PDA

View Full Version : MADE FOR EACH OTHER..ரங்கராஜன்
24-03-2011, 02:23 PM
MADE FOR EACH OTHER..

வணக்கம் உறவுகளே...

எல்லாரும் என்னைப் போல சுகமாக தான் இருப்பீர்கள், உண்மையில் எனக்கு இந்த பதிவை போட மனமில்லை... இதற்கு காரணம் இதற்கு முன்பு மன்றத்தில் நிகழ்ந்த மனக்கசப்பு சம்பவங்கள் ஒருபுறம் இருந்தாலும், மீதியுள்ள இடத்தில் நான் இப்போது சொல்லப்போகும் சம்பவம் நிறைந்து இருக்கிறது... இந்த சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆகிறது..... யாரிடமும் இதனை நான் பகிர்ந்துக் கொள்ளவில்லை, இன்று மதியம் ஆதனுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது இதனை குறிப்பிட்டேன். சொல்லவேண்டும் என்று கூறவில்லை பேச்சுவாக்கில் சொல்லி விட்டேன்.... சம்பவத்தை கேட்டு சில நிமிடங்கள் அவன் பேசவே இல்லை....... நானும் தான்..... மனதை பாதித்த சம்பவம் என்பதால் இதனை இங்கு பதிக்கிறேன்...

இருந்தும் எழுத மனம்வரவில்லை.... சமீபகாலமாக இவ்வாறு என் மனம் அமைதியாக இருக்கும் போது, நான் இளையராஜா கூறிய அறிவுரைகளை பின்பற்றிக் கொண்டு இருக்கிறேன்....... எதோ ஒரு எஃப் எம் நிகழ்ச்சியில் இளையராஜா இப்படி சொல்வார்... உங்களில் சிலர் இதை கேட்டும் இருப்பீர்கள்....

“நாம் எப்போதும் நல்ல இசையினே கேட்கவேண்டும், நம் மனதை நல்ல இசையை நோக்கி திருப்ப வேண்டும், கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவோம், புல் பூண்டில் கூட இறைவன் இருக்கிறான், அவன் நல்ல இசையில் எப்போதும் குடியிருப்பான்”

அதனால் நான் இந்த பதிவை ராகதேவனின் மிகச்சிறந்த இசை தொகுப்பை ஒன்றைக் கேட்டுக் கொண்டே எழுதுகிறேன்.... அதன் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.... விருப்பப்பட்டால் அதை குறைந்த சத்தத்தில் கேட்டுக் கொண்டே இந்த பதிவை நீங்கள் படிக்கலாம்......

http://www.youtube.com/watch?v=wN4jc0lStOA&feature=related

நம் வாழ்க்கையை நாம் சுவாரஸ்யமாக வாழ்வதற்கு காரணம் அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என்று தெரியாததால் தான்... ஒருவேளை சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் போது TIME TABLE இருப்பதை போல, அடுத்த கிளாஸ் கணிதம், அதுக்கு அடுத்து இயற்பியல், அதுக்கு அடுத்து சமூக அறிவியல் என்பதைப் போல,.... நம் தின வாழ்க்கையிலும் இன்னும் பத்து நிமிடத்தில் நீ பேருந்தில் ஏறுவாய், அதுக்கு அடுத்து எட்டாவது நிமிடத்தில் நீ ஆபிஸில் மேனேஜரிடம் திட்டு வாங்குவாய், அப்போது உன்னை பார்த்து மேனேஜரின் புதிதாக சேர்ந்த பிஏ சிரிப்பாள், என்று அன்றைய நிகழ்வுகளின் TIME TABLE தினமும் அதிகாலை உங்களை வந்து சேர்ந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்குமா...... அல்லது நாம் கேல்குலேட்டர், கணிணியைப் போல் இல்லை, ஆறு அறிவுள்ள மனிதர்கள் என்பதற்கு அத்தாட்சி தான் இருக்குமா.....

புதிர்களும், மர்மங்களும், எதிர்பார்ப்புகளும் தானே வாழ்க்கை......சில தினங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த சில கோர்வையான சம்பவங்கள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது, அந்த சிந்தனை என்னை மறுபடியும் இந்த மன்றத்தில் எழுத வைத்துள்ளது..... எனக்கு எப்போதும் இந்த பிச்சைகாரர்களின் வாழ்க்கை ஆச்சர்யத்தை அளிக்கும், எப்படி அடுத்த வேளை சொத்துக்கே இல்லாமல் அவர்கள் ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடியே வாழ்கிறார்கள் என்று.... எனக்கும் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற பல நாட்களாக ஆவல்...... பிச்சைக்காரன் வாழ்க்கை என்றால் பிச்சை எடுக்க வேண்டும் என்றில்லை, பணமில்லாமல் முகம் தெரியாத தேசத்தில் மக்கள் முகங்களுடன் புதைந்து தொலைந்து போக வேண்டும் என்று...

கையில் ஒரே ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு, ரயில் ஏறினேன். இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட டிக்கெட் விலை, குறைவாக இருந்தது. ஏறி அமர்ந்தேன். காலியாக இருந்தது. அரசு வாகனம் என்றாலே அதில் பராமரிப்பு இருக்காது. அதுவும் இது மத்திய அரசு வாகனம் வேறு, பெட்டி முழுவதும் மல்லிகைப்பூ வாசனை அடித்தது. ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ கொஞ்சம் கஷ்டப்பட்டு தானே ஆகவேண்டும். அமைதியாக ஜன்னல் வழியாக பார்த்தேன். வெளியில் காட்சிகள் எதுவும் தெரியவில்லை, ஆனால் மனதில் பல காட்சிகள் ஓடிக் கொண்டு இருந்தது. ரயில் கிளம்புவதற்கு முன்பு, ஒரு வயதான தம்பதியர் அந்த பெட்டியில் வந்து அமர்ந்தனர். என் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் வந்த அன்னியர்களைப் போல அவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பார்த்தவுடனே மனம் லேசாகிப் போனது. முதியவர்கள் என்றாலே வளர்ந்த குழந்தைகள் தானே, அதுவும் சில முதியவர்களைப் பார்த்தாலே, முகத்தில் ஒருவித தெய்வீகப் பொலிவு தெரியும். நம் மன்றத்தின் தல மணியாவை பார்த்தவர்கள் இதனை கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள், நெற்றியில் சிறிய அளவில் செந்தூரம் வைத்துக் கொண்டு, பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு அவர் நடந்து வரும் அழகு இன்றும் என் கண்ணில் இருக்கிறது. அவரிடம் அந்த பொலிவு உண்டு... அந்த மாதிரி தெய்வீக பொலிவுடன் இருந்தனர் அந்த தம்பதினர்..... நான் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லையே..... திருப்பதிக்கு. அவர்களும் திருப்பதிக்கு தான் செல்கிறார்கள் என்பது அவர்களின் நெற்றியில் இருந்த நாமம் எனக்கு விளக்கியது. அந்த முதியவருக்கு வயது 80 இருக்கும், இந்தியன் தாத்தா கமலைப் போல முற்றிலுமாக வெள்ளை முடி, நெற்றியில் அழகான நாமம், வெள்ளை நிற முழுக்கை சட்டை, அதே நிறத்தில் சந்தனத்தை கலந்தால், என் நிறம் வருமோ அந்த நிறத்தில் வேஷ்டி, அந்த பெட்டியின் மல்லிகைப்பூ வாசத்தை இவரின் ஜவ்வாது வாசனையினால் மாற்றினார். அருகில் அவரை விட 10வயது குறைந்த அவரின் மனைவி, சம்பிளான பட்டுப்புடவை சரசரக்க, சரியான அளவில் பொட்டு, கருப்பும் வெள்ளையும் கலந்த தலை முடியில், வெளீர் பச்சை நிறத்தில் மல்லிப்பூ, மூக்கின் இரு பக்கமும் மூக்குத்தி...... ரயில் ஏறி வந்த களைப்பில் இருவரும் மூச்சை இழுத்து விட்டபடி அமர்ந்தனர்.

“ரயில் எப்போ கிளம்பும் சார்” அந்த பாட்டி என்னைப் பார்த்து கேட்டாள்.

“ரயில் கிளம்பி ஐந்து நிமிடம் ஆகிறது”

“கிளம்பிடுத்தா, ஏன்னா பாருங்களேன் நாம் கவனிக்கவே இல்லை”

“நான் கவனிச்சேன் டி”

“சொல்லவேண்டியது தானே ன்னா”

“சொன்னா.... ரயிலை நிறுத்தி இருப்பியா” என்று பாட்டியின் தோளை இடித்தபடி சிரித்தார் அந்த பெரியவர்.

“சத்த சும்மா இருங்கோ” என்று விலகி அமர்ந்து, சார் எங்க திருப்பதிகா என்றாள். நான் அமைதியாக ம்ம் என்றேன். இந்த மாதிரியான பயணத்தில் பேசிக் கொண்டு வருபவர்களுக்கு, உண்மையில் நான் நல்ல கம்பனி கிடையாது, என் உடல் எங்காவது பயணம் செய்துக் கொண்டு இருக்கும் போது, என் மனம் அதை விட வேகமாக வேறு எங்காவது பயணம் செய்துக் கொண்டு இருக்கும்.

“கல்யாணமா” என்றாள் என்னை விடாமல்.

“இல்லை” என்றேன்.

“பின்ன எதுக்கு சார் போறீங்க, சாமி தரிசனத்துக்கா” என்று தொடர்ந்தாள். உடனே பக்கத்தில் இருந்த தாத்தா, பாட்டியின் தொடையை தட்டி “சும்மா இரு டி அவாளை ஏன் தொந்தரவு பண்ற சத்த சும்மா இரு, பையில ஆரஞ்சு இருக்கு பாரு எடுத்து சாப்பிடு”

“ரயில் படிக்கெட்டு ஏறி வந்தது ஓரே படபடன்னு வருதுன்னா, அதான் கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள சாருகிட்ட பேசறேன், இந்த பெட்டியில நாம மட்டும் தானே இருக்கோம், சும்மா ஒத்தாசைக்கு பேசறதுல என்ன தப்பு, இல்ல சார்” என்றாள் என்னை நோக்கி..... என் தலை இல்லை என்பது போல தலையை ஆட்ட நினைத்தாலும், உதடு அதற்கு முன்பு அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டது.

“ஏன்னா கொஞ்சம் தண்ணி எடுத்து குடுங்களேன், தாகமா இருக்கு”

“அதான் ஆரஞ்சை சாப்பிட சொன்னேன்”

“சொல்றத மட்டும் ஏன்னா நீங்க செய்யவே மாட்றீங்க”

“இந்த தண்ணி குடி, நீ மட்டும் உன் செயலை மாத்திக்காதே”

“சரி குடுங்க, ஆரஞ்சை”. ரயில் தள்ளாட்டத்தில் பொறுமையாக பையில் இருந்த அஞ்சாறு ஆரஞ்சு பழத்தை எடுத்து இருப்பதிலே பழமாக இருக்கும் ஆரஞ்சை எடுத்து உரித்து ஓவ்வொரு சொலையாக பாட்டிக்கு கொடுத்தார். இவ்வாறான காட்சியை பார்த்ததுமே மனதிற்குள் ஒருவிதமான சந்தோஷம் வந்து விட்டது. இளையராஜாவின் மிகச்சிறந்த மெட்டுகளை கேட்டது போல இருந்தது மனது. சொலையை உரித்தபடி என்னை நோக்கிய அந்த தாத்தா ஒன்றை நீட்டினார். நான் வேண்டாம் என்பதைப் போல தலையை ஆட்டினேன்.

“பயப்படாதீங்க, இதுல மயக்கமருந்து எதுவும் கலக்கல, அப்படி கலந்தாலும், உங்ககிட்ட இருந்து எதையும் என்னால தூக்கிட்டு ஓட முடியாது, பாருங்க இவ வேணும்னா நல்லா ஓடுவா, இந்த 60 வருஷத்துல பலமுறை அம்மா வீட்டுக்கு ஓடி இருக்கா ஹா ஹா ஹா” என்று கூறியபடியே என் கையில் அவர் எழுந்து வந்து ஆரஞ்சை திணித்து விட்டு சென்றார்.

“கோவிலுக்கு தானே போறீங்க” என்றார்.

“ம்ம்”

“FAMILY முன்னாடியே போயிட்டாங்களா”

“ம்ம்”

“எதுல”

“சார் தப்பா நினைச்சிக்காதீங்க சார், எனக்கு ஹார்ட்டு ஆப்ரேஷன் போன மாசம் தான் நடந்தது, அதனால் டாக்டர் என்னை அதிகம் பேசக்கூடாதுனு சொல்லி இருக்காங்க,..... சாரி” என்று பொய் சொல்லி விட்டு, என் பையில் இருந்த டிராகன் என்ற சீன வரலாற்றைப் பற்றிய புத்தகத்தை எடுத்து எதோ ஒரு பக்கத்தை படிக்க ஆரம்பித்தேன்.

“இந்தாங்க சார்” என்று இன்னொறு சொலையை அந்த தாத்தா என்னை நோக்கி நீட்டினார். இதை விட வலி பொருந்திய சூழ்நிலையில் நான் இருந்ததில்லை.... என் 98 கிலோ எடை அனைத்தும் சுருங்கி இப்போ நான் ஒரு கரும்புள்ளியாக என்னை உணர்ந்தேன். புத்தகத்தை மடித்து பையில் வைத்து விட்டு, அவர் தந்த ஆரஞ்சை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு.

“சார் எனக்கு FAMILY எல்லாம் இல்லை, சும்மா சாமி தரிசனத்து திருப்பதிக்கு போறேன், நல்ல FAMILYயை குடுனு வேண்ட” என்று புன்னகைத்தேன்.

“கண்டிப்பா கொடுப்பார், கொடுப்பார், பெருமாலை வழிபட்டால் எல்லாம் கிடைக்கும்”

“எங்க ஆறாவது பையன் வயித்து பொண்ணுக்கு புள்ள பொறந்து இருக்காம், ஈமெயில் அனுப்பி இருந்தா, பையன் செக்கச்சவேல்னு என்னை மாதிரியே இருக்கான், அதான் பெருமாளை தரிசிக்கலாம்னு போறோம்”

“பெருமை தான் போங்க” இடித்தாள் பாட்டி.

“உங்களுடைய எத்தனாவது பையன்னு சொன்னீங்க”

“ஆறாவது பையன், மொத்தம் 9 குழந்தைங்க.. எல்லாரும் அப்ராடில் இருக்கா”

“சார் என்ன வேலையில இருந்தீங்க”..... இந்த கேள்வியை கொஞ்சம் தள்ளி கேட்டு இருக்க வேண்டுமோ...

“போஸ்டு மாஸ்டரா இருந்தேன்”.

“ஏன்னா ரயில் என்ன இப்படி குலுங்குது, தலை சுத்தறது, நான் படுத்துக்கட்டுமா” என்று தாத்தாவின் பதிலை எதிர்பார்க்காமல், அப்படி சீட்டில் தாத்தாவின் தொடையில் சாய்ந்தாள் பாட்டி.

அதன் பின் சில நிமிடங்கள், தாத்தாவும் நானும் பேசினோம். அப்புறம் எனக்கு கண்ணை கட்டியது, நானும் சீட்டில சரிந்தேன். திருப்பதி வந்தது. தெலுங்கு சத்தத்தை கேட்டு எழுந்தேன். தாத்தா ஜன்னல் வழியாக வெளியில் கன்னத்தில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டு இருந்தார். பாட்டி தொடையில் படுத்தபடி தூங்கிக் கொண்டு இருந்தாள்... முகத்தை துடைத்துக் கொண்டு தலையை வாரிக் கொண்டு, என் பையை எடுத்துக் கொண்டு இறங்க தயாரானேன். அப்போதும் தாத்தா ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்தார்..

“சார் ஸ்டேஷன் வந்துடுச்சு, வாங்க இறங்கலாம், யாராவது வரணுமா, பையை நான் இறக்கட்டுமா” என்றேன்... பொறுமையாக ஜன்னல் பக்கத்தில் இருந்து தன்னுடைய பார்வையை என்னை நோக்கி திருப்பிய அவர்,

“அலமு செத்து போயிட்டா, எனக்கு என்ன செய்றதுனு தெரியில சார்” என்று தன் தொடையில் படுத்திருந்த அந்த பாட்டியின் தலையை தடவினார்.

ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அப்படியே பையுடன் நானும் சீட்டில் சரிந்தேன்.

“என்ன சார் சொல்றீங்க” என்று அந்த பாட்டியை பார்த்தேன், கண்கள் மூடிய நிலையில், மூச்சு பேச்சில்லாமல் கிடந்தாள். என் கண்கள் குளமாகின, தாத்தா அவளின் தலையை தடவிக் கொடுத்தபடி, நெற்றியில் அவள் பொட்டை சரி செய்தார்,....பிறகு ஜன்னல் வழியாக வெறித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தார். சில நிமிடங்கள் அப்படியே எங்கள் மூவருக்குள் கழிந்தன.

“சார் வாங்க சார், பாட்டியை தூக்கி கீழ வச்சி ஆக வேண்டியதை பார்ப்போம்”

“இல்ல தம்பி, நீங்க தொடாதீங்க, நீங்க கோவிலுக்கு எதோ வேண்டுதலா போறீங்க தீட்டு ஆயிடும், நான் பார்த்துகிறேன், நான் பார்த்துகிறேன்” என்று பாட்டி முகத்தை வெறித்தபடி பார்த்தபடி சொன்னார்.

“சார் இல்ல பரவாயில்லை சார்,...”

“தம்பி எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சா, கொஞ்சம் தண்ணி மட்டும் வாங்கி வந்து கொடுங்களேன், தொண்டை வரண்டு போய், நாக்கு ஒட்டுது”

சரி சார் என்று ரயிலில் இருந்து எகிறி குதித்து ரயில் நிலையத்திற்கு வெளியே கூட்டம் மிகுந்த ஒரு கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு, ஆம்புளன்ஸ் எதாவது வெளியில் இருக்கிறதா என்று விசாரித்து விட்டு, ரயிலை நோக்கி ஓடினேன். பெட்டியை அடைந்தேன்....... அந்த பெரியவரை காணவில்லை, தனியாக அந்த பாட்டியின் பிணத்தை தூக்கிக் கொண்டு எப்படி அவர் சென்றார் என்ற சந்தேகத்துடன்.... அருகில் இருந்த கடைக்காரனை விசாரித்தேன்... ரயில்வே ஊழியர்களின் துணையுடன் அந்த தாத்தா பாட்டியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக கூறினார்கள். எந்த மருத்துவமனை என்று விசாரித்தேன், விடை கிடைக்கவில்லை. கையில் சில பத்து ரூபாய் நோட்டுகள் தான் இருந்தது. அரை மனதுடன் திருமலைக்கு சென்றேன்...

ஒரு பேச்சுக்கு எனக்கு நல்ல FAMILY கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள திருப்பதிக்கு வந்து இருக்கிறேன் என்ற சொன்ன காரணத்திற்காக, அந்த தாத்தா என் வேண்டுதலில் தீட்டு பட்டு விடக்கூடாது என்று இவ்வாறு செய்திருக்கிறார், அதுவும் ஒரு மோசமான நிலைமையில்.....60 ஆண்டுகள் உடன் வாழ்ந்தவளை நடுதெருவில் தொலைத்த நிலையிலும் என்னுடைய நிலைமை எண்ணி அக்கறையுடன் அவர் செய்த காரியம் என் மனதை அறுத்தது.

திருமலையில் இரண்டு நாட்கள் அலைந்தேன், திரிந்தேன், இரவில் தெருவில் படுத்து உறங்கினேன்.... இலவச உணவை உண்டேன். ஆனால் கோவிலுக்கு மட்டும் போகவில்லை.... போக மனம் விரும்பவில்லை.... நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த அந்த மூத்த தம்பதியருக்கு கௌரவமான சாவை இறைவன் தந்து இருக்கலாம்...... அந்த இரண்டு நாட்கள் இரவும் என் முழு மனதிலும் அந்த தம்பதியர்களின் எண்ணம் மட்டும் தான் நிறைந்து இருந்தது, அந்த தாத்தாவிற்காக வாங்கிய முழு தண்ணீர் பாட்டிலை கட்டிப்பிடித்த படி வானத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன்...... வீட்டிற்கு திரும்பி வந்ததும், அந்த தண்ணீரை குடிக்க மனமில்லாமல்,.... சமீபத்தில் பேருந்து பயணத்தின் போது, அந்த முழு தண்ணீர் பாட்டிலை சீட்டின் அடியில் வைத்து விட்டு வந்து விட்டேன்........ கண்டிப்பாக தாகம் நிறைந்த வரண்ட ஒரு தொண்டையை அந்த தண்ணீர் குளிர வைக்கும் என்ற நம்பிக்கையுடன்.....

நன்றி....

பாரதி
24-03-2011, 02:38 PM
என்ன சொல்ல...? இப்படியும் மனிதர்கள்...!

ஜானகி
24-03-2011, 02:51 PM
.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை...பலருடன் பகிர்வதில் உங்கள் மன அழுத்தம் குறையும்.

வாழ்க்கையின் உண்மைகள் சில சமயங்களில் ஜீரணிக்கமுடியாதபடி இருக்கின்றன..!

இச்சம்பவத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு என்ன பாடம் புகட்டுகிறது என்பதை நாம் நிதானமாக யோசிக்கவேண்டும்

உண்மையில் கொடுத்துவைத்தவள் அந்தப் பாட்டிதான்....உறக்கத்திலேயே மிளாத் துயில் கொண்டாள்...பாவம் அந்தத் தாத்தா...எப்படித் தாங்குவார் இதை...

ஜானகி
24-03-2011, 03:06 PM
ஈஸ்வரனின் சிந்தனைத் தொகுப்பிலிருந்து இன்றய சிந்தனை....உங்கள் கவனத்திற்கு...

" எது நிகழ்ந்ததோ அது நம்மைக் காயப்படுத்தவில்லை ; அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அது தான் நம்மைக் காயப் படுத்துகிறது "

நன்றி : ஈஸ்வரனின் சிந்தனைத் தொகுப்பு

பின் குறிப்பு : இந்த இடத்திற்குப் பொருத்தமானதாக நான் நினைத்ததால் பதிவிட்டிருக்கிறேன். விதி மீறல் என்றால் மன்னிக்கவும்.

முரளிராஜா
24-03-2011, 03:17 PM
நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் இது
மேலும் அந்த இசை இந்த பதிவுக்கு ஏற்றாற்போல் உள்ளது
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

ஆதி
24-03-2011, 03:51 PM
நீ சொல்லியதை கேட்டுண்ட அதிர்வில் இருந்தே நான் இன்னும் மீளவில்லை, இந்த பதிவை படிக்கும் மன*தைரியம் சத்தியமா இல்லை..
இந்த சம்பவத்தஒ நினைக்கும் போதெல்லாம், என்னை அறியாமல் என் கண்கள் ஈரமூறுவிடுவதை தடுக்க இயலவில்லை...........

யாருக்கும் இது போலவோ, இது போன்ற வேன்றொன்றோ நிகழாமல் இருக்கட்டும்..........

Nivas.T
24-03-2011, 04:07 PM
தக்ஸ்,

நெகிழவைக்கும் சம்பவம், மனிதனை மனிதனாகச் செய்யும் அனுபவம். இது அனைவருக்கும் ஒரு பாடம். இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால் தான் மனிதநேயம் என்னும் சொல் அர்த்தம்மிகுந்ததாய் இருக்கிறது

மிக்க நன்றி தக்ஸ்

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 05:26 PM
மனிதர்களுள் இப்படியும் சிலர்..மனிதநேயம் இன்னும் உள்ளது ..உங்கள் பதிவின் மூலம் ...அந்த பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்..

கீதம்
24-03-2011, 11:14 PM
மனம் கனக்கச் செய்த பதிவு, ரங்கராஜன். இப்போதும் கனத்துக்கொண்டிருக்கிறது.

அறுபது வருடங்களாய் ஆத்மார்த்தமாக வாழ்ந்த தம்பதியின் நிறைவான வாழ்க்கைப் பயணத்தின் இறுதித் தருணங்களுக்கு சாட்சியாய் உங்களை நீங்களே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அவர்களுக்கு நேர்ந்த இக்கட்டின்போது உதவமுடியா சூழலையும் அறிந்தோ அறியாமலோ நீங்களே உருவாக்கியுமிருக்கிறீர்கள்.

பிச்சைக்காரர்கள் அடுத்தவேளை வயிற்றுப்பாட்டுக்காக பிச்சை எடுக்கிறார்கள். அத்தகையத் தேவை எதுவுமில்லாதபோதும் நீங்களும் ஒரு பிச்சைக்காரனைப்போல் வாழ நினைத்த மாத்திரத்தில் விளங்குகிறது, நிச்சயமாய் அந்த நேரத்தில் உங்களுக்குத் தேவைப்பட்ட, உங்களிடம் இல்லத ஒன்றைத் தேடி அப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள். பயணத்தின் முடிவில் மனம் கனத்தாலும் தேடியதைக் கண்டடைந்திருப்பீர்கள் அல்லது தேடுதலைக் கைவிட்டு இருப்பதில் நிம்மதியடைந்திருப்பீர்கள். எல்லாம் நன்மைக்கே!

அன்பான கணவனின் மடியில் தலைவைத்தபடி உயிரைவிட்டது அந்த அம்மாவின் பாக்கியம். அதுவே அவர் கணவனின் பாக்கியமும் கூட. ஆனால் இத்தனைப் பிள்ளைகள் பெற்றிருந்தும் அத்தனைப் பேரையும் அயல்நாட்டுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியாய் ஆறுதலுக்கும் உதவிக்கும் ஒருவருமின்றி அன்று அவர் என்னபாடு பட்டிருப்பார் என்பதை நினைக்கையில் வலி மிகுகிறது.

mania
25-03-2011, 02:55 AM
உன்னோடு சேர்ந்து என் நெஞ்சையும் கனமாக்கி விட்டாயே ரங்கராஜா....
அன்புடன்
மணியா

தாமரை
25-03-2011, 03:35 AM
பிச்சைக்காரனாய் வாழ எண்ணிய ஒரு நிமிடத்தில் வாழ்க்கையின் நுணுக்கங்களை காட்டிவிட இறைவன் முடிவு செய்து விட்டதாகத் தோன்றுகிறது இந்த நிகழ்வு.

அன்பு என்றால் என்ன? எது உண்மையான வாழ்க்கை என்பதை இரு முதியவர் வாயிலாக உணர்த்திட இறைவனின் சித்தம் போல இருக்கிறது.

பலர் மனம் கனத்தாலும் அடிமனதில் நம் உயிர் பிரியும் போது நம் மீது அன்பு கொண்டவர் இப்படி நம்முடன் பிரியமாய் இருக்க அவர் மடியில் நம் உயிர் போகாதா என்ற ஒரு எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

கனத்த மனதுடன்

sarcharan
25-03-2011, 05:29 AM
அன்பில்லாத பணத்தை வைத்து பாலைவனத்தை வாங்கலாம்.
அன்பு மட்டுமிருந்தால் போதும் நெருப்பில் கூடத்தூங்கலாம்...

அந்த பெரியவரது நிலையை என்னால் உணரமுடிகிறது தக்ஸ்..

ஆதவா
25-03-2011, 05:34 AM
அந்த நிலைமையில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன்... நினைக்கவியலாத தருணங்கள்!! உண்மையில் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த (எங்களுடன் பகிர்ந்து கொண்ட) பல சம்பவங்கள் உங்களை மேலும் மேலும் செதுக்கிக் கொண்டே செல்கிறது!

தாமரை அண்ணா!! வாழ்க்கையின் நுணுக்கங்களை இறைவன் நிரூபிப்பதாக இருப்பின் அலமுவின் உயிரைப் பிடித்துக் கொண்டு போயிருக்க வேண்டாமே??? சாகிற வயிசா இது என்று சொல்லமுடியவில்லை... சாகிற நிலையா அது??

Mano.G.
25-03-2011, 07:49 AM
இந்த பதிவின் தொடக்கத்தில் தம்பி பதிந்தது போல் பள்ளி பாட அட்டவணை போல் நடப்பவைகளை முன் கூட்டியே நாம் அறிய நேர்ந்தால் வாழ்க்கையின் சுவாரசியங்கள் இல்லாமல் போய்விடுமே என அங்கலாய்த்தது எதற்கென இப்பதிவின் இறுதியில் புரியவைத்தது.

எனக்கென்னமோ அந்த அம்மாவின் மறைவு எவ்வித கஷ்டங்களும் இல்லாமல்
யாரையும் சங்கட படுத்தாமல் தன் அன்பான கணவனின் மடியில் சுமங்கலியாய்
இயற்கை எய்தியது அதுவும் பெருமாலை தரிசிக்க செல்லும் வழியில் , அப்பாட்டி மிகவும் புண்ணியம் செய்தவர், அந்த அப்பா இன்னும் சில காலம் சோகத்திலும் கடந்த கால நினைவுகளிலும் காலத்தை கடத்துவார் அவருக்கு ஆண்டவன் மன தைரியத்தையும் வலிமையையும் கொடுக்க பிராத்திப்போம்

மனோ.ஜி

ரங்கராஜன்
25-03-2011, 08:46 AM
.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை...பலருடன் பகிர்வதில் உங்கள் மன அழுத்தம் குறையும்.

வாழ்க்கையின் உண்மைகள் சில சமயங்களில் ஜீரணிக்கமுடியாதபடி இருக்கின்றன..!

இச்சம்பவத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு என்ன பாடம் புகட்டுகிறது என்பதை நாம் நிதானமாக யோசிக்கவேண்டும்

உண்மையில் கொடுத்துவைத்தவள் அந்தப் பாட்டிதான்....உறக்கத்திலேயே மிளாத் துயில் கொண்டாள்...பாவம் அந்தத் தாத்தா...எப்படித் தாங்குவார் இதை...


ஈஸ்வரனின் சிந்தனைத் தொகுப்பிலிருந்து இன்றய சிந்தனை....உங்கள் கவனத்திற்கு...

" எது நிகழ்ந்ததோ அது நம்மைக் காயப்படுத்தவில்லை ; அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அது தான் நம்மைக் காயப் படுத்துகிறது "

நன்றி : ஈஸ்வரனின் சிந்தனைத் தொகுப்பு

பின் குறிப்பு : இந்த இடத்திற்குப் பொருத்தமானதாக நான் நினைத்ததால் பதிவிட்டிருக்கிறேன். விதி மீறல் என்றால் மன்னிக்கவும்.

என்ன ஜானகி மேடம், இப்படி சொல்லிட்டீங்க.... உங்க வார்த்தையில் என்ன தப்பு இருக்கிறது..... நீங்கள் கூறிய சிந்தினையும் பொருத்தமாக தான் இருக்கிறது.

எங்களைப் போல இளைவர்களின் வாழ்க்கையே உங்களைப் போல முதியவர்களின் வழிகாட்டுதலிலும், வாழ்த்துகளிலும் தானே இருக்கு......... நீங்கள் தப்பாக சொன்னால் கூட நான் அதை சரியாக தான் எடுத்துக் கொள்வேன் மேடம், கவலை வேண்டாம்........

sarcharan
25-03-2011, 08:51 AM
வயோதிகத்தில் கணவனில்லாத மனைவியும், மனைவியில்லாத கணவனும் வாழும் வாழ்க்கை ஒரு சிறு நரக வாழ்க்கை தான்.

ஜானகி
25-03-2011, 02:27 PM
விதி மீறல் என்று நான் குறிப்பிட்டது, மற்றொருவரின் பதிவை நான் வெளியிட்டுள்ளது சம்பந்தமாகத்தான் ! வேறொன்றுமில்லை...இந்த வெட்டுதல், ஒட்டுதல் எதுவும் எனக்குப் புரியவில்லை...அதுதான் !

ரங்கராஜன்
25-03-2011, 02:59 PM
விதி மீறல் என்று நான் குறிப்பிட்டது, மற்றொருவரின் பதிவை நான் வெளியிட்டுள்ளது சம்பந்தமாகத்தான் ! வேறொன்றுமில்லை...இந்த வெட்டுதல், ஒட்டுதல் எதுவும் எனக்குப் புரியவில்லை...அதுதான் !

ஹா ஹா

எனக்கும் தான்,........ விதி என்று அமைதியாக போக வேண்டியது தான் மேடம் ....... நம்மால் வேறு என்ன செய்ய முடியும்....

ஆதி
25-03-2011, 03:41 PM
விதி மீறல் என்று நான் குறிப்பிட்டது, மற்றொருவரின் பதிவை நான் வெளியிட்டுள்ளது சம்பந்தமாகத்தான் ! வேறொன்றுமில்லை...இந்த வெட்டுதல், ஒட்டுதல் எதுவும் எனக்குப் புரியவில்லை...அதுதான் !

அம்மா, இதில் எந்த விதி மீறலுமில்லை..

மற்றவர்கள் பதிவை மற்றவர்களது என்று சொல்லி பதிவதில் தவறொன்றுமில்லை..

அப்படி பதிய சொல்லியே நகலெடுத்தல் குறித்த திரியில் பேசப்பட்டது...

அதுவும் மன்ற நலனுக்காக...............

த.ஜார்ஜ்
25-03-2011, 04:25 PM
பிறந்தது ஆறாவது பிள்ளையின் குழந்தைதான் என்றாலும் முதல் பிறப்பை கண்டது போன்ற அதே சந்தோசத்துடன், அந்த தள்ளாத வயதிலும் கடவுளுக்கு நன்றி சொல்ல கிளம்பிய பெரியவர்களின் பாச உணர்வு... ஏங்க வைத்தது ஒருபுறம்.
எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தனிமைபட்டுபோன நிலை இன்னொரு புறம்.

என்ன புண்ணியம் செய்தார்களோ உறக்கத்திலே அமைதியாக போய் விட்ட உயிர்.. அது விடுதலையா.. அல்லது அந்த பெரியவருக்கு தரப்பட்ட தண்டனையா..அவரது தனிமை இன்னுமல்லவா அடர்த்தி கூடுகிறது...
அந்த இக்கட்டான நிலையிலும் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு, எவ்வளவு பொறுப்பாக,பெருந்தன்மையாக அந்த அனுபவசாலி நடந்து கொண்டிருக்கிறார் என்பதை நினைக்க, நினைக்க... என் மனம் பூரா அவர் உருவம்தான் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது.
அவருக்காகவும், அந்த தரிசனத்திலிருந்து அகல முடியாத ரங்கராஜனுக்கும் என் பிரார்த்தனைகள்.

சிவா.ஜி
26-03-2011, 01:25 PM
மனதில் சுமை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த தள்ளாத வயதிலும்...நல்ல நோக்கத்துக்காக வந்தவரின் பிரார்த்தனை பலிக்க வேண்டுமென நினைத்த அந்தப் பெரியவருக்கு எவ்வளவு பெரிய மனது...?

கனமான பதிவு தக்ஸ்.

govindh
27-03-2011, 12:09 PM
கனத்த மனதுடன்....
கண்ணீருடன்....

samuthraselvam
02-04-2011, 05:16 AM
வாழ்க்கையை உணர்ந்துகொள்ள இறைவனால் சில நேரம் இப்படி தான் நடக்கிறது.. அந்த சூழ்நிலையை யோசிக்கக்கூட மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.. நீ எப்படிண்ணா அந்த சூழ்நிலையை மேனேஜ் பண்ணின? அப்பா நினைச்சாலே மனம் வலிக்குது..