PDA

View Full Version : இலக்கியங்கள் காட்டும் மன்மதன் அம்பு



கீதம்
02-02-2011, 11:22 AM
மன்மதன் அம்பு என்றதும் திரைப்படம் நினைவுக்கு வரலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது காதல் தேவனாம் மன்மதனின் அம்பைப் பற்றியது. இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் மன்மதனின் பாணம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

காமன், காமதேவன், மதனன், மாரன், மகரக்கொடியோன், வசந்தன் என்பனவெல்லாம் மன்மதனைக் குறிக்கும் வேறு சில பெயர்கள். மன்மதனின் மனைவி ரதி தேவி. மன்மதனின் கையிலிருக்கும் கரும்பாலான வில்லில் ரீங்கரித்து மயக்கும் வண்டுகளை நாணேற்றி தாமரை, முல்லை, அசோகம், மா, நீலோற்பவம் ஆகிய ஐந்து மலர்களாலான அம்பும் கொண்டு அவன் தாக்கினால் நிலைகுலையாதவரும் உண்டோ?

திங்கள்வெண் குடைக்கீழ்த் தென்றற் றேர்மிசை ஏறி வாரி
மங்கல முரசம் ஆர்ப்ப மகரகே தனநின் றோங்கக்
கங்குல்வெங் களிறு சூழக் கடுங்கிளிப் புரவி தூண்டி
அங்கண்மா ஞால மெல்லாம் அனங்கவேள் பவனி வந்தான்.

(அரிச்சந்திரபுராணம்)

மானிடர்க்குக் காதல் உருவாகும் காரணிகள் யாவும் மன்மதனுக்குரியவையாம். பகலெல்லாம் கதிரவன் காய்ந்த இடங்களைத் தன் தண்ணொளியால் குளிர்விக்கும் திங்கள் அவன் வெண்கொற்றக் குடையாம், இதமாய் வீசி உடல் வருடும் தென்றல் அவன் பவனி வரும் தேராம், முழுநிலவின் ஒளியில் பொங்கி நுரைத்து ஆர்ப்பரிக்கும் அலையோசை அவன் வருகிறானென்பதை பறைசாற்றும் முரசாம். கருமேகங்கள் யாவும் அவனைச் சூழ்ந்து வரும் களிறுகளாம். இத்தனை முஸ்தீபுகளுடன் அவன் தன் மனைவி ரதியுடன் தன் கிளி வாகனத்தில் ஏறி வருவானாம்.

மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்…. பாடல் நினைவுக்கு வருகிறதா?

அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் லேந்தி
மகர வெல்கொடி மைந்தன் றிரிதர
நகரங் காவல் நனிசிறந் ததுவென்.

(சிலப்பதிகாரம் )

விளக்கம்: இரவுப்பொழுதில் ஒரு மாத்திரை கால அளவும் துஞ்சாது மணமிகு மலர்களைத் தன் கரும்புவில்லிலேந்தி தன் மகரக்கொடி பறக்கக் காமன் நகர்வலம் வருதலால் நகர்க்காவல் மிகவும் சிறந்து விளங்கிற்றாம்.

கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்.
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்.
என்னை எய்து தொலைக்கும் என்றால். இனி.
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே?

(கம்பராமாயணம்)

விளக்கம்: மன்மதனானவன் கரும்புவில்லினை வளைத்து திருமகளையொத்த சீதையை நான் நினைத்திருக்கும்பொருட்டு மலரம்பு மழையால் என்னை வீழ்த்துவானாகின் இனி வலிமை என்று சொல்லப்படும் குணம் யாரிடத்தில்தான் இருக்கும்?

மன்மதன் தொடுக்கும் மலரம்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் காதல் நோயை உண்டாக்கக்கூடியவை. முதலில் செலுத்தப்படும் தாமரை அம்பு, காதலரைப் பற்றிய நினைவைத் தூண்டி அவர்பால் காதல்போதையைத் தோற்றுவிக்குமாம். அசோகம்பூ ஊண் மறக்கச் செய்யுமாம். மாம்பூவோ காதலர் நினைவால் மேனியில் பசலை படர்த்த, முல்லை காதற்பித்தைத் தலைக்கேற்றி உன்மத்தம் பீடிக்கச்செய்யுமாம்.

கடைசியாகச் செலுத்தப்படும் நீலோற்பவ மலரம்பு கொடுந்தன்மை கொண்டதாம். அது விரக மேலீட்டால் காதலர் உயிரையும் பறித்துவிடக்கூடியதாம். அதனாலேயே மன்மதன் மனமிரங்கி, உயிர் பறிக்கும் அவ்வம்பை விடுத்து மற்ற நான்கு மலரம்புகளை மட்டுமே எய்து காதல் நோயுண்டாக்குவதாக இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நினைக்கு மரவிந்தம் நீள்பசலை மாம்பூ
வனைத்துணவு நீக்கு மசோகு - வனத்திலுறு
முல்லை கிடைகாட்டு மாதே முழுநீலங்
கொல்லுமத னம்பின் குணம்.

நாஞ்சில் த.க.ஜெய்
02-02-2011, 11:47 AM
இலக்கியத்தில் ஒரு புதியதோர் தகவல் ..காமனின் புதிய பல பெயர்கள் ... அசோகம் ,நீலோற்பவம் இந்த மலர்களை எப்படியிருக்கும்? .. இது எந்த இலக்கியத்தில் உள்ள வரிகள்? நண்பரே!

கீதம்
03-02-2011, 03:32 AM
பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய் அவர்களே.முதல் பாடல் அரிச்சந்திரபுராணத்தில் உள்ளது. கடைசிப்பாடல் தெரியவில்லை. மன்னிக்கவும்.

நீலக்குவளை மலர்தான் நீலோற்பவம் என்று குறிப்பிடப்படுகிறது. அதைப் பற்றித் தெரிய ஹேகாவின் இந்தத்திரி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=508928&postcount=20) உதவும். அசோகம் பற்றித் தெரியவில்லை. இனிமேல் ஹேகா தொகுத்து வழங்கவிருக்கும் பட்டியலில் வரக்கூடும். (நன்றி: ஹேகா)

M.Jagadeesan
03-02-2011, 03:57 AM
மன்மதனைப் பற்றிய பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!

கீதம்
03-02-2011, 07:47 AM
மன்மதனைப் பற்றிய பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!

ஊக்குவிக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

குணமதி
03-02-2011, 02:55 PM
அருமையான தொகுப்பளித்தமைக்குப் பாராட்டு!

காமனின் பெயர்கள் விடுபட்டவற்றில் சில -

திருமகண்மைந்தன், சித்தச்சன், உருவிலி, வேனிலாளி, பூவாளி, திங்கள்வெண்குடையோன், தென்றல்தேரன், வில்லி,மோகன், ஐங்கணைக்கிழவன், வேள், மான்மைந்தன், ஆழிமுரசோன் ...

நன்றி.

கௌதமன்
03-02-2011, 04:58 PM
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

மாரன் என்றதும் பாரதியாரின் பாடல் நினைவுக்கு வந்தது.


காதலர் உலகத்துக்கு இன்றும் மன்மதன் ஒரு சுகமான கற்பனை.

நன்றி கீதம்.

கீதம்
03-02-2011, 08:24 PM
அருமையான தொகுப்பளித்தமைக்குப் பாராட்டு!

காமனின் பெயர்கள் விடுபட்டவற்றில் சில -

திருமகண்மைந்தன், சித்தச்சன், உருவிலி, வேனிலாளி, பூவாளி, திங்கள்வெண்குடையோன், தென்றல்தேரன், வில்லி,மோகன், ஐங்கணைக்கிழவன், வேள், மான்மைந்தன், ஆழிமுரசோன் ...

நன்றி.

பாராட்டுக்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றி குணமதி அவர்களே.

கீதம்
03-02-2011, 08:27 PM
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

மாரன் என்றதும் பாரதியாரின் பாடல் நினைவுக்கு வந்தது.

காதலர் உலகத்துக்கு இன்றும் மன்மதன் ஒரு சுகமான கற்பனை.

நன்றி கீதம்.

பின்னூட்டத்துக்கு நன்றி கெளதமன்.

மதி
04-02-2011, 12:27 AM
பல விஷயங்களை அறிந்து கொண்டேன்..
நன்றி..

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 05:41 PM
பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய் அவர்களே.முதல் பாடல் அரிச்சந்திரபுராணத்தில் உள்ளது. கடைசிப்பாடல் தெரியவில்லை. மன்னிக்கவும்.

நீலக்குவளை மலர்தான் நீலோற்பவம் என்று குறிப்பிடப்படுகிறது. அதைப் பற்றித் தெரிய ஹேகாவின் இந்தத்திரி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=508928&postcount=20) உதவும். அசோகம் பற்றித் தெரியவில்லை. இனிமேல் ஹேகா தொகுத்து வழங்கவிருக்கும் பட்டியலில் வரக்கூடும். (நன்றி: ஹேகா)

எனது சந்தேகம் தீர்த்த நண்பருக்கு என் நன்றிகள் ...

உமாமீனா
12-02-2011, 10:19 AM
நல்ல பல செய்திகளை அறிந்துகொண்டேன் நன்றி