PDA

View Full Version : "கள்" விகுதி



M.Jagadeesan
09-04-2011, 04:13 AM
"கள்"என்னும் விகுதி ஒரு காலத்தில் அஃறிணைக்கு உரியதாக இருந்தது.ஆனால் தற்போது உயர்திணையிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.யானைகள், குதிரைகள் என்ற சொற்களில் வரும் "கள்" விகுதி பன்மை உணர்த்தி நின்றது. ஆனால் இன்று உயர்திணையைக் குறிக்க வந்த "மக்கள்" என்ற சொல் "கள்" விகுதி பெற்று வழங்குகிறது.

ஒரு காலத்தில் "அவர்" என்ற சொல் பன்மை உணர்த்தி நின்றது.இக்காலத்தில் ஒருவரை உயர்த்திச் சொல்லுமிடத்து "அவர்" என்ற சொல்லை ஒருமையில் பயன்படுத்துகிறோம்."அர்" மற்றும் "ஆர்" என்ற விகுதிகள் உயர்திணை பன்மையை உணர்த்திய நிலைமாறி இன்று உயர்திணை ஒருமையை உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

"கலைஞர் அவர்கள் வந்தார்கள்" என்ற வாக்கியத்தில் மூன்று தவறுகள் உள்ளன.

"கலைஞர்" என்ற பன்மையை உணர்த்தி நின்ற சொல்லானது தற்போது ஒருமையில் ஒரு தனி மனிதரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. "கலைஞன்" என்பது ஒருமை.

"அவர்" மற்றும் "வந்தார்" ஆகிய சொற்கள் முன்பு பன்மையை உணர்த்தி நின்றன. ஆனால் தற்போது ஒரு தனிமனிதரை சிறப்பித்துக் கூறும்போது இச்சொற்கள் ஒருமையில் பயன்படுத்தப்படுகின்றன.

"கள்" விகுதி கொண்டு "அவர்கள்","வந்தார்கள்" என்று பன்மைக்குப் பன்மை சேர்த்தது மூன்றாம் தவறு.

புலவர்களின் பெயருக்குப் பின்னால், "அர்" மற்றும் "ஆர்" விகுதி சேர்த்து அவர்களை உயர்வு செய்தனர்.ஒளவையார்,கம்பர்,வள்ளுவர், நக்கீரர் போன்ற பெயர்கள் இதற்குச் சான்று.ஆனால் கம்பன்,வள்ளுவன், நக்கீரன்,ஒளவை என்பதே சரி.

பாரதியும்
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு."

"கம்பன் பிறந்த தமிழ்நாடு."

என்று பாடியிருப்பது காண்க.

ஆனால் அரசர்களைக் குறிப்பிடும்போது "அன்" விகுதி சேர்த்து குறிப்பிட்டனர்.

ராஜராஜசோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், கரிகாலன் போன்ற பெயர்கள் இதற்குச் சான்று.

குழந்தைகளை,"மக்கள்" என்ற சொல்லால் குறித்தனர். திருவள்ளுவரும்," மக்கட்பேறு" என்ற சொல்லை இப்பொருளிலேயே கையாண்டுள்ளார்.ஆனால் தற்போது,"மக்கள்" என்ற சொல் "பொது ஜனங்கள்" என்ற பொருளைத் தாங்கிநிற்கிறது.

ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் 26*ம் பாடல்

மாலே! மணிவண்ணா!மார்கழி நீராடுவான்
மேலையார் "செய்வனகள்" வேண்டுவன கேட்டியேல்;

இப்பாடலில், "செய்வனகள்" என்ற ஒரு புதிய சொல்லாட்சியை ஆண்டாள் புகுத்துகிறார்."செய்வன" என்ற சொல்லுக்குக்,"கள்" விகுதிசேர்த்து பன்மைக்கு பன்மை
சேர்க்கிறார்.புலவருலகமும் அதை ஏற்றுக்கொண்டது.

இளசு
10-04-2011, 12:07 AM
நன்று ஜெகதீசன் ( அவர்களே..)..


தேவையான பதிவு. நன்றி(கள்) பல!


வாழ்த்துகள், தலைவர் அவர்கள் என உயர்வு நவிற்சிப் பன்மையை
பழக்கத்தில் கொண்டு வந்துவிட்டோம்...

மரியாதை அளிப்பதென்று தொடங்கிவிட்டால் நம்மை விஞ்ச யாருண்டு?


காதலிக்க நேரமில்லை படத்தில் ஓர் இளைஞனைப் பார்த்து முதியவர் பாலையா சொல்லும் வசனம்:

''அசோகரு உங்க மகருங்களா?'':)

M.Jagadeesan
10-04-2011, 02:28 AM
தங்கள் பின்னூட்டம் சிந்திக்கவைத்தது இளசு அவர்களே!