PDA

View Full Version : பற்றத் தொடங்கிய அக்னி - அவள் ஒரு மோகனம்அக்னி
20-02-2011, 10:43 AM
நான் கிறுக்கத் தொடங்கிய காலத்துக் கையெழுத்துப் பிரதிகள்,
மீண்டும் என்னிடம்...

என் மனதுக்குச் சுகந்தமாகும், அந்தக் காகிதமணத்தினை,
உங்கள் மனதுக்குள்ளும் பாய்ச்ச விரும்பி விளைகின்றேன்...

ஆரம்பக் கிறுக்கல்களில்,
பாடல்களின் வரிகளும் இருக்கும்... கவிகளின் வார்த்தைகளும் இருக்கும்...
சொற்குற்றம், பொருட்குற்றங்களும் இருக்கலாம்...
ஆனால்,
இவை தெரிந்தே செய்த தவறல்ல...
எனது எழுத்துக்கள் எழுந்து நடக்க உதவிய பிடிமானங்கள்...

நன்றி!

*****


அவள் ஒரு மோகனம்
(15.03.1998)

என் இதயத்தைக் கொள்ளை கொண்டவள்.
என் வார்த்தைகளுக்கு வெள்ளை அடித்தவள்.

என் நாயகி... அவள் பசும்பொன்...
பெயரிலே ஒரு கவர்ச்சி...
தேகமோ பெரும் மலர்ச்சி...
மெச்சினேன்.
அவள் உச்சிமோந்தாள்.

என் உடலெங்கும் மின்னதிர்ச்சி.
புது ஊற்றாய்ப் பொங்கியது மகிழ்ச்சி.

அவளின்
மிருந்தங்க அணைப்பில்
ஊமையன் என் உளறல்கூட
உன்னதமாய்ப் போனது.

அவள்
உச்சிமுதல் பாதம் வரைதான்
பார்த்துவிடத் துடித்தேன்...
ஆனால்,
இடையிலேயே பல்லாயிரம் விடயங்கள்...
தாண்ட முடியவில்லை...
இல்லை... முயலவில்லை...

அவளில் மூழ்கிப் பார்த்தேன்.
முற்றாக என்னை மறந்தேன்.
முழுவதும் உண்ணத் துடித்தேன்.
ஆகா..!
அவளொரு செந்தேன். மலைத்தேன்.
ஆனால்,
மறைக்க முடியவில்லை.

தினம் தினம் தொட்டுப் பார்த்தேன்.
தொடத்தொடப்
புதிய பரிமாணங்கள்...
மடியில் வைத்து மீட்டிப் பார்த்தேன்.
மீட்டமீட்டப்
புதிய ஸ்வரங்கள்...

என்னை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
தன் கருநிறக் கூந்தலில் முடிந்து கொண்டாள்.

முடிந்த பின்தான் தெரிந்தது,
அவள்..,
எனக்கு மட்டும் உரியவளல்ல
என்று...

அவளிற்
கலந்துபோன பலரோடு
நானும்
ஒருவனாகிப் போனேன்.

ஆனாலும் எனக்குக் கவலையில்லை.
ஏனெனில்,
அனைவருக்கும் அவளில் உரிமையுண்டு.

ஆம்..!
அவள் “தமிழ்மகள்”

கீதம்
20-02-2011, 10:49 AM
காதலியாய், தாயாய், மகளாய் எத்தனைப் பிறவியெடுத்தும் நம்மைக் கையணைத்து எழுத்தின் வேட்கை தீர்ப்பாள்.

தமிழைப் பற்றிப் பற்றிய அக்னி இன்னும் கொளுந்துவிட்டெரிய வாழ்த்துகிறேன்.

கலையரசி
20-02-2011, 11:20 AM
”தொடத்தொடப்
புதிய பரிமாணங்கள்...
மடியில் வைத்து மீட்டிப் பார்த்தேன்.
மீட்டமீட்டப்
புதிய ஸ்வரங்கள்...”

இவை நான் ரசித்த வரிகள்.
தமிழன்னையின் மடியில் தவழ்ந்து, அவள் அன்பில் ஊறித் திளைத்து, எழுத்தில் இன்னும் புதுப்புது சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.
உங்களது ஆரம்பக்கால காகித சுகந்தத்தைத் தொடந்து நுகரவும், அன்பவிக்கவும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

உமாமீனா
20-02-2011, 11:37 AM
தமிழ்மகள் என்றும் என்றென்றும் அவள் தமிழ்மகள்

முரளிராஜா
20-02-2011, 12:40 PM
தமிழை வர்ணித்தவிதம் அருமை.

Nivas.T
20-02-2011, 12:52 PM
அக்னியின் சுவாலைகள் அழகா மென்மையாக

அழகு கவிதை அக்னி

பாரதி
20-02-2011, 03:17 PM
தவளும் போதும் மெல்ல நடை பயிலும் போதும் இருந்த அழகு நன்றாகவே இருக்கிறது. தொடருங்கள்.

அக்னி
21-02-2011, 09:27 AM
உளறலை ரசித்த அனைவருக்கும் நன்றி...

ஒரு நாடக ஒத்திகையின் ஓய்வில் எழுதியது.
பயந்து பயந்து எழுதியதை, தமிழாசிரியையிடம் கொடுத்துவிட்டான் நண்பனொருவன்.
அவர் பாராட்டியதும்தான் பயம் தெளிந்தது...

மீண்டும் நண்பர்களுக்கு நன்றி...

ஜானகி
21-02-2011, 10:12 AM
மோகனமாகத் தொடங்கியிருக்கும் அக்னிச் சுடர், சுநாதமாக வீசிப் பரவி, ஆனந்தமாக வர்ஷிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆதி
21-02-2011, 10:14 AM
உளறலா ? அப்ப நானென்ன சொல்றது, பிதற்றலுன்னு சொல்லிக்கொள்ளலாம் என்னதை..

ஊற்றுக்கண் திறக்கும் தருணத்தில் உண்டான மென்கசிவுகளை, வாசிப்பு பழக்கம் அதிகமான பிறகு வாசிக்கும் தருணத்தில் அவற்றின் மீதொரு கூச்சம், நம்பிக்கையின்மை, தாழ்வுநிலை இருக்கும், என்னவென்றாலும் அக்னி, ஆரம்பக்காலத்தில் இருந்த தைரியம் இப்போது இருப்பதில்லை, எதை பற்றி எழுத நினைத்தாலும் எண்ணியவாறு எழுத இயலும், இப்போதெல்லாம் எதை எழுத யோசித்தாலும் இது நம்முடைய விளைச்சலா, எங்கோ எதையோ படித்ததின் விளைவா என்று எண்ணி நம்மை நாமே சந்தேகித்து அஞ்சி வேண்டி இருக்கிறது..

அது போற் கற்பனை வறண்டிருக்காது, எதை யோசித்தாலும் அது புதிது போற் தோன்றும், யாரையும் வாசிக்கவில்லை, எதையும் தெரிந்து கொள்ளவில்லை, அதனால் எதைப்பற்றியும் கவலையில்லை..

அடிக்கடி தோன்றும், பேசாம ஆரம்ப காலத்தில் எழுதின மாறிய இருந்திருக்கலாமோ ?

//அவள்
உச்சிமுதல் பாதம் வரைதான்
பார்த்துவிடத் துடித்தேன்...
ஆனால்,
இடையிலேயே பல்லாயிரம் விடயங்கள்...
தாண்ட முடியவில்லை...
இல்லை... முயலவில்லை...

//

இதை உணராதவர்கள் யாரும் இருக்க இயலாது என்று தோன்றுகிறது...

பாராட்டுக்கள்...

அக்னி
21-02-2011, 05:33 PM
நன்றி ஜானகி... தொடர்ந்தும் உளறுவேன்...

*****
என் மனம் அப்படியே உங்கள் பதிவிற் பிரதிபலிக்கின்றது ஆதன்.

அப்போதெல்லாம், ஆசிரியர் தரும் தலையங்கத்திலோ, அல்லது ஏதேனும் பாடல்வரிகளிலிருந்தோ எழுதத் தொடங்கின், முடிவது தெரியாது.
முடிந்ததும் எந்தக் குழப்பமும் இராது.

இப்போதோ, எழுதிமுடித்ததும் எங்கேயோ வாசித்த நினைவாகக் குழப்பம்.
அதுவே எழுதிடத் தடையாகவும் அமைகின்றது.

ஒருமுறை,
‘சொர்க்கமாக நான் நினைத்தது, இன்று நரகமாக மாறிவிட்டது’
என்ற பாடல் வரியை ஒரு கவிதைக்குட் புகுத்திவிட்டேன்.
பாடல்களை பதிவுசெய்து வைத்துக் கேட்க வசதியில்லாத காலம்.
வானொலியில் எப்போதோ கேட்டது எதிரொலித்திருக்கலாம்.
ஆசிரியரிடம் காட்டும்போதுதான் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தக் கவிதையோடு பொருந்தியதாக வருவதால் அப்படியே விட்டுவிடவும் சொன்னார்.
(அக்கவிதை இருந்தால் தொடர்கையில் வரும்...)
அன்று, பாடல்களைத் திருடி எழுதுபவன் என்று ஆசிரியர் கண்டித்திருந்தால்,
அன்றே எழுதுவதையும் நிறுத்தியவனாயிருந்திருப்பேன்.

அவர் வழிநடத்திய விதம்,
எனது பிழைகளையும், கவனிப்பின்மையையும் கருத்திற்கொள்ளவைத்தது என்றால் மிகையில்லை.

நன்றி ஆதன்...

கலாசுரன்
25-02-2011, 08:44 AM
தினம் தினம் தொட்டுப் பார்த்தேன்.
தொடத்தொடப்
புதிய பரிமாணங்கள்...
மடியில் வைத்து மீட்டிப் பார்த்தேன்.
மீட்டமீட்டப்
புதிய ஸ்வரங்கள்...

மிகவும் ஈர்த்தது வரிகள் ...!

ரசித்தேன் வெகுவாக..:)

ரசிகன்
04-03-2011, 01:13 PM
என்னை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
தன் கருநிறக் கூந்தலில் முடிந்து கொண்டாள்.

முடிந்த பின்தான் தெரிந்தது,
அவள்..,
எனக்கு மட்டும் உரியவளல்ல
என்று...

அவளிற்
கலந்துபோன பலரோடு
நானும்
ஒருவனாகிப் போனேன்//

எதார்த்தம்.... அருமையான படைப்பு!:)

ஷீ-நிசி
07-03-2011, 05:19 PM
தினம் தினம் தொட்டுப் பார்த்தேன்.
தொடத்தொடப்
புதிய பரிமாணங்கள்...
மடியில் வைத்து மீட்டிப் பார்த்தேன்.
மீட்டமீட்டப்
புதிய ஸ்வரங்கள்...

அடடா! அப்படியே கவிதை எழுத வைக்கும் நிகழ்வு..

அற்புதம்!

அக்னி
08-03-2011, 11:22 AM
கலாசுரன், ரசிகன், ஷீ-நிசி அனைவர் ரசிப்புக்கும் நன்றி... நன்றி... நன்றி...

சிவா.ஜி
08-03-2011, 11:49 AM
அடடா...தமிழ்மகளை...அக்னி ரசித்து எழுதிய வரிகளனைத்தும் அற்புதம். அவள் அநேகருக்குக் காதலிதான்....ஆனாலும் அக்னியின் பிரத்தியேகக்காதலியாய் பவனி வரும் அம்மகளின்பால் அக்னிக்கு இருக்கும் ஈர்ப்பு...காலங்கள் கடந்தும் ஜொலிக்கின்றன.

தொடருங்கள் திறனாய்வுப்புலியாரே....

அமரன்
08-03-2011, 07:15 PM
கவிஞர்கள் தவழ்வது காதலில்..

தமிழும் காதலும் இங்கே கலந்து.

அடுத்தது எங்கேடா..

அப்படிக்கேக்க வைக்குது கவிதை.
.