PDA

View Full Version : பிள்ளைத்தமிழ்



கீதம்
07-03-2011, 10:52 PM
நன்றி: நான்காயிரம் அமுதத் திரட்டு, விக்கிபீடியா.

பிள்ளைத்தமிழ் இலக்கியமானது, தமிழில் (96) தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ சிறு குழந்தையாய் பாவித்து அவர்கள் மேல் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும்.

குழந்தையும் அழகு, தமிழும் அழகு; அழகான குழந்தையை அழகியத் தமிழில் பாடப்படும் இந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம் பேரழகு மிக்கது. அதைப் படிக்கும் போது நமக்குள்ளேயே தாய்மைப் பொங்கிவருவதை உணராது இருக்க முடியாது.


பிள்ளைத் தமிழ் இலக்கியமானது

1. ஆண்பால் பிள்ளைத்தமிழ்;
2.பெண்பால் பிள்ளைத்தமிழ்

என இரண்டு வகைப்படும்.


ஆண்பால் பிள்ளைத் தமிழ்:

1. காப்பு
2. செங்கீரை
3. தால்
4. சப்பாணி
5. முத்தம்
6. வாரானை
7. அம்புலி
8. சிற்றில்
9. சிறுபறை
10. சிறுதேர்

என்னும் பத்துப் பருவங்களையுடையது.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:

காப்புப் பருவம் முதல் அம்புலி பருவம் ஈறாக உள்ள ஆறு பருவங்களும் இருபாலார்க்கும் பொதுவானது; ஆண்பால் பிள்ளத் தமிழில் கடைசியாக உள்ள சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் மூன்று பருவங்களுக்குப் பதிலாக

8. கழங்கு
9. அம்மானை
10. ஊசல் ஆகிய மூன்று பருவங்களும் பெண்பால் பிள்ளைத் தமிழில் வரும்.


விளக்கம்:


1. காப்புப் பருவம் -

இது குழந்தையின் இரண்டாவது மாதத்தில் பாடுவது.
எந்த குழந்தையாயினும் முதலில் அதற்கு எந்த தீங்கும் நேர்ந்திடா வண்ணம், சிவன், பார்வதி, விநாயகர், திருமால், முருகன் என்று பலத் தெய்வங்களும் குழந்தையைக் காக்க வேண்டி,அவர்கள் மீது பாடல்கள் பாடி, குழந்தைக்குக் காப்பிட வேண்டும்.

2. செங்கீரைப் பருவம் -

இது குழந்தையின் ஐந்தாம் மாதத்தில் பாடுவது.
இந்த பருவத்தில், குழந்தை ஓரளவு தவழவும் முயற்சிக்கும்.
அதாவது, குழந்தை தன் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலையை நிமிர்த்தி முகமாட்டும் பருவம். குழந்தை இவ்வாறு செய்யும் போது, அது செங்கீரைக் காற்றில் ஆடுவது போன்று மிகவும் அழகாக, மனமும் அதோடு சேர்ந்து ஆடுற மாதிரி இருக்கும்.

3. தாலப் பருவம் -

இது குழந்தையின் ஏழாம் மாதத்தில் பாடுவது.
தால்~நாக்கு. தாய் தன் தாலை ஆட்டிப் பாடும் போது, நாக்கின் அசைவுகளைக் குழந்தைகள் கவனித்துக் கேட்கும். (தாலாட்டுப் பாடும் பருவம்)

4. சப்பாணிப் பருவம் -

இது ஒன்பதாம் மாதம் பாடப்படும்.
சப்பாணி என்றால் - கைகளைத் தட்டுதல்; குழந்தைத் தன் இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தட்டி ஆடும் பருவம்.

5. முத்தப் பருவம் -

இது குழந்தையின் பதினோறாம் மாதத்தில் பாடுவது.
பெற்றோர், தங்களுக்கு முத்தம் தருமாறு குழந்தையிடம் கெஞ்சும் பருவம்.

6. வாரானைப் பருவம் (வருகை) -

இது குழந்தையின் 13ம் மாதத்தில் பாடுவது. குழந்தை தன் ஒரு வருட காலத்தின் நிறைவில் அவர்கள் செய்யும் சாகசம், தளிர் நடைப் போடுதல்.
ஓரளவு நடக்கத் தெரிந்த தன் குழந்தையை, தாய் தன் இரு கைகளையும் முன்னே நீட்டி, தன்னிடம் நடந்து வருமாறு அழைக்கும் பருவம்.

7. அம்புலிப் பருவம் -

இது குழந்தையின் பதினைந்தாம் மாதத்தில் நிகழ்வது.
அம்புலி என்றால் நிலா. நிலவை நோக்கிக் கை நீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம்.

8. சிற்றில் பருவம் -

இது குழந்தையின் பதினெட்டாம் மாதத்தில் பாடப்படுவது.

ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் வேறுபடுவது இந்த பருவத்தில் இருந்துதான்.

(சிற்றில் - சிறு+இல் - சிறிய வீடு)பெண்பிள்ளைகள் மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் பொழுது, அவர்கள் மண்வீட்டைத் தன் சிறு பொற் பாதத்தால் உதைத்துக் கலைக்கும் பருவம்.

ஆண்டாள் கூட சொல்வாரே, நாச்சியார் திருமொழியின் இரண்டாம் திருமொழியில்(நாமமாயிரம்), இடைப்பெண்கள் சிற்றில் சிதைக்க வேண்டாவென்று கண்ணனை வேண்டுவர்களே!

'எங்கள் சிற்றில் வந்து சிதையேலே' என்று ஆண்டாள் சொல்வார்.


9. சிறுபறைப் பருவம் -

இது குழந்தையின் பத்தொன்பதாம் மாதத்தில் பாடப்படும்.
ஒரு சிறிய பறையையும் குச்சியையும் வைத்து பறை கொட்டி விளையாடும் பருவம்.

10. சிறுதேர் பருவம் -

இது குழந்தையின் இருபத்தி ஒன்றாம் மாதத்தில் பாடப்படுவது.
அந்தக் காலத்தில் பொம்மைக்கார் இல்லாததால் தேர். பொம்மைத் தேரை உருட்டி விளையாடும் பருவம்.


பெண்பால் பிள்ளைத் தமிழ்:

8. கழங்காடல் -

மகளிர் மணலில் கழங்கு விளையாடுவர். கழங்குக் காய்கள் முத்தாகவோ, முத்துப் போன்ற வெண்ணிறக் கூழாங் கற்களாகவோ இருக்கும். மகளிர் அந்தக் கழங்குக் காய்களை மணலில் பாவி ஒன்றை ஒன்று தொடும்படி சுண்டி விளையாடுவர். இக்காலத்தில் இந்த விளாயாட்டை 'ஒண்ணாங்கல் இரண்டாங்கல்' என்றும், 'பாண்டி' என்றும் பெயர் கொண்ட விளையாட்டாக விளையாடுவர்.


9. அம்மானை ஆடல் -

அம்மானை என்றால் பந்து. பெண்பிள்ளைகள் ஒரு பாட்டு பாடிக் கொண்டே பந்து விளையாடுவார்கள். அப்பொழுது பாடும் பாட்டு 'அம்மானைப் பாட்டு'.

10. ஊசலாடும் பருவம் -

ஊஞ்சல் ஆடி விளையாடும் பருவம்.

இவை மட்டுமல்லாது, நீராடல் பருவம் என்றும் ஒரு பருவம் உண்டு.இவை அனைத்தும் ஒரு பொதுவான பருவம் தான் என்றாலும், அவ்வப் பொழுது வெவ்வேறு பருவங்களும் சேர்த்து, வெவ்வேறு பருவ காலத்தில் பிள்ளைத் தமிழ் பாடுவர்.

எப்படி இருந்தாலும், குழந்தையின் இரண்டாம் மாதம் முதல் இருபத்தி ஒன்றாம் மாதம் வரை உள்ள இந்த பத்துப் பருவங்களும் பிள்ளைத்தமிழ் பாடும் பருவங்களாகும்.

அமரன்
08-03-2011, 07:05 PM
கல்விச்சாலைகளில் எப்போதும் நான் பின்னிருக்கை மாணவன். ஆசான்கள் அனுப்பி அனுப்பி பின்பு பின்னிருக்கை என்விருப்பு ஆகிப்போச்சு. இந்த இலக்கியச்சாலையில் நான் முன்னிருக்கை. தொடருங்க டீச்சர்:)

கீதம்
08-03-2011, 08:20 PM
பிள்ளைத்தமிழ் நான் இதுவரை அறிந்ததேயில்லை.

குழந்தைப் பருவத்தையும் தமிழ் பிரித்துப் பார்த்திருக்கின்றது என்பது வியப்பைத் தருகின்றது.

இது தொடர்பாக, விளக்கப் பதிவாக, தனித்திரி தொடங்கினால்,
இன்னும் விரிவாக அறிந்துகொள்ளலாமே என
ஆவல் வலுக்கின்றது...

வேறுபட்டதை விலக்கி விளக்குங்கள் திரியில் அக்னி கேட்டதற்கிணங்க துவங்கப்பட்டதே இத்திரி. (நன்றி: அக்னி)


கல்விச்சாலைகளில் எப்போதும் நான் பின்னிருக்கை மாணவன். ஆசான்கள் அனுப்பி அனுப்பி பின்பு பின்னிருக்கை என்விருப்பு ஆகிப்போச்சு. இந்த இலக்கியச்சாலையில் நான் முன்னிருக்கை. தொடருங்க டீச்சர்:)

தொடர்ந்து எழுதும் எண்ணம் இதுவரை இல்லை. விரும்பினால் மேலும் தகவல்கள் திரட்டி இத்திரியில் தொகுக்க முனைகிறேன். ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்.

அக்னி
08-03-2011, 10:32 PM
இன்னமும் இப்பதிவை நான் படிக்கவில்லை.

அதற்குமுன்,
கேட்டவுடன் ஆராய்ந்து விரிவாகப் பதிவிட்ட கீதம்+அக்காவுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி...

குணமதி
17-06-2011, 01:02 AM
நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

'விக்கிபீடியா'விற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

தொண்டு என்பது ஒன்பது.

தொண்ணூற்றாறு - என்பதே சரியான வடிவம்.

கீதம்
17-06-2011, 01:46 AM
இன்னமும் இப்பதிவை நான் படிக்கவில்லை.

அதற்குமுன்,
கேட்டவுடன் ஆராய்ந்து விரிவாகப் பதிவிட்ட கீதம்+அக்காவுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி...

நன்றி அக்னி.


நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

'விக்கிபீடியா'விற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

தொண்டு என்பது ஒன்பது.

தொண்ணூற்றாறு - என்பதே சரியான வடிவம்.

நன்றி குணமதி அவர்களே. பிழை திருத்திவிட்டேன். சுட்டியதற்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
17-06-2011, 05:35 AM
இலக்கிய அறிமுகம் தேவைதான் . தேவையை நிறைவு செய்ததற்குப் பாராட்டு. சிற்றிலக்கியங்களின் வகை 96 என்பதற்கு மாற்றுக் கருத்து உண்டு .

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 07:10 AM
அறியவேண்டிய பதிவு ..

இலக்கிய அறிமுகம் தேவைதான் . தேவையை நிறைவு செய்ததற்குப் பாராட்டு. சிற்றிலக்கியங்களின் வகை 96 என்பதற்கு மாற்றுக் கருத்து உண்டு .
சிற்றிலக்கியம் தொண்ணூற்றி ஆறு என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஓன்று .இதற்க்கு மாற்று கருத்து ஓன்று உண்மையாக இருந்தாலும் தற்போதுள்ள நிலையில் அவை நிருபிக்க படாதவரை அல்லது தம்மால் நிருபிக்க இயலாத வரை அவைதானே உண்மை ..இதில் மாற்று கருத்து ஏதும் உண்டா ஐயா...

Dr.சுந்தரராஜ் தயாளன்
13-03-2012, 01:48 PM
மிகவும் அருமையான பதிவு...நிறைய தெரிந்துகொண்டேன்...நன்றி :)