PDA

View Full Version : சாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்



ஆதவா
04-04-2011, 07:45 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_1.jpg
இந்த வெற்றியை வார்த்தையால் சொல்லி தீர்த்துவிடமுடியுமா? பதிவுகளால் என் மனதில் தேங்கியிருக்கும் ஆக்ரோஷமான மகிழ்வை எழுதிவிடமுடியுமா?? தெரியவில்லை. இந்தியா வென்றது… 28 ஆண்டுகளுக்குப் பிறகு… நான் பிறந்தபிறகு பார்க்கும் முதல் உலகக் கோப்பை கைப்பற்றல்!!! மீண்டும் அதன் பின் தோணி!!!


கிட்டத்தட்ட நான்கு உலகக் கோப்பைகள் பார்த்துவிட்டேன். (96, 99, 03, 11) ஒவ்வொரு முறையும் இந்தியாதான் ஜெயிக்கும், இந்தியாதான் ஜெயிக்கவேண்டும் என்று பிரார்த்தனையில்லாத பிரார்த்தனையை செய்து வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அணி திணறும் பொழுது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நூறு கோடி இதயங்கள் அச்சமயத்தில் வேகமாகத் துடிக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆனால் முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் (2003 தவிர) இச்சமயம் அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் சிறப்பாக கேப்டன் வியூகத்தையும் எல்லா வித ஆட்டங்களிலும் முண்ணனியில் நிற்கும் திறமையையும் பார்க்கும்பொழுது இம்முறையும் வெல்லவில்லையெனில் வேறு எம்முறைதான் வெல்வது?

http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_2.jpg

இதுவரை இப்படியொரு நீண்ட கிரிக்கெட் தொடரைப் பற்றி நான் எழுதியதேயில்லை, எழுத நினைத்ததுமில்லை. ஆனால் இம்முறை எழுதாமலிருக்க முடியவில்லை. அந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறேனோ எனும் சந்தேகம் எனக்குள்ளேயே. இம்முறை எனது தந்தை, அம்மா, சகோதரி, சகோதரன் என என் வீட்டிலுள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தொடரை முழுக்க பார்த்தோம். சச்சின், தோனி என்ற இரண்டு பெயரைத் தவிர வேறெந்த பெயரையும் தெரியாத, கிரிக்கெட்டைப் பற்றி துளியும் தெரியாத என் தாயார் கூட ஆர்வமாகப் பார்த்தது கிரிக்கெட் எவ்வளவு தூரம் ஊறிப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது.

http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_3.jpg

சனிக்கிழமை திருப்பூரில் பந்த் போன்றதொரு தோற்றத்தில் எல்லா கடைகளும் மூடப்பட்டு, அல்லது ஏதோவொரு சலூன்கடையில் கூட்டம் வழியப்பெற்று காணக்கிடைத்தது. எனது அலுவலகம் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து பல அலுவலகங்களும் கம்பனிகளும் கட்டாய விடுமுறை அளித்துவிட்டன. வேறெதற்காகவும் இப்படி விடுமுறை தருவார்களா என்பது சந்தேகம்தான். ஒட்டுமொத்த இந்தியாவும் கிரிக்கெட் முன்பு பிரார்த்திதபடியும் வெற்றியைக் கொண்டாடியபடியும் இருந்தது. இரவு அரைமணிநேரத்திற்கு இடைவிடாத வெடிச்சத்தமும் வாணவேடிக்கையும் நிறைந்திருந்தது. எனக்குத் தெரிந்து இப்படி மொத்த இந்தியாவும் ஒரேநேரத்தில் கோர்த்தது இச்சமயத்தில்தானிருக்கும்.. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத என் பாட்டி கூட இந்திய அணியின் வெற்றியை ரசித்ததுதான் உச்சகட்டமே!!

தோனி இறுதியாக அடித்த சிக்ஸும் அதற்கு அவர் பார்த்த பார்வையும், இத்தனைக்கும் பந்து சிக்ஸ்தான் என்பது கன்ஃபர்ம் என்றாலும் பந்து சரியாக சிக்ஸுக்கு இறங்குகிறதா என்று கவனித்து முகத்தில் சிரிப்பைக் காட்டியவிதம் இருக்கிறதே!!! நிச்சயம் இதனை வேறு எவராலும் செய்யமுடியாது. கங்குலியாக இருந்தால் அப்பொழுதே சட்டையைக் கழற்றி சுற்றியிருப்பார்!! வென்ற பிறகும் கூட தலைமை நடத்துனன் நான் தான் எனும் இறுமாப்பில் எங்கும் சுற்றவில்லை. ரஜினிகாந்த் “விடுகதையா இந்த வாழ்கை “ என்று பாடிக் கொண்டு செல்வதைப் போல அதன் பிறகு ஆளையே பார்க்க முடியவில்லை… தோனியைப் பொறுத்தவரையில் இது இன்னுமொரு வெற்றி என்பதுதான்!! மிகச் சாதாரணமாக எதையும் கையாளும் திறன்மிக்கவராகவே இருப்பதால் இவரைவிடவும் மற்றவர்கள் தலைமையில் சிறப்பார்களா,… தெரியாது!

http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_4.jpg


குழப்பமான இரண்டாம் டாஸில் இலங்கை ஜெயித்தபொழுதே வயிற்றில் இசையெழுந்தது. மும்பை பிட்சில் ஒளிவெள்ளத்தில் அதிக ரன்களை விரட்டுவது மிகவும் கடினமாயிற்றே. டாஸில் தோற்றதும் தோனி அதற்கான வேலைகளில் சரியாக இறங்கினார். ஆனால் மீண்டுமொருமுறை தவறு செய்தது ஸ்ரீசாந்தை உள்ளே இழுத்ததுதான். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிக அழகாக ஸ்ரீசாந்த் நிரூபித்துக் கொண்டேயிருந்தார். ஒருபுறம் ரன்களே இல்லாத மெய்டன் ஓவர்கள், இன்னொருபுறம் வாரிவழங்கும் வள்ளல் ஓவர்கள் என சீராகவே சென்று கொண்டிருந்தது. ஜாஹீரின் ஆஃப் சைட் பாலில் தரங்காவின் மட்டை முத்தம் கொடுத்து சேவக்கின் கையில் தஞ்சம் புகுந்ததுதான் மிகப்பெரிய ப்ரேக்த்ரூ என்று நினைக்கிறேன். இத்தொடர் முழுக்க ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் இலங்கையின் தரங்க வும் தில்ஷானும் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். எதிர்பார்த்தது போல தில்ஷானும், அரைசதமடிக்க முடியாத நிலையில் சங்ககராவும் சென்றுவிட்டதால் இலங்கையின் தளர்ச்சியடைந்த மிடில் ஆர்டர் ஆட்டம் காணும் என்று நினைத்தவனுக்கு ஜெயவர்தனவின் ஆட்டம் கண்ணில் மண் விழுந்ததைப் போலிருந்தது. ஒப்புக்குச் சப்பாணிகளாக குலசேகரவும் சமரவீராவும் பெராராவும் கடைசி கட்டங்களில் லைன் அண்ட் லெந்தில் குழப்பம் செய்த ஜாஹீரின் பந்துகளையே விளாசிக் கொண்டிருந்த பொழுது ஒட்டுமொத்த இந்தியாவும் சற்றே நம்பிக்கையை இழந்திருக்கும். அதுவரை 5 ஓவருக்கு 6 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த ஜாஹீர், முப்பத்தாறாவது ஓவரிலிருந்து மீகுதி ஐந்து ஓவருக்கு 54 ரன்களை வாரி வாரி வழங்கினார்.. ஜாஹீர் அப்பொழுது பதட்டமான சூழ்நிலையில் பந்தை வீசினார் என்பது நன்கு தெரிந்தது. 274 என்பது பைனல்களைப் பொறுத்தவரையில் இமாலய ஸ்கோர்தான். ஏனெனில் 300 பந்துகளில் மொத்தம் 26 பந்துகள்தான் உங்களால் வீணாக்க முடியும்.

சற்றேறக்குறைய நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தபிறகு ஷேவாக்கின் எல்பி அவர் மீது இருக்கும் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இத்தொடர் முழுக்க ஷேவக் உறுப்படியாக ஆடவேயில்லை. ஆரம்பத்தில் அடித்த 175 ரன்களே இன்னும் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஒரு முக்கியமான போட்டியில் இப்படியா டக் அவுட் ஆவது? அதுசரி, இவர் போனாலென்ன சச்சின் தான் இருக்கிறாரே என்றால் அவரும் ஒரு அவுட்சைட் எட்ஜில் நடையைக் கட்ட, கிட்டத்தட்ட சுத்தமாக நம்பிக்கையிழந்து திரைப்படம் பார்க்கலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனால் சச்சினைக் குறை சொல்ல ஒருவராலும் முடியாது. இன்று கோப்பை கையில் இருக்கிறது என்றால் அதற்கு சச்சினின் 482 ரன்கள் மிக முக்கிய காரணம். அட்லீஸ்ட் இன்னுமொரு 20 ரன்களைச் சேர்த்திருந்தால் மூன்று உலகக் கோப்பையில் 500 க்கும் மேற்பட்ட ரன் எடுத்தவர், அதிக ரன் எடுத்தவர் எனும் சாதனையை எட்டியிருக்கலாம். கடந்த 2003ல் தனிமனிதனாக பைனலுக்கு அணீயைக் கொண்டு சென்றவர் என்பதை நினைவுகூறலாம்.

இருந்தாலும் சச்சின் அவுட் ஆனதும் ஒருசிலர் என்னிடம் ”அப்பாடா, நூறு அடிச்சுட்டான்னா ஜெயிக்க மாட்டோம்” என்று சொன்னது எரிச்சலைக் கிளப்பியது. சச்சின் எனும் திறமையான ஆட்டக்காரனை இவ்வளவு கேவலப்படுத்த எப்படி துணிகிறார்கள்?

http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/2_5.jpg

காம்பிர்+கோலியின் ஆட்டம் உண்மையிலேயே டாப் கிளாஸ் ஆட்டம். மிகச்சரியான பந்துகளைப் பொறுக்கி பவுண்டரிக்கு விரட்டியது இந்த ஜோடி, டில்ஷானின் ஃப்லையிங் கேட்ச் மூலமாக கோலி அவுட் ஆகினாலும் இந்தியா இன்னும் தோல்வி எனும் கோட்டுக்கு வந்துவிடவில்லை என்பதாகத்தான் இருந்தது. எப்பொழுதும் போல யுவி களமிறங்குவார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் வந்தது தோனி!!

தொடர் முழுக்க 40 ரன்களைக் கூட எட்டாத தோனி களமிறங்கிய்தும் உண்மையில் கோபம் வரவேயில்லை. ஏனெனில் தோனி சிலசமயங்களில் பேட்டிங் வரிசை மாற்றி திட்டம் போடக்கூடிய ஆள். யுவியை அவர் பெண்டிங் வைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர, இந்தியா சார்பில் இலங்கைக்கு எதிராக தோனியின் ஆட்டம் மிகச்சிறப்பானதும் கூட. கொஞ்சம் கொஞ்சமாக பழைய தோனியின் ஸ்டைலில்லாத காட்டானாட்டம் திரும்பிக் கொண்டிருந்தது. அவரது ப்ரத்யேக குவிக் ட்ரைவ்கள் ஒவ்வொன்றும் 4 ரன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாலுக்குப் பால் இடைவெளி விடாமல் சிறப்பாக சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு உறுப்படியில்லாத பந்துக்கு கவுதம் காம்பிர் அவுட் ஆனதில் வருத்தம்தான். உலகக் கோப்பை பைனல்ஸில் இதுவரை எந்தவொரு இந்தியரும் சதமடித்ததில்லை. (மொத்தமே 3 பைனலதானே?) காம்பிர் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்!! அதன்பிறகு 50க்கும் குறைவான ரன்களே என்பதால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்டது ஒருவேளை இலங்கை டபுள் ஸ்ட்ரைக் ஏதும் செய்யாதிருந்தால்…..

http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_6.jpg

பிறகென்ன…. தோனியின் மொரட்டுத்தனமான ஆஃப்சைட் சிக்ஸரும், இறூதியாக பந்தைத் தூக்கியடித்து முரட்டுத்தனமாக நிதானித்துப் பார்த்த வின்னபில் சிக்ஸரும் தோனியின் பெயரை மிகப்பலமாக வலுவாக்கி விட்டது.

இச்சமயத்தில் தோனியின் வியூகம் பற்றியெல்லாம் பேசமுடியவில்லை. எனெனில் பவுலிங்கில் கடைசி கட்டங்களில் தோனியைத் தவிர மற்ற அனைவரும் பதட்டத்துடனேதான் வீசினர். ஜாஹீரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டி வந்ததே பெரிய தவறுதான். இரண்டாவது ஸ்பெல்லை கொஞ்சம் முன்னமே கொடுத்திருந்தால் நிச்சயம் விக்கெட் எடுத்திருந்திருப்பார்… அதேபோல ஸ்ரீசாந்தின் ஓவரையும் முன்பைப் போல சச்சினுக்கும் கோலிக்கும் கொடுக்கவேண்டிய நிர்பந்ததை சமாளித்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேசமுடியவில்லை.

http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_7.jpg
இந்த வெற்றிக்குப் பின்னால் தோனி போன்ற வீரர்கள் தவிர இன்னுமொருவர் இருந்தார்.. அவர் கேரி கிர்ஸ்டன்.. பயிற்ச்சியாளர். இறுக்கமில்லாத, வீரர்களுடன் சகஜமாகப் பழகக்கூடிய பயிற்சியாளர் என்ற பெயரெடுத்திருந்த கிர்ஸ்டன் ஒரு மிக நல்ல டீமை ஏற்படுத்திவிட்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்துவிட்டு பிரிகிறார்.. கடந்த 2007 களில் பயிற்சியாளர்களுடன் தகறாரு, கேப்டனின் தலைமை சரியில்லாதது, லீக் போட்டிகளிலேயே மோசமாக வெளியேறியது என பலவகையில் பிரச்சனை வாய்ந்த அணியை தலைகீழாகத் திருப்பிப் போட்டு உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும், நம்பர் டூ ஒண்டே அணியாகவும் மாற்றி T20 மற்றும் ஒண்டே உலகச்சாம்பியனாகவும் உருவெடுக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், சச்சின், கோலி, காம்பிர், தோனி போன்றவர்களை மிக அழகாக ஷேப் ஆக்கினார்… வெல்டன் கேரி!! இன்னுமொரு பயிற்சியாளர் இப்படி இருப்பாரா என்பது சந்தேகம்தான்!! ரியலி வி மிஸ் யூ கேரி!!

வெற்றி சிக்ஸர் அடித்தபிறகு இந்திய வீரர்கள் அழுததும் மகிழ்ச்சியுடன் சச்சினையும் கிரிஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானம் முழுக்க சுற்றி வந்ததையும் பார்த்தபொழுது என்னையுமறியாமல் கண்கள் கலங்கியது. தோனி ஒரு சகவீரராக அச்சமயத்தில் வந்தவர் பிறகு கேமராவின் கண்களில் சிக்காமலேயே போய்விட்டார்..

தொடர் நாயகனான யுவியை ஆரம்பத்தில் நானும் கூட எதற்காக யுவ்ராஜை எடுத்தார்கள் என்று கேட்குமளவுக்கு மோசமான ஃபார்மில் இருந்தவர் தொடர் நாயகனாகி வாயடைத்ததும், இந்த வெற்றி சச்சினுக்கானது என்று பெரிமிதத்துடன் சொன்னதும் யுவ்ராஜை பல உயரங்களுக்கு உயர்த்திவிட்டது. இந்த வெற்றி சச்சின், கும்ப்ளே, ட்ராவிட், கங்குலி போன்ற சகவீரர்களுக்கு டெடிகேட் செய்வதாகக் கூறிய தோனியும் பலமடங்கு உயர்ந்துவிட்டார்… வெற்றியினால் மொட்டை அடித்து காணிக்கை செலுத்தியிருக்கும் அவரது பக்தியை மெச்சாமலிருக்க முடியாது….

http://www.tamilmantram.com/vb/photogal/images/2560/large/1_8.jpg

இலங்கை தரப்பில் ஜெயவர்தனேயின் சதம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் வீசாததும் ஃபீல்டிங் குறைபாடுகளுமே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மலிங்காவின் இறுதி பந்துவீச்சு முழுக்க யார்கராகவே இல்லை. டாஸ்பாலாகவே சென்றது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் நெருக்கடி கூட கொடுக்க முடியவில்லை. முரளிக்கு அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.. கடைசி போட்டியில் சோபிக்காமலிருந்தது வருத்தத்தைத் தந்தது. முழுவதுமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முரளி இல்லாதது இலங்கை அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும். இந்திய அணிக்கு எப்படி சச்சினோ அதைப் போல இலங்கைக்கு முரளி என்பதை யாராலும் மறுக்கவியலாது. வெல்டன் முரளி. நீங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் மறக்கவியலாதது. சிறப்பான வீரராகவே முடிவு பெற்றீர்கள்!! ஐபிஎல் இல் சந்திப்போம்..

மீண்டுமொரு வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ….. இந்த வெற்றி இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி!!

தொடர்ந்து சாதியுங்கள் வீரர்களே!!

படங்கள் உதவி : http://espncricinfo.com

Nivas.T
04-04-2011, 07:59 AM
இதற்க்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை ஆதவா

மிக்க நன்றி

வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு

xavier_raja
04-04-2011, 09:09 AM
ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை நிஜம்.. அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.. நான் கூட சச்சின் அவுட் ஆனவுடன் டிவியை ஆப் செய்த்துவிட்டு சரக்கு கடைக்கு சென்றுவிட்டேன்.. பிறகு வந்து பார்த்தால் சூப்பர் ஒ சூப்பர்.. "Hats off to India"

சிவா.ஜி
04-04-2011, 06:24 PM
ரொம்ப அழகா...நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க ஆதவா. தோனியோட நிதானம் நிச்சயமா பாராட்டப்பட வேண்டியதே. வாழ்த்துக்கள் டீம் இந்தியா!!!!!

p.suresh
05-04-2011, 02:40 AM
http://www.cricketworldcup2011live.com/wp-content/uploads/2010/12/1983.jpg

ஆதவா,பளிங்குக்கல் மீது ஒடும் தெளிந்த நீரோடையாய் வைரவரிகள். பின்னூட்டம் என்ற பெயரில் மாசுப்படுத்த மனமில்லை.

எனினும் 1983,2011 உலகக்கோப்பை வெற்றியை முகர்ந்தவன் என்ற முறையில் ஒன்றைப் பகர விழைகிறேன்.

கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எதிர்பார்ப்பவன் நூறு பெற்றால் கிடைக்கும் உண்ர்வே இன்றைய வெற்றி.ஆனால் பூஜ்யம் என்று நினைத்து நூறு பெற்றவனுக்கு எப்படியிருக்கும்?

அந்தக்காலத்தில், கார்னர்,ஆன்டி ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,மார்ஸ்ல் என்ற புயல்படை,எதிரணியை சுனாமியாய் சுருட்டிச் செல்லும்.தாக்குப்பிடித்தவர்கள் கதிர்வீச்சுக்கு ஆளானதுபோல் கதிகலங்கி திரும்புவர்.

விவியன் ரிச்சர்ஸ் "பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல" என்பதற்கான உண்மையான உதாரணம்.அவர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனால் treat வைத்து மகிழ்வோம்.

அன்று நாம் கிரிக்கெட் என்ற பெயரில் நல்லுண்ர்வை வளர்க்கச் செல்லும் சமாதானப்புறாக்கள்.இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதினால் எப்படியிருக்கும்?

அப்போது எங்களுக்கு உதவி வானொலி மட்டுமே. 183 என்ற நம் இலக்கை அடைய திணறி அவர்கள் ஒவ்வொரு விக்கெட்டாய் இழக்கப் பதறி பிரம்மைப் பிடித்துப் போனோம்.

அதிலும் ரிச்சர்ஸ் விக்கெட்டை deep midwicketல் கபில் பிடிக்க மயக்கம் பட்டு விழாதக் குறை. கோப்பையை வென்றதை நம்பாமல் எதற்கும் நாளை பேப்பரைப் பார்த்து உறுதி செய்வோம் என்று பிரிந்தோம்.

இரவு முழுக்க கண் அயரவில்லை.

அதே உணர்வு ஒருவேளை இந்தியா கால்பந்தில் பெற்றால் கிடைக்குமோ,என்னவோ?

தங்கவேல்
05-04-2011, 02:46 AM
கிரிக்கெட் இந்திய மக்களின் முட்டாள்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இதோ கீழே இருக்கும் இணைப்பை கிளிக் செய்து படித்து விட்டு அதன் பிறகு நான் சொல்வது சரிதானா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

http://www.yehhaicricket.com/CBI/cbi_report/match_fixing_report.html

http://www.expressindia.com/ie/daily/20001101/isp01034.html

p.suresh
05-04-2011, 03:11 AM
தங்கவேலு நண்பரே,

match fixing பற்றிய உங்கள் ஆதங்கம் புரிகிறது. கிரிக்கெட் ஏன் முட்டாள்தனமானது என்ற உங்களது சொந்த விமர்சனத்தைத் திரியாய் .
தொடங்கி விழிப்புணர்வு தாருங்கள்.

தங்கவேல்
06-04-2011, 05:39 AM
நிச்சயம் எழுதுவேன்.

அமரன்
06-04-2011, 09:01 PM
மட்டைப்பந்தாட்டத்தை விட உதைபந்தாட்டம் எனக்குப் பிடிக்கக் பயிற்றுனர் கொண்டாடப்படுவதும் காரணம். அதைக் இங்கேயும் காண முடிந்தது. அதனாலும் சந்தோசம்.

படங்கள் இப்போது தெரிகிறதல்லவா?

smksamy
04-07-2011, 10:52 AM
சச்சின் 100 ரன்கள் எடுத்தால் இந்தியா தோற்றுவிடும் என்று காமெடி செய்யும் நண்பர்கள் சற்று அன்றைய போட்டிகளில் மற்ற வீரர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது என்று சற்று எண்ணி பார்க்க வேண்டும் நண்பர் ஆதவா குறிப்பிட்டது போல 2003 ல் நடந்த உலக கோப்பையில் அவரது பங்களிப்பு அனைவரும் அறிந்தது
இந்த உலக கோப்பையின் தென் ஆப்ரிக்கவுடனான போட்டியில் சச்சின் சதம் கடந்தார் அந்த போட்டியில் சச்சின் 111(101) 8(4) 3(6) , சேவாக் 73(66) 12(4) ஒரு நல்ல துவக்கம் தந்தனர் . சேவாக் ஆட்டமிழந்தவுடன் வந்த காம்பிர் 69(75) என்ற நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அடுத்து வந்த நம்முடைய பாயும் புலிகள் இளம் வீரர்கள் பதான் 0 , யுவராஜ் 12 ,தோணி 12 , கொஹ்லி 1 ,சிங்க் 3 , ஜாகிர் - நெஹ்ரா - படேல் - 0 இந்த போட்டியில் பந்து வீச்சும் இந்திய வீரர்கள் சொதப்பினர் குறிப்பாக கடைசி நெஹ்ரா வீசிய ஓவர் இந்தியாவின் தோல்வியை உறதி செய்தது . நான் கேட்கிறேன் சச்சின் சதம் அடித்துவிட்டால் ,அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் நன்றாக விளையாடி சதம் அடித்த சச்சின் , நன்றாக பேட்டிங் செய்யாத , நன்றாக பந்து வீசாத வீரர்கள் இல்லை என்கிறார்கள் சிலர் . இந்த போட்டியில் 4 வீரர்கள் டக் அவுட் இளம் வீரர் கொஹ்லி ஒரு ரன் தோணி ,யுவராஜ் இருவரும் 12 ரன்கள் . ipl ல் சிறப்பாக ஆடிய பதான் டக் அவுட் . மற்ற வீரர்கள் அலட்சிய போக்கை பற்றி கமென்ட் செய்யுங்கள் சச்சின் ஆட்டம் பற்றியோ , அவர் சதம் அடித்ததால் தோற்றோம் என்றோ கமென்ட் செய்யாதீர்கள் .
நண்பர் ஆதவா உங்கள் கணிப்பும் உங்கள் கமெண்டும் அருமை

kay
10-09-2011, 05:55 AM
இந்தியா சாம்பியன் ஆனது இப்போது சரித்திரம்! தற்போது இங்கிலாந்து சென்றுள்ள அணியில் பாதி பேர் காயம், உடல்நிலை சரியில்லாமல் தாயகம் திரும்பி விட்டார்கள்! ஒரு இளநிலை அணியாகக் காட்சி அளிக்கிறதே இந்தியா! போட்டிகளில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி வருவது இயல்பே! ஆனால் உலக அரங்கில் நிலைத்து நிற்க, உடல் திறம், ஆரோக்கியம், இடைவிடாத பயிற்சி, வேகப் பந்தை எதிர்கொள்ளும் திறம் ஆகியவற்றை நம் வீரர்கள் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்! அப்போதுதான் நம் இழந்த தகுதியை மீண்டும் பெற முடியும்!:):):)

பால்ராஜ்
02-04-2012, 04:59 AM
வெற்றியின் ஓராண்டு நிறைவு இன்று..!
பாக் மாட்சில்.. அவர்கள் வேண்டுமென்றே தோற்றார்களோ என்ற ஐயம்..
பின்னணியில் கோடிக்கணக்காக நடக்கும் சூதாட்டங்கள்.
1983-யே நிஜமான வெற்றி என்றே தோன்றுகிறது