PDA

View Full Version : சுவாமி பரமானந்தா (கிடாவெட்டு-போட்டிக்கதை)



M.Jagadeesan
06-04-2011, 02:01 PM
சுவாமி பரமானந்தா கண்களைமூடிக்கொண்டுநிஷ்டையில்ஆழ்ந்திருந்தார்.அவருடைய ஆசிரமத்தை நோக்கி ஒரு பெண் ஓடிவந்தாள்.அவளுடைய கையில் ஒரு குழந்தை இருந்தது.ஆசிரமத்தின் உள்ளே நுழைந்து பரமானந்தாவின் காலில் விழுந்தாள்.

பரமானந்தா அவளை நோக்கி,"யாரம்மா நீ? என்னவேண்டும் உனக்கு?"என்று கேட்டார்.

"சாமி! எம்பேரு கருப்பாயி! எம்புள்ளைக்கு உடம்பு சரியில்ல.பத்து நாளா கண்ணு முழிக்கல. டாக்டருங்க கைய விரிச்சுட்டாங்க! நீங்கதான் சாமி எங்கொழந்தையைக் காப்பாத்தணும்!"என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதாள்.

சுவாமி பரமானந்தா குழந்தையை உற்றுப் பார்த்தார்.பின்னர் கருப்பாயியைப் பார்த்து

"ஆண்குழந்தை; தலைச்சனா?" என்று கேட்டார்.

"ஆமாம் சாமி!"

"குழந்தையின் பிறந்தநாள், நேரம் சொல்லு"

கருப்பாயி சொன்னாள்.

சிறிதுநேரம் மெளனமாக இருந்தார் பரமானந்தா. பின்னர் கருப்பாயியைப் பார்த்து,

"அம்மா! உன் குழந்தைக்கு ஒரு கண்டம் உள்ளது.வருகிற அமாவாசையன்று உன் குழந்தை இறந்துவிடுவான்"

இதைக்கேட்ட கருப்பாயியின் உடல் பயத்தால் நடுங்கியது;கண்களில் இருந்து ஆறாகக்
கண்ணீர் பெருகியது. நா குழறியது.

"சாமி! இதுக்குப் பரிகாரம் ஏதாவது இருக்கா?"

"இருக்கு;ஆனா கொஞ்சம் செலவாகும்; பரவாயில்லையா?"

"சாமி! எம்புட்டு செலவானாலும் சரி. எம்புள்ள எனக்குக் கிடைச்சா போதும்!"

"காளிக்குக் கிடாவெட்டிப் படையல் போடணும்: 25000 ரூபா செலவாகும். நாளை மறுநாள் பெளர்ணமி.அன்னிக்கி ராத்திரி 12 மணிக்குப் பூஜை நடத்தணும்"

"சரி சாமி; நாளைக்கே பணத்தைக் கொண்டு வாரேன்!"

மறுநாள் கருப்பாயி ரூ.25000ஐ சுவாமி பரமானந்தாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

கருப்பாயி சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மாட்டுக்காரவேலன் பரமானந்தாவின்
ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.மாட்டுப்பண்ணை வைத்துப் பால்வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தான்.

"சாமி! கும்பிடறேனுங்க!"

"வா! வேலா! என்ன இவ்வளவு தூரம்?"

"சாமி! ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கியிருக்கேன். நீங்க வந்து பூஜை போட்டிங்கன்னா வீடு கட்ட ஆரம்பிச்சிடுவேன்"

"வேலா! பூஜை போடுவதற்கு முன்னால் நான் நிலத்தைப் பார்க்கணுமே!"

" நாளைக்கு வந்தீங்கன்னா அழச்சிட்டுப் போறேன்"

"அப்படியே ஆகட்டும்"

மறுநாள் வேலன், சுவாமி பரமானந்தாவைத் தான் வாங்கியிருக்கும் நிலத்தைப் பார்வையிட அழைத்துச்சென்றான்.

நிலத்தை சுவாமி பரமானந்தா சுற்றி சுற்றிப் பார்த்தார்.பின்னர் அங்கிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் தவம் செய்தார். பின்னர் கண்களைத் திறந்து வேலனைப் பார்த்து,

"வேலா! இது மயான பூமி.ஒரு காலத்தில் இவ்விடத்தில் பிணங்களைப் புதைத்துக் கொண்டிருந்தனர். ஆகையால் ஆவிகளின் நடமாட்டம் இங்குள்ளது.அந்த ஆவிகளைச்
சாந்தப்படுத்திய பிறகுதான் வீடு கட்டவேண்டும்".

'சாமி அதற்கு என்ன செய்யவேண்டும்?"

சுவாமி பரமானந்தா வேலனின் காதருகில் மெதுவாக," நரபலி கொடுக்கவேண்டும் " என்றார்.

" நரபலி " என்ற வார்த்தையைக் கேட்டதுமே வேலன் வெலவெலத்துப் போனான். வேண்டாம் சாமி! நாளைக்கு வெளியில் தெரிஞ்சதுன்னா போலீஸ்,கோர்ட்,ஜெயில்னு
பிரச்சனை ஆயிடும்"

" நரபலி கொடுக்காம வீடு கட்டி குடிபோனா நாளைக்கு உன் வீட்டுல சாவு நடக்கும்; சாந்தியடையாத ஆவிகள் காவு வாங்கிடும்"

"சாமி! வேற வழி ஏதும் கிடையாதா?"

"வேற வழி கிடையாது:உனக்கு எந்தப் பிரச்சினையும் வராம நான் பாத்துக்குறேன்; வர்ற அமாவாச அன்னிக்கு ராத்திரி 12 மணிக்கு நரபலி கொடுக்கணும்; ரெடியா இரு; ரூவா ஒரு லட்சம் செலவாகும்; ரெடி பண்ணி வச்சுக்கோ"

" சரிங்க சாமி! "

"அப்புறம் இன்னொரு விஷயம்! இன்னிக்கி ராத்திரி 12 மணிக்குக் காளிகோயில்ல பூஜை இருக்கு! கிடா வெட்டணும். உன்கிட்ட இருக்குற ஒரு கிடாவ அழச்சிகிட்டு சரியா 11 மணிக்கெல்லாம் வந்துடு" என்று சொல்லிவிட்டு சுவாமி பரமானந்தா வேலனிடம் விடை பெற்றுக்கொண்டார்.

இரவு 11 மணி. சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த காளிகோயிலுக்கு அனைவரும் வந்துவிட்டனர்.கருப்பாயி தன் குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.மறு பக்கத்தில் வேலன் கயிற்றில் கட்டிய ஒரு கிடாவை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.யாக குண்டம் எரிந்துகொண்டிருந்தது. கையில் பயங்கர ஆயுதங்களுடன் காளிதேவியின் சிலை இருந்தது.பிதுங்கிய விழிகளுடனும்; கோரைப் பற்களுடனும்;வெளியே தள்ளிய நாக்குடனும் காளியின் சிலை பயங்கரமாகக் காட்சியளித்தது.

சுவாமி பரமானந்தா மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்.இரவுமணி 12ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.திடீரென்று ஆவேசம் அடைந்த பரமானந்தா,"காளி உன் பூஜையை ஏற்றுக்கொள்" என்று சொல்லிக்கொண்டே கிடாவின் வயிற்றைப் பற்களால் கடித்து ரத்தத்தை உறிஞ்சினார்.குடலை உருவி எறிந்தார்.கிடாவின் உயிர்த்துடிப்பு அடங்கும்முன்பாக தலையை வெட்டிக் காளிதேவியின் காலில் வைத்தார். பெருக்கெடுத்த ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்தார்.பிடித்த ரத்தத்தைக் காளியின் தலையில் ஊற்றினார்.கற்பூரத்தைக் கொளுத்தி ஆரத்திக் காட்டினார். பின்னர் சிலையிலிருந்து வழிந்த ரத்தத்தை விரலால் தொட்டுக் கருப்பாயியின் குழந்தையின் நெற்றியில் பொட்டு வைத்தார்.

"கருப்பாயீ! இனி உன்குழந்தைக்கு ஆபத்தில்லை;பிழைத்துக்கொள்வான்.ஆனாலும் இந்த அமாவாசை தாண்டும் வரையில் கவனமாகப் பார்த்துக்கொள். நீ வீட்டுக்குப் போ"என்று சொல்லி கருப்பாயியை அனுப்பி வைத்தார்.பின்னர் வேலனிடம்,

" வேலா! இன்றைக்குப் பெளர்ணமி.வருகிற அமாவாசை இரவு 12 மணிக்கு உன்னுடைய நிலத்தில் பூஜை செய்து நரபலி கொடுக்க வேண்டும். அதுவும் தலைச்சன் ஆண் குழந்தையைப் பலி கொடுக்கவேண்டும்.இரவு 11 மணிக்குப் பலியுடன் நான் வந்துவிடுவேன். சாமி மூலையில் அஸ்திவாரக் குழிவெட்டி தயாராக வைத்திரு" என்று சொல்லிவிட்டு சுவாமி பரமானந்தா விடைபெற்றுக் கொண்டார்.

அமாவாசை இரவு 10 மணி.சுவாமி பரமானந்தா தன் ஆசிரமத்தில் ஒருவனிடம் பேசிக்கொண்டு இருந்தார்,

"கபாலி! நான் சொல்றத கவனமா கேள்! இது வெயில் காலம்;எல்லாரும் கதவை திறந்து வச்சிட்டுத்தான் தூங்குவாங்க." என்று சொல்லி அவன் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார்.

இரவுமணி 11.கையில் தூங்கிக்கொண்டிருந்த பச்சைக்குழந்தையுடன் சுவாமி பரமானந்தா வேலனின் வீடுகட்டும் நிலத்திற்குச் சென்றார். அங்கு வேலன் அவருக்காகக் காத்திருந்தான்.குழிவெட்டி தயார் நிலையில் வைத்திருந்தான். இரவுமணி 12ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.குழந்தையை வேலனிடம் கொடுத்துவிட்டு மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார் பரமானந்தா.சரியாக மணி 12ஐத் தொட்டது. தூங்கிய நிலையிலேயே குழந்தையைப் பலியிட்டுக் குழியை மூடினார் பரமானந்தா.வேலனிடம் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்.

மறுநாள் காலை 6 மணி.கண்ணீரும் கம்பலையுமாகக் கருப்பாயி பரமானந்தாவின் ஆசிரமத்தை நோக்கி ஓடிவந்தாள்.

"ஐயா! சாமி! தூளியில் தூங்கிக்கொண்டிருந்த எங்குழந்தயைக் காலையிலக் காணலய்யா!" என்று சொல்லி புலம்பினாள்.

அடுத்த வியாபரத்திற்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் சுவாமி பரமானந்தாவின் முகத்தில் ஒரு புன்னகை மின்னலெனத் தோன்றி மறைந்தது.

பாரதி
07-04-2011, 01:13 AM
மக்களின் அறியாமையைக்கொண்டு பிழைப்பை ஓட்டுபவர்களை குறித்து உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது சமூகத்தில் ஒரு தொடர்கதைதான் என்பது கதை இறுதியில் புலனாகிறது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்து.

கீதம்
07-04-2011, 02:00 AM
ஆனந்தாக்களைப் பற்றிய பீதியை அதிகரிக்கச் செய்யும் கதை. அறியாமையில் ஊறிய மக்கள் இதுவும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்.

மூடநம்பிக்கையைச் சாடும் கதை. வெற்றிபெற வாழ்த்துகள்.

M.Jagadeesan
07-04-2011, 02:13 AM
நண்பர்கள் பாரதி ,கீதம் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

ஜானகி
07-04-2011, 03:00 AM
கதை என்று தெரிந்தபின்னும், மனம் மிகவும் பாரமாக இருக்கிறது....உண்மை சுடும் என்பதை உங்கள் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன.

M.Jagadeesan
07-04-2011, 03:11 AM
ஜானகி அவர்களுக்கு நன்றி!

sarcharan
07-04-2011, 09:19 AM
தூரத்து இடி முழக்கம் படம் பாத்த மாதிரியே இருந்தது..
நல்ல அச்சுறுத்தும் கதை சார்....

M.Jagadeesan
07-04-2011, 09:24 AM
நன்றி! சர்சரண்!

Nivas.T
07-04-2011, 09:46 AM
கதையின் கருத்து அருமை

மூட நபிக்கை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது மக்களை

பாராட்டுக்கள் ஐயா

Nivas.T
07-04-2011, 09:50 AM
கதையின் கருத்து அருமை

மூட நபிக்கை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது மக்களை

பாராட்டுக்கள் ஐயா

M.Jagadeesan
07-04-2011, 11:15 AM
நன்றி! நிவாஸ்!

த.ஜார்ஜ்
07-04-2011, 04:37 PM
பணம் வெறி பிடித்தவர்களுக்கு கிடாவும் ஒன்றுதான்; குழந்தையும் ஒன்றுதான்.
இங்கு பலிகொடுக்க வேண்டியது பணத்தாசையா? அறியாமையா?

M.Jagadeesan
07-04-2011, 05:10 PM
பணம் வெறி பிடித்தவர்களுக்கு கிடாவும் ஒன்றுதான்; குழந்தையும் ஒன்றுதான்.
இங்கு பலிகொடுக்க வேண்டியது பணத்தாசையா? அறியாமையா?

இரண்டையும்தான்.

நாஞ்சில் த.க.ஜெய்
07-04-2011, 05:42 PM
என்றோ ஒருநாள் கிராமங்களில் அறியாமையினால் நிகழ்ந்த நிகழ்வினை கண்முன் கொண்டு வருகிறது உங்கள் படைப்பு ஐயா ....

M.Jagadeesan
07-04-2011, 11:12 PM
பாராட்டுக்கு நன்றி ஜெய்!

பூமகள்
08-04-2011, 02:28 AM
நரபலியின் அதி கொடூர முகத்தை படம் பிடித்துக் காட்டுகிறது கதை..

நோயில் இறந்தாலே இழப்பின் வலி தாள முடியாத மனம்.. இப்படி அநியாயமாக நரபலியில் இழந்தால்??

மன்னிக்கவும் ஐயா.. என் மனம் பூவின் மெலிதானது.. இவ்வகை கதைகள் என்னை மேலும் பயமுறுத்துகின்றன.. ஆயினும் நிகழ்வில் நடப்பதைத் தான் சொல்லியிருக்கிறீர்கள் என்ற பொழுது இன்னும் மனம் குமுறுகிறது..

அக்குழந்தையின் இறப்புக்கு எது, யார் காரணம்??

அறியாமை, மூட நம்பிக்கை.. - எப்படியாவது கடவுள் காப்பாற்றுவார் என்று இருக்கும் மக்கள் சாமியார் காப்பாற்றுவார் என்று மாறும் சிந்தை??

தன் குழந்தையைக் காப்பாற்றுவார் என்று நம்பி அந்தத் தாய் ஒருவேளை அந்தச் சாமியாரைச் சந்திக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அக்குழந்தை பிழைத்திருக்குமோ??

எதையெல்லாமோ நினைக்க வைக்கிறது கதை..

கதை நன்கு வந்திருக்கிறது.. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
08-04-2011, 02:31 AM
தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி! பூமகள் அவர்களே!

கலையரசி
08-04-2011, 05:40 PM
ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருந்தே தீருவார்கள். போலிச் சாமியார்களைப் பற்றி எத்தனை கதைகள் வந்தாலும் மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ந்ல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை. வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

M.Jagadeesan
08-04-2011, 10:57 PM
கலையரசியின் பாராட்டுகளுக்கு நன்றி!