PDA

View Full Version : தமிழை உண்டவன் - அத்தியாயம் ஓன்று & இரண்டு.



dellas
08-02-2011, 08:11 AM
தமிழை உண்டவன் - அத்தியாயம் ஓன்று & இரண்டு.

முன்னுரை

“ வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவும் கொங்கு”

நீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.
கி.மு. 278 முதல் 232 வரையிலான நாட்களில் இந்தியாவின் தென்மண்டல சக்கரவர்த்தியாக திகழ்ந்த அசோகரின் சம காலத்தில், தருமபுரியை தனது தலைமை இடமாகக் கொண்டு அதியமான் என்னும் மன்னன் கொங்கு தேசத்தையும் தன் குடையின் கீழ் ஆண்டு வந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அவன் வழித் தோன்றலான, இளங்கக்கோசன் சேரன் செங்குட்டுவனின் உற்ற நண்பனாக விளங்கினான். இவரகளின் நட்பைக் கண்டு ராஜேந்திர சோழன் தன் வரலாற்றில் இவர்களை மேற்கோள் காட்டுவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு. மூன்று முறை தோல்வியை தழுவிய சோழர்கள். நான்காவது முறை மிகப்பெரிய தாக்குதலை சேர நாட்டின்மீது நடத்தும் போது, தோழ் சேர்ந்து நண்பனுக்காக கொங்கு அரசன் இளங்கக்கோசன் போரிட்டதாக உள்ள வரலாற்றில் , ஒற்றர்களாகப் பெண்களும் செயல்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இனி இந்த காலத்தில் நாமும் பிரயாணம் செய்வோம்.

அத்தியாயம் ஓன்று - விசாரணை

இது "பிற பெண்களை தொடுபவர்கள் கைகள் " என்ற தலைப்பில் ஏற்கனவே வந்துள்ளது. அன்புகூர்ந்து அதற்குப்பின் இந்த அத்தியாயத்தை படிக்கவும்.

அத்தியாயம் இரண்டு - எங்கே நாட்டியக்காரி ?

மூன்றாம் சாமம். பிணியாளர்களும் உறக்கம் கொள்ளும் நேரம். கோட்டான்களும் பயங்கொள்ளும் அமாவாசை இருட்டு.அதோ அந்த பாழடைந்த கோவிலில் மட்டும் ஏதோ ஒரு வெளிச்சம் தெரிகிறதே. நரிகள் ஊளையிடும் இந்த பயங்கரமான நடுக்காட்டில் யார் வரக்கூடும்.? உற்றுப் பார்த்தால் அது ஒரு தீவட்டி போல் தெரிகிறது. அந்த தீவட்டி வெளிச்சம் இடை இடையே மறைந்து பின் தெரிகிறது. யாரோ நடமாடுகிறார்கள். யாராக இருக்ககக் கூடும். இந்நேரத்தில் இங்கே வருபவர்கள் கண்டிப்பாக இரும்பு நெஞ்சம் உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். நடுங்க வைக்கும் குளிரில் யாராவது குளிர்காய தீமூட்டுகிறார்களா? இங்கே வந்து குளிர்காய வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன? சற்றே அருகில் சென்று பார்க்கலாம்.

நம்மால் எளிதில் நெருங்கமுடியாதபடி கரடு முரடான இடம். உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகள் நடக்கும் போது சப்தம் உண்டாக்கலாம். அதனால் உள்ளே இருப்பவர்கள் கலவரமடைய ஏதுவாகலாம். எனவே கவனமாகப் பின்தொடருங்கள். நாம் அந்த கோவிலை நெருங்கிவிட்டோம். ஏதோ சப்தம் கேட்கிறதே. சற்று பொறுக்கலாம். சருகுகள் மிதிபடும் ஓசை. உன்னிப்பகாக் கவனித்தால் அது இரண்டிற்கும் மேற்பட்ட கால்கள் நடக்கும் ஓசை என்பது புரியும். காட்டு மிருகம் எதாவது வருகிறதா? இல்லை இரண்டு உருவங்கள் , கண்களை கூர்மயாக்கிப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது.அது முக்காடிட்ட மனிதர்கள் தான். மிகவும் பழக்கப்பட்ட பாதைபோன்று அவர்கள் நடை வேகமாக இருக்கிறது. அவர்கள் பின்னால் போவதுதான் நமக்கும் உகந்தது.

சிதிலமடைந்த கோவிலானாலும், மேற்கூரை முழுவதும் உடையவில்லை. நுழைவாயில் போன்றதொரு இடத்தை அடைந்தவுடன் இருவரும் சுற்றிலும் ஒரு பார்வை வீசியபடி கதவை தள்ளுகிறார்கள். பல காலமாக மனிதர்கள் சஞ்சாரமே இல்லாத இடத்தில உள்ள கதவு ஒருவிதமான ஓசையுடன் மெல்லத் திறக்கிறது. உள்ளே நுழைகிறார்கள். தீவட்டி வெளிச்சம் இப்போது நன்றாகத் தெரிகிறது. நம் பார்வை நமக்கு அச்சத்தை உண்டாகுகிறது. காளியின் ஆளுயரச்சிலை .உக்கிரமான அதன் தோற்றமும், இருட்டில் தெரியும் அதன் கரிய உருவமும் குலைநடுங்க வைக்கிறது. அதன் வலப்புறத்தில் சுவரிலுள்ள ஒரு பொந்தில் தீவட்டி சொருகப்பட்டுள்ளது. வந்தவர்கள் காளி சிலையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள். அங்கே ஒரு உருவம் திரும்பி அமர்ந்திருக்கிறது. அப்படியானால் தீவட்டி ஏற்றி இவர்களுக்காக காத்திருப்பது இந்த உருவம்தனோ?. இவர்கள் காலடியோசைக் கேட்டவுடன் அது திரும்புகிறது. உடனே அருகே சென்றவர்களில் ஒரு உருவம்,

" ஆ " என்றவாறே அதிர்ச்சியில் பின்வாங்குகிறது. இது பெண்குரல். வந்தவர்களில் ஒரு உருவம் பெண், புதியவள் எனத் தெரிகிறது.
பின்வாங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது அந்த உருவத்திடம்.

தீவட்டி ஒளியில் நாமும் காணலாம். அமர்ந்திருந்தவன் இப்போது எழுந்து காளி சிலையின் முன்னால் வருகிறான். அவன் முகம் இப்போது முழுமையாகத் தெரிகிறது.

'ஐயோ ' என மனம் பயம்கொள்கிறது. என்ன ஒரு விகாரமான முகம். தீப்பந்தங்களைப்போல் சிவப்பேறிய கண்கள். தலைநிறைய அழுக்கான சுருண்ட தலைமுடி. வலது கன்னங்களில் தீக்காயம் பட்டதுபோல் பெரியவடு. தடித்த உதடுகள் .பல மாதங்களாக சவரம் செய்யப்படாத முகம். நெடிய, கரிய உருவம் என ஒரு ராட்சதனைபோல் இருந்தான்.

" இவள்தான் மாதங்கியா?" என கரகரத்த குரலில் கேட்டான்.

"இல்லை இவள் அமுதவல்லி" என உடனிருந்தவன் பதிலுரைத்தான்.

"இப்படி பயப்படுகிறாளே இவளை எப்படி தெரிந்தாய்?" என வினவினான்.

" நான் பயந்தவள் அல்ல. இருட்டில் உங்கள் முகம் அதிர்ச்சியை உண்டாக்கியது அவ்வளவே" என முன்னுரைத்தாள்.

"நல்லது பெண்ணே. நாம் முடிந்து கொண்டிருக்கின்ற வேலைக்குப் பயம்கொள்ளலாகாது. அப்படியானால் நாட்டியக்காரி மாதங்கி எங்கே?"

" அவள் சேரன் அரண்மனையிலிருந்து புறப்பட்டு இந்நேரம் அவளும் அவள் பல்லக்குத் தூக்கியாக சோமநாதனும் வந்து சேர்ந்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்." என்றான் வந்தவன்.

" அவர்கள் வரும்போது வரட்டும். நீங்கள் கொங்கு தேசத்திலிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்.?"

" கொங்கு நாட்டு இளவல் எங்கோ தனியாக தூரதேச பிரயாணம் சென்றிருக்கிறார். மாறுவேடத்தில் பிரயாணம் செய்வதாகக் கேள்வி. கடந்த வருடமும் போதிய மழை இல்லாததால் தண்ணீர் பகுமானத்தில் விவசாயிகள் மத்தியில் அவ்வப்போது பூசல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. நெசவாளர்களுக்கு போதிய கச்சாப் பொருட்களை விளைவிப்பதில் இந்த முறையும் அரசு பின்தங்கியே இருக்கிறது. தூர தேசங்களிலிருந்து இறக்குமதி செய்ய, கஜானாவில் போதிய பொருள் இல்லாததால் வரியை உயர்த்துவது பற்றி ஆலோசனைகள் நடக்கிறது. இது நெசவாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. மக்கள் வெளிப்படையாகவே இதுபற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்." என்றாள் அமுதவல்லி.

" இது நல்ல செய்திதான். படைக்கலங்கள் வாங்கப்போவதாக கிடைத்த செய்தி உண்மையா இரும்பொறை?"

" இல்லை. ஆயுதப் பட்டறையில் புதிதாக ஆட்களை நியமித்திருக்கிறார்கள். சேர நாட்டிலிருந்து ஒரு அனுபவமிக்கவரை தருவித்து புதியரக ஆயுதங்களையும் அதைப் பயன்படுத்துவது பற்றியும் பயிற்சி அளிக்கப் போவதாகவும் என் நண்பன் சொன்னான்."

" நல்லது இரும்பொறை. நீங்கள் சோழ நாட்டை சார்ந்தவர்கள் என்பது கடுகளவும் வெளியில் தெரியாதவாறு கவனமோடு இருங்கள்"

இப்போது மீண்டும் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்கிறது.

மூன்றுபேரும் இடுப்பிலுள்ள கத்தியில் கைவைத்தவாறே இருளில் மெல்ல மறைகிறார்கள். இப்போது உள்ளே நுழைவது ஒரு பெண். சுற்றிலும் பார்க்கிறாள். ஒருவேளை இவள்தான் நாட்டியக்காரி மாதங்கியோ? இருக்கலாம். அவள் முகம் நமக்கு தெரியாதவாறு திரும்பி நிற்கிறாள்.

" என்ன மாதங்கி ? ஏன் இவ்வளவு தாமதம்.?" என்றவாறே இரும்பொறை வெளியில் வருகிறான்.

" அழகான பெண்களுக்கு ஆபத்து அதிகம் என்று உனக்குத் தெரியாதா இரும்பொறை?" என்றவாறே தன் முக்காடை விலக்குகிறாள். பேச்சில் என்ன ஒரு கர்வம். அவள் முகம் சரியாக புலப்படவில்லை

மற்ற இருவரும் இருளிலிருந்து வெளியே வருகிறார்கள்.

" ஒ ..நீங்கள்தான் வாள்வீரன் காளியப்பன் என்பதா?" என்று கேட்கிறாள் வந்தவள்.

" முதல் முறை பார்த்ததுமே அடையாளம் சொல்கிறாயே.. நீ புத்திசாலிதான் மாதங்கி"

" உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசியாக நடந்த போரில் உங்கள் வலது கன்னத்தில் பெரிய காயம் ஒன்றை பெற்றீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்"

யாரிந்த பெண் என்று காண நமக்கும் ஆவல் உண்டாகிறது. அவள் திரும்பும் வரை பொறுத்திருக்க வேண்டாம் முன்னால் சென்று பார்க்கலாம்.

நமக்கு பலத்த ஆச்சர்யம். காட்டிலிருந்து கொங்கு இளவலால் காப்பாற்றப்பட்ட நாட்டியக்காரி. இவளுக்கு இங்கே என்ன வேலை?. எப்படி இந்த காட்டில் வந்து சேர்ந்தாள்.? தனியாக வருவதற்கு ஆண்களே அச்சப்படும் இந்த காட்டில் தனியாக வந்திருக்கும் அவள் தைரியத்தை நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

" சொல் மாதங்கி என்ன நடந்தது.?" என்று கேட்டான் இரும்பொறை.

" நான் நாட்டியத்தை சேரன் அரண்மனையிலே முடித்துவிட்டு இரண்டு நாட்கள் அரசினர் விருந்து மாளிகையில் தங்கினேன். அரண்மனைக்குள் பிரவேசிக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டேன் நடக்கவில்லை. இறுதியில் பாதுகாப்பு வீரனுக்கு வலைவீசினேன். பணத்திற்கு வீழாதவனும் மங்கையரின் காதல் பார்வைக்கு அடிமைதான். அவன் வழியாக அரண்மனை செய்திகளை கேட்டறிந்தேன். சேரனின் சித்தப்பா வில்லாண்ட சேரன் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவரின் மகன் சிருங்கார சேரன்தான் அடுத்த அரசு வாரிசாக வேண்டியவன். ஆனால் செங்குட்டுவனின் மனைவி கோமளவல்லி இப்போது ஒரு ஆண் பிள்ளையை பெற்றிருப்பது அவனுக்கு பெரும் கலக்கத்தை உண்டு பண்ணி உள்ளது. ஒரு கூட்டத்தை அவன் ரகசியமாக சேர்த்து வருகிறான் என்பது கூடுதல் தகவல்" என்று கூறி நிறுத்தினாள்.

" உன்னுடன் வந்த சோமநாதன் எங்கே?"

" சொல்கிறேன், என்னை யாரோ உளவு பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது எனவே பல்லக்கு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதைத் தூக்கிவரும் நால்வரில் ஒருவராக அவனையும் பணித்தேன். சேர நாட்டு எல்லையைக் கடந்தபின், எல்லைத் தளபதி செங்கோடனின் ஆட்கள் என்னைப் பிடித்து விட்டார்கள். உண்மையான பல்லக்குத் தூக்கிகள் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு தோற்றனர். என்னிடம் அவர்கள் அதட்டி விசாரித்துக் கொண்டிருந்தபோது. எங்கிருந்தோ வந்த ஒரு முகமூடி வீரன் மின்னல்போல் வாள்சண்டையிட்டு என்னைக் காப்பாற்றி மீண்டும் என்னை சேர நாட்டிற்கே அழைத்துப் போனான். அங்கு போனபின்தான் தெரிந்தது அது கொங்கு நாட்டு இளவல் இளங்கோ என்பது'"

" ஆ" என மற்ற மூவரும் வியந்தனர்.

" சண்டையின் முடிவில் சோமனாதனைக் காணவில்லை. அவன் எங்கு போனான் என்பது தெரியவில்லை. என்மீது எந்த சந்தேகமும் கொள்ளாத சேரன், தளபதியின் உடைவாளை பறித்து ஒருவருட பணிநீக்கம் செய்துள்ளார். என்னை அடித்தவனுக்கும் மற்றவர்களுக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சேர வீரர்களே நாட்டின் எல்லைகடந்து என்னை கொண்டு வந்து விட்டுப் போனார்கள் " என பெருமித்ததோடு கூறினாள்.

" உன்னை சந்தேகப் படாதவரைக்கும் சரிதான். ஆனால் தளபதியின் பணிநீக்கம் என்பது சாதாரணமில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்ககூடும் என்றே என்மனம் சொல்கிறது. அவர்கள் நம்மை பின்தொடரக் கூடும்.கவனமாக இருங்கள். நல்லது நண்பர்களே, பொழுது புலர்வதற்கு இன்னும் இரண்டு நாழிகைகளே உள்ளது. இன்னும் இங்கிருப்பது சரியல்ல. நான் வீடு விட்டு வந்து பல மாதங்கள் ஆகிறது. நான் சோழ நாடு செல்ல வேண்டும் இன்றிலிருந்து இரண்டாவது அமாவாசை நாம் சோழ நாட்டின் எல்லையூரிலுள்ள சத்திரத்தில் கூடலாம். மாதங்கி என்னோடு வரட்டும். வாழ்க சோழ நாடு." என்று கூறி புறப்படத் தயாரானான்.

"வாழ்க சோழ நாடு" என்றவாறே அமுதவல்லியும், இரும்பொறையும் பிரிந்து சென்றனர்.

நேரம் விடிவதற்கு முன் நாம் சேர நாட்டில் இருந்தாக வேண்டும். நாமும் புறப்படுவோம்.

தொடரும்...

கீதம்
10-02-2011, 11:03 PM
கதை இப்போதுதான் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் முடிவில் தொடரும் என்று போடாததால் மேலும் தொடர்வீர்களா அல்லது இப்படியே நிறுத்திவிடுவீர்களா என்பதில் குழப்பம் உண்டாகிறது. அதனால் கதையைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

சரித்திரக்கதைகளைப் படைப்பதென்பது மிகவும் சிரமமான காரியம். அதையும் செவ்வனே கையாளும் உங்களுக்கு என் பாராட்டுகள்.

ஒரு இடத்தில் நாட்டியக்காரி அமுதவல்லி எங்கே என்று கேட்பதாக உள்ளது..... அங்கு மாதங்கி என்றிருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். சரியா?

dellas
12-02-2011, 04:24 PM
நன்றி கீதம் அவர்களே .திருத்தி விட்டேன்.

dellas
15-02-2011, 02:31 PM
பொழுது புலர்ந்து விட்டது. பங்குனி மாதத்து பனி, தன் போர்வையை மெதுவாக விலக்கிகொண்டிருந்ததது.

சேரனின் வஞ்சிக் கோட்டையில் விற்கொடி கம்பீரமாய் அசைந்தாடிக் கொண்டிருந்தது. கோட்டை வாயிலில் இரவுநேரக் காவலர்கள் விடைபெற, பகல் காவலர்கள் சேர்ந்து கொண்டிருந்தனர். மிகப்பெரிய அந்த கோட்டைவாயிலை நாம் கடந்தால், ராஜ வீதியை அடையலாம். தேரடிவீதியாகையால் மிகவும் விசாலமாக இருக்கிறது. வீதியின் இருமருங்கிலும் பல்வேறான வணிக வளாகங்களைக் காணலாம். தொண்டியிலிருந்து வந்திறங்கும் நல்முத்துகளையும், முசிறியிலிருந்து வந்திறங்கும் கம்பளங்களையும், மற்றும் பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களையும், பெரும் வியாபாரிகள் எந்நேரமும் வியாபாரம் செய்யும் விதமாக இரவு பகல் முழுவதும் இந்த வீதியின் காவலர்கள் தங்கள் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தனர். மற்ற சில்லறை வியாபாரிகளும், நகரவாசிகளும், தானியக் கூடங்களிலும், ஆடை ஆபரணக் கடைகளிலும் வந்துபோய்க் கொண்டிருந்தனர். அயல் நாட்டவரும், விருந்தினர்களும் வந்து தங்கிச் செல்ல வசதியாக கட்டப்பட்ட சத்திரங்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மொத்தத்தில் வஞ்சிமாநகரம் ஒரு உறங்கா நகரமாகத் திகழ்கிறது.

காலை வேளையில் வீதியில் மனித சஞ்சாரம் சற்று குறைவாகவே உள்ளது. உணவு விடுதிகள் மட்டும் பரபரப்பாக காணப்படுகிறது. விருந்தினர்கள் காலையில் நீராடவும், உற்சாகமாக பொழுதைக் கழிக்கவும் பல பெரிய பூஞ்சோலைகள் தன் மத்தியில் குளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் பலர் இப்போது நீராடிக்கொண்டு இறக்கிறார்கள். வயதானவர்கள் படிக்கரையில் அமர்ந்தும், சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள், நீச்சலடித்தும் தங்கள் நீராடலைத் தொடர்கிறார்கள். பெண்களுக்கென்று தனியாக மறைவிடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

படித்துறையில் அமர்ந்து நீராடிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரின் அருகில் இரண்டு படிகளுக்கு மேல ஒரு வாலிபன் வந்து சோம்பலாக அமர்கிறான். அவன் முகம் இன்னும் தூக்கக் கலக்கத்தை விட்டு மாறவில்லை எனத் தெரிகிறது. முதியவர் வாலிபனைப் பார்க்கிறார். அன்போடு அவனிடம்,

"ஏண்டாப்பா நீ நீராடவில்லையா? " என கேட்கிறார்.

வாலிபன் அவரைப் பார்த்து விட்டு பதிலேதும் கூறாமல் இருக்கிறான்.

" உன்னைத்தான் கேட்கிறேன், பார்த்தால் வேற்று ஊரிலிருந்து வந்தவன்போல் தெரிகிறாயே?" என்றார்.

இப்போதும் அவன் பதிலுரைக்கவில்லை. நீச்சலடிக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டு இருந்தான்.

" தம்பி குளத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே? உனக்கு நீச்சல் தெரியாதா? அப்படியானால் என்னருகே வந்து அமர்ந்துகொண்டு நீராடு" என்றார்.

அந்த வாலிபன் முதியவரைப் பார்த்து,

" ஐயா பெரியவரே எனக்கு நீச்சல் நன்றாகத் தெரியும்" என்று பதில் கூறினான்.

"அப்புறமென்ன நீர் தண்மையாக இருக்குமென்று பயக்கிறாயா?" என்றார்.

அவன் சற்று எரிச்சல் கொண்டவன்போல் பதிலுரைத்தான்.

" உங்கள் நாட்டவர்போல் நான் ஒன்றும் பயந்தவனல்ல" என்றான்.

இவர்கள் விவாதத்தை மூன்று பேர் கவனித்துகொண்டு இருந்தார்கள்.

" தம்பி. பிற நாட்டவரைப் பழித்துப் பேசும் பழக்கம் எங்களுக்கு இல்லை. நீ விருந்தாளியாக இருப்பதால் உன் வாதத்தை இதோடு முடித்துக் கொள்ளல் உனக்கு நல்லது." என்றார்.

" நானுரைப்பதில் என்ன தவறு கண்டீர்?" என்றான்.

" எங்கள் நாட்டினர் எல்லாம் பயந்தவர்கள் என்றாயே ஏன் அப்படி?" என்று கேட்டார்.

" உங்களைவிட படைபலத்தில் சிறியவரான சோழன் மும்முறை உங்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டார். நீங்கள் பதிலுக்கு என்ன செய்தீர்கள்? கோழைகளாக ஒளிந்துகொண்டுள்ளீர்கள். பிறகு வேறென்ன நான் சொல்ல?" என்று கேலியான தொனியில் பேசினான்.

" தம்பி எங்கள் மன்னரைப் பற்றி உனக்கு போதுமான விபரங்கள் தெரியாததால் நீ இவ்வாறு பேசுகிறாய். அது பொது இடத்தில் விவாதிக்கும் பொருளும் அல்ல." என்று கூறினார்.

" அப்படியானால் நான் கூறியதை நீர் ஒப்புக்கொண்டு போகுமையா" என்றான்.

"என்னடா சொன்னாய்?"

என்று அவர்களின் பின்புறத்திலிருந்து ஒரு உறுமும் குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். இவர்கள் விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த அந்த மூன்று படைவீரர்களும் இவர்கள் பின்புறம் உருவிய வாட்களோடு நின்று கொண்டிருந்தனர்.அதிர்ச்சி அடைந்த பெரியவர்,

"வீரர்களே வேண்டாம். இவன் அயலூரைச் சேர்ந்தவன். தெரியாமல் பேசிவிட்டான். விட்டுவிடுங்கள்" என்றார்.

ஆனால் அந்த வாலிபன் முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லை. அமைதியாக அவர்களைப் பார்த்து,

" ஆகா, என்ன ஒரு வீரம்! நிராயுதபாணியாக இருக்கும் ஒருவனைத் தாக்க மூன்றுபேர் உருவிய வாட்களோடு வந்துவிட்டீர்களே?" என்று புன்னகையின் ஊடே பதிலுரைத்தான்.

முதியவர் எழுந்து முன்னே வந்தார்.

" அவன் விருந்தாளி, அவனை விட்டுவிடுங்கள். சிறுவயதுக்காரன். தெரியாமல் கூறிவிட்டான்" என்று அவர்களை சமாதானப் படுத்தும் விதமாகப் பேசினார்.

" வாட்களை நீட்டினால் மட்டும் நீங்கள் வீரர்கள் என்று பொருட்படாது நண்பர்களே!" என்றான் கேலியாக.

" அப்படியானால் நீ இங்கிருந்து உயிரோடு உன் ஊர் திரும்புவது சாத்தியமில்லை "

என்றவாறே அவர்கள் மூவரும் அந்த வாலிபனை நோக்கி முன்னேறினர்.

முன்னால் சென்ற வீரன், வாலிபன் மார்பை குறிவைத்து தன் வாளை வீசினான். வாலிபன் தான் அமர்ந்த நிலையிலிருந்து சற்றும் மாறாமல் தன் கையிலிருந்த துணியினால் வாளைச் சுற்றிப் பிடித்து ஒரு உந்து உந்தினான். வீரன் கையிலிருந்து வாள் பறந்து சென்று நடுக்குளத்தில் விழுந்தது. கோபங்கொண்ட வீரன் தன் கையை ஓங்கியபடி அவன் தலைக்கு குறிவைத்தான். இடக்கரத்தால் வீரன் வலக்கையைப் பற்றிய வாலிபன், தன் வலக்கரத்தால் வீரனின் வயிற்றுக்கு முட்டுக்கொடுத்து அவனை அப்படியே தூக்கி தண்ணீரில் எறிந்தான்.

இதனைக் கண்ட மற்ற இருவீரர்கள் சற்று நிதாநித்தனர். புன்னகை மாறாத வாலிபன் மெல்ல படிக்கட்டிலிருந்து எழுந்தான்.

" நண்பர்களே, நான் உங்களோடு சண்டையிட வரவில்லை. ஆனால் என்னை யாராவது தாக்கினால் திருப்பித் தாக்கும் மன தைரியம் எனக்கு உண்டு. இன்னொரு சண்டைக்கும் நான் தயார்." என்றவாறே தன் கால்களை சற்றே விரித்து நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.

மெலிதான அவன் நீண்ட தேகத்தில் இவ்வளவு வலிமையா? நீண்ட அவன் சுருள் தலைமுடியும், அலட்சியப் பார்வையும் அவனை வேறுபடுத்திக் காட்டியது. ஆனால் அவன் கருநிற மேனியும் மொழி உச்சரிப்பும் அவனை வேற்று நாட்டவனாகக் காட்டவில்லை.
முதியவர் அந்த வாலிபன் கையைப் பற்றி அழைத்துப் போனார். அதற்குள் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடி இருந்தது. வீரர்களும் கூட்டமும் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். முதியவர் அவனை ஒரு உணவுச்சாவடிக்கு அழைத்துப் போனார்.

சாவடியின் உள்புறத்தில் இருமருங்கிலும் பாய்கள் விரிக்கப்பட்டு அதில் பலர் அமர்ந்து உணவருந்திக்கொண்டு இருந்தார்கள். மீதமிருந்த இடத்தில் வாலிபனை அவர் அமரச்சொன்னார். மறுப்பேதும் கூறாமல் அவன் அமர்ந்ததும்,

" உண்டுவிட்டு இங்கேயே இரு. நான் கணத்தில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிப்போனார்.

அமர்ந்த சற்று நேரத்தில் அவனுக்கு புட்டும், பருப்பு குழம்பும் வாழை இலையில் வைத்து பரிமாறப்பட்டது. கைகளை தன் மேலாடையில் துடைத்தவன், மெதுவாக உண்ணத் துவங்கினான். மிகுந்த பசியுற்றவன்போல் அனைத்து உணவையும் விரைந்து உண்டுவிட்டு, மீண்டும் உணவுதருமாறு சாவடிப் பெண்ணிடம் கோரினான். இந்த நேரம் சாவடிக்கு வெளியே சலசலப்பு உண்டானது. ஆறுபேர் கொண்ட கும்பல் ஓன்று சாவடிக்குள் அதிரடியாக நுழைந்தது. வந்தவர்கள் வாலிபனைக் கண்டவுடன்,

" நீ இங்குதான் இருக்கிறாயா? என்ன தைரியமடா உனக்கு?" என்று கொக்கரித்தான் வந்தவர்களில் ஒருவன்.

பின் அந்த வாலிபனின் இடக்கையைப் பற்றி வெளியே இழுத்துப் போனான். வெளியில் வந்ததும் அவன் தன் கையை உதறினான். பின்பு அவர்களை நோக்கினான். அதில் ஏற்கனவே அவனோடு சண்டையிட வந்த மூன்றுபேரும் நிற்பதைப் பார்த்தான் . அவர்களை நோக்கி புன்னகைத்தபடி,

" நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா நான் சண்டையிடத் தயாரென்று. என்னை நிராயுதபாணியாக சண்டயிட வைத்து உங்கள் கீர்த்தியை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் " என்றான்.

அவர்களில் ஒருவன் தன் உடைவாளை உறையோடு எடுத்து வாலிபனிடம் வீசினான். அதை கையிலெடுத்தவன் உறையை இடையில் சொருகி, வாளைக் கையிலெடுத்து , சண்டைக்குத் தயாரானான். மீதமிருந்த ஐந்து பேரும் ஒருசேர அவனைத் தாக்கினார்கள். அவன் நீண்ட கைகளில் வாள் விளையாடியது. மிகவும் பாதுகாப்பாகவே அவன் வாள்வீச்சு இருந்தது. ஒரு நாட்டிய மங்கைபோல் அவன் கால்கள் ஒருவித தாள நயத்தோடு முன்னும் பின்னும் போய்வந்தது, பார்ப்பவர்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. ஐவர் வகுத்த பல்வேறு வியுகங்களையும் ,மின்னல்போல் புகுந்து உடைத்தான். ஆ.. என்ன விந்தை இது? அவன் வலக்கைக்கும், இடக்கைக்கும் வாளை மாற்றி மாற்றி சண்டையிட்டான். எப்படி, எப்போது மாற்றுகிறான் என்பது யாருக்கும் புரியவில்லை. குழப்பம் ஏற்பட்டாலும் வீரர்களும் சளைக்காமல் தாக்கினார்கள். சற்றுநேரம் பாதுகாப்புக்காக சண்டையிட்டவன் பின் உக்கிரமாகத் தாக்கத் துவங்கினான். வீரர்கள் கையிலிருந்த வாட்கள் ஒவ்வொன்றாக ஆகாயத்தில் பறந்தது. வாட்களை இழந்த வீரர்கள் ஒவ்வொருவராக பின்வாங்கினார்கள் . பின் அவர்கள் ஓடுவதற்கு எத்தனித்தபோது,

" நிறுத்துங்கள்" என்றொரு கம்பீரக் குரல் கேட்டது.

குரலைக் கேட்டவுடன் வாலிபன் தன் வாளை இறக்காமல் திரும்பி நோக்கினான். சுற்றி இருந்த கூட்டம் அந்த குரலின் சொந்தக்காரருக்கு வணங்கி வழி விட்டது. குதிரை மேலிருந்த அந்த கம்பீர இளைஞன்,

" நண்பரே! நீங்கள் யார்? ஏன் எங்கள் படை வீரர்களோடு சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்?" என வினவினான்.

அப்போது சரியாக வந்த முதியவர் இடைப்புகுந்தார்.

" இவன் என் வீட்டிற்கு வந்த விருந்தாளி. உணவுசாவடியில் ஒரு சிறிய விவாதம் அது சண்டையாக மாறிவிட்டது. மன்னிக்க வேண்டும் பிரபு. நான் இவனை இப்போதே அழைத்துச் செல்கிறேன். தாங்கள் இதற்கு அனுமதிக்க வேண்டும்" என பணிவோடு வேண்டினார்.

" சரி பெரியவரே, அழைத்துச் செல்லுங்கள். வீரனே மறுமுறை நான் உன்னை இதுபோலொரு சம்பவத்தில் சந்திக்க நேராதபடி பார்த்துக்கொள். ம்...அனைவரும் கலைந்து செல்லுங்கள்." என்றவாறே குதிரையை தட்டிவிட்டான்.

படை வீரர்கள் அவனைத் தொடர்ந்து சென்றனர்.

" நீ வா என்னோடு என்று" வாலிபனை முதியவர் இழுத்துச் சென்றார். அவன் தன் கையிலிருந்த வாளை தன் இடையிலிருந்த உறையில் பத்திரப் படுத்தினான்.

" குதிரையில் வந்தவர் யார் ?" என கேட்டான்.

" மன்னரின் ஒன்றுவிட்டத் தம்பி சிருங்கார சேரன்" என்றார்.

இதைக்கேட்டவுடன் வாலிபனின் முகத்தில் ஒருவித உணர்வு தோன்றி மறைந்தது. அவன் நின்று, பின்னால் திரும்பிப் பார்த்தான். தொலைவில் குதிரையில் போய்க்கொண்டிருந்த சிருங்காரனும் இவனை அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறே போய்க்கொண்டிருந்தான்.


தொடரும்..

கீதம்
18-02-2011, 03:06 AM
வியக்கவைக்கும் எழுத்துநடை. வாளினைக் கையாளும் லாவகத்தையும், சண்டைக்கு வந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கும் வேகத்தையும் எழுத்தில் கொண்டுவருவது அத்தனைச் சுலபமில்லை. கண்முன் காட்சிகளை விரியவைப்பதில் நிபுணர் என்பதை இந்த அத்தியாயத்திலும் நிரூபித்துவிட்டீர்கள். பாராட்டுகள் டெல்லாஸ். தொடரட்டும் மர்ம முடிச்சு.

Nivas.T
18-02-2011, 07:45 AM
அருமையான எழுத்தாக்கம், நல்ல கதையோட்டம், சம்பவங்களை கண்முன் நிறுத்தும் திறமை அழகு, சரித்திரக்கதை சாதாரணமல்ல ஆனால் அதையும் திறம்பட செய்துள்ளீர்கள். முதல் இரண்டு பகத்தைவிட மூன்றாம் பக்கத்தில் விறுவிறுப்பு, கதையின் நகர்வு நல்ல வடிவமைப்பு. கதாப்பாத்திரத்தின் உருவமைப்பு இன்னும் கொஞ்சம் விளக்கமாக இருந்தால் நன்று.

வாழ்த்துக்கள் டெல்லாஸ் தொடரட்டும் கதை
தொடர்கிறோம் நாங்களும் ஆர்வத்தோடு

dellas
19-02-2011, 02:23 PM
நன்றி நண்பர்களே. உங்கள் வரவேற்பு எனக்கு ஊக்க மருந்து.

tamilkumaran
20-02-2011, 02:46 PM
சரித்திர கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், மிகுதியையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

dellas
21-02-2011, 09:45 AM
இந்த அத்யாயத்தில் சேரன் அரண்மனைக்குள் நாம் நுழைவோம். அரண்மனைப் பிரதான வாயிற்கதவு திறந்திருந்தாலும், தடிமனான திரைச்சீலை அந்த வாயில் வழியே நாம் உள்நோக்குவதை தடைசெய்கிறது. வாயிலில் நான்கு காவலர்கள் கையில் ஏந்திய ஈட்டியுடன், நிற்கிறார்கள். அரண்மனை முற்றத்திலிருந்து நாம் காணும்போது வாயிலில் உள்ள பன்னிரண்டு அரைவட்ட படிக்கட்டுகள், வாயிலை ஒரு ஆள் உயரத்தில் உயர்த்தி, வாயிலின் கம்பீரத்தை உணர்த்துகிறது. வாயிலை நோக்கிய அகலமான பாதையின் இருமருங்கிலும் வரிசையாக நடப்பட்டு ஒரே உயரத்தில் வளர்க்கப்பட்டுள்ள பூக்கும் குறுமரங்கள் தன் சுகந்தத்தை நம் சுவாசத்தில் கலக்கிறது. அந்த ராஜ வீதியில் நடக்கும்போது நம்மை அறியாமலே நமக்கும் ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது. சரி இனி அரண்மனையின் உள்ளே இந்த பூக்கூடையுடன் நுழையும் இளம்பெண்ணுடன் நாமும் போகலாம்.

வாயிலை மூடிய திரைசீலையைத் தாண்டியவுடன் நாம் காண்பது ஒரு விசாலமான நீள அகலத்துடன் கூடிய ஒரு மிகப்பெரும் கூடம். அதில் பல்வேறு வகையான இருக்கைகள் சீரான வரிசையில் போடப்பட்டுள்ளன. விருந்தினர்களை வரவேற்கும் இடமாக இருக்கலாம். அதன் விதானத்தில் அழகிய ஓவியங்கள் பல்வேறு வண்ணங்களில் நம் கண்களைப் பறிக்கிறது. கூடத்தில் நுழையாமல் வலப்பக்கமாக அந்த பூக்காரப் பெண் திரும்புகிறாள். அங்கே படிக்கட்டுகள் உள்ளன. அது மேல அடுத்த நிலைக்கு செல்பவகயாக இருக்கும். நாம் நினைத்தது சரிதான். தான் கொண்டு வந்திருந்த பூக்கூடையிலிருந்து மலர்க் கொத்துகளை எடுத்து சுவரில் மாட்டப் பட்டிருக்கும் பனை ஓலையில் வேய்ந்த சிறிய கூடைகளில் வைக்கிறாள். ஏற்கனவே அதிலிருக்கும் வாடிய மலர்களை திருப்பி எடுக்கவும் அவள் தவறவில்லை. அவள் பின்னே போகும் நாம் அவளைக் கவனிக்கத் தவறியதேன்.?

அவளுக்கு பதினாறிலிருந்து பதினெட்டு வயதுக்குள் இருக்கலாம். நல்ல கோதுமை நிறம். அளவான உயரம். இடுப்பைத் தாண்டிப் புரளும் ஈராக்கூந்தலை நெறியாகப் பின்னி. கனகப் பூக்கள் சூடியிருக்கிறாள். அல்லி மலர்போன்ற விழிகளின் ஓரம் கரிய மை தீட்டியிருப்பது, அவள் விழி வீச்சின் தாக்கத்தை கட்டுப்படுத்தவோ? சிவந்த மெல்லிய உதடுகள் எதையோ நம்மிடம் சொல்ல வருவதுபோல் தோன்றும் மாயம் பிரம்மனுக்கே அதிசயமாகலாம். நறுக்கி வைத்த ஒழுங்கான நகத்துணுக்குபோல் வளைந்த நெற்றி. சேரனுக்கே உரித்தான விற்கள் இவள் புருவம் கண்டபின்னரே வடிவமைக்கப்பட்டிருக்கலாம். களங்கமில்லாத நிலவு போன்ற வட்ட முகம். சிறிய தோள்கள், அதன் நீட்சியாகத் தொடரும் கணுக்களில்லாத மூங்கில் போன்ற கைகள். எதையும் தாங்கவல்லாத சிறிய இடை, அவள் செழித்த பருவ எழில்களைத் தாங்குவது அற்புதம். நடக்கையில் சப்தமெழுப்பா அவள் பஞ்சு பாதங்கள் சிலைமேனியைத் தாங்கி நடந்து சிவந்துபோய் இருந்தது.
ஆபரணங்கள் மிஞ்சாமல் அணிந்த அழகு நங்கை அவள். சேர நாட்டின் பணிப்பெண்களே இத்தனை அழகா..?
இதோ அவள் போகிறாள் நாம் பின்தொடர்வோம்.

அரண்மனையின் முதல் நிலையில் ஒருபுறம் தாழ்வாரமும் அதன் பக்கவாட்டில் தொடர்ச்சியாக அறைகளும் உள்ளன. இந்த அறைகளைத்தாண்டி சென்றால் மீண்டும் நாம் கீழிறங்கும் படிக்கட்டுகள் வந்துவிடுகிறது. அது அரண்மனைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. பூக்கூடையுடன் அவள் அங்கு செல்கிறாள். ஆனால் நாம் காண வந்த கொங்கு இளவல் அரண்மனை அறைகளில் ஒன்றில்தான் தங்கியிருக்க வேண்டும். எனவே நாம் அவளைப் பிரியவேண்டியது கட்டாயமாகிறது. ஒவ்வொரு அறையாக நாம் பரிசோதித்துகொண்டு வருவோம்.

முதல் அறையில் ஒருவர் கட்டிலில் சோர்ந்துபோய்க் கிடக்கிறார். அவர் முகத்தின் சாயல் அவர் செங்குட்டுவனின் உறவினன் எனக் கூறுகிறது. அவரின் வலதுபுறம் ஒரு பெண்மணியும் அமர்ந்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள்.

" சிருங்காரன் திரும்பி விட்டானா பூங்கொடி?" என வினவுகிறார். அவர் சிரமப்பட்டு பேசுவதிலிருந்து
அவர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அவரின் முகத்தில் கவலையின் ரேகைகள்.

" ஆம் திரும்பிவிட்டான். ஆனாலும் அவன் முன்புபோல் இல்லை. யாரிடமும் ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறான். அப்பாவாகிய உங்களிடமும் பேச மறுக்கிறான். அண்ணன் செங்குட்டுவன் பெயரைக் கேட்டால், அவன் முகத்தின் சோபை இழந்து போகிறான். உங்களைப் பார்க்க வரவும் அவனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை. என் கட்டாயத்தின் பேரில்தான் இங்கு வருகிறான். " எனக் கவலையோடு பதிலுரைத்தார்.

அப்படியானால் கட்டிலில் படுத்திருப்பது வில்லாண்ட சேரன்தான். அவர் ஒரு மாபெரும் வில்லாளன் என்பது நாடறியும். பல போர்க்களங்களில் செங்குட்டுவனின் தோழ்தூக்கி உதவியவர். சிறுவயதில் அரச பொறுப்பேற்ற செங்குட்டுவனுக்கு, ராஜ தந்திரங்களும் போர் சூத்திரங்களும் கற்றுத் தந்தவர். பல விழுப்புண்களை தன் மார்பில் தாங்கி, சேர சாம்ராஜ்யத்தை கட்டிஎழுப்பிய ஒரு கல்தூண் அவர். அந்த வைரம் பாய்ந்த உடல் இன்று சோர்வாகி கட்டிலில் வீழ்ந்து கிடப்பது சேர அரசுக்கே ஒரு பேரிழப்பு. சிற்றப்பாவை நினைத்து சேரன் வருந்தாத நாளில்லை. அவரும் சேரன் மீது உயிரையே வைத்திருந்தார். ஆனால் இப்போது தன் மகன் சிருங்காரன் அவருக்கு பெருத்த கவலையைத் தந்தான். அவன் தனக்கென ஒரு கூட்டம் சேர்த்து வருவதாக அறிந்து மனமுடைந்து போனார். சேரனுக்கு இதெல்லாம் தெரிந்திருந்தும் அவரிடம் இதைப்பற்றி பேசுவதில்லை. சேரன் தன் தம்பியிடம் எப்போதும் அளவுகடந்த பாசத்தையே கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் தன் பத்தினியிடம் சொல்லி மனம் நோவதைவிட வேறொன்றும் அவருக்கு செய்ய இயலாமல் போனது.

அந்த அறையை விட்டு நாம் வெளியேறி அடுத்த அறைக்குள் நுழைவோம். இங்கேதான் நம் கொங்கு இளவல் தங்கி இருக்கவேண்டும் ஏனன்றால் அவரின் மேலாடை கட்டிலின் மீது கிடக்கிறது. வாயிற்கதவு வெறுமனே அடைக்கப் பட்டுள்ளது. அப்படியானால் அவர் தோட்டத்துப் பக்கம்தான் போயிருக்க வேண்டும். தோட்டத்திற்குள் மெல்ல நாம் நுழைவோம். நாம் போகும் பாதைக்கு எதிர்புறமிருந்து இரண்டு இளம்பெண்கள் தோட்டத்தை நோக்கி வருகிறார்கள். அதில் ஒருத்தி நாம் ஏற்கனேவே கண்டிருந்த பூக்கூடை இளம்பெண். மற்றது யார். நாம் அழகி என்று வியப்புற்ற பூக்கூடை இளம்பெண் அந்த புதியவளின் அருகில் ஒளி வீசும் அகல் விளக்காக தெரிகிறாள். ஆனால் மற்றவளோ தண்ணொளி வீசும் முழுமதியின் மொத்த வடிவாக நடந்து வருகிறாள். நாம் மலைத்துப்போய் நிற்கிறோம். வார்த்தைகள் எல்லாம் நமக்குள்ளே முடங்கிபோகிறது. நாம் வந்திருப்பது தேவோலோகம் இல்லையே ஆனால் தேவதை எப்படி இங்கு வரக்கூடும்?

குவளை மலர்க் கண்கள். அதில்தான் என்ன ஒளி. !. பாலில் விழுந்து மிதக்கும் திரட்சைபோல் கருவிழிகள். அது அங்கும் இங்கும் மிரள்வது எதற்காகவோ.? விழியோரம் தீட்டப்பட்டிருக்கும் கரு மை அந்த விழிகளின் அரணோ? அடர்ந்த புருவம், அது வில்லாய் வழைந்து நிற்பது நம் புருவங்களை வெட்கப்பட வைக்கவா? நெற்றி வடிவம் கொண்டிருப்பது கூன்விழுந்து நிற்கும் பிறையினை எள்ளி நகையாடவா? ஈரமான செந்நிற உதடுகளைக் கண்டபின், பனித்துளி ஒட்டியிருக்கும் அன்றலர்ந்த ரோஜா மலரைக் காண விழைவதில் அர்த்தமுண்டோ? வரிசை எப்படி இருக்கவேண்டும் என்பதும் முத்துக்கள் எப்படி ஜொலிக்க வேண்டும் என்பதும் அவள் சிரிக்கும்போது தெரியும் பல் வரிசையைத் தவிர வேறு எதுவும் நமக்கு சொல்ல முடியுமா? செம்மாங்கனி அது அவள் கன்னக் கதுப்பின் வடிவம் கண்டு நாணம் கொள்ளாதா? உலகப் பேராழிகள் அவள் கழுத்துக்கு இணையாக சங்கினைத் தர இயலுமா? அவளை எட்ட நின்று பார்த்தபின் தங்கத்தின் நிறம் என்ன நமக்கு உயர்வாகவா தோன்றும். ? உயர்வகை காட்டு வாழைகள் அவள் பருவ எழிலுக்கு முன் தன் பூக்களை எல்லாம் இலைகளால் மறைத்துக் கொள்ளாதா? மலர்க்கொடிகள் அவள் சிறுத்த இடையின் முன் மண்டியிட்டு துவளாதா? சந்தன மரங்கள் அவள் கால்களைப் போன்ற எழிலான வனப்பில் இருக்க முடியுமா? மழை முகில் போன்ற அலைபாயும் கூந்தல், அதில் உள்ள சுருள்களை உலக நதிகளில் ஒன்றாவது தன் சுழலால் ஈடுகட்ட முடியுமா ? அன்னம் வந்து இவளிடம் அல்லவா நடை பயில வேண்டும். பின்னும் நடையழகும், வனப்பான பின்னழகும் நம்மை கவிபாடத் தூண்டுகிறதே. பாதம் அழுந்தினால் எங்கே அவளுக்கு வலிக்குமோ என்று புற்கள் எல்லாம் தங்கள் நுனிகளை தரை நோக்கி குனிந்து கொள்கின்றன. இத்தனை அழகையும் தாங்கி அந்த கோதையானவள் தோட்டத்தின் மையப் பகுதியில் உள்ள குளத்தை நோக்கி வருகிறாள். அவள் தோழியாகிய பூக்கூடைப் பெண்ணும் அவளோடு அளவளாவிக்கொண்டு வருகிறாள்.
அவர்கள் பேசுவது நம் காதுகளுக்கும் எட்டுகிறது.

" தேன்மொழி! கொங்கு இளவரசர் நம் நாட்டிற்கு வந்துள்ளாரமே. " என்று பூக்கூடைப் பெண்ணிடம் கேட்கிறாள்.

" ஆம் இளவரசி நட்பின் நிமித்தம் வந்துள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்" என்றாள்.

" உன்னிடம் எத்தனை நாட்கள் சொல்கிறேன் நீலவேணி என்று என் பெயர் சொல்லி அழை என்று." என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

ஆம் அவள்தான் செங்குட்டுவனின் தங்கை நீலவேணியாக இருக்கவேண்டும்.

" கொங்கு இளவல் சிறந்த வாள்வீரராமே. உனக்குத் தெரியுமா தேன்மொழி ?"

" வாள் வீரர் மட்டுமல்ல சிறந்த மல்யுத்த வீரரும் கூட. கவிகள் புனைவதிலும் வல்லவராம். " என்று புகழ்ந்தாள்.

" போதும் போதும் அவர்பேச்சு. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்." என்று கேட்டாள்.

" போதுமென்று சொல்லிவிட்டு ஏன் கேட்கிறீர்கள்? இதெல்லாம் என் அப்பா எனக்குச் சொன்னது. வேறொன்றும் அவரைப்பற்றி சொன்னார்." என்று கூறி நிறுத்தினாள்.

" நீங்கள்தான் அவர்பேச்சு வேண்டாமேண்டீர்களே அப்புறம் எப்படி சொல்வது " என்று இழுத்தாள்.

" அது என்னவென்றுதான் சொல்லேண்டி " என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

" அவர் காண்பதற்கு கந்தர்வ புருஷன் போன்று இருப்பாராம். எந்த நாட்டு இளவரசிக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார்" என்று பெருமூச்சோடு சொல்லி முடித்தாள்.

நீலவேணி சற்று தூரம் மெளனமாக வந்தாள். பின் ,

" வேறு எதாவது சொன்னார்களா உன் அப்பா " என்று உதடசைத்தாள்.

" இளவரசி, இன்று காலை எங்கள் வீட்டிற்கு ஒரு அந்நிய தேசத்து வாலிபனை வீட்டிற்கு அழைத்து வந்தார். "

" அப்படியா எந்த தேசத்து வாலிபன்.? எதற்காக அழைத்து வந்தார்? "

" எனக்கு சரியாகச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஈழதேசத்தை சார்ந்தவன் என்பது என் திண்ணம். நமது படைவீரர்கள் ஆறுபேரை ஒற்றை ஆளாக தோற்கடித்தவன் என்று அப்பா சொன்னார்கள். நமது அரசரைப் பற்றி பேசியதால் கோபங்கொண்ட வீரர்கள் அவனைத் தாக்கியுள்ளார்கள். ஆனால் அவனைப் பார்த்தால் அவதூறு பேசும் ஆளாக எனக்குத் தோன்றவில்லை."

" நல்ல வீரன்தான். அப்படி என்ன பேசினானாம் அரசரைப் பற்றி?"

" அதை ஒன்றும் அப்பா சொல்லவில்லை" என்று கூறினாள்.

அவர்கள் பேசிக்கொண்டே குளத்தின் ஒரு கரையை அடைந்தனர்.

" தேன்மொழி அங்கே பாரடி " என்று குளத்தின் மறுகரையை காட்டினாள்.

அங்கே ஒரு மனித உருவம் தியான நிலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தது.

" வா அருகில் சென்று பார்க்கலாம்" என்று தேன்மொழியின் கைகளைப் பற்றி அழைத்துப் போனாள் நீலவேணி.

அருகில் சென்றதும் அந்த உருவத்தை கண்ணிமைக்காமல் நோக்கினாள். தன்னை மறந்து அவள் பார்கையில், அந்த உருவம் தன் கண்களை மெல்லத் திறந்தது. தன் அருகில் நிற்கும் பெண்ணின் மீது தன் கண்களைப் பதித்து இமைக்க மறந்து போனது. ஒருவர் அழகை மற்றவர் பருகியபடி எவ்வளவு நேரந்தான் இருப்பது. தேன்மொழி மெல்ல நீலவேணியின் கைகளை இழுத்து,

" இளவரசி வாருங்கள் போகலாம் " என்றாள்.

நீலவேணி தன்னிலை உணர்ந்தாள். அமர்ந்திருந்தது வேறுயாருமல்ல நாம் தேடியலைந்து கொண்டிருக்கும் கொங்கு இளவல்தான்.

இரண்டடி பின்னகர்ந்த நீலவேணி, " தாங்கள் யாரோ? இந்நேரம் இங்கு வந்து தவம்புரிய அவசியம் என்னவோ? " என்றாள்.

மீண்டெழுந்த நம் இளவல் உடனே,

" நான் தவம்புரிய வந்த தவசி அல்ல. தோட்டத்தில் பறவைகளின் இனிய சப்தங்களை சற்று நேரம் கண்மூடி ரசித்திருந்தேன். " என்றார்.

" நல்ல ரசிகர்தான். ஏதோ புதிதாக சிலை ஒன்றை குளக்கரையில் நிர்மாணித்து விட்டார்களோ என்று நினைத்தேன்." என்று கேலி செய்தாள்.

" சிலைகள் பேசுவதில்லை இளவரசி, தங்களைத் தவிர." என்றார்.

" ம்.. நன்றாக பேசுகிறீர்கள். இப்படியே பேசினால் தங்கள் உயிர் தங்களுக்குச் சொந்தமல்ல " என்றாள்.

" உண்மைதான் இளவரசி இப்போது என்னுயிர் என்னிடமில்லை" என்றார்.

முகம் சிவந்த இளவரசி, " தாங்கள் யாரென்று சொல்லவில்லையே" என்று கேட்டாள்.

" கொங்கு நாட்டிலிருந்து நட்பு நாடிவந்தவன் நான். கவனிக்கும்படி வேறொன்றில்லை என்னிடம்" என்றார்.

" அதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். இப்போது விடைபெறுகிறோம் "

என்றவாறே நீலவேணியின் கைகளைப் பற்றி இழுத்துப் போனாள் தேன்மொழி. மறுமொழி சொல்லத் தோன்றாமல் எதையோ பறிகொடுத்ததுபோல் அவளைப் பின்தொடர்ந்தாள் நீலவேணி. அங்கே கொங்கு இளவலும் பார்வை அகற்றாது அவர்களயே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். நமக்கும் ஏதோ புரிவதுபோல் இருக்கிறது அல்லவா?..

தொடரும்...

அக்னி
21-02-2011, 10:34 AM
நான்கு அத்தியாயங்கள் ஓடிவிட்டனவா...

மற்றவற்றைத் தேடிப்பிடித்துப் படித்துவிட்டு வருகின்றேன்...

ஒரே திரியில் அனைத்துப் பாகங்களும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்.
பொறுப்பாளர்களிடம் சொன்னால் இணைத்துத் தருவார்கள்...

dellas
21-02-2011, 10:40 AM
எனக்கு தெரியவில்லையே. முடிந்தால் உதவுங்கள்

Nivas.T
21-02-2011, 12:33 PM
மிகவும் அருமையா கதாப்பாத்திரங்களின் அறிமுகம்
கட்சி விளக்கம் அற்ப்புதம்
கதையின் நகர்வு அழகு
இது காதலின் தொடக்கம்

பாராட்டுகள் டெல்லாஸ்
தொடருங்கள்
நாங்களும் தொடர்கிறோம் ஆர்வமாக

dellas
22-02-2011, 04:18 AM
நன்றி nivas .

கீதம்
24-02-2011, 08:11 AM
அதி அற்புதமான வர்ணனைகளும், தெளிந்த நீரோட்டம் போன்ற சீரான எழுத்துநடையும், கொஞ்சும் தமிழும் வசீகரிக்கின்றன. மனம் நிறைந்த பாராட்டுகள். தொடருங்கள்.

dellas
24-02-2011, 02:56 PM
நன்றி கீதம்