PDA

View Full Version : பெத்தவளை பெத்தவள்.....ரங்கராஜன்
02-02-2011, 03:41 PM
பெத்தவளை பெத்தவள்.....

"இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே, என் கண்ணை அறிவாயா" என்னுடைய செல்போன் அலறியது.......

"ஹலோ சொல்லுங்க மாமா" என்றேன்..

"எப்படி டா இருக்க"

"நல்ல இருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க, பாட்டி எப்படி இருக்காங்க"

"நேத்து மறுபடியும் விழுந்துட்டாங்கடா"

"அய்யய்யோ என்ன ஆச்சு"

"உன்ன பார்க்கணும்னு சொல்றாங்க டா, சீக்கிரம் வந்து பார் டா"

"சரி மாமா" என் குரல் தழுதழுத்தது.

என் பாட்டி என் வாழ்க்கையை மீட்டுத் தந்தவள், உங்கள் அனைவரின் பாட்டியை போல தான், பாசத்தை தவிர வேறு ஏதும் அறியாதவள்.... சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுக்
கொண்டு வருகிறாள்.

அவள் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக 37 வருஷங்களுக்கு மேல் இருந்து, அது ஒரு சாதனை என்று கூறிக் கொண்டு லிம்கா கின்னஸ் அலுவகத்திற்கு எழுதி போட்டு விட்டு, பதிலுக்காக பல ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கிறாள். அப்படி என்ன சாதனை.... அவள் வேலைக்கு சேரும் போதே தலைமை ஆசிரியையாக சேர்ந்து 37 ஆண்டுகளும் ஒரே பள்ளியில் இருந்தாள். இதுவரை அப்படி மாற்றுதல் இல்லாமல் யாரும் ஒரே இடத்தில் இருந்தது இல்லை என்று சொல்கிறாள். அது பற்றி எனக்கு தெரியாது என்றாலும் அவள் சொல்வதை அவள் வாயை பார்த்தபடி அமர்ந்து கேட்பேன், அவள் சொல்வதை நான் கேட்பதிலே அவளுக்கு பெரிய சந்தோஷம்.

அவளுக்கு 15 வயதில் கல்யாணம் ஆகி, 9 பிள்ளைகளை பெற்று, 2 பிறக்கும் பொழுதே செத்து, மீதி 7 யும் நல்லபடியாக படிக்க வைத்து சமுதாயத்தில் நல்ல இடத்துக்கு வளர்த்து விட்டாள். அவளுக்கு ஒரே பையன் மீதி ஆறும் பெண்கள், அதில் ஒன்று என் அம்மா. மற்ற பிள்ளைகளை கம்பேர் செய்தால் என் அம்மா கொஞ்சம் மக்கு, அதனால் என் பாட்டிக்கு அவள் என்றால் பிடிக்குமாம். இது மட்டும் இல்லை அனைத்துக்கும் ஒரு காரணம் சொல்வாள், மூத்த பெண் என்பதால் முதல் பெண்ணை பிடிக்குமாம், ஒரே பையன் என்பதால் 2வதை பிடிக்குமாம், இருக்கும் குழந்தையிலே நல்லா படிப்பவள் என்பதால் 3வதை பிடிக்குமாம், பிறக்கும் போதே செத்து போன குழந்தைகளுக்கு அடுத்து பிறந்ததால், 4வது பிடிக்குமாம், படிப்பில் கொஞ்சம் கம்மி என்பதால் என் அம்மாவை பிடிக்குமாம், கடைக்குட்டி என்பதால் 6 வதை பிடிக்குமாம். அவள் 12 பெத்து இருந்தாலும் அனைத்தையும் அவளுக்கு பிடிக்கும், கண்டிப்பாக அதற்கும் அவள் ஒரு காரணம் சொல்வாள், ஞாயிற்றுக்கிழமையில் பிறந்ததால் என்று ஆரம்பித்து சனிக்கிழமை வரை முடிப்பாள்......... பாசக்காரப்பாட்டி.

அவளுக்கு இப்போ வயது 84 ஆகிறது, நான் தான் பாட்டியை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வேன். அங்கு நரஸ் வயதை கேட்பார்கள் நான் முந்திக் கொண்டு, வேண்டுமென்றே 89 என்பேன்.
உடனே ஒரு கோபம் வரும் பாருங்க அவளுக்கு "நோ சிஸ்டர் ஐ எம் ஜஸ்ட் 83 Finished and 84 running என்பாள் ஆங்கிலத்தில், செங்கல்பட்டில் இருக்கு நரஸ்சிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவளுக்கு எப்படி புரியும்.
நர்ஸும் தலையை சொறிந்துக் கொண்டு உடனே ரன்னிங்கா, ஓடெல்லாம் கூடாது என்பாள் புரியாமல். நான் சிரித்துக் கொண்டே இப்ப என் பொண்ணா பார்க்க வந்து இருக்கோம், ரன்னிங் சிட்டிங்னு சொல்ற ம்மா.... என்பேன் . நான் பிறப்பதற்கு சில மாதங்கள் முந்தி தான், அவளின் கணவனை பறிகொடுத்தால். அதனால் நான் என்றால் அவளுக்கு ஒரு ஆசை, அதனால் எனக்கு தன்னுடைய அப்பாவின் பெயரை வைத்தாள். தக்ஷ்ணாமூர்த்தி தன்னுடைய அப்பா, மிகப்பெரிய மனிதர் என்று அடிக்கடி சொல்வாள்........ நான் உடனே என்ன உயரமா இருப்பாரா ம்மா என்று கிண்டல் அடிப்பேன்,.,,,, கெரூவிடா நீ என்று திட்டுவாள். சின்ன வயதில் நான் என்ன தப்பு செய்தாலும் பொறுத்துக்கொண்டு என் அம்மா வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக மாட்டி விட்டபின் தான் தண்ணியே குடிப்பாள். அந்த அளவு பாசம் என் மீது, அடிக்கடி எனக்கு அவளுக்கும் சண்டை நடக்கும். மாமரத்தில் மாங்காயை அவள் எண்ணி வைத்து போக, நான் திருடி திண்ணு விடுவேன். அதற்கு தண்டனையாக 10 தொட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடிகளை குழந்தை போல நேசிப்பாள், ஒரு ரோஜா செடி பூத்து விட்டால் போதும், அன்னைக்கு பூரா மகிழ்ச்சியுடன் இருப்பாள், அதுவும் தான் வளர்த்த செடியில் இருந்த அந்த பூக்கள் அவளே பறித்து தன்னுடைய பேத்திகளுக்கும், மகள்களுக்கும் தருவாள், அப்போது அவள் முகத்தில் தெரியும் பெருமை இருக்கே தான் வளர்த்த செடி தந்த பூ என்ற பெருமை. ஆனால் அவளை தவிர செடியில் இருந்து யாராவது பூவை பறித்து வைத்து விட்டால் அவ்வளவு தான், அவர்களை திட்டி தீர்த்து விடுவாள்.

அவளுக்கும் எனக்கும் நடக்கும் பெரும்பாலும் சண்டைகள், தூக்க நேரத்தில் தான் நடக்கும், எனக்கு வெளிச்சம் இருந்தா தூக்கம் வராது. அவளுக்கு நான் தூங்கினா பிடிக்காது. அதனால வெளிச்சத்தை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். காலேஜ் படிக்கும் போது 9 மணிக்கு டான்ணு தூங்கிடுவேன், அதனால வந்து லைட்டை போட்டுட்டு என்னை வெறுப்பெத்துவாள். அதுவும் மதியம் தூங்கினால் அவ்வளவு தான், காது கிட்ட வந்து எதாவது புக்கை எடுத்து வைத்து சத்தமாக படிப்பால், பிளாஸ்டிக் கவரை வேண்டுமென்றே கசக்குவாள், நான் நன்றாக தூங்குவரை பொறுமையாக இருந்து விட்டு, என்னை எழுப்பி மணி என்ன?? என்று கேட்பாள். நான் பேயாக மாறி கத்துவேன் வீடே விழும் அளவிற்கு. அனைத்தையும் பொறுமையாக கேட்டபின் அவள் சொல்லுவாள்

"ஒருத்தரின் உண்மையான குணத்தை கண்டுபிடிக்க, அவங்கள தூக்கத்துல எழுப்பினா தான் தெரியும்" என்று சொல்லி விட்டு அமைதியாக நடந்து செல்வாள்.

நான் காலேஜில் அரியர்ஸ் வைக்கும் போது கூட, டேய் நைனா யாராவது டீச்சரை பிடிச்சி நல்ல பேரு வாங்கி பாஸ் செய்து விடுடா என்பாள். நான் பதில் சொல்வதற்கு முன்பு வேண்டாம் வேண்டாம் அப்புறம் டீச்சர்கள் மாட்டிப்பாங்க பாவம் அவங்க என்பாள்....... தொழில் பக்தியாம். இப்ப இருக்கும் டீச்சர்களுக்கு எங்க தொழில் பக்தி, பண பக்திதான் அதிகமாக இருக்கிறது. எனக்கு அம்மா இல்லாததால் அனைத்தையும் என் பாட்டியிடம் தான் முதலில் சொல்வேன். இப்போழுது என் காதலையும் அவளிடம் தான் முதலில் சொன்னேன். அது ஒரு மதியம் பொழுது

"நைனா வயசு ஆவது டா, உன் கல்யாணத்தை பார்த்தா போதும்டா எனக்கு, அதுக்கு அப்புறம் சந்தோஷமா போயிடுவேன்"

"ம்மா நீ நம்ம கடைசி சித்தி கல்யாணத்தில் இருந்து இந்த டயலாக்கை தான் சொல்லிட்டு இருக்க"

"இல்லடா இது நிஜம்"

"சும்மா இரும்மா, நீ நம்ம பாலமித்ரா (பாட்டியின் கொள்ளுபேத்தி) கல்யாணம் வரை இததான் சொல்லுவ கவலை வேண்டாம்"

"இல்லடா நைனா, சரி பொண்ணு பார்க்கட்டுமா"

"நான் பார்த்துவிட்டேன்"

"அப்படியா, என்ன பேரு"

"..........." பெயரை சொன்னேன்.

"என்டா வெளிநாட்டுகாரியா"

"இல்லமா நம் நாடு தான், தமிழ் தான், ஆனா கிறிஸ்டியன்"

"என்னது கிறிஸ்டியனா, டேய் நாம யார் தெரியுமா, வைஷ்ணவ குளத்துல...."

"சும்மா இரும்மா எந்த குளத்துலயும் என்னால மீன் பிடிக்க முடியாது, நான் அவளை தான் கல்யாணம் செஞ்சிப்பேன்"

"சரி பொண்ணு எப்படி இருப்பா செகப்பா இருப்பாளா"

"கொஞ்சம் கருப்பா இருப்பா"

"என்னது கருப்பா, வேண்டவே வேண்டாம்"

"நீ ரொம்ப கலராம்மா"

"நான் சாக்லெட் பிரவுன் டா"

"அதே வெங்காய பிரவுன் தான் அவளும்"

"சரி இதுக்கு முன்னாடி ஒருத்திய லவ் பண்றேன்னு சொன்னியே, அவ என்ன ஆனா"

"தெரியாது"

"தெரியாதுன்னா.. அவ எப்படி இருக்கா"

"அத அவ புருஷன் கிட்ட தான் கேட்க வேண்டும்"

"அதேபோல இதையும் விட்டு விடு"

"யம்மா ஊ வாயில நல்ல வார்த்தையே வராதா"

"சரி அந்த பொண்ணு என்ன பண்றா, அவங்க அப்பா என்ன பண்றாரு, எவ்வளவு சொத்து ேதறும், கூட பொறந்தவங்க எத்தனை பேர்"

"எவ்வளவு சொத்து தேறும்" என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. காரணம் ஒருமுறை சும்மா என்னவளிடம் கேட்டேன்.

"ஏய் நம்ம கல்யாணத்துக்கு உங்க வீட்டுல என்ன போடுவாங்க" என்று அவளை வம்பிழுக்க சீதனத்தை பற்றி கேட்டேன். அவள் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல்,

"பிரியாணி போடுவோம் தக்ஷ்சூ" என்றாள். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதை நினைத்து இப்போ சிரிப்பு வந்தது. என் பாட்டி என்னடா சிரிக்கிற என்றாள்.

"ஒண்ணுமில்ல ம்மா, அவ பயோ மெடிக்கல் எஞ்சினியர், ஒரே அப்பா தான், ஒரு அண்ணன், ஒரு அம்மா, ஒரு அக்கா".

"அவங்க அப்பா என்ன பண்றாரு"

"father ரா இருக்காரு....... சர்ச்சுல"

"வெரிகுட்...... இந்த சம்பந்தம் வேண்டவே வேண்டாம், வேற எதாவது இந்துவை பார்க்கலாம்"

"வெரி வெரி குட் நீயே பார்த்து நீயே கட்டிக்கோ"

"சொன்னா கேளுப்பா"

"நீ சொன்னா கேளும்மா, நான் கல்யாணம் செய்ற பொண்ணு எனக்கு பிடிச்சி இருக்கணுமா, இல்ல உனக்கு பிடிச்சி இருக்கணுமா"

"முதல்ல அந்த பொண்ணோட அப்பாவுக்கு உன்ன பிடிச்சு இருக்கணும்" என்றாளே பார்க்கலாம். எனக்கு வயிற்றில் புளியை கறைக்க ஆரம்பித்து விட்டது. என் பாட்டியிடம் பேசுவது போல
அவரிடம் பேச முடியாது. என் வாய்க்காகவே அவர் ஜென்மத்திற்கும் பொண்ணு தரமாட்டார். என் முகம் சுறுங்கியது, அதை பார்த்த அவள்

"என் பேரனை எல்லாருக்கும் பிடிக்கும் நீ கவலைப்படாதே, நான் பார்த்துக்குறேன்" என்று என் தாய்மாமாவிடம் சென்றாள், அங்கு என் பாட்டியின் அனைத்து பிள்ளைகளும் இருந்தார்கள்.

"யப்பா தச்சிண் எதோ அவனுக்கு பொண்ணு பாத்து இருக்காணாம் என்னன்னு கேளு" என்று அழகாக என்னை தாய்மாமாவிடம் கொத்துவிட்டு ஒரமாக அமர்ந்து விட்டாள். எல்லாரும் என்னையே
பார்த்தார்கள், என் பக்கத்தில் வந்தார்கள். சரமாரியாக கேள்விகள். எட்டு திசையில் இருந்தும் கேள்விகள்.

"கிறிஸ்டியனா"

"நீயும் மாறப்போறியா"

"இல்ல மாறிட்டீயா"

"என்ன கிறிஸ்டியன்"

"போச்சு போச்சு மானமே போச்சு"

"எங்க பார்த்த சர்ச்சிலையா"

"நீ எதுக்கு அங்க போன".....

கடுப்பான நான்.

"ஏன் கிறிஸ்டியன்ஸ் ரொட்டுல நடக்கமாட்டாங்ளா"

"ரோட்டலையா பார்த்த"

"ப்ச் இல்ல ஒரு பேச்சுக்கு சொன்னேன்"

"அந்த பொண்ணு இந்துவா மாறிடுமா"

"அவ எதுக்கு மாறணும்"

"நீ மாறிடுவீயா"

"நான் எதுக்கு மாறணும்"...... என் சொந்தங்கள் என்னை கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருக்க, என் மாமாவும் பாட்டியும் என்னை பொறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பொறுமையை இழந்த நான் பேசினேன் "சின்ன வயதில் இருந்து எல்லா கஷ்டத்தையும் பட்டாச்சு, இனிமேல் தான் எனக்கு வாழ்க்கை, எனக்கு இஷ்டப்பட்ட பெண்ணுடன் தான் நான் வாழ்வேன்
உங்களுக்கு இஷ்டப்பட்ட பெண்ணை நான் கல்யாணம் செஞ்சா இரண்டு பேரோட வாழ்க்கையும் வீணாயிடும். அதுக்கு மதம் எல்லாம் பார்க்காம நீங்க கல்யாணம் செஞ்சி வையுங்க, கல்யாணம் கூட
ரிஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சிக்கலாம், ரிசப்ஷன் கிராண்டா வச்சிக்கலாம்........"

"இப்ப யாரு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா" என்றது எதோ ஒரு மூலையில் இருந்த எதோ ஒரு சொந்தம்.

"ஒத்துக்கிட்டா இதுதான் என் பிளான்"......... என்று வீட்டை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன். வரும் போது பாட்டியை பார்த்தேன்.

"போயிட்டு வாடா ராஜா நான் பார்த்துக்குறேன்" என்றாள் என் தலையில் முத்தம் கொடுத்து. அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் கிளம்பி வந்து விட்டேன்.

அவளை சென்று சந்திக்க வேண்டும், சந்தித்து என்னுடைய காதல் மறுபடியும் தோல்வியடைந்து விட்டது என்று சொல்ல வேண்டும், அப்போது கூட என்ன சொல்வாள் தெரியுமா...

"சரி பரவாயில்லை விடுடா, என் ராஜாவுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும்" என்பாள்..... அவள் உலகத்தில் நான் ராஜா தான்..... பாசக்கார பாட்டி...

(என் பாட்டியை பற்றி எழுத வைத்த கீதம் அக்காவின், உறவு விழுதுகள் பற்றி ஊஞ்சலாடும் நினைவுகள் என்ற திரிக்கு நன்றிகள்)

கீதம்
02-02-2011, 08:53 PM
தலைமுறைகளின் இடைவெளி குறைக்கும் இதுபோன்ற ஆக்கங்களை வரவேற்கிறேன் ரங்கராஜன். உங்களை எழுதவைத்ததில் என் பங்கும் இருக்கிறது என்பதால் மகிழ்கிறேன். அதிலும் உங்கள் பாட்டிக்கும் உங்களுக்குமான உறவு ஒரு அபூர்வ பிணைப்பு என்றுதான் சொல்லவேண்டும். உங்களை நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள். உங்கள் பாட்டியைப் போலவேதான் எனக்கும் என் அம்மாச்சி. அடுத்ததாய் எழுதவிருக்கிறேன்.

பாட்டி உடல்நிலை தேறி ஆசைப்பேரனின் திருமணவாழ்வை பார்த்துக் களிக்க நீடித்த ஆயுளுடன் இருப்பார். அதற்கான மன உறுதி அவருக்கு இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். கவலையை விடுங்கள்.

ஜனகன்
02-02-2011, 09:39 PM
மனச தொட்ட கதை ரங்கராஜன்.உங்க கதை என்றாலே ஒரு ஆர்வத்தில் தான் படிப்பேன்.


கதையோடு ஒன்றியே போய் விட்டேன்......பாட்டி என்றாலே பெத்தபிள்ளைகளை விட பேரக் குழந்தைகள் மேல் தான் பாசம் அதிகம்.

அது சரி உங்கள் இரண்டு காதலும் தோல்வி அடைந்ததின் காரணம் என்னவோ?.

தொடர்ந்து இதுபோல சூப்பர் கதைகளா தந்துட்டே இருங்க. வாழ்த்துக்கள் :)

Mano.G.
02-02-2011, 11:47 PM
மனிதன் விழுவது எழுவதற்காக,
நினைத்தது நடக்கவில்லை என்றால்
நடக்க போவது மேலும் சிறப்பாக
இருக்கும் என பெரியவர்கள் சொல்லுவர்கள்,
நல்லதே நடக்கும்.

ஆமா பாட்டி விழுந்தாங்க சொன்னீ ங்கலே அவங்க எப்படி இருகாங்க

மதி
03-02-2011, 01:41 AM
வழக்கம் போல கலகலப்பான எழுத்துநடை... இறுதியில் பாட்டியிடம் சொல்லவேண்டிய விஷயம் கனம்...

நல்லதே நடக்கும்.!

ரங்கராஜன்
03-02-2011, 02:19 AM
நன்றி கீதம் அக்கா

தொடர்ந்து பின்னுட்டமிட்டு வாழ்த்தும் உங்களுக்கு நன்றிகள் கோடி... உங்கள் காலத்திலும் எங்கள் காலத்திலும் இருந்த தாத்தா பாட்டி பாசம் எல்லாம் இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. பல குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளை போட்டோகளிலோ, இணையதளத்திலோ, போன் வழியாகவோ தான் பார்க்கிறார்கள். சில வருடத்திற்கு ஒரு முறை பார்க்கும் இன்ஷூரன்ஸ் ஏஜன்டைப்போல தான் அவர்களை குழந்தைகள் பார்க்க போகிறார்கள்.

இந்த காரணத்தினாலே தான் இப்போ இருக்கும் குழந்தைகளுக்கு, பாசம், அன்பு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, இரக்ககுணம், உதவும் குணம் இது எதுவுமே இல்லாமல் சுயநல கூட்டமாக உருவெடுத்து வருகிறது. முடிந்த வரை இதை மாற்ற முயற்சிப்போம், நம் வருங்கால தலைமுறையின் வழியாக....

நன்றி ஜனகன்.

உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி ஜனகன்.... இரண்டு காதல் தோல்விகளைப் பற்றி கேட்டு இருந்தீர்கள்..... அதற்கு 90 சதவீதம் நான் தான் காரணம்.... எல்லா மனிதர்களைப் போல எனக்குள்ளும் சில மிருகங்கள் இருக்கின்றன, பாசம் வைப்பதில் நான் ஒரு ராட்ஷசன், அதே போல பாசத்தை எதிர்பார்ப்பதில் நான் ராட்ஷச கூட்டத்தின் தலைவன்....... இதனால் எழுந்த பிரச்சனை தான்,........ நல்ல சுவாரஸ்யமான காதல் தோல்வி தான் என்னுடையது..... முடிந்தால் எழுதுகிறேன்.

நன்றி மனோ அண்ணா

பாட்டி இப்போ பரவாயில்லையா இருக்காங்க, முதுமையை விட பெரிய நோய் என்னவாக இருக்க முடியும்.

ரங்கராஜன்
03-02-2011, 02:20 AM
வழக்கம் போல கலகலப்பான எழுத்துநடை... இறுதியில் பாட்டியிடம் சொல்லவேண்டிய விஷயம் கனம்...

நல்லதே நடக்கும்.!

விடுடா மச்சி எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா...:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

மதி
03-02-2011, 02:54 AM
விடுடா மச்சி எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா...:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
அதானே.. சேம் ப்ளட்.:icon_b::icon_b::icon_rollout::icon_rollout:

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 06:34 AM
நண்பரே ! இப்போதெல்லாம் ரங்கராஜன் எனும் பெயரில் கதை ஏதும் வந்துள்ளதா என்றே என் கண்கள் தேடுது மன்றத்தில் உங்கள் கதை யில் ஒன்றி வேறெங்கும் செல்வதில்லை என் மனம் ..வாழ்த்துகள் நண்பரே உங்கள் நடை அதன் எதார்த்தம் இதுபோல் என்றும் தொடரட்டும் ...இது உண்மை நிகழ்வேனில் பாட்டி எப்படி இருக்காங்க ? நண்பரே
தோல்விதான் வெற்றிக்கு முதல் ,இரண்டாவது படி எல்லாம் உங்கள் வாழ்க்கை இனிக்க என் வாழ்த்துகள் ....

அமரன்
11-02-2011, 11:03 AM
பாட்டிக்கும் பேரனுக்கும் நடக்கும் சம்பாசனைகள் எப்போதும் இனிமையாகவே இருக்கும். குழந்தையாக குமரனாக பருவம் நோக்கிப் படரும் பாட்டிகளின் மனங்கள் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. பாட்டியின் செட்டைக்குள் வளர்ந்தவன் என்ற முறையில் ஒவ்வொரு எழுத்திலும் உணர்வோடும் காட்சிகளைக் காண்கிறேன். பாட்டி நலமடைந்ததை இட்டு மெத்த மகிழ்ச்சி.

Nivas.T
11-02-2011, 01:06 PM
பாட்டியின் குணங்கள்
பேரனுக்கும் பாட்டிக்கும் உள்ள பாசப் பிணைப்பு
கணக்க வைக்கும் கடைசி வரிகள்
எழுதிய விதம்
துவங்கிய விதம்
அனைத்தும் அருமை
நன்றி ரங்கராஜன்