PDA

View Full Version : தமிழர்களின் கடல் கடந்த சோகம்



Ravee
28-02-2011, 08:59 AM
சமீபத்தில் நான் தமிழ் ஹிந்து இணையத்தில் படித்த புத்தக விமர்சனம் இது .... இலங்கையில் ஏற்ப்பட்டது போல மலேசியாவிலும் இன்னொரு இன அழிவு தொடங்கியதா , இன்னொரு பேரழிவிற்கு இது ஒரு வழித்தடமா என்று கேள்விகள் பிறந்தது. எனவே தமிழ் இந்து இணைய கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இதில் உண்மைகள் இருப்பின் உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வோம் .


தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

அரவிந்தன் நீலகண்டன்

http://www.tamilhindu.com/wp-content/uploads/tamil-protests-were-brutally-quashed-in-kuala-lumpur-by-the-malaysian-police-300x197.jpg


22 Jul 2010 | அச்சிட Youtube-இல் ஒரு ஆடியோ இருக்கிறது. எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசியதன் பதிவு எனச் சொல்லப்படுகிறது. அதில் பேசுபவர் எம்.ஆர்.ராதா குரலில் பேசுகிறார். மலேசியத் தமிழர்களிடம் பேசுகிறார். மலேசியாவைப் புகழ்கிறார். தமிழ்நாட்டை, இந்தியாவை இழிவாகப் பேசுகிறார். இங்கேயே இருங்கள் அங்கே வந்துவிடாதீர்கள் இது சொர்க்கபுரி என்கிறார். சிலசிலப் பிணக்கங்கள் இருக்கலாம் அதெல்லாம் போகப் போகச் சரியாகிவிடும் என்கிறார்.

2007-இல் அமைதியாகப் பேரணி நடத்திய மலேசிய இந்திய வம்சாவளியினரை மலேசிய அரசாங்கம் மூர்க்கத்தனத்துடன், அடக்கி ஒடுக்கியதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்தது. இந்திய ஊடகங்கள் அதனை முடிந்த அளவு அடக்கி வாசித்தன. மலேசியா-வாழ் இந்திய வம்சாவளியினருக்கு பொதுவாகவும் தமிழர்களுக்குக் குறிப்பாகவும் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன? அவர்கள் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்? இது குறித்து ஒரு தெளிவற்ற பார்வையே இந்தியாவில் நிலவிவருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரச்சினை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு, வேண்டினால் ஊதிப்பெருக்கவும் விருப்பப்பட்டால் புறந்தள்ளவும் ஒரு வசதியான அரசியல் விளையாட்டுக்கருவி மட்டுமே. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இத்தகைய போக்குதான் இறுதியில் மிகப்பெரிய மானுடசோகத்தில் கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் மலேசியத் தமிழர்களின் பிரச்சினையை ஆழமாக அதன் அனைத்துக் கோணங்களிலும் ஆராயும் ஒரு நூலாக வந்துள்ளது பேராசிரியர் வி.சூர்ய நாராயணனின், “மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை”.

வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் தனக்குள் பாரதத்தைக் கொண்டுள்ளான். அவன் தேவையேற்பட்டு உதவிக்கரம் நீட்டினால் அவனுக்கு உதவ வேண்டிய கடமை பாரதத்துக்கு உள்ளது என்று நேரு சொன்ன மேற்கோளோடு தொடங்குகிறது இந்த நூல். நேருவின் இந்த மேற்கோள் 1939-ஆம் ஆண்டு கொழும்புவில் வாழும் தமிழ் தொழிலாளர்களிடம் அவர் சொன்னது. காலனிய வரலாற்றுக் காரணங்களால் தமிழர்கள் பெரிய அளவில் காலனியாதிக்க நாடுகளின் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப் பட்டார்கள்; இலங்கையில், மலேசியாவில், ஃபிஜியில், தென்னாப்பிரிக்காவில். தென்கிழக்காசிய நாடுகளில், குறிப்பாக மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் வேர்கள் இந்த காலனியாதிக்கக் கொடுமையிலிருந்து உருவானவை. இன்றைக்கு மத-இன அடிப்படையிலான தேசியங்கள் இந்தப் பழைய காலனிய நாடுகளில் இறுக்கமடைந்ததன் விளைவாக சிறுபான்மை இந்திய வம்சாவளியினர்- தமிழர்கள்- கொடுக்கும் விலையும் அனுபவிக்கும் துன்பங்களும் மிகக் கொடுமையானவை. ஆனால் ஊடகங்களாலோ அறிவுஜீவிகளாலோ பேசப்படாதவை. காரணங்களும் வெளிப்படையானவை. போலி-மதச்சார்பின்மை, ஓட்டு வங்கி அரசியல், பொதுவான மானுட நேயமின்மை ஆகியவை அக்காரணங்களுள் சில.

இந்த நூல் காலனிய ஆதிக்கம் எப்படி, கொடுமையாக, அப்பட்டமான சுயநலத்துடன் தன் அதிகார வெறிக்குத் தீனிப்போட இந்தியத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது என்பதைக் காட்டுகிறது. பீகிங்கில் நிகழும் படுகொலைகளிலிருந்து பிரிட்டிஷ் தூதுவர்கள் பாதுக்காக்கப்பட இந்தியர்களை அனுப்பலாம்; சோமாலியாவில் சண்டை போட இந்தியர்களை அனுப்பலாம்; ஏடன்- தீன் சீன் நிலக்கரிச் சுரங்கங்களைப் பாதுகாக்க வேண்டுமா… இந்தியர்களைத் தரலாம். உகாண்டாவிலோ சூடானிலோ ஒரு ரயில் பாதையைக் கட்ட வேண்டுமா? அந்த பிரிட்டிஷ் கம்பெனிக்கு சிறந்த தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து கிடைப்பார்கள்…. இப்படிப் பட்டியலிட்டு பேசியது இந்தியாவின் பிரிட்டிஷ் வைஸிராயாக இருந்த கர்ஸான் லண்டனில் உள்ள கில்டுஹாலில் ஆற்றிய உரையில்.

உள்நாட்டில் பஞ்சம். பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்திய பஞ்சம். விளைவாக கப்பல் கப்பலாக, கொத்தடிமைகளாக, இந்தியர்கள் காலனியப் பிரதேசங்களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க அனுப்பப்பட்டார்கள். அப்படி வந்தவர்கள்தாம் இன்று மலேசியாவில் வாழும் பெரும்பாலான தமிழர்கள். ஆனால் மலேசியா என்கிற தேசத்தின் புராதனப் பண்பாட்டை மிகத் தொன்மையான காலத்தில் பின்சென்று நோக்கினால் அதன் வேர்களும் தமிழர்களிடம் இருந்து வந்தவையாக இருக்கும் என்பதுதான் வேதனையான வரலாற்று உண்மை. கிராமம் கிராமமாகப் பிடுங்கப்பட்டு மலேசியாவில் தூக்கி வீசப்பட்ட தமிழர்கள் தங்கள் பண்பாட்டை அங்கே அணுஅணுவாக மீட்டுருவாக்கம் செய்தார்கள். விழாக்காலங்களில் தாங்கள் வாழும் இடங்களின் முன்பகுதிகளை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பார்கள்; தைப்பூசத்தன்று சுங்கோபுலோவில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தரிசனத்துக்குச் செல்வார்கள்…. மலேயாவில் வாழும் இந்தியர்கள் எப்பொழுதும் தங்கள் தாயகத்தின் பாதிப்பை தங்களுள்ளே கொண்டிருந்தார்கள். ஆனால் அரசியல் ரீதியாக இந்திய வம்சாவளியினர், அவர்களுக்கொப்பக் குடியேறிய சீனர்களைக் காட்டிலும் தாமதமாகவே விழிப்புணர்வடைந்தார்கள். சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு இந்தத் தென்கிழக்காசிய நாட்டுத் தமிழர்கள் அளித்த பங்கு மகத்தானது முக்கியமானது.

ஆனால் அந்தப் பிராந்திய அரசியல் வேறுமாதிரியானது. சீனா ஜப்பானுக்கு எதிரி. ஜப்பானிய ஆக்கிரமிப்பில் அனைத்து இன மக்களும் கொடுமைப் படுத்தப்பட்டனர். குறிப்பாக சீனர்கள். தமிழர்களும் விட்டு வைக்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்- இந்திய வம்சாவளியினர் பிணைக்கப்பட்டு ஜப்பானிய ராணுவத்தால் சியாமிய எல்லையில் ரயில்வே கட்டுமானத்துக்காக அனுப்பப்பட்டனர். மரண ரயில்பாதை எனப் ‘புகழ்’பெற்ற இந்த பாதையைக் கட்ட 70,000 தமிழர்கள் அனுப்பப்பட்டனர். அதில் 25,000 பேர்கள் இறந்துவிட்டனர். 12,000 பேர்களே திரும்ப வந்தனர். 5000 பேர் தப்பி ஓடிவிட்டனர். 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாகத் திரும்பி வந்தனர். 9000-க்கும் பேர்பட்ட குழந்தைகள் அநாதைகளாகினர். அதாவது அந்தப் பிராந்தியத்தின் வரலாற்றில் இணைப்பிரிக்க முடியாத ஓர் அங்கமாக தங்கள் இரத்தத்தைச் சிந்தி இந்தத் தமிழர்கள் வேரூன்றினர். அம்மக்கள் வரலாற்றில் பட்ட கஷ்ட நஷ்டங்களை இவர்களும் தங்கள் வாழ்க்கையில் அதே அவலத்துடன் அல்லது அதை விடக் கொடுமையான சோகத்துடன்- இரு முறை கொத்தடிமைகளாக்கப்பட்டவர்களல்லவா?- சுமந்தனர்.

இந்தக் காலனிய வரலாற்றின் பின்னணியில் விடுதலைக்குப் பிறகு மதமும்-இனமும் இணைந்த ஒரு விசித்திர அடையாளம் உருவாகிறது. அதுதான் ‘பூமி புத்திரர்கள்’. 1969-க்குப் பிறகு மலேய மொழிவெறி காற்றடிக்க ஆரம்பிக்கிறது. சிறுபான்மைத் தமிழர்களின் கல்வியாதாரங்களாக இருந்த தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் செல்வாக்கிழக்க ஆரம்பிக்கின்றன. இது தோட்டங்களில் வேலை செய்த ஏழை தமிழர்களின் சமூக முன்னேற்றத்தை பெருமளவில் பாதித்தது. (இங்கு இன்னொன்றைச் சொல்ல வேண்டும். மலேசிய ஆட்சி அதிகார வர்க்கத்தினர் மலே பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில்லை. அருகில் உள்ள சிங்கப்பூரின் ஆங்கிலப் பள்ளிகளுக்கு மலேசிய மேல்வர்க்கக் குழந்தைகள் தினமும் சென்று படித்துத் திரும்புவதை எவரும் காணமுடியும். மொழி வெறியேற்றும் அரசியல்வாதிகள் எல்லா இடங்களிலும் இரட்டை வேடதாரிகள்தான் போலும்.) மலேசிய விடுதலைக்குப் பின் தமிழ்வழிப் பள்ளிகள் கணிசமாகக் (50 விழுக்காடு) குறைந்தன. இருக்கும் பள்ளிகளிலும் நிலை மிக மோசமாக இருக்கிறது. தகுதியான ஆசிரியர்கள், தேவையான உள்கட்டமைப்பு எதுவுமே இல்லை. இவற்றில் படித்து வரும் குழந்தைகள் மேல் படிப்புக்குச் செல்ல மீண்டும் “Remove class” என்கிற படிப்பு படிக்க வேண்டும். மலேசிய இந்திய வம்சாவளி மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக வேகமாக உருவாகி வரும் HINDRAF இயக்கத்தைச் சேர்ந்த வேத மூர்த்தி சொல்கிறார்- “பல்வேறு பிரச்சினைகளின் காரணங்களின் ஊடே பார்த்தால் மிக முக்கியக் காரணம் ஏழைமையே. எந்த ஒரு நிறுவன ஆதரவும் இம்மக்களுக்குக் கிடைக்காததும் ஒரு முக்கியக் காரணமாகும்.”

இன்றைக்கு மலேசியப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர்கள் 6.2 விழுக்காடு மட்டுமே. இந்நிலையில் சில ஆர்வம் கொண்ட தமிழர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி தமிழர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றனர். இதன் மூலம் முன்னுக்கு வரும் மாணவர்கள் தங்களைப் போல வாய்ப்புக்குப் போராடும் மாணவர்களுக்கு மீண்டும் உதவுகிறார்கள். கல்வியாளர் டாக்டர். தம்பிராஜாவால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 300 இடங்களில் செயல்படுகிறது. 36,000 மாணவர்கள் பலனடைந்து வருகிறார்கள். என்றாலும் இது ஒரு சிறிய தீர்வுதான்.

இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பரிமாணங்கள் பெருகிவருகின்றன. ஹிந்து கோயில்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. ஷரீயத் எனும் மத்தியகால இஸ்லாமியச் சட்டம் நவீன மலேசியாவில் கோலோச்சுகிறது. மதச்சிறுபான்மையினரை விதவிதமாக அவதிக்குள்ளாக்கும் இக்கொடுஞ்சட்டம் சிறுபான்மை ஹிந்துக்களின் கலாசார மதசுதந்திரக் குரல்வளையை நசுக்குகிறது. இந்த நூல் இதுகுறித்த பல தனிப்பட்ட, மனதைப் பிழியும் உதாரணங்களை ஆதாரத்துடன் முன்வைக்கிறது. வாழும்போது மட்டுமல்ல இறந்த பிறகும் கூட இஸ்லாமியச் சட்டத்தின் கொடுங்கரம் ஹிந்துக்களை நிம்மதியாக விடுவதில்லை. மூர்த்தி மணியம் என்பவர் இறக்கும்வரை ஹிந்துவாகவே வாழ்ந்தவர் என்கிறார் அவரது மனைவி. ஆனால் அவரது மனைவியின் எதிர்ப்பையும் கோரிக்கையையும் கணவனை இழந்த அவரது துயர சூழலையும் மீறி, இறந்த அவரது கணவரின் உடல் இஸ்லாமிய முறைப்படி வலுக்கட்டாயமாக அடக்கம் செய்யப்படுகிறது. பெற்றோரில் ஒருவர் இஸ்லாமியராக இருந்தாலும் பெற்றோரின் ஒப்புதலின்றி குழந்தைகளை வலுக்கட்டாயமாக அரசாங்கமே இஸ்லாமியராக மாற்றுவது, அதனை ஏற்காவிட்டால் குழந்தைகளை முறைப்படி பெயர் பதியவிடாமல் தடுப்பது, சிறையில் அடைக்கப்படும் ஹிந்துக்களுக்கு வலுக்கட்டாயமாகவோ அல்லது மறைமுகமாகவோ மாட்டிறைச்சி கொடுப்பது, தினசரி ஹிந்து கோயில் ஒன்றாவது உடைக்கப்படுவது (பிரசித்தி பெற்ற ஷா ஆலம் மாரியம்மன் கோயிலும் இதில் அடக்கம்)… என்று இப்பட்டியல் நம்மைப் பதற வைக்கிறது. தமிழ்ஹிந்து.காம் ஏற்கனவே இப்பிரச்சனைகளில் போராடி வரும் நம் மலேசிய தமிழ்ஹிந்து சகோதரிகள் குறித்து எழுதிய கட்டுரை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்: அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா, ரேவதி

இத்தகைய கடும் வாழ்வாதார உரிமைப் பறிப்பும், பண்பாட்டு-மத ரீதியிலான நசுக்குதலையும் இந்திய வம்சாவளியினர் எதிர்கொண்டு காந்திய ரீதியில் அமைதியாகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். அடுத்து இந்த நூல் எப்படி உலகெங்கிலுமுள்ள இந்திய வம்சாவளியினரிடம் இந்தியத் தாயக அரசு ஒரு வலைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வரலாற்று ரீதியாக ஜனதா அரசின் காலத்திலிருந்தே முயற்சிகள் எடுத்தது என்பதையும் அம்முயற்சிகள் எவ்வாறு பரிணமித்தன என்பதையும் காட்டுகிறது. உதாரணமாக இந்திய வம்சாவளியினர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயுதக் கலகம் நடத்திய ஃபிஜி கலகக்கார அரசுக்கு எதிராக அன்றைய இந்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்தது. ரம்புகா அரசினை அங்கீகரிக்க மறுத்ததுடன் அதற்கு எதிராக வியாபாரத்தடையைக் கொண்டு வந்தது, காமன்வெல்த்திலிருந்து ஃபிஜியை நீக்க முயற்சி எடுத்து வெற்றியடைந்தது. 1998-இல் உருவான பாஜக அரசு இந்த முயற்சிகளுக்கு மேலும் சிறப்பு வடிவம் கொடுத்தது. வாக்களிக்க மட்டுமே அனுமதிக்காத இரட்டைக் குடியுரிமை முறையின் தொடக்கமாக பி.ஐ.ஓ அட்டையை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அத்துடன் ப்ரவாஸி பாரதீய திவஸ் எனும் நிகழ்ச்சியை அது உருவாக்கியது. இம்முயற்சிகள் முக்கியமானவை. அயலகம் வாழும் தமிழ்மக்கள் விஷயத்தில் முக்கிய அக்கறை எடுத்துக் கொண்ட முக்கிய தமிழ்த் தலைவர் டி.எஸ்.அவினாசி லிங்கம் அவர்கள். ராமகிருஷ்ணா மிஷன் செயல்பாடுகள் மூலம் தென்கிழக்காசிய அயலகங்களில் வாழும் தமிழர்களை அடிக்கடி சந்தித்துவந்தவர் அவர். 1967-இல் உலகத் தமிழ்மாநாடு மலேசியாவில் நடந்தது. பாராசக்தி படத்தில் பர்மா தமிழர்களின் அவலநிலை சித்தரிக்கப்பட்டது. இலங்கை வாழ் தமிழர் மீது இந்தியக் குடியேற்றம் திணிக்கப்பட்டு இந்தியாவில் குடியேறிய தமிழர்களுக்கு நல்வாழ்வு தருவதில் சென்னையும் சரி டெல்லியும் சரி அக்கறை காட்டவில்லை. வாய்ச்சவடால்கள் விழாப்பந்தல்களுடன் அது முடிந்துவிட்டது. இவ்விதத்தில் குடியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி இந்த நூல் ஆசிரியரிடம் மனக்கசப்புடன் “இது தாய்நாடா இல்லை நாய்வீடா” என்று கூறியதைக் குறிப்பிடும் ஆசிரியர் நம் மக்கள் படும் வேதனையை விளக்குகிறார்:

இலங்கையில் வேண்டாம் என்று துரத்தப்பட்டார்கள். இந்தியாவில் மனமின்றி வரவேற்கப்பட்டார்கள். திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சித்தலைவர்களால் அக்கறை எடுத்துக் கொள்ளப்படாததால் திக்கு தெரியாமல் இம்மக்கள் அலைகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் உள்ள முரண்நகை என்னவெனில் இந்தத் துரதிர்ஷ்ட மக்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பலவருடங்கள் இலங்கையில் வசித்த போதும் இந்த கௌரவம் அவர்களுக்கு அங்கு கிடைக்கவில்லை. இலங்கையில் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என அறியப்பட்டார்கள்.

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?

இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது. வெற்றி பெற்றுள்ள முதல் முயற்சி. சென்னையிலிருந்து செயல்பட்டு வரும் Centre for Asian Studies வெளியிட்டுள்ள நூல் இது. தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் குறித்த ஆய்வுத்துறை பேராசிரியர் வி.சூரியநாராயணன் எழுதியிருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக இந்த ஆய்வுடன் தம்மை இணைத்துக் கொண்டவர் அவர். சிறப்பான மொழிப்பெயர்ப்பைச் செய்திருப்பவர் திரு.தருமசேனன். புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனைப் புறந்தள்ளி நாம் வாழமுடியாது. எனவே இந்த நூல் ஒவ்வொரு தமிழனும் கட்டாயமாகப் படிக்க வேண்டிய நூல். இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிரபல பத்திரிகையாளர் வாஸந்தி கூறுகிறார்:

“தொலைக்காட்சி ஊடகக் காட்சிகள் ஏற்படுத்தாத பாதிப்பை இப்புத்தகம் தனது ஆழ்ந்த பார்வையாலும் உள்ளார்ந்த கரிசனத்தாலும் ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக மலேசியா வாழ் தமிழர்களின் வாழ்வில் சிறிது மலர்ச்சி ஏற்படுத்தும் முயற்சியில் நாம் இறங்குவோமானால் அது புத்தகத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பாராட்டும் வெற்றியும்.” சத்தியமான வார்த்தைகள்.


நன்றி : தமிழ் ஹிந்து இணையம்

உமாமீனா
28-02-2011, 09:28 AM
நான் ஏற்கனவே சொன்னதுதான்

இது தான் தமிழர்களின் சாபகேடு தலை விதி - இதுக்கு காரணம், அடித்தளமாக அமைந்தது இலங்கை தமிழர் சம்பவம் மற்றும் நமது தலைமையில் உள்ளவர்களும். இதுக்கு மேல என்ன சொல்ல உங்களுக்கே புரியும்

Ravee
01-03-2011, 08:50 AM
நன்றி உமா மீனா , நமது மலேசிய நண்பர்களும் இது பற்றி பகிர்ந்து கொண்டால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியவரும் என நினைக்கிறேன்.

Mano.G.
02-03-2011, 03:17 AM
அன்பான ரவீ அவர்களுக்கும் , உமா மீனா அவர்களுக்கும்,

மேலே நீங்கள் பதித்த தமிழ் இந்து இணைய பதிப்பு ஓரளவு உண்மை இருப்பினும், முற்றுமாக எல்லாமே உண்மையில்லை இதை நான் மலேசியாவில் பிறந்து கல்வி கற்று உத்யோகம் பார்த்து கொண்டு எனது குடும்பத்தோடு வாழ்கிரேன்.

முக்கியமாக நமது இந்திய சமூதாயத்தின் மலேசியாவின் நிலை:

1) இந்த சமுதாயத்தில் இருக்கும் ஒரே ஒரு குறை ஒற்றுமை இன்மை,
ஏன் எட்டப்பன் என்பவன் நம்மினத்தில் பிறந்ததினாலோ இல்லை இந்தியர்களின்
பெற்ற சாபமோ????? தெரியவில்லை.

2) எதிர்பார்க்கும் சாமூகம்:
அரசாங்கம் எனக்கு அதை செய்ய வேண்டும் , இதை செய்யவேண்டும் , வீடு கட்டி கொடுக்க வேண்டும் , வேலை கொடுக்க வேண்டும், வீட்டில் இருக்கும் போது
பணமும் கொடுக்க வேண்டும், எல்லாம் இலவசமாக கொடுக்க வேண்டும்.

3) 2007 - நவம்பர் 27ம் நாள் பெட்ரோனாஸ் இரட்டை கோபுர வளாகத்தில் அமைதிப் பேரணி நடத்த காவல் துறை அனுமதிக்க கொடுக்கவில்லை ஆனால் அந்த பேரணியை வேறு இடத்தில் (உதாரணத்திற்கு பெரிய விளையாட்டு அரங்கத்தில் நடத்த போலிசாரல் ஆலோசனை கூறப்பட்டது) பொது இடத்தில் பேரணி நடத்துவது
பொதுமக்களுக்கும் சுற்றுபயணிகளுக்கும் அசௌரியங்களை ஏற்படுத்தும் என்பதற்காகவே.

3)நமக்கு நம் திறமை மீதே நம்பிக்கை இல்லாதால் தான் அரசாங்கத்தை எதிர்பார்க்கரீர்கள்.

4) நவம்பர் 27, 2007, பேரணி நடக்க காரணமான அந்த இயக்கத்தின் தற்போதைய
நிலை என்ன? தங்களுக்குள் பதவி போராட்டம் உட்பூசல், சுயநல போக்கு, மற்ற இனத்தவர் நம்மை பார்த்து சிரிக்கவும் , காப்பி கடை வெட்டி பேச்சுக்கு தலைப்பாகவும் ஆனதுதான்.

4) இந்திய இன இளைஞர்கள் வன்முறைக்கும் , குற்றசெயல்களுக்கும் மலேசிய
மண்ணில் முதலிடத்தில் இருப்பது வெட்கத்திற்குறியது. இதற்கு காரணம் யார், அரசாங்கமா இல்லை சமூக தலைவர்களா அதுவும் இல்லை குடும்பத்தலைவர்களா???

5) மலேசிய மண்ணில் இனப்படுகொலை , இன அழிப்பு ஏதும் நடைபெறவில்லை.
நம் இனத்தையும் நம் மொழியையும் , நம் கலாச்சாரத்தையும் பேணிக்காக்க வேண்டியது ஒவ்வொரு மலேசிய இந்தியனின் கடமை.


இங்கே குறிப்பிட்டது என்னுடைய தனிபட்ட கருத்தே.


மனோ.ஜி

அன்புரசிகன்
02-03-2011, 03:44 AM
தமிழ் ஹிந்து இணையம் என்பது இந்து பத்திரிக்கையின் இணையமா இல்லை வேறு ஏதாவது இணையமா?

காரணம் வெள்ளையர்களின் வெறியாட்டம் என்ற ஒரு செய்தி முன்பு இந்து பத்திரிக்கையில் படித்து சிரித்திருக்கிறேன். (அவுஸில் நடந்த நிகழ்வு சம்பந்தமாக) எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்க... :)

மனோ அண்ணா.. என்ன அப்படி சொல்லிப்புட்டீங்க. இலவசம் தானே நம் உயிர்மூச்சு. ;)