பு என்பதை நில ஆக்கிரமிப்பு என்றும் செய்திகள் வெளியிட்டார்கள். நமது நிலப்பரப்பில் சீனாவோ, பாகித்தானோ ஒரு பகுதியைப் பிரித்து வைத்துக் கொண்டபோது அதனை ஆக்கிரமிப்பு என்று சொல்லி வந்தோம். ஆனால் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு என்னும் சொல் பொருந்துவதாக இல்லை. ஆக்கிரமித்தல் என்றால் ஆங்காரம் பண்ணுதல் என்று பொருள். ஆங்காரம் என்பது ஆணவமாகும்.

மக்கள் பேச்சு வழக்கில் "ரொம்பவும் ஆங்காரம் பிடித்தவன்/ள்' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். நாம் நினைப்பது போல ஒன்றை ஓரிடத்தை வன்முறையில் கைப்பற்றுவது ஆக்கிரமிப்பு ஆகாது. வலுக்கட்டாயமாக (வலுவந்தமாக) பறித்துக் கொள்ளுதலைக் குறிக்க ஆக்கிரகித்தல் என்ற ஒரு சொல் உண்டு. அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஆக்கிரகித்தல் எனும் மூன்று சொற்களும் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல.

முடிவாகத் தனிநபர்கள் பிறரை மிரட்டி, அச்சுறுத்தி எடுத்துக் கொள்ளுவதை நிலப்பறிப்பு, வீடு பறிப்பு என்றே எழுதிடலாம். அந்நிய நாடு நம்நாட்டின் நிலப்பரப்பைத் தம்மதாக வன்முறையில் ஆக்கிக் கொள்ளுவதைக் கைப்பற்றிக் கொண்டது என்றோ வன்முறையால் பறித்துக் கொண்டது என்றோ எழுதிடலாம். தவிர மோசடி என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது. இதற்கு வஞ்சித்தல் என்பதே நல்ல தமிழ்ச்சொல்லாகும்.

சொற்றொடர் (வாக்கிய) அமைப்பில் கருத வேண்டியவை: நாம் எழுதுகின்ற சொற்றொடர் தவறான பொருளுக்கு இடம் தராத வகையில் அமைந்திட வேண்டும்.

"பெண் வங்கி அதிகாரி படுகொலை' என்று ஒரு செய்தி சில நாள் முன்னர் ஓரேட்டில் கண்டோம். பெண் வங்கி என்று தொடங்கும்போது, பெண்களுக்கான வங்கி எனும் பொருள் தருமன்றோ? (அப்படி ஒரு வங்கி இல்லை என அறிவோம்).

ஆனாலும் பொருள் மயக்கம் ஏற்படாதவாறு வங்கிப் பெண் அதிகாரி படுகொலை என்று எழுதலாமே.

இதுபோலவே, "பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம்' என ஒரு பெயர்ப் பலகை ஒரு சமயம் பார்க்க நேர்ந்தது. இத்தொடரை "நுகர்வோர் மகளிர் கூட்டுறவுச் சங்கம்' என்று மாற்றி எழுதுதல் வேண்டும். முன்னர் உள்ள சொற்றொடர் ஒரு தவறான கருத்துக்கு இடம் தருகிறது. பெண்களை நுகர்வோர் (அனுபவிப்பவர்) என்ற பொருள் ஏற்படும் என்பதை அறிக. ஆதலின் மிகக் கவனமாக நாம் சொற்றொடர்களை அமைத்திடல் வேண்டும்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களையும் அகநானூறு, புறநானூறு நூல்களையும் பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று ஒரு கட்டுரையில் அண்மையில் படித்தோம். அகநானூறும், புறநானூறும் எட்டுத் தொகை நூல்கள் எனும் தொகுப்பில் அடங்கியவைதாம். அவற்றைத் தனியே எழுதுவது பொருளற்றது. பல புலவர்களால் பாடப் பெற்ற பாடல்களை எட்டு நூல்களாகப் பிற்காலத்தில் தொகுத்தமைத்தனர். அவையே எட்டுத் தொகை நூல்கள் எனப்பட்டன.

பெண்கள் மட்டுமா?

"சில சொற்கள் பெண்களை மட்டுமே குறிப்பனவாக இருக்கின்றன; அவற்றுக்கு ஆண்பாற் சொற்கள் தமிழில் இல்லை'' என்று கூறி விபசாரி, விதவை- இச்சொற்களுக்கு ஆண்பால் என்ன? ஆண்கள் எப்படியும் இருக்கலாம். பெண்களுக்கு மட்டுமே இந்த இழிவு'' என்று சொல்கிறார்கள்.

விபசாரி என்பதுபோல் விபசாரன் இல்லாமையால் ஆண் பல பெண்களோடு உறவு கொள்ளலாம், அவனுக்கு ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லை என்றும், இதுபோலவே விதவை என்பதுபோல் விதவன் என்று இல்லாமையால், மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று பொருளுரைத்துப் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்கள் இச்சொற்கள் என்று கொள்ளுவதில் தவறில்லை. ஆனால் இவ்விரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல. வடசொற்கள்.

தமிழ் வளரும்....


நன்றி : தினமணிக்கதிர்

M.Jagadeesan
19-09-2011, 01:54 AM
ஒழுக்கம் கெட்டவளைப் " பரத்தை " என்கிறோம். இதுபோல ஒழுக்கம் கெட்டவனைப் " பரத்தன் " என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பாரதி
06-10-2011, 04:27 PM
கருத்துக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.
-----------------------------------------------------------------------

மொழிப்பயிற்சி - 58: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

விபசாரிக்குத் தமிழில் பரத்தை என்று பெயர். இதற்கு நிகரான ஆண்பாற் சொல் பரத்தன் என்று தமிழில் இருக்கிறது. "நண்ணேன் பரத்த நின் மார்பு' (தலைவி கூற்று) எனும் சங்கத் தொடர் காண்க. சிலப்பதிகாரத்தில் இருபாலர்க்கும் ஏற்பப் பொதுமையில் பரத்தர் எனும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்பது சிலம்பு. ஆதலின் தமிழில் பரத்தை - பரத்தன் இருபாற் சொற்களும் உண்டு எனக் கண்டு மகிழ்க. விதவைக்குத் தமிழ்ச் சொல் கைம்பெண். இச்சொல்லை நீட்டி கைம்பெண்டாட்டி ஆக்கி, இது மருவி கம்மனாட்டி என்று பேச்சு வழக்கில் உள்ளது. திட்டுகிறபோது, "போடா கம்மனாட்டி' என்றோ, "கம்மனாட்டிப் பயலே' என்றோ வழங்குதலும் காண்கிறோம். ஆகவே கைம்பெண் (விதவை) எனும் சொல்லுக்கு ஆண்பால் - கைம்(பெண்)பயல் என்பதே ஆகும்.

மீண்டும் சில வாக்கியப் பிழைகள்: தொலைக்காட்சிச் செய்தியில் ஒருநாள், "வன்முறைத் தாக்குதல்களுக்கு உயிரிழந்தனர்' என்று படிக்கப்பட்டது.

தாக்குதல்களுக்கு உயிரிழந்தனரா?

தாக்குதல்களால் உயிரிழந்தனரா?

இரண்டாவதுதான் பொருத்தமாக உள்ளது. தாக்குதலுக்குப் பலி ஆயினர் என்னும்போது வாக்கியம் சரியாகும். இரண்டு வகையாலும் சொல்லிப் பாருங்கள். வேற்றுமை புலப்படும்.

மற்றொரு செய்தி: "ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கொள்ளை'. இதைக் கேட்டவுடன், அடுக்குமாடி வீடுகளில் ஓரடுக்கு உண்டா? குறைந்தது இரண்டு அடுக்காவது இருக்குமே என்று நினைக்கத் தோன்றியது. ஒரு என்பதை அடுக்கு எனும் சொல்லோடு இணைத்துக் காண்பது இயல்பாக எழும் எண்ணமே. இவ்வாக்கியத்தை, "அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொள்ளை' என்று எழுதினால் - படித்தால் பொருள் உணர்த்துதலில் பிழையின்றி அமையும். சற்றே கவனம் கொள்ளுதல் வேண்டும்.

ஓர் இலக்கியத் திங்களிதழில் ஒரு வாக்கியம்:

"இதெல்லாம் நடைமுறை நியாயங்கள்'. இத்தொடர் சரியா? இது என்பது ஒருமை. நியாயங்கள் பன்மை. இவையெல்லாம் நடைமுறை நியாயங்கள் என்று எழுதியிருக்க வேண்டும். (இப்படி நுட்பம் காண்பது நடைமுறை நியாயமா என்று முணுமுணுக்காதீர்)

மற்றொரு திங்களேட்டில், "எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும், மக்கள் உந்தாற்றல் பெருகிறார்கள்' என்று கண்டோம். இவ்வாக்கியத்தில் இரண்டு பிழைகள். இடர்ப்பாடுகள் என்று ஒற்றுச் சேர்த்து எழுத வேண்டும். மற்றது, உந்தாற்றல் பெறுகிறார்கள் என்று (பெறுதல்) எழுத வேண்டிய இடத்தில் பெருகிறார்கள் என இடையினம் (பெருகுதல்) போட்டது பிழை. உந்தாற்றல் எனும் அருஞ்சொல் எழுதவல்லார் பெறுதலைப் பிழையாக்கலாமா?

அரித்துவார் கங்கையின் பெருக்கோடு இமயமலையின் மடியில் (அடிவாரத்தில்) அமைந்த இயற்கையெழில் செறிந்த இடம். அந்த ஊரைப் போல் மனத்திற்கு அமைதி தரும் மற்றொரு ஊர் பற்றி எழுதியுள்ள ஓர் எழுத்தாளர், "கங்கையில்லாத ஹரித்துவாரைப் போன்ற மனதுக்கு அமைதியளிக்கும் இதமான சூழ்நிலை' என்று குறிப்பிட்டுள்ளார். ஹரித்துவாரில் கங்கை ஓடவில்லை என்பதான ஒரு கருத்தும் இவ்வாக்கியத்தில் ஏற்படக் கூடுமன்றோ? இதனைத் தெளிவாக எப்படி எழுதலாம்?

"மனத்திற்கு அமைதியளிக்கும் இதமான - ஹரித்துவாரைப் போன்ற சூழ்நிலை - ஆனால் கங்கை மட்டும் இல்லை' என்று எழுதலாமே?

"மக்காவ்' என்பது ஒரு தீபகற்ப நாடு. இந்நாட்டைப் பற்றி எழுதிவரும் ஒருவர், மக்காவில் - என்று தொடங்கி ஒரு செய்தி. மக்கா என்று அரபுநாட்டில் ஓர் ஊர் உண்டே! முகம்மது நபி பிறந்தது மக்காவில். வெறியர்களால் துரத்தப்பட்டு மதீனா சென்றார். ஆதலின் மக்காவில் என்று எழுதும்போது மக்கா என்ற ஊரின் பொருள் தோன்றி வரும். பின் எப்படி எழுதலாம்?

"மக்காவ்' இல் என்று எழுதலாம். இது சற்றே கடினமாகத் தெரிகிறது. சற்று விரிந்து அமையினும், மக்காவ் நாட்டில் என்று எழுதுவதே பொருத்தமுடையதும், பிழையற்றதும் ஆகும்

தமிழ் வளரும்....


நன்றி : தினமணிக்கதிர்

vseenu
08-10-2011, 05:08 PM
இவற்றையெல்லாம் படிக்கும் போதுதான் நாம் பேசுகின்ற போது செய்யும் பிழைகள் புலப்படுகின்றன.ஓ இவ்வளவு இருக்கா என தோன்றுகிறது.

பாரதி
09-10-2011, 02:13 AM
கருத்துக்கு நன்றி சீனு.
-----------------------------------------------------------------------

மொழிப்பயிற்சி - 59: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

தொலைக்காட்சி செய்திகளில் இப்படிப் படித்தார்கள்:

"கப்பலோட்டிய தமிழர். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து'' என்று தொடர்ந்தது அச் செய்தி.

சிதம்பரனார் அவமதிப்புச் செய்தாரா? யாருக்கு? எப்போது? ஏன்? என்ற வினாக்கள் எழுகின்றன. அந்நிகழ்வு என்னவென்றால்,அவரது திருவுருவப் படத்துக்கு அவமதிப்புச் செய்தமை பற்றியதாகும். அதனால், வ.உ.சிதம்பரனார் படத்துக்கு அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து என்றோ, வ.உ.சிதம்பரனாரை அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து என்றோ அந்தச் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும். சிதம்பரனார் அவமதித்ததாகப் பிழையான பொருள் தோன்றும்படி இருத்தல் தகாது.

ஆற்றின் பெயரால் அமைந்த பெயர்களை "ஆர்' விகுதிபோட்டு எழுதும் கேடு பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். (எ-டு) அடையாறு - அடையார், செய்யாறு - செய்யார். இப்பெயர்களைப் போலவே குமரி மாவட்டம் திருவட்டாறு என்னும் ஊர்ப் பெயரும் திருவட்டார் என்று எழுதப்படுகிறது. அண்மையில் செய்தி ஏடுகளில் வந்த ஒன்று:

"திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலிலும் பாதாள அறைகளில் பொன், வெள்ளி ஆபரணங்கள் உள்ளன'. "ஏறக்குறைய இருபத்தெட்டு நாட்களுக்கும் மேல் இவர் பயணம் செய்துள்ளார்' என்று ஒரு சொற்றொடர் சிற்றிதழ் ஒன்றில் பார்த்தோம். ஏறக்குறைய (சுமார்) என்ற சொல். இருபத்தெட்டு எனும் வரையறுத்த எண்ணிக்கையோடு பொருந்தவில்லை. ஏறக்குறைய முப்பது நாடுகளுக்கு என்றிருக்கலாம். "மேல்' என்னும் சொல்லும் குறிப்பிட்ட எண்ணிக்கையின் பின் ஒட்டுதல் வேண்டாமே.

சிறுவர்க்கான பாட்டு ஒன்று. "உன்னதத்தைப் பெருவதற்கு' என்று அச்சாகியிருந்தது. உன்னதத்தைப் பெறுவதற்கு என்று இருத்தல் வேண்டும். பெறுதலும், பெருதலும் வேறு வேறு அன்றோ? அதிலும் பெரு என்பது பெரிய என்னும் பொருள் மட்டுமே தரும். பெருவதற்கு எனும் சொல்லுக்கு எந்தப் பொருளும் இல்லை. உன்னதம் பெருகுவதற்கு என்று வந்தால் பொருளுடையதாகும். பழம்பெரும் நடிகர் என்பதைப் பழம் பெறும் நடிகர் ஆக்குதல் எப்படித் தவறோ அப்படியே, பெறு - பெருவாதலும் பிழையே.

"உதவி செய்ய எண்ணு' என்பது முதல் வரி. புளிமா, தேமா, தேமா என மூன்று சீரும் மாச்சீராக உள்ளன. இஃதொரு அறுசீர் விருத்தத்தின் தொடக்கம். இறுதிவரை இந்த அமைப்பு (கட்டளை) மாறக்கூடாது என்று முன்னரே எழுதியுள்ளோம். இந்த மழலைப் பாட்டில், "மாற்றுத் திறனாளி மனத்தில்' என்று மூன்றாவது வரி அமைக்கப்பட்டுள்ளது. மா - காய் - மா எனும் கட்டளைகள் அமைந்துள்ளமை பிழையேயாகும். கவிஞர்கள் இந்த நுட்பங்களிலும் கவனம் செலுத்துதல் நன்று. அடிதொறும் அமைய வேண்டிய எதுகை அமைப்பும் இல்லை (உதவி - மாற்று).

இன்னொரு பாப்பாப் பாட்டில் ஒருவர் எழுதியிருந்தார்:

"உடன் செய்க உயர்வாய்' "கருணை காண்பி சிறப்பாய்', "உதவிக் கரங்கள் நீட்டு' - ஒன்றொடொன்று பொருந்துவதாக இவ்வரிகள் அமையவில்லை. கட்டளை (அமைப்பு) மாற்றத்துடன் எதுகை மோனைகளும் இடர் செய்கின்றன. யாப்பு இலக்கணம் பயின்று எழுதுதல் நல்லது.

மொழிக்கலப்பு: மொழிக் கலப்படம் பற்றி முன்னர் விரிவாக எழுதியுள்ளோம். எழுத எழுத மாளாத வண்ணம் மொழிக் கலப்பு நாளும் பெருகி வருகிறது. "பண்ணு' என்பதைப் பயன்படுத்தி எப்படி "பண்ணித் தமிழ்' பேசுகிறோம் என்பதையும் முன்னரே எழுதியிருக்கிறோம். அண்மையில் ஒரு சமையல் கலை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் கண்ணிற்பட்டது. பேசுகின்ற பெண்மணி குக் பண்ணி, ஷேக் பண்ணி, என்று பல பண்ணிகளை அடுக்கினார். சமைத்து, கலக்கி என்று சொன்னால் நமக்குப் புரியாதா? இடியாப்பம், கொழுக்கட்டை, குழிப் பணியாரம் போன்ற தமிழ்நாட்டுக்கே உரிய உணவுப் பொருள்களைப் பற்றி விரிவாக விளக்குவதும், பாதி ஆங்கிலம், பாதித் தமிழ் என்னும் வகையில்தான். ஆப்பக்கடை என்று தமிழில் பெயர் வைத்து ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அது ஆப்பக்கடையா? அப்பக்கடையா எனும் ஐயம் எழும்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

vseenu
09-10-2011, 08:02 AM
தொடருங்கள் உங்கள் பணியை.கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்

பாரதி
12-10-2011, 01:52 AM
கருத்துக்கு நன்றி சீனு.
-----------------------------------------------------------------------

மொழிப்பயிற்சி - 60: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

பிற மொழி கலந்து பேசுபவர்கள் குழந்தைகளை எப்படிக் கொஞ்சுவார்கள் என்று புலப்படவில்லை. "என் ஐயே...', "மை கோல்டே' என்று கூறிக் கொஞ்சுவார்களா? அழுது அரற்றும்போது, மதர் கோயிட்டாங்களா? டாட் போயிட்டாங்களா? என்பார்களோ?

பணியாற்றும் பெண்களை "அம்மா' என்றழைத்தால், நான் என்ன உங்கள் அம்மாவா? என்கிறார்கள். மேடம் என்று சொன்னால் (இதன் பொருள் அம்மாதானே?) மகிழ்கிறார்கள். இப்போது மேடமும் போய், "மேம்' என்கிறார்கள். இஃதென்ன மேம், மேம் என்று ஆட்டுக்குட்டிதான் கத்தும். "சார்' என்று சொல்லுக்குப் பொருளே கெட்டுவிட்டது.

ஓட்டுநர், நடத்துநர், அஞ்சல்காரர், பணியாளர், உணவு வழங்குபவர் எல்லாரும் சார்தான். அண்ணே, தம்பி, ஐயா என்று இடத்துக்கேற்ப, வயதிற்கேற்ப தமிழில் அழைக்கலாமே.

தெய்வத் திருப்பெயர்கள்:
அழகான தூய தமிழில் இறைவி, இறைவன் திருப்பெயர்கள் தமிழில் நிரம்ப உள்ளன. அலர்மேல் மங்கை எனில் (அலர் - மலர்) தாமரை மீது அமர்ந்துள்ள திருமகளைக் குறிக்கும். இப்பெயரை அலமேலு ஆக்கிவிட்டோம். திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள இறைவன் வேங்கடராமன். இந்தப் பெயரை வெங்கட்ராமன் ஆக்கிவிட்டோம். அதுவும் இப்போது வெங்கட், வெங்கி எனச் சுருங்கிக் கெட்டது.

அன்னை உமையவளுக்கு உண்ணாமுலையம்மை என்ற பெயருண்டு. திருஞான சம்பந்தருக்குப் பொற் கிண்ணத்தில் எடுத்துப் பால் ஊட்டினார் என்பது தொல்கதை.

அண்ணாமலை நாதரின் துணைவியான உண்ணாமுலையம்மையை உண்ணாமலையம்மை ஆக்கிவிட்டார்கள். (விநாயகரோ, முருகப் பெருமானோ தாய்ப்பால் உண்டவர் அல்லர்)

மட்டுவார் குழலி என்பது அம்மையின் திருப்பெயர். மட்டு என்பது தேன். தேன் பொருந்திய (புத்தம் புதிய) மலர்கள் சூடிய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். (குழல் - கூந்தல்) எவராவது இப்பெயர் கொண்ட பெண்ணை இப்பெயர் சொல்லி அழைக்கிறார்களா? இல்லை. அடியே மட்டு என்றோ, மட்டு... மட்டுக்குட்டி என்றோதான் அழைக்கிறார்கள். (இந்தப் பெயர் உடையவரும் இப்போது அரிதுதான்)

அவிநாசிலிங்கம் என்பது ஒரு திருப்பெயர். அவிநாசி என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள சிவன் என்பது பொருள். இப்பெயரை அவினாசிலிங்கம் என்று ஆக்கிவிட்டவர் பலர். கிருஷ்ணன் (வடசொல்) கிட்னன் ஆனதும் உண்டு. கோபாலன் "கோவாலு' ஆனதும் சரஸ்வதி - சச்சு ஆனதும் நாம் அறிந்தவை. (இவை தமிழ் ஒலித் திரிபுகள் எனக் கொள்ளலாம்)

ஆயத் தீர்வையும் சாயப் பட்டறையும்:
நாம் முன்னர் ஆயகலைகள், தூய தமிழ் என்று ஒற்றுமிகாமல் எழுதிட வேண்டும் என எழுதினோம். அன்பர் ஒருவர் நேரில் வினவினார்: ""ஆயத் தீர்வை, சாயப் பட்டறை என்றெல்லாம் எழுதுகிறோமே இவையும் தவறோ?

''இல்லை, தவறில்லை; சரியானவையே. எப்படி? ஆய கலை தூய தமிழ் இரண்டிலும் அகர ஈறு இருப்பதும், வருமொழியில் வல்லின எழுத்து (க,ச,த,ப) வருவதும் சரிதான். ஆய எனும் சொல்லும், தூய என்னும் சொல்லும் முற்றுப் பெறாதவை. கலைகள், தமிழ் எனும் பெயர் சொற்களைக் கொண்டு அவை முடிந்தன. அதனால் அவை பெயரெச்சங்கள். பெயரெச்சங்களின் முன் க,ச,த,ப மிகாது.

ஆனால் ஆயம் + தீர்வை - ஆயத்தீர்வை, சாயம்+பட்டறை = சாயப்பட்டறை என்னும் போது ஆயம் என்பதும் சாயம் என்பதும் எச்சச் சொற்கள் அல்ல. பொருளுடைய பெயர்ச் சொற்கள். இவற்றிலுள்ள அம் (ம்) ஈறு கெட்டு வல்லொற்று மிக்கது. ஆதலின் சொற்களைப் பிரித்துப் பார்த்து எது சரி, எது தவறு என அறிய வேண்டும்.

அமுதம் + கண்ணன் = அமுதக் கண்ணன் என்று எழுதிட வேண்டும். அமுத கண்ணன் எனில் பிழையாம்.

சண்முகம் + கண்ணன் = சண்முகக் கண்ணன் என எழுதுக.
சரவணன் + தமிழன் = சரவணத் தமிழன் ஆகுமோ? ஆகாது. சரவணம் + தமிழன் எனில் ஆகும். சரவணன்+தமிழன் = சரவணற்றமிழன் என்றாகும். அம் ஈறு (ம்) அன் ஈறு (ன்) கொண்டு புணர்ச்சி விதி மாறுகிறது. அஃதென்ன புணர்ச்சி விதி? அறிவோமா?

புணர்ச்சி என்றால் சேர்ப்பது - சேர்வது எனப் பொருள். ஒரு சொல்லொடு மற்றொரு சொல் சேரும்போது ஏற்படும் தன்மையைப் புணர்ச்சி விதி என்பர். சொற்கள் ஒன்றோடொன்று சேர்வதில் இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகையுண்டு.

இரண்டு சொற்கள் சேரும்போது எந்த மாற்றமும் ஏற்படாமல் இயல்பாக (அப்படியே) இருப்பின் அது இயல்புப் புணர்ச்சி (எ-டு) தாமரை + மலர் = தாமரை மலர்

கந்தன் + வந்தான் = கந்தன் வந்தான்

இரண்டு சொற்கள் ஒன்று சேரும்போது மாற்றம் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். தோன்றல், திரிதல், கெடுதல் (நீங்குதல்) என மாற்றங்கள் (விகாரம்) மூன்றாகும். நூலை+ படித்தான் = நூலைப் படித்தான். (ப்- தோன்றல்)

முள்+செடி = முட் செடி (ள், ட் ஆகத் திரிந்தது)
தோட்டம்+வேலை = தோட்ட வேலை (ம் - கெட்டது)

இவை பற்றி விரிவான விதிகள் உள்ளன. அனைத்தும் எழுதினால் இலக்கணப் பாடம் ஆகிவிடும்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
16-10-2011, 08:22 AM
மொழிப்பயிற்சி - 61: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்


இரண்டு சொற்களில் ஏற்படும் விகாரங்கள் பற்றி மட்டும் காண்போம்.

மூன்று + நூறு= முந்நூறு (முன்னூறு - பிழை)

மூன்று எனும் நிலைமொழியில் இறுதி "று" வும் இடையில் "ன்"னும் கெட்டு, "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி, திரிந்து, மு + நூறு = முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன.

ஐந்து + நூறு = ஐந்நூறு என எழுதிட வேண்டும்.

இறுதி (து) கெட்டு "ந்" - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் "ந்" தோன்றி ஐந்நூறு ஆகிற்று.

ஐநூறு எனில் பிழை.

"உலக அறிவுச் சார்ந்த கேள்விகளுக்குச் சரியான விடை தருபவர்க்குப் பரிசு உண்டு".

இது தொலைக்காட்சியில் எழுதப்பட்டு வந்த வாக்கியம்.

அறிவுச் சார்ந்த - என்பதில் "ச்" வல்லொற்று வரக் கூடாது. அறிவு சார்ந்த என்று இயல்பாக இருத்தல் வேண்டும். அறிவுசார்ந்த எனில் அறிவைச் சார்ந்த எனப் பொருள்.

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்திருக்கும்போது ஒற்று மிகாது. அவ்வுருபு வெளிப்பட்டிருப்பின் (வேற்றுமை விரி) ஒற்றுமிகும்.

"திங்கள் முதள் வெள்ளி வரை நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்" இது பெண்மணி ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி அறிவித்த வாக்கியம். சொற்றொடரில் பிழை இல்லை. உச்சரிப்பில் (ஒலிப்பில்) பிழை.

முதல் என்னும் சொல்லை முதள் என்று லகரத்தை ளகரமாக உச்சரித்தார். திங்கள், வெள்ளி ளகரம் இருப்பதால், இந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருக்கலாம்.
நா நெகிழ் பயிற்சிகள் சிலவற்றால் இக்குறையைப் போக்க முடியும். முயற்சி வேண்டும்.

தூக்குத் தண்டனையா? தூக்கு தண்டனையா?

அண்ணாத்துரை என்னும் பெயருக்குச் சொன்ன விளக்கம்தான் இதற்கும். அஃதென்ன?

"த" வை என்று அழுத்தி வல்லொலியில் சொன்னால் "த்" வரும். "த" வை என மெல்லோசையில் "த்" வராது.

தண்டனை என்பது தமிழ்க்குரிய ஒலி. த என்பது வடசொல் உச்சரிப்பு. ஆயின் தண்டனை தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?

சாம, பேத, தான, தண்டம் - இவை வடசொற்கள்.

தண்டாயுதபாணி (தண்டு எனும் கருவியைக் கையிற் கொண்ட முருகன்) வடமொழிப் பெயர். தண்டம் - ஒறுத்தலையும் (தண்டித்தல்) தண்டு (ஆயுதத்தையும்) குறிக்கின்றன.

தமிழிலும் இந்தத் தண்டு இருக்கிறது. தாமரைத் தண்டு, வாழைத் தண்டு, முதுகுத் தண்டு, தண்டுவடம் என்பன எல்லாம் தமிழ் சொற்களே.

"பணத்தை வசூல் செய்தார்கள்" என்று பேசுகிறோம். வசூல் என்பதைச் சில பகுதிகளில் பணம் தண்டுதல் என்று சொல்லுகிறார்கள். நெல்லையில் பணம் பிரித்தல் (பறித்தல்) என்றும் சொல்லுவார்கள். வசூல் தமிழன்று.

தண்டு என்பதற்குச் சேனை (படை) என்ற பொருளும் உண்டு. கலிங்கத்துப் பரணியில் காண்க. ஒரு செலவு வீணான செலவு என்றால் தண்டச் செலவு என்கிறோம். உருப்படாத ஒருவனை "தண்டம், தண்டம்" என்று திட்டுகிறோம்.

தண்டனை ஒறுத்தல் என்னும் பொருளுடைய வடசொல்லாயினும் தமிழ் ஓலியில் தண்டனை என்று ஒலித்தால், தூக்குத் தண்டனை பொருத்தமானது. கீரைத் தண்டு, வாழைத் தண்டு எல்லாம் தமிழ்ச் சொற்களே. இங்கே தண்டினை - தண்டு ஆக்க வேண்டாம்.

பாடாத தேனீ, வாடாத மலர், கேளாத காது - இவையெல்லாம் எவை?

எதற்காக இந்த எடுத்துக் காட்டுகள்?

பாடாத் தேனீ, வாடா மலர், கேளாக் காது - இவற்றையும் பாருங்கள்.

இரண்டு வகை எடுத்துக் காட்டுகளிலும் எதிர்மறைப் பொருளில் (பாடாத, கேளாத) வந்துள்ளன. முற்றுப் பெறாத எச்சமாக நின்று தேனீ, மலர் , காது என்னும் சொற்களால் முற்றுப் பெற்றுள்ளன.

முன்னர் உள்ளவை எதிர்மறைப் பெயரெச்சம். அடுத்து உள்ளவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். எப்படி? விளக்கம் என்ன?

பார்ப்போமே.


ஒரு முற்றுப் பெறாத வினைச் சொல் (எச்சவினை) ஒரு பெயர்ச் சொல் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம்.

(எ-டு) ஓடிய குதிரை, வந்த பையன்இத்தகைய பெயரெச்சம் எதிர்மறை வினை பெற்று வரின் எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு) உலவாத தென்றல், கேளாத காது.இதில் உலவாத என்னும் வினைச் சொல்லைச் சற்றே மாற்றி உலவா என்று சொல்லுதலும் உண்டு.

ஈற்று (கடைசி) எழுத்து இல்லாமையால் இது ஈறு கெட்ட வினை. எப்படி முடிக்கலாம்?

உலவாத் தென்றல், கேளாக்காது. இவை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்.முதலில் பெயரெச்சம் - புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து எதிர்மறைப் பெயரெச்சம்.

பின்னர் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். விளங்கிற்றா?

இல்லையெனில் விட்டுவிடுங்கள்.

மீண்டும் அடுத்த நாள் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். புரியும்.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
24-10-2011, 05:05 PM
மொழிப்பயிற்சி - 62: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



கவிக்கோ ஞானச்செல்வன்

வாபஸ் - இதற்கு தமிழ்ச் சொல் என்ன?

"உண்ணாவிரதம் வாபஸ்' என்று செய்தித்தாளில் படிக்கிறோம். இது சரிதானா? வாபஸ் என்பது திரும்பப் பெறுதல். ஒருவர் ஒரு விண்ணப்பம் அளிக்கிறார். பின் வேண்டாம் என்று அதனைத் திரும்பப் பெறுகிறார். இது வாபஸ். உண்ணாவிரதத்தை - பட்டினி கிடந்ததைத் திரும்பப் பெற முடியுமா? இனி உண்ணாவிரதம் இல்லை என்பதுதானே நிலை! ஆதலின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது அல்லது நிறுத்தம் என்று எழுதுதல் பொருந்தும். விரதம், தமிழ்ச் சொல் அன்று. அதனால் உண்ணாநிலை என்று சிலர் சொல்கிறார்கள். நோன்பு தூய தமிழ்ச் சொல்லாயிற்றே. உண்ணா நோன்பு என்று உரைக்கலாமே! நோன்ட, நோற்றல் - தமிழ்ச் சொற்கள்.

சொல்லாட்சிக் குறைபாடுகள்:
சிலநாட்களுக்கு முன் காலமான "அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம்...' என்று ஒரு தொடர் சிற்றிதழ் ஒன்றில் பார்த்தோம். இச்சொற்றொடரில் சொற்கள் ஆளப்பட்டுள்ள முறைமை சரியா?

சில நாட்களுக்கு முன் காலமானவர் பரிமளம்; இவர் அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன். ஆனால் அறிஞர் அண்ணா சிலநாட்கள் முன் காலமானவர் என்பது போன்ற செய்தியைத் தரும் இத் தொடரமைப்பு பிழை. பின்னர் எப்படி இவ்வாக்கியத்தை அமைக்கலாம்?

"அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனும் சில நாட்கள் முன்னர் காலமானவரும் ஆன பரிமளம்...'' என்று தெளிவாக எழுதலாமே!

பேச்சு வழக்கிலுள்ள சில சொற்களை நாம் இந்நாளில் பிழையாக - கொச்சையாகக் கருதுகிறோம். எடுத்துக்காட்டாக "அந்தப் பொம்பளை செய்த வேலை' எனும் தொடரில் பொம்பளை என்னும் சொல் ஒருவரை அவமதிப்பதாகக் கருதுகிறோம். அந்த அம்மா என்றோ,அந்தப் பெண்மணி என்றோ சொன்னால், யாரும் சினம் கொள்வதில்லை (யாரய்யா பெண்மணி, அம்மா என்றெல்லாம் சொல்லுகிறார்கள். எல்லாரும் மேடம்தான். அதுவும் போய் "மேம்'). பொம்பளை என்றால் திட்டுவதாகக் கொள்ளுகிறார்கள்.

பெண் பிள்ளை என்னும் சொல்தான் பொம்பளை என்று மருவிற்று. ஆண்பிள்ளை ஆம்பளை ஆயிற்று. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்றுரைத்தால் யாரும் சினம் கொள்ளார். "பொம்பளே' என்று சொன்னால் போதும், "அது எப்படி என்னை அந்தப் பொம்பளைன்னு சொல்லலாம்' என்று எவரும் வம்புக்கு வருவார்கள். ஆனால், "அவன் ஆம்பளைடா' என்றால் யாரும் சினம் கொள்ளுவது இல்லை. மாறாக, ஆம்பளை என்று குறிப்பிட்டால் பெருமையாகவே கருதுகிறார்கள். (சரியான ஆம்பளைடா அவன்!)

ஒரு நிகழ்ச்சிக்கு வருதல் குறித்தோ, ஒரு செயலைச் செய்து முடிப்பது குறித்தோ பேசும்போது, பலர் கண்டிப்பாக எனும் சொல்லை ஆளுகிறார்கள். இது "ஷியூர்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது என்று கருதிச் சொல்லப்படுகிறது.

ஒருமை,பன்மை மயக்கங்கள்:
"காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியது' இப்படி ஒரு செய்தி. அது எப்படி இப்படி ஒரு தவறு அடிக்கடி நிகழ்கிறது? ஆங்கிலச் செய்தி இப்படி வருமா? தேர்வுகள் தொடங்கின என்றுதானே சொல்ல வேண்டும்?

"சிக்கிமில் பூகம்பத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது' என்று செய்தி படிக்கிறார்கள். வீடுகள் இடிந்து விழுந்தன என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லை. சிறிய சிறிய தவறுகள்தாம்; இவற்றைக் கூட திருத்திக் கொள்ள மனமில்லையே.

"என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த வெற்றி, திருப்புமுனைகள் எல்லாமே அவரால்தான் கிடைத்தது'

இப்படி ஒரு வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. எல்லாமே என்ற பன்மைக்கேற்ப, கிடைத்தன என்று பன்மையில் முடிக்க வேண்டும். அவரால்தாம் கிடைத்தன என்று எழுதினால் இன்னம் சரி. (அவர்தாம் - அவன்தான்)

ஒருமை பன்மை மாறிவர வாக்கியம் அமைப்பதுபோல் மற்றொரு பிழை ஒற்றெழுத்து விட்டுவிடுதலாகும்.

"சத்தியம் என்பது இவ்வுலகில் கடைப்பிடிக்க வேண்டியது' இத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டியது என்று வல்லொற்று (ப்) வர வேண்டும். கடைப் பிடிக்க என்றால் ஒரு கடையை (நட்ர்ல்) குடிக்கூலிக்கு (வாடகைக்குப்) பிடிக்க என்று பொருள்.

வாக்கிய அமைப்பில் தெளிவு இருத்தல் வேண்டும். ஓரிதழில் நாம் படித்ததொரு வாக்கியம்:

"நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்கும் செய்யக் கூடாது''

இச்சொற்றொடரை "எவையெல்லாம் பிறர் நமக்குச் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் பிறர்க்கு நாம் செய்யக் கூடாது' என்று மாற்றிப் பாருங்கள். ஒரு தெளிவு இருக்கும். (எவற்றையெல்லாம் - அவற்றையெல்லாம் என்று எழுதினால் இலக்கணம் பிறழாது; ஆனால் கடினமாகத் தோன்றும்.)



தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

M.Jagadeesan
25-10-2011, 04:10 AM
" வாபஸ் " என்ற சொல்லுக்கு " திரும்பப் பெறுதல் " அல்லது " மீளப் பெறுதல் " என்பது பொருள்.
"Sure " என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக " உறுதியாக " என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

பாரதி
05-11-2011, 02:13 PM
கருத்துக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.

---------------------------------------------------------------------------
மொழிப்பயிற்சி - 63: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!





கவிக்கோ ஞானச்செல்வன்


காலாவதியாகிவிட்டது

என்பதைக் காலம் முடிந்துவிட்டது

என்று கூறலாமே?


யாப்பு இலக்கணக் குறிப்புகளும் ஒன்றிரண்டு அவ்வப்போது எழுதி வருகிறோம். முழுமையாக எழுத வேண்டும் என அன்பர் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். அப்படி விளக்கமாக எழுதினால் இத்தொடர், இலக்கண வகுப்பாக மாறிவிடும். ஆனாலும் சில செய்திகளைச் சொல்லாமல் விட இயலவில்லை.

வெண்பா எழுதுவது மிகவும் கடினம். அப்பழுக்கில்லாத இலக்கணம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒரு சிற்றிதழில் சிறந்த வெண்பா எனத் தேர்வு பெற்ற ஒன்றில்,

சமையத்திற் கேற்பச் சமைத்தே - நமது

இமயத்தைச் சாய்த்தார்....

என்பதைக் கண்ணுற்றோம். இதில் நமது எனும் தனிச் சொல்லில் "து' வருவதைப் பொருள் விளங்க நமது இமயத்தை எனப் பிரித்துள்ளார். நம+து (த் + உ) இமயத்தை (த்+இ=தி) நமதிமயத்தை (உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்).

"நம' என்ற தனிச்சொல் ஓரசையாகும் (நிரை). ஓரசை, வெண்பாவின் இறுதியில் வரலாம் (அசைச்சீர்) இங்கே தனிச்சொல் ஓரசையாக நின்று யாப்பு சிதைவுற்றது. தளை தட்டிவிட்டது. இவ்வெண்பா பிழையான வெண்பாவாம். "நமதாம்' என்று தனிச் சொல்லை மாற்றிவிட்டால் யாப்பு சரியாகும்.

தமிழில் பிறமொழியை அளவின்றிக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பிழையன்றோ? அதனால்தான் நாம் பல இடங்களில் கலப்படக் கொடுமைகளைச் சாடி வருகிறோம்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முக்கியப்புள்ளி ஒருவர் சொன்னார்: ""நான் சமீபத்துல பாத்துண்டு வந்ததுல ஒன் எய்ட்டியைவிட ஒரு ரிச்சான மூவி இல்லை'' எப்படி இருக்கிறது தமிழ்? நூற்றெண்பது (180) என்னும் தமிழ்ப்பட பெயரைக் கூட ஒன் எய்ட்டி ஆக்கிவிட்டார். இப்படித்தான் இன்று பலர் பேசுகிறார்கள். ஐம்பது, நூறு ஆண்டுகளில் பின் தமிழ் எப்படியிருக்குமோ? (இழுக்குமோ?)

முதலில் நம் வீட்டுக் குழந்தைகள் தமிழில் பேசுகிறார்களா? எப்படிப் பேசுகிறார்கள்? நாம் கவனிக்க வேண்டாமா? இவர்கள்தாமே நாளைய குடிமக்கள் - தமிழர்கள்.

நம் அருமை வாய்ந்த தமிழ்ப் பெயர்களையே குழந்தைகள் மறந்துவிட்டார்களே. வாழைப்பழம் - தெரியாது; பனானா - தெரியும். மாம்பழம் தெரியாது; மேங்கோ தெரியும். வேப்பிலை தெரியாது, நீம் தெரியும். சந்தனம் தெரியாது, சாண்டல் தெரியும். ஞாயிற்றுக்கிழமை தெரியாது; சண்டே தெரியும். மாலை ஐந்து மணி தெரியாது - ஈவினிங் ஃபைவ் ஓ கிளாக் தெரியும். இவ்வளவு ஏன்? நம் வீட்டுச் சோற்றையும் ரைஸ் ஆக்கிப் பழக்கிவிட்டோமே!

தயிர்ச்சோறு - கர்டு ரைசாம்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் என்றுதானே பழக்கப்படுத்தியுள்ளோம். உணவு விடுதியில் பரிமாறுபவர் கூட அப்படித்தானே சொல்லுகிறார். இந்த நிலை மாறுமா? ஏக்கப் பெருமூச்சுதான் விடையா?

தூய தமிழ்ச் சொற்கள்:
நம் மக்களின் பேச்சு வழக்கில் பயன்பட்டு வரும் தூய தமிழ்ச் சொற்களை நினைவு கூர்வோம். இவற்றின் பயன்பாடு புதிதாகச் சிலருக்குப் பயன்படும்.

பரிதி, ஞாயிறு (சூரியன்), ஞாலம், உலகம் (லோகம்),

கருவூலம் (பொக்கிஷம்), கருவறை - (கர்ப்பக்கிருகம்), இழப்பு (நஷ்டம்), ஆக்கம் (இலாபம்), ஊதியம் - (சம்பளம்),

ஆகூழ் - (அதிர்ஷ்டம்), போகூழ் - (துரதிர்ஷ்டம்)

இவற்றுள் இலாபத்தை ஆக்கம் என்றது எவ்வாறெனில்

"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்'

என்னும் திருக்குறளின் துணை கொண்டேயாம்.

"இலாபத்தைக் கருதி போட்ட முதலை இழந்துவிடும் செயலை அறிவுடையார் ஊக்கப்படுத்தமாட்டார்' என்பது இதன் பொருள்.

ஆகூழ், போகூழ் என்பனவும் திருக்குறளில் இருந்து எடுத்தவையே.

"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'

தமிழ்ச் சொல்லாகவே நாம் வழங்கும் சில சொற்கள் சரியாக அமையாது இருக்கின்றன. "உடம்பு இப்ப எப்படியிருக்கு?' (நலமா?)

இதற்கு, "தேவலாம்' என்று பதில் சொல்லுகிறோம்.

தாழ்வில்லை அல்லது தாழ்விலை என்று பதில் சொன்னால் பொருள் பொருந்துகிறது. தாழ்விலை என்றால் குறைந்த விலை என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. அதனால் "தாழ்வில்லை' என்றே சொல்வோமே.

"பரவாயில்லை' என்பது மற்றொரு சொல். (இதை ஒரு பாடகர் பருவாயில்லை என்று பாடினார்) இதன் பொருள் என்ன? "படம் எப்படி இருக்கிறது? என்றால், "பரவாயில்லை' என்று பதில் வருகிறது. இச்சொல்லுக்கு, ஏற்கலாம் என்றோ, தாழ்வில்லை என்றோ சொல்லலாமே!

நிச்சயம் என்பதை உறுதியாக என்றுரைக்கலாம். மருந்து காலாவதியாகிவிட்டது என்பதைக் காலம் முடிந்துவிட்டது என்று கூறலாமே? "எக்ஸ்பியரி' என்பதைக் காலமுடிவு எனலாம்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
05-11-2011, 02:18 PM
மொழிப்பயிற்சி - 64: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!





கவிக்கோ ஞானச்செல்வன்

புதியன புகுதல்


"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே'


நன்னூல் நூற்பா (சூத்திரம்) ஆதலின் மொழி இலக்கணக் கட்டுப்பாடுகளிலும் காலத்திற்கேற்ப சில பழைய விதிகளைத் தளர்த்தியும், புதியவற்றை ஏற்றதும் உண்டு என அறிக.

மொழி முதலாக வரும் எழுத்துகள் பற்றித் தொடரின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். ட, ர, ல எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்ட தமிழ்ச் சொல் இல்லை. ஆனால் பிறமொழிச் சொற்களை எப்படி எழுதுவது? அரங்கசாமி, இராமன், இலக்குவன், உலோபி என்று அ, இ, உ - க்களை முதலில் இணைத்து வழங்குவது தமிழில் வழக்கம்.

டங்கன் துரை என்ற பெயரை இடங்கன் துரை எனலாமா? எல்லீஸ் ஆர். டங்கன் என்ற திரைப்பட இயக்குநர் ஒருவரின் பெயரை எல்லீஸ். ஆர். இடங்கன் என எழுதலாமா? டென்மார்க் எனும் நாட்டை இடென்மார்க் என்று எழுதுதல் சரியா? டயர் என்பான் பெயரை இடயர் எனலாமா?

"ர' விலும் அப்படியே; ரப்பர் எனும் ஆங்கிலச் சொல்லை இரப்பர் என்று எழுதுதல் சரியா? இரப்பர் என்ற தமிழ்ச் சொல் (யாசிப்பவர்) உள்ளதே. ரம்பம் என்பதை இரம்பம் என்றெழுதலாமா? ரவை, ரவா(உணவுப்பொருள்) இதனை இரவை, இரவா என்றெழுதினால் வேறு பொருள் தரும் தமிழ்ச் சொல் ஆகிறதே!

லம்பாடி, லப்பை எனும் சொற்களை இலம்பாடி, இலப்பை எனல் சரியா? லட்டு - இலட்டுவா? சிந்தித்தால் பிறமொழிச் சொற்களில் இம்மூன்றையும் முதலெழுத்துகளாக ஏற்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது.

மொழி முதல் எழுத்துப் பட்டியலில் "ங' இடம் பெற்றுள்ளது. "ங' இப்போது எந்தச் சொல்லில் மொழி முதல் எழுத்தாக வருகிறது? அங்ஙனம், இங்ஙனம் என அ, இ சேர்த்து வழங்குகிறோம்.

"ஞ'கர வரிசையிலும் ஞ, ஞா, ஞி, ஞெ, ஞொ இந்த ஐந்து மட்டுமே பழைய காலத்திலும் மொழி முதல் எழுத்தாக வந்துள்ளன.

(எ-டு) ஞமலி (நாய்), ஞாலம் (உலகம்), ஞிமிறு (வண்டு), ஞெகிழி (கொள்ளிக்கட்டை), ஞொள்கல் (இளைத்தல்). ஆயினும் "ஞ' மொழி முதலில் வாராது என விட்டுவிடல் தவறு. ஞாலம், ஞமலி போன்ற அருஞ்சொற்களை இழக்க நேரிடும்.

அதனால், முடிவாக நாம் மொழி முதல் எழுத்தாக வருவன பற்றி எழுதுகிறோம். மனத்திற் கொள்க.

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் (அ முதல் ஒü முடிய) சொல்லின் முதல் எழுத்தாக வரும். (அம்மா, ஆடு, இலை, ஈட்டி எனக் கண்டு கொள்க).

மெய்யெழுத்துகள் பதினெட்டும் மொழி முதல் வாரா என முன்னரே அறிவீர்கள். உயிர் மெய் எழுத்துகளில், க, ச, ஞ, ட, த, ந, ப, ம, ய, ர, ல, வ என்னும் பன்னிரண்டும் இவற்றின் பெருக்கமும் (வர்க்கமும்) (க, கா, கி, கீ, கு, கூ எனத் தொடர்ந்து வருவன) எனத் தெளிக. ட வையும் ஏ வையும் ல வையும் இவர் எப்படிச் சேர்க்கலாம் என எம்மீது எவரும் சீற்றம் கொள்ள வேண்டாம். தமிழ்ப் பேரறிஞர் அ.கி.பரந்தாமனார் அவர்களே ஐம்பதாண்டுகள் முன்னர் எழுதியுள்ளார்கள்.

இவை இருக்கட்டும். இப்போது புதிதாகச் சென்னையில் இளைஞர்கள் இடையே உரையாடலில் மிகுதியாக இடம் பெற்றுள்ள சொற்களை எழுதட்டுமா? "அவன்தான்டா ஆட்டயப் போட்டான்' (திருடிவிட்டான் என்று பொருளாம்), "சரியான மொக்கை' (ஒன்றுக்கும் ஆகாதது - உருப்படாதது எனப் பொருளாம்) இந்தத் தமிழ்ச் சொற்களை எவர் கண்டுபிடித்தார்களோ?

"ஜொள் விடுறான்', "லுக் விட்டான்', "ஜோட்டாலடி', "கிராக்கி', "கட்டை' போன்ற பல சொற்கள் இன்று தமிழ்ப் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ளன. இவ்வழக்குச் சொற்களை எழுத்தில் (நூல்களில்) சேர்த்துவிட்டால் வரப்போகும் நம் வழிமுறை

யினர் (சந்ததியர்) தமிழின் தரத்தைக் குறைத்தே மதிப்பிட வேண்டி வரும். அருள் கூர்ந்து, எழுத்தில் "தவிர்ப்பன தவிர்த்தல்' கடைப்பிடியுங்கள்.


பிழை திருத்தங்கள்:


மருந்து நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் "மூல நோய்க்கு முழு ஆதரவு தரும் மருந்து' என்று ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். மூல நோய்க்கு முழு ஆதரவா? அப்படியானால் மூல நோய் நன்றாக முற்றி வளர இம் மருந்து உதவுமா? அவர்கள் நினைப்பது, "மூல நோயை முற்றிலும் அகற்றிட உதவும்' என்ற பொருள் பற்றித்தான். ஆனால் அதற்கான வாக்கிய அமைப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
18-11-2011, 04:05 PM
மொழிப்பயிற்சி - 65: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!




கவிக்கோ ஞானச்செல்வன்


"மாதராய்ப் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் புரட்சிக் கவிஞர் பாரதியார்' என்று ஒரு மருத்துவத் திங்களிதழில் மூலிகை மருத்துவர் எழுதிய கட்டுரையில் படித்தோம். இந்தச் சொற்றொடரில் மூன்று பிழைகள் உள்ளன.

"மங்கையராகப் பிறப்பதற்கே...' என்னும் தொடக்கத்தை மாற்றிவிட்டார். "நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று கவிதை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிஞர் பெயரைப் பாரதியார் என்று மாற்றிவிட்டார். மேலும் புரட்சிக் கவிஞர் என்று பாரதிதாசனார்க்கு உரிய அடைமொழியைச் சேர்த்துவிட்டார். பாட்டு வரியில் பிழை; பாட்டின் ஆசிரியர் பெயரில் பிழை; அவர்தம் அடைமொழி (பட்டம்) யில் பிழை. சரியாக அறிந்து - அறிந்தவரைக் கேட்டு எழுதலாமன்றோ?

"இருப்பிரிவினரிடையே மோதல்' ஒரு பத்திரிகைச் செய்தி. இரு பிரிவினர் என்று இயல்பாதல் வேண்டும். "ப்' போட்டு வலி மிக வேண்டாம். கோடியக்கரையும், கருப்புப் பணமும் மாறாமல் வந்து கொண்டேயுள்ளன. நாம் பலமுறை எழுதிவிட்டோம். இப்போதும் கோடிக்கரை, கறுப்புப்பணம் என்று எழுதுங்கள் என வேண்டுகிறோம்.

கொஞ்சம் (கொஞ்சும்) இலக்கணம்:
காளி கோவில் தெரு; காளிக் கோவில் தெரு - எது சரி? கோ.சு.மணி தெரு; கோ.சு.மணித் தெரு - எது சரி? இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் முதலில் வருவதே (க் - மிகாமல், த் - மிகாமல்) வருவதே சரி.
ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலை மொழி உயர்திணையாய் இருப்பின் வல்லெழுத்து மிகாது.

காளியது கோவில், மணியது (பெயர் கொண்ட) தெரு என்று விரியும் இவை. அது எனும் உருபு, காளி கோவில், மணி தெரு என்பனவற்றுள் மறைந்திருப்பதால் இவை ஆறாம் வேற்றுமைத் தொகைகள். காளி, மணி ஆகிய நிலைமொழிகள் உயர்திணை எனக் காண்க. நிலை மொழி முதலில் வருவது; கோவில், தெரு என்பன வருமொழிகள் (பின்னர் வந்து சேர்வன).

தெருப் பெயராதலின் மணி தெரு என்று விட்டிசைத்தல் சரியே. மணித் தெரு எனில் மணியான (சிறந்த) தெரு என்று வேறு பொருள் உண்டாகக் கூடும்.

நம்பி என்பது ஒருவர் பெயர். அவரது கையை எப்படி நம்பி கை (நம்பியது கை) என்று எழுதிட வேண்டும். நம்பிக்கை என்று எழுதினால் பொருளே மாறுபட்டுப் பிழையாகிவிடும். இவ்வாறே தம்பி தோள் எனில் தம்பியது தோள் எனப் பொருள்படும். தம்பித் தோள் என்றால் பிழை. தம்பித்துரையில் - "த்' வருகிறதே! வலி மிகல்தானே இது? ஆம். வல்லெழுத்து மிகுதல்தான். ஆனால் தம்பி எனும் பெயரும், துரை என்னும் பெயரும் ஒன்றோடொன்று ஒட்டி நிற்பவை. அஃதாவது தம்பியாகிய துரை என்று பொருள். இதனை இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்பர். இவ்விடத்து வல்லொற்று மிகும் என்பது இலக்கண விதி.

சற்றே சொல்லாய்வோம்:
ஆகாய விமானம் என்னும் சொல் நிரம்ப நம் பயன்பாட்டில் உள்ளது. பேசுகிறோம், செய்தியிதழ்களில் படிக்கிறோம். இதற்குச் சரியான தூய தமிழ்ச் சொல் நம் எல்லார்க்கும் தெரிந்த ஒரு சொல் "வானூர்தி' இருக்கிறதே! இச்சொல்லை ஏன் பயன்படுத்துவதில்லை? வானில் செல்லும் (பறக்கும்) ஊர்தி (வாகனம்). வானூர்தி - பொருள் வெளிப்படையானது.

தமிழர்கள் ஒட்டுநர் இல்லாமல், தானே இயங்கும் வானூர்தியும் கண்டனர் போலும். "வலவன் ஏவா வான ஊர்தி' என்பது சங்கப் பாட்டு வரி. (வலவன் - பைலட்). சிலப்பதிகாரத்தில் வான ஊர்தி வருகிறது, கண்ணகியை வானுலகு அழைத்துச் செல்லுவதற்காக. சிந்தாமணியில் மயில் வடிவில் அமைந்த வானூர்தி - மயிற்பொறி பேசப்படுகிறது. இராவணன் சீதையைக் கவர்ந்து வானூர்தியில் கொண்டு சென்றான் (தமிழ்க் கம்பன் கூற்றுப்படி) என்றும் படித்துள்ளோம். ஆக வானூர்தியைப் பரப்புவோமாக!

தமிழிலுள்ள சில சொற்கள் பிறமொழிச் சொல்லாக இருத்தல் கூடும். முருங்கைக்காய் என்பதை அப்படி யாராவது நினைக்க முடியுமா? தமிழ்நாட்டுக் காய், தூய தமிழ்ப் பெயரே இது என்றுதான் எண்ணுவோம். "முருங்கா' என்னும் சிங்களச் சொல்லே முருங்கை எனத் தமிழில் திரிந்தது என்று "தமிழ் வரலாற்றிலக்கணம்' எனும் நூலில் அ.வேலுப்பிள்ளை எனும் தமிழறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

நம் தமிழ்நாட்டுக்குரிய முப்பழங்களுள் இரண்டின் தமிழ்ப் பெயரை நம் தமிழ்ப் பிள்ளைகள் மறந்தனரோ? எனும் ஐயம் எழுகிறது. வாழைப் பழத்தைப் "பனானா' என்றும் மாம்பழத்தை "மாங்கோ' என்றும் எங்கும் எப்போதும் இயல்பாகச் சொல்லுகிறார்கள். மாதுளம் பழம் என்பதும், "பொம்மகர்னட்' என்றுதான் பள்ளிப் பிள்ளைகளால் சொல்லப்படுகிறது. எல்லாப் பிள்ளைகளும் ஆங்கில வழியில் படிப்பது காரணம். வீட்டிலாவது பெற்றோர்கள் தமிழ்ப் பெயர்களைச் சொல்லித் தர வேண்டும்.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
24-11-2011, 04:53 PM
மொழிப்பயிற்சி - 66: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!




கவிக்கோ ஞானச்செல்வன்


தமிழ்நாட்டில் பல கருவிகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவற்றையெல்லாம் இளம் தலைமுறையினர் அறியாதே இருக்கின்றனர். அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. எடுத்துக்காட்டாக, சுத்தியல் (ஹாமர்), திருப்புளி (ஸ்குரு டிரைவர்), குறடு (கட்டிங் பிளேயர்), ரம்பம் (சா) என்பனவற்றைச் சொல்லலாம்.

ரம்பம், வாள் என்றும் சொல்லப்பட்டது. வாள் பட்டறை என்று மரம் அறுக்கும் இடத்துக்குப் பெயர். திருகு (ஸ்குரு) என்றும் திருகாணி என்றும் (நகை - தோடுகளில் இருப்பது) சொற்கள் நம்மிடையே இன்றும் உண்டு.

பழகு தமிழ்ச் சொற்களை மறந்துவிட்டால், தமிழில் சொல்வளம் - சொற் பெருக்கம் குறைய வாய்ப்புண்டு. கணினி வரவுக்குப் பின் புதிய பல சொற்களும் தமிழுக்கு வந்தன. தொடுதிரை, சொடுக்கி, முகப்பக்கம், இணையதளம், வலைமுகவரி, மின்னஞ்சல் இப்படிப் பல உள்ளன. தமிழில் புதிய சொற்களை உருவாக்க வழி இருப்பதால் நாம் பிற மொழிச் சொல்லைப் பெரும்பாலும் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. "டெக்னிக்' என்பதை தொழில்நுட்பம் எனத் தமிழில் சொல்லுகிறோம். இந்தியில் டெக்னிக் - டெக்னிக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

ஆனாலும் சில போதுகளில் இடர் தோன்றாமல் இல்லை. இருப்புப்பாதை (ரயில்வே)யில் ஓடும் வண்டியை ஆகுபெயராக ரயில் என்றே குறித்தோம். நிலக்கரியில் ஓடிய காலத்தில் புகைவண்டி எனத் தமிழில் சொன்னோம். ஈழத்தில் புகைரதம் என்றார்கள். (ரதம்- வடசொல்) இப்போது ரயிலைத் தொடர்வண்டி என்று சொல்லுகிறோம். சிலர் கேட்கிறார்கள்: இரண்டு பேருந்து இணைத்துச் செல்வதும் தொடர்வண்டிதானே? ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்வன எல்லாம் தொடர்வண்டிகள்தாமே! வேறு சொல் இல்லையா? இந்தியில் வண்டி எனப் பொருள்படும் காடியைப் பயன்படுத்துகிறார்கள். (காடி தமிழிலும் இருந்துள்ளது பற்றி முன்னரே எழுதியுள்ளோம்)

தமிழில் மிதிவண்டி முதலாக, மகிழுந்து (ஸ்ரீஹழ்) வரை எல்லாவற்றையும் வண்டி என்று சொல்லும் முறை உள்ளது. ரயில் என்பதைத் தமிழ் எழுத்துமுறைப்படி இரயில் ஆக்கி, இரயில் வண்டி என்று கொள்ளலாமோ? என்று நினைக்கிறோம். எழுதும்போது "இ' சேர்த்தாலும் சொல்லும்போது ரயில் என்றே சொல்லலாம். அறிஞர்கள் தம் கருத்தை அல்லது வேறு சொல்லை அளிப்பார்களாக.
ஒருவர், ""பால்கனிக்குத் தமிழ் என்ன?'' என்று கேட்டார். பால்கனி தமிழ்தானே! பால், கனி (பழம்) தமிழ்ச் சொற்கள் அல்லவோ என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சிந்தித்தோம். நிலா முற்றம் என்று சொல்லலாமே! நிலாமொட்டை மாடியிலும் நன்றாகத் தெரிந்தாலும் வீட்டின் ஒரு பகுதியான பால்கனியில் நின்று நிலவைப் பார்க்க முடியும்.

அதனால் நிலா முற்றம் எனலாம். "வேயா மாடமும் வியன்கல இருக்கையும்' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு தொடர் உண்டு. இதில் வேயா மாடம் - மேலே கூரை வேயப்படாத திறந்தநிலை மாளிகை எனலாம். இப்போதெல்லாம் சில உயர்நிலை உணவகங்களில் "ரூஃப் கார்டன்' எனும் இடத்தில் உணவு பரிமாறுகிறார்கள். இதுவே வேயா மாடம்.

"மான்கள் காலதர் மாளிகை' பற்றியும் சிலம்பில் வருகிறது. முன்னரே எழுதியுள்ளோம். ஈண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுதல் நல்லது. மானின் கண்போல் வடிவமைக்கப்பட்ட துளைகளைக் கொண்ட காற்றுவீசும் வழிகள் அமைக்கப்பட்ட மாளிகை. காற்றுவீசும் வழி எது? இன்று ஜன்னல் (சன்னல்) என்கிறோமே, அதுதான். சிலர் "சாளரம்' என்றும் சொல்வர். இதற்கு அழகான தூய தமிழ்ச் சொல் காலதர் (கால் - காற்று; அதர் - வழி)

தீபாவளி என்னும் சொல் தீபம் + ஆவளி என்னும் சொற்களின் சேர்க்கை. தீபங்களின் வரிசை என்று பொருள். தீபம் + ஆவளி இரண்டும் வடசொற்களே. வடக்கே தீபங்களை அடுக்கி வரிசையாக ஏற்றி இன்னும் வழிபடுகிறார்கள். (நாம் கார்த்திகைத் திருநாளில் செய்கிறோம்). தீபாவளியைத் தீப ஒளித்திருநாள் ஆக்கியிருக்கிறோம். ஒளி - தூய தமிழ்ச்சொல்; தீபம் வடசொல்லே.

மகவுப்பேறா? மகப்பேறா?
மகப்பேறு மருத்துவமனை என்று பலகை பார்க்கிறோம். நாமும் எழுதுகிறோம். "மகவு என்றால்தான் பிள்ளை; அதனால் மகவுப் பேறு மருத்துவமனை என்றுதானே இருக்க வேண்டும்' எனப் பெரியவர் ஒருவர் நம்பால் கேட்டார்.

உண்மைதான், தொல்காப்பியத்திலும் இளமைப் பெயர்கள் பற்றி நூற்பா (சூத்திரம்) 1500-இல் மகவு என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்மகன், பெண்மகள் என்று எழுதுகிறோம். மகன், மகள் எப்படி வந்தன? மகவு என்னும் சொல் மக - எனத் திரிந்து அன் விகுதி பெற்று ஆண்பாலாகவும், அள் விகுதி பெற்றுப் பெண்பாலாகவும் ஆயின என்று சொல்லலாம்.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

கீதம்
24-11-2011, 09:50 PM
திருப்புளி, கொறடு, சுத்தியல் போன்ற சொற்களை என் தாத்தா, அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதன்பின் மற்றவர்கள் வாயிலிருந்து கேட்பதெல்லாம் ஆங்கில வார்த்தைகளே. பிள்ளைகளுக்கும் தமிழில் சொன்னால் புரிவதில்லை. சுத்தியல் எடுத்து வா என்றால் சுற்றி சுற்றி வருகிறார்கள். விளக்கம் சொன்னபின் அதன் பெயர் hammer. இனி அப்படியே சொல்லுங்கள் என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

படிக்காதவர்களிடமும் அரைகுறையாகவேனும் ஆங்கில வார்த்தைகளே புழங்குகின்றன, பள்ளிக்கூடத்தை இஸ்கூல் என்பது போல். வேலைக்காரம்மாவிடம் குழாயை மூடச்சொன்னால் முழிக்கிறார். பைப் என்று சொன்னால்தான் புரிகிறது. எல்லாம் காலக்கொடுமை என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. தமிழ் வார்த்தைகளை படிப்படியாக மறைந்துபோக விடாமல் நினைவுக்குக் கொண்டுவர முயலும் இதைப்போன்ற கட்டுரைகள் இன்று மிகவும் தேவை.

பால்கனிக்கு நிலாமுற்றம் என்னும் சொல் பொருத்தமாகவும் ரசிக்கத்தக்கதாகவும் உள்ளது.

பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
02-12-2011, 09:37 AM
கருத்துக்கு மிக்க நன்றி கீதம்.

-----------------------------------------------------------------------
மொழிப்பயிற்சி - 67: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!




கவிக்கோ ஞானச்செல்வன்


குழந்தைப் பேறு என்பதில் மகனோ, மகளோ பிறக்கக்கூடும். இவ்விரண்டிலும் "மக'தான் உள்ளது; "மகவு' இல்லை. ஆதலின் மகப்பேறு என்று குறிப்பதில் தவறில்லை. மகன், மகள் என்னும் சொற்கள், தொல்காப்பியம், சங்கநூல்கள் எனப் பண்டுதொட்டு இருப்பனவேயாம். மக்கள் என்னும் சொல்லும் "மக' அடிப்படையில் உருவானதாக இருக்கக்கூடும்.

"கள்' விகுதி பயன்பாட்டில் மிகுதியாக இல்லாத காலத்திலேயே மக்கள் எனும் சொல் உண்டு. "உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே' (தொல்), "மக்கள், தேவர், நரகர் உயர்திணை' என்று நன்னூல் பிற்காலத்தில் நவின்றது.

"என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன்' புறநானூறு, பாரிமகளிர் (மகள்+இர்) இர் பலர்பால் விகுதி-மகள்-மகளிர் சங்கச் சொல்லே.
மகம்+நாளில்-மகநாளில் இதிலுள்ள மகம் என்பது வேறு. இது மக மீனைக் குறிக்கும் (மக நட்சத்திரம்) மகவு-மக என்பது வேறு. மகவுப்பேறு என்பதனினும் மகப்பேறு எனச்சொல்லுதல் எளிது. அதனால் மகப்பேறு நிலைபெற்றுவிட்டது.

வல்லொற்றின் பின் மெய்யெழுத்து வராது. இதுபற்றித் தொடக்கப்பள்ளியிலேயே ஆசிரியர் சொல்லித் தந்திருப்பார். வல்லினப்புள்ளி எழுத்துக்கள் (எ-டு: ட்,ற்) பின்னே மற்றொரு ஒற்று வராது எனக்கூறி கற்க்கண்டு என எழுதக்கூடாது. கற்கண்டு என்று எழுதுக எனச்சொல்லியிருப்பார்.

ஆயினும் இன்னும் பலர் பயிற்ச்சி என்று எழுதுகிறார்கள். "ற்' ஓசையே அழுத்தமாக இருப்பதால் "ச்' அழுத்தம் தனியே வேண்டாம் என்றே இலக்கண நூலார் "ற்' றோடு "ச்' சேராது என்றனர். சொல்லாக உச்சரிக்கும்போது அந்த ச் ஒலி இருக்கிறது என்பதை உணர்க. அதனால்தாம் சிலர் தம்மையறியாமலேயே பயிற்ச்சி என்று எழுதிவிடுகிறார்கள்.

பற்ப்பசை என்பதும் அத்தகைய ஒரு சொல். பற்பசை என்றே எழுத வேண்டும். இவ்வாறே உட்கார் என்பதை உட்க்கார் என்றெழுதுவதும் பிழை. இனி நீங்கள் எழுதும்போது கவனமாக உட்காருங்கள், பற்பசை கொடுங்கள், கற்கண்டு எடுத்துக்கொள்ளுங்கள், நாளும் பயிற்சி செய்யுங்கள் என்று தவறின்றி எழுதுவீர்களாக.

வல்லொற்று இரட்டித்தல் உண்டு; இது வேறு. எந்த வல்லொற்று வந்ததோ அதே எழுத்து- இன்னொரு சொல்லோடு சேர்கிறபோது இரட்டித்தல் அது. (எ-டு) காட்டரண் (காடு+அரண்) ட் இரட்டித்தது, சோற்றுப்பானை (சோறு+பானை) ற் இரட்டித்தது.

இலக்கணம் எதற்கு?
பேசுவதற்கும் எழுதுவதற்கும் எதற்கு இலக்கணம்? நாமறிந்தபடி பேசுவதில் என்ன தவறு என்று சிலர் கருதக்கூடும். இலக்கணம் என்பது புதிதாகத் திணிக்கப்படும் ஒரு கருத்தன்று. காலம் காலமாக நம் பேச்சில், எழுத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நெறியே இலக்கணம். முன்னரே எழுதப்பட்ட இலக்கியங்களின் றே இலக்கண விதிகள் எடுக்கப்பட்டன.

இதனை "எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் எடுக்கப்பட்டது' என அறிஞர் உரைப்பர். எடுத்துக்காட்டாக ஒரு செய்தியைக் காண்போமே.
"நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்' என்று சொல்லுகிறோம். இதில் வாக்களித்தனர் என்பதைப் பிரித்தால் வாக்கு+அளித்தனர் என்றாகும். இப்படிச் சேர்ந்தபோது ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது என்ன? வாக்கு என்ற சொல்லில் (க்+உ=கு) இறுதியில் நின்ற "உ' எனும் ஓசை நீங்கிவிட்டது. "கு'வில் "உ' நீங்கினால் "க்' இருக்கும். இதனோடு வருமொழி முதலில் உள்ள "அ' சேர்ந்து க்+அ=க வாக்களித்தனர் என்றாகிறது.

"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்பது விதி. இந்த விதியைப் பார்த்தா நாம் பேசுகிறோம்? இயல்பாக நாம் பேசும்போது இவ்விதி அதனுள் அடங்கியிருக்கிறது. இன்னும்சில காட்டுகளைப் பார்ப்போமா?

நேற்று+இரவு=நேற்றிரவு
நண்டு+ஓடி=நண்டோடி

சரி, மேற்சொன்ன நூற்பாவின் (சூத்திரம்) விளக்கம் சொல்லவில்லையே. வருமொழி முதலில் உயிர் எழுத்து வருமானால், நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் தான் ஏறியிருந்த மெய்யெழுத்தை விட்டு நீங்கிவிடும்.

முதலில் இருக்கும் சொல் நிலைமொழி; அதனுடன் சேரும் சொல் வருமொழி.

வாக்கு-நிலைமொழி; அளித்தனர்-வருமொழி. வாக்குவில் உள்ள இறுதி "உ' குறுகிய ஓசைகொண்ட உகரம் ஆகும் (குற்றியலுகரம்). "உ' என்னும் எழுத்துக்கு ஒரு மாத்திரை ஒலியளவு. (கை நொடிப்பொழுது ஒரு மாத்திரை)

வாக்கு என உச்சரிக்கும்போது "கு'வில் உள்ள "உ' முழுமையாக ஒலிக்கிறதா? இல்லை. நடு, நாடு-இரண்டையும் உச்சரித்துப் பாருங்கள் "நடு'வில் உள்ள "உ' முழுமையாக ஒலிக்கும்; நடுவில் உள்ள "உ' அரையளவு ஒலிக்கும். இதற்கு அரை மாத்திரை மட்டுமே.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
08-12-2011, 03:27 PM
மொழிப்பயிற்சி - 68: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்

குற்றியலுகரம் ஆறுவகையாக அமையும்.

குற்றியலுகரம் க்,ச், ட், த், ப், ற் எனும் ஆறு வல்லின மெய்கள் மேல் ஏறிவரும். அதாவது கு,சு,டு,து,பு,று என்றே அமையும். இந்த ஈற்றெழுத்துகளின் அருகில் (முன்) இருக்கும் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப் பிரிவு செய்யப்பட்டுள்ளன.

பாக்கு - வன்தொடர்க் குற்றியலுகரம்

வண்டு - மென்தொடர்க் குற்றியலுகரம்

பல்கு - இடைத்தொடர்க் குற்றியலுகரம்

பயறு (ய்+ அ ) - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

அஃது - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

நாடு - நெடில் தொடர்க் குற்றியலுகரம்

"ய' என்னும் உயிர் மெய் எழுத்தின் முடிவில் "அ' எனும் உயிர் ஓசை கொண்டு இதனை உயிர்த்தொடர் என்பர். நெடில் தொடரில் ஆடு என்று உயிரோ காடு என்று உயிர்மெய்யோ வரலாம். நெட்டெழுத்தாக இருத்தல் வேண்டும். புரிந்தும் புரியாமலும் இருக்கிறதா? திரும்பத் திரும்பப் பொறுமையாகப் படித்துப் பார்த்துத் தெளிவு பெறுக.

எப்படி நேர்கின்றன?

பிழைகள் சில எப்படி நேர்கின்றன என்று புரியவில்லை. ஒரு செய்தியறிக்கையில், "மரப்பாலம் உடைந்து விபத்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள்' என்று நீண்டது அச்செய்தி. படிக்கும்போது நாக்குத் தடுமாறி, விபத்து என்னும் சொல் இடையில் புகுந்ததோ?

பூசணிக்காய் என்பதும் பரங்கிக்காய் என்பதும் வேறானவை. பச்சை நிறத்தின் மேல் வெண்படலம் பூசினாற்போல் புறத்தோற்றம், உள்ளே வெள்ளை நிறத்தில் சதைப் பகுதி இருப்பது பூசணிக்காய். பரங்கிக்காய் இளையதாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின் (பழுத்து) பழுப்பு நிறத்தில் இருக்கும். அறுத்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் சதைப்பகுதி இருக்கும். பூசணிக்காயை வெள்ளைப் பரங்கி என்று சொல்லும் வழக்கமுண்டு. பாரதி, "வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே' என்று பாடியுள்ளார். யாரும் பரங்கிக்காயைப் பூசணிக்காய் என்று சொல்லார்.

ஒரு தொலைக்காட்சியில் பூசணிக்காய்த் திருவிழா என்று செய்தியில் சொன்னார்கள்; காட்டப்பட்டதோ, நன்றாகப் பழுத்த (பழுப்பு) பரங்கிக் காய்களாகும். இஃதொரு பிழையா எனில், ஆம், பிழையே. தமிழில் இருவேறு பொருளுக்கு இருவேறு பெயர்கள் உள்ளன என்பதை அறியாமல் பேசுவது பிழையன்றோ?

"ஒவ்வொரு பூக்களுமே' திரைப்பாடல் வெளிவந்தபோதே ஒவ்வொரு பூவும் என்றுதானே வரும்? பூக்கள் என்றது பிழை என்று பேசப்பட்டதைப் பலரும் அறிவர். "இதழில் வெளிவரும் ஒவ்வொரு துணுக்குகளும் அருமை' எனும் வாக்கியத்தைப் படித்தபோது மேற்சொன்ன பாடல் பற்றிய செய்தி நினைவில் எழுந்தது. ஒவ்வொரு துணுக்கும் என்றோ எல்லாத் துணுக்குகளும் என்றோ எழுதிட வேண்டும்.

இவ்வாறே "ஐந்து பேரின் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது'. இந்த வாக்கியத்திலும் ஒருமை, பன்மை மயக்கம் உள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று முடித்தல் வேண்டும்.

"சட்டத்தைத் திரும்பப் பெறப்பட வேண்டும்' என்று ஒரு செய்தியாளர் படித்தார். சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். அல்லது சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இத்தொடர் அமைந்திட வேண்டும்.

அமெரிக்காவில் மணியடித்தான்!

எதற்கு என்று வினவுகிறீர்களா? எதற்குமில்லை. அமெரிக்காவில் என்பது தனி; மணியடித்தான் என்பது தனி. இரண்டையும் ஏன் இங்கே காட்டினோம் என்பது பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்கா, ஒரு நாட்டின் பெயர். அஃதென்ன "வில்'? அது "வில்' அன்று "இல்' எனும் உருபு "வில்'லாக மாறியது. எப்படி? அமெரிக்கா (க்+ஆ= கா) எனும் சொல்லில் இறுதி, "ஆ' என்று உயிரெழுத்து ஓசையில் முடிகிறது. இல் என்னும் உருபுவில் "இ' என்னும் உயிரெழுத்து இருக்கிறது. இரண்டு உயிர்களையும் ஒன்றிணைக்க ஈண்டு "வ்' எனும் மெய்யெழுத்து பயன்பட்டது. இதற்கு உடன்படு மெய் என்று பெயர். இரண்டு உயிர் எழுத்துகள் ஒன்றொடொன்று சந்திக்கும்போது அவற்றை உடம்படுத்த (சேர்க்க) பயன்படும் மெய். அமெரிக்கா + இல், அமெரிக்கா+வ்+இல் = அமெரிக்காவில்.

மணியடித்தான் என்பதைப் பிரித்தால் மணி+ அடித்தான் என்றாகும். இவற்றுக்கு இடையில் "ய்' என்னும் மெய்யெழுத்து வந்து இரண்டையும் இணைக்கிறது. மணி (ண்+இ)+ய்+அடித்தான் (ய்+அ=ய) மணியடித்தான்.

ஆக, வ்,ய் எனும் இரண்டும் உடம்படு மெய்கள் என்று இலக்கணம் சுட்டுகிறது. நாம் இந்த இலக்கணத்தைப் பார்த்தா பேசுகிறோம்? நாம் பேசுவதில் இந்த இலக்கணம் அமைந்து கிடக்கிறது. அமெரிக்காவில் (வ்), இந்தியாவில் (வ்), திருச்சியில் (ய்) இங்கு ஏன் "ய்' வர வேண்டும்?


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
14-12-2011, 01:35 PM
மொழிப்பயிற்சி - 69: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


கவிக்கோ ஞானச்செல்வன்

நிலைமொழியில் இ, ஈ, ஐ, இருந்தால் "ய்' யும், ஏனைய உயிர்கள் இருந்தால் "வ்' வும் "ஏ' இருந்தால் இரண்டும் (ஏதாவது ஒன்று) உடம்படு மெய்யாக வரும். தே (த்+ஏ)+வ்+ஆரம்= தேவாரம். அவனே (ஏ)+ய்+அழகன் = அவனேயழகன்.


அமெரிக்காவில் "ஆ' இருப்பதால் "வ்' வந்தது. திருச்சியில் "இ' இருப்பதால் " ய்' வந்தது. தேவாரத்தில் "ஏ' காரம் உள்ளது. இதில் "வ்' வந்தது. அவனே - இலும் "ஏ' காரம் இருக்கிறது. இதில் "ய்' வந்தது. (இரண்டும் வரும்) ஆனால் கோவில், கோயில் என இரண்டு வகையாய் எழுதுதல் சரியன்று. கோவில் என்பதில் "ஓ' உள்ளது. "ஓ' இருந்தால் "வ்' தான் உடம்படு மெய். ஆதலின் கோவில் மட்டுமே சரி. கோ+இல் = கோ (க்+ஓ)வ் +இல் (வ்+இ=வி) கோவில்.

தெரிந்தும் தெரியாமலும்:
தெரிந்து செய்யும் பிழைகள், தெரியாமல் செய்யும் பிழைகள் என இரண்டு உண்டு. நம் வாழ்வில் நம் செயல்களில் நேர்கின்ற பிழைகள் மட்டுமல்ல ; மொழியை எழுதுவதிலும் இப்பிழைகள் இரண்டும் நேர்கின்றன.

கணபதி என்பது ஒருவர் பெயர் (வடமொழிப் பெயர்தான்). இதனை ஆங்கிலத்தில் மிடுக்காக "கண்பத்" என்று சொல்லத் தொடங்கினர். இப்போது "கண்பத்'தும் போய் (பத்துக் கண்கள் அல்ல) "கண்பட்' ஆகிவிட்டதே! இதுதான் கொடுமை; இது தெரிந்தே செய்யும் பிழை.
இவ்வாறே பழனிச்சாமி என்ற அழகிய தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் எழுதி, சுருக்கி - பால் என்றாக்கி, பால் சகோதரர்கள் என்று வணிக நிலையத்துக்குப் பெயர் வைக்கிறார்கள். மனம் தாங்காத இப்பிழையும் தாங்கித்தான் வாழுகிறோம்.

கோனார் தமிழ் உரைநூலின் முதலாசிரியர் ஐயன்பெருமாள் கோனார்; பெரும் புலவர். இந்தப் பெயரை ஐயன் பெருமாள் என்று சொல்லாமல் ஐயம் பெருமாள் என்று பேச்சு வழக்கில் உரைத்தனர். இது தொடர்ந்து இன்று அய்யன் கணபதி என்னும் பெயரை அய்யம் கணபதி என்று ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள். இதிலுள்ள அய்யம், சந்தேகம் என்னும் பொருளைத் தருமே ஐயா. இது சரியா?

சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் பருவம்; இதனையே வசந்த காலம் என்பர். இப்போது (இதை எழுதும் நாளில்) ஐப்பசி மாதம் - இதில் ஒருநாள் தொலைக்காட்சிச் செய்தியில், ""இது வசந்த காலமாதலால் முதுமலை சரணாலயத்தில் விலங்குகள் அதிகம் கூட்டம் கூட்டமாய்க் காணப்படுகின்றன'' என்று படித்தார் ஒருவர். இந்தச் செய்தியை எழுதிய செய்தி ஆசிரியர்க்கோ, படித்தவர்க்கோ வசந்தகாலம் என்பது எது என்று தெரியவில்லை. ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம் என்பார்கள். இந்தப் பருவத்தில் குளிர் மிகுதியாக இருக்கும். ஆதலின் இலக்கணத்தில் "கூதிர்காலம்' என்ற பெயர் உண்டு.

கூதிர் (குளிர்) காலத்தை வசந்த காலம் (இளவேனில்) என்றது தெரியாமல் செய்த பிழை. அவர்களுக்கு இந்தப் பருவங்களின் பாகுபாடு பற்றித் தெரியவில்லை. ஆயினும் பிழை, பிழைதானே?
ஒரு செய்தியில் "இராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தாக்குதல்' என்று தலைப்புச் செய்தியில் சொன்னார்கள். நம் மீனவர்கள் எப்போது தாக்கத் தொடங்கினார்கள்? இவர்கள்தாம் அடிவாங்கி உதைபட்டு வருகிறார்களே! இந்தக் கொடுமை தீரவில்லையே! இந்த வாக்கியத்தில் ஒரு சொல்லை விட்டுவிட்டார்கள். "இராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்' என்று சொல்லியிருக்க வேண்டும். "மீது' விட்டுப் போனதால் வந்த வினை இது.

பேச்சு வழக்கில் படித்தவர்கள் கூட வியபாரம் என்றும், இராமியாணம் என்றும் பேசக் கேட்டிருக்கிறேன். வியாபாரத்தை (வணிகம்), இராமாயணத்தை இப்படிப் பிழையாகச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.

கனவுப் பட்டறை என்று சரியாகச் சொல்லி கனவு பட்டறை என்று எழுத்தில் காட்டுகிறார்கள். மணிச் செய்திகள் என்று சொல்லி மணி செய்திகள் என்று எழுத்தில் காட்டுகிறார்கள். வேறுபாடு புரிவதில்லையா?

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
19-12-2011, 01:52 PM
மொழிப்பயிற்சி - 70: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



கவிக்கோ ஞானச்செல்வன்


ஏவலும் வியங்கோளும்:

வா, செய், படி, நில் - ஏவல் (கட்டளை)

வருக, செய்க, படித்திடுக, நிற்க - வியங்கோள்

இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து ஏவல் என்பது ஆணையிடுவதாகவும், வியங்கோள் என்பது வேண்டுகோளாகவும் இருக்கின்றன என அறிந்து கொள்ள முடியும். இந்த இரண்டும் இல்லாது, நாம் புதிதாகச் சொல்லிவரும் சொற்களான வரவும்,செய்யவும், படிக்கவும், நிற்கவும் என்பன போன்றவை பிழையானவை என்று முன்னரே எழுதியிருக்கிறோம். "உம்' என்பது இணைப்பு இடைச்சொல். இதனைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம்.

ஏவலுக்கும், வியங்கோளுக்கும் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் வினைமுற்றுகளாகும். ஏவல் வினைமுற்றுக்கும், வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி பள்ளியில் படித்திருக்கக்கூடும். ஏவல் வினைமுற்று, ஒருமை,பன்மை, வேறுபாடு உடையது.
(எ-டு) நீ வா, நீங்கள் வாருங்கள் ஏவல் வினைமுற்று முன்னிலை இடத்தில் மட்டும் வரும்.
(எ-டு) நீ செய், நீங்கள் நில்லுங்கள் என்பதன்றி நான், நாங்கள் எனும் தன்மையோடும், அவன், அவள், அவர்கள் எனும் படர்க்கையோடும் இணையாது. ஏவல் வினைமுற்று கட்டளைப் பொருளில் மட்டும் வரும். (எ-டு) ஓடு, ஓடாதே, அடி, அடிக்காதே வியங்கோள் வினைமுற்று ஒருமை பன்மையில் வேறுபடாது.
(எ-டு) அவன் வாழ்க!, அவர்கள் வாழ்க! வியங்கோள் வினைமுற்று மூவிடங்களிலும் வரும்.
(எ-டு) நாம் வாழ்க (தன்மை), நீவிர் வாழ்க (முன்னிலை), அவர்கள் வாழ்க! (படர்க்கை) வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் எனும் பொருள்களில் வரும்.
(எ-டு) வாழ்க, வெல்க (வாழ்த்துதல்), ஒழிக, அழிக (வைதல்), வருக, உண்க (வேண்டுதல்), செய்க, நிற்க (விதித்தல்) எதற்கு ஐயா இந்த விளக்கம் எல்லாம் என்று வினவுகிறீர்களா? நாம் பிறரை வாழ்த்துவதானாலும், வைவதானாலும், வேலை வாங்குவதானாலும், வேண்டுவதானாலும் இலக்கணப்படிப் பேசுவோமே! பேசினால் நல்லதுதானே என்னும் நோக்கத்தால் இவற்றை எழுதினோம்.

வியங்கோள் வினைமுற்று க, இய, இயர் என்னும் விகுதிகளைக் கொண்டு முடியும் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.
(எ-டு) வாழ்க, வாழிய, வாழியர் (வாழ்த்துப் பொருளில் மட்டுமே) திருக்குறளில் பல அறநெறிகளைச் சொல்லியுள்ள திருவள்ளுவர் ஏவல் வினையில் பெரிதும் சொன்னதில்லை. எல்லாம் வியங்கோளாகவே காண்கிறோம்.

"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' (கற்க, நிற்க) "எனைத்தானும் நல்லவை கேட்க தன்னைத்தான் காக்கின் சினம் காக்க செய்க பொருளை; அஞ்சுவது அஞ்சுக' இப்படி நிரம்ப எடுத்துக்காட்டுகளைக் காணலாம். ஒüவையின் ஆத்திச்சூடியில் இதற்கு நேர்மாறாக எல்லாம் ஏவலாக இருக்கக் காண்கிறோம். அறஞ்செய விரும்பு, இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், ஐயமிட்டு உண், ஒப்புரவொழுகு, ஓதுவது ஒழியேல். இப்படிப் பலவும். விரும்பு எனும் ஏவல் விரும்புக எனின் வியங்கோளாகும். உண் எனும் ஏவல் உண்க எனில் வியங்கோளாகும். ஒழுகு எனும் ஏவல் ஒழுகுக எனில் வியங்கோளாகும் (கரவேல் - ஒளிக்காதே, விலக்கேல் - விலக்காதே, ஒழுகு - கடைப்பிடி, ஒழியேல் - விட்டுவிடாதே) இடமறிந்து இவற்றையெல்லாம் நம் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி வந்தால் தமிழ் நலம் பெறும்.

தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல் தெளிவாக அறிந்திருப்பவர் தெளிவாகப் பிறர்க்கு உரைக்க முடியும். உரைப்பவர்க்குத் தெளிந்த அறிவு இல்லையானால் கேட்பவர் குழப்பமே அடைவர். மேற்காணும் பாரதியின் வாக்கு அந்த மகாகவியின்,"உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்' என்னும் தொடரை நினைவூட்டுகிறது. "ஆண்டுதோறும் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் இராசராசனுக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது' - இது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. இதில் பிழையொன்றும் இல்லை. ஆனால் தெளிவு இல்லை? எப்படி?

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
01-01-2012, 02:31 PM
மொழிப்பயிற்சி - 71: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



கவிக்கோ ஞானச்செல்வன்


சதய நட்சத்திரம் ஓர் ஆண்டில் பன்னிரண்டு. ஒரோ வழி பதின்மூன்று வருமே. இருபத்தேழு நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) சுழற்சிமுறையில் வருவதால் மாதா மாதம் சதயம் வருகிறதே!

என்ன சொல்ல வேண்டும்? ஆண்டுதோறும் "ஐப்பசி - சதய நட்சத்திரத்தன்று' என்று மாதத்தின் பெயரையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். ஐப்பசித் திங்கள் சதய விண்மீன் நிலவும் நாளில் இராசராசச் சோழன் பிறந்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து ஆட்சி செய்த மாமன்னன் இராசராசன்.

ஒரு கட்டுரையில் படித்தோம்: ""தீக்குச்சி எரிந்து கையைச் சுட்டு - கொப்புளம் வருமளவும் தன்னை மறந்திருக்கிறது தானே எழுத்தாளன்?'' இத்தொடரில் பிழையுள்ளதா? ஆம், உள்ளது.

மறந்திருப்பவன்தானே எழுத்தாளன் என்று இருந்தால் பிழையற்று அமையும். இத்தொடரைச் சிலர் வலிந்து பேசி சரிதானே என்பர். எப்படி? தன்னை மறந்திருக்கிறது எழுத்தாளன் தன்மை- அதை உடையவன் எழுத்தாளன் என்பதை அப்படி அழகுற எழுதியிருக்கிறார் என்பார்கள். இந்த முட்டுக்கால்கள் எல்லாம் நில்லா. பிழையைப் பிழை என ஏற்பதே அழகு.

எழுத்துக்களா? எழுத்துகளா?

கள் எனும் பன்மை விகுதி சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது என்று முன்னரே நாம் எழுதியிருந்தோம். அதனால் நாள்கள், வாழ்த்துகள் என இயல்பாக எழுதுதல் நன்று எனக் குறிப்பிட்டோம். ஆயினும் வாழ்த்துகள் என வல்லொற்று மிகுந்து ஒலிப்பினும் பிழையில்லை என்பதையும் குறிப்பிட்டோம். ஆனால் "இனிப்புக்கள் வேண்டா' (பொருள் திரிபு ஏற்படும் என்பதால்) என எழுதினோம்.

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.

எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

உரையாசிரியர்களைச் சான்று காட்டியுள்ளீர்களே, மூல ஆசிரியர்கள் எப்படி எழுதியுள்ளார்கள்? எனும் ஐயம் எழும். "எழுத்தென படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப' (தொல்) கள் விகுதியே பயன்படுத்தாமல் அக்காலத்து எழுதினர். அகர முதல் எழுத்தெல்லாம் (திருக்குறள்), "உயிரும் உடம்புமாம் முப்பது முதலே' (நன்) இப்படியே மூலநூலார் யாரும் "கள்' விகுதிக்கு இடம் தரவில்லை.

"லளவேற் றுமையில் றடவும்' என்னும் நன்னூல் சூத்திரம் வழியாக லகரம், ளகரம் எனும் இரண்டு ஈறும் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே றகரம், டகரம் என மாறுபடும் என்றறிவோம். அதனால்தான் நாள் + கள் = நாட்கள் என்று சொல்லும் வழக்கம் தோன்றியது. ஆயினும் இலக்கியச் சான்றுகள் "நாள்கள் செலத் தரியாது' என்பதுபோல் இயல்பாகவே உள்ளது. ளகரம், டகரம் ஆகவில்லை. காரணம் நாம் முன்னர் குறிப்பிட்டதேயாகும்; கள் விகுதி என்பது தனிச்சொல் அன்று.

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரை கண்டவர்களும் காட்டியுள்ள எடுத்துக் காட்டுகள்:
கல் +குறிது = கற்குறிது
முள் + குறிது = முற்குறிது (குறிது - குறுகியது)
புல் + தரை = புற்றரை, முள் + செடி = முட்செடி என்பவற்றையும் நாம் காட்டலாம். (புல், தரை, முள், செடி - எல்லாம் தனித் தனிச் சொற்கள்)

கள் விகுதி சேரும்போதும் இடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. பற்கள், சொற்கள் எனச் சொல்லுகிறோம். (பல்+கள், சொல்+கள்). புட்கள் (புள்+கள்) பறந்தன. (புள் - பறவை) பசும் புற்கள் முளைத்தன (புல்+கள்). ஆகவே கள் ஈறு சேரும்போது திரிதல் (மாறுபடுதல்) காண்கிறோம். ஏனிந்த முரண்பாடு?


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்



மொழிப்பயிற்சி - 72: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்

பல + பல - இவற்றைச் சேர்த்தால் பற்பல, பலப்பல, பலபல எனவும், சில + சில - இவற்றை இணைத்தால் சிற்சில, சிலச்சில, சிலசில எனவும், மூன்று வகையாகவும் வருதற்கு இலக்கணம் விதி வகுத்துள்ளது. ஆனால் 'கள்' என்பது சேருங்கால் என்னவாகும் என் விதி வகுக்கபடவில்லை. காரணம், கள் எனும் பன்மை விகுதி பிற்காலத்தது. முதலெழுத்து முப்பது, பத்துக்குற்றம், பறவை நூறு, சொல் பல பேசி, அழகு பத்து, உத்தி முப்பத்திரண்டு என்று எங்கும் கள் விகுதியின்றியே இலக்கணம் நமக்குக் காட்டுகிறது. பாங்கமை நிமித்தம் பன்னிரண்டென்ப (தொல்), நிமித்தங்கள் எனும் சொல்லாட்சியில்லை.

ஒரு சொல்லிலேயும் இம்மாற்றம் இடம் பெற்றுள்ளது என்பதனையும் நாம் புறந்தள்ள முடியாது. நிற்க (நில் + க), கற்க (கல் + க) நில், கல் என்பன ஏவல் பகுதிகள். 'க' என்பது வியங்கோள் விகுதி. பண்டு தொட்டே இலக்கண நெறியுள் உடன்படல், மறுத்தல் இரண்டும் உண்டாதலின் நாமும் சிலவற்றை உடன் பட்டும் சிலவற்றை மறுத்தும் எழுதினோம்.

பல ஆய்வு நிலைச் செய்திகளை பார்த்தோம். எளிய ஒன்றை இப்போது காண்போம். வாக்கியப் பிழை - ஒருமை, பன்மை கெடல். இது பற்றி முன்னரும் பல எடுத்துக் காட்டுகள் தந்துள்ளோம்.

"இப்போது நினைத்தாலும் மனமும் கண்களும் கலங்குகிறது" என்று ஓர் எழுத்தாளர் ஒரு சிறுகதையில் எழுதியுள்ளார். மனமும் கண்களும் கலங்குகின்றன என்று பன்மையில் முடித்திட வேண்டும். சிறிய பிழைதான். ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இலக்கியச் சொற்கள் சற்றே வடிவம் மாறுபட்டு இன்றும் கூட எளிய மக்களின் பேச்சு வழக்கில் ஆளப்படுகின்றன.

'ஞாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்'

பலரும் அறிந்த குறுந்தொகைப் பாட்டின் தொடக்கம் இது.

ஞாய் - என் தாய்; யாய் - உன் தாய்;
எந்தை - என் தந்தை; நுந்தை - உன் தந்தை

தன்பால் அன்பால் வந்த வீடணனைச்சேர்த்துக் கொண்ட போது இராமன், (முன்னரே குகன், சுக்கிரீவனோடு அறுவர்) நின்னோடும் எழுவரானோம் (வீடணா உன்னோடு நாம் எழுவர் உடன்பிறப்புகள் ஆனோம்) இப்படி புதல்வர்களால் தந்தை தயரதன் பொலிந்தான் (சிறந்தான்) எனக் கூறுமிடத்து, இராமன் தன் தந்தையை, வீடணன் தந்தை எனும் பொருளில் (சிறப்பித்துப்) புதல்வரால் பொலிந்தான் நுந்தை என்பான். நும் (உம்) + தந்தை = நுந்தை.

செவலய எடத்துல கட்டு!

செவல (சிவப்பு நிறமுடைய) மாட்டை ஏரில் இடப்பக்கம் கட்டுக. சிவப்பு நிறமுடைய மாடு என்பதற்குப் பதிலாக செவல என்னும் பெயர் வாக்கியத்தில் வந்துள்ளது. இது ஆகு பெயர் என்பதாகும். ஒன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குப் பெயராகி வருவது ஆகுபெயர். ஈண்டு செவல (சிவப்பு) என்னும் நிறத்தின் (குணத்தின்) பெயர் அந்நிறமுடைய மாட்டுக்குப் பெயராகி வந்ததால் இது பண்பாகு பெயர் (குணவாகு பெயர்) என்று சொல்லப்படும்.

பெயர்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அடிப்படையில் ஆறாகச் சொல்லப்படும்.

(முழு) பொருளின் பெயர் - ஆலமரம், மனிதன்
இடப்பெயர் - சென்னை, கல்லூரி
காலப்பெயர் - ஐப்பசி, திசம்பர்
சினைப்பெயர் - கிளை, இலை, கை, கால்
குணப்பெயர் (பண்புப் பெயர்) - கறுப்பு, பசுமை
தொழில் பெயர் - வற்றல், பொங்கல்
(நிறம் குணத்தில் அடங்கும்)

கறுப்புப் பணம் என்று இந்நாளில் பேசுகிறோம். இதென்ன? பணம் கரிய நிறத்தில் இருக்குமா? இல்லை. இது கள்ளப்பணம். அதாவது கணக்கில் வாராது சேர்க்கப்பட்ட பணம். தவறான வழிகளில் சம்பாதித்த பணம், கருமை நிறத்தை (கறுப்பை) தவறான செயலுக்குரிய பெயராக்கியுள்ளோம்.

பெயர்கள் ஆறு எனப் பிரித்தாற்போல் ஆகு பெயர்களும் ஆறு பிரிவுகளாகும்.

தாமரை போல் மலர்ந்த முகம் - தாமரை என்பது முழுப்பொருள்.

மலர், மொட்டு, இலை, தண்டு அனைத்துக்கும் உரிய பெயர். இவ்விடத்து மலருக்கு (சினைக்கு) மட்டும் ஆகியுள்ளது. இது பொருளாகு பெயர் அல்லது முதலாகுபெயர் என்று சொல்லப்படும். முழுப்பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு (சினைக்கு) ஆகி வருவது இது.

கிரிக்கெட்டில் இந்தியா வென்றது - மட்டைப் பந்தாட்ட விளையாட்டில் இந்திய விளையாட்டுக் குழு வெற்றி பெற்றது. இந்தியா எனும் நம் நாட்டின் (இடப்) பெயர் - இந்நாட்டின் (இடத்தின்) விளையாட்டு வீரர்களுக்கு ஆகி வந்தது. இது இடவாகு பெயர்.

நன்றி: திரு.இராஜேஸ்வரன் (நண்பரின் உதவியால் 21.01.2014 அன்று இப்பகுதி பதியப்பெற்றது.)

பாரதி
10-02-2012, 07:19 AM
மொழிப்பயிற்சி - 73: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



கவிக்கோ ஞானச்செல்வன்

முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!

அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வந்துற்றது. வசந்தம் என்பது இளவேனிற் பருவத்துக்கு (காலத்துக்கு) உரிய பெயர். வசந்த காலத்தில் புதிய தளிர்கள், மலர்கள் செழித்து வளரும், தென்றல் காற்று வீசும், இனிமை மிகும். “அவர்கள் வாழ்க்கையில் செழிப்பும் மகிழ்ச்சியும் வந்து சேர்ந்தன’ என்று சொல்லாமல் வசந்தம் வந்தது என்று சொன்னதால் – வசந்தம் எனும் காலத்தில் விளையும் வளத்துக்கு ஆகி வந்தது. இது காலவாகு பெயர்.

“மூவரும் தலா (தலைக்கு) ஐந்நூறு பரிசு பெற்றனர்’ தலைக்கு மட்டும் பரிசு தர இயலுமா? தலை என்பது மனிதனின் (எவ்வுயிர்க்கும்) ஓருறுப்பு. இந்த உறுப்பின் (சினையின்) பெயர். இவ்வுறுப்பை உடைய முழுமனிதனுக்கும் (பொருளுக்கும்) ஆகி வந்ததால் இது சினையாகு பெயர்.

“மனத்தினில் கறுப்பு வைத்து’ – சூரிய நிறத்தை உள்ளத்திலே வைத்துக் கொண்டு, இங்கே கறுப்பு எனும் பண்புப் பெயர் வஞ்சக நினைவுக்குப் பெயராகி வந்தது. இது குணவாகு பெயர்.

“எல்லாரும் பொங்கல் உண்டனர்’ – பொங்கல் எனில் பொங்குதல். உலை பொங்கிற்றா? என வினவுவோம். பால் பொங்கியதா? என்போம். பொங்கல் – பொங்குதல் – இது ஒரு தொழில் (வேலை) பொங்குதலாகிய தொழில் ஆகிய உணவைப் பொங்கல் என்பது தொழிலாகு பெயர்.

பள்ளிப் பிள்ளைகளுக்காக மட்டும் இலக்கணம் எழுதப்படவில்லை. தமிழ் பேசுபவர், எழுதுபவர் எல்லாரும் அறிந்திருத்தல் நல்லது. இதனை ஓரளவு விளங்கிக் கொண்டாலும் அதனால் பயனுண்டு. தமிழின் அழகை, நுட்பத்தை உணர்ந்து மகிழ்க.

குணில் தெரியுமா?
அணில் தெரியும்; குணிலா என்ன அது?

“உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்தது போல்’ என்பது சிலப்பதிகாரத் தொடர். உருள்கின்ற சக்கரத்தை ஒரு குச்சி கொண்டு சுற்றினால் மேலும் விரைந்து உருளும் அல்லவா? அதுதான் இது.

கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்கு இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வர வேண்டும் என்று நினைத்திருந்த சேரன் செங்குட்டுவனின் எண்ணத்தை உருள்கின்ற சக்கரம் என உருவகப்படுத்தியுள்ளார். வடபுல மன்னர் கனக விசயர் தமிழரசரின் வீரத்தை இகழ்ந்து பேசினர் என்னும் செய்தியைக் கேட்டது, உருள்கின்ற சக்கரத்தை ஒரு கோல் (குச்சி) கொண்டு சுழற்றியது போல் அவனது நினைவை இன்னும் வேகப்படுத்தியது. எதற்கு இந்தக் கதை?

குச்சி, கம்பு எனும் சொற்கள் நாமறிந்தவை. குணில் பழந்தமிழ்ச் சொல். சென்னையிலே கம்பு என்பதைக் கொம்பு என்று சொல்கிறார்கள். மரத்திலே கிளை, கொம்பு என்பவை உண்டு. மரக்கொம்பை உடைத்துத்தான் குச்சியாகப் பயன்படுத்துகிறோம். ஒட்டடைக் குச்சி; குச்சி பெரிதாக இருப்பின் கம்பு, ஒட்டடைக் கம்பு எனும் சொல்லும் உண்டு. கம்பு சுழற்றுதல் – சிலம்ப விளையாட்டு எனப்பட்டது. மரத்திலுள்ள கொம்பு வளைந்தும் நெளிந்தும் இருக்கலாம். ஆனால் கம்பு நேராக – ஒரே அளவினதாக இருத்தல் வேண்டும்.

பல் விளக்கும் குச்சி – வேப்பங்குச்சி இப்போது பார்க்க முடியாததாகிவிட்டது. தடித்துக் கனமாக நேராக இருப்பது கம்பு. (கம்பு என ஒரு தானியம் உண்டு; இது வேறு) சிறிதும், பெரிதுமாக வளைந்தும் நெளிந்தும் இருப்பது கொம்பு என்று கொள்ளுவோமா? கொடி படரக் கொழு கொம்பு வேண்டும் என்று படிக்கிறோம். அவன் என்ன பெரிய கொம்பனா? என்பதும் அவனுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று கேட்பதும் மாட்டிற்குரிய கொம்பைக் குறித்து வந்தவையாகும். அவன் பெரிய முரடனா? எனும் பொருளில் வந்த சொல் வழக்கு அவை.

முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!

“முருங்கா’ எனும் சிங்களச் சொல்லிலிருந்து “முருங்கைக்காய்’ வந்ததாக ஆய்வறிஞர் வேலுப்பிள்ளையவர்கள், தமிழ் வரலாற்றிலக்கணம் எனும் நூலில் குறிப்பிட்ட செய்தி பற்றி எழுதியிருந்தோம். தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் முருங்கைக்காய் தமிழிலிருந்து சிங்களம் போயிருக்கலாம்; அது தமிழ்ச் சொல்லே என்பதற்குச் சங்க இலக்கியச் சான்றுகள் பலகாட்டித் தெளிவுற எழுதியிருந்தார்கள். உரமும், ஊட்டமும் தரும் முருங்கை நம்மதே என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இரண்டு பேருந்துகள் இணைத்து இயக்குவதை, இணைப்புப் பேருந்து எனலாம் என்ற அன்பர் கருத்து ஏற்புடையதே. மேலொன்று, கீழொன்று என இரண்டடுக்குப் பேருந்தும் ஓடுகிறதன்றோ? அதற்கு இரட்டைப் பேருந்து என்று சொல்லலாம். ஆதலின் இருப்புப் பாதையில் ஓடும், தொடர்ந்து பல பெட்டிகள் கொண்ட வண்டியைத் தொடர் வண்டி என்றே சொல்லிடுவோம். ஆய்வும் அதன் விளைவான தெளிவும் அனைவர்க்கும் கிட்டியமை நன்று.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
14-02-2012, 12:28 PM
மொழிப்பயிற்சி - 74: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



கவிக்கோ ஞானச்செல்வன்


லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசுகிறார்கள்!
இவர்களுமா இப்படி?

யாரவர்கள்? எப்படி நடந்து கொண்டார்கள்? அப்படியென்ன தவறு செய்தார்கள்? என்று ஆராய வேண்டாம். நன்கு கற்ற புலமை மிக்குடையவர்களும் உச்சரிப்பில் தவறும்போது நம் மனம் வாடுகிறது; வருந்துகிறது. நூல் (புத்தகம்) என்பதை ஒரு சிறந்த பேச்சாளர் பலவிடங்களில் நூள், நூள் என்றே உச்சரித்தார். “அவன் ஏன் தோல்வியைத் தளுவினான் தெரியுமா?’ என்று அவர் வினா விடுத்த போது, நாம் தலைகுனிந்து அமர்ந்திருந்தோம். “அவன் ஏன் தோல்வியைத் தழுவினான்?’ என்பதுதான் அவரின் வினா.

சென்னையில் மிகப் பெரிய அரங்கம். கற்றுத் தேர்ந்த அவையினர். பேச்சாளரோ நுண்மாண் நுழைபுலம் மிக்கவர், நாவன்மையும், சிந்தனைத் திறமும் படைத்த பேரறிஞர். ஆயினும் அவர்தம் உரையில், “உணர்வு சார்ந்து நாம் பேசினாள் (ல்) ‘, “இன்னும் சொல்லப் போனாள் (ல்)’, “அவர் ஏன் பாடவில்லை என்று கேட்டாள் (ல்)’,

“இந்தப் பஞ்ச பூதக் களப்பு (கலப்பு)’. இப்படியே லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசும்போது நாம் மனம் வெறுத்தே போனோம். எழுந்து கத்துவது நாகரிகமல்லவே! ஆதலின் வாளாவிருந்தோம்! தம் பேச்சைத் தாமே ஒலிநாடாவில் – குறுவட்டில் பதிவு செய்து கேட்டுப் பார்த்தால், தவறு புரியாமல் போகாது. சற்றே முயன்றால் சரியாக உச்சரித்துப் பேசக் கூடுமே.

வாட்டமில்லா வண்டமிழ் என்றும் ஈரத் தமிழ் என்றும் போற்றப்படும் நந்தமிழ் இப்படிச் சிதைக்கப்படலாகுமோ? இயல்பாக எளிமையாக வர வேண்டிய ஒலிப்பு – உச்சரிப்பு, அறிஞர் சிலரிடையே ஏன் இப்படி இடர்ப்படுகிறதோ?

”தமிழ் மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள் நிறைந்தவை. தமிழிலக்கியங்கள் ஒழுக்கத்தையும், அறநெறியையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை; உருவாக்கப்பட்டவை” என்று போற்றியுள்ளார் மேலை நாட்டுத் தமிழறிஞர் ஜி.யு.போப். தமிழர்கள் இந்த வரிகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

திரைகடலா? திரைக்கடலா?

இந்த ஐயத்தை நம்மிடம் எழுப்பியவர் நண்பரும் கவிஞரும் ஆகிய ஒரு புள்ளி. நாம் சொன்னோம்,

“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்று ஒளவையார் பாடியுள்ளார்.

“நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை’ என்று பாரதியார் பாடியுள்ளார்.

எது சரி? இரண்டும் சரியானவைதாம். எப்படி? சற்றே இலக்கணக் கடலுள் புகுந்து முத்தெடுத்தல் முயற்சியில் ஈடுபடுவோமா?

கடலின் அலையைத் திரை என்போம். (திரை – திரைச்சீலை, தோலில் தோன்றும் சுருக்கம் என்றும் பொருள் தரும்)

கடலின் அலை என்றாவது ஓய்ந்ததுண்டா? “அலைகள் ஓய்வதில்லை’ என்று நாமறிவோம். “அலை’ என்பதைப் பெயராக்காமல், அலை என வினையாக்கிப் பார்த்தால், அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும் கடல் எனப் பொருள் தரும் வகையில் அலைகடல் என்போம். இவ்வாறே அலைக்குப் பதில் திரை எனும் சொல்லைப் போட்டால் திரை கடல் என்றுதானே ஆகும்?

ஆதலின் “திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்னும் ஒளவை வாக்கின் அருமையை உணர முடிகிறது. அடுத்தது, திரை வேறு, கடல் வேறா? இரண்டும் ஒன்றே; வட்டக் கல் என்பதுபோல. ஆதலின் திரைக்கடல் எனின் இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். அன்றியும் திரையை உடைய கடல் என்று விரித்தால் இரண்டாம் வேற்றுமை உருபும் (ஐ) பயனும் (உடைய) உடன் தொக்க தொகையாகவும் கொள்ளலாம். ஈண்டும் ஒற்றுமிகும்.

நீலத்திரைக் கடல் என்று மகாகவி பாடியதும், “திரை கடல் ஓடி’ என்று தமிழ்ப் பாட்டி பாடியதும் இலக்கணத்தோடு இயைந்து இனிமை பயக்கின்றன.

ஆகவே இரண்டும் சரியே. இந்த விளக்கம் போதுமா? இன்னும் வேறு வேண்டுமா?

முயல்வுகள் என்பது சரியா?

முனைவர் பட்டம் பெற்ற ஒருவரின் நல்ல நூலில் இந்தச் சொல் காணப்படுகிறது. பார்த்த – படித்தவுடனே நம் மனத்தில் இது பிழை என்ற எண்ணம் உண்டாதல் இயற்கை. முயற்சிகள் என்றுதான் நாம் எழுதி வருகிறோம். இது புதிதாக இருக்கிறதே!

முயற்சி ஒரு தொழில் பெயர். பயிற்சி, தளர்ச்சி, வளர்ச்சி என்பன காண்க. மகிழ்ச்சி என்பதும் இதுபோன்ற ஒரு சொல்லே. இதன் பொருள் என்ன? மகிழ்வடைதல் என்பதுதானே? மகிழ்வடைதலில் உள்ள முதற்சொல் மகிழ்வு. அடைதல் வந்து சேர்ந்து மகிழ்வடைதல் என்றாகிறது. மகிழ்ச்சியடைதல் என்பதும், மகிழ்வடைதல் என்பதும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

கீதம்
15-02-2012, 11:06 AM
திரைக்கடல், திரைகடல் இரண்டுக்கும் விளக்கம் அறிந்து தெளிந்தேன்.

முயல்வுகள் சரியா என்பதில் இன்னும் தெளிவில்லை. அடுத்தப் பதிவில் தெளிவுபடுத்தப்படுமோ? காத்திருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
15-02-2012, 01:37 PM
தங்கள் கருத்துக்கு நன்றி கீதம். முயல்வேன் என்று நாம் கூறுவதுண்டு அல்லவா? முயல்வுகள் என்பது சரியே. கவிக்கோவும் அதைத்தான் கூறுகிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
மொழிப்பயிற்சி - 75: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!





கவிக்கோ ஞானச்செல்வன்

இயல்பாகப் பேசுவதே இலக்கணம்

மகிழ்ச்சி – மகிழ்வு, தளர்ச்சி – தளர்வு, அயர்ச்சி – அயர்வு. இச்சொற்களைப் போலவே முயற்சி – முயல்வு எனக் கொண்டால், “எல்லா முயல்வுகளும்’ என்னும் எழுத்தில் பிழையில்லை என அறியலாம். முயற்சிகள் என்று மட்டுமே எழுதியும் பேசியும் கேட்டும் பழக்கப்பட்ட நமக்கு முயல்வுகள் புதிதாகத் தோன்றுவது இயல்பே.

அடடா! என்னே தமிழ்!

விடம் (விஷம்) என்பதும், நச்சு என்பதும் ஒன்றே. குழந்தையாய் இருந்த கண்ணனைக் கொல்ல பூதகி எனும் அரக்கி முலைப்பால் கொடுத்தாள், கண்ணனோ அவள் உயிரையே உறிஞ்சி எடுத்துவிட்டான். இந்நிகழ்வை ஆழ்வார்ப் பாசுரம் “பேய்ச்சி விட நச்சு முலை’ எனும் தொடரால் குறிக்கிறது. விடமுலை எனினும் நச்சு முலை எனினும் ஒன்றே! பின் ஏன் இரண்டு சொற்களும் வந்தன? விட என்பதற்கு விடம் எனக் கொள்ளாது பேய்ச்சி (உயிரை)விட – நச்சு முலை – என்று பொருள் காண வேண்டும்.

“குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்’ என்று தொடங்கும் பாடலை நாமறிவோம்.

“வண்டார் இருங்குஞ்சி மாலை தன் வார் குழல் மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால்’
என்பது சிலப்பதிகாரம். குஞ்சி (குடுமி) ஆடவர்க்குரியது. குழல் (கூந்தல்) மகளிர்க்குரியது.

சிலம்பு விற்க மதுரைக்குப் புறப்பட்ட கோவலனைக் கண்ணகி தழுவினாள். கோவலன் தன் குடுமியில் (குஞ்சி) சூட்டியிருந்த மாலையினை எடுத்துக் கண்ணகியின் கூந்தலில் (குழல்) சூட்டிப் பிரியா விடைபெற்றான். மிக விளக்கமாக எழுத வேண்டிய இடம் இது. இலக்கியக் கட்டுரை ஆகிவிடும் ஆதலின், வேண்டிய செய்தியை மட்டும் காண்போம்.

குழந்தைக் கண்ணனைப் பாடும் ஆழ்வார், “மை வண்ண நறுங் குஞ்சி குழல் பின் தாழ’ என்று பாடியுள்ளார். இங்கே குஞ்சி, குழல் இரண்டு சொற்களும் ஏன் வந்தன? எப்படி இது பொருத்தமாகும்? இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பதாயினும் சிறிய பொருள் வேறுபாடுண்டு.

குஞ்சி – முன் குடுமி, குழல் – பின் தொங்கும் கூந்தல்.

குழந்தைக் கண்ணனுக்கு முன் குடுமியும் உண்டு. பின்னால் தொங்கும் கூந்தலும் உண்டு என்று பொருள் தரும் வண்ணம் மேற்கண்ட பாடல் வரி சிறப்படைகிறது.

முன்னாளில் ஆண்களும் குடுமி வைத்திருந்தனர் என்பதைச் “சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்னும் பழமொழி கொண்டு அறியலாம்.

தமிழின் சீர்மை அறிந்து மகிழ்ந்தீர்களா? நம் பழந்தமிழ்ச் சொற்கள் பல வடமொழியில் இணைந்துள்ளன. (வடசொல் தமிழில் கலந்தது போலவே) மதங்கம் என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே மிருதங்கம். அவ்வாறே மெது, மென்மை மெத்து மெத்தென்று என்பன எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள். தமிழின் மெது என்பதே “மிருது’ எனத் திரிந்தது. மனம் என்னும் தூய தமிழ்ச் சொல்லிலிருந்தே மனஸ், மனசு, மனது என்பன தோன்றின. துறக்கம் என்னும் தூய தமிழ்ச்சொல்லே சொர்க்கம் என்றாயிற்று என மொழி நூல் அறிஞர் உரைப்பர்.

புனைப் பெயரா? புனை பெயரா?

ஒருவர் தம் இயற்பெயரில் அல்லாமல் தாமாகப் புனைந்து கொண்ட பெயரால் எழுதி வருகிறார். அப்பெயரில் அவர் நேற்றும் (முன்பும்) எழுதினார். இன்றும் (இப்போதும்) எழுதுகிறார். நாளையும் (பின்னரும்) எழுதுவார். புனைபெயர் எனில் புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என முக்காலமும் கொள்ளத்தக்கதாகும். காலம் கரந்த (மறைந்துள்ள) பெயரெச்சம், அஃதாவது மூன்று காலங்களுக்கும் பொருந்தக்கூடிய பெயர் எஞ்சிய வினை. வினைத் தொகை எனப்படும். புனை பெயரை வினைத் தொகையாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல் பொருத்தமுடையது.

புனைப் பெயர் எனில், புனைந்தது ஆகிய பெயர் எனக் கொண்டு, புனைந்தது என்னும் வினையைப் புனைதல் என்னும் தொழில் பெயர் ஆக்கினால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். ஆகிய எனும் பண்பு உருபு பெற்று வருவதால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். புனைதல், பெயர் இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என வலிந்து கொண்டு இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். ஆனால் இவ்விளக்கத்தைவிட முன்னர்ச் சொன்னதே மிகப் பொருந்தி வருவதால் புனை பெயர் என்பதே சரியானது; இப்படித்தான் அறிஞர் பலர் எழுதியுள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.

என்ன? தமிழில் ஒற்றிலக்கணம் (வல்லினம் மிகுதல்) மிகவும் இடர் செய்கிறேதோ? அப்படியொன்றுமில்லை. இயல்பாகப் பேசுவதே இலக்கணம் ஆக்கப்பட்டுள்ளது. புனை பெயர் என்று சொல்லிப் பாருங்கள். புனைப் பெயர் என்றும் சொல்லிப் பாருங்கள். எது இயல்பாய் உள்ளது? புனை பெயரன்றோ? வரச் சொன்னார், அந்தப் பையன் இயல்பாகும். இதனை வர சொன்னார், அந்த பையன் எனில் விட்டிசைப்பதை உணரலாம்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

கீதம்
15-02-2012, 08:13 PM
முயல்வுகள் விளக்கத்துக்கு நன்றி பாரதி அவர்களே. புனை பெயர் - காரணம் புரிந்து தெளிந்தேன். தொடரும் பதிவுகளுக்கு மிகவும் நன்றி.

Hega
15-02-2012, 08:22 PM
முழுமையாக படிக்காமல் கருத்திடல் சரியாகாது என்றாலும் உள்நுழைந்த பின் கருத்திடாம்ல் செல்ல முடியாத படி தமிழும் அதன் விளக்கங்களும் மலைக்க வைக்கின்றன.

பிழையின்றி தமிழ் பேச நானும் முயற்சிக்கிறேன்

நன்றி

பாரதி
18-02-2012, 08:48 AM
ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி கீதம், ஹேகா.

-------------------------------------------------------------------------------------------------------------------------
மொழிப்பயிற்சி - 76: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!




கவிக்கோ ஞானச்செல்வன்

ஆனந்தனா? ஆநந்தனா?

“விஷய சூசிகை’ யும் சதுரகராதியும்

பொருளடக்கம், உள்ளடக்கம், உள்ளுறை, உள்ளேயிருப்பவை எனப் பலவாறாக இன்று நாம் புத்தகங்களில் குறிப்பிடுகிறோமே, அதுதான் விஷய சூசிகை. விஷயம் – பொருள்; சூசிகை – குறிப்பு. (பொருள் குறிப்பு – பொருளடக்கம்). சூசகமாக என்னும் சொல் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாகச் சொல்லுதல் என்பதே இதன் பொருள்.

இப்போது எதற்காக இந்த விஷய சூசிகை? சதுரகராதிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தபோது முதலில் விஷயசூசிகை கண்ணிற்பட்டது. வீரமாமுனிவரால் தமிழுக்கு அளிக்கப்பட்ட கொடை இந்நூல். “அ’ வை (அகரத்தை) முதலாக உடையவற்றின் பொருள் குறிப்பதே அகராதி. (அகரம் முதலாக – அகரம்+ஆதி) ஆதி, அந்தம் எனும் வட சொற்களுக்கு முதல், முடிவு என்பன தமிழ்ச் சொற்கள். ஆதலின் அகராதியை இந்நாளில் அகரமுதலி என்று குறித்தல் காண்கிறோம். முன்னர் கண்ட விஷயம், சூசிகை என்பனவும் வட சொற்களே.
தமிழில் நிகண்டு எனும் நூல் உண்டு. சொற்களின் பொருளறிய உதவும் நூல் இது. நிகண்டு கற்றுச் செய்யுள் ஆராய்ச்சி உடையவரே நன்னூல் இலக்கணம் கற்கத் தகுதியுடையவர் ஆவார். ஒரு பொருளமைந்த சொற்களை அடுக்கிச் செய்யுள் வடிவத்தில் தந்திருப்பதே நிகண்டு. பதினோராம் நிகண்டு வரை இருப்பதாக அறிந்துள்ளோம். பழைய நாளில் அகராதிகள் இல்லை. (இக்காலத்தில் அதிகம் பேசுபவரை அகராதி என ஏசுகின்றனர்)

வீரமாமுனிவர் தாம் முதலில் தமிழில் அகராதி தந்தவர். அதிலும் சிறப்பாக சதுர் அகராதி தந்தவர் அவர். (சதுர்=நான்கு). பெயரகராதி, பொருளகராதி, தொடையகராதி, தொகையகராதி என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டதனால் சதுரகராதி எனப் பெயரிட்டார். (சுதர்வேதம் – நான்மறை)


பெயரகராதியில் சில எடுத்துக் காட்டுகள்:

அகத்தியன் – கும்பமுனி, குறுமுனி, முத்தமிழுடையோன்
அழுக்கு- மலம், மாசு


பொருளகராதியில் சில எடுத்துக்காட்டுகள்:

ஆக்கம் – இலக்குமி, இலாபம், செல்வம், பொன், எழுச்சி, படை வகுப்பு.
உருவிலி – மன்மதன்
கள்ளல் – களவு


தொகையகராதியில் சில எடுத்துக்காட்டுகள்:

அங்கம் – மலை,யாறு, நாடு, ஊர், மாலை, பரி, கரி, முரசு, கொடி, செங்கோல் இவை அரசர்க்குரிய தசாங்கம் (தசாங்கம் – பத்து அங்கங்கள்)
சதுரங்கம் – தேர், கரி, பரி, காலாள் (கரி – யானை, பரி – குதிரை)
(ரத, கஜ, துரக, பதாதி – வடமொழித் தொடர்)
பஞ்சாங்கம் – திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.
(சோதிடத்தில் பயன்படும் ஐந்து அங்கங்களே – பஞ்சாங்கம்)
அங்கம் – உறுப்பு, பிரிவு.


தொடையகராதியில் சில எடுத்துக் காட்டுகள்:
(இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது எதுகைத் தொடை)
அகடம் – பொல்லாங்கு
விகடம் – வேறுபாடு
சகடம் – வண்டி
(விகடம் இக்காலத்தில் நகைச்சுவை எனும் பொருளில் பயன்பாட்டில் உள்ளது.)
இகத்தல் – கடத்தல், போதல்
முகத்தல் – மொள்ளல்
உகத்தல் – உயர்த்தல்

(இந்தத் தொடையகராதி படிப்பதற்குச் சுவையாக ஆர்வம் எழப்பக் கூடியது. சான்றாக எடுத்துக்காட்டுகளைக் காண்போம்)

அச்சு – அடையாளம், உயிர், பண்பு

கிச்சு – செருப்பு (நாம் கிச்சுக்கிச்சு என்று சிரிப்பூட்டுதலைச் சொல்கிறோம்)

குச்சு – குற்றி (குச்சி). சிறுகுடில் (குடிசை), பாவாற்றி (தறியில்)

தச்சு – தச்சுத் தொழில்

நச்சு – ஆசை, விடம், நச்சென்னேவல் (ஏவல்)

பிச்சு – பித்து

மச்சு – குற்றம், மேனிலை (மேல்வீட்டை மச்சு என்போம்)

ஊராண்மை – மிக்கச் செயல்

ஏராண்மை – உழவு

பேராண்மை – அரிய செயல்

பாராயணம் – நியமமாகப் படித்தல்

நாராயணம் – அரசமரம், ஒருபநிடதம்,மீன்.

அடைப்புக்குறிக்குள் இருப்பவை கட்டுரையாசிரியர் எழுதியவை.

இவ்வகராதியில் சில மாறான பொருள் தருவனவும் உண்டு. ஆகாரம் எனும் சொல்லுக்கு உறைவிடம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆகாரம் – உணவு என்பதே நாம் கொண்டுள்ள பொருள். சந்தோஷம் – மகிழ்ச்சி; ஆநந்தம் – பேரின்பம் என்று சுட்டப்பட்டுள்ளன. இரண்டு வட சொற்களுக்குத் நல்ல தமிழ் தந்துள்ளார். ஆநந்தன் – அருகன், சிவன், கடவுள் என்று எழுதியுள்ளார். (கடவுள் பொதுப்பெயர், அருகன் சமணக் கடவுள், சிவன் -சைவக் கடவுள்) ஆனந்தன் என எழுதிடாமல் ஆநந்தன் எனத் தந்நகரம் இடுதல் சரியென இதன்படி அறியலாம்.

தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

M.Jagadeesan
18-02-2012, 11:48 AM
முருகக் கடவுள் உறையும் தலத்தைப் " பழனி "என்று குறிப்பிடுவர் சிலர். " பழநி " ( பழம் நீ ) என்பதே சரி.

பாரதி
20-02-2012, 02:49 PM
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜெகதீசன் ஐயா.

-------------------------------------------------------------------------------------------------------------------------
மொழிப்பயிற்சி - 77: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!




கவிக்கோ ஞானச்செல்வன்

மயலும் மையலும்!

துட்டம் (துஷ்டம்) – தீக்குணம். நட்டார் – உறவினர் என்று தொகையகராதியில் காணப்படுகின்றன. தொகுத்தபோது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். நட்சத்திரம் – அசுவினி, பரணி தொடங்கி இருபத்தேழும் எழுதப்பட்டுள்ளன. தொகையகராதி என்பதால் இப்படிக் குறிப்பிட்டார் எனக் கொள்ளலாம். நட்சத்திரம் – விண்மீன் என்று இப்போது தமிழில் சொல்வோம் நாம்.

தமிழ், வடமொழி என்ற வேறுபாடின்றி இரண்டு நூற்றாண்டின் முன்னிருந்த நிலையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இப்போதும் தமிழார்வலர்களும், ஏன் அறிஞர்களும் கூடப் படித்தறிய வேண்டிய நூல் என்பதும், இத்தகைய ஓர் அரிய செயலை ஓர் ஐரோப்பியர் செய்தார், நாம் யாரும் இத்தகு செயலாற்றவில்லை என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் மற்றொருவர் பற்றியும் அவரின் சீரிய கருத்தொன்று பற்றியும் அறிய வேண்டும். தமிழில் உரைநடையில் முதல் இலக்கண நூல் செய்தவர் ஜி.யு.போப் ஆவார். இவரே திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கில மொழியில் பெயர்த்தவரும் ஆவார். திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தவருள் முதன்மையானவர். திருவாசகம் படித்து மனம் உருகி, உருகி நெகிழ்ந்தவர். தம் கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதச் சொன்னவர்.

“தமிழ்நாட்டு இளைஞர்கள் மிகவும் ஊக்கத்துடனும் திறமையுடனும் ஆங்கிலக் கல்வி பயில்கின்றனர். ஆனால் அவர்கள், வியக்கத்தக்கதும் இணையற்றதுமான தங்கள் தாய்மொழியைப் புறக்கணிப்பதை நோக்கி வருந்துகிறேன்”

இது ஜி.யு.போப் அன்று சொல்லி வருந்திய செய்தி. இன்றைக்கும் பொருந்தி நிற்கிறது. இதைப் படிக்கும் இளைஞர்கள் இனியாவது தம் தாய்மொழியில் நாட்டம் கொள்வாராக!

மயல் – மையல்
ஓர் ஊடகத்தில் மையல் கொண்டாள் என்பது போல் சொல்லும்போது, மையல் எனும் சொல் பிழையானது, அதனை மயல் என்றே சொல்ல வேண்டும் என்றுரைத்தார்கள்.

தமிழில் “போலி’ என்றோர் இலக்கணம் உள்ளது. இஃது எழுத்துப் போலியைக் குறிப்பதாகும். போலவே இருப்பது போலி. இப்போதும், போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் பார்க்கிறோம். விற்பனைப் பொருட்களும் போலிகள் தரம் குறைந்து இருக்கலாம்.

இலக்கணத்துள் அப்படியில்லை, இப்போலி, முதற்போலி, இடைப்போலி, கடைப் போலி என்று மூவகைப்படும். முதற்போலியில் அகரத்திற்கு ஐகாரம், ஐகாரத்திற்கு அகரம் போலியாக வரும். இதற்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்படும் சொல் மையல் – மயல் என்பதாகும். போலியாக வரும் எழுத்தால் பொருள் மாறுபடக் கூடாது.

இரண்டிற்கும் ஒரே பொருள். மயக்கம், மிக்க ஈடுபாடு, தன்னிலை மறத்தல் என்றெல்லாம் அகராதிகளில் பொருள் காணலாம். மயல் என்பதற்கு மையல் என்றும், மையல் என்பதற்கு மயல் என்றும் பொருள் எழுதியுள்ளார்கள். ஆதலின் மையல் என்னும் சொல் பிழையானது அன்று.

இடைப்போலிக்கு எடுத்துக் காட்டு: இடையன் – இடயன். பழைய – பழய எனக் கண்டு கொள்க. ஈற்றுப் போலி சற்று வேறுபட்டது. பந்தல் எனும் சொல்லில் இறுதியில் உள்ள “ல் ‘லுக்குப் பதிலாக “அர்’ சேர்த்து பந்தர் என்றெழுதுவது இது. வண்டு – வண்டர் என்பதும் உண்டு.

“நீலவிதானத்து நித்திலப் பூம் பந்தர்க்கீழ்’ (சிலம்பு) வழக்கம்போல், “இடர்பாடு ஏற்படும்’ என்று செய்தி படிக்கிறார்கள். இடர்ப்பாடு என்பதே சரியானது. இடர் (துன்பம்) ஆகிய பாடு (படுதல்) ஆகத் துன்பப்படுதல் என்பதோ இடர்ப்பாடு. இதனை இடர் பாடு என்றால் இடர் பற்றிப் பாடு என்று ஏவலாகின்றது. மாநாடைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் என்று செய்தி படித்தார்கள். மாநாட்டைத் தொடங்கி என்று இயல்பாகவே வரும் இலக்கணம் (ஒற்று இரட்டித்தல்) எப்படித்தான் தவறுகிறதோ!

ஆற்றுப்படையும் ஆறுபடை வீடுகளும்

பரிசில் (பொருள்) பெற்ற ஒருவர் மற்றவர்க்கு, “இன்னாரிட்டு செல்’ என்று வழிகாட்டுவதற்கு ஆற்றுப்படை எனப் பெயர்.

ஆறு – வழி, படை – படுத்துதல்

நக்கீரர், முருகப் பெருமானின் அருமை, பெருமைகளைச் சொல்லி அவன்பால் சென்றால் எத்தகைய நன்மைகளை அடையலாம் என்று வழிப்படுத்திய பாட்டே, பத்துப்பாட்டுள் முதலாவதாக இருக்கும் திருமுருகாற்றுப் படை. திருமுருகனிடம் (செல்லுமாறு) ஆற்றுப்படுத்துதல் என்பது இதன் பொருள். இந்த நெடிய பாட்டு, “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும், பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு’ எனத் தொடங்கி, “பழமுதிர் சோலை மலை கிழவோனே’ என்று முடிகிறது.


தமிழ் வளரும்....

நன்றி : தினமணிக்கதிர்

பாரதி
23-02-2012, 08:56 AM
மொழிப்பயிற்சி - 78: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



கவிக்கோ ஞானச்செல்வன்


திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தேராடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு தலங்கள் பற்றிய வருணனைகள் அடக்கம். இந்த ஆறும் படைவீடுகள் அல்ல. “ஆறுபடை வீடு, ஆறுபடைவீடு’ என்று பேசுவதெல்லாம் பொருளறியாது மக்கள் வழக்கில் வந்து கலந்தனவே.

படைவீடு என்றால் பாசறை. மன்னர்கள் பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுங்கால் இடையில் இளைப்பாற அமைக்கப்படுவதே படை வீடு அல்லது பாசறை. இப்போதைய வழக்குத் தமிழில் “முகாம்’ என்றும் சொல்லலாம். அந்த வகையில், முருகப் பெருமான் சூரனை அழித்திடப் போருக்குப் புறப்பட்டபோது, திருச்செந்தூரில் படை வீடு அமைத்ததாகக் கந்தபுராணம் சொல்லுகிறது. மற்ற தலங்களுக்கும் படை வீட்டுக்கும் தொடர்பு இல்லை.

ஆற்றுப்படை என்னும் சொல்லின் பொருளறியாது, படை என்பதைப் படை வீடாக்கி ஆற்றுதலை “ஆறு’ என எண்ணாக்கி ஆறுபடை வீடுகள் என்று சொல்லி வருகிறோம். குன்றுதோராடல் என்று அவற்றுள் ஒன்று. எல்லாக் குன்றுகளிலும் (மலைகளிலும்) முருகன் எழுந்தருள் ஆடல் புரிவதே அதன் பொருள். திருத்தணிகை என்பது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளுவதேயாம். அவ்வாறே திருவேரகம், சாமிமலையைக் குறிப்பதாகச் சொல்லுவதும் நம் விருப்பினால் ஆனதேயாம்.

சாமி மலைக் கோவில் கட்டுமலை. அஃதாவது இயற்கையாய் அமைந்த மலையன்று. மனிதர்கள் கற்களை அடுக்கிக் கட்டிய மலை. பல்லவர் காலத்திலிருந்தே (நான்காம் நூற்றாண்டின் பின்) கற்கோவில்கள் தமிழகத்தில் எழுப்பப்பட்டன. சங்க நூல்களில் மிகவும் பழமை வாய்ந்தது திருமுருகாற்றுப்படை என்பதை அதன் நடை கொண்டறியலாம். ஆதலின் அப்போது (முதல் நூற்றாண்டில்) கட்டுமலை இருந்திருக்குமா என்பது ஐயமே.

ஆறுபடை வீடு என்னும் “வழக்கு’ திருமுருகாற்றுப்படையைக் கொண்டே சொல்லப்பட்டு வருகிறது. ஆற்றுப் படைக்கும் ஆறுபடை வீட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

மற்றொரு செய்தி – கமுக்கமாகச் (இரகசியமாக) செயற்பட்டு வஞ்சகம் செய்வதை ஐந்தாம்படை வேலை செய்துவிட்டான் என்று சொல்லி வருகிறோம். எப்படி வந்தது இது? மன்னர்களின் படை நான்கு. அவை: தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை. (இந்நாளில் வான்படை, கடற்படை, தரைப்படை என மூன்றே) மேற்சொன்ன நான்கு படைகளும் நேரடியாக எதிர்ப்பட்டுத் தாக்கும். இப்படி நேர்முகமாகத் தாக்காமல் மறைமுகமாக வேலை செய்பவர்கள் (அரசியலில்) ஐந்தாம் படை என இழிவாகக் கருதப்படுகிறார்கள்.

நூத்தி முப்பத்து மூனு

நூற்று முப்பத்து மூன்று என்று சரியாகச் சொல்ல வேண்டியதை இப்படி “நூத்தி முப்பத்தி மூனு’ என்று பேசுகிறோம். நூற்று – முப்பத்து – மூன்று என இலக்கணமாகச் சொல்லாது போயினும் நூத்தி முப்பத்து என்று “உ’ வை “இ’ ஆக்காமல் முப்பத்து மூணு என்றாவது சொல்லலாமே.

உள்ளம் தோய்ந்த உவகையுடன் நன்றி

இந்தத் தொடரை இன்னும் பல கிழமைகள் (வாரங்கள்) தொடர்ந்து எழுதிடலாம். ஆயினும் எதற்குமோர் எல்லை வேண்டுமன்றோ? கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், “ஊடகங்களில் தமிழ்ச் சிதைவுகள்’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையைக் கேட்டுவந்த நம் தினமணி ஆசிரியர், அரங்கில் உரைத்த கருத்துகளை விரிவாகத் தினமணியில் தொடர்ந்து எழுதுமாறு வேண்டினார்கள்.

“கரும்புத் தின்னக் கூலியா?’ நமக்குப் பெருமகிழ்ச்சியளித்தது இவ்வாய்ப்பு.

“அறிவோம் அருந்தமிழ்’ என்று வினா – விடை வடிவில் இலக்கியத் திங்கள் ஏடு ஒன்றிலும் தொடர் (2006) எழுதியுள்ளோம். பொதிகைத் தொலைக்காட்சியில் “தவறின்றித் தமிழ் பேசுவோம்’ என்னும் தலைப்பில் (புதன்தோறும்) உரையாற்றினோம்.

ஆதலின் நமக்கு மிக உவப்பான ஒன்றை – காலமெல்லாம் பரப்புரை செய்கின்ற கருத்தை எழுதிடப் பணித்த ஆசிரியர்க்கு மனம் தோய்ந்த மகிழ்ச்சியான நன்றியுரைக்கிறோம். இத்தொடர் தொடங்கிய போதிருந்தே பல்வேறு ஊர்களிலிருந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அறிஞர்கள், தமிழன்பர்கள், ஐயம் வினவித் தெளிவு பெற்றவர் அனைவர்க்கும் நன்றி.

....... நிறைவு பெற்றது.......

நன்றி : தினமணிக்கதிர்

Hega
23-02-2012, 09:51 AM
அறிவோம் அருந்தமிழ் என அருமையான தமிழ் குறித்த ஆய்வுப்பதிவொன்றை தளராது ஆரம்ப முதல் முடிவுவரை பகிர்ந்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.


நன்றி நன்றி

leomohan
24-02-2012, 11:23 AM
பயனுள்ள தொடர் அளித்த பாரதிக்கு நன்றி.

M.Jagadeesan
24-02-2012, 04:11 PM
கவிக்கோ ஞானச்செல்வன் அளித்த கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. நன்றி பாரதி!

பாரதி
27-02-2012, 04:38 AM
பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி ஹேகா, மோகன், ஜெகதீசன் ஐயா.

தனிப்பட்ட முறையில் இத்தொடர் நிறைவு பெறுவது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. கவிக்கோ அவர்கள் (சிந்துபாத் கதை போன்று) எப்போதும் முடிவுறா தமிழ் கட்டுரைகளை வழங்கினால் என்னை விட மகிழ்ச்சி அடைபவர்கள் இருக்க முடியாது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-03-2012, 04:24 PM
மிகவும் பயனுள்ள திரி...அனைவரும் படிக்கவேண்டியது மிகவும் அவசியம். பாரதி அவர்களுக்கு நன்றி.:)

இராஜேஸ்வரன்
12-03-2012, 06:11 AM
நம் மன்றத்தில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களின் மொழிப்பயிற்சி கட்டுரைகளை (78 பாகங்கள்) அளித்த நண்பர் பாரதி அவர்களுக்கு மிகுந்த நன்றி. இவைகளை அக்கறையோடு படித்து மனதில் ஏற்றிக்கொள்ள மிகுந்த நாட்கள் ஆகும் என்றாலும் எனக்கு தேவையான வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய விபரங்களை மட்டும் தனியே நகலெடுத்து வைத்துக்கொண்டேன்.

அற்புதமான முயற்சி. நண்பருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
14-08-2012, 12:57 PM
ஒரு பக்கம் வாசித்தேன். இன்னும் வாசிப்பேன். பயனுள்ள இந்த பகிர்தலுக்கு மிக்க நன்றி பாரதி..!

நாஞ்சில் த.க.ஜெய்
14-08-2012, 06:22 PM
தமிழின் பெருமையினை கூறும் இந்த மொழிப்பயிற்சியினை தொகுத்து வழங்கிய தோழர் பாரதி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டு....

A Thainis
14-08-2012, 07:51 PM
மொழிப்பயிற்சி பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம் பகுதிகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இத்தனை பகுதிகளையும் எங்களோடு பகிர்ந்து கொண்ட பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி.

பாரதி
09-09-2012, 04:42 PM
கருத்தளித்து சிறப்பித்த திரு. சுந்தரராஜ் தயாளன், திரு. இராஜேஸ்வரன், திரு.கலைவேந்தன், திரு. ஜெய், திரு. தைனிஸ் ஆகியோருக்கு நன்றி.

மாதவர்
22-11-2014, 05:26 PM
இந்த பதிவு மிகவும் அருமை

மாதவர்
22-11-2014, 05:27 PM
கவிக்கோ அய்யா அவர்களிடம் 1979 முதல் 1981 வரை இரண்டு ஆண்டுகள் திருவாரூர் பள்ளியில்
தமிழ் படித்தவன் நான்
இந்த பதிவை பார்க்கும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி!