PDA

View Full Version : இறுதிக்கடிதம்



கீதம்
21-03-2011, 01:20 AM
இதற்குமுன் எழுதப்பட்ட
எண்ணிலாக் கடிதங்களின்
கதி பற்றியறியும் ஆவலில்
இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்.

முகவரியைத் தெளிவாகவே
முன்பக்கம் எழுதிவிட்டபடியால்
முன்குறிப்பிட்ட கடிதங்கள் எதுவும்
வந்துசேரவில்லையென்று சொல்லிநழுவ
வாய்ப்பேதுமில்லையுனக்கு.

அனுப்புநர் யாரென்றறியாக்காரணத்தால்
அநாமதேயமென்றெண்ணிப் பிரிக்கப் பயந்ததாய்
பொய்யுரைக்கவும் வழியில்லை.
பின்புறம் என்பெயரை
பெரிதாய் எழுதிவிட்டேன்.

உள்ளிருக்கும் வாசகங்கள்
உனக்கானவை அல்லவென்று
அத்தனை எளிதாய்ப் புறந்தள்ளி
பாசாங்கு செய்யவியலாது.

அகம் கொண்ட உன்மத்தத்தை
கணநேரமேனும்...
முகம் காட்டி முறுவல் பூக்கும்.

அவை உன்னை அடைந்த பொழுதுகளிலெல்லாம்
உன் மார்போடணைத்து மனதுக்குள்
மண்டியிட்டு மன்றாடி நின்றிருப்பாய்!

அதன்பின் அவற்றின் கதியென்னவென்பதை
அனுமானிக்க என்னால் இயலவில்லை.
அவை யாவும் தன் அந்திமக்காலத்தில்
உன்னை வந்தடையவில்லை,

வாழ்விப்பாயென்ற நம்பிக்கையுடனே
பயணித்து வந்திருந்தன பல மைல் தூரம்!
அவற்றை என்னதான் செய்தாய்?

இதரக் கடிதங்களின் கதி பற்றியறிய
எழுதப்பட்ட இக்கடிதத்தையும்
என்ன செய்வாயென யோசிக்கிறேன்.

முந்தையக் கடிதங்களோடு இதுவும்
உன் அலமாரியின்
ரகசிய இழுப்பறையில் பூட்டப்பட்டோ…

பரணிலிருக்கும் தகரப்பெட்டிக்குள்
பழந்துணிகளுக்கு மத்தியில் பதுக்கப்பட்டோ…
இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்
குறைவானநிலையில் இப்படி அனுமானிக்கிறேன்.

முந்தையக் கடிதங்களைப் போலவே
இதுவும் எரிக்கப்படலாம்
அல்லது புதைக்கப்படலாம்...

எவருமற்ற வனாந்திரத்தின் நடுவே
ஏராளமுறை வாசிக்கப்பட்டு,
இறுக்கமான மனநிலையோடு
ஒவ்வொரு அட்சரமும் உருத்தெரியாதபடி
எண்ணற்றத் துகள்களாய்க் கிழிக்கப்பட்டு...
கைகள் நடுங்க, காற்றிலே தூவப்படலாம்.

அவ்வாறு நிகழும் ஒவ்வொருமுறையும்
ஆழ்ந்த மெளனத்துடன் அஞ்சலி செலுத்தியோ...
அக்கடிதங்களின் அற்பாயுளுக்காக
சில துளிகள் கண்ணீர் விட்டோ...
உன்னை நீ ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படியான அவற்றின் இறுதிக்கதி பற்றி
தீர்மானமாய் அறியவரும்வேளையில்
போர்முனை அனுப்பப்பட்ட
வீரர்களைப் போலவே என் கடிதங்களும்
வீரமரணம் ஏற்றதை எண்ணி
நானும் இன்புற்றிருக்கலாம்.

கலாசுரன்
21-03-2011, 04:04 AM
கடிதங்கள் மிகவும் அருமை.

மீண்டும் இதுபோன்ற கடிதங்களை எதிர்பார்க்கிறேன் என்பதுபோல் எண்ணத் தூண்டிய கவிதை ..!!

வாழ்த்துக்கள் :)

கீதம்
21-03-2011, 04:07 AM
கடிதங்கள் மிகவும் அருமை.

மீண்டும் இதுபோன்ற கடிதங்களை எதிர்பார்க்கிறேன் என்பதுபோல் எண்ணத் தூண்டிய கவிதை ..!!

வாழ்த்துக்கள் :)

மிகவும் நன்றி கலாசுரன் அவர்களே....
இன்னும் வரக்கூடும்...
கடிதங்களல்ல, கவிதைகள்!:)

முரளிராஜா
21-03-2011, 08:09 AM
இதற்குமுன் எழுதப்பட்ட
எண்ணிலாக் கடிதங்களின்
கதி பற்றியறியும் ஆவலில்
இறுதியாக எழதியுள்ளாய் இக்கடிதம்.

முகவரியைத் தெளிவாகவே
முன்பக்கம் எழுதிவிட்டபடியால்
முன்குறிப்பிட்ட கடிதங்கள் எதுவும்
வந்துசேரவில்லையென்று சொல்லிநழுவ
வாய்ப்பும் எனக்கில்லை.


பின்புறம் உன்பெயரை
பெரிதாய் எழுதியபின்.
பிரித்து படிக்க ஆவலை தவிர
பயம் வருமோ எனக்கு.

உள்ளிருக்கும் வாசகங்கள்
அனைத்தும் எனக்காகவே
என்பதும் நானறிவேன்.


இவை என்னை அடைந்த பொழுதுகளிலெல்லாம்
என் மார்போடணைத்து மனதுக்குள்
மண்டியிட்டு மன்றாடி நின்றிருப்பேன்
என்பதை சரியாகக் கணித்த நீ
என் மனப்போராட்டம் அறியாமல் போனாயே..

நீ அனுப்பிய கடிதம் யாவும்
என் இதயத்தில் எழுதபட்டபிறகு
என் அலமாரியின்
ரகசிய இழுப்பறையில் பூட்டவும்…
பரணிலிருக்கும் தகரப்பெட்டிக்குள்
பழந்துணிகளுக்கு மத்தியில் பதுக்கவும்
அவசியம் எனக்கு எழவில்லை

அற்பாயுள் உன் கடிதங்களுக்கல்ல
எனக்குதான் என்பதால்தானே
பதில் கடிதம் நான் எழுதவில்லை
என் இதயத்தில் புதைக்கபட்ட
உன் கடிதம் எனை எரிக்கும்பொழுதும்
என் இதயமான உன் இதயத்தில்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

lolluvathiyar
21-03-2011, 08:33 AM
இறுதி கடிதம் மிகவும் அருமையாக உருக்கமாகவும் இருக்கிறது உறுதியாகவும் இருப்பது போல தோன்றினாலும் உறுதியற்றுதான் இருக்கிறது. அற்புதமான படைப்பு அழகான வார்த்தை விளையாட்டு. கீதம் என்பது வெறும் லாகின் பெயரல்ல நிஜத்திலும் கீதம் தான் என்று நிருபிச்சிருக்கீங்க. பாராட்டுகிறேன்.


வாழ்விப்பாயென்ற நம்பிக்கையுடனே
பயணித்து வந்திருந்தன பல மைல் தூரம்!
இவர் இல்லாவிட்டால் வேறு யாராலும் வாழ்விக்க முடியாது என்ற வீரமற்ற என்னமே இந்த நெக்லிஜன்ஸுக்கு காரனமாயிருக்கலாம். கடித உறவும் ஒரு ரயில் சினேகமே என்று தான் நம்ப வேன்டும். லக்கு இருந்தால் அது வாழ்கை துனையாகலாம் அல்லது அடுத்த ஸ்டேசனில் இறங்கி போகலாம் என்று மெச்சூரிட்டி இருக்கனும்.


இதரக் கடிதங்களின் கதி பற்றியறிய
எழுதப்பட்ட இக்கடிதத்தையும்
என்ன செய்வாயென யோசிக்கிறேன்.
ஒருவேலை இது போல பல கடிதம் வந்து இது பத்தோடு பதினொறாவதாக இருக்கலாமோ என்னவோ.


வீரர்களைப் போலவே என் கடிதங்களும்
வீரமரணம் ஏற்றதை எண்ணி
நானும் இன்புற்றிருக்கலாம்.
குப்பற விழுந்தாலும் மீசையில் மன் ஒட்டலை என்று சொன்ன மாதிரி இருக்கு.

கவிதையில் காட்டபட்ட கருத்துகளை நான் எள்ளி நகையாடினாலும் உனர்ச்சிகளையும் அதன் ஆழத்தையும் புரிந்து கொன்டேன். திறமையை அறிந்து கொன்டேன். பாராட்டுகள்.

கீதம்
21-03-2011, 08:37 AM
அற்பாயுள் உன் கடிதங்களுக்கல்ல
எனக்குதான் என்பதால்தானே
பதில் கடிதம் நான் எழுதவில்லை
என் இதயத்தில் புதைக்கபட்ட
உன் கடிதம் எனை எரிக்கும்பொழுதும்
என் இதயமான உன் இதயத்தில்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இத்தனை நாள் பாராமுகமாயிருந்து
பைத்தியம்போல் என்னைப் பரிதவிக்கவிட்டு
இறுதிநாளில் எழுதுகிறாய்
இறுதிக்கடிதத்துக்கான பதிலை!
இதையும் எழுதாது விட்டிருந்தால்
உன்னைச் சபித்தபடியேனும்
சாகாமல் வாழ்ந்திருப்பேனே!

அழகான கவிப்பின்னூட்டம். மிகுந்த பாராட்டுகள் முரளிராஜா.

கீதம்
21-03-2011, 08:42 AM
இறுதி கடிதம் மிகவும் அருமையாக உருக்கமாகவும் இருக்கிறது உறுதியாகவும் இருப்பது போல தோன்றினாலும் உறுதியற்றுதான் இருக்கிறது. அற்புதமான படைப்பு அழகான வார்த்தை விளையாட்டு. கீதம் என்பது வெறும் லாகின் பெயரல்ல நிஜத்திலும் கீதம் தான் என்று நிருபிச்சிருக்கீங்க. பாராட்டுகிறேன்.


இவர் இல்லாவிட்டால் வேறு யாராலும் வாழ்விக்க முடியாது என்ற வீரமற்ற என்னமே இந்த நெக்லிஜன்ஸுக்கு காரனமாயிருக்கலாம். கடித உறவும் ஒரு ரயில் சினேகமே என்று தான் நம்ப வேன்டும். லக்கு இருந்தால் அது வாழ்கை துனையாகலாம் அல்லது அடுத்த ஸ்டேசனில் இறங்கி போகலாம் என்று மெச்சூரிட்டி இருக்கனும்.


ஒருவேலை இது போல பல கடிதம் வந்து இது பத்தோடு பதினொறாவதாக இருக்கலாமோ என்னவோ.


குப்பற விழுந்தாலும் மீசையில் மன் ஒட்டலை என்று சொன்ன மாதிரி இருக்கு.

கவிதையில் காட்டபட்ட கருத்துகளை நான் எள்ளி நகையாடினாலும் உனர்ச்சிகளையும் அதன் ஆழத்தையும் புரிந்து கொன்டேன். திறமையை அறிந்து கொன்டேன். பாராட்டுகள்.

நன்றி லொள்ளுவாத்தியார். இப்போதுதான் முரளிராஜாவின் சோகம் உணர்த்தும் பின்னூட்டத்துக்குப் பதிலளித்தேன். அடுத்துப் பார்த்தால் முரண்பட்ட சிந்தனையோடு முன்வந்து நிற்கிறது உங்கள் பின்னூட்டம். எள்ளி நகையாடினாலும் எடுத்துச் சொல்வதென்னவோ யதார்த்தம். ரசித்தேன்.:) மிகவும் நன்றி.

Nivas.T
21-03-2011, 09:10 AM
முன்பெல்லாம்
காதலின் தூதுவனாக
பாசத்தின் பரிமானமாக
நட்பின் நிவாரணியாக
இருந்த நீ
காணமல் போனதெங்கே
கடிதமே??
கண்டவர் எவரேனும்
இருந்தால்
எனக்கு கடிதமிடுங்கள்
அது மிக்க நலமென்று
நான் அறிந்து கொள்வேன்!



கடிதம் பற்றி கவிதை

அருமையா இருக்குங்க

உன்னதக் கவிதை

கீதம்
21-03-2011, 09:23 AM
முன்பெல்லாம்
காதலின் தூதுவனாக
பாசத்தின் பரிமானமாக
நட்பின் நிவாரணியாக
இருந்த நீ
காணமல் போனதெங்கே
கடிதமே??
கண்டவர் எவரேனும்
இருந்தால்
எனக்கு கடிதமிடுங்கள்
அது மிக்க நலமென்று
நான் அறிந்து கொள்வேன்!

தொலைபேசி வந்தபோது
குதூகலித்துச் சொல்லிக்கொண்டோம்,
என்ன இருந்தாலும் அவர் குரலைக்
காதுகுளிரக் கேட்கும் பாக்கியம்
கடிதத்தில் கிட்டுமோ என்று!

நினைத்தபோதெல்லாம்
கம்பிக்கொத்திலிருந்து உருவிப்படிக்கும்
கடிதத்தின்சுகானுபவம்
அறிந்திருந்தும் அப்படிப் பீற்றினோம்.

கணினி வந்தபின்போ
கைநழுவிப்போனது,
கையெழுத்துகளுடனான பிணைப்பும்
கடிதங்களின் கண்ணீர் அணைப்பும்!

தபால்காரர்களின் வருகை பற்றி
இப்போதெல்லாம் எந்த கவன ஈர்ப்புமில்லை.


கடிதம் பற்றி கவிதை

அருமையா இருக்குங்க

உன்னதக் கவிதை

மிகவும் நன்றி நிவாஸ்.

ராஜாராம்
21-03-2011, 10:57 AM
அருமையான கடிதம்.தொடருங்கள்

முரளிராஜா
21-03-2011, 11:06 AM
(லொள்ளுவாத்தியை பழிவாங்க.....நகைச்சுவைக்காக)
உன் கடிதத்தை பழித்திட்ட
வாத்திக்கு எழுதொரு கடிதம்
முதல் கடிதத்தில் மயங்கி போவார்
மறு கடிதத்தில் மணந்தே போவார்

உனை மணந்த காரணத்தால்
நக்கலடித்த அவர் வாழ்வு
நாசமாய் போவது திண்ணம்

உன்தொல்லை தாங்காது அற்பாயுளென
பொய்யுரைத்த நானும் கூட
வேறோருத்தியை மணந்து
நலமாய் வாழ எண்ணம்

த.ஜார்ஜ்
21-03-2011, 02:14 PM
கடிதம் எழுதுவதே ஒரு சுகம்தான்.நேரடியாக பேசமுடியாததைகூட கடிதத்தில் கொட்டமுடியும்.அது போய் சேர்கிறதோ இல்லையோ .. எழுதி முடித்தால் சுமை இறக்கிவைத்த மாதிரி மனம் லேசாகி விடும்......
ஆனால் இன்றைய தலைமுறை கடிதம் எழுதும் பழக்கத்தை மறத்துபோனது. எதற்கும் உங்கள் மொபைலை பார்த்துவிடுங்கள்.. பதில் எஸ்.எம்.எஸ்.வடிவில் வந்து சேர்ந்திருக்கலாம்.

த.ஜார்ஜ்
21-03-2011, 02:15 PM
முரளியின் பதில் கவிதையும் அமர்க்களம்.

கௌதமன்
21-03-2011, 06:48 PM
கடிதம் கிடைக்கவில்லையென்று
கடிதம் எழுதியிருந்தேனே(?)
கிடைக்கவில்லையா உனக்கு!

உன் எண்ணத்தில் உள்ளவற்றை
கடிதம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நானிங்கு நலமென பொய்யுரைக்க
மனம் வரவில்லை!

மெய்யாக நான் படும் வேதனையை
கடிதம் சுமக்க விரும்பவில்லை

இறுதிக்கடிதம் வரைந்து என்
உறுதியைக் குலைத்து விட்டாய்!

இதோ என் கடிதம்
கீழிருக்கும் வெற்றிடத்தில்
கையெழுத்தாய் என் மௌனம்!

கீதம்
21-03-2011, 11:12 PM
அருமையான கடிதம்.தொடருங்கள்

பாராட்டுக்கு நன்றி ராஜாராம்.

கீதம்
21-03-2011, 11:21 PM
(லொள்ளுவாத்தியை பழிவாங்க.....நகைச்சுவைக்காக)
உன் கடிதத்தை பழித்திட்ட
வாத்திக்கு எழுதொரு கடிதம்
முதல் கடிதத்தில் மயங்கி போவார்
மறு கடிதத்தில் மணந்தே போவார்

உனை மணந்த காரணத்தால்
நக்கலடித்த அவர் வாழ்வு
நாசமாய் போவது திண்ணம்

உன்தொல்லை தாங்காது அற்பாயுளென
பொய்யுரைத்த நானும் கூட
வேறோருத்தியை மணந்து
நலமாய் வாழ எண்ணம்

அற்பாயுள் என்றொரு பொய்யுரைத்தாய்,
அறிவாயோ நீ உன் அறியாமை?

விட்டொழிக்கும் எண்ணத்தில்
உறுதியாக நின்றிருந்தால்
இறுதியென்று எழுதியபின்
எழுதுவாயோ பதிலொன்று?

சாவேன் என்றதும்
சலனம் கொண்டாயோ?
வாழவைக்க என்னை
சபதம் பூண்டாயோ?

கூறுபோட்டால் என்மனதை
வேறு காதல் கொள்வேனென்றே
வெறுங்கனவு காணாதே....
விட்டிலேன் உன்னை நானே!

இது எப்படி இருக்கு?:)

கீதம்
21-03-2011, 11:25 PM
கடிதம் எழுதுவதே ஒரு சுகம்தான்.நேரடியாக பேசமுடியாததைகூட கடிதத்தில் கொட்டமுடியும்.அது போய் சேர்கிறதோ இல்லையோ .. எழுதி முடித்தால் சுமை இறக்கிவைத்த மாதிரி மனம் லேசாகி விடும்......
ஆனால் இன்றைய தலைமுறை கடிதம் எழுதும் பழக்கத்தை மறத்துபோனது. எதற்கும் உங்கள் மொபைலை பார்த்துவிடுங்கள்.. பதில் எஸ்.எம்.எஸ்.வடிவில் வந்து சேர்ந்திருக்கலாம்.

கருவோடு காமெடியும் கலந்திட்ட பின்னூட்டத்துக்கு நன்றி ஜார்ஜ். கண்முன் இத்தனைப் பதில் கொட்டிக்கிடக்கும்போது இனி மொபைல் பார்த்து என்ன லாபம்?:)

கீதம்
21-03-2011, 11:28 PM
கடிதம் கிடைக்கவில்லையென்று
கடிதம் எழுதியிருந்தேனே(?)
கிடைக்கவில்லையா உனக்கு!

உன் எண்ணத்தில் உள்ளவற்றை
கடிதம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நானிங்கு நலமென பொய்யுரைக்க
மனம் வரவில்லை!

மெய்யாக நான் படும் வேதனையை
கடிதம் சுமக்க விரும்பவில்லை

இறுதிக்கடிதம் வரைந்து என்
உறுதியைக் குலைத்து விட்டாய்!

இதோ என் கடிதம்
கீழிருக்கும் வெற்றிடத்தில்
கையெழுத்தாய் என் மௌனம்!

மனம் நெகிழ்த்தும் வரிகள். அசத்தல் கெளதமன். பின்னூட்டங்கள் காட்டுகின்றன வெவ்வேறு எண்ணவோட்டங்கள்.

அவற்றில் உங்களுடையது மிக ஏற்புடைய ஒன்று. நன்றியும் பாராட்டும்.

முரளிராஜா
22-03-2011, 02:31 AM
அற்பாயுள் என்பது பொய்யும்மில்லை
விட்டொழிக்கும் எண்ணமும் எனக்கில்லை

நீ சாவேன் என்று சொன்னதால்தானே
வரைந்தேன் உனக்கு அப்படியொரு கடிதம்

என்று நீயும் உணர்ந்தபின்னே இதோ
எனது இறுதிக்கடிதம்

மாய்ந்தபின் எரிவது என்னுடல்தானே
விட்டுசெல்வேன் என்னுயிரை அது நீதானே

என்னுயிரை வாழவைக்கும் பொறுப்பும்
உனதன்றோ.

நீ சாவேன் என்று சொல்வதும்
தவறன்றோ

கீதம்
22-03-2011, 04:58 AM
அற்பாயுள் என்பது பொய்யும்மில்லை
விட்டொழிக்கும் எண்ணமும் எனக்கில்லை

நீ சாவேன் என்று சொன்னதால்தானே
வரைந்தேன் உனக்கு அப்படியொரு கடிதம்

என்று நீயும் உணர்ந்தபின்னே இதோ
எனது இறுதிக்கடிதம்

மாய்ந்தபின் எரிவது என்னுடல்தானே
விட்டுசெல்வேன் என்னுயிரை அது நீதானே

என்னுயிரை வாழவைக்கும் பொறுப்பும்
உனதன்றோ.

நீ சாவேன் என்று சொல்வதும்
தவறன்றோ

நல்லாவே முரண்கவி பாடுறீங்க.

அதனால்தான் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்று பாடினாரோ, அன்றைய கவி?

பாராட்டுகள் முரளிராஜா.

இளசு
16-04-2011, 11:51 PM
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே.......


இறுதிக்கடிதம் என்றாலும்
இன்னும் முடியவில்லை
எண்ணப் பரிமாற்றம்..


கூட்டலாகவோ கழித்தலாகவோ
முற்றுப்பெறாத நிகழ்வு ..உறவு.

வலிந்து முடிக்க மனம் தினம் முனைந்தாலும்
வலியும் ரணமும் வடுவும் மட்டுமே எஞ்சும்..


---------------------------------------------------------

மனதின் விள்ளல்களாகிய கடிதங்களை
வலிமையான கவித்தேரில் ஏற்றிவைத்த
கவிஞர் கீதத்துக்கு பெருமித வந்தனம்..

----------------------------------------------------------

முரளிராஜா, மற்றும் நண்பர்களின் பின்னூட்டங்கள் கவனம் ஈர்த்தன..

கீதம்
19-04-2011, 12:39 AM
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே.......


இறுதிக்கடிதம் என்றாலும்
இன்னும் முடியவில்லை
எண்ணப் பரிமாற்றம்..


கூட்டலாகவோ கழித்தலாகவோ
முற்றுப்பெறாத நிகழ்வு ..உறவு.

வலிந்து முடிக்க மனம் தினம் முனைந்தாலும்
வலியும் ரணமும் வடுவும் மட்டுமே எஞ்சும்..


---------------------------------------------------------

மனதின் விள்ளல்களாகிய கடிதங்களை
வலிமையான கவித்தேரில் ஏற்றிவைத்த
கவிஞர் கீதத்துக்கு பெருமித வந்தனம்..

----------------------------------------------------------

முரளிராஜா, மற்றும் நண்பர்களின் பின்னூட்டங்கள் கவனம் ஈர்த்தன..

நன்றி இளசு அவர்களே....

வரிக்கு வரி சிலாகிக்கும் உங்கள் பின்னூட்டத்துக்காகவே ஏராளமாய் எழுதப்படலாம் இறுதிக்கடிதங்களும் இன்னும் சில கவிதைகளும் . :)