PDA

View Full Version : பழந்தமிழ் இலக்கியப் படைப்புச் சிறப்பு.



குணமதி
03-02-2011, 11:34 AM
பழந்தமிழ் இலக்கியப் படைப்புச் சிறப்பு.

‘சங்க’ இலக்கியங்களைக் கழக இலக்கியங்கள் என்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் குறிப்பார். இக்கால் உள்ள அரசியல் சார்பான கழகங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. புலவர் அவையைக் கழகம் என்று கூறினர். ‘முச்சங்கம்’ என்பதை முக்கழகம் என்றே கூறுவர்.

மாந்தரின் அக உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப் பட்டவை அக இலக்கியங்கள். தலைவன், தலைவி, தோழி, செவிலி, தோழன் போன்ற மாந்தர் உளத்தெழும் அக உணர்வுகளே இப்பாடல்களின் கரு அல்லது பாடுபொருள் ஆகும். மாந்தரின் களவு(திருமணத்திற்கு முன்னான காதல்), கற்பு வாழ்க்கையின் உணர்வுகளை நடுவாகக் கொண்டு படைக்கப் பட்டவையே அகப்பாடல்கள்.

காதல் உள்ளங்களின் ஈடிணையற்ற இணைப்பை, ஊறியெழும் உயர்ந்த உணர்வின் பரிமானங்களை (dimension - பரிமானம்: தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகராதி பக்கம் 244), அவர்களின் உயர் பண்பை இன்னும் இவைபோலும் பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டனவே அக இலக்கியங்கள்.

உலக இலக்கிய ஆய்வறிஞர்கள், பொதுவான மாந்த உணர்வுகளையும், பொதுவான உண்மைகளையும், படம்பிடித்துக் காட்டுவனவாகப் பாடல்கள் இருக்கவேண்டுமென்று கூறுகின்றனர். (பாடல், பாட்டு, பா, செய்யுள்,’கவிதை’ ஆகியவை ஒருபொருட் பன்மொழிகளே)

ஒரு நல்ல இலக்கியப் படைப்பு, காலங் கடந்தும், நாடு கடந்தும் நிலைபெறுவதற்கும் போற்றப் படுவதற்கும் அதன் கரு அல்லது பாடுபொருள் உலகப் பொது உண்மையைக் கூறுவதாக இருக்கவேண்டுமென அறிஞர் கூறுவர்.

செயற்கரிய செயல்களும் வீரவினைப்பாடுகளும் களமாடல்களும் மட்டுமன்றி மாந்தரின் நுண்ணிய உயர்ந்த உணர்வுகளும் ஒப்பற்ற பாடுபொருள்களே. கழக இலக்கியங்கள், குறிப்பாக அகத்திணை இலக்கியங்கள் தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளைக் கூறுவனவாக அமையாது பொதுவான மாந்த உணர்வுகளை ஒப்புயர்வற்ற முறையில் பேசுகின்றன.

கழக இலக்கியங்களில், பொதுவான பெண்அன்பின் ஆழத்தை உயரத்தை இன்னும் பல பரிமானங்களை, உலகின் எந்த மூலையிலும் எந்தக் காலத்திலும் உள்ள பெண்அன்பிற்குப் பொருந்துவதாகப் படைத்திருப்பது வியப்பளிக்கும் சிறப்பாகும்.

தனிப்பட்ட மாந்தரினும் உணர்வுகளே முதன்மையாகும். கழக அக இலக்கியங்களில் தனிமாந்தருக்கு முதன்மை இல்லை. உணர்வுகளே முன்நிற்கின்றன. மாந்தரை உருவாக்கி அவர்கள் வழியே ஆசைகள், வேட்கைகள், பாசங்கள், பண்புகள், ஆற்றாமைகள் போன்ற பல்வேறு உணர்வுகளைச் செல்லச் சொல்லிய சிறப்பு ஒப்பற்றதாகும்.

அகத்திணை இலக்கியப் படைப்புகளில் உலகப் பொது உணர்வுகள் விளக்கப்படுதன் காரணமாக அவற்றை “Literature of universal thought, experience and feeling” என்று அறிஞர் ச.அகத்தியலிங்கம் கூறுவார்.

தமிழின் ஒப்பற்ற இலக்கண இலக்கியமாகிய தொல்காப்பியம்,

“மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்” - என்று கூறி நெறிப்படுத்தியிருப்பது வியப்பளிக்கும் சிறப்பாகும்.

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய இலக்கியங்கள் அகவுணர்வுப் பாடல்களைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. அகநானூற்றுப் பாடல் ஒன்றன் ஒரு பகுதியை எடுத்துக்காட்டிற்காகப் பார்ப்போம். கயமனார் எழுதிய இப்பாடல் அகநானூற்றில் ஏழாம் பாடலாக உள்ளது.

துள்ளித் திரிந்த மான்போன்ற மகள் பூப்படைகிறாள். பேதைப் பருவம் கடந்து பெதும்பைப் பருவம் எய்துகிறாள். செவிலித்தாய் அவளை (தலைவியை) நோக்கிக் கூறுவதாகப் பாடல் படைக்கப் பட்டுள்ளது. பாடலின் தொடக்கப்பகுதி இது.

முலைமுகம் செய்தன; முள்எயிறு இலங்கின;
தலைமுடி சான்ற; தண்தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முதுபதி தாக்கணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
பேதை அல்லை; மேதைஅம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை.....”

-என்று பாடல் தொடங்கித் தொடர்கிறது.

இப்பாடற் பகுதிக்கு உரையாசிரியர் (ஒளவை.சு.து.) தரும் விளக்கம்:

“அறிவுமிக்க சிறுமியே கேள்! இப்பொழுது நின் முலைகள் பருத்துக் கண்டாரைக் காமுறுத்துவனவாக நிரம்பின; நின்னுடைய பற்கள் தாமும் புத்தொளி பெற்றுத் திகழ்கின்றன. தலைமயிர் கூழையாகாமல் கூந்தலாகி ஐம்பாலாக வகுத்து முடிப்பதற்கு ஏற்றவாயின காண். இனி நீ அங்குமிங்கு மலமந்து ஓடியாடும் நின் தோழியரோடு கூடி எவ்விடத்திற்கும் போகாதே கொள்! இக் குறிஞ்சியிலமைந்த மிகப்பழைய இடங்கள் தம்பால் வருவாரைத் தீண்டி வருத்தும் தெய்வங்களையும் உடையன காண்! ஆதலால் இனி நீ நின்னைக் காக்கும் காவலையும் மேற்கொள்வாயாக! நம் முன்றிலிலும் போகாதே கொள்; கட்டுக் காவலுமின்றி மனம் போனபடி திரிதரும் பேதைப்பருவத்தினள் அல்லையே! பெதும்பைப் பருவத்து இல்லினுள் அடங்கியிருத்தற்கியன்ற இப்பெதும்பைப் பருவத்திலும் புறத்தே செல்லா நின்றனை!.....”

பாடலின் படைப்புத் திறனை என்னென்பது! பாருங்கள், சிறு சிறு சொற்களில் அருமையான செய்திகள்!

மேதைஅம் குறுமகள்! என்று மகளை அழைத்துக் கூறுகிறாள்!

செய்திகளின் வரிசையைப் பாருங்கள்!

முலைமுகம் செய்தன;
முள்எயிறு இலங்கின;
தலைமுடி சான்ற;
தண்தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முதுபதி தாக்கணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்!
கடையும் போகலை!
பேதை அல்லை;
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை.....”

ஒரு பாடலின் –‘கவிதை’யின் – சிறப்பிற்கும் பாடுபொருளுக்கும் ஒவ்வொரு சிறிய பண்புக்கூறும் உதவிடும். ஒருபோகாக உரைத்த சிறப்பு, உயர்வு சான்றதாக உள்ளது.

கழக இலக்கியங்களின் சிறப்பு படிக்கப் படிக்க இன்பம் தருவதாகும். தமிழில் படைப்பெழுத முனைவார் ஒருமுறையேனும் கழக இலக்கியங்களைப் படித்த தகுதியினராதல் வேண்டுமென்று கூறினால் அது மிகையுரை அன்று! உண்மையே!
----------------------------------------------------------------------------------

கீதம்
03-02-2011, 11:36 PM
அர்த்தம் பொதிந்த வரிகள். அன்று எந்தாய் எனக்குச் சொன்னாள். இன்று நான் என் மகளுக்குச் சொல்கிறேன். தாய் மட்டுமே உணரும் தவிப்பு அது! எத்தனை நயமாய் அன்றே உரைத்திருக்கிறார் அவ்வை.

கழக இலக்கியங்களின் சிறப்பை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி குணமதி அவர்களே.

M.Jagadeesan
04-02-2011, 02:08 AM
சங்க இலக்கியங்களைப் படிப்பது எளிதல்ல! படித்தவரிடம் பாடம் கேட்பது
ஒன்றே வழி.

கௌதமன்
04-02-2011, 04:31 PM
கழக இலக்கியங்களின் சிறப்பு படிக்கப் படிக்க இன்பம் தருவதாகும். தமிழில் படைப்பெழுத முனைவார் ஒருமுறையேனும் கழக இலக்கியங்களைப் படித்த தகுதியினராதல் வேண்டுமென்று கூறினால் அது மிகையுரை அன்று! உண்மையே!

முற்றிலும் உண்மை. காதலையும், வீரத்தையும், நல்லறத்தையும் தமிழ் இலக்கியம் கொண்டாடியது போல் வேறெதுவும் செய்ததில்லை.

ஆனால் எனக்கு ஆர்வம் இருக்கும் அளவுக்கு தமிழறிவு இல்லை.

கழக இலக்கியங்களைப் படிக்கும் அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொள்ள முயல்கிறேன்.

முயன்றால் முடியாதது இல்லையென்ற அய்யனின் வாக்கு பலிக்கட்டும்.!

குணமதி
21-05-2011, 12:35 PM
ஆர்வத்துடன் படித்த அன்புள்ளங்களுக்கும், படித்துக் கருத்துரைத்த மதிப்பிற்குரிய அன்புள்ளங்கள் கீதம், செகதீசன், கெளதமன் ஆகியோர்க்கும் மனமார்ந்த நன்றி.