PDA

View Full Version : தமிழை உண்டவன் - அத்யாயம் ஐந்து-எல்லையூர் சத்திரம்.dellas
31-03-2011, 11:25 AM
எல்லையூர் சத்திரம்.

கதிரவன் தன் கதிர்களை பொன்னாய் உருக்கி வார்த்துக்கொண்டிருந்த மாலை வேளை. கடல்போல் பரந்து விரிந்த ஏரியில் கயல்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. ஏரியின் கரைகளில் அடர்ந்து வளர்ந்திருந்த கோரைப் புற்களின் ஊடே தன் ஒற்றைக்காலால் தவம்புரிவதுபோல் நின்றுகொண்டிருக்கும் நாரைகள், தன்னருகே வரும் மீன்களுக்காக பொறுமையாக காத்திருக்கின்றன. ஏரியின் உபரி நீர் மறுகால் வழியாக பாய்ந்து கொண்டிருக்கிறது. அசைந்துவரும் இளந்தென்றல், எரி நீரின் தண்மையை மெல்லத் தன்னிலேந்தி நம் உடலைத் தீண்டிச்செல்கையில் நம் ரோமக்கால்கள் சிலிர்க்கிறது. எரியினைச் சுற்றி வளர்ந்துநிற்கும் பெருமரங்கள் அவ்விடத்தை ஒரு பெரும் சோலையாக மாற்றியிருந்தது. அம்மரங்களில் கூடுகட்டி வசிக்கும் பறவைகள் தங்கள் கூடுகளுக்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தன. தாய்ப் பறவையைக் காணும் குஞ்சுகளின் ஆரவாரங்கள், இறக்கை முளைத்த குஞ்சுகளுக்கு பறக்கச் சொல்லித்தரும் தாய்ப் பறவைகளின் ஓசைகள், தன் இணையுடன் காதலாய் விளையாடும் பறவைகளின் செல்லச்சிணுங்கல்கள் எல்லாம், மெல்ல நம் காதுகளை கவிதையாய் நிரப்பிக் கொண்டிருக்கின்றது. மரங்களினடியில் மென்போர்வைபோல் பசுமையாக படர்ந்து நிற்கும் புல்வெளியில் ஆங்காங்கே மாந்தர்கள் அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஏரியின் வடக்குக் கரைவழியாக நீண்டு செல்லும் பெரும்பாதை இன்னும் ஒருகாத தூரத்தில் சோழ நாட்டை எட்டிவிடும். சாலையின் மறுபுறத்தில் ஒரு பயணச் சத்திரம் இருந்தது. அதில் தங்குபவர்கள் இந்த ஏரியில் நீராடுவதுமுண்டு. சோழ நாட்டின் எல்லையில் இருப்பதால் இவ்விடம் எல்லையூர் என்று பெயர் பெற்றுள்ளது.

அந்த செம்மண் சாலையில் அவ்வப்போது பாரம் ஏற்றிய மாட்டு வண்டிகளும், படைவீரர்கள் குதிரைகளிலும் சென்றுகொண்டிருந்தனர். ஒரு வில்லுவண்டியில் வந்த குடும்பம் பயணிகள் சத்திர அதிகாரியோடு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தில் ஒரு முதியவர்,அவர்மனைவிபோன்ற ஒரு முதியபெண், சம வயதில் இரண்டு இளம்பெண்கள் மற்றும் அவர்களுக்கு தம்பி போன்ற ஒரு வாலிபனும் இருந்தார்கள். அந்த முதியவர் சற்றே உரத்த குரலில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

" எனக்கு நீங்கள் ஒரு அறை கண்டிப்பாக தந்தே தீரவேண்டும் இந்த மாலை முடிவதற்குள் நான் சோழ நாட்டிற்குள் போய்ச் சேரவேண்டும். அது இனிமேல் முடியாத காரியம். இரவு காவலர்கள் சோழ நாட்டிற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. எனவே நாளை காலையில்தான் எனக்கு அனுமதி கிடைக்கும். அதுவரை என் இரு பெண்கள் மட்டும் தங்குவதற்கு இடம் கொடுத்தால் போதும். அதற்குரிய பணம் நான் தருகிறேன்." என்றார் முதியவர்.

"ஐயா எனக்குப் புரிகிறது. ஆனால் இங்கு மீதம் இருப்பது இரண்டு அறைகள் மட்டுமே. அது அரசு விருந்தினர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் எந்நேரமும் ஆட்கள் வரலாம். அதில் உங்களுக்கு இடம் தர எனக்கு அனுமதி இல்லை." என்று கூறி மறுத்தார் சத்திர அதிகாரி.

" அப்படியானால் என் இரண்டு பெண்களும் வெட்டவெளியில்தான் தங்கவேண்டுமா? இதுதான் நீங்கள் சத்திரம் நடத்தும் ஒழுங்கா? " என இரைந்தார்.

" நாங்கள் என்ன செய்யமுடியும் பெரியவரே? இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவிருக்கும் சோழ மன்னர் இரண்டாம் ஞாயிற்றுச் சோழரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அயல்நாட்டினர்களும் விருந்தினர்களும் எந்நேரமும் வந்துகொடிருக்கிரார்கள். அதனால்தான் சாவடியில் இடமில்லை. உங்கள் பெண்கள் தங்குவதற்கு எதாவது இடம் கிடைக்கிறதா என நான் ஏற்கனேவே தாங்கி இருப்பவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்." என்றவாறே சத்திரத்தின் உள்ளே நுழைய எத்தனித்தான்.
இந்நேரத்தில் வேகமாக வந்த இரண்டு குதிரைகள் சாவடியின்முன் வந்து நின்றன. ஒரு குதிரையிலிருந்து காளியப்பன், மற்றதிலிருந்து மாதங்கியும் இறங்கினார்கள். கம்பீரமாக இறங்கிய காளியப்பன் தன் வலக்கையின் சுண்டுவிரலை அசைத்து விடுதி அதிகாரியை அழைத்தான். உடனே விடுதி அதிகாரி அவர்களை நோக்கிப் போனான். காளியப்பன் தன் முத்திரை மோதிரத்தை சாவடி அதிகாரியிடம் காண்பித்தான். உடனே அவன் அவர்களுக்கு வந்தனம் கூறினான். பின் ஒரு வேலையாளை அழைத்து அவர்களின் புரவிகளை குதிரை லாயத்தில் கட்டி, அவற்றிற்கு எள்ளும் தண்ணீரும் கொடுக்கப் பணித்தான்.பின் வந்தவர்களை நோக்கி,

" உங்களுக்கு அறைகள் தயாராக உள்ளது நீங்கள் போய் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்" என்றான்.

உடனே முதியவர், " என்ன இது! வந்தவுடன் அவர்களுக்கு இடம் தருகிறீர்களே " என்றார்.

" ஆமாம் ஐயா, அவர்கள் சோழ அரசின் முக்கிய பணியில் இருப்பவர்கள். முத்திரை மோதிரம் அவரிடம் இருப்பதை பார்த்தீரல்லவா?" என்றான்.

" என்ன பிரச்னை? யார் இவர்களெல்லாம்? " என்று விசாரித்தான் காளியப்பன்.

" என் இரண்டு மகள்களும் தங்க இடமில்லை என்று சொன்ன இவர், உங்களிருவருக்கும் வந்தவுடன் இடம் தந்துவிட்டாரே " என்று பதிலுரைத்தார் முதியவர்.

உடனே காளியப்பன்," அவ்வளவுதானா? உங்கள் இரு மகள்களும் இவளோடு தங்கிக்கொள்ளட்டும்.நீங்கள் என்னோடு தங்குங்கள். சரிதானா மாதங்கி? " என்று மாதங்கியைப் பார்த்துக் கேட்டான்.

அவளும் 'சரி' என்று கூறி அந்த இரு பெண்களையும், அந்த முதியவரையும் உற்று நோக்கினாள். சற்று தள்ளி இவர்களோடு வந்த வாலிபன் நின்று கொண்டிருந்தான். அந்த நால்வரையும் பார்த்த பின் காளியப்பனை அவள் அர்த்தமாக பார்த்து,

"இவர்கள் இருவரும் என்னோடு தங்குவதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை " என்றாள்.

" நன்றி பெண்ணே, எங்களுக்கு விடுதி வேண்டாம். இந்த புல்வெளியிலே நாங்கள் இருவரும் படுத்துக் கொள்வோம் " என்றார் முதியவர். பின் தன்னுடன் வந்த வாலிபனை அழைத்துக்கொண்டு ஏரிக்கரையின் புல்வெளியை நோக்கி நடந்தார்.

மாதங்கி அந்த இரு பெண்களோடு சத்திரத்தின் உள்ளே சென்றால். காளியப்பன் சத்திர அதிகாரியை நோக்கி,

" இவர்களெல்லாம் யாரென்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

" நான் அதுபற்றிக் கேட்கவில்லை. வந்ததுமுதலே அவர் என்னோடு வாக்குவாதம் செய்வதிலே நேரத்தைக் கடத்தினார். ஆனால் காண்பதற்கு சோழ நாட்டவர் போலில்லை." என்றுரைத்தான்.

தன் முகவாயைத் தேய்த்தபடியே யோசனை செய்து நின்றிருந்தான் காளியப்பன். சற்று நேரத்தில் மாதங்கி சத்திரத்திலிருந்து வெளியே வந்தாள். இருவரும் ஏரிக்கரை நோக்கி நடந்தார்கள். இருள் மெல்ல கவிழத்துவங்கியது.

" அந்தப் பெண்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?'' என்று வினவினான்.

" அவர்கள் உணவருந்திவிட்டு ஓய்வெடுக்கிறார்கள் " எனறாள்.

"அவர்களைப் பற்றி விசாரித்தாயா? ஏதாவது சந்தேகப் படும்படி விபரங்கள் கிடைத்ததா?"

" ம்.. அவர்களிருவரும் சகோதரிகள். அந்த வாலிபன் அவர்களின் தம்பி. அந்த முதியவர் அவர்களுக்கு தூரத்து சொந்தமாம். எல்லோரும் சோழ நாட்டின் விழாவைக்காண வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சோழ நாட்டில் ஒரு சிற்றன்னை இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். அடிப்படையில் அவர்கள் வியசாயக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அரசியலுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்த முதியவரை நான் எங்கோ கண்டிருக்கவேண்டுமென்றே நான் எண்ணுகிறேன். அவர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் பார்வையில் அவர்களை வைத்திருப்பது நல்லதென்றே நான் நினைக்கிறேன்"

" நீ சொல்வது சரிதான், அந்த வாலிபன் பார்ப்பதற்கு ஒரு மல்யுத்த வீரன் போலவே இருக்கிறான். அந்த முதியவரும் ஒரு சிறந்த வீரனைப்போலவே உள்ளார். அவர் நரைமுடிக்கும் உடல் முதிர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. என் எண்ணம் சரியாக இருந்ததால் இவர்கள் கண்டிப்பாக சேர நாட்டினர் தான். பொறுத்திருந்து பார்க்கலாம்." என்றான் காளியப்பன்.

இருவரும் சற்றுதூரம் நடந்து புல்வெளியில் அமர்ந்தார்கள். இன்று அவர்கள் ஏற்கனேவே குறிப்பிட்ட அந்த அமாவாசை இரவு. திட்டப்படி இரும்பொறை,சோமநாதன் மற்றும் அமுதவல்லி ஆகியவர்கள் இவர்களுடன் வந்துசேரவேண்டும். அவர்களை எதிர்பார்த்துதான் இவர்களிருவரும் காத்திருக்கிறார்கள். ஆனால் சோமநாதனைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைக்காதது, ஒரு பின்னடைவாகவே இருந்தது. சத்திரத்தின் வாயிலில் எரிந்துகொண்டிருக்கும் இரண்டு பெரிய தீவட்டிகள் அந்த இடத்திற்கு மெல்லிய வெளிச்சத்தை தந்துகொண்டிருந்தது. இரண்டு நீண்ட நிழல்கள் அவர்கள்மேல் விழுந்தது. யாரோ இருவர் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை அது அவர்கள் எதிர்பார்க்கும் நபர்களாகக்கூட இருக்கலாம். ஆம் இரும்பொறையும், அமுதவல்லியும்தான் வந்துகொண்டிருந்தார்கள்.

" வா இரும்பொறை, வா அமுதவல்லி" என்று முகமன் கூறி அவர்களை அமரப் பணித்தான் காளியப்பன்.

அவர்கள் தங்கள் பயண அனுபவங்களையும், சேகரித்து வந்த செய்திகளையும் பரிமாறிகொண்டனர். சோமநாதனைப் பற்றிய பேச்சும் அப்போது எழுந்தது.

" சோமநாதன் ஒரு வேளை எதிரிகளின் கையில் சிக்கியிருக்கக் கூடும். அப்படி சிக்கியிருந்தால் நம் திட்டங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நம் அடுத்த சந்திப்பை இரண்டாம் நாள் விழாவில், விழா அரங்கின் பின்புறமுள்ள குதிரைத்திடல் முற்றத்தில் மாலை சொல்லுவேன். அனைவரும் அங்கு என்னைக் காண்பது நலம். மேலும் நம் சோழ நாட்டின் அரச விழா முடிந்தவுடன் நாம் அனைவரும் சேர நாட்டிற்கு செல்ல வேண்டி வரலாம். மேலும் அரசரின் நேரடித் தகவல் ஒன்றையும் நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். நடைபெறப்போகும் அரசரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பல தேசங்களிலிருந்தும் வல்லுனர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். இவர்களை ரகசியமாகக் கண்காணிக்கும் மிகப்பெரிய பொறுப்பு நம் ஒற்றர் படையிடம் விடப்பட்டுள்ளது. எனவே வரும் பதிமூன்று நாட்களும் நீங்கள் விழிப்போடிருந்து செயல்படவேண்டும். நம்மோடு மற்ற அனைத்து ஒற்றர் பிரிவுகளும் இந்த பணியைக் கவனிக்கப் போகிறார்கள். நீங்கள் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உங்களை அடையாளம் காண்பதற்கும் அரண்மனைப் பிரவேசத்திற்கும் நான் தரும் இந்த முத்திரை மோதிரம் எந்நேரமும் உங்களோடு இருத்தல் நலம்." என்றபடி காளியப்பன் ஆளுக்கு ஒரு மோதிரம் வழங்கினான். மற்ற மூவரும் அதைப் பெற்றுத் தங்கள் ஆடைகளில் முடிந்துகொண்டனர்.

திடீரென அவர்கள் பின்புறம் பலத்த இரைச்சல் உண்டானது. பத்திற்கும் மேற்பட்டவர்கள் குதிரைகளில் ஆரவாரம் செய்தபடி வந்து கொண்டிருந்தனர். அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். உருவிய வாட்களை காற்றில் சுழற்றியபடி சத்திரத்தின் முன்பு குதித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சத்திர அதிகாரியை வாள்முனையில் நிறுத்தினர். சத்திர காவலர்களின் கைகளைப் பின்புறம் பிணைத்து அருகிலிருந்த தூண்களில் கட்டிப்போட்டனர். பின்னர் சத்திர அறைகளின் கதவுகளைப் பலமாகத் தட்டினர். சப்தம் கேட்டு மிரண்டுபோய்க் கதவு திறந்தவர்களின் உடைமைகள் பறிக்கப் பட்டது. பெண்களின் ஆபரணங்களையும் மிரட்டி வாங்கினார்கள். இவையெல்லாம் கண்ட காளியப்பனும் இரும்பொறையும் தங்கள் வாட்களை உருவியபடி அவர்களை நோக்கிப் பாய்ந்தார்கள்.

" யாரடா நீங்கள்? பெண்களிடம் வீரத்தைக் காட்டும் பேடிகளே " என்று கர்ஜித்தான், காளியப்பன்.

அவர்களில் ஒருவன் இவனைப் பார்த்து, " அடடே யாரது, மாபெரும் வாள்வீரன் காளியப்பனா? உன்னைத்தான் நான் இவ்வளவு நாட்களாகத் தேடிகொண்டிருந்தேன். அப்படியென்ன உன் வாள்வீச்சில் பிரமாதம் இருக்கிறது ? கொஞ்சம் எங்களிடமும் காட்டேன்" என்று கொக்கரித்தான். உடன்வந்த அனைவரும் காளியப்பனைப் பார்த்து நகைத்தார்கள்.

" வாங்கடா முன்னால்." என்றபடி காளியப்பனும் இரும்பொறையும் கால்களை விரித்து ஒரு பெரும் வாள்சண்டைக்குத் தயாரானார்கள்.

வந்தவர்கள் அனைவரும் இவர்களைச் சூழ்ந்து கொண்டனர். உடனே இரும்பொறையும் காளியப்பனும் எதிரெதிர்த் திசையில் திரும்பி தங்கள் முதுகுகள் உரசும்படி நின்றனர். ஆனால் வந்தவர்களில் இருவர் மட்டுமே இவர்களை நோக்கிப் பாய்ந்தனர். மற்றவர்கள் ஒரு அரண்போல் இவர்களைச் சுற்றி நின்றனர். உக்கிரமான சண்டை துவங்கியது. தீவட்டியின் வெளிச்சத்தில் மின்னிய வாட்கள், இடிபோன்ற சப்தங்களுடன் மோதியது. காளியப்பன் ஒன்றும் சாதாரண ஆள் இல்லையே! இரும்பொறையும் தானும் குறைந்தவனில்லை என்பதுபோல் எதிர்த்தவனிடம் பொருதினான். ஆனால் காளியப்பனின் ஒவ்வொரு வாள் வீச்சும் எதிராளியின் தற்காப்பு முறையில் சாதுரியமாகத் தடுக்கப்பட்டது. அவனும் பல சண்டைகளைக் கண்டவன்போன்றுதான் தெரிந்தான். ஒரு வினோதம் அப்போது நடந்தது. சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு முகமூடி வீரர்கள் மின்னல் போல் பின்வாங்க, அடுத்த இரண்டு வீரர்கள் அதே வேகத்தில் உட்புகுந்து சண்டையைத் தொடர்ந்தனர். இம்முறை காளியப்பனின் தாக்குதல்கள் உக்கிரமாக இருந்தது. மீண்டும் அதே வினோதம் நடந்தது. தாங்கள் யாரிடம் சண்டையிடுகிறோம் என்று புரியாமல் காளியப்பனும் இரும்பொறையும் சோர்வடைய துவங்கினர். ஆனால் வந்தவர்கள் மாற்றி மாற்றி சண்டையைத் தொடர்ந்தனர். யாரும் காயம் படவில்லை. ஆனால் வாட்கள் மோதிக்கொள்ளும் ஓசை அந்த பிராந்தியத்தையே கலங்கடித்தது.

உடளவில் இருவரும் சோர்ந்து கொண்டிருந்த இவ்வேளையில் பின்புறமிருந்து ஒரு பெருங்குரல் கேட்டது.

" நண்பர்களே இரண்டுபேரை இருபதுபேர் தாக்குவது போர் தர்மமில்லையே. " என்றபடி நின்றிருந்தார் அந்த முதியவர்.

" சரி பெரியவரே, அப்படியானால் நீங்கள் இருபதுபேர் வாருங்கள் மோதிப் பார்க்கலாம்." என்று இரைந்தான் ஒருவன். இந்நேரம் சண்டை நின்றிருந்தது.

" இருபது பேரில்லை நானும் என்மகனும் இருக்கிறோம் எங்களோடு மோத நீங்கள் தயாரா? " என்றார் முதியவர்.

" வேண்டாம் பெரியவேரே, வயதான காலத்தில் உமக்கு ஏன் இத்தனை சிரமம். வாள் பிடிப்பதற்கு கையில் வலுவுள்ளதா?" என்றான் அவன்.

" எனக்கு வாள் சண்டைத் தெரியாது ஆனால் கம்புச் சண்டைத் தெரியும் என்மகனும் அவ்வாறே. நீங்கள் உங்களுக்குத் தெரிந்த வாள்சண்டை கம்புச் சண்டை எதுவானாலும் இடுங்கள்" என்றார்.

" உங்கள் விதியை யாராலும் மாற்ற முடியாது பெரியவேரே. எங்கள் வீரர்கள் பல சண்டைகளைக் கண்டவர்கள். உங்கள் உயிர் அவர்களுக்கு வெல்லக்கட்டி " என்றான்.

" அதையும் பார்த்துவிடலாம்" என்றபடி முன்னால் வந்தான் அவரது மகன் எனப்பட்ட வாலிபன்.

அவன் கைகளில் சற்றுமுன் ஒடிக்கப்பட்ட இரண்டு நீண்ட கிளைகள் இலைகளோடு இருந்தன. அதில் ஒன்றை எடுத்து முதியவரிடம் கொடுத்தான். புத்துணர்ச்சியோடு இரும்பொறையும் காளியப்பனும் இவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். நால்வரும் நான்கு திசையை நோக்கி நிற்க வாட்களோடு முகமூடி வீரர்கள் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். உக்கிரமான சண்டை துவங்கியது. நால்வரும் தங்கள் முழுத் திறமையையும் காட்டத் துவங்கிய சிறிது நேரத்தில் வாட்கள் அந்தரத்தில் பறந்தன. இளைஞனின் கையிலிருந்த கம்பு வாள்பிடித்தவர்களின் மணிக்கட்டை பதம்பார்த்தது. அவன் கம்பின் வேகம் கணிக்க இயலாத ஒன்றாக இருந்தது. கம்பு வீச்சின் சப்தம் கேட்டதேயன்றி கம்பினைக் காண இயலவில்லை. அமர்ந்தும் எழுந்தும் துள்ளியும் அவன் சாகசம் செய்துகொண்டிருந்தான். வாள்களை இழந்தவர்களின் இடுப்பினை அவனது கால்கள் பதம் பார்த்தது. ஒருபுறம் இவன் இவ்வாறாகையில் மறுபுறம் முதியவர் சதிராடினார். இந்த வயதில் கைகளில் இவ்வளவு வலிமையா? ஒருமுறை தலைக்குமேல் பறந்த கம்பு கணநேரத்தில் நிலப்பரப்பை ஒட்டி பயணித்தது.அடுத்து பின்புறமாக சுற்றிவந்து மார்பளவு உயரத்தில் எதிராளியை உராய்ந்து சென்றது. உலக்கை இடிபோல் கால்களில் வந்துவிழும் அடிதாங்காது முகமூடிகள் ஒவ்வொன்றாய் கீழே விழ ஆரம்பித்தனர். விழும் வேகத்தில் அவர்களின் வாட்கள் தெறித்து விழுந்தன. இவர்களின் ஆக்ரோசத் தாக்குதல் தொடர அனைத்து முகமூடிகளும் இவ்விருவரை நோக்கிவரத் துவங்கினர். காளியப்பனும் இரும்பொறையும் சண்டையிட ஆளில்லாமல் வெறுமனே இவர்களின் சண்டையை வியந்தபடி நின்றனர். சுற்றி நின்ற கூட்டம் மூச்சுவிட மறந்து நின்றது. சற்று நேரத்தில் முகமூடிகள் கிடைத்த அடிகளோடு எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். தாங்கள் களவாடிய பொருட்களை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்த அவர்களை துரத்த யாரும் முன்வரவில்லை. சுற்றி நின்றவர்கள் மெதுவாக சுய நினைவு பெற்றார்கள். உடலில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி முதியவரும் வாலிபனும் சாதாரணமாக நின்றனர். பலத்த கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி அவரவர் உடைமைகளைத் தேடி எடுத்துச் சென்றார்கள் சத்திரத்தில் தங்கியிருந்தவர்கள்.

"உன்போன்றதொரு வீரனை நான் கண்டதில்லை " என்றபடியே காளியப்பன் அந்த வாலிபனை தோள்சேர்த்து அணைத்துக்கொண்டான்.

" வீரனே உன்பெயர் என்ன ?" என்று கேட்டான் காளியப்பன்.

" மருதன் " என்றான் வாலிபன்.

" நீங்கள் எங்களுக்கு செய்த உதவியை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். நீங்கள் விரும்புகையில் நாளை எங்களோடு சேர்ந்து சோழ நாட்டிற்கு நீங்கள் வரலாம். ஒரு குறைவும் இல்லாமல் உங்களை விழமுடியும் வரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்." என்றான் காளியப்பன்.

இப்போது மாதங்கியும், அமுதவல்லியும் முதியவரின் இரண்டு மகள்களோடு நின்றுகொண்டிருந்தனர். அனைவரும் முதியவரின் பதிலை எதிர்பார்த்து நின்றனர்.

தன் மகனையும் மகள்களையும் ஒருமுறை நோக்கிய முதியவர்,

" சரி அப்படியே ஆகட்டும் " என்றார்.

" நல்லது,பெரியவரே, எங்கள் அழைப்பை ஏற்றதற்கு. நன்றி நாளை உங்களை அழைத்துச்செல்ல ஒரு வில்லுவண்டி ஏற்பாடு செய்கிறேன். இதோ இந்த முத்திரை மோதிரம். இது உங்களுக்கு இடையில் உண்டாகும் சிரமங்களுக்கு உதவியாக இருக்கும் நாளை அதிகாலையில் நாங்கள் புறப்பட்டு விடுவோம். பின் உங்களை கோட்டை வாயிலில் சந்திக்கிறேன் " என்றபடி ஒரு சிறப்பு மோதிரத்தை கொடுத்தான் காளியப்பன்." அப்படியே ஆகட்டும்" என்று மோதிரத்தை பெற்றுக்கொண்ட முதியவர் திரும்பி ஒரு வெற்றிப்புன்னகையோடு வாலிபனின் தோள்பற்றி புல்வெளியை நோக்கி நடந்தார். பெண்கள் அனைவரும் சத்திரத்திற்கு திரும்பினர்.

தொடரும்...

கீதம்
06-04-2011, 08:29 AM
கதை நன்றாக செல்கிறது, டெல்லாஸ். தொடர்ந்து கொடுங்க.

சரித்திரக்கதை எழுதுவதில் பல சிரமங்கள் இருக்கும் என்று அறிவேன். இருந்தாலும் தொடர்களுக்கிடையில் சற்று நீண்ட இடைவெளி விழுந்துவிட்டதால் வாசகர்கள் தொடர்வதில் தொய்வும் உண்டாகிவிடுகிறது. மீண்டும் பழைய பகுதிகளைப் படித்தபின்னரே கதை விளங்குகிறது. தொடர்ந்து கொடுத்தால் விறுவிறுப்பு குறையாமல் இருக்கும்.

Nivas.T
06-04-2011, 10:26 AM
நீண்ட இடைவேளைக்கு பின்பு பதித்ததால் முதல் அத்தியாத்திலிருந்து வரவேண்டும்

தொடர்ந்து பதியுங்கள் டெல்லாஸ்

கதை அருமையாக நகர்கிறது

Nivas.T
06-04-2011, 11:33 AM
நீண்ட இடைவேளைக்கு பின்பு பதித்ததால் முதல் அத்தியாத்திலிருந்து வரவேண்டும்

தொடர்ந்து பதியுங்கள் டெல்லாஸ்

கதை அருமையாக நகர்கிறது

dellas
06-04-2011, 04:37 PM
நன்றி கீதம், நிவாஸ். பணி நிமித்தமாக தொடர முடியாமல் போய்விட்டது. அடுத்த பாகம் வெகு விரைவில்

செல்வா
07-04-2011, 03:17 AM
சரித்திரக் கதைகளின் காதலன் நான். சாண்டில்யன், அகிலன், கல்கி, காண்டீபன் என்று பாலகுமாரனின் உடையார் வரைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன்.
மன்றில் சரித்திரக் கதைகள் குறைவுதான். உங்கள் தொடர் மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
மன்றில் பலவித படைப்புக்களும் பெருக வேண்டும் என்பது என் தீராத ஆவல்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் இதே திரியில் தனித்தனி பதிவுகளாகக் கொடுங்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

dellas
07-04-2011, 05:37 AM
உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி செல்வா அவர்களே.