PDA

View Full Version : .. நல்ல தமிழ் எழுத.



M.Jagadeesan
24-02-2011, 04:05 PM
தமிழில் பேசும்போதும்,எழுதும்போதும் பல தவறுகளைச் செய்கிறோம்,பேச்சுத் தமி
ழில் செய்யும் தவறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை.ஆனால் எழுதும்போது
நாம் செய்யும் தவறுகள், பளிச்சென்று தெரிகின்றன.அவற்றைக் களைந்து தூய தமி
ழில் எல்லோரும் எழுதவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

1.பிழை:வீட்டுக்கு அருகாமையில் பள்ளி உள்ளது.
.......சரி:வீட்டுக்கு அருகில் பள்ளி உள்ளது.
............வீட்டுக்கு அண்மையில் பள்ளி உள்ளது.

2.பிழை:சாலையின் இடதுபக்கம் செல்ல வேண்டும்.
.......சரி:சாலையின் இடப்பக்கம் செல்ல வேண்டும்.

3.பிழை:தலைவரின் இறுதி ஊர்வலம் சென்றது.
.......சரி:தலைவரின் இறுதி ஊர்கோலம் சென்றது.

4.பிழை:தலைக்கு எண்ணை தேய்த்தான்.
.......சரி:தலைக்கு எண்ணெய் தேய்த்தான்.

5.பிழை:காக்கை நரியிடம் ஏமாந்து போனது.
.......சரி:காக்கை நரியிடம் ஏமாறிப் போனது.

6.பிழை:பொறியாளர் கட்டிடம் கட்டினார்.
.......சரி:பொறியாளர் கட்டடம் கட்டினார்.

7.பிழை:எனது மகனுக்குத் திருமணம் செய்தேன்.
.......சரி:என் மகனுக்குத் திருமணம் செய்தேன்.

8.பிழை:பெரியார் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.
.......சரி:பெரியார் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.

9.பிழை:குளிப்பதற்கு சுடுதண்ணீர் போடு.
.......சரி:குளிப்பதற்கு வெந்நீர் போடு.

10.பிழை:தவறுக்கு வருந்துகிறேன்.
........சரி:தவற்றுக்கு வருந்துகிறேன்.

11.பிழை:தற்காலத்தில் உண்மைக்கு மதிப்பில்லை.
........சரி:இக்காலத்தில் உண்மைக்கு மதிப்பில்லை.

12.பிழை:தேனீர் கொண்டு வா!
........சரி:தேநீர் கொண்டு வா!

13.பிழை:உன்னைப் பார்த்து பலநாட்கள் ஆயின.
........சரி:உன்னைப் பார்த்து நாள்கள் பல ஆயின.

14.பிழை:மலரை முகர்ந்து பார்த்தான்.
........சரி:மலரை மோந்து பார்த்தான்.

15.பிழை:இந்திய அணி வென்று சுழல்கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.
........சரி:இந்திய அணி வென்று சுழல்கோப்பையைத் தங்க வைத்துக்கொண்டது.

16.பிழை:கண்ணன் முருகன் மற்றும் கந்தன் வந்தனர்.
........சரி:கண்ணனும் முருகனும் கந்தனும் வந்தனர்.

17.பிழை:மாமியார் தரும் தொல்லையைச் சொல்லி முடியாது.
........சரி:மாமியார் தரும் தொல்லையைச் சொல்வது முடியாது.

18.பிழை:பிரதி வெள்ளிக்கிழமை விடுமுறை.
........சரி:வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை.

19.பிழை:இருபது பழங்களுக்கு மேல் இந்தக் கூடையில் உள்ளன.
........சரி:பழங்கள் இருபதுக்கு மேல் இந்தக் கூடையில் உள்ளன.

20.பிழை; நான் பால் சாப்பிட்டேன்.
........சரி: நான் பால் குடித்தேன்.

21.பிழை:அண்ணா சொற்பொழிவு செய்தார்.
........சரி:அண்ணா சொற்பொழிவாற்றினார்.

22.பிழை:பாரதியார் சிறுவனாய் இருக்கும்போதே பாட்டெழுதினார்.
........சரி:பாரதியார் சிறுவராய் இருந்தபோதே பாட்டெழுதினார்.

23.பிழை:இங்குள்ளது எல்லாமே நல்ல பழங்கள்.
........சரி:இங்குள்ளவை எல்லாமே நல்ல பழங்கள்.

24.பிழை:வாங்கிய பணத்தைக் கொடுப்பது எல்லாம் என்னிடம் இல்லை.
........சரி:வாங்கிய பணத்தைக் கொடுப்பது என்பது என்னிடம் இல்லை.

25.பிழை:என்னுடைய மாதவருமானம் இருபதாயிரம் ரூபாய்கள்.
........சரி:என்னுடைய மாத வருமானம் இருபதாயிரம் ரூபாய்.

26.பிழை:விபத்தில் கை,கால் உடைந்துவிட்டது.
........சரி:விபத்தில் கையும் காலும் உடைந்துவிட்டன.

27.பிழை:உணவில்லாமல் வாழ முடியாது.
........சரி;உணவில்லாமல் வாழ்வது முடியாது.

28.பிழை:புல்,பூண்டு இல்லையானால் ஆடு மாடு வாழாது.
.........சரி:புல்.பூண்டு இல்லையானால் ஆடு மாடுகள் வாழா.

29.பிழை:மருத்துவ வசதி இன்மையால் அவன் இறக்க நேரிட்டது.
........சரி:மருத்துவ வசதி இன்மையால் அவன் இறந்தான்.(அல்லது)
.............மருத்துவ வசதி இன்மையால் அவன் இறத்தல் நேரிட்டது.

30.பிழை:கோவலன் மனைவிக்குக் கண்ணகி என்று பெயர்.
.........சரி:கோவலன் மனைவி பெயர் கண்ணகி.

31.பிழை:வீட்டின் கூரைத் தீப்பற்றியது.
.........சரி:வீட்டின் கூரையைத் தீப்பற்றியது.

32.பிழை:செய்தி அறிக்கை கேட்டீர்கள்.
.........சரி:செய்தி கேட்டீர்கள்.

33.பிழை:அந்த பக்கம் போகாதே!
........சரி:அந்தப் பக்கம் போகாதே!

34.பிழை:இந்த கடையில் வாங்கு.
.........சரி:இந்தக் கடையில் வாங்கு.

35.பிழை:எந்த பேனா நல்லது?
........சரி:எந்தப் பேனா நல்லது?

36.பிழை:அப்படி சொல்லாதே!
.........சரி:அப்படிச் சொல்லாதே!

37.பிழை:இப்படி பார்க்காதே!
........சரி:இப்படிப் பார்க்காதே!

38.பிழை:எப்படி செய்தாய்?
.........சரி:எப்படிச் செய்தாய்?

39.பிழை:புதுமனை புகுவிழா அழைப்பிதழ்.
........சரி:புதுமனைப் புகுவிழா அழைப்பிதழ்.

40.பிழை:தனி பாடல் திரட்டு.
.........சரி:தனிப்பாடல் திரட்டு.

41.பிழை: நடு தெருவில் கூட்டம் நடந்தது.
........சரி: நடுத்தெருவில் கூட்டம் நடந்தது.

42.பிழை:முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தான்.
.........சரி:முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தான்.

43.பிழை:புது பானையில் பொங்கலிட்டாள்.
........சரி:புதுப் பானையில் பொங்கலிட்டாள்.

44.பிழை:திரு குளம் நிரம்பியது.
.........சரி:திருக்குளம் நிரம்பியது.

45.பிழை:அரை கவளம் சாப்பிட்டான்.
........சரி:அரைக்கவளம் சாப்பிட்டான்.

46.பிழை:பாதி பக்கம் படித்தேன்.
.........சரி:பாதிப்பக்கம் படித்தேன்.

47.பிழை:பொது கூட்டம் நடந்தது.
.........சரி:பொதுக்கூட்டம் நடந்தது.

48.பிழை:தேக்கு பலகை உறுதியானது.
.........சரி:தேக்குப் பலகை உறுதியானது.

49.பிழை:அவன் தப்பு கணக்கு போட்டான்.
.........சரி:அவன் தப்புக் கணக்குப் போட்டான்.

50.பிழை:அவன் தமிழ் கற்று கொண்டான்.
.........சரி:அவன் தமிழ் கற்றுக் கொண்டான்.

51.பிழை:இனிமையாக பாட்டு பாடினாள்.
.........சரி:இனிமையாகப் பாட்டுப் பாடினாள்.

52.பிழை:பாலுக்கு காவல் பூனைக்கு தோழன்.
.........சரி:பாலுக்குக் காவல் பூனைக்குத் தோழன்.

53.பிழை: நாய் குட்டி அழகாக உள்ளது.
........சரி: நாய்க்குட்டி அழகாக உள்ளது.

54.பிழை:வேர் பலா இனிப்பாக இருக்கும்.
.........சரி:வேர்ப்பலா இனிப்பாக இருக்கும்.

55.பிழை:மலர் செண்டு கொடுத்தான்.
........சரி:மலர்ச் செண்டு கொடுத்தான்.

56.பிழை: நீர் குமிழி போன்ற வாழ்வு.
........சரி: நீர்க் குமிழி போன்ற வாழ்வு.

57.பிழை:தமிழ் தாய் வாழ்த்து பாடினான்.
........சரி:தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினான்.

58.பிழை:தீ பந்தம் பிடித்தான்.
.........சரி:தீப்பந்தம் பிடித்தான்.

59.பிழை:பூ செண்டு கொடுத்தான்.
........சரி:பூச்செண்டு கொடுத்தான்.

60.பிழை:கை கொடுத்து உதவினான்.
........சரி:கைக்கொடுத்து உதவினான்.

61.பிழை:மை தீட்டிய கண்.
........சரி:மைத் தீட்டிய கண்.

62.பிழை:சாரை பாம்பு ஓடியது.
........சரி:சாரைப்பாம்பு ஓடியது.

63.பிழை:குருவி கூட்டை கலைத்தான்.
........சரி:குருவிக்கூட்டைக் கலைத்தான்.

64.பிழை:பொய் சான்று சொன்னான்.
........சரி:பொய்ச்சான்று சொன்னான்.

65.பிழை:எங்கு போய் தேடுவேன்?
........சரி:எங்கு போய்த் தேடுவேன்?

66.பிழை:பாம்பு புற்றில் கை விட்டான்.
........சரி:பாம்புப் புற்றில் கை விட்டான்.

67.பிழை:மருந்து கடையில் மருந்து வாங்கினேன்.
........சரி:மருந்துக் கடையில் மருந்து வாங்கினேன்.

68.பிழை:பாலை நன்றாய் குடிக்குது கன்று குட்டி.
........சரி:பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.

69.பிழை: நெய்பவனுக்கு எதற்கு குரங்கு குட்டி?
........சரி: நெய்பவனுக்கு எதற்குக் குரங்குக் குட்டி?

70.பிழை:தாமரை கண்ணான் உலகு.
........சரி:தாமரைக் கண்ணான் உலகு.

71.பிழை:படத்திற்கு மர சட்டம் போட்டான்.
........சரி:படத்திற்கு மரச்சட்டம் போட்டான்.

72.பிழை:சாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்தனர்.
........சரி:சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தனர்.

73.பிழை:கோழி தவிடு விற்றான்.
........சரி:கோழித்தவிடு விற்றான்.

74.பிழை:கடற்கரை சாலை மிகவும் அழகானது.
........சரி:கடற்கரைச்சாலை மிகவும் அழகானது.

75.பிழை:தண்ணீர் பாத்திரம் நிரம்பியது.
........சரி:தண்ணீர்ப்பாத்திரம் நிரம்பியது.

76.பிழை:பலக் கலைகள் பயின்றான்.
........சரி:பல கலைகள் பயின்றான்.

77.பிழை:செல்ல கிளியே! தமிழ்ப்பேசு.
........சரி:செல்லக்கிளியே! தமிழ் பேசு.

78.பிழை:இராமனோடுச் சென்றான் இலக்குவன்.
........சரி:இராமனோடு சென்றான் இலக்குவன்.

79.பிழை:பையிலிருந்துக் கொடுத்தான்.
.........சரி:பையிலிருந்து கொடுத்தான்.

80.பிழை:ராமச்ஜெயம் எழுதினான்.
........சரி:ராமஜெயம் எழுதினான்.

81.பிழை:ராமப்பாணம் ஏழு மரங்களை துளைத்தது.
........சரி:ராம பாணம் ஏழு மரங்களைத் துளைத்தது.

82.பிழை:வாழ்கப் பாரதியார் புகழ்!
........சரி:வாழ்க பாரதியார் புகழ்!

83.பிழை:தேசப் பிதா காந்தியடிகள்.
........சரி:தேசபிதா காந்தியடிகள்.

84.பிழை:சுடுச்சோறு தின்றான்.
........சரி:சுடு சோறு தின்றான்.

85.பிழை:கபிலப்பரணர் வந்தனர்.
.........சரி:கபிலபரணர் வந்தனர்.

86.பிழை:அரசு ஆணைப் பிறப்பித்தது.
........சரி:அரசு ஆணை பிறப்பித்தது.

87.பிழை:வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
........சரி:வேட்பு மனு பதிவு செய்யப்பட்டது.

88.பிழை:தலா ஒரு ரூபாய் கொடு.
........சரி:தலைக்கு ஒரு ரூபாய் கொடு.

89.பிழை:பிரயாணம் செய்யும்போது பிரயாணி பிரியாணி தின்றான்.
........சரி:பயணம் செய்யும்போது பயணி பிரியாணி தின்றான்.

90.பிழை:திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் விடப்படும்.
........சரி:திருவிழாவை முன்னிட்டு தனிப் பேருந்துகள் விடப்படும்.

91.பிழை: நில நடுக்கத்தில் பலர் இறந்தனர்.
........சரி: நில நடுக்கத்தால் பலர் இறந்தனர்.

92.பிழை:ஆயிரத்தி தொளாயிரத்தி எண்பத்தி ஒன்பது.
........சரி:ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து ஒன்பது.

93.பிழை:மாமூல் நிலை திரும்பியது.
........சரி:இயல்பான நிலை திரும்பியது.

94.பிழை:அரசு திட்டத்தை ரத்து செய்தது.
........சரி:அரசு திட்டத்தை விலக்கிக் கொண்டது.

95.பிழை:முன்புறம் மோதிய காரை புகைவண்டி இழுத்துச் சென்றது.
........சரி:முன்புறம் மோதிய காரைப் புகைவண்டி தள்ளிக்கொண்டு சென்றது.

96.பிழை:இவ்விடம் சிமெண்ட் விற்க்கப்படும்.
........சரி:இவ்விடம் சிமெண்ட் விற்கப்படும்.

97.பிழை:மகப்பேறு இன்மைக்கு ஆலோசனை வழங்கப்படும்.
........சரி:மகப்பேறு இன்மை நீக்குவதற்கு ஆலோசனை வழங்கப்படும்.

98.பிழை:திருடர்கள் ஜாக்கிரதை!
........சரி: கள்வர் உளர்.கவனம் தேவை!

99.பிழை:பரிசோதகர் கேட்கும்போது டிக்கெட்டை காண்பிக்கவேண்டும்.
........சரி:பரிசோதகர் கேட்கும்போது பயணச்சீட்டைக் காட்டவேண்டும்.

100.பிழை:படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்யக் கூடாது.
.........சரி:படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தல் கூடாது.

sarcharan
25-02-2011, 08:33 AM
பாராட்டுக்கள் தலைவரே.. நல்ல முயற்சி..

M.Jagadeesan
25-02-2011, 08:45 AM
தங்கள் பாராட்டுக்கு நன்றி சர்சரன் அவர்களே!

முரளிராஜா
25-02-2011, 11:15 AM
பயனுள்ள பகிர்வு
பாராட்டுக்கள்

Nivas.T
25-02-2011, 11:25 AM
மிகவும் பயனுள்ளது
முடிந்த வரை பழக்கப்படுத்திக் கொள்வோம்
பாராட்டுகள் ஜெகதீசன்

M.Jagadeesan
25-02-2011, 11:43 AM
நன்றி! நிவாஸ்.டி அவர்களே!

உமாமீனா
27-02-2011, 09:23 AM
இளைய தலைமுறைக்கு தேவையான ஒன்றுதான் - உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

M.Jagadeesan
27-02-2011, 11:35 AM
நன்றி! உமாமீனா அவர்களே!

பாரதி
27-02-2011, 02:06 PM
மிக நல்ல முயற்சிக்கு பாராட்டு. தொடர்ந்து எழுதுங்கள்.
மற்ற பிழைகளை நீக்கியது போன்றே இத்திரியில் இருக்கும் ஓரிரு ஆங்கிலச்சொற்களையும் நீக்கி தமிழில் தந்தீர்கள் எனில் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.

M.Jagadeesan
27-02-2011, 02:59 PM
பாராட்டுக்கு நன்றி! பாரதி அவர்களே! தங்களுடைய பழைய திரி ஒன்றில்
இலக்கண விதிகளோடு புணர்ச்சி இலக்கணத்தை தெளிவாகக் காட்டியி
ருந்தீர்கள்.அதை எளிமைப்படுத்தியிருக்கிறேன்.தாங்கள் கூறியபடி
ஆங்கிலச்சொற்களை அகற்றிவிடுகிறேன்.

த.ஜார்ஜ்
12-03-2011, 04:25 PM
சில வார்த்தைகள் சரியானவைப் போலவே இருந்தன. அவை பிழை என்று அறிய வாய்ப்பளித்தமைக்கு நன்றி. உதா: தலைக்கு எண்ணை தேய்த்தான்.

M.Jagadeesan
12-03-2011, 04:28 PM
பின்னூட்டத்திற்கு நன்றி ஜார்ஜ் அவர்களே!

பாலகன்
12-03-2011, 04:51 PM
அருமை ஜெகதீசன். பாராட்டுக்கள்

மேலும் வீட்டுக்கு என்பதற்கு பதிலாக வீட்டிற்கு என்பது தானே சரி! சரிபார்க்கவும்.

நான்(ம்) முன்பே ஒரு திரி துவக்கி தமிழ் எழுத்துப்பிழைகளை களைய ஆரம்பித்தோம் நினைவிருக்கிறதா? :D

கீதம்
12-03-2011, 09:28 PM
பல ஐயங்கள் உங்கள் முயற்சியால் தெளிவடைந்துள்ளன. நன்றி ஐயா.

M.Jagadeesan
12-03-2011, 11:37 PM
பல ஐயங்கள் உங்கள் முயற்சியால் தெளிவடைந்துள்ளன. நன்றி ஐயா.

கீதம் அவர்களின் பி.ஊ.க்கு நன்றி!

குணமதி
15-03-2011, 03:24 AM
அருமை ஜெகதீசன். பாராட்டுக்கள்

மேலும் வீட்டுக்கு என்பதற்கு பதிலாக வீட்டிற்கு என்பது தானே சரி! சரிபார்க்கவும்.

நான்(ம்) முன்பே ஒரு திரி துவக்கி தமிழ் எழுத்துப்பிழைகளை களைய ஆரம்பித்தோம் நினைவிருக்கிறதா? :D

வீட்டுக்கு - என்பது சரியே.

vseenu
20-09-2011, 03:56 PM
பிழையை
அருமையாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி

M.Jagadeesan
21-09-2011, 01:57 AM
தங்களின் பாராட்டுக்கு நன்றி VSEENU அவர்களே!

சொ.ஞானசம்பந்தன்
22-09-2011, 06:44 AM
பயன் தரும் முயற்சிக்கு என் பாராட்டு .

M.Jagadeesan
22-09-2011, 01:18 PM
தங்களின் பாராட்டுக்கு நன்றி ஐயா!

venugobal
19-12-2011, 03:14 AM
15.பிழை:இந்திய அணி வென்று சுழல்கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.
........சரி:இந்திய அணி வென்று சுழல்கோப்பையைத் தங்க வைத்துக்கொண்டது.

தக்க என்பது ஏன் ஏற்றுக்கொள்ளப்படாது? நீண்ட நெடுங்காலமாகவே, கற்றோரும் மற்றோரும் இதைப் பயன்படுத்தி வந்துள்ளனரே! தக்க காரணமின்றி இதைப் பிழையெனக்கொள்ள முடியாது.

வீட்டுக்கு, வீட்டிற்கு - இரண்டுமே சரிதான். ஒன்றில் சாரியை சேர்ந்துள்ளது. -கருத்துரைத்தோர் எழுப்பிய வினாவிற்குப் பதில்.

சுழல்கோப்பை என்பது சுழற்கோப்பை என்று வர வேண்டுமே! விளக்குக.

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-03-2012, 04:27 PM
நல்ல பயனுள்ள பதிவு ஐயா ...நன்றி :)

இராஜேஸ்வரன்
12-03-2012, 05:27 AM
சிறப்பான பதிப்பு. பல சந்தேகங்கள் தீர்ந்தன. பாராட்டுக்கள்.

செல்வா
13-03-2012, 02:45 AM
பயனுள்ள பதிவுப் பகிர்விற்கு முதலில் நன்றி ஐயா.
அதோடு இவை எதனால் பிழை என்ற காரணங்களையும் சொல்லி விளக்கினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

காரணங்கள் தெரிந்தால் மட்டுமே நம்மால் பிழைகளைக் களைந்து பேசவோ எழுதவோ இயலும். வெறுமனேச் சில வாக்கியங்களை மனப்பாடம் செய்தால் போதாது அல்லவா.

காரணங்களையும் விளக்கினால் தெரிந்து தெளிவோம்.

பயனுள்ளப் பதிவிற்கு நன்றி.

M.Jagadeesan
13-03-2012, 06:47 AM
தங்கள் பாராட்டுக்கு நன்றி செல்வா.