PDA

View Full Version : நெடுநல்வாடையை நுகர வாருங்கள்.



கீதம்
24-02-2011, 08:17 AM
பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்று நெடுநல்வாடை. இதைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார். இப்பாடலானது பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுவதாக உள்ளது. கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்ற தலைவனை எதிர்பார்த்து அவன் வராததால் தனிமைத் துயரில் தவிக்கும் தலைவியின் காதலை அழகுபட எடுத்துரைக்கிறார். அவளுக்கு வாடைக்காலம் நெடியதாகத் தெரிந்ததாம். தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்று பெயரிட்டார்.

மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் மிக அழகாக வர்ணித்துள்ளமை கண்டு நான் வியந்து ரசித்ததை உங்களுடன் பகிரவிரும்புகிறேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் அளவிடற்கரிய பேராசையே இம்முயற்சிக்கு மூலகாரணம். ஆதலால் கற்றவர் பிழை பொறுத்து குற்றம் காணுமிடத்து உரிமையுடன் திருத்தினால் மகிழ்வேன். மற்றவருக்காக இதோ..... பாடலும் என் விளக்கமும்.

***************************************************

கோவலர் வாடையால் துன்புறுதல்

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு கலங்கி, கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும்பனி நலிய, பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க, (1-8)


பொய்யா வானமது!
பெய்தது வானமுது!

வையகம் நனைக்கும் பொருட்டு,
வான்முகிற்கூட்டம் திரண்டு,
தாம் கிடந்த மலையை வளைத்து
வலமாய்க் கொண்டு எழுந்து,
பொழிந்த மழையை வெறுத்த…

எருதுகளோடு எருமைகளையும்
ஆட்டினத்தோடு ஆவினத்தையும்
கருத்தாய் மேய்த்துவரும்
கழியுடை இடையரினம்…..

மேய்ச்சல் நிலமதைப் பருகுவதுபோல்
பாய்ச்சலோடு ஓடிவந்த பாழ்நீர் கண்டு
ஓய்ச்சலின்றி ஓட்டினார் மந்தைதனை
காய்ச்சலற்ற மேட்டுநிலத்துக்கு.

புதுவெள்ளம் வரக்கண்டு
புலம்பெயர் நிலை கொண்டு
தனிமைத்துயர் மனங்கொள்ள
தவித்துப் புலம்பிச் செல்ல......

காந்தல் மாலை கழுத்திருந்து
ஏந்திய கரத்தால் நீர்ச்சொரிய...

வாட்டிய வாடையின் வாதை தணிக்க
மூட்டிய தீயின் முன்னேயிருந்து
காட்டிய கைகளை அக்குளில் பொத்தி
கூட்டிய வெம்மையும் உதவக் காணாது...

கிடுகிடுவென்று பற்கள் தந்தியடிக்க
நடுநடுங்கியிருந்தார் மந்தைக்காவலர்.

கீதம்
24-02-2011, 08:18 AM
கூதிர்க்கால நிலை

மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ( 9- 12)


கூதல் தந்த மந்தத்தால்
மந்தைகள் மேய்ச்சல் மறக்க...

அங்கும் இங்கும்
அலப்பும் மந்தியும்
ஓரிடம் குந்தியும்
ஒடுங்கியும் நடுங்கியுமிருக்க....

சிறகு உறைந்த பறவைகள்
உறைந்திருந்த சிறுகிளைகள்
விரைந்து வீசிய காற்றிலாட
விறைத்தவை தரையில் வீழ.....

பசிய புல்லையுந் துறந்து
பசுக்கள் முடங்கிக்கிடக்க...
பசியால் எழுந்த தவிப்பால்
சிசுக்கள் பால்மடி நெருங்க...

அறிவீரோ?
மன இரக்கமின்றி விரட்டப்பட்டன,
மடியிறக்கமின்றி வெருட்டப்பட்டன.

தாயன்பால் சுரக்கவேண்டிய
தாயின்பால் சுரக்கவில்லை
தாயின்பால்!

குன்றும் குளிரில் நடுங்கிக்
குன்றும் கூதிர்நாள் இதுவே!

கீதம்
24-02-2011, 08:25 AM
ஊரினது செழிப்பு

புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்,
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி,
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப;
அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க;
முழுமுதல் கமுகின் மணிஉறழ் எருத்தின்
கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு
தெண்நீர் பசுங்காகய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க, (13- 28)


வெண்ணிற முசுட்டைப்பூவும்
பொன்னிற பீர்க்கம்பூவும்
பூவாடை போர்த்தினாற்போல்
புதர்தோறும் மலர்ந்து நிற்க....

பெயலடங்கியப் பொழுதிலே
புயலெனப் புறப்பட்டன,
பைங்காற் கொக்குகளும்
செவ்வரி நாரைகளும்!

கருவண்டல் வெண்மணலென
காணும் பரப்பெல்லாம்
கனத்த ஈரம் படர்ந்திருக்க...

பறந்துவந்த பறவையெல்லாம்
பரந்த சேற்றில் அமர்ந்திருந்து...

வெள்ளம் எதிர்த்து
வேறுதிசை பார்த்து
நீந்திய மீன்களை
ஏந்தின அலகால்!

அடைமழை பொழியும்
ஆகாயமேகம்
நடைகற்கும் மழலைபோல்
சிறுதூறல் தொடங்கிற்று.

சேற்றுவயல் நிறைந்து
நாற்று யாவும் வளர்ந்து
முற்றிய கதிர் வளைந்து
மண்ணை வணங்கி நிற்க...

மணியாரமென அணிவகுத்து
கமுகின் கழுத்தை அலங்கரிக்கும்
குறுமணிக்குலைகள் யாவும்,
பணியாரமென உருண்டு திரண்டு
கொழுத்து செழித்திருக்க....

எழில் சுமந்த பொழில்களில்
இலை சுமந்த கிளைகளில்
மலர் சுமந்த நுனிகளில்
மழைத்துளி சுமந்து அழகூட்ட...

கீதம்
24-02-2011, 08:26 AM
முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித்திரிதல்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பருஏர்எறுழ் திணிதோள்
முடலை யாக்கை, முழுவலி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர, (29- 35)


ஓங்கிய மாடமாளிகைகள் நடுவினிலே
ஆறு போன்று அகன்றோடும் தெருக்களிலே
ஓங்கிய வலியதோள்களில்
தேங்கிய பூமாலை சொரியும்
மது உண்ட வண்டாட்டம் மிக
மதுவுண்டு கொண்டாட்டம் மிக
துடிப்புடைய கீழ்மக்கள் பலரும்
பொழுது அடங்கிய பின்னரும்
பொழுது உணராப் போதையோடு
தூறலைப் பொருட்டாய் மதியாது,
ஆடித்திளைத்தும், கூடிக் களித்தும்
ஆடை நனைய ஆங்கே திரிவர்.

கீதம்
24-02-2011, 08:28 AM
மழைக்காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்

வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல்,முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் குஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர (36 – 44)


வெண்சங்குவளையல்
முன்கையழகைக் காட்ட,
மீன் ஆடும் கம்மல்
மென்செவிக்கு அழகூட்ட,
முத்தொளியை இதழ் விரிக்க,
புத்தொளியை விழி தெறிக்க,

தளிரிளம் கொடியிடை மகளிர்,
இளந்தளிர் கொடியிடை புகுந்து
கொய்த பிச்சியரும்புகள் யாவும்
பெய்த மழை காரணமாய்
பொழுது அறியாப் பொழுதிலும்
பழுதிலாது இதழ் விரித்து
அந்தி இதுவென்று உணர்த்தி
முந்தி அதன் மணம் பரப்ப...

இரும்புவிளக்கில் நெய்யூற்றி
நெல்லோடு மலரும் தூற்றி
இல்லுறை இறையைப் போற்றி,
வானகம் பொழியினும்
வாணிகம் பொலிவுறும்
அங்காடித் தெருவில்
கொண்டாடி மகிழ்ந்தார்..

மதி
24-02-2011, 08:50 AM
கொஞ்ச நேரம் பதினைந்து இருவது வருஷம் முன் போய்விட்டு வந்த மாதிரி இருந்தது. இப்படி தான் செய்யுளைப் படித்து தமிழய்யா ஒவ்வொரு பொருளாக விளக்குவார். தேமே என்று கேட்டுக் கொண்டிருப்போம் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும்.

முதலில் நெடு நல்வாடையின் வரிகளைப் படித்துப் பார்த்தேன். அங்கங்கே கொஞ்சம் புரிந்தது. அடுத்ததாய் உங்கள் விளக்கக் கவிதை... அடடா.. எதுகை மோனையுடன்... ஆங்காங்கே இரட்டுற மொழிகளையும் சேர்த்து... வாடிய உள்ளம் வாடையை உணர்ந்தது. (தற்சமயம் சென்னையும் மேகமூட்டமாகத் தான் உள்ளது).

விளக்கவுரை மிகமிக அருமை.. அடுத்த அடுத்த பத்திகளையும் அதன் விளக்கங்களையும் எதிர்பார்த்து...

கீதம்
24-02-2011, 09:16 AM
கொஞ்ச நேரம் பதினைந்து இருவது வருஷம் முன் போய்விட்டு வந்த மாதிரி இருந்தது. இப்படி தான் செய்யுளைப் படித்து தமிழய்யா ஒவ்வொரு பொருளாக விளக்குவார். தேமே என்று கேட்டுக் கொண்டிருப்போம் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும்.

முதலில் நெடு நல்வாடையின் வரிகளைப் படித்துப் பார்த்தேன். அங்கங்கே கொஞ்சம் புரிந்தது. அடுத்ததாய் உங்கள் விளக்கக் கவிதை... அடடா.. எதுகை மோனையுடன்... ஆங்காங்கே இரட்டுற மொழிகளையும் சேர்த்து... வாடிய உள்ளம் வாடையை உணர்ந்தது. (தற்சமயம் சென்னையும் மேகமூட்டமாகத் தான் உள்ளது).

விளக்கவுரை மிகமிக அருமை.. அடுத்த அடுத்த பத்திகளையும் அதன் விளக்கங்களையும் எதிர்பார்த்து...

உண்மையைச் சொல்லுங்க, படிக்கப் பிடித்திருக்கிறதா? புரிகிறதா?

என்னுடைய நெடுநாள் முயற்சி இது. பலமுறை படித்து பலரின் உரைகளையும் படித்து தெளிந்து பின்னரே எழுத ஆரம்பித்தேன். முழுவதும் எழுதிவிட்டேன். விரைவில் தட்டச்சிப் பதிக்கிறேன்.

பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியதற்கு நன்றி மதி.

கீதம்
24-02-2011, 11:10 AM
கூதிர்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்.

மனைஉறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப
கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்உறழ் நறுங்கல் பலகூட்டு பறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக் (45- 52)

இரவும் பகலும் இன்னதென விளங்காது
இரையுண்ணவும் முற்றத்தில் இறங்காது
அடுத்தமர்ந்து பெட்டையோடு
கடுத்த கால் மாற்றி இணைபுறா தவிக்க....

காவல் மிகுந்த இல்லங்களில்
ஏவல் பணிந்த வேலையாட்கள்
நறுமணமிகுந்த கத்தூரியை
கருநிற அம்மியில் அரைத்தெடுக்க....

வடநாட்டினர் தந்துவிட்ட
வெண்வட்ட சந்தனக்கல்
தென்னாட்டுக் கட்டைகளோடு
தீண்டுவாரற்றுக் கிடக்கும்.


கூந்தல் மகளிர் கோதை புனையார் ;
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக், (53-56)


குளிர்மாலைத் துயர் நினைத்து
மலர்மாலை புனையப் பயந்து
சிலமலர் சூடிடுவார் மகளிர்தம்
அடர்கூந்தல் அழகு செய்ய!

நறுமண விறகில் நெருப்பினை மூட்டி
அகிலோடு சாம்பிராணியும் பலவும் கூட்டி
முகிலென்றெழுந்த புகையினில் காட்டி
முடிப்பர் கூந்தலை வாசனை ஊட்டி!

கீதம்
24-02-2011, 11:16 AM
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவம் தாழொடு துறப்பக் (57- 63)

கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர; ( 64- 66)

கைவினைக் கலைஞன் செய்த
கலைநயமிக்க விசிறி சுருங்கி
சிலந்திவலைப் பின்னலோடு
வளைந்த ஆணியில் தொங்க....

இளவேனிற் காலத்தில்
இளந்தென்றல் காற்றால்
இதம் மேவும் பள்ளியறையின்
பலகணிக்கதவுகள் இரண்டும்
உலவுவாரில்லாக் காரணத்தால்
திறவாது தாழிட்டுக் கிடந்தன!

தொடர்மழைத் தூறலால்
இடர்மிகு வாடையால்
பக்கமிருக்கும்
குறுங்கழுத்துப் பானையின்
நீரைப்பருகத் துணியாது
மக்கள் யாவரும்
அகன்றவாய்ச் சட்டியிலே
அனலுண்டாக்கி
அதன் பக்கம் அணைவர்.

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையின் திரிந்த இன்குரல் தீம்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப (67 – 70)
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப,பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் (71-72)

குளிர்ந்த நரம்புகளால்
குறையுறும் இன்னிசையென்றே
திரண்ட மார்பணைத்து
யாழினுக்கு வெம்மையூட்டி
நிறைந்த பண்ணிசைத்தார்,
நயமிகு ஆடல்மகளிர்!

கணவரைப் பிரிந்து வாடும்
காதல் மகளிர் மேலும் வாட,
கனத்த மழை மிகுந்து
பனிக்காற்றும் தொடர்ந்ததே.

ஆதி
24-02-2011, 11:27 AM
***************************************************

கோவலர் வாடையால் துன்புறுதல்

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு கலங்கி, கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும்பனி நலிய, பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க, (1-8)




அக்கா,

//வலன் ஏர்பு வளைஇ// & ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
* - இதிரண்டையும் விட்டுட்டீங்க

//புலம்பெயர் புலம்பொடு கலங்கி// - விழைந்து என்று சொல்லிருக்கீங்க...

அவங்க மேட்டு நிலத்துக்கு கலங்கித்தானே போறாங்க..


வர்ணினைகள் அழகுங்கக்கா... இந்த மாதிரி தேர்வுத்தாள்களில் விடைகள் எழுதிய காலங்கள் நினைவுக்கு வருது..

வாழ்த்துக்கள் அக்கா..

கீதம்
24-02-2011, 11:36 AM
அக்கா,

//வலன் ஏர்பு வளைஇ// & ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
* - இதிரண்டையும் விட்டுட்டீங்க

//புலம்பெயர் புலம்பொடு கலங்கி// - விழைந்து என்று சொல்லிருக்கீங்க...

அவங்க மேட்டு நிலத்துக்கு கலங்கித்தானே போறாங்க..


வர்ணினைகள் அழகுங்கக்கா... இந்த மாதிரி தேர்வுத்தாள்களில் விடைகள் எழுதிய காலங்கள் நினைவுக்கு வருது..

வாழ்த்துக்கள் அக்கா..

நீங்க சொல்றது சரிதான் ஆதன்.

நான் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பொழிப்புரை மாதிரி எழுதவில்லை. மொத்தமா அதில் என்ன சொல்லப்பட்டிருக்கோ அதை மனதில் இருத்தி எழுதுறேன். இனிமேல் நீங்க சொல்றபடி கவனம் வச்சி எழுதுறேன். நன்றி ஆதன்.

மதி
24-02-2011, 11:38 AM
உண்மையைச் சொல்லுங்க, படிக்கப் பிடித்திருக்கிறதா? புரிகிறதா?

என்னுடைய நெடுநாள் முயற்சி இது. பலமுறை படித்து பலரின் உரைகளையும் படித்து தெளிந்து பின்னரே எழுத ஆரம்பித்தேன். முழுவதும் எழுதிவிட்டேன். விரைவில் தட்டச்சிப் பதிக்கிறேன்.

பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியதற்கு நன்றி மதி.
புரிந்ததால் பதிந்தேன்..!:icon_b:

ஆதி
24-02-2011, 11:43 AM
இல்லைங்கக்கா வார்த்தைக்கு வார்த்தையில்லை, அப்படி பார்த்தா வர்ணிக்கவே முடியாது..

இந்த வரிகளை விட்டுட்டீங்க சொன்னத்துக்கு காரணம்,

மலை தழுவிடும் முகிலால் என்று சொல்லிருக்கீங்க இல்லையா, அது தழுவிலை, வளைச்சு போட்டிருச்சுனு சொல்றான்..

இடையறை பற்றி சொல்லிட்டு ஆநிரைகளை விட்டுட்டீங்க..

மேட்டு நிலத்துக்கு கலங்கித்தான் போறாங்க, ஆனால் வேறு நிலம் பெயர விழைந்து என்று போட்டிருக்கீங்க..

வார்த்தைக்கு வார்த்தை பொழிப்புரை வேண்டாம் அதுபோல் அழகுற இருக்காது..

ஆதி
24-02-2011, 11:45 AM
அக்கா, வர்ணிப்புகளோடான விளக்கங்கள் மிக மிக அருமை, புரியாமல் போக அதில் ஒன்றுமில்லை...

இலக்கியம் தெரிந்தால் இன்னும் சுவைக்கலாம் உங்க வர்ணிப்புகளை, இவை பாடல்களை மேலும் ரசிமாக்குகின்றனவே அன்றி சுவைகுன்ற செய்ய*வில்லை, தைரிமாய் தொடருங்க...

lenram80
24-02-2011, 01:03 PM
மிக நல்ல முயற்சி. முயற்சி மட்டும் செய்யவில்லை. வெற்றியும் பெற்று விட்ட உங்களுக்கு பாராட்டுகள்

கீதம்
25-02-2011, 04:22 AM
இல்லைங்கக்கா வார்த்தைக்கு வார்த்தையில்லை, அப்படி பார்த்தா வர்ணிக்கவே முடியாது..

இந்த வரிகளை விட்டுட்டீங்க சொன்னத்துக்கு காரணம்,

மலை தழுவிடும் முகிலால் என்று சொல்லிருக்கீங்க இல்லையா, அது தழுவிலை, வளைச்சு போட்டிருச்சுனு சொல்றான்..

இடையறை பற்றி சொல்லிட்டு ஆநிரைகளை விட்டுட்டீங்க..

மேட்டு நிலத்துக்கு கலங்கித்தான் போறாங்க, ஆனால் வேறு நிலம் பெயர விழைந்து என்று போட்டிருக்கீங்க..

வார்த்தைக்கு வார்த்தை பொழிப்புரை வேண்டாம் அதுபோல் அழகுற இருக்காது..

ஆதன்,

நீங்க சுட்டிய இடங்களை இப்போது திருத்திப் பதிவிட்டிருக்கிறேன். நிறைவாக இருக்கிறதா என்று படித்துப் பார்த்துச் சொல்லுங்க.

கீதம்
25-02-2011, 04:33 AM
புரிந்ததால் பதிந்தேன்..!:icon_b:

நன்றி மதி.


அக்கா, வர்ணிப்புகளோடான விளக்கங்கள் மிக மிக அருமை, புரியாமல் போக அதில் ஒன்றுமில்லை...

இலக்கியம் தெரிந்தால் இன்னும் சுவைக்கலாம் உங்க வர்ணிப்புகளை, இவை பாடல்களை மேலும் ரசிமாக்குகின்றனவே அன்றி சுவைகுன்ற செய்ய*வில்லை, தைரிமாய் தொடருங்க...

ஊக்கத்துக்கு நன்றி ஆதன்.


மிக நல்ல முயற்சி. முயற்சி மட்டும் செய்யவில்லை. வெற்றியும் பெற்று விட்ட உங்களுக்கு பாராட்டுகள்

மிகவும் நன்றி லென்ராம் அவர்களே. முழுவதையும் முடித்தபின் சொல்லுங்கள் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேனா என்று.:)

கீதம்
25-02-2011, 04:43 AM
அரசனின் அரண்மனை

மனை வகுத்த முறை

……………………………………மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து
ஒருங்குஉடன் வளைஇ, ஓங்குநிலை வரைப்பின்
பருஇரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி, இணைமாண்டு (72-81)

விரிந்த கதிர் பரப்பும் கதிரவன்
மேற்கு நோக்கி மேற்செல்கையில்
ஒருபக்கம் நிழல் சாரா வேளையில்
இருகோலினை நிலத்தில் ஊன்றி
வருநிழல் மாறாதிருக்கும்
நல் உச்சிப்பொழுதொன்றில்

நூல் படித்த அறிஞர்கள்
நூல் பிடித்து திசை குறித்து
திசை குறிக்கும் தெய்வந்தொழுது
தெய்வநிகர் மன்னனுக்கு

மனையும் வாயிலும் மண்டபமும் வகுத்து
வகுத்ததனைத்தையும் மதிலால் வளைத்து
வளைத்த மதிலின் மத்தியில்

அரக்கு வண்ணம் கொண்டு
பருத்தக் கதவுகள் இரண்டு
இரும்பாணிகள் கொண்டு நிலையாய்
இணைத்துப் பொருத்தினர் நிலையோடு!


நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்து
போதுஅவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றுஎழு கொடியொடு வேழம் சென்றுபுக
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில் (82- 88)


உத்தம நட்சத்திரமாம்
உத்திரத்தின் பெயர்கொண்ட
உத்திரப் பெருமரத்தாலான
அக்கதவுகளின் இருமருங்கிலும்
மொக்கவிழும் குவளைப்பூப்போலும்
பிடிகளை அழகுபடப் பொருத்தி

வளியோ உளியோ நுழையாவண்ணம்
துளியிடைவெளியின்றி முடுக்கினர்,
தேர்ந்த தொழிலறி தச்சர்!

உயவுக்காய் கடுகின் நெய்தடவி
உயர்ந்திருந்த நிலைகளினூடே
வெற்றிக்கொடியேந்தியபடி
வேழங்கள் நடைபோடும்படி
மலைவாயில் போலே
மதில்வாயில் அமைத்தனர்.

கீதம்
25-02-2011, 04:47 AM
முற்றம்,முன்வாயில்

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை (89-92)

திருமகள் உறைந்தாற்போல்
தீதேதும் அணுகாத,
குறுவெண்மணல் பரப்பிய
குறைவிலா முற்றத்தில்
நீள்வெண்மயிர் கொண்டு
ஆண் கவரிமான் ஒன்று
குறுநடை பயிலும் அன்னம் துரத்தி
குறும்பாய்த் தாவித்திரியும்
அரண்மனை முன்வாயில்!


அரண்மனையில் எழும் ஓசைகள்

பணைநிலை முனைஇய பல்உளைப் புரவி
புல்உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிந்துவீழ் அருவிப் பாடுவிறந்து,அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல்இயல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்இசை
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (93- 100)


கொட்டிலிலே முடங்கல் வெறுத்து
எட்டிய புல்லும் தவிர்த்து
பிடரிமயிர்நிறைப் புரவியொன்று
கதறித் துயர்மிகக் கனைக்க....

நிலாவோடு கொற்றவனும்
உலாவரும் முற்றமதில்
வாய்பிளந்த மீன்குழாய் வழியே
வான் பிளந்த மழைநீர் வழிய...

அருவியென அதிசயித்தபடி
அருகிலே செருக்கோடு திரியும்
தோகைமயிலின் அகவல் கேட்போர்
ஊதுகொம்பின்னிசையென்றே மருள...

ஆர்ப்பரிக்கும் மழையின் பேரொலியால்
ஆரவாரிக்கும் மலையின் எதிரொலிபோல்
ஆரவாரித்தது கோவில்,
அரசனெனும் கோவின் இல்!

கீதம்
25-02-2011, 04:50 AM
அந்தப்புரத்தின் அமைப்பு

யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் (101- 107)

யவனரின் புதுமைக் கலைநயத்தையும்
யாவினும் மேவிய எழில்நலத்தையும்
யாமம் முழுவதும் எடுத்துரைப்பர்
யவ்வனமிகு பாவைப்பதுமையர்!
நளினம் நிறைந்த அவர்தம்
வளமான கையேந்திய விளக்குகளில்
அளவோடு நெய்யூற்றி அடர்ந்த திரியேற்றி
நிமிர்ந்தெரியும் பொன்சுடர் யாவும்
அணைந்துபோகுமென அறியுந்தோறும்
எண்ணெயிட்டு எரிய ஊக்கியும்
எங்கெங்கும் இருள் நீக்கியும்
மங்கிய இரவு முழுவதும்
மாளிகையை ஒளிரச்செய்தனர்.

அந்தப்புறம் இருக்கும் அந்தப்புரம் தன்னில்
அரசனை அல்லாது அந்நிய ஆடவர் செல்லாது
பலத்தக் காவலிருந்தார், வலுத்தக் காவல்வீரர்!


வரை கண்டன்ன தோன்றல, வரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் கதைஉரீஇ
மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுஉறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்புஇன் நல்இல் (108- 114)


மாமலையென எழுந்தோங்கிய மாளிகையதனை,
மாமலை சூழ்ந்த வானத்துவில்லென
மாளிகை சூழ்ந்த வண்ணப் பூங்கொடிகள் அசைய...

பளபளக்கும் வெள்ளிபோல் பலவிடங்கள் பொலிந்தும்
கருகருக்கும் நீலமணிபோல் கரிய தூண்கள் எழுந்தும்
செம்பினாற் செய்தாற்போன்ற பெருஞ்சுவரில் காணும்
கொம்பற்ற கொடியோடு கோடிமலரோவியம் யாவும்
காட்டியதே நல்லதொரு இல்லம் கொண்ட
கவின்மிகு கர்ப்பக்கிரகம் இதுவேயென்று.

கீதம்
25-02-2011, 04:53 AM
தலைவி படுத்திருக்கும் வட்டக் கட்டில்

தசநான்கு எய்திய பணைமருள் நோன்காள்
இகல்மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதவல்
பொருதுஒழி நாகம் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்உளிக் குயின்ற ஈர்இலை இடைஇடுபு
தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புரை திரண்டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடிஅமைத்து
பேர்அளவு எய்திய பெரும்பெயர் பாண்டில், (115 – 123)


முரசறைந்து எழும் போர்க்களத்தில்
முரசனைய பெருங்கால்களோடும்
ஏற்றமிகு வரி ஓடும் நெற்றியோடும்
போற்றத்தக்க வெறி வேட்கையோடும்

நாற்பதாண்டு பூரணம் பெற்ற
சீற்றமிக்க வாரணம் ஒன்று
வீழ்த்தப்பட்ட காரணம் கொண்டு
வீழ்ந்துவிட்ட கூர்தந்தம் கொண்டு

நேரிய கலை பயின்ற சிற்பி
கூரிய உளிகொண்டு செதுக்கிய
ஈரிலைகளின் இடையே....

இடைபெருத்த கர்ப்பிணியின்
புடைத்தெழுந்த மார்பொத்து
கடைந்தெடுத்த மரக்குடத்தை
இடையிலேந்தியபடி…..

பூண்டின் வலிய தலைபோன்று
வலிமை பூண்ட கால்கள்கொண்டு
பரந்து விரிந்து திகழ்ந்தது
பாண்டில் என்னும் வட்டக்கட்டில்!

கீதம்
25-02-2011, 04:54 AM
கட்டிலில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை

மடைமாண் நுண்இழை பொலிய தொடைமாடன்
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பல்மயிர் விரைஇ, வயமான்
வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து
முல்லைப் பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய்அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூமடி விரிந்த சேக்கை (124- 135)

பள்ளியறைக் கட்டிலின் மேலே
துல்லியமாய்ப் பொருத்தப்பட்ட
வல்லிய மூட்டுவாய் மூலம்
மெல்லிய நூலிழை தன்னில்
தேர்ந்தெடுத்த முத்துக்களைக்
கோத்தெடுத்து மாலையாக்கி
பார்த்தோர் வியக்கும்வண்ணம்
பல்வரிசையாய் அலங்கரித்து
சாளரமெனவே சரம்சரமாய்ப்
பேரழகுடனே தொங்கவிட்டு....

புலியின் வரிகளின் வண்ணம் போன்ற
புதுமலர்களாலான பூந்தட்டைப்போன்று
ஒளிரும் தகடுகளை ஒருசேரக் கொண்டு
வெளிப்புறம் பதித்த கட்டிலின் மேலே
பல்லுயிர் உருவிய உரோமம் கொண்டு
பல்வண்ண உருவ விரிப்பு நெய்து
வேட்டையாடும் சிங்கம் போல
வீரமிகு செயல்கள் பலவும் பொறித்து….

காட்டுமுல்லைப் பூக்களோடு
தோட்டமளித்தப் பூக்களையும்
கட்டிலினின்மேலே இறைத்து,
பட்டினும் மெல்லியதாய்
மென்போர்வை மேலே விரித்து
முன்னிலும் சிறப்புறச் செய்திடவே…

பெண் அன்னப் பேடுதன்னை
பேருவகையோடு புணர்ந்ததான
வெண் அன்னச் சேவலுதிர்த்த
மென்சூட்டு இறகுகளடைத்த
மென் திண்டு மெத்தைகளிரண்டு,
பஞ்சிட்ட தலையணையோடு
பஞ்சுபோலும் பூவிதழ்கள்போலே
கஞ்சிட்டு வெளுத்த விரிப்பு,
பஞ்சணை போர்த்தி நின்று
நெஞ்சத்தை அள்ளும்வண்ணம்
மஞ்சத்தை அலங்கரிக்க.....

கீதம்
25-02-2011, 04:56 AM
படுக்கையில் இருந்த தலைவியின் நிலை

ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார்குழை களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல் (136 – 147)

தலைவனைப் பிரிந்து வாடும்
தலைவியின் நிலையைப் பாரும்!

முத்தாரமும் இன்னபிறவும்
கொத்தாகத் தழுவியிருந்து
அழகுபடுத்திய அவள் மார்பகத்தே
தாலியொன்றே தனித்துத் தொங்க.....

கலைந்துவீழும் கேசமும்
கவனிப்பின்றி காற்றிலலைய....

அலங்கார நெடுங்கம்மல்
ஆடல்புரிந்திருந்த செவித்துளையில்
அளவிற்சிறிய தாளுருவியெனும்
குறுங்கம்மல் குடியிருக்க.....

பொலிவுறு பொன்வளை போக்கி
வலம்புரி வளையும் காப்பும்
வடிவுடைக்கரத்தை நிறைத்திருக்க....

வாளைமீன் வாய்பிளந்தாற்போல
வளைந்திருக்கும் நெளிமோதிரத்தை
முன்னர் அணிந்திருந்த சிவந்த விரலில்
சின்னஞ்சிறிய மோதிரம் இருக்க......

பூம்பட்டாடையுடுத்தி பூரித்த இடையின்று
நூலாடை தரித்து நூலாய் நைந்திருக்க....

வண்ணம் தீட்டா வடிவம் போல்
ஒப்பனையில்லா ஓவியம் போல்
ஓய்ந்துகிடந்தாள் தலைவியவள்
ஒப்பனை மிகுந்த கட்டிலின் மேல்!

ஜானகி
25-02-2011, 02:48 PM
பாராட்டுவதற்கு வார்தைகளே கிடைக்கவில்லை......பிரமிப்பாக இருக்கிறது...

நீங்கள் எல்லோரும் இருக்கும் சிகரத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை....

எனக்குத் தெரிந்த வகையில் அனுபவித்து மகிழ்கிறேன்.... தொடருங்கள்.

Nivas.T
25-02-2011, 03:34 PM
நல்ல திரி
நீங்கள் படும் கடினம் நன்கு தெரிகிறது
முடிந்தவரை பயன் பெற்றுக் கொள்கிறேன்
மிக்க நன்றி கீதம் அவர்களே

கீதம்
25-02-2011, 11:43 PM
பாராட்டுவதற்கு வார்தைகளே கிடைக்கவில்லை......பிரமிப்பாக இருக்கிறது...

நீங்கள் எல்லோரும் இருக்கும் சிகரத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை....

எனக்குத் தெரிந்த வகையில் அனுபவித்து மகிழ்கிறேன்.... தொடருங்கள்.

சிகரமா? அது எங்கே? நான் எங்கே? இப்பதான் தத்தித்தவழ்ந்து ஒரு சிறு குன்றேறியிருக்கிறேன். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம். வாருங்கள் சேர்ந்தே சிகரம் ஏறுவோம்.

பாராட்டி ஊக்குவிப்பதற்கு நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
25-02-2011, 11:47 PM
நல்ல திரி
நீங்கள் படும் கடினம் நன்கு தெரிகிறது
முடிந்தவரை பயன் பெற்றுக் கொள்கிறேன்
மிக்க நன்றி கீதம் அவர்களே

நன்றி நிவாஸ். பழந்தமிழில் இலக்கியங்களில் பொதிந்துள்ள பல நல்ல சுவையான செய்திகளை வாய்ப்பின்மையால் நாம் அறிந்துகொள்ளாமலே இருந்துவிடுகிறோம். அப்படி ஏங்குபவர்களுக்காகவே எழுந்த முயற்சி இது. படித்து மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன்.

M.Jagadeesan
26-02-2011, 12:16 AM
தொடரட்டும் தங்களின் இலக்கியப் பணி.சங்கத் தமிழுக்கு கலைஞர்
எழுதிய உரையப்போல உள்ளது தங்களது உரை!

சொ.ஞானசம்பந்தன்
26-02-2011, 12:48 AM
மிகப் பிரமாதமான சாதனை. சிற்சில தவறுகள் இருந்தாலும் நம் பழங் கால இலக்கியங்களைப் படிக்கவும் சுவைக்கவும் இக் காலத் தமிழில் சொல்லவும் முயன்றதே பாராட்டுக்கு உரியது தான். தொடர்க பணி.
சொ.ஞானசம்பந்தன்

கீதம்
26-02-2011, 05:10 AM
தொடரட்டும் தங்களின் இலக்கியப் பணி.சங்கத் தமிழுக்கு கலைஞர்
எழுதிய உரையப்போல உள்ளது தங்களது உரை!

மலையோடு இந்த மண்மேட்டை ஒப்பிட்ட உங்கள் உயர்ந்த மனம் கண்டு மகிழ்கிறேன். மகிழ்வுடனே நன்றி.

கீதம்
26-02-2011, 05:12 AM
மிகப் பிரமாதமான சாதனை. சிற்சில தவறுகள் இருந்தாலும் நம் பழங் கால இலக்கியங்களைப் படிக்கவும் சுவைக்கவும் இக் காலத் தமிழில் சொல்லவும் முயன்றதே பாராட்டுக்கு உரியது தான். தொடர்க பணி.
சொ.ஞானசம்பந்தன்

உங்கள் பாராட்டைத் தலைவணங்கி ஏற்கிறேன்.மிகவும் நன்றி. தவறுகள் காணப்படும் இடங்களைச் சுட்டினால் திருத்த முயல்வேன்.

கீதம்
26-02-2011, 05:14 AM
தலைவியின் அடி வருடும் தோழியர்

தளிர்ஏர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்தோள் முகிழ்முலை
வம்பு விசித்து யாத்த, வாங்குசாய் நுசுப்பின்
மெல்இயல் மகளிர் நல்அடி வருட;( 148- 151)

அங்கமெலாம் மிளிர்ந்த அழகுத்தேமலும்
மூங்கிலெனத் திரண்ட தோள்களும்
பங்கமிலாக் கச்சையுள் அடங்கும்
பங்கய மொட்டன்ன தனங்களும்
தாங்கி வரும் மெல்லிடையும்
ஏந்திவரும் மென்னியல் மகளிர்
தலைவியின் மென்னடி வருடி
துயிலுண்டாக்க முனைய.....


தேற்றும் செவிலியர்

நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
‘இன்னே வருகுவர் இன் துணையோர் ’ என
உகத்தவை மொழியவும் ஒல்லாள்,மிகக் கலுழ்ந்து( 152- 156)

பிரிவுத் துயர் பொறுக்காத
பிரியமகளின் துயர் பொறுக்காத
நரைமயிர்ச் செவிலியர் கூடி...

திறம்பட உரைத்தும் திரித்தும்
இப்போதே வருவார் அவர் என்றும்
இனிதே அவள் மனம் மகிழப் பகன்றும்
தேற்றுதல் பல புரிந்தும்
ஆற்றாது கலங்கியவளாய்.....

கீதம்
26-02-2011, 05:18 AM
தேறாத் தலைவி


நுண்சேறு வழித்த நோன்நிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய கால்திருத்திப்
புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுஉயிரா
மாஇதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சோத்திச் சில தெறியாப்
புலம்பொடு வதியும் (157- 166)

சாதிலிங்கச் சாந்து பூசி
சின்ன மரக்குடங்களேந்தி
திண்மையான கட்டிலோடு
வன்மையாய்ப் பொருந்தியகால்கள்...

அழகுபடத் தாங்கிநின்ற
மெழுகுபூசிய மேல்விதானத்தின்
திரைச்சீலைதனிலே திருத்தமாய்
வரையப்பட்ட ஓவியம் கண்டாள்.

மேஷராசியோடு மட்டுமல்லாது
மற்றையரோடும் சுற்றித்திரியும்
சூரியனைப் போலல்லாது
திகழும் சந்திரனைப் பிரியாது
உலவும் உரோகிணி போலல்லாது
தான் இருக்கும் நிலை சகியாது
நீர் கசியும் விழியோரத்தை
நீள் விரலால் சுண்டித் தெறிக்க.....


தலைவியின் துயர் தீர தெய்வத்தை வேண்டல்

………………………. நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல்தந்து
இன்னே முடிகதில் அம்ம (166 – 168)

அன்புநிறை இப்பெண்ணுள்ளம்
கொண்ட இன்னல் களையும் வண்ணம்
மின்னலென வெற்றியைத் தந்து
மகிழ்விப்பாய் எம்மை இன்றேயென்று
பெற்றவர்க்கு நிகர் செவிலியர்,
கொற்றவையை வேண்டி நின்றார்....

கீதம்
26-02-2011, 05:26 AM
அரசனின் நிலை

………………………..மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரள
களிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும நுடங்கித்
தெற்குஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் (168- 177)


போர்க்களத்தில் பயமறியாது
தீரத்துடன் திடம் குலையாது
எதிர்த்து வந்த களிறுகளை
துதிக்கை நிலத்தில் புரளுமாறு
வீழ்த்திய மாவீரர் பெற்ற
விழுப்புண்ணைக் கண்ணுற்றறிய
பாசமிகு வேந்தனவன்
பாசறைவிட்டு வெளிவந்து....

வாடைக்காற்று வீசுந்தோறும்
ஆடித்தெற்கே மிகுந்து நலியும்
பருத்த சுடர் ஒளிரும்
பலகால் விளக்கின் ஒளியில்....

வேப்பந்தழையினைத் தலையிற்தாங்கிய
வேலின் வலியகாம்பினைக் கையிற்தாங்கிய
வீரனொருவன் முன்னே செல்ல
வேந்தனவன் பின்னே செல்ல.....

கீதம்
26-02-2011, 05:27 AM
மணிபுறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப,
புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கண் காளை
கவல்மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. (178 -188)

சேற்றுத் தெருவில் நிற்கும்
சேணமும் கடிவாளமும்
இன்னமும் களையப்படாத
மின்னலெனப் பாயும் செருக்குமிகு
போர்க்குதிரைகள் தம்மேல்
சிதறிய மழைத்துளிகளை
உதறித் தெறிக்க.....

இடத்தோள் நழுவிய ஆடையை
இடத்திலே பொருத்தி,
வாளேந்திய வல்வீரனின்
தோளேந்தி நின்றபடி
நலிந்த வீரர்களின் புண்களை
மலர்ந்த புன்னகையால் ஆற்றி……

வான் உதிர்த்த முத்துக்களை
வெண்முத்துச் சரங்கொண்ட
வெண்கொற்றக்குடை தடுக்க....

நள்ளிரவிலும் உறக்கமின்றி,
பள்ளியதன் நினைவுமின்றி,
உற்ற வீரர் நலனன்றி
மற்ற சிந்தனை ஏதுமின்றி
சிலவீரரைத் துணைகொண்டு
உலவுதற்குக் காரணமான....

வேந்தர் பலரோடும்
வேறுபட்ட திறத்தாலே…
மூண்ட பகையாலே…
நீண்ட போர்த்தொழிலாலே…
நீடிக்கும் பாசறைத்தொழிலை
நிறைவாய் முடித்திட
விரைவாய் வெற்றிவேண்டி!


(நெடுநல்வாடை முற்றிற்று)

உமாமீனா
26-02-2011, 05:51 AM
நீண்ட கால இடவைளிக்கு பின் இலக்கியம் கண் முன்னே - பதிவருக்கு என் வாழ்த்துக்கள் - திரியை முதலில் இருந்து வாசிக்கணும் அதுவரையில் :food-smiley-009:

இளசு
24-04-2011, 09:12 AM
இப்படி எத்தனை அரிய செல்வங்கள் நம் மன்றத்தில் புதைந்திருக்கன்றனவோ..

பல மாதங்கள் மன்றம் வாராமல் இருந்ததனால் பார்வையும் இழந்திருந்தேன்..
இனி விட்டதைக் காணும் ஆவலில் இப்படி தேடித்தேடி வாசிக்கும் ஆவலில் நான்..


-------------------------------------------

அரிய முயற்சி.. அழகிய வெற்றி. பாராட்டுகிறேன்; வியக்கிறேன் கீதம்.

அழகான சந்தம் உங்கள் சொந்தம். அதனால் வாசிக்கும் சுகம் இதம்.


இலக்கியங்கள் காலப்பதிவுகள் என்பதன் சாரம் இப்பாடல்களில்.

குளிர்காய்வது, ஈரத்தல் இடம் பெயர்வது எனக் காட்சிகள் கண்முன் அப்படியே...

தாயன்பால் என் உங்கள் சொற்சிலம்பம் அருமை.

இன்னும் வாசிப்பேன்.

Nivas.T
25-04-2011, 08:08 AM
செவ்வனே செய்து முடிக்கப்பட்ட பணி

நீங்காமல் நிலைத்திருக்க வேண்டிய
தொகுப்பு இது

நித்தம் ஒருமுறையேனும் கண்டிட,
பயின்றிட, பயின்று களித்திட வேண்டும் அவையோர்

மிக்க நன்றியுரைத்தேன் கீதம் அவர்களுக்கு

கீதம்
26-04-2011, 01:05 AM
நீண்ட கால இடவைளிக்கு பின் இலக்கியம் கண் முன்னே - பதிவருக்கு என் வாழ்த்துக்கள் - திரியை முதலில் இருந்து வாசிக்கணும் அதுவரையில் :food-smiley-009:

நன்றி உமாமீனா அவர்களே.


இப்படி எத்தனை அரிய செல்வங்கள் நம் மன்றத்தில் புதைந்திருக்கன்றனவோ..

பல மாதங்கள் மன்றம் வாராமல் இருந்ததனால் பார்வையும் இழந்திருந்தேன்..
இனி விட்டதைக் காணும் ஆவலில் இப்படி தேடித்தேடி வாசிக்கும் ஆவலில் நான்..


-------------------------------------------

அரிய முயற்சி.. அழகிய வெற்றி. பாராட்டுகிறேன்; வியக்கிறேன் கீதம்.

அழகான சந்தம் உங்கள் சொந்தம். அதனால் வாசிக்கும் சுகம் இதம்.


இலக்கியங்கள் காலப்பதிவுகள் என்பதன் சாரம் இப்பாடல்களில்.

குளிர்காய்வது, ஈரத்தல் இடம் பெயர்வது எனக் காட்சிகள் கண்முன் அப்படியே...

தாயன்பால் என் உங்கள் சொற்சிலம்பம் அருமை.

இன்னும் வாசிப்பேன்.

எழுதத் தூண்டுதலாய் இருந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இளசு அவர்களே. விமர்சித்து ஊக்கமளிப்பதற்கும் நன்றி.


செவ்வனே செய்து முடிக்கப்பட்ட பணி

நீங்காமல் நிலைத்திருக்க வேண்டிய
தொகுப்பு இது

நித்தம் ஒருமுறையேனும் கண்டிட,
பயின்றிட, பயின்று களித்திட வேண்டும் அவையோர்

மிக்க நன்றியுரைத்தேன் கீதம் அவர்களுக்கு

ஊக்கப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி நிவாஸ்.

குணமதி
28-04-2011, 12:28 PM
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

நெடுநல்வாடைபற்றி ஆசிரிய மண்டிலங்களில் எழுதப்பட்டதை அண்மையில் பார்த்தேன். இந்த முகவரியில்:

http://www.geotamil.com/pathivukal/poems_feb2011.htm#thamizanambi

நன்றி.

கீதம்
30-04-2011, 02:04 AM
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

நெடுநல்வாடைபற்றி ஆசிரிய மண்டிலங்களில் எழுதப்பட்டதை அண்மையில் பார்த்தேன். இந்த முகவரியில்:

http://www.geotamil.com/pathivukal/poems_feb2011.htm#thamizanambi

நன்றி.

நன்றி குணமதி அவர்களே.

நீங்கள் சுட்டியுள்ள பாக்களை இயற்றியவர் நம் மன்றத்து உறுப்பினர் தமிழநம்பி அவர்கள்தாம். அவற்றையெல்லாம் பார்த்தபின் எழுந்ததே புதுக்கவிதை வடிவில் எழுத விழைந்த என் ஆர்வம். அதற்கு முன்னோடியாய் இளசு அவர்கள் எழுதிய புறநானூற்றுக் கவிதைகள் உதவின.

jayaprakash
03-08-2012, 05:40 AM
பொய்யா வானமது!
பெய்தது வானமுது!

என்ன ஒரு அமர்க்களமான ஆரம்பம்?

தாயன்பால் சுரக்கவேண்டிய
தாயின்பால் சுரக்கவில்லை
தாயின்பால்!

சுவையான வரிகள்.

நெடுநல்வாடை கேள்விப்பட்டதோட சரி. படிச்சதெல்லாம் இல்லை. அக்காலத் தமிழும் இக்காலத் தமிழும் போட்டி போட்டுக் கொண்டு கலக்குது!

கீதம்
03-08-2012, 06:07 AM
படித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஜெயப்ரகாஷ். நம் தமிழிலக்கியங்கள் ஒரு தங்கச் சுரங்கம். வெட்டி எடுத்து உருக்கிப் பண்படுத்தினால்தான் அணிந்துகொள்ளும் ஆபரணமாகிறது. அத்தகு ஆபரணம் ஒன்றை தமிழன்னைக்கு அணிவிக்க விரும்பிய முயற்சியே இது. ரசித்தமைக்கு மிகவும் நன்றி.

jayanth
03-08-2012, 06:20 AM
நெடுநல்வாடை...சுகந்தம்...!!!

jayaprakash
03-08-2012, 06:42 AM
சும்மா வாசிப்போமே என்று வாசிக்க ஆரம்பிச்சேன். அருவியில் குளிக்கும் ஆனந்தம் இந்தத் தமிழருவியிலும் கிடைச்சது. நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். இதோட விட்றாதீங்க. இன்னும் பல இலக்கியங்களைத் தமிழில் வழிபெயருங்க. தமிழ்ச்சாதி உங்களை வாழ்த்தும்.

கீதம்
08-08-2012, 11:54 PM
நெடுநல்வாடை...சுகந்தம்...!!!

ஒற்றைவரி சிலாகிப்பிலும் உணரமுடிகிறது சுகந்தத்தின் சுகம். மிகவும் நன்றி ஜெயந்த்.

கீதம்
08-08-2012, 11:56 PM
சும்மா வாசிப்போமே என்று வாசிக்க ஆரம்பிச்சேன். அருவியில் குளிக்கும் ஆனந்தம் இந்தத் தமிழருவியிலும் கிடைச்சது. நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். இதோட விட்றாதீங்க. இன்னும் பல இலக்கியங்களைத் தமிழில் வழிபெயருங்க. தமிழ்ச்சாதி உங்களை வாழ்த்தும்.

ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி ஜெயப்ரகாஷ். தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாய்க் கற்றவர்கள் பதிந்தால் இன்னும் சுவையாகவும் தெளிவாகவும் இருக்கும். கலைவேந்தன் அவர்களின் முயற்சி பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். உங்களோடு நானும் தமிழின் இனிமை சுவைக்கக் காத்திருக்கிறேன்.

jayaprakash
09-08-2012, 11:12 AM
எங்க வாத்தியார் சொல்வாரு. இலக்கணப் பாடல்களைச் சுவைப்பது நன்றாகப் பராமரிக்கப்பட்ட பழத்தோட்டத்திற்குள் போவது போல. ஆனால் புதுக்கவிதையோ வனத்திற்குள் இருக்கும் பழங்களைப் போல. தோட்டப்பழம் சுவையாக இருந்தாலும் வனத்தில் இயற்கையாக எந்த எல்லையும் வைத்துக் கொள்ளாமல் வரும் பழத்தின் சுவை அரிது தான்.