PDA

View Full Version : புஷ்பாக்காவின் புருஷன்

கீதம்
22-02-2011, 11:26 AM
இன்றைக்கு இழுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதுபோல் தோன்றியது. அம்மா கண்களை மூடிக்கிடந்தாள். மார்புக்கூடு சீரில்லாமல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது. சற்று நேரம் அசைவற்றுக் கிடக்க, சந்தேகத்துடன் நெருங்கியபோது பெருங்கேவலுடன் எலும்புக்கூட்டுத் தேகம் திடுக்கென்று தூக்கிப்போட, அதிர்ந்து விலகினாள்.

போனமுறை வந்திருந்தபோதும் படுக்கையில்தான் இருந்தாள் என்றாலும் இத்தனை மோசமில்லை.சுயநினைவு இருந்தது. புஷ்பாக்கா கொடுத்த கஞ்சியைப் புகட்டியபோது மெல்ல மெல்ல சிரமத்துடனே ஏற்றுக்கொண்டாள். கைகளைப் பிடித்துக்கொண்டு போகாதே என்று கெஞ்சினாள். மருமகனையும், பேரனையும் சாவதற்குள் ஒருமுறை பார்க்கவேண்டும் என்று குரல்கம்மக் கேட்டுக்கொண்டாள்.

புஷ்பாக்கா கூடகேட்டாள், "ஏன் கமலி, இதுதான் வீம்பு புடிக்கிதுன்னா நீயும் அப்புடியே வுட்டுடுறதா? மல்லுக்கட்டிக் கூட்டிட்டுப் போவேண்டியதுதானே? உன் வூட்டுக்கார் எதுனா சொல்லுவாரா?"

"ஐயோ.... நீங்க வேறக்கா.... அவர்தான் அத்தையை கூட்டிகிட்டு வா... அவுங்க தனியா கஷ்டப்படவேணாம், என்னையும் ஒரு புள்ளயா நெனச்சிக்க சொல்லுன்னு சொல்றார். எங்க மாமியார் கூட நான் கிளம்பும்போதெல்லாம் உங்கம்மாவை இந்த நடையாவது கூட்டிட்டு வான்னுதான் சொல்லி அனுப்புறாங்க.. அம்மா வந்தா தானே? அதுக்கு பொண்ணு வீட்டுல வந்து தங்க கெளரவம் தடுக்குது. நான் என்ன பண்ணட்டும்?"

"அது சொல்லும், கெழவிக்கு வயசாயிடுச்சில்ல.... புத்தி கெட்டுப்போச்சு.... "

"அம்மா.... எங்க வீட்டுக்கு வரியா....? பொண்ணு வீட்டுக்கு வரதுன்னா கெளரவம் கொறஞ்சுபோயிடும்னு சொல்லுவியே... நீயாவது வரதாவது? மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு வசனம் பேசுவியே.... வரியா என்ன?"

அம்மா கண்களை இடுங்கிக்கொண்டு மெலிதாய்ப் புன்னகைத்தாள். கமலிக்குப் படபடவென்று வந்தது. எங்கே அம்மா சம்மதம் சொல்லிவிடுவாளோவென்று பயம் அடிவயிற்றைக் கிண்ட, அவசரமாய்க் கிளம்பியபோதுதான் கையைப் பிடித்துக்கொண்டு இன்னும் ஒரு நாள் என்னோடு இரேன் என்று கெஞ்சினாள். அந்தவேலை இருக்கிறது, இந்தவேலை இருக்கிறது என்று என்னென்னவோ சாக்குபோக்கு சொல்லி, விட்டால் போதுமென்று அம்மாவின் கையை உருவிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

இந்த தடவையும் வழக்கம்போலவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுதான் அனுப்பப்பட்டாள் கமலி.

"இங்க பாரு…… போனோமா, வந்தோமான்னு இருக்கணும், ஆத்தாக்காரியக் கையோட கூட்டிகிட்டு வர நெனப்போட போனா அங்கயே இருந்துக்கோ, இங்கே திரும்பி வரவேணாம், புள்ளய நாங்க வளத்துக்குறோம்"

"அவங்களை இங்க கூட்டிவரல.... அவங்க ரொம்ப முடியாம இருக்காங்க, இன்னும் எத்தன நாளோ? அதுவரைக்கும் நான் அவங்களோட இருந்து பாத்துக்கறேனே..."

"ஓ... தாராளமா இருந்து பாத்துக்க.... போறதுக்கு முன்னாடி ஒரு விடுதலைப் பத்திரம் எழுதிக்குடுத்துட்டுப் போயிடு..."

"அத்தே........ ஒரு வாரமாவது கூட இருந்து பாத்துக்கிறேனே... யாரோ ஒருத்தி... பாவம் பாத்து எங்கம்மாவுக்கு கஞ்சித்தண்ணி ஊத்திகிட்டு இருக்கா... பெத்த பொண்ணு நான் வச்சிருந்து பாக்கக் குடுத்துவக்கல......"

அத்தை எதுவும் சொல்லுமுன் அவள் பெத்த பிள்ளை பாய்ந்தான்,

"ஏண்டி, எங்க மூஞ்சில இளிச்சவாயின்னு எங்கயாச்சும் எழுதி ஒட்டியிருக்கா? சாவுற காலத்துல கெழவி செலவு வச்சிடப்போறான்னு உன் அண்ணனும் அண்ணியும் ரொம்ப சாமர்த்தியமா வீட்ட வுட்டு தொரத்தியடிச்சிட்டங்க... கருமாதி பண்ண நான்தான் கெடச்சனா? நீயும் அப்பப்ப போவலன்னா அந்தப் பொம்பள...யாரு...ஆங்... அதான் புஷ்பா….. கெழவியக் கொண்டுவந்து இங்க தள்ளிவிட்டுவாளேன்னுதான் மாசத்துக்கு ஒருதடவ போய் தலையக் காட்டிட்டு வரதுக்கு சம்மதிச்சிருக்கேன். போன கையோட திரும்பணும் ஆமா.... "

சே! என்ன மனிதர்கள். இவர்களைச் சொல்லி என்ன குற்றம்? அங்கே ஒருவன் பெண்டாட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு அம்மாவைத் தெருவுக்குத் துரத்திவிட்டான்! இங்கே ஒருவன் அம்மாவின் போதனை கேட்டு பெண்டாட்டியைத் துரத்த முனைகிறான். இரண்டு விளிம்புநிலை ஆண்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு சொல்லமுடியாத அவஸ்தையில் இவள்.

தன் வேதனை சொல்லி அழவும் முடியாத துக்கம் தொண்டையை அடைத்தது. புருஷனும் மாமியாரும் மகா உத்தமர்கள் என்று அம்மாவின் மனம் குளிர என்றோ புளுகிய பொய்யை அடித்தளமாய்க் கொண்டு மளமளவென்று பலமாடிக்கட்டடம் எழுப்பியாகிவிட்டது. இனி அடித்தளத்தை அசைத்தால் ஆபத்துதான். அத்தனைக் கல்லும் இவள் தலையில்தான் விழும்.

"ஏன், கமலி, இதை இப்படியேவா வுட்டுப்போவப்போற? இன்னிக்கோ நாளைக்கோன்னு கெடக்கு, எதுன்னாச்சும் ஆச்சின்னா என்னா பண்ணுறது? நீ இன்னொருக்கா வரமுடியுமா? இருந்து காரியத்த முடிச்சிட்டுப் போயிடு."

சொரேரென்ற போதிலும் புஷ்பாக்கா சொல்வதிலும் நியாயம் தெரிந்தது. எத்தனை நாள்தான் அம்மாவுக்கு அவள் கஞ்சி ஊற்றிக்கொண்டிருப்பாள்? குடிகாரப் புருஷனாக இருந்தாலும் அவளுக்கும் குடும்பம், பிள்ளைகுட்டி இருக்கிறதே!

புஷ்பாக்கா வீட்டுத் திண்ணையில் தட்டி மறைப்புதான் அம்மாவின் ஜாகை. மனதிலும் உடலிலும் காயம்பட்ட அதிச்சியால் மனம் பேதலித்துத் தெருவில் கிடந்தவளை புஷ்பாக்காதான் அழைத்துவந்து அரவணைத்திருக்கிறாள்.. அக்காவால்தான் அம்மா மறுபிறவி எடுத்திருக்கிறாள். அம்மா சொல்லி புஷ்பாக்கா ஒருநாள் இவள் வீடுதேடிவந்து விவரம் சொல்லிப்போனாள். கமலி வந்து பார்த்து தன் கையிலிருந்த இருநூறு ரூபாயைக்கொடுக்க, புஷ்பாக்கா வாங்கவே இல்லை.

"தே... இது குடிக்கிற ஒரு வா கஞ்சிக்கு என்ன காசு கணக்குப் பாக்குற? அப்பப்போ வந்து போயிட்டிரு.... அதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்."

இப்படிதான் சாதாரணமாக அன்று புஷ்பாக்கா சொன்னாள். எத்தனை மனிதாபிமானம்? ஓட்டைக்குடிசையில் ஒருவேளை உணவில் உயிர்வாழும் இவளுக்கு இருக்கும் இரக்கம் அண்ணனுக்கோ.... அண்ணிக்கோ.... தன் புருஷனுக்கோ.... மாமியாருக்கோ.... ஏன் இல்லாமல் போனது?

சட்டென்று ஏதோ நினைத்தவளாக புஷ்பாக்கா கேட்டாள்,

“ஏன் கமலி, கொள்ளி வைக்க உங்கண்ணனக் கூப்புடணுமில்ல?"

"அக்கா, சும்மா இருக்கா"

"ப்ச், சும்மா எப்புடி இருக்கறது? எல்லாத்தையும் முன்னாடியே யோசிச்சிக்கோ, அப்புறம் கடைசி நேரத்தில நீ பாட்டுக்கு கால்மாட்டில உக்காந்துகிட்டு ஒப்பாரி வச்சிகிட்டு கெடந்தா மத்த வேலையெல்லாம் யாரு பாப்பா? உங்கண்ணன் வீட்டு வெலாசம் கூட எனக்குத் தெரியாது"

உண்மை, அத்தனையும் உண்மை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே மனம் இடம் கொடுக்க மறுத்தது. குற்றுயிராய் ஒருத்தியை பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டு அவள் காதுபட இதென்ன பேச்சு?

கமலி கண்கள் கலங்க, "அக்கா, சும்மா இருக்கா..." என்றாள்.

"என்ன நீ? எல்லாத்துக்கும் சும்மா இரு சும்மா இருன்னு? சும்மா இருந்தா வேலையாவுமா? உன் அண்ணிக்காரி உன் ஆத்தாளை வெளக்குமாத்தால அடிச்சி வெளியில தொரத்துனப்போ உன் அண்ணங்காரன் சும்மா இருந்ததாலதான் இன்னைக்கு இந்தக் கெழவி அனாதையாக் கெடந்து தவிச்சிட்டிருக்கு. நீ…. ஆடிக்கொருக்கா, அமாவாசைக்கொருக்கா வந்து பாத்துட்டுப் போற... கேட்டா நேரம் ஒழிய மாட்டேங்குதுன்னு சொல்ற... என்னமோ போ... இவ்வளவு ஆனபின்னாடியும் இந்தக்கெழவி உசிரோட இருக்குன்னா அது உனக்கோசரம்தான். ஏதோ போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியமும் பண்ணியிருக்கும்போல... அதான் அந்தப் படுபாவியப் பெத்த வயித்துல உன்னையும் பெத்திருக்கு...."

பேசியபடியே அம்மாவின் முகத்தமர்ந்த ஈயைக் கையால் ஓட்டினாள்.

"தே.... அங்க என்னா அடுப்படியில கொடஞ்சிகிட்டு இருக்க? ஒரு பைசா இல்ல எங்கிட்ட.... போய் ஜோலியப்பாரு...."

அக்கா திண்ணையிலிருந்தபடியே வீட்டுக்குள் பார்த்துக் கத்தினாள்.

"என்னாச்சுக்கா?"

"ஒண்ணுமில்ல, என் வூட்டுக்காருதான், எங்கயாச்சும் என்னமாவுது கெடைக்கிதான்னு ஆராச்சி பண்ணிகிட்டிருக்கு"

அக்கா சிரிக்க, கமலி அதிசயமாய்ப் பார்த்தாள்.புஷ்பாக்காவின் முகத்தில் எப்போதும் ஒரு மலர்ச்சி இருக்கும். பார்ப்பவர்களையும் அது பக்கென பற்றிக்கொள்ளும். அம்மாவுக்கு இவளைப் பார்த்தால் எப்படியோ.... அப்படிதான் இவளுக்கு புஷ்பாக்காவைப் பார்த்தாலும். ஆனால் அவள் புருஷனைத் துளியும் பிடிக்காது. சம்பாதிப்பதில் பாதியைக் குடித்தே அழித்துவிடுவான். அவன் பார்வையில் எப்போதும் போதை வழியும். ஆனால் புஷ்பாக்கா ஒருநாளும் அவனைக் குறைத்து மதிப்பிட்டதில்லை.

கமலிக்கு வியப்பாயிருந்தது. எல்லாப் பெண்களுமே இப்படிதானோ? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நினைத்துக்கொண்டு....? இல்லையே..... அண்ணி அப்படி இல்லையே..... அவளைப் பெண்ணினத்திலும் சேர்க்கமுடியுமாவென்று சந்தேகம் எழும்வகையில் நடந்துகொண்டாளே.....

புஷ்பாக்கா திடீரென்று பதட்டமானாள்.

“ஏத்தா.... கமலி..... இப்புடி இழுக்குதே.... இன்னிக்கு ராத்திரிக்குள்ள போயிடும்னு நெனக்கிறேன்த்தா..........”

கமலி தாயை நெருங்கியமர்ந்து சுருக்கங்கள் நிறைந்த மெலிந்த கரத்தை எடுத்து கன்னத்தில் ஒற்றிக்கொண்டாள். கண்ணீர் வழிந்து வறண்ட கரங்களை நனைத்தது. ஒற்றைவிரல் மட்டும் துடித்தது. அந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் துடித்ததோ? தெரியவில்லை.

“அம்மா... உன் பேரனப் பாக்கணும்னு சொன்னியே.... போட்டோ கொண்டுவந்திருக்கேன்..... கண்ண முழிச்சிப் பாரும்மா....."

அம்மா கண்ணைத் திறக்கவேயில்லை. தன் இறுதிப் பயணத்துக்கு தயாராகிவிட்டவளைப் போல் உலகபந்தங்களிலிருந்து விடுபட்டுக்கிடந்தாள். அம்மா இறந்துவிட்டால்.... ?

கமலி அதை நினைத்தே பார்க்கவில்லை. கையில் சுத்தமாய்ப் பணமில்லை. கழுத்தில் தாலிச்செயினைத்தவிர வேறு நகையும் இல்லை. கடவுளே.... என் மனமும் மற்றவர்களைப் போல் கல்லாயிருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கலாமே..... இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? சுயநலத்துக்காக பெற்றவளையே மூன்றாமவரின் பாதுகாப்பில் இலவசமாய் விட்டுவைத்திருக்கிறேனே.... உண்மையான பாசமிருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்.

கணவனுடன் சண்டை போட்டாவது தாயைத் தன்னுடன் அழைத்துச் சென்று வைத்திருக்கவேண்டும். செய்யவில்லையே.... கடமைக்கு வந்து பார்த்துப் போவதுபோல் அல்லவா வருகிறேன்?

புஷ்பாக்காவுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை, முன்பெல்லாம் அம்மாவைத் தன்னோடு அழைத்துபோகச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தாள். இப்போதோ அம்மாவின் இறுதியாத்திரை பற்றிப் பேசி கலங்கடிக்கிறாள். மனம் புழுங்கியபடியே கமலி திண்ணையைவிட்டு வெளியில் வந்தாள்.

"கமலீ..... யாத்…..தே.... கமலீ.... அம்மா போயிட்டுதுடீ.... யம்மா.... ஐயோ.... என்னயப் பெத்தவளே....."

புஷ்பாக்கா ஓலமிட்டாள். தெருசனம் கூடத்தொடங்கியது. யார் யாரோ என்னென்னவோ சொல்லி ஒப்பாரி வைத்தழுதார்கள். கமலி உறைந்துபோய் நின்றிருந்தாள். கல்லாய்ச் சமைந்திருந்தவளின் தோளைத் தொட்டு யாரோ அழும்மா அழும்மா என்று அழுத்தினார்கள்.

அம்மாவை இழந்த துக்கத்திலும் அவள் காரியத்தை எப்படி நடத்துவது என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது. இரண்டு பிள்ளைகளைப் பெத்து ஒற்றையாளாய் அவர்களை வளர்த்து ஆளாக்கியவளுக்கு நேர்ந்த இறுதிகதியைப் பார்த்து மனம் ஊமையாய் அழுதது. அநாதைப்பிணமாக அம்மா அவமானப்படுவதைப் பார்க்க மனம் துணியவில்லை. இப்படியே அம்மாவை விட்டுவிட்டு எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று தோன்றிய நொடியில்….புஷ்பாக்கா காதோரம் வந்து சொன்னாள்.

"கமலீ.... எதை நெனச்சும் கவலப்படாத.... எனக்கு உன் நெலம நல்லாத்தெரியும்.... என் வூட்டுக்காரு பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு....... நீ தெகிரியமா இரு.... உன் அண்ணன் வெலாசமும், உன் வூட்டு வெலாசமும் சொல்லு, அவரு தகவல் அனுப்பிடுவாரு....."

கமலி துக்கத்தில் துவண்டுபோனாள். கண்ணீர் பெருக புஷ்பாக்காவை ஏறிட்டாள். அக்கா அழுதழுது முகம் வீங்கியிருந்தாள்.

அம்மா எத்தனைப் புண்ணியவதி! சாகும் முன் சொந்தமில்லா சொந்தங்களைச் சம்பாதித்திருக்கிறாளே.....

புஷ்பாக்காவின் புருஷனைப் பார்த்தாள். சற்றுமுன் குடிக்கக் காசுகிடைக்குமாவென அல்லாடியவன், இறுகிய முகத்துடன் ஒரு மகனின் கடமையுணர்வுடன் வாசலில் பந்தல் அமைத்துக்கொண்டிருந்தான். குடிகாரனாயிருந்தாலும் மனிதனாக இருக்கிறான். ஆம், மனிதன்! மகனின் கையால் கொள்ளி வாங்குவதைவிடவும் ஒரு மனிதனின் கையால் கொள்ளி வாங்கவே அம்மாவும் விரும்புவாள். அம்மா…. இந்த முடிவில் உனக்குச் சம்மதம்தானே.....? அம்மா….. அம்மா?

அப்போதுதான் நினைவுவந்தவளாய்……..

"அம்மா…ஆ...ஆ....ஆ......."

அலறியபடியே ஓடிப்போய் அம்மாவின் காலைக்கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள்.

ஜானகி
22-02-2011, 01:26 PM
வடக்கில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்...'ஒவ்வொரு அரிசியிலும் அதை சாப்பிடுபவன் பெயர் எழுதியிருக்கும்'...என்று.

இந்தக் கதைப் படி பார்த்தால்.... கடைசிக் கொள்ளியிலும் பெயர் எழுதியிருக்கும் போலிருக்கிறது !

அருகில் இருந்து பார்த்தது போல எப்படி எழுதமுடிகிறது..? சபாஷ் !

ராஜாராம்
22-02-2011, 01:26 PM
புஷ்பாக்காவின் கணவன் ,மனித நேயத்துடன் ஆற்றிய இறுதிக் கடமை.,
நெஞ்சைத் தொட்டுவிட்டது.
அருமையான படைப்பு...
வாழ்த்துக்கள்

M.Jagadeesan
22-02-2011, 01:49 PM
இதுபோன்ற படைப்புகள் இவரால் மட்டுமே முடியும்.

பாரதி
22-02-2011, 01:56 PM
மனதை உருக்கும் கதை.
நல்ல நடை.
மனிதர்களின் மனங்களில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டிக்கொண்டிருக்கிறதுதான் போலும்.
இன்னும் எழுதுங்கள்.

dellas
22-02-2011, 02:38 PM
மீண்டும் ஒரு தெருவில், ஒரு தாய் அனாதையாக்கப்பட்டு. மதுவிற்கும் மனதிற்கும் சம்பந்தம் இல்லை. பெண்ணின் பக்கமிருந்து பார்க்கும் உங்கள் பார்வையும் சரியே. பாராட்டுக்கள்.

Nivas.T
22-02-2011, 03:55 PM
இப்படி சில மனிதர்களும்,
இல்லை இல்லை இப்படி சிலர் மட்டுமே மனிதர்களாக இருக்கிறார்கள்

மீண்டு ஒரு முறை, மனதின் மத்தியில்
ஒரு கணம், படிக்கும் கண்களின் ஓரம் ஒரு துளி.

நல்ல கதையோட்டம்
வழக்கமான உங்கள் முத்திரை
மிக்க நன்றி

அன்புரசிகன்
22-02-2011, 11:16 PM
திடீர் பணம் வந்தால் சொந்தங்கள் மறக்கும். இது யதார்த்தமே. அழகாக கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

மதி
23-02-2011, 05:11 AM
மனிதத்தை இதை விட அழகாய் எடுத்து சொல்ல முடியாது. புஷ்பாக்காவும் அவள் புருஷனும் மனதில் நிழலாடுகிறார்கள்.

கதை முழுக்க கமலியின் மன ஓட்டங்களும் அவளின் ஆண் சொந்தங்களின் மீதான விமர்சனங்களும் என போனது இறுதியில் எல்லா ஆண்களையும் நீங்கள் சாடவில்லை என உணர்த்துவதற்காக புஷ்பாக்காவின் கணவரை பயன்படுத்தி இருப்பது நன்று. பெற்ற தாயை பிள்ளை துரத்தியதாக பல செய்திகளிலும் படிக்கும் போது உறுத்தும்.. அதையே இங்கே கையாண்ட விதமும் அருமை.

இத்தனை இருந்தும் சின்ன குறை.. கதையின் தலைப்பு. கதையின் பேசிக் கொள்ளும் கதாபாத்திரங்களாக இரு பெண்கள் மட்டுமே. புஷ்பாவின் கணவருக்கு என பெரிய முக்கியத்துவம் எங்கேயும் காணப்படவில்லை இறுதி தவிர. அதனால் அவரால் ஏதோ நடக்கப்போகிறது என முன்கூட்டியே....
ஏதோ எனக்குத் தோன்றியது.

மனம் தொட்ட கதைக்கு நன்றி..!!

ரங்கராஜன்
23-02-2011, 06:25 AM
கீதம் அக்கா..... உண்மையிலே மிக அருமையான கதை.. சில நொடிகள் கண்ணீல் நீர் கசிந்தது....... உங்கள் எழுத்துநடை மிக மிக அபாரம்... இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது...

1. திரைகதை, காட்சி விளக்குதல் இவை எதுவுமே இல்லாமல் வசனத்தின் மூலமாகவே பெரும் பாதியை கொண்டு சென்ற விதம்.

2. பெண்களின் வாழ்க்கையின் நிதர்சனத்தை காட்டிய விதம்.

3. புஷ்பாக்காவின் கதாபாத்திரம்.

4. ஒரு வார்த்தைக்கூட வீணடிக்கப்படாத வசனம். (நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாக தானே நினைத்தேன், உங்களின் அருமையான வசன உச்சரிப்புகளை பார்க்கும் போது, ஏதோ ராயபுரம் மீன் மார்க்கெட் பக்கத்தில் வசிப்பது போல இருக்கிறது) சூப்பர்.

5. கதையை முடித்த விதம்...

6. ஆரம்பம் முதல் போர் அடிக்காத நடை, ஆரம்பித்தால் முடிக்காமல் இருக்க முடியாது...

7. மிகச்சிறந்த கதையாசிரியர் அக்கா நீங்கள்......(தோல்வியை மறைத்து ஒத்துக் கொள்கிறேன்)

ஓரே ஒரு உறுத்தல் கதையின் தலைப்பு,... இந்த கதைக்கு, புஷ்பாக்கா அல்லது, பெண்ணினம் போன்ற பெண்களின் புகழையோ, வாழ்க்கையையோ, உணர்த்துவதாக இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், புருஷன் இந்த கதையில் அவுட்ஆஃப் போகஸில் இருக்கிறாய்,... அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை...

இந்த திரிக்கு ஐந்து நட்சத்திரத்தை தந்து கௌரவிக்கிறேன்...

sarcharan
23-02-2011, 07:21 AM
கீதம், கதையை படித்தவுடன் என் நெஞ்சு கனத்தது.

அதனால் கதையைப்பற்றின கருத்தை பதிக்கவில்லை..

மனிதரில் தான் எத்தனை நிறங்கள்...

கீதம்
23-02-2011, 08:18 AM
வடக்கில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்...'ஒவ்வொரு அரிசியிலும் அதை சாப்பிடுபவன் பெயர் எழுதியிருக்கும்'...என்று.

இந்தக் கதைப் படி பார்த்தால்.... கடைசிக் கொள்ளியிலும் பெயர் எழுதியிருக்கும் போலிருக்கிறது !

அருகில் இருந்து பார்த்தது போல எப்படி எழுதமுடிகிறது..? சபாஷ் !

உங்கள் பாராட்டுக்கு நன்றி ஜானகி அவர்களே. மன்ற உறவுகள் தரும் ஊக்கம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். மன்றத்துக்கே நன்றியும் பெருமையும்.

கீதம்
23-02-2011, 08:20 AM
புஷ்பாக்காவின் கணவன் ,மனித நேயத்துடன் ஆற்றிய இறுதிக் கடமை.,
நெஞ்சைத் தொட்டுவிட்டது.
அருமையான படைப்பு...
வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி ராஜாராம்.

இதுபோன்ற படைப்புகள் இவரால் மட்டுமே முடியும்.

பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

மனதை உருக்கும் கதை.
நல்ல நடை.
மனிதர்களின் மனங்களில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டிக்கொண்டிருக்கிறதுதான் போலும்.
இன்னும் எழுதுங்கள்.

ஊக்கத்துக்கு நன்றி பாரதி அவர்களே.

கீதம்
23-02-2011, 08:32 AM
மீண்டும் ஒரு தெருவில், ஒரு தாய் அனாதையாக்கப்பட்டு. மதுவிற்கும் மனதிற்கும் சம்பந்தம் இல்லை. பெண்ணின் பக்கமிருந்து பார்க்கும் உங்கள் பார்வையும் சரியே. பாராட்டுக்கள்.

பின்னூட்டத்துக்கு நன்றி டெல்லாஸ்.

மதுவுக்கும் மனதுக்கும் தொடர்பில்லைதான். ஆனால் கதையில் அவன் குடிகாரன் என்பதாலேயே கமலி அவனை மனதளவில் வெறுக்கிறாள். அவள் பழகிய ஆண்கள் சரியான ஆண்மகன்களாக இல்லாததால் பொதுவாகவே அவளுக்கு அவனைப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். குடிப்பதால் இன்னும் கூடுதலாய் வெறுத்திருக்கலாம்.

இப்படி சில மனிதர்களும்,
இல்லை இல்லை இப்படி சிலர் மட்டுமே மனிதர்களாக இருக்கிறார்கள்

மீண்டு ஒரு முறை, மனதின் மத்தியில்
ஒரு கணம், படிக்கும் கண்களின் ஓரம் ஒரு துளி.

நல்ல கதையோட்டம்
வழக்கமான உங்கள் முத்திரை
மிக்க நன்றி

ஆம், சிலர் மட்டுமே. கமலியின் வாழ்வில் அந்தச் சிலர் மட்டுமே பெரும்பங்கு வகிப்பதால்தான் இந்நிலை.

நன்றி நிவாஸ்.

திடீர் பணம் வந்தால் சொந்தங்கள் மறக்கும். இது யதார்த்தமே. அழகாக கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பணம் மட்டுமில்லை. மனம் இருப்பதில்லை. முறையான கவனிப்பின்றி முடக்கிவைப்பதும், முடியாதபோது அவர்களை வெளித்தள்ளுவதுமான பரிதாபகரம் இன்னும் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது.வாழ்த்துக்கு நன்றி அன்புரசிகன்.

பூமகள்
23-02-2011, 09:31 AM
இயலாமையின் விளிம்பில் மனிதம் புதைக்கப்படுகிறது மனதுக்குள்ளேயே..

இறுதி யாத்திரையில் இருக்கும் அன்னைக்கு பொய்கள் சொல்லி நிம்மதியாயிருக்கச் செய்ய எண்ணிய மகள்..

யாரென்றே தெரியாத புஷ்பாக்கா.. அவரின் குடிகார புருஷன்.. மனிதம் எப்படி இவர்களில் இயல்பானது??!! வியந்தேன்..

இருந்தும் இல்லையென பாட்டுபாடுவோர் மத்தியில்
இல்லாமை மட்டுமே இருக்கும் இவர்களில்
எப்படி இடம் பிடித்தது மனிதம்??!!

திரண்ட கண்ணீர் இக்கதைக்கு கட்டியம் கூறுகிறது..

அன்னை மகளின் பொய்களை அறியாமலா போயிருப்பார்??!! அறிந்தும் அமைதி காத்திருப்பதாகவே தோன்றுகிறது..

கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் மனக்கண்ணில்..

பாராட்டுகள் கீதம் அக்கா.. வெகு நாட்களுக்கு பிறகு நல்ல கதை படித்த திருப்தி.. தொடர்ந்து எழுதுங்கள்.. கற்கிறேன்... மனிதர்களையும்.. எழுத்தையும்.. :)

sarcharan
23-02-2011, 09:35 AM
உன்னை நிறைத்த வயிறு
உன்னால் வெறுமையாய் இன்று

எங்க ஆச்சி(பாட்டி) யையும் எங்க அத்தை வீட்டுல இப்படித்தான் படுத்தினாங்க.. சோகம் என்னன்னா சோறு கூட குடுக்காம... எங்க ஆச்சி அழுதது இன்னும் என் கண்ணுல நிக்குது...

கீதம்
23-02-2011, 09:54 AM
மனிதத்தை இதை விட அழகாய் எடுத்து சொல்ல முடியாது. புஷ்பாக்காவும் அவள் புருஷனும் மனதில் நிழலாடுகிறார்கள்.

கதை முழுக்க கமலியின் மன ஓட்டங்களும் அவளின் ஆண் சொந்தங்களின் மீதான விமர்சனங்களும் என போனது இறுதியில் எல்லா ஆண்களையும் நீங்கள் சாடவில்லை என உணர்த்துவதற்காக புஷ்பாக்காவின் கணவரை பயன்படுத்தி இருப்பது நன்று. பெற்ற தாயை பிள்ளை துரத்தியதாக பல செய்திகளிலும் படிக்கும் போது உறுத்தும்.. அதையே இங்கே கையாண்ட விதமும் அருமை.

இத்தனை இருந்தும் சின்ன குறை.. கதையின் தலைப்பு. கதையின் பேசிக் கொள்ளும் கதாபாத்திரங்களாக இரு பெண்கள் மட்டுமே. புஷ்பாவின் கணவருக்கு என பெரிய முக்கியத்துவம் எங்கேயும் காணப்படவில்லை இறுதி தவிர. அதனால் அவரால் ஏதோ நடக்கப்போகிறது என முன்கூட்டியே....
ஏதோ எனக்குத் தோன்றியது.

மனம் தொட்ட கதைக்கு நன்றி..!!

உங்கள் எழுத்தனுபவம் ஒவ்வொருமுறையும் முந்திக்கொண்டு தலைப்பைக் கொண்டே கதையை அனுமானித்துவிடுகிறது. நான் என்ன செய்ய? பல தலைப்புகளை யோசித்து முடிவில் இதை வைத்தேன். அடுத்த முறை உங்களை முன்கூட்டி யோசிக்கமுடியாதபடி வைத்துவிடுகிறேன்.:)

விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மதி.

ஏழாயிரம் பதிவுகள் கடந்ததற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.:icon_b: எப்பவோ கடந்திருக்கவேண்டியது , இப்போதான் கடந்திருக்கிறீர்கள் என்பதில் சிறு வருத்தமும்.:icon_p:

மதி
23-02-2011, 10:18 AM

அந்தளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்லீங்க..
அப்புறம் கடந்தாச்சா..?? நீங்க சொன்னது உண்மை தான். எப்போவோ கடந்திருக்க வேண்டியது.. காரணம் சோம்பல் தான்.

உங்க வாழ்த்துக்கு நன்றி..!

அமரன்
23-02-2011, 06:50 PM
எப்போதும் மண்ணுடன் ஒட்டி இருப்பது அடித்தட்டு. அதனாலோ என்னவோ அடித்தட்டு மக்களுக்கு மேல்தட்டு மக்களை விட ஈரமும் பாரமும் அதிகம். பழக்க வழக்கங்களும் பாவனைகளும் பார்வைக்கு பழுதாகத் தெரிந்தாலும், வாசனை முகஞ்சுழிக்க வைத்தாலும் அந்த மண்ணின் மனிதர்களிடம் இனிப்பு அதிகமாகக் கிடைக்கும்.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் துளிச்சாறு இனிப்பே கதையில் காட்டப்படும் மனிதம்.

குடிக்கக் காசு தேடும் கணவன், மடிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு ஊடலுக்குத் தயாராகும் மனைவி எனக் கஞ்சிப்பானை வீடுகளின் நிறைக்காட்டுவதிலாகட்டும், மனம் நோகக்கூடாது என்பதுக்காக தெரிந்த உண்மையை தெரிந்தமாதிரிக் காட்டிக்கொள்ளாதிருப்பதிலாகட்டும் அச்சொட்டு எதார்த்தம்.

கதை என்றே தெரியாதளவுக்கு எழுத்து உள்ளது.

நெடுந்தூரப் பயணக் கவிதையில் பென்ஸ் அண்ணாவின் விமர்சனம் உங்களில் தாக்கத்தை ஏற்பத்தி உள்ளது என்று நினைக்கிறேன். அதைச் சமப்படுத்த விரும்பி கதையில் பல சமப்படுத்தல்களை சேர்த்துளீர்களோ..

கீதம்
23-02-2011, 08:11 PM

விமர்சனப்பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்.

அந்தக் கவிதையில் பென்ஸ் அவர்கள் எழுதிய விமர்சனத்துக்கும் இதன் ஆக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப்போனால் அவருக்குமுன்பே பலரால் பலமுறை என்மீது அதுபோன்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. அதனாலேயே கதை மட்டுமல்ல எதை எழுதினாலும் அந்தக் கண்ணோட்டத்தோடே வாசிக்கப்படுகிறது.

இன்னொரு விஷயம், இப்படி பெண்ணுக்காதரவாய் நான் மட்டுமல்ல, யார் எழுதினாலும் விமர்சிக்கப்படும் என்பதை இந்தா நீ கட்டிய தாலி என்ற ஆதனின் கவிதையிலும் பார்க்கிறேன்.

படைப்புகள் உருவாவது அந்தப் படைப்பாளியின் சூழல், அனுபவம், மனநிலை இவற்றை ஒட்டித்தானே அமைகிறது. இவள் படைப்புகளே இப்படிதான் என்று எனக்கொரு முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதை நான் துளியும் விரும்பவில்லை. எனவே என் வட்டத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிறேன்.

ஐயமெழுப்பி என்னை சிந்திக்கவைத்ததற்கு நன்றி.

கீதம்
23-02-2011, 08:25 PM
கீதம் அக்கா..... உண்மையிலே மிக அருமையான கதை.. சில நொடிகள் கண்ணீல் நீர் கசிந்தது....... உங்கள் எழுத்துநடை மிக மிக அபாரம்... இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது...

1. திரைகதை, காட்சி விளக்குதல் இவை எதுவுமே இல்லாமல் வசனத்தின் மூலமாகவே பெரும் பாதியை கொண்டு சென்ற விதம்.

2. பெண்களின் வாழ்க்கையின் நிதர்சனத்தை காட்டிய விதம்.

3. புஷ்பாக்காவின் கதாபாத்திரம்.

4. ஒரு வார்த்தைக்கூட வீணடிக்கப்படாத வசனம்.

5. கதையை முடித்த விதம்...

6. ஆரம்பம் முதல் போர் அடிக்காத நடை, ஆரம்பித்தால் முடிக்காமல் இருக்க முடியாது...

7. மிகச்சிறந்த கதையாசிரியர் அக்கா நீங்கள்......(தோல்வியை மறைத்து ஒத்துக் கொள்கிறேன்)

இந்த திரிக்கு ஐந்து நட்சத்திரத்தை தந்து கௌரவிக்கிறேன்...

பாயிண்ட் போட்டு பாராட்டு மழை பொழிந்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ரங்கராஜன். ஐந்துநட்சத்திரத்துக்கும் நன்றி.

(தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தக் கதையில் என்னைத் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்குங்கள்.)

ஓரே ஒரு உறுத்தல் கதையின் தலைப்பு,... இந்த கதைக்கு, புஷ்பாக்கா அல்லது, பெண்ணினம் போன்ற பெண்களின் புகழையோ, வாழ்க்கையையோ, உணர்த்துவதாக இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், புருஷன் இந்த கதையில் அவுட்ஆஃப் போகஸில் இருக்கிறார்,... அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை...

புஷ்பாக்காவுக்கு இயல்பிலேயே மனிதநேயமிருப்பதைத்தான் கமலி, முன்பே பார்த்திருக்கிறாளே. தெருவில் கிடந்த முதியவளை வீட்டுக்கு அழைத்துவந்து உணவளித்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அதை அவள் கணவனின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இன்றி செய்திருக்கமுடியுமா?

குடிக்கக் காசில்லாமல் அடுக்களையில் உருட்டிக்கொண்டிருந்தவன், கமலியின் தாயின் சாவுச் செலவுக்கு எப்படியோ பணம் தேற்றியிருக்கிறான். அதுமட்டுமில்லாமல் இறந்தவளின் உறவுகளை எதிர்பார்க்காமல் தானே முன்னின்று வேலைகளை செய்கிறான்.

விளிம்புநிலை மனிதர்களுடன் பழகி ஆண்களிடத்தில் பெருமதிப்பு வைத்திராத கமலியின் மனதில் அவன் இந்தச் செயல்களால் உயர்ந்துவிட்டான். அதனால்தான் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

(நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாக தானே நினைத்தேன், உங்களின் அருமையான வசன உச்சரிப்புகளை பார்க்கும் போது, ஏதோ ராயபுரம் மீன் மார்க்கெட் பக்கத்தில் வசிப்பது போல இருக்கிறது) சூப்பர்....

சென்னையில் பதினைந்து வருடம் குப்பை கொட்டியிருக்கிறேனே, இந்த அளவு கூட பேசலைன்னா எப்படி?

இந்த சமயத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருமணமாகி வேளச்சேரியில் புதுக்குடித்தனம். எதிர்வீட்டில் வீடு வாடகைக்கு என்று போட்டிருந்தது. அதைப் பார்த்த எங்கள் வீட்டுக்காரம்மா (உரிமையாளர்) என்னிடம் “அந்த ஆளோட வீட்டில் குடியிருந்தா… குப்பை கொட்டுறது ரொம்ப கஷ்டம்” என்றார். உடனே நான் கேட்டேன், "அப்போ அவங்க எங்க கொட்டுவாங்க?"

சிரிக்காதீங்க, நிஜமாவே புரியாமல்தான் கேட்டேன்.:icon_rollout:

கீதம்
23-02-2011, 08:32 PM
கீதம், கதையை படித்தவுடன் என் நெஞ்சு கனத்தது.

அதனால் கதையைப்பற்றின கருத்தை பதிக்கவில்லை..

மனிதரில் தான் எத்தனை நிறங்கள்...

உன்னை நிறைத்த வயிறு
உன்னால் வெறுமையாய் இன்று

எங்க ஆச்சி(பாட்டி) யையும் எங்க அத்தை வீட்டுல இப்படித்தான் படுத்தினாங்க.. சோகம் என்னன்னா சோறு கூட குடுக்காம... எங்க ஆச்சி அழுதது இன்னும் என் கண்ணுல நிக்குது...

நெகிழ்ச்சியுடன் இட்ட பின்னூட்டத்துக்கு நன்றி சரவணன். நிதர்சனம் சொன்ன இரண்டு வரிகளில் என்னை நெகிழ்த்திவிட்டீர்கள்.

அந்த பாவப்பட்ட ஜீவன்களை நினைத்தால் மனம் கனக்கிறது. கதையாய் எழுதி கனத்தை இறக்கிவைத்துவிடுகிறேன். சில சமயம் அது வாசகர்களின் தோள்களில் ஏறிக்கொள்கிறது.

ரங்கராஜன்
24-02-2011, 01:42 AM
அதைப் பார்த்த எங்கள் வீட்டுக்காரம்மா (உரிமையாளர்) என்னிடம் “அந்த ஆளோட வீட்டில் குடியிருந்தா… குப்பை கொட்டுறது ரொம்ப கஷ்டம்” என்றார். உடனே நான் கேட்டேன், "அப்போ அவங்க எங்க கொட்டுவாங்க?"

சிரிக்காதீங்க, நிஜமாவே புரியாமல்தான் கேட்டேன்.:icon_rollout:

ஹா ஹா செம காமெடி தான் போங்க...

அப்ப நீங்க எங்க மேற்கு மாம்பலம் மார்க்கெட் பக்கம் வாங்க... பிரன்ச், லத்தின், பாரசீகம் உள்ளிட்ட மொழிகள் எல்லாம் கத்துக்கலாம்....:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

கீதம்
25-02-2011, 04:14 AM
இயலாமையின் விளிம்பில் மனிதம் புதைக்கப்படுகிறது மனதுக்குள்ளேயே..

இறுதி யாத்திரையில் இருக்கும் அன்னைக்கு பொய்கள் சொல்லி நிம்மதியாயிருக்கச் செய்ய எண்ணிய மகள்..

யாரென்றே தெரியாத புஷ்பாக்கா.. அவரின் குடிகார புருஷன்.. மனிதம் எப்படி இவர்களில் இயல்பானது??!! வியந்தேன்..

இருந்தும் இல்லையென பாட்டுபாடுவோர் மத்தியில்
இல்லாமை மட்டுமே இருக்கும் இவர்களில்
எப்படி இடம் பிடித்தது மனிதம்??!!

திரண்ட கண்ணீர் இக்கதைக்கு கட்டியம் கூறுகிறது..

அன்னை மகளின் பொய்களை அறியாமலா போயிருப்பார்??!! அறிந்தும் அமைதி காத்திருப்பதாகவே தோன்றுகிறது..

கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் மனக்கண்ணில்..

பாராட்டுகள் கீதம் அக்கா.. வெகு நாட்களுக்கு பிறகு நல்ல கதை படித்த திருப்தி.. தொடர்ந்து எழுதுங்கள்.. கற்கிறேன்... மனிதர்களையும்.. எழுத்தையும்.. :)

விமர்சனத்துக்கும் நெகிழ்ச்சியான பாராட்டுக்கும் நன்றி பூமகள்.

இயலாமையால் மனிதம் புதைக்கப்படுகிறது சில இடங்களில்.
இல்லாமையின் போதும் மனிதம் விதைக்கப்படுகிறது பல இடங்களில்.

தாயறியா சூலுண்டோ? என்பார்கள். இங்கே அந்தத் தாய்க்கு மகளின் நிலை தெரியாமலா இருந்திருக்கும்? மகளின் அழைப்புக்கு புன்னகையாலே பதில் சொல்கிறாளே....

மிகவும் நன்றி பூமகள்.

நாஞ்சில் த.க.ஜெய்
25-02-2011, 05:28 AM
அறுந்த செருப்பு எனும் கதைக்கு பிறகு மறுமுறையும் நிருபித்து விட்டீர்கள் உங்கள் கதையின் வரிகளில் உணர்வுகளை ...நிகழும் நிகவுகளின் கண்ணாடியாக உங்கள் கதைகள் ...புஷ்ப்பாக்காவின் மனிதம் ஒரு குடிகாரனாக இருந்தாலும் ஒருமனிதனாக அவள் கணவன் இவ்விரு பாத்திரங்களும் மனதினில் இடம்பிடித்துவிட்டார்கள்...அந்த தாயின் மகளின் திரிசங்கு நிலை மற்றும் அவள் மகன் கையாலாகாத்தனம் இவைகளை கொண்டு கையாண்ட எழுத்துநடை மிகவும் அருமை ...தொடருங்கள் கீதம் அக்கா ......

கீதம்
26-02-2011, 12:13 AM

விமர்சித்துப் பின்னூட்டமிட்டுப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஜெய்.

Ravee
03-03-2011, 03:51 PM
நீரோடை போன்ற தெளிவான கதையோட்டம். மனத்தால் ஊனப்பட்ட எத்தனையோ பிள்ளைகளை உங்கள் கதை என் கண்ணுக்கு முன் நிறுத்தி போனது அக்கா .... இயலாமை இதை விட பெரிய சாபக்கேடு வேறு ஏதும் இல்லை. எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாமல் போகச் செய்யும் தரித்திரம் அது.

Mano.G.
04-03-2011, 09:07 AM
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசித்து மனதை தொட்ட சிறுகதை,
மனித நேயம் நடுத்தர வர்கத்திலும் கீழ்மட்டத்திலும் தான் உள்ளதோ,
தெரிந்தோ தெரியாமலோ இதை தானோ நாமும் காண்கிரோம்.

வாழ்த்துக்கள் கீதம்

மனோ.ஜி

கீதம்
07-03-2011, 09:27 PM
நீரோடை போன்ற தெளிவான கதையோட்டம். மனத்தால் ஊனப்பட்ட எத்தனையோ பிள்ளைகளை உங்கள் கதை என் கண்ணுக்கு முன் நிறுத்தி போனது அக்கா .... இயலாமை இதை விட பெரிய சாபக்கேடு வேறு ஏதும் இல்லை. எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாமல் போகச் செய்யும் தரித்திரம் அது.

மிகச் சரியாகச் சொன்னீர்கள், ரவி. இயலாமையைப் போலொரு சாபக்கேடு எதுவுமே இல்லைதான். பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.

கீதம்
07-03-2011, 09:28 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசித்து மனதை தொட்ட சிறுகதை,
மனித நேயம் நடுத்தர வர்கத்திலும் கீழ்மட்டத்திலும் தான் உள்ளதோ,
தெரிந்தோ தெரியாமலோ இதை தானோ நாமும் காண்கிரோம்.

வாழ்த்துக்கள் கீதம்

மனோ.ஜி

உங்கள் மனம் தொட்டதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா.

பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

xavier_raja
08-03-2011, 05:56 AM
தன் தாயை கவனிக்காதவன் வாழ்க்கை நிச்சயம் நரகம்தான்..

கீதம்
08-03-2011, 05:58 AM
நன்றி சேவியர் ராஜா அவர்களே. வெகுநாட்களுக்குப் பிறகு பின்னூட்டம் வாயிலாய் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.

சிவா.ஜி
08-03-2011, 12:13 PM
மன்றம் வராத நாட்களில் நான் வாசிக்காமல் இழந்த நல்ல எழுத்துக்களை இன்று வாசித்ததில் மகிழ்ச்சி. தங்கையின் எழுத்தைப் பற்றி என்ன சொல்ல...? மனிதரின் உணர்வுகளை உங்களைப்போல கனக் கச்சிதமாய் எழுத்தில் வடிக்க யாரிருக்கிறார்கள்?

புஷ்பாவின் கணவரைப்போல நல்ல மனிதர்களைக் காண்பது அபூர்வம். கமலியின் தாய்...கொடுத்துவைத்தவள். இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் பராமரிப்பைக் கடைசிக்காலத்தில் அனுபவித்துவிட்டுக் கண்ணை மூடியிருக்கிறாள்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா.

கீதம்
08-03-2011, 08:10 PM
உங்கள் வாழ்த்துகள் என்னை இன்னும் ஊக்கத்துடன் எழுதவைக்கும். நன்றி அண்ணா.

ஜனகன்
11-03-2011, 08:54 AM
கதை ரொம்ப அருமை.
அதுவும் கீதத்தின் எழுத்துக்கு சொல்லவா வேண்டும்.சும்மா சூப்பரான கதை எழுதி அசத்திட்டீங்க.

புஷ்பாவின் கணவரைப்போல நல்ல மனிதர்களைப் பற்றி சொல்லியிருப்பது உங்களுடைய சிறப்பை காட்டுது.

அருமையான கதையை தந்துள்ள உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இன்னும் நிறைய எழுத எனது வாழ்த்துக்களும்.

கீதம்
11-03-2011, 08:58 AM
நன்றி ஜனகன். உங்கள் கதைகளும் கருத்தாழம் கொண்டவை. மீண்டும் துவங்குங்கள். ஒரு மாதமாக ஆளே காணலையே... நண்பர்கள் விடுகதைத்திரிப் பக்கம் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜனகன்
11-03-2011, 09:06 AM
நன்றி ஜனகன். உங்கள் கதைகளும் கருத்தாழம் கொண்டவை. மீண்டும் துவங்குங்கள். ஒரு மாதமாக ஆளே காணலையே... நண்பர்கள் விடுகதைத்திரிப் பக்கம் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், மன்றத்தில் சஞ்சரிக்க முடியவில்லை.இனியும் தொடர்ந்து வருவதற்கு குடும்ப சூழ்நிலையால் முடியாமல் போகலாம்.இருந்தாலும் முடிந்தவரை சமூகம் கொடுப்பேன்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கீதம்.