PDA

View Full Version : மோசமான நாள்



ரங்கராஜன்
09-02-2011, 11:02 AM
மோசமான நாள்

வாழ்க்கையில் நாம் அனைவரும் எத்தனையோ நாட்களை கடந்த வந்த இருப்போம், சந்தோஷமான, துக்கமான, ஆரவாரமான, ஆத்மார்த்தமான, எரிச்சலான, கோபமான நாட்களை சந்தித்து இருப்போம்.... ஆனால் கண்டிப்பாக எல்லோருக்கும் மோசமான நாள் என்று ஒன்று இருக்கும்.....

மேலே குறிப்பிட நாட்களுக்கும் மோசமான நாட்களுக்கும் என்ன வித்தியாசம்....... துக்கமான, எரிச்சலான, கோபமான, என்று அனைத்து உணர்வுகளும் ஒரே நாட்களில் தொடர்ந்து நேர்ந்தால் அதான் பெயர் தான் மோசமான நாள்......

இவ்வாறான நாளை நீங்கள் கடந்து இருப்பீர்களா என்று தெரியவில்லை..... ஆனால் சமீபத்தில் நான் கடந்தேன்...

மோசமான நாள் : அதிகாலை 2 மணி...

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன், செல்லில்

"இசையின் பயனே இறைவன் தானே......

காற்றில் வரும் கீதமே என் கண்ணை அறிவாயா

அவன் வாய் குரலில் அழகாக ..... ஆஆஆஆ ஆஆஆ"

முதல் முறையாக இளையராஜாவின் காந்தக்குரல் எனக்கு எரிச்சலை தந்தது. செல்லின் மீது தலையணையை போட்டு அமுக்கினேன்... அப்படியும் இளையராஜா எங்கோ ரகசியமாக தொடர்ந்து பாடிக் கொண்டு இருந்தார். எரிச்சல் தாங்க முடியாத நான் இளையராஜாவின் மென்னியை பிடித்து நெருக்க செல்லை எடுத்தேன்.. டிஸ்பிளேயில் பார்த்தேன். எதோ அறியாத நம்பரில் இருந்து இளையராஜா பாடிக் கொண்டு இருந்தார்.

தூக்க கலக்கத்திலே செல்லை ஆன் செய்து காதில் வைத்து....

"ஹலோ" என்றேன் சத்தமாக, என் பக்கத்தில் எதாவது குழந்தை படுத்திருந்தால், கண்டிப்பாக அந்த சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து அழுதிருக்கும். நல்லவேளை அப்படி எதுவும் பக்கத்தில் இல்லை.

எதிர்முனையில் இருந்து

"மச்சி நான் யாரு கண்டுபிடி...."

எனக்கு போன் சம்பாஷைனையிலே பிடிக்காத ஒரே வாக்கியம் இது....... நான் யாருனு கண்டுபிடி.... யாராக இருந்தால் என்ன 24 மணி நேரமும் ஞாபகம் வைத்திருக்க முடியுமா என்ன... ரஜினிகாந்த், கமலஹாசன், சுஜாதா, அப்துல் கலாம், கருணாநதி, ஜெயலலிதா இப்படி யாராக இருந்தாலும், யாரிடமாவது இப்படி கேட்டால் கண்டிப்பாக நான்கு ஐந்து முயற்சிக்கு மேல் கடுப்பு தான் வரும்....

நம் மன்றத்தில் ஆதனின் விசாரிப்பே தனி தான்.

போனை எடுத்தவுடன் மிக மென்மையான குரலில்,

"எங்க டா இருக்க" என்பான். நான் தூக்க கலக்கத்தில்

"வீட்டில தூங்கிட்டு இருக்கேன் டா"

"ம்ம் அப்புறம் என்ன பண்ற" என்பான்...... இப்படி கேட்ட கடுப்பு வருமா வராதா.... ஆபிஸில் இருக்கும் போது போன் செய்து அதே வார்த்தைகளை கேட்பான்.

"எங்க டா இருக்க"

"ஆபிஸில் இருக்கேன் மச்சி"

"ஓ ம்ம், அப்புறம் என்ன செய்ற" மறுபடியும் அதே கேள்வி.... ஆங்கில எழுத்துகளில் எப்படி ஏ அப்புறம் கண்டிப்பாக பி தான் வரவேண்டும் என்ற விதி இருப்பதை
போல, அவனை பொறுத்தவரை எங்க இருக்க அப்புறம் இரண்டாவது கேள்வி இதாக தான் இருக்க வேண்டும். இரண்டாவது கேள்வி இதுதான் கேட்பான் என்று உணர்ந்து
நான் முதல் கேள்வியிலே இரண்டாவது கேள்விக்கான விடையை அளித்து விட்டாலும், அவன் இரண்டாவது கேள்வி கேட்டு அந்த பதிலை வாங்காமல் விடமாட்டான்.

அதே போல, அவன் நடிகர் விஜய் மாதிரி எதையாவது பேச வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அதுக்கு அப்புறம் அவன் பேச்சை அவனே கேட்க மாட்டான்.
அரை மணி நேரம் பேசிய பின்னர், "என்ன மச்சி ஆபிஸில் இருக்குறீயா, நான் வேணும்னா அப்புறம் பேசட்டுமா" என்பான்.

ஆனால் அதே போல நான் எதாவது அவசரத்திற்கோ, அல்லது எதாவது விஷயத்தை பற்றி அலசவோ, அல்லது மொக்கைப் போடவோ கூப்பிட்டால்... உயிரே போனாலும் எடுக்கமாட்டான்.
அப்படி எடுத்தாலும், மச்சி லைனா டிக்கெட் வருது டா, சாவடிக்கிறாங்கடா, (டிக்கெட் வந்தா சினிமாவுக்கு போகவேண்டியது தானே..... இது வேலை சம்பந்தமான டிக்கெட்டாம்...) என்பான்.

அல்லது போன் செய்து பல மணி நேரம் கழித்து, ஐ ஊட் கால் யூ லேட்டர் என்ற மெசேஜ் வரும், நான் அவனை அழைத்ததையே மறந்து விட்டு, ஏன் ஆதன் இப்படி மெசேஜ் அனுப்பி இருக்கான்னு
பல முறை குழம்பியதுண்டு...

அப்படி அந்த இரவு இப்படி ஒரு ஆண் குரல் கேட்டது. எனக்கா எரிச்சல், இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு..

"யாரு, மகேஷா, சுரேஷா, மாலதியா, சரோஜாவா"

"டேய் பேசறது ஆம்பளை, குரல வச்சி கண்டுபிடிக்க முடியலை"

"சில பொம்பளைங்களுக்கும் ஆம்பள குரல் இருக்கும் இல்லையா"

" **** நீ இன்னும் மாறவே இல்லடா"

"சரி நீ யாரு சொல்லு"

" **** அர்த்த ராத்திரி தூக்கத்துல கூட வாயி காது வரையும் கிழியுது இல்ல, கண்டுபிடிடா"

" என்ன அசிங்கமா பேச வைக்காதே, யாருன்னு சொல்லு"

"பேசி தான் பாரேன்"

" *********, *****, *****, ****** (******) வைடா போன"

"என்னடா இப்படி பேசிட்ட"

" ***** வைடா போன" என்று போனின் முகத்தில் குத்தி விட்டு, அதை தூக்கி பெட்டின் ஓரம் எறிந்து விட்டு, மறுபடியும் தூங்க போனேன்"

அதன்பின் தூக்கம் சரியா வரலை, யாரு போன் செஞ்சி இருப்பா, பாவம் அதிகாலையிலே என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக் கொண்டான், யாரு பெத்த பிள்ளையோ, முதலில் கோபத்தை குறைக்கணும்,..... குறைச்சி உலக அமைதிக்கான நோபல் பரிசா வாங்கப்போற, மூடிட்டு தூங்குடா, பின்ன அர்த்த ராத்தியில போன் செஞ்சி விளையாடினா கோபம் வராம, கொஞ்சவா முடியும்.... டேய் யாரோ ஃப்ரண்டு உரிமையோட விளையாடி இருக்கான் அதுக்கு போய்.... என்ன ***** விளையாட்டு வேண்டி இருக்கு அதுவும் ராத்திரியில், இதே மாதிரி செஞ்சிட்டு இரு, ஒருநாள் நீ பின்னாடி திரும்பி பார்க்கும் போது உனக்குனு யாருமே இருக்க போறதில்லை.... டேய் விடுடா இல்லைனா பரவாயில்லை, நாமே ஏன் பின்னாடி பார்க்கணும், வாழ்க்கையில் முன்னேறவன் முன்னாடி தான் பார்க்குனும் புரியுதா.... இப்ப தூங்கு......... . . . இருந்தாலும் இந்த ராத்திரியில யாரு போன் செஞ்சி இருப்பா...... என்னடா இப்படி பேசிட்ட...... யாரோ நம்ம நல்ல நண்பன் தான் போல......

என்று யோசித்தபடியே ஸ்கூல், கல்லூரி, வேலை செய்த இடம், செய்ற இடம், வேலையில்லாமல் சுத்தும் போதும் ஏற்பட்ட ஸ்நேகம் உள்ளிட்ட அனைத்து நண்பர்களையும்
வரிசைப் படுத்திக் கொண்டு இருந்தேன், எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை... காலை எனக்கு 6 மணி ஷிப்டு.. தூங்கி எழுந்து என்னுடைய செல்லில் மணியை பார்த்தேன்.

5.15 தான் ஆகி இருந்தது.... செல்லை வைத்து விட்டு மறுபடியும் கண்ணை மூடினேன். கண்ணை மூடிய சில நொடிகளிலே மறுபடியும் செல்லை எடுத்து பார்த்தேன். ஆஆஆஆஆஆஆ

கண்ணை துடைத்து விட்டு மறுபடியும் பார்த்தேன், மணி 8.15,... எண்ணையில் போட்ட கடுகைப் போல பெட்டில் இருந்து வெடித்து சிதறினேன். அவசரத்திற்கு என்னுடைய வேஷ்டி கிடைக்காமல், போர்த்திக் கொண்டிருந்த போர்வையை இடிப்பில் கட்டிக் கொண்டு பாத்ரூமிற்குள் புயலைப் போல நுழைந்தேன். பாத்ரூமிற்கு பல்விளக்கிக் கொண்டிருந்த என் பெரியம்மாவை இழுத்து பாத்ரூமிற்கு வெளியே போட்டு விட்டு... கதவை சாத்திக் கொண்டேன்... பல்லை விளக்கிக் கொண்டிருந்த பெரியம்மா, அதிர்ச்சியில் கொஞ்சம் பெஸ்ட்டை விழுங்கி இருக்ககூடும்.. வாயில் நுரையுடன்.

"டெல் டெல், எங்களா போழ போழ, நாழ் ஆபிழ்கு போழும் டா"

"ஆன்ட்டி டைம் ஆச்சு அப்புறம் திட்டிக் கொங்க"

"இரண்டு நிமிடத்தில் பல்துளக்கி, குளித்து விட்டு, சரியாக கூட துவட்டாமல், ஈரத்துடனே என்னுடைய உடைகளை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். என் இருசக்கர வாகனத்தை எடுத்தேன். பல நாட்கள் துடைக்காமல், சொறி நாய் மாதிரி இருந்தது என் ஆசை பைக். என்னை பார்க்கும் போது எல்லாம்,

"உனக்கு வாக்கப்பட்டு இப்படி சீரழிகிறேனே" என்று அழம் என் பைக்.

அந்த நேரத்தில் மட்டும் அதன் கண்ணீரை துடைப்பது போல பைக்கின் டூம், கண்ணாடி, ஹான்பார் உள்ளிட்டவைகளை துடைப்பேன். இப்போ அதுக்கு கூட நேரமில்லை.. பைக்கை ஸ்டார்ட் செய்த வேகத்திலே இரண்டாவது க்கீரைப் போட்டு தூக்கிக் கொண்டு பறந்தேன். நாம் அவசரமாக போகும் நேரம் தான், வயதானவர்கள், அல்லது கத்துக் குட்டிகள் நம் முன்னாடி வண்டி ஓட்டிக் கொண்டு போவார்கள். அவர்கள் பைக்கை ஓட்ட மாட்டார்கள், பைக் தான் அவர்களை கண்ட்ரோல் இல்லாமல் ஓட்டிக் கொண்டு செல்லும், இந்த அழகில் ஹெல்மேட் வேறு தலைக்கு, பகல்லையே பசுமாடு தெரியாத நிலையில், ஹெல்மேட் வேறு கருப்பு கண்ணாடிகளைக் கொண்டதாக இருக்கும்........

அப்படி ஒரு வயதில் சீனியரும், வண்டி ஓட்டுவதில் ஜூனியருமான ஒருவர் எனக்கு முன்னாடி டிவிஎஸ் 50ல் சென்றுக் கொண்டு இருந்தார். அதுவும் அவர் அணிந்திருந்த ஹெல்மேட், அவருடைய டிவிஎஸ் 50 பாதி எடையும், இவரைப் போல முக்கால் எடையும் கொண்டிருந்தது. நான் ஓவ்வொரு முறை ஹாரன் அடிக்கும் போது வழி விடுகிறாரோ இல்லையோ, அவரும், அவரின் வண்டியும் அதிர்ச்சியில் குலுங்கியது. சவ ஊர்வலம் போல அவர் முன் செல்ல, செத்தவரின் சொந்தம் போல நான் அவரின் பின்னே சென்றுக் கொண்டிருந்தேன்.

என் முன்னோர்கள் செய்த புண்ணியம் அவருக்கு செல்லில் கால் வந்தது என்று நடுரோட்டிலே அப்படியே வண்டியை நிறுத்தி விட்டு செல்லில் பேச ஆரம்பித்தார், நான் அப்படியே இருக்கும் இடத்தில் வளைந்து நெளிந்து அவரை கடந்து சென்று யூ டரன் அடித்து, சப்வேயில் இறங்கினேன். இறங்கும் போது தான் பார்த்தேன், அந்த பெரியவருக்கு பின்னாடி ஒரு கார் அவசரமாக ஹாரன் அடித்துக் கொண்டு வந்தது....... காரில் இருந்தவன் ஆபிஸுக்கு போன மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டு என்
பைக்கின் காதைப் பிடித்து அது ஓ என்று கத்தும் வரை திருகினேன்.

என் ஆபிஸின் பாதி தூரத்தை கடந்து விட்டேன், ஆங்கில வார்த்தை எக்ஸ்ப் போல இருந்த ஒரு கூட்டுரோட்டில், நான் சென்றுக் கொண்டிருந்த போது, என் விட வேகமாக வந்த ஒரு நடுத்தர வயது ஆள் என் வண்டியின் மீது மோதினான். மோதிய வேகத்தில் இருவரின் கன்னங்களும் உரசிக் கொண்டன, நல்ல வேளை உதடுகள் அருகில் தான் இருந்தது.... அப்படி எந்த பயங்கர சம்பவமும் நடைபெறவில்லை.

நான் ஹெல்மேட்டை கழட்டி,

"யோவ் என்னைய்யா வண்டி ஓட்ற, நான் பொறுமையா தானே வந்தேன்".. அவன் விபத்து நடந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாக..

"ஏங்க நான் வேகமா தான், வந்தேன் நீங்க தான் பொறுமையா வந்து என் வண்டியில இடிச்சிட்டீங்க"

"அத தான் நானும் சொல்றேன், நீ தான் வேகமா வந்த"

"ச்ச ச்சே ச்சே மாத்தி சொல்லிட்டேங்க, நான் தான் பொறுமையா வந்தேன், நீங்க தான் வேகமா வந்து இடிச்சிட்டீங்க" என்றான் அதே பதற்றத்துடன்.

"சரி விடு இரண்டு பேரு வண்டிக்கும் எதுவும் ஆகவில்லை, கிளம்பலாமா"

"அதெப்படிங்க, என் வண்டிக்கு எதாவது ஆயி இருக்கும் இருங்க பார்த்து சொல்றேன்" என்று வண்டியை ஒரமாக நிறுத்தி விட்டு, வண்டியை இறங்கி பார்த்தார். அதற்குள் அருகில் இருந்த ஒரு ஆளு,

"என்ன சார் ஆச்சு" என்று வந்தான், நான் உடனே

"ஏங்க அதான் எதுவுமே அவளயில்ல, அப்புறம் என்னத்த பாக்குற"

"இருங்க நான் பார்த்துட்டு சொல்றேன்" என்றான் கன்னத்தை உரசியவன்.

"சரி பொறுமையா பாத்துட்டு, தோ நிக்கிறான் பாரு இவன் கிட்ட சொல்லு எனக்கு மணி ஆச்சு" என்று வண்டியை ஓரே திருவாக திரு அங்கிருந்து கிளம்பினேன்.

ஆபிஸிற்கு இரண்டு பஸ் ஸ்டாப்புகள், முன்னாடி நீங்கள் எதிர்பார்த்த அந்த சம்பவம் நடைபெற்றது...... என் பைக்கின் கால் உடைந்தது..... அதாவது பஞ்சர்...

நாசமா போச்சு,........

வண்டியை ஓரமாக போட்டு விட்டு, என்ன செய்வது என்று யோசித்தேன், மணியை பார்த்தேன், 8.35 ஆகி இருந்தது, வண்டியை தள்ளிக் கொண்டு மறுபடியும் வீட்டிற்கும் போக முடியாது... ஆபிஸிற்கும் போக முடியாது.
அருகில் இருந்த டீக்கடையில் வண்டியை நிறுத்தலாம் என்றும் அவனிடம் கேட்டேன்.

"சார் வண்டி பஞ்சர் ஆயிடுச்சு"

"இங்க பஞ்சர் எல்லாம் ஒட்றது இல்லைங்க, பஞ்சர் கட மூணு தெரு தள்ளி தான் இருக்கு"

"தெரியும்ங்க, கொஞ்சம்.."

"ம்ம் சொல்லுங்க"

"வண்டியை இங்க விட்டுடு போறேன், மதியம் வந்து எடுத்துக்குறேன், பார்த்துக்கிறீங்களா"

"ஐய்யய்யோ நம்மளாள முடியாதுங்க, வேலை இருக்கு நிறைய"

"ப்ளீஸ்ங்க"

"சரி விட்டு போங்க, ஆனா தொலைஞ்சு போச்சுனா நாங்க பொறுப்பில்லை"

"என்னங்க, அதுக்கு தானே உங்க கிட்ட பார்த்துக்க சொல்றது"

"முடியாதுங்க".

என் பாக்கெட்டில் இருந்த ஐடி கார்டை காட்டி,

"சார் நான் இங்க வேலை செய்றேன், கொஞ்சம் உதவ முடியுமான்னு பாருங்க".. கார்டை பார்த்தவர்,

"அப்படியா, சரி சரி, விட்டுட்டு போங்க, நான் பார்த்துக்குறேன், முடிஞ்சா பையனை அனுப்பி பஞ்சர் ஒட்ட சொல்லட்டுமா"

"வேண்டாம் பாஸ், இதுவே பெரிய விஷயம் தாங்க்ஸ்"

ஆபிஸ் போகலாம் என்று ஆட்டோவை தேடினேன். ஆட்டோவே கண்ணுக்கு படவில்லை, நிறை மாத கர்ப்பணிப் போல மாநகர பேருந்து அசைந்து ஆடிக் கொண்டு என்னை நோக்கி வந்துக் கொண்டு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் என்பதைப் போல, இளைஞர்கள் பலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்தனர்.
சில பல கால்களை மிதித்து, பேருந்திற்குள் சென்றேன்.... எது ஆண்கள், எது பெண்கள் என்று தெரியாத படி நெருக்கமான கூட்டம்.. நான் பேருந்தில் அதாவது மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து சில பல காலங்கள் ஆகிறது... பைக் வாங்கியதில் இருந்து பேருந்து பயணங்கள் எட்டாத கனியாகி விட்டது. அதுவும் காலை 8.30 மணி கூட்டத்தில் எல்லாம் நான் பத்து வருடத்திற்கு முன்பு பயணம் செய்தது. கூட்ட நெரிசலில், பேருந்தில் இருந்த அனைவரின் உயிரும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டு இருந்தது.

மல்லிக்கை பூ வைத்திருந்த பெண், சவூதி அரேபியாவைப் போல எண்ணை வளமான தலையுடன் ஒரு விபூதி இளைஞன், குளிக்காமல் வந்த பெரியவர், பேருந்தையே தன்னுடைய சென்ட் வாசனையால் கட்டிப் போட்ட கல்லூரி மாணவி, அவ்வளவு நெருக்கத்திலும், இந்து பேப்பரை எட்டாக மடித்து, மூக்கின் பாதியில் கண்ணாடி மாட்டிக் கொண்டு படித்த நடுத்தர வயது ஆசாமி, இரவில் கணவனுடன் தூங்காமல் சேர்ந்துவிட்டு, காலையில் எழுந்து எல்லா வேலையும் செய்து விட்டு, பஸ்ஸில் அசந்து தூங்கியபடி அலுவலகத்திற்கு பயணம் செய்யும் தாலி கயிற்றில் மஞ்சள் கரையாத புதுப்பெண். இப்படி எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் பேருந்துகளில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். இதில் மிகவும் பாவப்பட்டவர், பேருந்தின் நடத்துனர் தான், அந்த கூட்டத்தில் அப்படியும்,
இப்படியும் கரும்பு ஜூஸ் மிஷினில் வரும் சக்கையைப் போல அள்ளாடிக் கொண்டு இருந்தார்.

"யோவ் உள்ள வா, உள்ள வா, படிக்கெட்டில் நிக்காதே, படிக்கெட்டில் நிக்காதே, பஸ்ஸுக்குள்ள வா" .... என்னமோ பஸ்ஸுக்குள்ள ஏசி ரூம் அளவிற்கு இடம் இருப்பதைப் போல, உள்ள வா உள்ள வானு கத்திக் கொண்டிருந்தார் நடத்துனர். அவர்களை உள்ளேக் கொண்டு வர நடத்துனரால் முடியாது, ஆனால் ஓட்டுநனரால் முடியும்... பஸ்ஸை கொஞ்சம் அப்படியே ஓரத்தில் இருக்கும் மரங்களில் உராசுவதைப் போல கொண்டு சென்றால் போது, மடமடவென படிக்கெட்டில் இருப்பவர்கள் எல்லாம், பேருந்திற்குள் வந்து விடுவார்கள். அதே போல பேருந்தில் இடம் வேண்டும் என்றால், எப்படி சக்கரையை டப்பாவில் சக்கரையை கொட்டி விட்டு, டப்பாவை கீழே தட்டியவுடன் இடம் வருமோ, அப்படி வேகமாக செல்லும் ஓட்டுநர் ஒரு ப்ரேக் அடித்தால் போதும், அனைத்துக் கூட்டமும் சரியாகி விடும். அப்படி ஒரு ப்ரேக் தான் அந்த பேருந்தில் அடிக்கப்பட்டது.

அடித்த வேகத்தில் அந்த எண்ணை வளமிக்க மண்டை என்னுடைய முகத்தில் கோலம் போட்டான், அவன் வாயில் முன்னே நின்ற பெண்ணின் மல்லிகைப் பூ... அந்த மல்லிகைப் பூ பெண் தன் கையை வைத்து நடுத்தர வயதின் இந்து பேப்பரை கிழித்து விட்டாள்.

என்னுடைய ஸ்டாப் வந்தது, முகத்தை துடைத்துக் கொண்டு ஆபிஸுக்குள் சென்றேன்... எல்லாரும் என்னை கொலை வெறியுடன் பார்த்தனர்.... என் துறை தலைவர் அழைத்து இரண்டு நாள் சம்பளம் கட் என்ற சந்தோஷமான செய்தியை அறிவித்தார். அதன்பின் தொடர்ந்து பத்து மணி நேரம் சாப்பிடாமல் கூட வேலை, டீயை மட்டும் குடித்துக் கொண்டிருந்தேன். இரவு என் நண்பன் ஒருவனின் திருமண வரவேற்பு விழா... 8.30 மணிக்கு ஆபிஸில் இருந்து நேராக சென்றேன்....

மாப்பிள்ளை பொண்ணை பார்த்து விட்டு, மொய் கொடுத்து விட்டு, போட்டோவிற்கு சிரித்து விட்டு, அமர்ந்தேன்.

சினிமா பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதோ ஒரு பாடல் பாடிக்கொண்டு இருந்தார்கள், சேரில் வந்து அமர்ந்த பின் தான் அந்த பாடலைக் கேட்டு அதிர்ந்தப் போனேன்.

புதிதாக வந்த ஈசன் என்ற படத்தில் வரும் பாடல் அது, மேடையில் மாப்பிள்ளையையும், பொண்ணையும் வைத்துக் கொண்டு.. பாடல் பாடப்பட்டது....

"அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானைய்யா மாப்புள
சீக்காலிக்கு மறுபுள்ள"

வளையப் போல என்னைய கட்டிப் போனனய்யா மாப்புள
துப்பில்லாத ஆம்புள அவன் துப்பில்லாத ஆம்புள"

மறுபடியும் அதே வரிகள்...

"அஞ்சா நாளில் மூட்டு வலியில் மாப்பிள்ளை தான் படுத்துட்டான்
ஏ உசுர வாங்கிட்டான்"

"ஒண்ணு போன ஒண்ணு வந்து வந்து வருஷமெல்லாம் சேர்ந்துட்டான்
என் கனவை எல்லாம் உடச்சிட்டான்"

என்று ஸ்ருதியுடன் பெண் குரலில் ஆண் ஒருவர் பாடிக் கொண்டு இருந்தார், கச்சேரி மேடைக்கு கீழ் வாலிபர்கள் சிலர் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர்.

இதைக் கேட்ட எனக்கு பயங்கர அதிர்ச்சி, அடக்கருமமே, கல்யாணத்துல பாட வேண்டிய பாட்டாட இது,,, அதுவும் மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு..

விட்டா அவனுங்க மாப்பிள்ளை அன்பிட்னு மெடிக்கல் சர்டிஃபிக்கெட்டே கொடுத்து விடுவாங்கப் போல இருக்கே.... என்று நினைத்தபடி சாப்பிட போன என்னை என்னுடைய வேறு ஒரு நண்பன் தடுத்தான்.

"என்ன மச்சி சாப்பிட போற"

"ஏன்டா, சொத்து விஷம் வச்சிட்டாங்களா என்ன?"

"குசும்பு டா உனக்கு"

"மெட்டருக்கு வாடா பசிக்குது"

"சரக்கு ரெடியா இருக்கு மச்சி, நீ வந்த ஓபன் பண்ணிடலாம்"

"என்னடா நகைக்கடையா நான் வந்து ஓபன் செய்றதுக்கு"

"வா மச்சி" சாப்பாட்டு அறையில் இருந்து வலுக்கட்டாயமாக என்னை அழைத்துக் கொண்டு சென்றான்.

"எந்த பார்டா, எனக்கு தண்ணி அடிக்கிற மூடே இல்லடா"

"வா மச்சி அசந்துடுவ" பைக்கில் சில வளைவுகள், சில நெளிவுகளை கடந்து ஒரு இருட்டு ஏரியா.

"இங்க எதுக்குடா நிறுத்துற, சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வா, பார் மூடிடுவாங்க"

"வா மச்சி, நம் பசங்க எல்லாம் இங்க தான் இருக்காங்க"

"எதுக்கு"

"இங்க தான் பார்ட்டி"

"ரோட்லையா"

"ஆமா, ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும்டா, வா"

"டேய் அப்புறம் நான் எதாவது அசிங்கமா பேசிடுவேன், இப்ப என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த, இங்கெல்லாம் நான் குடிக்க மாட்டேன், என் வண்டி மண்டபத்தில் இருக்கு, என்னை கொண்டு போய் விடு, நான் வீட்டுக்கு போறேன், நாளைக்கு வேலை இருக்குடா"

"இரு மச்சி, ஒரு சின்ன ஸ்மால் அடிச்சிட்டு வரேன்" என்று 2 மணிநேரம் சில பல ஸ்மால்களை அடித்து விட்டு வந்தான் அவன்... உலகத்திலே கொடுமையான விஷயம் குடிகாரர்களோடு குடிக்காமல் அமர்ந்து இருப்பது தான் என்பதை அப்போது தான் தெரிந்துக் கொண்டேன். எதோ முட்டு சந்தில் அமர்ந்துக் கொண்டு, உலக அரசியல், பாக் இந்தியா உறவு முறை, ஹாக்கிங் மன்னன் அசாங்கே, பாமக திமுக தொகுதி பங்கீடு குறித்தெல்லாமல் பேசிக் கொண்டு இருந்தார்கள்.... கோபத்தின் உச்சிக்கு சென்ற நான், என்னை அழைத்து வந்த நண்பனை கழுத்தின் மீது ஒண்ணு விட்டு, வண்டியில் அமர சொன்னேன். மற்ற நண்பர்களும், வண்டியில் மீது அமர்ந்துக் கொண்டு வாழையடி வாழையாக அப்படியே கீழே சாய்ந்தனர். அவர்களை சரி செய்து அமர வைத்து, என் நண்பனை கூட்டிக் கொண்டு மண்டபத்திற்கு வந்தால் சாப்பாடு இல்லை... 11மணிக்கு எப்படி சாப்பாடு இருக்கும்.

கடுப்பில் வீட்டிற்கு வந்தேன், வீட்டிலும் சாப்பாடு இல்லை.....

சூப்பர்... தூக்கம் கண்ணைக் கட்டியது.... சில பல யோசனைகளுக்கு பிறகு ஒரு போன் வந்தது.

"மச்சி நான் சலாவுதீன் பேசறேன், எப்படி இருக்க என்னை ஞாபகம் இருக்கா, நேத்து என்னடா அப்படி திட்டிட்ட என்ன"

"டேய் மச்சி (என் ஸ்கூல் நண்பன்) நீ தானாடா அது சாரிடா, யாரோ விளையாடுறாங்கனு கடுப்பாயிட்டேன், எப்படி டா இருக்க"

"டேய் எனக்கு கல்யாணம் டா, அத சொல்ல தான் கூப்பிட்டேன், நல்ல மரியாதை கொடுத்தடா ஹா ஹா"

"சாரி மச்சி விடு அத, அப்புறம்.." (வழக்கமான விசாரிப்புகளுக்கு அப்புறம் செல்லை கட் செய்து விட்டு தூங்கினேன்"

கண் இழுத்துக் கொண்டு போகும் போது மறுபடியும் போன், எரிச்சலுடன் எடுத்து பார்த்தேன்... எதோ தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தது.... மவனே யாராவது என்னை கண்டுபிடினு மட்டும் சொல்லட்டும்....
செத்து போன அவன் பரம்பரையையே தொண்டி திட்ட வேண்டியது தான் என்று முடிவு போனை எடுத்து காதில் வைத்தேன், ஆனால் ஹலோ சொல்லவில்லை...

"ஹலோ, தக்ஷ்ணாமூர்த்தி சாருங்களா.."

(தப்பிச்சான்) "ஆமாங்க நீங்க"

"சார் என் பெயர் ஹரி, நான் ராயபுரத்தில் இருந்து பேசறேன்"

"சொல்லுங்க சார்"

"உங்க .... ஆபிஸ் ஐடி ரோட்டுல கிடைச்சிது, அதான் சொல்லலாம்னு கூப்பிட்டேன்"

படுக்கையை விட்டு துள்ளி எழுந்த நான், என் ஷெல்பில் ஐடியை தேடினேன் காணவில்லை..... மாலை கல்யாணத்திற்காக ராயபுரம் சென்றேன்... அங்கு எங்கோ மிஸ் ஆகிவிட்டது..

"ஐய்யய்யோ ஆமா சார் காணும், எப்படி என் நம்பரை கண்டுபிடிச்சீங்க"

"ஐடியில இருக்கு சார், நான் நாளைக்கு ஊருக்கு போறேன், ஐடி வேணும்னா இப்ப வந்து வாங்கிக்கொங்க"

"எங்க சார் இருக்கீங்க"

"ராயபுரம்......"

"சரிங்க.......".......... நான் இருப்பது தென் சென்னையில், ராயபுரம் இருப்பது வடசென்னையில்........ நான் ஐடியை வாங்கிவிட்டு மறுபடியும் வந்து படுக்கும் போது மணி அதிகாலை இரண்டு......

சொல்லுங்க உறவுகளே இது மோசமான நாள் தானே.....

அக்னி
09-02-2011, 12:28 PM
இதுக்குப் பின்னூட்டம் போடணும் என்றால், அதுக்கு நேரம் வேணும்...

சில, பல மேற்கோள்கள் இட்டுத்தான் பின்னூட்டம் இடவேண்டும்...

ஆனா ஒண்ணு..,
உங்க வலியை நம்மோட வயித்துக்கு இடம்மாற்றி விட்டுட்டீங்க...

சூரியன்
09-02-2011, 02:23 PM
அண்ணே ரொம்போ ஜாலியா இருந்திருப்பீங்க போல.:cool:
சும்மா :lachen001::lachen001:

மதி
09-02-2011, 05:11 PM
அடச்சே அன்னிக்குன்னு பாத்து நான் கூப்பிடாம போயிட்டேனே..!
அதாகப்பட்டது... நீ சொன்ன மாதிரி எல்லோருக்கும் மோசமான நாள் இருக்கும். ஆனா உண்மையிலேயே இது மகா மோசமான நாள் தான்.. அது வரை சுவாரஸ்யமா படிச்சிட்டு இருந்த நான் கடைசியா சலாவுதீன் சொன்ன மேட்டர பாத்துட்டு அந்த வலிய புரிஞ்சுக்க முடிஞ்சுது..!!

இப்போலாம் பேச்சுலர்ஸ் போன் பண்ணினாலே எடுக்க பயமாருக்கு.. ஹூம். இப்படியும் சில மோசமான நாட்கள்..!!

அக்னி
09-02-2011, 05:18 PM
இப்போலாம் பேச்சுலர்ஸ் போன் பண்ணினாலே எடுக்க பயமாருக்கு..

:sprachlos020: :eek: :sprachlos020:
பேச்சிலராகிட்டேன் நானும்...

எப்பிடிப் பார்த்தாலும் உங்களுக்கு ஒரு அழைப்புக் குறைவாகத்தான் வரும்...
:D

கீதம்
10-02-2011, 12:50 AM
ரங்கராஜன், உண்மையிலேயே அன்று உங்க நிலைமை பரிதாபத்துக்குரியதுதான். அதெப்படி உங்க சோகத்தையும் இத்தனை சுவையா சொல்லமுடியுது? உங்க எழுத்துத்திறமைக்குப் பாராட்டுகள்.

உங்க நிலைமையில் நானிருந்திருந்தா.....?
அப்படின்னு யோசிச்சுப் பாத்தேன்.
ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். காரணம்?

1. நடுராத்திரியில் போன் வந்தாலே யாருக்கோ என்னவோன்னு எனக்கு உதறல் எடுக்கும். அப்படி நடுராத்திரியில் வந்த போனில் பயப்படும்படி எந்தத் தகவலும் வரவில்லை.

2.காலையில் எழுந்துபார்க்கும்போது மணி 8.15. இதுவே 10.15 என்று காட்டியிருந்தால்...? நல்லவேளை தப்பினேன்.

3.பெரியம்மா பாத்ரூம் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தது அவரை இழுத்து வெளியில் விட எத்தனை வசதியாயிற்று! கதவை மூடிக்கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தாலோ.. குளித்துக்கொண்டிருந்தாலோ... எத்தனைக் கஷ்டம்? அந்த மட்டில் மகிழ்ச்சி.

4. அலுவலகம் போகும் நேரத்தில் பெரும்விபத்து ஏற்பட்டு அடிபட்டிருந்தாலோ.... வண்டி சரிசெய்யமுடியாதபடி சேதமாகியிருந்தாலோ... மோதியவருக்கு பலத்த அடிபட்டிருந்தாலோ... அல்லது அவர் விடாக்கண்டனாயிருந்திருந்தாலோ... எத்தனை எத்தனை கஷ்டம்? அப்படி எதுவும் நேரவில்லையே என்று மகிழ்ச்சி.

5. பஸ்ஸில் அத்தனைக் கூட்டத்திலும் தொத்திக்கொள்ளவாவது இடம் கிடைத்ததே என்று நிம்மதிப் பெருமூச்சு.

6.இரவு அப்பாடாவென்று படுத்து...கண் இழுத்துச் சொருகும்போது தெரியாத நம்பரிலிருந்து வந்த போன்காலுக்குப் பதில் சொல்லும்போது நாவில் சனி குடியிருக்காதது ஒரு பெரிய விஷயம் அல்லவா? இல்லையென்றால் ஐடி கார்டு எப்படிக் கிடைத்திருக்கும்?

7.ஐடி கார்டு ஒருவர் கண்ணில் பட்டது... ஊருக்குப் போய்வந்து சொல்லலாம் என்று அலட்சியமாக இருக்காமல் அப்பொழுதே அவர் அதைத் தெரிவித்தது.... உடனே போய் வாங்கமுடிந்தது...

இப்படி பலதையும் எண்ணி சந்தோஷப்பட்டிருப்பேன். நீங்க என்னடான்னா....

ஆனா.... தூக்கமின்மையும், பசியும் ஒண்ணுசேர்ந்தா எப்படிப்பட்ட மனிதரையும் நிலைகுலையவச்சிடும். இதோடு மன உளைச்சலும் சேர்ந்தா... சொல்லவே வேண்டாம். இப்படிப்பட்ட சூழலையும் நகைச்சுவையாப் பதிவிட உங்களால்தான் முடியும். பேருந்தின் மக்களையும் நடத்துனரையும் பற்றிய வர்ணனை பிரமாதம். அந்த அவசர கதியிலயும் பல்வேறுபட்ட கதாபாத்திரங்களைக் கவனிச்ச உங்க திறமையை என்னன்னு சொல்றது?

இனி இதுபோன்ற அல்லது இதைவிட மோசமான நாட்கள் அமையாதிருக்கட்டும்.

உமாமீனா
10-02-2011, 06:11 AM
சோகத்தையும் இவ்வளவு நயமாக எளிமையாக, சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
10-02-2011, 06:42 AM
நன்றி அக்னி...

நீங்கள் சொல்லவந்தது எனக்கு புரியவில்லை.........

நன்றி சூரியன் தம்பி...

மவனே நீ மாட்டு அப்புறம் உனக்கு தெரியும் இந்த கஷ்டம்...

நன்றி கீதம் அக்கா...

எதையுமே பாஸிட்டிவ்வாகவும், நன்மையாகவும் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் எனக்கு பல பாடங்களை கற்பிக்கிறது...

நன்றி உமாமீனா

உங்களின் வாழ்த்துக்கு நன்றி....

டேய் மச்சி மதி...

மவனே நீ மட்டும் போன் செய்யேன்.... அப்புறம் சலாவுதீன் பட்ட அவஸ்தையை நீ படுவ......... ஹா ஹா ஹா உன்னை தெரிந்தே திட்டுவேன்........

மதி
10-02-2011, 07:36 AM
இப்ப மட்டும் திட்டாம இருக்கற மாதிரி!!

ஜானகி
10-02-2011, 09:11 AM
மோசமான நாள் என்பதைவிட, திட்டமிடப்படாத நாள் என்பதே பொருத்தமாகும். ஒரு படம் பார்ப்பது போலிருந்தது உங்கள் சரளமான நடை.
நகைச்சுவையாக இருக்கும் உங்கள் கற்பனை, நிஜ வாழ்வில் பலிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அமரன்
10-02-2011, 07:47 PM
உள்ளதை உள்ளபடி சொல்ல எல்லாராலும் முடியாது. உன்னால முடியுது.

அவசரத்திலும் நிதானமாக அனைத்தையும் அவதானிக்கும் எழுத்தாளன் உன்னோடு இருக்கும் வரை உன்னால் இதுக்கு மேலயும் முடியும்.

ராத்திரி நேரத்தில செல்லை சைலைன்ட் மோடில வைச்சிருக்காத உன்னை கூப்பிட்டு கடுப்பாக்கினால் தப்பில்லே.

கீதம் அக்காவின் பாசிசட்டிவ் பார்வை பிடிச்சிருக்கு.

ஜனகன்
10-02-2011, 09:55 PM
ரொம்ப கனமான கதையை மிகவும் ஈசியா,
உங்களுகே உரிய இனிய நகைச்சுவை பாணியில் சொல்லி அசத்திட்டீங்க.
அருமையா எழுதியிருக்கீங்க.
பஸ்ஸில் அத்தனைக் கூட்டத்திலும் ஒவ்வொருத்தர் பற்றியும் விமர்சனம் செய்தது.
ரசிக்கும்படி இருந்தது.

கதை அருமை வாழ்த்துக்கள்.

ரங்கராஜன்
11-02-2011, 02:57 AM
வாழ்த்திய, அமரன், ஜானகி, ஜனகன் ஆகிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்......

நான் எம்எல்ஏ ஆனவுடன் உங்களுக்கு கண்டிப்பா கலைமாமணி விருதுகளுக்கு ஏற்பாடு செய்றேன்.....:lachen001::lachen001::lachen001::lachen001:

மதி
11-02-2011, 03:49 AM
ராத்திரி நேரத்தில செல்லை சைலைன்ட் மோடில வைச்சிருக்காத உன்னை கூப்பிட்டு கடுப்பாக்கினால் தப்பில்லே.
.
அலாரமும் சைலண்ட்டா அடிச்சிச்சுனா என்னாகும்ங்கற பயம் தான்..!

ரங்கராஜன்
11-02-2011, 03:57 AM
அலாரமும் சைலண்ட்டா அடிச்சிச்சுனா என்னாகும்ங்கற பயம் தான்..!

மச்சி கக்கக்கபோ....... கருத்துகளை கச்சிதமாக கவ்விக் கொள்கிறாய்..... இந்தியாவில் நம்ம படும் கஷ்டம் பிரான்ஸில் இருக்கும் பசங்களுக்கு என்ன தெரியபோவுது.....ஹீ ஹீ ஹீ

மதி
11-02-2011, 04:14 AM
மச்சி கக்கக்கபோ....... கருத்துகளை கச்சிதமாக கவ்விக் கொள்கிறாய்..... இந்தியாவில் நம்ம படும் கஷ்டம் பிரான்ஸில் இருக்கும் பசங்களுக்கு என்ன தெரியபோவுது.....ஹீ ஹீ ஹீ
அதனால தான் நான் அலாரமே வைக்கறதில்லே.

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 06:55 AM
ஒரு தினம் நிகழ்ந்த நிகழ்வின் வலிகளை கூறிய விதம் ,நடை மிகவும் அருமை ...இது போன்று இனி நிகழாதிருக்க என் வாழ்த்துகள் ...

அக்னி
11-02-2011, 09:35 AM
நன்றி அக்னி...

நீங்கள் சொல்லவந்தது எனக்கு புரியவில்லை.........

உங்க மோசமான நாளில் எனக்கு வலி தந்த விடயங்களை மேற்கோளிட்டுப் பின்னூட்டம் போட வேண்டும் என்பதுதான் நான் சொல்லவந்தது.

போட்டுடுவேன் என்றுதான் நம்புறேன்...

வலி > வயிற்றில் > சிரிச்சு சிரிச்சு...


அலாரமும் சைலண்ட்டா அடிச்சிச்சுனா என்னாகும்ங்கற பயம் தான்..!
:eek: :eek: :eek:


மச்சி கக்கக்கபோ....... கருத்துகளை கச்சிதமாக கவ்விக் கொள்கிறாய்..... இந்தியாவில் நம்ம படும் கஷ்டம் பிரான்ஸில் இருக்கும் பசங்களுக்கு என்ன தெரியபோவுது.....ஹீ ஹீ ஹீ
:sprachlos020: :sprachlos020: :sprachlos020:


அதனால தான் நான் அலாரமே வைக்கறதில்லே.
:innocent0002: :shutup: :innocent0002:

மதி
11-02-2011, 09:37 AM
கரெக்ட்டா எல்லாத்தையும் மேற்கோள் காட்டிட்டீங்க.!