PDA

View Full Version : பற்றத் தொடங்கிய அக்னி - பாரதியும் பாஞ்சாலியும்அக்னி
09-03-2011, 12:37 PM
நான் கிறுக்கத் தொடங்கிய காலத்துக் கையெழுத்துப் பிரதிகள்,
மீண்டும் என்னிடம்...

என் மனதுக்குச் சுகந்தமாகும், அந்தக் காகிதமணத்தினை,
உங்கள் மனதுக்குள்ளும் பாய்ச்ச விரும்பி விளைகின்றேன்...

ஆரம்பக் கிறுக்கல்களில்,
பாடல்களின் வரிகளும் இருக்கும்... கவிகளின் வார்த்தைகளும் இருக்கும்...
சொற்குற்றம், பொருட்குற்றங்களும் இருக்கலாம்...
ஆனால்,
இவை தெரிந்தே செய்த தவறல்ல...
எனது எழுத்துக்கள் எழுந்து நடக்க உதவிய பிடிமானங்கள்...

நன்றி!

*****பாரதியும் பாஞ்சாலியும்
(பாரதி தினவிழா, கவியரங்கு 11.09.1997)


பாரதத்திற் படிந்திருந்த அடிமை வாழ்வு
பகலவன்முன் பனித்துளியாய்ப் பாறிப்போக
ஆரமுதக் கவிசமைத்தே அருட்சிதந்த
அமரகவி பாரதியார் நாமம் வாழ்க.


சிந்தை தளராத பாரதியே - உன்
சந்தம் பிறளாத பாஞ்சாலி காவியத்தில்
எந்தன் மனதினிலே சிந்தியுள்ள - சில
தேன் துளிகளிங்கே...


சிறியவன்தான் நான் ஆனாலும்
உன்னைப் புரிந்தவன் நான்.
புரியாத தவறுகள் இடம்பெறலாம்
எந்தாய்
என் பிழை பொறுத்தருள்க...


சுதந்திரத்தின் சுடரொளி
ஆதரவின்றி அரைக்கம்பத்தில் பறந்தகாலம்
அதிகாரதேவனின் ஆணவக் கால்களில் -நாம்
உதைபடும் பூவாய் இருந்த நேரம்.
பாரத பூமியின் பாமர மண்ணிலேயுதித்த பாரதி
மரணத் தொட்டிலில் நின்று
தாலாட்டுக் கேட்க விழைந்தான்.
கற்பனையால் அலங்கரித்தான்.
கைவண்ணத்தால் சிங்காரித்தான்.
பாரதபுகழ் பாஞ்சாலியைப்
புதுமைப் பெண்ணாய்ப் பிரசவித்தான்.


அமைதி கொலுவிருக்கும் அழகுத்தாய் மடிமீது
ஆணவ நடைபோட்ட அதிகார வெள்ளையரை
விரட்டிடவே வந்தாள்,
பாரதியின் பாஞ்சாலி.


புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை - உயிர்தணி
சுவந்துலவிடு செய்யமுதை
ஓவியம் நிகர்த்தவளை
அருளொளியினை
கற்பனைக் குயிரதனை
கொள்ளிவாயிப் பிசாசுகளிடத்தே
அழைத்திட்டான் துரியோதனன்.


நொறுங்கிப் போனாள் மடந்தையவள்.
கருகிப் போனாள் கற்புக்கரசி.
ஆனாலும்
தன்னிலை மறக்கவில்லை அவள்.
முன்னிலை வந்தவனை, பாகனைப் பார்த்துக்
கணைகளைத் தொடுத்திட்டாள்.


“கௌரவ வேந்தர் சபைதன்னில் - அறங்
கண்டவர் யாவரும் இல்லையோ -மன்னர்
சௌரியம் வீழ்ந்திடு முன்னரே - அங்கு
சாத்திரம் செத்துக் கிடக்குமா?”


தையலின் கணைகள்
தைத்தன பாகன் சிந்தையிலே.
சாவையும் அஞ்சாத உளத் திண்மையிலே
மீண்டனன் சபைக்குப் பாகனவன்.


கொடியவனோ நிலை மாறவில்லை.
கயல்விழியாளைக் கண்ணிவைத்திட
வலையோடனுப்பினான்
ஆலகால விடமொத்த தம்பியினை.


விவேகமில்லாதவன் - ஆனால்
புலிபோல் உடல்வலி கொண்டவன்.
துச்சாதனன்...
பாஞ்சாலி முன்வந்தான்.
சம்வாதம் செய்திட்டான்.


துடித்தாள் பாஞ்சாலி.
துவண்டாள் மலர்க்கொடி.
“மாதவிலக் காதலால் ஓராடை தனிலிருக்கின்றேன்
தார்வேந்தர் பொற்சபைமுன் எனையழைத்தல் இயல்பில்லை”
என மன்றாடி நின்றாள்
மைத்துனன் என்றே மனதிலெண்ணி.


ஆனால், தந்தை வழி இருள்போலச்
சிந்தையாலும் இருண்டுவிட்ட - அந்த
அந்தகன் மைந்தனோ
கக்கக் கெனக் கனைத்திட்டான்.
மூர்க்கன் - பக்கத்தில் வந்தே
பாஞ்சாலி கூந்தல் பற்றிப்
பேரழகுப் பெட்டகத்தைச்
சீரழியக், கூந்தல் சிதைய
கேடுற்ற, மன்னரறம் கெட்ட
சபைதனிலே
முன்னிழுத்துச் சென்றான்.


அந்நிலை கண்ட ஊரவரும்
ஊமையாய்ப் பேடியாய்
உள்ளழுது நின்றார்கள்.


சபைநடுவே பாஞ்சாலி - சூழவரப்
பாரதப் பெருங்குடிகள்.


நியாயம் செத்துக்கிடந்த அந்த
நீசர் சபைதனிலே
“ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம்
தானமென வேறொவருக்குத் தந்திடலாம்”
என்று மேலான பீஷ்மர் கூறிட,
“பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”
எனக் கனல் தெறிக்கக் கண்ணீரோடு
கொதித்தெழுந்தாள் பாஞ்சாலி.
சதிக்களமாயிப் போன அவைக்களத்தைக்
கண்களால் எரியூட்டினாள்.
கூடவே, சமுதாயத்தையும்.


துச்சாதனன் எழுந்தே அன்னை
துகிலிலனை மன்றிடை உரிகையிலே
உலகத்தை மறந்தாள் அன்னை
ஒருமையுற்றாள்.
“கண்ணா! கருமைநிறக் கண்ணா!
காரிகையிங்கே கண்ணீரில் மூழ்குகின்றேன்
காத்தருள் புரிந்திட வாராய்”
எனத் தோத்திரம் பாடினாள்.


பாரதியின் புதுமைப் பெண்ணிங்கே
புதுப்பரிமாணம் பெற்றுவிட்டாள்.


தரம் கெட்ட துரியவனைப்
பாரதத்தை அடிமைகொண்ட ஆங்கிலேயராய்
அவன் கொடுமைக்கு
ஆட்பட்ட பாஞ்சாலியைப் பாரதமாய்
மாற்றிப்
பாரதி வம்பு செய்தான்.
புதுமையிலே
காவியம் படைத்தான்.
தேச விடுதலையைத்
தெளிவாய் வரையறுத்தான்.


அன்று
பாஞ்சாலியின் கற்புக்கு
விலை பேசப்பட்டது.
இன்று
சுதந்திர ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.


இதுவே எம் வாழ்க்கையாக
ஒரு மரணித்த தேசத்தின்
பாமரக் குடிகளாய் நாம்.


எங்கள் நெருப்புப் போராட்டத்தின்
நிழலிற் தெரிவது
வெளிச்சத்தின் விஸ்வரூபமல்ல.
இருண்டுபோன
தேசவிடுதலைதான்.


எங்கு வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும் இருட்டு.
எம் தேசத்தை மட்டும்
தொட்டுப் பார்க்க வேண்டாமே.


தேசம்
உதிர்ந்துதான் போகின்றது.
ஆனால்,
அதன் வேர்கள் இன்னமும்
உக்கிப் போகவில்லை.


சிலிர்த்தெழுவோம் மனிதர்களே!
எங்கள் புத்துணர்ச்சியால்
எங்கள் வாழ்க்கை
மறுமலர்ச்சி பெற்றிடட்டும்.


பாரதி என்பது, சாகும் சங்கதியல்ல...
விழுதிறக்கிய விருட்சமது.
அவன் மூச்சுக்காற்று
காற்றுமண்டலத்தில் இன்னமும்
மீதமாய்த்தானுள்ளது.
அவன் புகழ் வையமெங்கும்
ஒலித்துக்கொண்டேயுள்ளது.


அன்று
பாஞ்சாலியை அரவணைத்துக்
காத்திட்டான் கண்ணன்...
இன்று
எமைக் காத்திட, தேசத்தை மலர்த்திட
வருபவர் யாரோ...
ஏக்கந்தான்...


என்றாலும்
பாரதியின் பாஞ்சாலி சபதம்
நம்பிக்கை தருகின்றது இப்படி
“தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்”

ஜானகி
09-03-2011, 01:18 PM
"அக்னிக் குஞ்சொன்று கண்டேன்."...!

ஏக்கம் இன்றும் நீரு பூத்த நெருப்பாகத் தானிருக்கிறது....!

ஷீ-நிசி
09-03-2011, 04:35 PM
எப்ப படிச்சி முடிக்கறது..... :)

ஷீ-நிசி
09-03-2011, 04:38 PM
நல்ல வளமான வரிகள் அக்னி!

மேடையில் பேசினால் கரவொலி உத்தரவாதம்..

வாழ்த்துக்கள்

அக்னி
09-03-2011, 05:00 PM
"அக்னிக் குஞ்சொன்று கண்டேன்."...!

ஏக்கம் இன்றும் நீரு பூத்த நெருப்பாகத் தானிருக்கிறது....!
நன்றி ஜானகி அவர்களே...

இப்போது பாஞ்சாலி சபதம் மறந்தே போச்சு...


நல்ல வளமான வரிகள் அக்னி!

மேடையில் பேசினால் கரவொலி உத்தரவாதம்..

வாழ்த்துக்கள்

நன்றி ஷீ-நிசி...
தொடர்ச்சியாகப் பாரதியார் நினைவுதின விழாக்களில் பேச்சாகக் கவியாகக் கலந்து கொண்டிருந்த அந்தக் காலத்து நினைவுகள்,
இன்னமும் தூங்கா உணர்வுகள் என் மனதில்...

பால் நிலவு
மதுரக்கனி
இளந்தென்றல்
அந்திவானம்
குருவிகள்
அருவிகள்
இவை யாவும் அவனைக் கொள்ளை கொண்டன. உறங்கிக் கிடந்த அவனது கவிதா சக்தியைத் தட்டி எழுப்பின. பாலகனான சுப்ரமணியன் பாடத் தொடங்கினான். இனிய கவிமணிகள் அவனது இதயப் புதையலிலிருந்து வெளிவந்தன. செந்தமிழிலே சிறந்த தேன் துளிகளை அவன் அள்ளிச் சிந்தினான்.

13, 14 வயதில் பேசியதில் ஒரு பகுதி.

பாரதி என்றாலே கம்பீரமாய் உணர்வதுண்டு எப்போதும்...

கீதம்
14-03-2011, 11:27 PM
இவன் பாரதியின் விசிறி,
இவண் அவன் பாவால் விசிறி
மூண்டுவிட்டதே அக்னி...
தூண்டப் பெருகுதே கவித்தீ...
தீண்டக் குளிருதே தீந்தீ.....

ஆதவா
16-03-2011, 02:55 PM
புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை - உயிர்தணி
சுவந்துலவிடு செய்யமுதை
ஓவியம் நிகர்த்தவளை
அருளொளியினை
கற்பனைக் குயிரதனை
கொள்ளிவாயிப் பிசாசுகளிடத்தே
அழைத்திட்டான் துரியோதனன்.

இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன் அக்னி. பாஞ்சாலியை ஒரு “அக்னி” தரத்துடனே விளித்ததாக இருக்கிறது.

ஒட்டுமொத்த கவிதையில் “பாஞ்சாலி” பார்ட் மட்டும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. எழுதப்பட்ட காலத்தை எண்ணினால் வியப்பாகவும் இருக்கிறது. பாஞ்சாலி, பாரதி என்றாலே எழுத்தில் ஒரு வீரம் வந்துவிடும் போல!! பாரதியின் பாதிப்பு தெரிந்தாலும் தனித்தன்மை குறையாத கவிதை!!

வாழ்த்துகள்!

Nivas.T
16-03-2011, 03:53 PM
அன்று
பாஞ்சாலியை அரவணைத்துக்
காத்திட்டான் கண்ணன்...
இன்று
எமைக் காத்திட, தேசத்தை மலர்த்திட
வருபவர் யாரோ...
ஏக்கந்தான்...

என்றாலும்
பாரதியின் பாஞ்சாலி சபதம்
நம்பிக்கை தருகின்றது இப்படி
“தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்”


ஆஹா அருமையான கவிதை
உரம்மிக்க தொகுப்பு

இறுதி வரிகளில் ஏக்கம், பின் சாந்தம்

அழகான படைப்பு

அக்னியின் அனல் வீச்சு அருமை

அக்னி
16-03-2011, 05:11 PM
இவன் பாரதியின் விசிறி,
இவண் அவன் பாவால் விசிறி
மூண்டுவிட்டதே அக்னி...
தூண்டப் பெருகுதே கவித்தீ...
தீண்டக் குளிருதே தீந்தீ.....
பாரதீ என்றாலே எனக்கு ஒரு பெருமிதம் வந்துவிடுவதுண்டு.
இன்றுவரைக்கும் நான் பேணும் நான்கைந்து புத்தகங்களுக்குள்,
பார தீயின் கவித் தீக்களும் அடங்கும்...

மகிழ்வூட்டும் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்....


இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன் அக்னி. பாஞ்சாலியை ஒரு “அக்னி” தரத்துடனே விளித்ததாக இருக்கிறது.

இருக்காதா ஆதவா...
அதை எழுதியது பாரதி (என்றுதான் என் நினைவில்)... நானில்லை...

இது, நான் படித்த தமிழ் இலக்கிய பாடத்தினை அடியாகக் கொண்டு எழுதப்பட்டது.

எனது வரிகளிடையே,
கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை, மகாகவி பாரதி, எனது தமிழாசிரியர்(கள்) ஆகியோரின் வரிகளும் உண்டு...
புடம்போட்ட அவர்களுக்கே என் வரிகளும் சமர்ப்பணம்...

இன்னுமொருமுறை பாரதியின் பாஞ்சாலி சபதத்தை வாசித்துச் சுவாசிக்க வேண்டும்.

நன்றி உங்கள் ரசிப்புக்கும் பின்னூட்டத்திற்கும்...


ஆஹா அருமையான கவிதை
உரம்மிக்க தொகுப்பு

நன்றி நிவாஸ்...

எனது சிறுவயது உளறலை ரசித்தமைக்கும் அதீதமாய்ப் பாராட்டியமைக்கும்...