PDA

View Full Version : காய்வாங்களையோ,... காய்யீரங்கராஜன்
16-02-2011, 01:36 PM
காய்வாங்களையோ,... காய்யீ


வணக்கம் உறவுகளே...

எப்படி இருப்பீர்கள், நல்லாதான் இருப்பீர்கள்... நல்லா இருக்க நல்லா சாப்பிடனும், நல்லா சாப்பிடனும்னா... சக்தி வாய்ந்த காய்கறிகளை சாப்பிடனும், ஆனால் சமீபகலமாக நமக்கு காய்கறி வாங்கவே சக்தி இல்லாம இருக்கிறது... எங்கள் வீட்டில் காய்கறி தீர்ந்து போச்சு... வாரத்திற்கு ஒருமுறை தான் வாங்கணும்... நான் வாங்கி ஓன்றரை வாரம் ஆச்சு... இப்போ காய்கறி விலை குறைஞ்சி இருக்குனு சொன்னாங்க.... குறைஞ்சுத்தான் ஆகவேண்டும்...... தேர்தல் வருதில்லையா....

கயாஸ் நியதி என்பதை புரியாதவர்களுக்கு சிறந்த உதராணமாகப் போவது இந்த 3 மாதங்கள்.... தேர்தல் வருவதால், என்ன மாற்றம் நிகழும் தெரியுமா........ பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்கும் போது, அதில் வெளிப்படும் காற்றில் இருந்து மலையே கீழே விழும் என்பது பட்டர்பிளை எஃபைக்ட் ........ அந்த மாதிரி தான் இந்த தேர்தல் நேரத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கலாம்.

ஏன்னென்றால், இந்த மூன்று மாதங்களும் ஒரு அளவுக்கு, மின்சாரம் பிரச்சனை இருக்காது, தண்ணீர் பிரச்சனை இருக்காது, ரோடு சீரமைக்கப்படும், விலைவாசி குறையும், பெட்ரோல் விலை குறையும்.... இந்த மாற்றத்தின் விளைவால், கயாஸ் நியதியின் படி

காதல் கைகூடலாம்.
கணவன் மனைவிக்குள் இருந்த வேற்றுமைகள் மறைந்து சந்தோஷமாக வாழலாம்.
குழந்தைகள் நன்ற படிக்கலாம்.
மனப்பூர்வமான உழைப்பின் காரணமாக பணி உயர்வு கிடைக்கலாம்..
பெற்றோர்கள் மனம் மாறி காதலுக்கு பச்சைகொடி காட்டலாம்..

இவை அனைத்தும் இந்த மாதங்களில் நடக்கும், சரி அதிகமா இந்த திரியில் அரசியல் பேச வேண்டாம், அதுக்கு தான் கொஞ்சம் அரசியல் பேசுவோம் திரி இருக்கே மீதியை அதில் பேசிக் கொள்ளலாம்.

சரி நாளை காய்கறி வாங்கப் போறேன், ஆனால் போன முறை காய்கறி வாங்கும் போது நடந்த சில சுவாரஸ்யங்களை பதியலாம் என்று இந்த திரியை தொடங்கி இருக்கிறேன்.... நம்மை சுற்றி நடப்பது எல்லாமே சுவாரஸ்யம் தானே...... நாம் தான் கவனிக்க தவறி விடுகிறோம்...

கையில் சரவணா ஸ்டோர்ஸின் ஆரேஞ்சு கலர் பெரிய பையை எடுத்துக் கொண்டு, கிளம்பினேன்..... ஐய்யோ, காய்கறி வாங்க போறது எதோ சாதாரண விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். அதற்குனு சில ரூல்ஸ் இருக்கு...... அதுவும் மேற்கு மாம்பாலம் ரயில் நிலையம் அருகே இருக்கும் காய்கறி மார்கெட்டில் காய்கறி வாங்க சில முக்கிய விதிகள் இருக்கிறது. பேன்ட், வேஷ்டி இதெல்லாம் கட்டிக் கொண்டு போகக்கூடாது. பேன்ட் அணிந்து சென்றால், அந்த சேற்றில் போயிட்டு வந்ததும் அதை அப்படியே தூக்கி எறிந்து விட வேண்டும், வேஷ்டி அணிந்து சென்றால், சேறு கறையைப் பற்றி உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, காரணம் கண்டிப்பாக கூட்டத்தில் உங்கள் வேஷ்டியை வேறு யாராவது எடுத்துச் சென்று விடுவார்கள்,... அவர்கள் தான் கவலைப்பட வேண்டும் சேற்றைப் பற்றி...

சோ நான் இருப்பதிலே பழைய தேனீர் சட்டையை, குப்பக்காரி டவுசர் எனப்படும் பர்முடாஸ், தோல் செருப்பு (காரணம் இருக்கிறது), முக்கியமாக பிச்சைக்காரனிடம் இருந்து பிச்சை எடுத்தது போல, சில்லரைகள்... செல்போன், மறக்காமல் ஹெட் செட்..... வீட்டை விட்டு கிளம்பினேன்.

என் பெரியம்மாவிடம் "ஆன்ட்டி நான் காய்கறி வாங்கி வந்து விடுகிறேன்" என்று வாசலில் இருந்து கத்தினேன்.

"ஏன்டா கத்துற, இப்ப தானே கிட்ட வந்து சொல்லிட்டு போன" என்பாள் அவள் முகத்தை சுறுக்கிக் கொண்டு... நான் சிரித்துக் கொண்டு கதவை மூடினேன். எங்கள் தளத்தில் உள்ள பக்கத்து வீட்டு கதவு அவசரமாக திறக்கப்பட்டது.. ஹா ஹா நான் கத்தினது வீண் போகவில்லை... என் பக்கத்து வீட்டு மாமி, கதவை திறந்த வேகத்தில்...

"காய்கறியா வாங்க போறீங்க, வாரம் தவறாமல் போறீங்க"

"என்ன நகைக்கடைக்கா போறேன்"

"இருக்குற விலைவாசியில்..."

"சரி மாமி நான் கிளம்புறேன், மாமா இல்ல, அவரு காய்கறியெல்லாம் வாங்கி தந்தாச்சா....(பத்த வச்சிட்டியே பரட்டே....... மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்)

பக்கத்து வீட்டு மாமா... இந்த கதாபாத்திரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு...

அவர் அவசரமாக அலுவலகத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கும் போது, தெருவில் பார்த்து விட்டு, யதர்ச்சையாக

"என்ன மாமா வேலைக்கா.." என்ற ஒரு வார்த்தையை கேட்டு விட்டால் போது, ஏண்டா கேட்டோம் என்ற அளவிற்கு முக்கால் மணி நேரம் பேசுவார்.

"ஆமா ப்பா, காலையில் 4 மணிக்கு எழுந்தேன், நாலரைக்குள் அனைத்து வேலைகளை முடிச்சிட்டு, நல்ல காபி நானே போட்டு குடிச்சேன்... அப்புறம் டைம்ஸ் ஆப் இந்தியா படிச்சியா, அதுல நம் கார்ப்பரேஷன் பத்தி எழுதி இருக்கான் பாத்திய, அப்பப்பா அவ்வளவு நிதி தராங்க இல்ல, ஆனா நமக்கு தான் வந்து சேர மாட்டுது......." இப்படி பேசிக் கொண்டே இருப்பார்.

நான் இடைமறித்து "மாமா ஆபிஸுக்கு டைம் ஆது கிளம்புங்க....."

"அட அப்புறம் பாத்துக்கலாம், அந்த கார்ப்பரேஷன் நிதியில்....."

நான் பாக்கெட்டில் உள்ளே வரவாத போனை எடுத்து காதில் வைத்து

"சொல்லு மச்சி,.... எப்போ.... எங்கே... தொ தொ வரேன், நீ அங்கையே இரு....மாமா பிரன்டு ஒருத்தனுக்கு ஆக்ஸிடன்டு தோ வந்துடுறேன்..."

"இந்த வயசு பசங்களே இப்படி தான், ஒரு முறை நான் காலேஜ் படிக்கும் போது......"

அவரை முறைத்துக் கொண்டே அந்த இடத்தில் விட்டு ஓடுவது போல நடித்து விட்டு, அவர் கண் பார்வையில் மறைவேன். இது அவர் ஆபிஸ் போகும் போது, நான் ஆபிஸ் போகும் போது என்றால், அவர் வீட்டில் தான் இருப்பார். அப்போ நான் இவருக்கு பயந்துக் கொண்டே, இவர் இருக்கிறாரா என்று எட்டிப் பார்த்த பின்.... இல்லை என்று உறுதி செய்த பின் தான் வெளியில் செல்வேன். பார்த்தால் நான் என் பைக் எடுக்கும் எடத்தில் நின்றுக் கொண்டு யாரிடமாவது பேசிக் கொண்டு இருப்பார்....... செத்தேன்டா...

சில மாதத்திற்கு முன்னால் தான் அவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அவரின் தீவிரவாதம் அதிகமாக ஆரம்பித்து விட்டது. பேசி பேசி எதிராளியில் வாயில் நுரை வரவைக்க ஆரம்பித்தார். அந்த நுரையை பார்த்தாலும், பேச்சை நிறுத்த மாட்டார், இவர் கையாலே நுரையை துடைத்து விட்டு, தன் பேச்சை தொடர்வார்.

இதுதான் மாமாவின் முன்கதை சுருக்கம், இதுக்கூட மன்னித்து விடலாம்....ஆனால் ஒருமுறை என் பெரியம்மாவிடம் வந்து

"நம்ம தச்சினா எங்காவது கோடம்பாக்கம் சைடு இன்னைக்கு போனானா"
என்றார்.

"தெரியலையே, என்ன விஷயம்" பெரியம்மா

"இல்ல இரண்டு பொண்ணை, வண்டியில வச்சிட்டு இவன் போனதை பார்த்தேன், அதான் கேட்டேன்" என்று அழகாக கொளுத்தி விட்டு வீட்டு கதவை சாத்திக் கொண்டார். என் பெரியம்மா, என்னிடம்

" என்னடா இது, இரண்டு பொண்ணுங்க கூட"

"ஆன்ட்டி அந்தாளு தான் சொல்றான்னா நீங்க வேற"

"ஒண்ணுக்கே நாக்கு தள்ளுது இதுல இரண்டு வேறையா"

இதில் இருந்து ஆரம்பித்தது எனக்கும் அவருக்குமான குருஷேத்திர போர்.

சரி பேக் டூ சீன் 1

"சரி மாமி நான் கிளம்புறேன், மாமா இல்ல, அவரு காய்கறியெல்லாம் வாங்கி தந்தாச்சா....(பத்த வச்சிட்டியே பரட்டே....... மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்).

"எங்க அவரா... அவருக்கென்ன, வேலையா வெட்டியா, சும்மா இப்படி உக்கார்ந்து உக்கார்ந்து காலத்தை கழிக்கிறார்... ஏன்னா, பாருங்க, சின்னப் பையன், பொறுப்பா, காய்கறி எல்லாம் வாங்கப் போறான்... காலம் பூரா தூங்கிட்டே இருங்க.... எழுந்துருங்க எழுந்துருங்க... நம் தச்சினா கூடவே கடைக்கு போயிட்டு வாங்க" என்றாள் மாமி.

அய்யய்யோ கத்தி என்ன நமக்கே திரும்புது... மறுபடியும் ஹலோ ஹலோ என்ற என்னுடைய செல்போன் உக்தியை வைத்து நான் தப்பித்தேன். காய்கறி வாங்கு இடத்திற்கும் என் வீட்டிற்கும் ஐந்து நிமிடம் தூர நடைப்பயணம் தான், இருந்தாலும் அந்த காலத்திற்குள், காதில் பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே நடக்கும் போது ஒரு சுகம் இருக்கு பாருங்க...... அதுக்காகவே நான் காய்கறி வாங்க போவேன்.... அதுவும் எனக்கு பிடித்த பாடலான

மாலை சூடும் வேலை அந்தமாலை தோறும் லீலை...

சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப்பாட்டே வா வா.. காதோடு தான், நீ பாடும் ஓசைய்ய்ய்ய்ய.. நீங்காத ஆசைய்ய ஹோய் ஹோய்...

தென்றதல் வந்து தீண்டும் போது என்ன வர்ணமோ,.... மனசுலாஆஆஆஆஆ

மூன்று பாடல்கள் முடியும் வரை பொறுமையாக நடந்து 10 நிமிடத்தில் மார்கெட்டை வந்து அடைந்தேன். சுமார் நாற்பது அடி அகலம் உள்ள அந்த சாலையில் காய்கறி காரர்களின் ஆக்கிரமிப்பு போக, வேறும் 6 அடி அல்லது 10 அடி தான் சாலை இருந்தது. அனைத்து காய்கறிகளின் கழிவுகளும், கொட்டி கொட்டி மண்ணும், காய்கறி கழிவுகளும் சேர்ந்து மிக்ஸியில் அரைக்கப்பட்டது போல கொழகொழப்பாக இருக்கும் அந்த தரை.. அங்கு விவசாயம் செய்தால் கண்டிப்பாக முப்போகம் விலையும், அந்தளவு இயற்கை உரங்களை போட்டுச் செல்லும் அங்கு திரியும் மாடுகள்... அந்த மார்கெட்டுகை பார்த்தவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். வெயில் மண்டையை பிளக்கும், மே மாதத்திலே இந்த மாதிரி தான் இருக்கும், அப்படியிருக்க மழைக்காலம், மற்றும் பனிக்காலங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்..

பொறுமையாக என்னுடைய பாதங்களை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். இப்ப தெரியுதா நான் ஏன் குப்பாக்காரி டவுசரை மாட்டிக் கொண்டு வந்தேன் என்று, சேற்றில் பொறுமையாக என்னுடைன் சேர்ந்து அனைவரும் நடக்க ஆரம்பித்தார்கள்... இந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்தால்.... ரீ ரெக்கார்டிங்குடன் இப்படி தான் இருக்கும்....

நடக்கும் போது... தம் தம்த தம்த நம்தம், தம்தனம்தம் தம்தனம்தம் தம்தனம்தம்....

செருப்பு சேற்றில் வெளியே வராமல் மாட்டிக் கொண்டு இருக்கும் போது.... தம்னம்தம்தம்ம்ம்ம்... தம்னம்தம்தம்ம்ம்ம்...

அப்போதும் வராது... (முழு வேகத்துடன்).....தம்னம்தனம்தம்ம்ம்ம்... தம்னம்தனம்தம்ம்ம்ம்... என் ராகமே வாவாவாவா ஆஆஆஆஆஆ (செருப்பு சேற்றில் இருந்து வந்து விடும்)

அதன் பின் கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பிப்போம் ... தத்திச் செல்லும் முத்துச் சிற்பம் ....கண்ணில் ஏது கண்ணீர் வெட்பம்.....இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்...

இப்படி இருக்கும் அங்கு சேற்றில் நடந்து வரும் மனிதர்கள் தூரத்தில் இருந்து பார்த்தால், சில நேரம் நிறைய பேர் வழுக்கியும் விழுந்து இருக்கிறார்கள்..அவர்களை சென்று தூக்கும் போது... அப்போ வேற சாங்

"தம்தன தம்தன தாளம் வரும், புது ராகம் வரும், பல பாவம் வரும், புது மல்லிகை வாசம் வரும்"........ மல்லிகை வாசமா வரும்... பொண நாத்தம் அடிக்கும் சேற்றில் விழுந்து விட்டால்... அதனால் தான் இருப்பதிலே மோசமான தேனீர் சட்டையும், டவுசரும் மாட்டிக் கொள்வேன்.

காய்கறி மார்கெட்டுக்குள் சென்று விட்டேன், வெங்காயம்... என்பது உயர்மேல்தட்ட மக்களுக்காக படைக்கப்பட்ட காய்கறி....இதற்கு சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டது.. அப்போது வெங்காயம் விற்றே பல வியாபாரிகள்.. கோடீஸ்வரராக ஆனார்கள்... இந்த முறை எத்தனை கோடீஸ்வரர்களை தர இருக்கிறதோ.. வெங்காயம்...

"கிலோ எவ்வளவும்மா"

"போடு வச்சி இருக்கே கண்ணு தெரியலை" விற்பவள் எம்பிஏ இன் கஸ்டமர் சர்வீஸ்...

"150 ரூபாயா"

"கால் கிலோ குடுப்பியா... கால் கிலோன்னா எவ்வளவு ஆவது... 150 in the mind, divide by 4....half 75, அப்போ.... 37.50" நான் கணக்கு போட்டு முடிப்பதற்குள்...

"கால் கிலோ எல்லாம் கடையாது, 1 கிலோக்கு மேல தான்.." அதாவது இந்த அண்ணன், அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் எல்லாம் பண்ணமாட்டாங்களாம்..... நடிச்சா ஸ்ரைட்டா ஹீரோ தானாம்"

"ஏம்மா சரி 50 ரூபாயக்காவது தாயேன்"

"தெ.. சொல்லினு இருக்கேன்ல... போ அந்தாண்ட".. மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, காசி மேடு மீன் மார்க்கெட் ஆகிய இடங்கில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ளிட்ட யாரு வந்தாலும் இதான் மரியாதை...

"...தெ கருவாப் பய ஓபாமா எத்தன வாட்டி செல்லினுகிரென், சிறுகீரை கட்டு 15 ரூபா,... காசு இல்லன்னா, உன்னுடைய பேன்ட்டையும் சட்டையையும் கழட்டி வச்சிட்டு போ....... பேமானி, தலைய பாரு கொத்தி விட்ட கருணகிழங்காட்டம்"

தக்காளி - 40, 40 ஆக இருந்தாலும் போய் நேரா வாங்கிட முடியாது... தக்காளியை தொடக்கூடாது, நசுக்ககூடாது, விற்பவர்களே தான் எடுத்துப் போடுவார்கள்.. கவர் தர மாட்டார்கள்.. .2 ரூபாய் கொடுத்து நாம் தான் வாங்க வேண்டும்... அப்படியே அவரக்ள் கவர் தந்தால், மூச்சுக் காற்று பலமாக விட்டாலும் கிழிந்து விடும் தரத்தில் தான் இருக்கும்....

வெங்காயம் - 150
தக்காளி - 40
பீன்ஸ்(கால்)- 20
கேரட் (கால்)- 15
காலிப்ளவர் - 30
கத்திரிக்காய்- 20
கருவேப்பில- 5
கொத்தமல்லி- 10
புதினா - 10
பச்சமிளகாய்- 8
இஞ்சி - 5
பூண்டு(கால்)- 80
வாழைப்பூ - 10


இதுதான் நான் இரண்டு வாரத்திற்கு முன்பு வாங்கிய, காய்கறிகளின் விலை.. கூட்டி பார்த்தால், கண்டிப்பாக 400 கிட்ட வரும்... இதில்லாமல் துவரம் பருப்பு... அது 150 என்னமோ கிலோ... இப்படி ஒரு தினம் சமையலுக்கே... நூறு ரூபாய்கு குறையாமல் ஆகிறது..

இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் காரணம் என் வீட்டில் நான் தான் சமையல், என் பெரியம்மாவிற்கு சமைக்க தெரியாது...

துவரம் பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி, கேஸ், தேங்காய், மளிகை சாமான் பொருட்கள்,...... அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால், பாலில் இருந்து பிஸ்கெட் வரை பார்த்து பார்த்து வாங்க வேண்டும்...

இப்படி சமையலுக்கு நாம் தினமும் நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறோம்..... நாம் என்ன கோழிகளா வெறும் ஒரு ரூபாய் அரிசியை கொத்திக் கொண்டு, உயிர் வாழ... இந்த நிலைமை.. சாதாரண நடுத்தர மற்றும் ஏழை வர்கத்திற்கு தான். மேல்தட்டு நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் யாரும் இந்த மார்கெட்டுக்கு வருவதில்லை... அவர்கள் செல்லும் இடம் வெறு, ரிலையன்ஸ் பிரஷ், பழமுதர்சோலை, நீல்கிரிஸ், இப்படி நிறைய....

பல சூப்பர் மார்கெட்டுகளில், காய்கறிகள், அழகாகவும், பாலிஷாகவும் வைத்து இருக்கிறார்கள்... முதலில் எல்லாம் அங்கே தான் சென்று வாங்குவேன்,... நான் சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்து அங்கு வாங்குவதில்லை...காரணம் நம் மாதத்திற்கு ஆகும் காய்கறிகள் வாங்கும் பணத்தை, அங்கு ஓரே முறையில் வாங்கி விடுகிறார்கள். அதில் வாடிக்கையாளர்களை இழுக்க, பல திட்டங்கள் வைத்து இருக்கிறார்கள்.. கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பாக்கெட் போட்டு வைத்து இருக்கிறார்கள்.. விலை 25 ரூபாய் தான். வாழைத்தண்டை வெட்டி வைத்து இருக்கிறார்கள்... 15 ரூபாய் தான்... பீன்ஸ், கேரட் இப்படி நிறைய காய்கறிகளை இப்படி வெட்டி வைத்து இருக்கிறார்கள்....

கேட்டால்.... ITS FOR WORKING WOMENS.... பாவம் வேலை பளுவை சமாளிக்க அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்... சரிதான்.... பாவம் வேலைக்கு செல்பவர்களை கணவன்மார்களே தொந்துரவு செய்யாதீர்கள்... இந்தாங்க தத்து பிள்ளைங்க.... எடைக்கும், நிறத்திற்கும் தகுந்த விலை.... எங்கள் கடையில் ஆயுள் மெம்டர் ஆனால், குழந்தையின் டெயப்பர் ஒரு மாதத்திற்கு இலவசம்..... என்ற அறிவிப்பும் சீக்கிரம் வர இருக்கும் என்று நினைக்கிறேன்...

உண்மையில் நகர வாழ்க்கை ஒருவிதமான வெறுப்பு அடிக்கிறது... ஏண்டா நாம் கிராமத்தில் பிறக்கவில்லையே என்ற உணர்வை தருகிறது... எப்போதும் சத்தம், எப்போதும் புகை, எப்போதும் பொய், எங்கு பார்த்தாலும் பணம், எங்கு பார்த்தாலும் நம்பிக்கை துரோகம்...... ச்ச என்னடா வாழ்க்கை..... கிராமத்திலும் இது இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் குறைந்த அளவில்.... அடிக்கடி எனக்கு ஒரு கனவு வரும்...

ஒரு மதியம் பொழுது....பசுமையான வயலுக்கு நடுவில் சின்ன வீடு, வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம்,.. கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், போல சில காய்கறிகள்... ரோஜை, மல்லிகை, கனகாம்பரம் போல சில பூச்செடிகள்....
வீட்டின் முற்றத்தில், அப்பா சாய்நாற்காளியில் அமர்ந்து பேப்பர் படிக்க... என் அம்மா, என் மகனையும், மகளையும் மடியில் படுக்க வைத்தபடி தாலாட்டு பாடா

"கண்ணே தூங்கிடு செல்ல ராஜாவே... கண்ணோ தூங்கிடு தூங்கிடம்மா.."

என்றுமே மதிய நேரத்தில் தூங்காத என் மனைவி, அசந்து எங்களுடைய படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருக்க...... நான் எதிரே உள்ள மரநாற்காலியில் அமர்ந்தபடி என் கன்னத்தில் கை வைத்த்படி அவளையே இமைக்காமல், அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டு இருப்பதைப் போன்ற கனவு அது.... பெரும்பாலும் இந்த கனவை கலைப்பது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் தண்டவாளங்களில் அதிகாலையில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலாக தான் இருக்கும்.......

நம் வாழ்க்கையை நம்மை விட சிறந்து முறையில் வேறு யாரால் வாழ முடியும்...... கடைசி நிமிடம் வரை.. எந்த பிரச்சனைகள் வந்தாலும், சந்தோஷமாகவும், துணிச்சலுடனும் எதிர்கொள்வோம்.... அது விலைவாசியாக இருந்தாலும் சரி, விண்கற்களாக இருந்தாலும் சரி....

நன்றி...

முரளிராஜா
16-02-2011, 01:48 PM
கடைசியா காய்கறி என்னதான் வாங்கனிங்க?
நண்பரே உங்கள் பதிவு அனைத்திலுமே ஒரு தனி நடை தெரிகிறது. அது மிகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.

ரங்கராஜன்
16-02-2011, 01:52 PM
கடைசியா காய்கறி என்னதான் வாங்கனிங்க?
நண்பரே உங்கள் பதிவு அனைத்திலுமே ஒரு தனி நடை தெரிகிறது. அது மிகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.

நன்றி முரளி..

மேலே பட்டியிலே போட்டு விலையுடன் சொல்லி இருக்கேனே.......

Nivas.T
16-02-2011, 03:22 PM
விலை துக்கம்
நிலை ஏக்கம்

உங்கள் கனவு பலிக்கும்

நல்ல ஒரு பதிவு தக்ஸ்

- இப்படிக்கு ஒரு பட்டிக்காட்டான்

கீதம்
16-02-2011, 07:15 PM
ரங்கராஜன், நல்லாவே கூவி விக்கிறீங்க!

உங்க பதிவைப் படித்தபின் ஒரு தடவை சென்னைக்கு வந்துபோனதுபோல் இருந்தது. ஒவ்வொருமுறை ரயிலில் அம்மா வீட்டுக்கு போய்வரும்போதும் நீங்கள் சொல்லும் அந்தச் சேற்றுத் தெருவழியாகதான் பேருந்து நிலையம் வருவது வழக்கம். நன்றாக உணர்ந்திருக்கிறேன், நீங்கள் சொன்ன அனுபவங்களை. ஊரிலிருந்து வரும்போது நல்லபுடவை கட்டிக்கொண்டு வந்தால்... எல்லாம் பாழாகிவிடும்.

அந்தக் காய்கறிக்கழிவு, காலை வாரும் செருப்பு எல்லாம் அப்பட்டமாய் கண்முன் விரிந்து பாடாய்ப்படுத்தினாலும், இனி எப்போது அங்கு போவோம் என்கிற ஏக்கத்தையும் உண்டாக்கிவிட்டது உங்கள் பதிவு.

பாரதி காணிநிலத்துடன் மாளிகையும் மனைவியும் வேண்டும் என்று பராசக்தியைக் கேட்டதுபோல் நீங்கள் காய்கறித்தோட்டத்துடன் வீடும் மனைவியும் மக்களும் வேண்டுமென்று கனவு காணுகிறீர்கள். யாவும் நலமாய் அமைய வாழ்த்துகிறேன்.

aathma
17-02-2011, 04:07 AM
ரங்கராஜனின் கைவண்ணம்

பசுமையான வயலுக்கு நடுவில் சின்ன வீடு, வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம்,.. கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், போல சில காய்கறிகள்... ரோஜை, மல்லிகை, கனகாம்பரம் போல சில பூச்செடிகள்....


படிக்கறத்துக்கு நல்லாத்தான் இருக்கு . ஆனா அதுக்கெல்லாம் நாம கொடுத்து வச்சு இருக்கணும் . அது இந்த ஜென்மத்தில இல்ல:medium-smiley-100:

பாப்போம் அடுத்த ஜென்மத்திலாவது கிராமத்தில பிறக்கறத்துக்கு கொடுப்பினை இருக்கான்னு :)

மதி
17-02-2011, 05:02 AM
காய்கறி வாங்கி நாளாச்சு..!! ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வாங்கினேன்.. அப்புறம் அப்பா வந்தார்.. இனி நான் தான் மறுபடி போய் வாங்கணும். :(

உன் கனவு நல்லா தான் இருக்கு... வழக்கமா எனக்கு நீ ஆறுதல் சொல்றதும்.. உனக்கு நான் ஆறுதல் சொல்றதும்னு.. அடுத்த ஜென்மத்திலேயாவது நடக்குமான்னு பாப்போம். :D:D

ஜானகி
17-02-2011, 09:15 AM
" சீதாப் பாட்டியும் அப்புசாமித் தாத்தாவும் " எழுதிய பாக்கியம் ராமசாமி போன்ற ஜன ரஞ்சகமான எழுத்துநடை கொண்ட உங்கள் சம்பவங்களின் தொகுப்பிற்கு இப்போதே பொருத்தமான தலைப்பைத் தேடிவைத்துக் கொள்ளவும்...

கனவில் கண்ட, கூட்டுக் குடும்ப - தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், தோட்டம், காய்கறிகள், பூக்கள்....கொண்ட, வாழ்க்கை அமைய, இறைவனை வேண்டுகிறேன்.

சூரியன்
17-02-2011, 10:09 AM
நான் ஒருதடவ அம்மா கூட போனதுக்கே தலை சுத்திருச்சு அப்பற அந்க பக்கமே போறாது கிடையாது..
இதுல எங்க அண்ணா உங்கள மாதிரி தனியா போய் வாங்குறது...

பிரேம்
17-02-2011, 10:43 AM
"நம் வாழ்க்கையை நம்மை விட சிறந்து முறையில் வேறு யாரால் வாழ முடியும்...... கடைசி நிமிடம் வரை.. எந்த பிரச்சனைகள் வந்தாலும், சந்தோஷமாகவும், துணிச்சலுடனும் எதிர்கொள்வோம்.... அது விலைவாசியாக இருந்தாலும் சரி, விண்கற்களாக இருந்தாலும் சரி...."

செம..டச் பக்கா சூப்பர்..:aktion033:

ரங்கராஜன்
19-02-2011, 05:02 PM
" சீதாப் பாட்டியும் அப்புசாமித் தாத்தாவும் " எழுதிய பாக்கியம் ராமசாமி போன்ற ஜன ரஞ்சகமான எழுத்துநடை கொண்ட உங்கள் சம்பவங்களின் தொகுப்பிற்கு இப்போதே பொருத்தமான தலைப்பைத் தேடிவைத்துக் கொள்ளவும்...

கனவில் கண்ட, கூட்டுக் குடும்ப - தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், தோட்டம், காய்கறிகள், பூக்கள்....கொண்ட, வாழ்க்கை அமைய, இறைவனை வேண்டுகிறேன்.


ஜானகி மேடம்

மிகப்பெரியவர்களிடம் இருந்து, மிகப்பெரிய பாராட்டை பெற்றது என்னுடைய பாக்கியமாகவே கருதுகிறேன்... என்றும் உங்களின் வாழ்த்துகளை வேண்டி..

தக்ஸ்

ஜானகி
20-02-2011, 01:18 AM
" மிகப் பெரியவர்கள் " என்றால்.....?

வருடங்கள் கணக்கில் .... நான் இன்னும் 58 வயது இளையவள்.....

அனுபவம் கணக்கிலோ.... கற்றது சிட்டிகை மண்ணளவு......

இருந்தாலும்... கிடைக்கும் பட்டத்தை விடவேண்டாம்....ஏற்றுக் கொண்டு, அதற்குத் தகுந்தபடி நடக்க முயலுகிறேன்... நன்றி

ரங்கராஜன்
20-02-2011, 03:55 AM
" மிகப் பெரியவர்கள் " என்றால்.....?

வருடங்கள் கணக்கில் .... நான் இன்னும் 58 வயது இளையவள்.....

அனுபவம் கணக்கிலோ.... கற்றது சிட்டிகை மண்ணளவு......


இந்த அடக்கத்திற்கு தான் எங்கள் ஊரில் பெரியவர்கள் என்று கூறுவார்கள்... மன்றத்தில் சின்ன பசங்கள் நாங்கள் எல்லாம், அனுபவித்ததை சொல்லிக் கொண்டு இருக்கும் போது, இவற்றை விட பல ஆயிரம் மடங்கு அனுபவித்த எத்தனையோ உங்களைப் போல பெரியவர்கள்.... அதை அனைத்தையும் கன்னத்தில் கை வைத்தப்படி அமைதியாக ரசித்துக் கொண்டு இருக்கிறீர்களே...... இதை எதைத் தான் அடக்கம் என்று கூறுகிறேன்...மேடம்.

தங்கவேல்
04-04-2011, 08:18 AM
இந்த விலைவாசிக்கு காரணம் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளும் அல்ல. மக்கள் தான். தகுதியானவரை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு இருக்கும் கவனக்குறைவின் விலையைத்தான் நாமெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இது போல விலைவாசி இருக்கும் சமயத்தில் குறைந்த விலைக் காய்கறிகளை மட்டும் அதிகம் வாங்கலாம். ரங்கராஜன் உங்கள் எழுத்து அழகாய் விரிகிறது. வாழ்த்துக்கள்.