PDA

View Full Version : நிறமிழக்கும் பின்னல் நகரம்



ஆதவா
17-03-2011, 05:05 AM
எழுத்து : எம்.கோபாலகிருஷ்ணன்
இடம் : தமிழினி இணைய இதழ் (http://tamilini.in/?p=76)

திருப்பூர்- 1985க்கும் முன்பு…

அன்று திருப்பூர் ஒரு சிற்றூர். தனலட்சுமி மில், SRC மில், திருப்பூர் காட்டன் மில், ஆஷர் மில், திருப்பூர் டெக்ஸ்டைல் என்று கோவை நகரைப் போன்றே நூற்பாலைகளே திருப்பூரின் முக்கியத் தொழிலாக இருந்தது. இந்திய மாநிலங்கள் அளவில் அமைந்த உள்ளுர் சந்தைகளுக்கான வெள்ளை பனியன்களும், சிறிய அளவில் ஆண்களுக்கான உள்ளாடைகளும் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. ஸ்பைடர், சுடர்மணி, பைசன் என்று புகழ்பெற்ற பனியன் கம்பெனிகள் வர்த்தகத்தை ஆண்டிருந்தன. இவை தவிர சிறிய அளவில் பனியன் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் இருந்தன. மொத்தத்தில் அன்றைய நாட்களில் பனியன் கம்பெனிகளில் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தன. தொழிலாளர்களும் 10000க்கும் குறைவான அளவிலேயே இருந்தனர். இவர்களில் பெரும்பாலோனார் திருப்பூரைச் சேர்ந்தவர்களே. பனியன் பெட்டிகளை மரப்பெட்டிகளில் அடுக்கி இரும்புப்பட்டையால் இறுக்கி மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு சரக்கு ஏற்றும் லாரி நிறுவனங்களுக்குச் செல்லும் வண்டிகளும், உருமாலை கட்டியபடி வேர்த்து மினுக்கும் கரிய உடலுடன் வண்டியோட்டிகளும் திருப்பூரில் அன்று பிரபலம். பெரிய கட்டிடங்கள் இல்லை. இருபதடிக்கும் மேல் அகலமான சாலைகள் இல்லை. தூய்மையான குடிநீரோ, உணவகங்களோ கிடையாது. வடக்கிலிருந்து வரும் பனியன் ஏஜெண்டுகளுக்கு இந்தியா ஹவுஸ்தான் தங்குமிடம். ரயில்வே லைனுக்கு மேலாக அன்றிருந்த பாலம் மிகவும் விநோதமானது. இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்லும்படியாகவும் மத்தியில் நடைபாதையுமாக இருக்கும். அன்றைய நாட்களில் மே தினத்தன்று வலதுசாரிகளும் இடதுசாரிகளும் தனித்தனியே நடத்தும் மே தின ஊர்வலங்கள் மிகவும் பிரபலமானவை. நகரில் அன்று இருந்த கார்களின், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.

கட்டிங் மாஸ்டராகவோ அயர்னிங் மாஸ்டராகவோ இருப்பது பெரும் கெளரவமாக கருதப்பட்டது. சிறுவர்களும் பின்னர் சிறுமிகளும் அடுக்கிக்கட்டுவதற்காகவே பனியன் கம்பெனிகளில் நுழைந்தார்கள். கொஞ்சம் அனுபவமானதும் டெய்லர்களுக்கு கை மடிப்பதற்கென்று பதவி உயர்வு கிடைக்கும். அப்போது வாரம் 50 லிருந்து 80 ரூபாய் சம்பளம் என்பது பெரும் தொகை. சனிக்கிழமை மாலையில் கையில் கிடைத்துவிடும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். சினிமாவுக்குப் போகலாம். மதியம் மட்டன் சாப்பிடலாம். இந்தக் கவர்ச்சியில் கைத்தறி நெசவாளிகளும், விசைத்தறித் தொழிலாளிகளும், அனுப்பர்பாளையம் பகுதியில் பிரபலமாயிருந்த பாத்திரத் தொழிலாளிகளும் பனியன் கம்பெனிகளுக்கு இடம் பெயர்ந்தனர். முக்கியமாக அதுவரையிலும் குலத் தொழிலை மட்டுமே தொடர முடியும் என்ற நிலையில் இருந்த சலவைத் தொழிலாளிகளின், சவரத் தொழிலாளிகளின், துப்புரவுத் தொழிலாளிகளின் அடுத்தத் தலைமுறையினருக்கு பனியன் தொழிற்சாலைகள் பெரும் ஆசுவாசத்தைத் தந்தன.

1985க்கு பின்பு…

எக்ஸ்போர்ட் என்ற வார்த்தை திருப்பூருக்குள் நுழைந்து தொழிலையும் சிறு நகரத்தையும் புரட்டிப் போட்டது. பருத்தி ஆடைகளை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடைமுறை அப்போதிருந்த ஜனதா ஆட்சியின் போது தொடங்கியது. அதிகபட்சம் இரவு ஒன்பது மணி வரையில் மட்டுமே வாரத்தில் ஆறு நாள் வேலை என்றிருந்த தொழிற்கூடங்கள் மெல்ல மெல்ல ராட்சத வடிவெடுக்கத் தொடங்கின. இரண்டு மூன்று மடங்கு சம்பளம். தீரவே தீராத வேலை. ஏற்றுமதி ஆடைகளை உருவாக்க ஏராளமான உப தொழில்களும் கிளைக்கத் தொடங்கின. சாயப்பட்டறைகள், ஸ்கீரின் பிரிண்டிங் பட்டறைகள், காஜாபட்டன் கூடங்கள், செக்கிங் சென்டர்கள், செகண்ட்ஸ் பீஸ் குடோன்கள், quota அலுவலகங்கள், logistics நிறுவனங்கள், பன்னாட்டு வங்கிகள் என்று ஒவ்வொரு திசையிலும் விரலுக்கு மீறிய வீக்கங்கள். நாடெங்கும் பட்டதாரிகள் வேலை தேடி அலைந்த காலகட்டத்தில் மின் கம்பங்களில்கூட ‘’வேலைக்கு ஆட்கள் தேவை” என்று விளம்பரப்படுத்திய பெருமை இந்த நகரத்துக்கு உண்டு. இரவு பகலாக இயங்கிய தொழிற்கூடங்களுக்கு மனித உழைப்பு ஏராளமாகத் தேவைப்பட அருகாமை கிராமங்களிலிருந்து, நகரங்களிலிருந்து ஆட்கள் திருப்பூரை நோக்கிப் படையெடுத்தார்கள். காலை நேரங்களில் திருப்பூரை நோக்கி வரும் பேருந்துகள் நிறைந்து வழிந்தன. பெண்களுக்கு எக்ஸ்போர்ட் கம்பெனிகள் பெரும் பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கின. நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரத் தொடங்கிய பனியன் ஏற்றுமதி வர்த்தகம் திருப்பூருக்கென உலக வரைபடத்தில் தனித்துவமிக்க ஒரு இடத்தை உறுதி செய்தது. இன்று இத் தொழிலில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தலைமுறையினர் நவீன தொழில் நுட்பத்துடனும், தர மேன்மையுடனும் மேலும் விரிவாக்கி வருகின்றனர்.

பூகோள அளவிலும், சுகாதாரம், சாலை வசதிகள் என்று அடிப்படை வசதிகள் பெருமளவு வளர வாய்ப்பில்லாத போதிலும் நாள்தோறும் இந்நகரம் ஈட்டித்தரும் அந்நியச் செலாவணி திருப்பூருக்கு பெரும் பலமாக இருந்தது. நகராட்சியாக இருந்த திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆறே மாதத்தில் மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி அலுவலகம் இப்போது திருத்தி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் இன்னமும் தற்காலிக இடத்திலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இன்று திருப்பூரில் இல்லாத வங்கிகளே கிடையாது. நட்சத்திர அந்தஸ்துமிக்க விடுதிகள் உண்டு. உலகில் அறிமுகப்படுத்தப்படும் சொகுசு வாகனங்களை முதல் நாளே சாலைகளில் பார்க்க முடியும். இந்தியாவிலேயே அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் இந்த நகரில்தான் பதிவாகின்றன.

இன்று தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் திருப்பூரை நம்பி வருகின்றனர். அதிகாலையில் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும் பேருந்துகளில் இருந்து இறங்கும் இவர்கள் எப்படியாவது ஏதாவது ஒரு இடத்தில் பணிக்குச் சேர்ந்துவிடுகின்றனர். எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேலை நகரில் உள்ளது. ‘’ஆட்கள் தேவை” என்ற அட்டைகள் இன்று பிளக்ஸ்களாக உருவாகி ஆட்களுக்காகக் காத்திருக்கின்றன.

நொய்யல்

1980களில் ஒரு லட்சத்துக்கும் குறைவானது திருப்பூரின் மக்கள்தொகை. ஆனால் அவர்களுக்கான தண்ணீர் தேவையைக்கூட பூர்த்தி செய்வதற்கான நீர் ஆதாரம் திருப்பூரில் கிடையாது அப்போது. 1921ல் கொண்டுவரப்பட்ட கோயில்வழி குடிநீர் திட்டத்தால் திருப்பூர் நகரின் தென்பகுதியின் சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் கிடைத்தது. நகரின் ஒருசில இடங்களில்தான் கிணறுகளும், ஆழ்குழாய்க் கிணறுகளும் இருந்தன. நகராட்சி தண்ணீர் லாரிகளின் மூலமாகத் தண்ணீரை பல்வேறு இடங்களுக்கு விநியோகித்தது. குடிதண்ணீருக்கென மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து 1962ல் முதலாவது குடிநீர்த் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தண்ணீர் நகரின் சில பகுதிகளில் மட்டுமே கிடைத்தது. 1993ல் இரண்டாவது குடிநீர் திட்டமும், 2004ல் 3வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்ட பிறகே திருப்பூரின் தண்ணீர்த் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டது.

திருப்பூர் நகரை இரண்டாகப் பிரிக்கும்படியாக நடுவில் ஓடிய நொய்யல் ஆற்றில் எந்தக் காலத்திலும் தண்ணீர் ஓடியதில்லை. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் வெகுகாலமாக ‘ஆத்துப்பாலம்’ என்று அறியப்பட்டிருந்தது. பின்னர் 2000க்குப் பிறகு அது அகலப்படுத்தப்பட்டது. மழைக் காலங்களில் மட்டுமே குப்பைகூளங்களை, தேங்கிக் கிடக்கும் சாக்கடையை அடித்துக்கொண்டு மழை நீர் ஓடும். அப்போது நஞ்சப்பா பள்ளியருகே தரைப்பாலம் மட்டுமே இருந்தது. மழை வெள்ளத்தில் சாதாரணமாகவே அது முழுகிப்போய்விடும். ஒருமுறை, 1978 என்று நினைவு. பெருமழை, பெருவெள்ளம். நொய்யல் கரைபுரண்டோடியது. ஆத்துப்பாலத்தின் விளிம்பைத் தொட்டுக்கொண்டு நீர் ஓடியது. வெள்ளம் பார்க்க பாலத்தின் மீது ஏராளமான ஜனக்கூட்டம். நஞ்சப்பா பள்ளியின் கீழ்ப்புற மைதானத்தைக் கடந்து வகுப்பறைக்குள் புகுந்தது வெள்ளம். ஒரு வாரம் கழித்தே வடிந்தது. மற்றபடி நொய்யலாறு என்பது ஒரு சாக்கடைத் தேக்கம்தான்.

http://tamilini.in/wp-content/uploads/2011/03/m_gopal.jpg

‘’காஞ்சிமாநதி” என்று சோழர் கால கல்வெட்டொன்றில் குறிக்கப்பட்டிருக்கும் நொய்யல் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் உற்பத்தியாகிறது. முள்வரம்பு, கொடுவாய்பதி, நீலி போன்ற மலை ஓடைகள் ஆங்காங்கே ஒன்றுசேர்ந்து பின்னர் பெரியாறு, சின்னாறு ஆகிய இரண்டு பெரும் ஓடைகளுடன் மத்வராயபுரம் என்ற இடத்தில் ஒன்றுகூடும்போதுதான் நொய்யல் என்று பெயர் பெறுகிறது. கோவைப் பகுதியில் பிரசித்தி பெற்ற கோவைக் குற்றாலம் என்ற அருவியும் நொய்யலின் பயணத்தில் ஒரு பகுதியே. கோவை திருப்பூர் மாவட்டங்களில் 173 கிலோமீட்டர் தொலைவு ஓடும் இந்த ஆறு கரூர் மாவட்டத்தில் உள்ள ‘நொய்யல்’ என்ற கிராமத்தின் அருகே காவிரியோடு ஒன்றுகலக்கிறது. நொய்யல் ஆற்றங்கரையில் பண்டைய ரோமானிய கிரேக்க வணிகர்களோடு வியாபாரத் தொடர்பு இருந்தன என்பதற்கான சான்றுகள் கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. நொய்யலாறு வெள்ளியங்கிரி மலையிலிருந்து இறங்கி செம்மேடு, இருட்டுப்பள்ளம், ஆலாந்துறை, சாடிவயல் வழியாக பேரூரை வந்தடைகிறது. அங்கிருந்து கோவை மாநகரில் நுழையும்போதே மாநகராட்சியின் சாக்கடைகள் கலக்கத் தொடங்கிவிடுகின்றன. தொடர்ந்து உக்கடம் குளத்தில் விழுந்து வெள்ளலூர், ஒண்டிப்புதூர், இருகூர், சோமனூர் வழியாக திருப்பூரை வந்தடைகிறது. இதன் நீர்ப்பெருக்கு மழைக்காலத்தில் மட்டுமே. ஆண்டொன்றுக்கு அதிகபட்சம் நான்கு மாதங்களுக்குத்தான் நீர்வரத்து. ஆடிப்பெருக்கின்போது பேரூரில் நொய்யல் படித்துறையில் புதுவெள்ளம் கண்டு மலர் தூவி வழிபட்ட காலங்கள் போய் இப்போது பாட்டில் தண்ணீரைப் படிகளில் வைத்து வணங்கும் நிலை. பேரூரில் மூத்தோர் பலிச்சடங்கின்போதும் இதே தான். இன்று நொய்யல் ‘’மறைந்து போன” ஒரு நதி. ஆனால் மறைந்த அந்த நதியும் பெருமளவு மாசுபட்டு இன்று ‘’பின்னல் நகரத்தின்” எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

நொய்யல் எதனால் மாசடைகிறது?

திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் முக்கியமான கண்ணிகள் சலவைப் பட்டறைகளும் சாயப் பட்டறைகளும். பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் இழையாகட்டும், இழைகளிலிருந்து பின்னி உருவாகும் பனியன் துணியாகட்டும் தொடக்கத்தில் இளம்பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். சலவைப் பட்டறைகளில் இவை வெளுக்கப்பட்ட பிறகே வெண்மை அடைகின்றன. நூலையும் துணியையும் வெளுக்க பல்வேறு ரசாயனங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதேபோல நூலிலும், துணியிலும் சாயமேற்றும் பணியை சாயப்பட்டறைகள் மேற்கொள்கின்றன. சாயமேற்றும் நிலையிலும் ஏராளமான ரசாயனங்கள், உப்புகள், அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் உப்பு, ரசாயனம், அமிலம் என்று நச்சுத்தன்மையும் காரத்தன்மையும் கொண்ட கழிவுகள் வெளியேறுகின்றன.

தொடக்கத்தில் எண்ணிக்கையில் சிறியதாக சலவைப்பட்டறைகளும் சாயப்பட்டறைகளும் இருந்த காலத்தில் கழிவுகள் நொய்யலாற்றிலும், திருப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள நல்லாற்றிலும் கலக்கப்பட்ட போதிலும் அப்போது சுற்றுச்சூழல் சார்ந்த கவனம் இல்லாத காரணத்தாலும், மாசுபடுதல் அளவில் சிறியதாக இருந்ததாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் 80களின் பிற்பகுதியில் ஏற்றுமதி வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கிய பிறகு சலவைப் பட்டறைகள், சாயப்பட்டறைகளின் எண்ணிக்கை பெருகியது. வீரபாண்டி, காசிபாளையம், ஆண்டிபாளையம், முதலிபாளையம் பகுதியில் ஏராளமான பட்டறைகள் நிறுவப்பட்டன. நொய்யலாற்றின் கரையிலேயே பெரும்பாலான பட்டறைகளும் உருவாகின.

திருப்பூரில் தண்ணீர் பற்றாக்குறை இருந்த காலத்தில் சலவை, சாயப்பட்டறைகளின் தேவைக்கான தண்ணீரை திருப்பூரைச் சுற்றிய கிராமங்களின் கிணறுகளிலிருந்து தருவித்தார்கள். அந்தச் சமயத்தில் கிராமத்து விவசாயிகள் பலர் விவசாயத்தை நிறுத்திவிட்டு தண்ணீர் விற்பனையில் கவனம் செலுத்தினார்கள். 12000 லிட்டர் அளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி நீர் 200 முதல் 250 வரை விற்பனை செய்யப்பட்டது. திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் இந்தத் தண்ணீர் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. நிலத்தடி நீர் வற்றும் வரை வியாபாரம் செழித்தது. விளைநிலங்கள் காய்ந்தன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தொடர்ந்து தண்ணீரை மோட்டார் மூலமாக எடுத்து விற்பது நஷ்டத்தை தரத் தொடங்கியபோதுதான் இந்த வியாபாரம் படுத்தது.

மாசுபடத் தொடங்கிய நிலத்தடி நீரின் வண்ண முகத்தை கிணற்று நீரில்தான் முதலில் கண்டனர். முதலில் நீரின் வண்ணம் திரிந்தது. பிறகு மெல்ல சகிக்க முடியாத கார நெடியேறியது. நீரின் சுவை கசப்பும் உவர்ப்புமாக மாறியது. மெல்ல மெல்ல அந்த நீர் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, கால்நடைகளுக்கோ பயன்படாமல் போனது. கிணறுகளிலிருந்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் வாய்க்கால்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.

திருப்பூர் பகுதியில் மொத்தமுள்ள 750க்கும் மேற்பட்ட சலவை, சாயப்பட்டறைகள் ஒரு நாளைக்கு சுமார் 7 கோடி லிட்டர் தண்ணீரை உபயோகிக்கின்றன. சலவைக்கும் சாயமேற்றுவதற்கும் சோடா ஆஷ், காஷ்டிக் சோடா, சல்பியூரிக் ஆசிட், ஹைட்ரோ குளோரிக் ஆசிட், சோடியம் பெராக்ஸைட், ஹைபோகுளோரைடு போன்ற ரசாயனங்களையும் அமிலங்களையும் சாயங்களையும் உபயோகிக்கின்றன. இதனால் இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மிகுந்த உப்புத்தன்மையையும், காரத்தன்மையையும், அமிலத்தன்மையையும் அடைகின்றன.

மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரும் தகவலின்படி 1980 ஆண்டிலிருந்து 2000 வரையிலான காலகட்டத்தில் நொய்யலாற்றில் கலக்கப்பட்ட கழிவின் அளவுகள் இவ்வாறு..

ஃ மொத்த திடக்கழிவு 23.54 லட்சம் டன்கள்
ஃ குளோரைட் 13 லட்சம் டன்கள்
ஃ சல்பேட்டுகள் 1.25 லட்சம் டன்கள்
ஃ CHEMICAL OXYGEN DEMAND 1.00 லட்சம் டன்கள்
ஃ BIOCHEMICAL OXYGEN DEMAND 0.30 லட்சம் டன்கள்
ஃ OIL & GREASE 0.01 லட்சம் டன்கள்

பொதுவாக நீரில் 2100 TDS வரையிலுமான அளவு கொண்ட நீர் வேளாண்மைக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. ஆனால் திருப்பூர் நொய்யலாற்றின் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட நீரை பரிசோதித்துப் பார்க்கும்போது இந்த அளவு 4700லிருந்து 5100 வரை உள்ளதென்று உறுதி செய்திருக்கிறார்கள். சிலசமயம் இந்த அளவு 17000 PPS அளவைத் தொட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

நொய்யலாறு பாசனப் பகுதியின் மொத்தப்பரப்பு 6550 ஹெக்டேர். இன்று இந்த நிலங்கள் மொத்தமும் விவசாயத்துக்குப் பயன்படாதவையாக நச்சுத்தன்மை கொண்டுள்ளன. ஆற்றின் இரு கரைகளிலும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள விளைநிலங்கள் இன்று விவசாயத்துக்கு பயன்படாதவையாக மாறிவிட்டன. முன்பும் நொய்யலாறு பெரிய அளவில் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கூட, இந்த நிலங்களில் புகையிலையும் மரவள்ளிக் கிழங்கும் நல்ல முறையில் பயிர் செய்ய முடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கரும்பும் மஞ்சளும் நிலக்கடலையும் புகையிலையும் விளைந்த பூலவலசு கிராமத்தில் இன்று எதுவுமே விளைவதில்லை.

சுத்திகரிப்பு முறையும் ZLDயும்

பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை முழுமையாக, நிலத்தையோ நீரையோ மாசுபடுத்தாத வண்ணம் சுத்திகரிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. ஆனால் நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக, பூரணமாக மாசின்றிக் கழிவை வெளியேற்றும் ZERO LIQUID DISCHARGE சாத்தியம்தான் என்பதை சில சாயப்பட்டறைகள் நிரூபித்துள்ளன. இதற்காகக் கூடுதலாக முதலீடு செய்யவேண்டும். தொழில்நுட்பத்தைச் சரிவரப் பயன்படுத்தவேண்டும். 3 டன்கள் சாயமேற்றும் திறனுள்ள ஒரு சாயத் தொழிற்சாலையில் இந்த அமைப்பை நிறுவக் கூடுதலாக ரூ.1.5 கோடி செலவு செய்யவேண்டியிருக்கும். ஒரு கிலோ துணிக்கு சாயமேற்ற பூரணமான சுத்திகரிப்பு அமைப்பைக் கொண்டுள்ள ஒரு பட்டறைக்கும், அந்த வசதி இல்லாத பட்டறையில் சாயமேற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 12ரூபாய்தான். ஒரு கிலோவுக்கு கூடுதலாக 12 ரூபாய் தருவதற்கு பனியன் உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்றாலும், பட்டறை உரிமையாளர்கள் சில கோடிகளைக் கூடுதலாக முதலீடு செய்யவே தயங்குகிறார்கள். அரசு அதிகாரிகளையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும் சரிக்கட்டினால் போதும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் போது பார்த்துக் கொள்ளலாம், எல்லோருக்கும் ஆனதுதானே நமக்கும் என்ற மெத்தனப் போக்கே இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்.

ZERO DISCHARGE எப்படிச் செய்யப்படுகிறது?

1.BIOLOGICAL முதலில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டியில் சாணமும் காற்றையும் சேர்த்து முதல் கட்ட சுத்திகரிப்பு நடக்கிறது.

2. முதல் நிலையிலிருந்து பெறப்படும் கழிவு நீர் BIO REACTIFIER என்னும் இந்த நிலையில் குழாய்களின் வழியாக மெமரைன் கலக்கப்பட்ட இன்னொரு தொட்டியில் நிரப்பி வேதிவினையாக்கத்தால் சுத்தம் செய்யப்படுகிறது.

3. CHOLORINATION. இரண்டாம் நிலையிலிருந்து பெறப்பட்ட நீரில் குளோரின் செலுத்தப்பட்டு நீரில் உள்ள நாற்றமும், நிறமும் நீக்கப்படுகிறது.

4. REVERSE OSMASIS . RO. நான்காவது முக்கியமான இந்தப் படிநிலையில் கழிவுநீர் முதல்கட்டமாக 40% நல்ல நீராக மாற்றப்படுகிறது. அடுத்த கட்டத்தில் இன்னொரு 40% நல்ல தண்ணீராக மாற்றப்படுகிறது. கழிவு நீரின் 80% இந்த கட்டத்தில் நல்ல நீராக மாற்றப்பட்டு, பட்டறையின் மறுஉபயோகத்திற்கு சேகரிக்கப்படுகிறது.

5. EVAPORATOR. மீதமுள்ள 20% கழிவுநீரை, அகலமான ஆழம் குறைவான திறந்த வெளித் தொட்டியில் நிரப்பி நீரில் உள்ள உப்பையும், ரசாயனங்களையும் திடக்கழிவுகளாக்கிவிட்டு திரவத்தை நீராவியாக்கிவிடும் இறுதிப் படிநிலை இது.

அதன் பிறகு எஞ்சும் திடக்கழிவுகளை திறந்த வெளியில் குவித்து வைக்கிறார்கள். இவற்றை நிலக்கரி நிறுவனங்கள் தங்களது உபயோகத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், இன்றும் ZLD சாத்தியமே இல்லை என்ற வாதத்தையே பெரும்பாலான சலவை, சாயப்பட்டறை முதலாளிகள் பிடிவாதமாக முன்வைத்து வருகிறார்கள். ஆனால் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடனும் சமூக அக்கறையுடனும் இதை அணுகும்போது அவர்களது வழிமுறையும் மாறக்கூடும்.

பொது சுத்திகரிப்பு மையங்களும் பணிகளும்

பட்டறைகளின் கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு திருப்பூரில் CETP (COMMON EFFLUENT TREATMENT PLANT) கள் நிறுவப்பட்டன. இதற்காக திருப்பூர் 11 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 19 CETPக்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மண்டலங்களைச் சார்ந்த சலவை, சாயப்பட்டறைகள் இந்த அமைப்பை நிறுவுவதற்கான செலவின் பெரும்பகுதியை ஏற்கவேண்டும். ஒரு பகுதியை அரசு மானியமாக வழங்கும். பங்கேற்கும் பட்டறைகளின் கழிவுநீரைச் சுத்தப்படுத்த வேண்டியது இந்த அமைப்பின் பணி. இவ்வாறான ஒரு அமைப்பை நிறுவ ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் செலவு ஆகும். நிறுவப்பட்டுள்ள 19 அமைப்புகளில் இன்றைய தேதியில் 5 அமைப்புகள் மட்டுமே ZLD யை சாத்தியப்படுத்தியுள்ளன. மீதமுள்ள 14 அமைப்புகளும் இயந்திரங்களை நிறுவ வேண்டியுள்ளது அல்லது சில தொழில் நுட்பங்களைச் சரி செய்ய வேண்டியுள்ளது.

இப்படி அல்லாமல் தங்களது பட்டறைக்கென்று தனியான ஒரு சுத்திகரிப்பு அமைப்பையும் சில உரிமையாளர்கள் நிறுவியுள்ளனர். IETP என்று அழைக்கப்படும் இவை 200க்கும் அதிகமாக உள்ளன. இவற்றுள் 20 அமைப்புகள் மட்டுமே ZLD யை சாத்தியமாக்கியுள்ளன. மீதமுள்ளவை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தவில்லை.

வழக்குகளும் வாதங்களும்

1992ம் ஆண்டு சுமார் 20 கோடி ரூபாய் செலவில் நொய்யலாற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையம் அணை 1049 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கும் காங்கேயத்துக்கும் இடையில் திருப்பூரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை. திருப்பூரிலிருந்து வெளியேறி நொய்யல் கிராமத்தில் காவேரியோடு கலப்பதற்கு முன்பாக இந்த அணையில் நீரைத் தேக்குவதன் மூலம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 500 ஹெக்டேர் விளைநிலங்கள் பயன்பெறும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த அணையில் தேங்கியதோ திருப்பூரின் ரசாயனக் கழிவும் சாக்கடைகளும்தான். மீன்கள் செத்துப்போயின. நீரைக் குடித்த கால்நடைகள் நோய்கண்டன. அணைக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் பலரும் சரும நோய்க்கும், நுரையீரல் கோளாறுகளுக்கும் ஆளாயினர். இன்று இந்த அணையை நெருங்குவதற்கு சில கிலோமீட்டருக்கு முன்பே சகிக்க முடியாத வாடையை உணர முடிகிற அளவு அணையில் தேங்கிய நீர் மாசுபட்டுக் கிடக்கிறது.

நொய்யலாற்றின் மாசுகளால் பாதிக்கப்பட்ட ஆறு தாலுக்காகளைச் சேர்ந்த 250 கிராமங்களின் விவசாயிகளை ஒன்றுசேர்த்து உருவான அமைப்புதான் நொய்யலாற்று ஆயக்கட்டுதாரர் பாதுகாப்புச் சங்கம். இந்தச் சங்கம்தான் திருப்பூர் சலவை, சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு எதிராகத் தொடக்கத்தில் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் மூலமாகவும் தற்போது நீதிமன்றங்களின் வழியாகவும் இந்தப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்திச் செயல்பட்டு வருகிறது.

1. 1996ம் ஆண்டு கரூர் தாலுக்கா நொய்யலாற்று விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நொய்யலாறு மாசடைவதையும், விளைநிலங்கள் பாழாவதையும் தடுக்கக் கோரி வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தை சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும்படியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வகை செய்யும்படியும் உத்தரவிட்டது. மூன்று மாத கால அவகாசத்துக்குள் இவை செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து சலவை சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் 1998ல் வழக்கு தொடுத்தது. ஆனால் 1999ல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையோ மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகளையோ நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டாமல் இருந்துவிட்டனர் உரிமையாளர்கள்.

2. 14.12.2000 அன்று தமிழக அரசு ஒரத்துப்பாளையம் அணையைத் துப்புரவாக்குவது குறித்த ஒரு ஆய்வறிக்கைக்கு உத்தரவிட்டது.

3. 2003ம் ஆண்டு நொய்யல் ஆற்று ஆயக்கட்டுதாரர் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அணை மாசுபடக் காரணமாயிருந்த சலவை,சாயப்பட்டறை உரிமையாளர்களே குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தங்களது சொந்தச் செலவில் அணை நீரை சுத்தப்படுத்தித் தரவோ அல்லது அதற்கான செலவை இதற்குக் காரணமான பட்டறை உரிமையாளர்களிடமிருந்து திரும்பப் பெறவோ வகை செய்யக் கோரி வழக்குப் போட்டது.

வழக்கு விசாரணையில் இருந்தபோதே, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி. பாஸ்கரன் தலைமையிலான சுற்றுச்சூழல் ஆணையத்தின் நிபுணர் குழு, இந்தச் சீரழிவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களைக் கண்டறிந்தது. அதோடு அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நஷ்ட ஈட்டையும் மதிப்பிட்டது. 17. 12.2004ம் ஆண்டு தனது ஆணையை வெளியிட்டது. கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுக்காக்களின் 68 கிராமங்களில் உள்ள 28449 ஏக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28596 நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 28.8.1996 முதல் 31.12.2004 வரையிலான காலகட்டத்துக்கு நஷ்ட ஈடாக மொத்தம் ரூ.25 கோடியைத் தரவேண்டும் என்று மதிப்பிட்டிருந்தது.

அதோடு, உயர்நீதி மன்றம் CETPக்களை கண்காணிக்கவென 01.08.2005 அன்று ஒரு கமிட்டியை நியமித்தது. மோகன் கமிட்டி என்று அறியப்படும் இக்கமிட்டியில் உள்ள டி.மோகன், எஸ் தங்கவேல், எம்.சுந்தரேஷ் ஆகிய மூன்று உறுப்பினர்களும் வழக்கறிஞர்கள். திருப்பூர் பகுதியில் உள்ள CETPக்களையும், சலவை சாயப் பட்டறைகளையும் இவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றிச் சோதனை செய்யலாம். சோதனைக்குப் பிறகான தங்களது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யலாம்.

26.12.2006ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி,

அ. கழிவுநீரைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 31.7.2007ம் தேதிக்குள்ளாக ZLD (ZERO LIQUID DISCHARGE) ஐ உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஆ. 31.7.2007 வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சுத்திகரிப்பு நிலையங்களைச் சார்ந்த சலவை, சாயப்பட்டறைகள் தாங்கள் வெளியேற்றும் நீரின் அளவுக்கேற்ப ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்துக்கு லிட்டருக்கு ஆறு பைசாவையும், ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்துக்கு லிட்டருக்கு எட்டு பைசாவையும், ஜூன் முதல் ஜூலை வரையிலான மாதங்களுக்கு லிட்டருக்கு எட்டு பைசாவையும் அபராதமாகச் செலுத்தவேண்டும்.

இ. ஜூலை 31ம் தேதிக்குள் ZLD யை அடைய முடியாத CETPக்களையும், அவை சார்ந்த சலவை, சாயப்பட்டறைகளையும் உடனடியாக மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிடவேண்டும். இவற்றுக்கான மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட வேண்டும்.

ஈ. ஒரத்துப்பாளையம் அணையை சுத்திகரிப்பதற்கென்று மாநிலப் பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ள தொகையான 12.50 கோடி ரூபாய்களில் ஒரு பகுதியான 8.50 கோடியை சலவை, சாயப்பட்டறை உரிமையாளர்கள் இரண்டு தவணைகளில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

உ. 17.12.2004ம் ஆண்டில் சுற்றுச்சூழல் ஆணையம் வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையான ரூ.24,79,98,548 ல் மீதமுள்ள ரூ.23 கோடியை சலவை, சாயப்பட்டறை உரிமையாளர்கள் இரண்டு தவணைகளில் 30 .4.2007க்குள் செலுத்த வேண்டும்.

ஊ. மேலும் சலவை சாயப்பட்டறை உரிமையாளர்கள் 2005, 2006, 2007ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக உத்தேசத் தொகையான ரூ.12 கோடியை இரண்டு தவணைகளில் 31.7.2007க்குள் செலுத்த வேண்டும்.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து சலவை, சாயப்பட்டறை உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர்.
அபராதத் தொகையாக நிர்ணயிக்கப்பட்ட பெருந் தொகையை, முறையான எந்த கணக்கீடும் இன்றி உரிமையாளர்களிடம் வசூலிக்கச் சொல்வது நியாயமற்றது.

ZLD யை அடையும் பொருட்டு அனைத்துப் பட்டறைகளும் RO அமைப்புகளை நிறுவ முனைந்துள்ளன. மேலும் ரூ.700 கோடி செலவில் 17 இடங்களில் CETP க்கள் அமைக்கப்பட உள்ளன.

40000க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் சலவை, சாயப்பட்டறைகளை நம்பி உள்ளனர். மேலும் பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் பின்னலாடை தொழிலைச் சார்ந்து உள்ளனர். இவற்றில் பலர் விவசாயப் பிண்ணனியைச் சேர்ந்தவர்கள். விளைநிலங்கள் பயனின்றிப் போனதாலும் மழையின்மையாலும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பின்னலாடைத் தொழிலுக்கு வந்தவர்கள். திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தொழிலாளிகளைக் கொண்டுவரும் பொருட்டு பலர் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, தீர்ப்பை மறுபரீசீலனை செய்யவேண்டும்.
ஆனால், வழக்கு 27.12.2007ல் தள்ளுபடி செய்யப்பட்டது. சலவை, சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை முழுமையாக விசாரித்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடையாணை வழங்கி 06.10.2009 அன்று தனது தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது.

சந்தேகத்துக்கு இடமின்றி பெரும் சுற்றுச்சூழல் மாசுபடுதலுக்கு பட்டறை உரிமையாளர்கள் காரணமாகியுள்ளனர். சுற்றுச்சூழலை சரிப்படுத்தவேண்டிய பொறுப்பிலிருந்து அவர்கள் தப்பிவிட முடியாது. நொய்யலாற்றில் கலந்துள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்தவேண்டிய செலவையும் ஒரத்துப்பாளையம் அணையை சுத்தப்படுத்தும் செலவையும் அவர்களே ஏற்க வேண்டும். உரிமையாளர்கள் தங்களது தொழிலை சுற்றுச்சூழல் சீர்கேடின்றி மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும். இவர்களது தொழில் நடவடிக்கைகளால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலத்தில் அவர்களால் பயிர் செய்ய முடியவில்லை. 31.7.2007 அன்று தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்கிற உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை ஆணை விதிக்கப்படுகிறது. இன்றிலிருந்து மூன்று மாத கால அவகாசத்துக்குள் உயர்நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்தவேண்டும். அதோடு அணையையும் ஆற்றையும் சுத்தப்படுத்துவதற்கான தொகையையும், அபராதத் தொகையையும் முழுமையாகச் செலுத்தவேண்டும்.

தடையாணைக்கான காலக்கெடு 05.01.2010ல் முடிந்ததையடுத்து விவசாயிகள் உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்

28.01.2011 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியது.

திருப்பூரில் உள்ள அனைத்து சலவை, சாயப்பட்டறைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

பட்டறைகளுக்கான மின் இணைப்பை உடனடியாக துண்டிக்கவேண்டும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைக்குப் பிறகும் தேவையான சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்தாத பட்டறை உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க வேண்டும்.
பட்டறைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகளைப் பின்பற்றாத காலகட்டத்தில் வாரியத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தீர்ப்பும் திருப்பூரின் எதிர்காலமும்

அதிரடியான தீர்ப்பையடுத்து திருப்பூரில் உள்ள 750 சலவை, சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதுபோன்ற முந்தைய ஆணைகளைப் பொருட்படுத்தாமல் ஜெனரேட்டர்களைக் கொண்டு பட்டறைகளை இயக்கிய உரிமையாளர்கள் பலர் இம்முறை அப்படித் துணியவில்லை. காரணம், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு கிரிமினல் சட்டம் பாயும் என்ற அச்சம்தான்.

நூல் விலையேற்றத்தாலும், அண்டைய நாடுகளான சீனா, பங்களாதேஷ் நாடுகளின் கடுமையான போட்டியாலும் தவித்திருந்த திருப்பூரின் பின்னலாடைத் தொழில், முப்பது நாற்பது ஆண்டுகளாக சந்தித்திராத ஒரு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இத் தீர்ப்பு சலவை, சாயப் பட்டறைகளை சார்ந்த 50000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர் காலத்தை மட்டுமல்ல, பனியன் தொழிலை நம்பியுள்ள 5 லட்சத்துக்கும் மேலான தொழிலாளர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இன்றைய திருப்பூரில் உள்ள தொழிலாளிகளில் 60 சதத்துக்கும் மேற்பட்டோர் மாநிலத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 8 சதவீதம் பேர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், தேனி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், திருச்சி என்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு இடம் பெயர்ந்துள்ளனர். வாரச் சம்பளத்தை நம்பி உள்ள இவர்கள் அனைவரும் அதிகபட்சம் ஒரு மாத காலம் வேலையின்றித் தாக்குப் பிடிக்க முடியும். அதன் பிறகு அவர்களுக்கு சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியிருக்காது.

தீர்ப்பு வெளியான நாளிலிருந்து இன்று வரை சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத ஒவ்வொரு நாளும் அந்நியச் செலாவணி இழப்பு கோடிக்கணக்கில் ஏற்படுவது உறுதி. அதைவிட, தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் மறைந்து கொண்டிருப்பது வேதனையானது. திருப்பூர் தனது தொழில் வளர்ச்சியை இழந்துவிடுமா?

என்ன செய்ய வேண்டும்?

ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பனியன் தொழிலுக்கு பேரிடர் ஏற்பட்டிருக்கும் இந்நிலையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியான, நீண்ட காலத் தீர்வுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

நீராதாரங்கள் மாசுபடாத வகையில் கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் தொழில்நுட்பங்களைக் கண்டறியவும், அதை அமல்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். CETPக்களும் IETPக்களும் zld யை உத்தரவாதப்படுத்துவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அரசும் தீவிர கண்காணிப்புடனான ஒத்துழைப்பையும், வாய்ப்பையும் உரிமையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

சலவை, சாயப் பட்டறை உரிமையாளர்களும் இதுவரையிலான மெத்தனப் போக்கை கைவிட்டு, சுற்றுச் சூழல் சீர்கேடு சார்ந்த தங்களது சமூகப் பொறுப்புணர்வை முழுமையாக உணர்ந்து அரசுக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்கவேண்டும். லாபத்தையும் சுயநலத்தையும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் தொழிலையும், தொழிலாளர்களையும், சுற்றுச் சூழலையும், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் பாதுகாத்துவிட முடியும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்குப் போராடுவது எவ்வளவு நியாயமோ, அதேயளவு பனியன் தொழிலை சார்ந்திருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது. இரு தரப்பினருக்குமான நியாயத்தை உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இன்று விவசாயிகளின் நலனுக்காகவும் சுற்றுச் சூழலுக்காகவும் இந்தத் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணிக்கு ஆதாரமாய் விளங்கும் ஒரு தொழிலின் எதிர் காலத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.