PDA

View Full Version : நதிக்கரையில் இளவரசிஇளசு
01-12-2003, 06:38 PM
வளர்ந்துவிட்டாள்
நம் இளவரசி...

கர்ணனின் கவச -குண்டலம் போல்
கத்தியும் கேடயமும்
வளர்த்துக்கொண்டாள் இளவரசி...

முகம் பார்த்துப் பேசா
"முதிர்ந்த" எதிரிகளுக்காய் கேடயம்..

நட்புக் கூடாரத்தில்
மூக்கை நீட்டி
முழு உடலும் புகுத்த வந்த
இளைய ஒட்டகம் விரட்ட
கத்தி....

கடினப் பயணத்தில்
கனக்கும் வேண்டாத சுமைகள்..
கடிந்துகொண்டாள்...
தன்னையே சிலநேரம்..
பயணத்தைப் பலநேரம்...

சிரிப்பையும் சிநேகிதத்தையும்
பண்டமாற்றாய் எதிர்பார்த்து
பயணம் புறப்பட்டவள்...

மறைபொருள் வியாபார
மனிதர்களை எதிர்கொண்டு
சலிப்பும் அலுப்புமாய்
சரயூ நதிக்கரை சேர்ந்தாள்...

ஓடும் நதி ஓட...
துள்ளிய வெள்ளலை சொன்னது
"என்னில் போட்டுவிடு கண்ணே
உன் கத்தியும் கேடயமும்..

உன்னை மட்டும் சுமந்து
உன் பயணம் இனி தொடரட்டும்..."

ஆழத்தில் மறைந்தன ஆயுதங்கள்...
அடுத்து ஒரு மாற்றம் ..
சரயூவின் ஓட்டத்தில் இல்லை..
பாரம் குறைந்த அவள் பயணத்தில்...

poo
01-12-2003, 06:55 PM
படிக்கும்போதே ஆயிரம் எண்ண ஓட்டங்கள் மனதுக்குள்...
வளர்ந்த இளவரசிக்கு வாழ்த்துக்கள்...
இப்போதெல்லாம் நிறையவே குழம்பிக் கொள்ள வேண்டியுள்ளது...

முத்து
01-12-2003, 10:28 PM
இளசு அண்ணா ...
இப்போதுதான் படிக்கிறேன் ...
இளவரசி கவிதை நன்றாக இருக்கிறது ...
இன்னும் இதுபோல் நிறைய தாருங்கள் ...

கவிதையில் வரும் ஒட்டகக்கதையை மட்டும் :D
சின்ன வயதில் சிறுவர் மலரில்
படித்த ஞாபகம் ....
நன்றாக இருக்கிறது ... ( ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லையே ... :))

பாரதி
02-12-2003, 12:44 AM
அண்ணா... நீங்கள் சொல்ல வந்த விசயம் எனக்கு புரிவது போல தெரிகிறது. நீங்கள் குறிப்பிடுவது அரசியையா...? இல்லை உண்மையிலேயே இளவரசிதானா....? "முதிர்ந்த" எதிரிகள்...ரசித்தேன் அண்ணா. பாராட்டுக்கள்.

இக்பால்
02-12-2003, 03:26 AM
பரவாயில்லை ரகம்தான் இளசு அண்ணா.
விளக்கம் தந்தால் பாராட்டலாம்.
-அன்புடன் இளவல்.

அலை...
02-12-2003, 05:52 AM
பரவாயில்லை ரகம்தான் இளசு அண்ணா.
விளக்கம் தந்தால் பாராட்டலாம்.
-அன்புடன் இளவல்.


அஹா..என் சந்தேகத்தை தீர்க்க வந்த சரியானப் பாடல்..
அரசருக்கே பொருள் விளங்கிவிட்டது...
நீர் யார் நக்கீரரா??
(சும்மா விளையாட்டுக்கு..)
அலை...

Nanban
02-12-2003, 08:36 AM
ம்ம்.. ம்ம்.. புரிகிறது......
குறியீடுகள் குழப்புகிறது என்று ஒரு தளத்தில் பூ குறைபட்டு கொண்டார்......
இங்கு குறியீடுகளே களி நடனம் புரிகிறது.....
ஆனால், இதைத் தொடர வேண்டுமா?
கருத்து மோதல்கள் எல்லா இடங்களிலும் இருந்தாலும், அதை களைந்து விட்டு புறப்பட்டால் தான், பயணம் இனிமையாக இருக்கும்...
இல்லையென்றால், எத்தனை ஆயுதங்களைத் தூக்கி எறிந்தாலும், மனதில் தோன்றும் வைராக்கியம் என்ற ஆயுதம், சுமையாகத் தான் தொங்கும் - தோளில்.

போட்டி ஒன்றில்
கேள்வி ஒன்று....

உன்னுடலில்
நீ விரும்பும்
அழகியதைக் கூறு.

யோசிக்காது
அவனும்
பதில் சொன்னான் -

என்னுடலில்
நான் விரும்பும் அழகு
தோள்கள்.

கேட்டவர் திகைத்தனர் -

கண்கள் இல்லையா -
எத்தனை கூர்மை!

திரண்ட மார்பில்லையா -
எத்தனை திண்மை!

முழங்கால் தொடும் கைகளில்லையா -
எத்தனை வலிமை!

சொன்னவன் விளக்கினான் -

நீங்கள் சொன்னதெல்லாம்
அழகு தான் - மறுப்பில்லை.

துவண்டு சரியும்
துக்கத்தால் நீர் சொறிந்து
நிற்கும் உற்றவன்
ஒருவன்
சாய்ந்து கொள்ள
உதவுவது தானே
தோள்கள்....

இக்பால்
02-12-2003, 09:13 AM
ஹலோ...
குறியீடுகள் ... என்றால் எதைக் குறிக்கிறது?
உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை?
ஜாடைமாடையாகப் பேசுவதா?
-அன்புடன் அண்ணா.

இக்பால்
02-12-2003, 09:18 AM
அலைத் தம்பி...என்ன...என்னைப் போய் இப்படிச் சொல்லுகிறீர்கள்?
நான் உங்கள் அண்ணா அல்லவா? கெட்டது எனத் தெரிந்தால்
ஏன் எனக் கேட்பேன்? வேண்டாம் என்பேன். நல்லது எனப் பட்டால்
பாராட்டுவேன். என்னிடம் எந்த ரகசியமும் இல்லைங்க தம்பி.
என்னை நேரில் பார்த்தது, பழகியது இல்லை அல்லவா...அதுதான்.
-அன்புடன் அண்ணா.

Nanban
02-12-2003, 09:30 AM
ஹலோ...
குறியீடுகள் ... என்றால் எதைக் குறிக்கிறது?
உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை?
ஜாடைமாடையாகப் பேசுவதா?
-அன்புடன் அண்ணா.


ஒரு பொருளை நேரிடையாகக் குறிப்பிடாமல், அந்தப் பொருளைக் குறிப்பால் உணர்த்தும் ஒத்த பண்புகளுடைய மாற்றுச் சொல்.........கள்..
நீங்கள் சொன்னதைப் போல எளிமையாக சொன்னால், ஜாடை, மாடையாகப் பேசுவது கூட குறியீடுகள்.......தான்.
சொல்லப்படும் கருத்திற்கு இனிமையும் வலுவும் சேர்ப்பதற்கு கவிதைகளில் கையாளப்படுவது.......

இக்பால்
02-12-2003, 09:49 AM
உண்மையாகவா நண்பர் நண்பன்.
ஹலோ... கம் ஆன்.... "என்னையா சொன்னாய்...சுண்டைக்காய்"
என்னும் கர்வத்தை விட்டு வெளியில் வாருங்கள். தனிமனிதர்கள்
பலவீனங்களை மாற்றி பலமுடையவர்களாக மாற்றுவோம். அது
நம் மன்றத்தின் சிறப்பாக இருக்கட்டும். பிரபா ·பிரண்ட் இந்த
மன்றம் வந்து சில வேண்டாத பழக்கவழக்கங்கள் விட்டுப் போனதாக
சொன்னபொழுது எவ்வளவு சந்தோசம் தெரியுமா? கம் ஆன்...
மக்களே...-அன்புடன் இக்பால்.

Nanban
02-12-2003, 10:16 AM
உண்மையாகவா நண்பர் நண்பன். ஹலோ... கம் ஆன்.. "என்னையா சொன்னாய்...சுண்டைக்காய்"
என்னும் கர்வத்தை விட்டு வெளியில் வாருங்கள்

கர்வம்........?!?!
இருக்கலாம்....... இல்லாமலும் இருக்கலாம்.......
என்னிடத்தில் எதை கர்வம் என நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று சொன்னால் தானே தெரியும்? சொல்லாமல் மாற்றிக் கொள்ளுங்கள் என்றால், நான் எதை என்று எண்ணுவேன்.....??
தயங்காமல் குறிப்பிடுங்கள்.....
நன்றி.....

இக்பால்
02-12-2003, 10:30 AM
அடடா.... நண்பர் நண்பன்... நல்லாப் பாருங்க.
உண்மையாகவா நண்பர் நண்பன் என்பதுடன் உங்கள் பகுதி முடிந்தது.
அப்புறம் சொன்னது எல்லாம் பொதுவாக இந்த உலகத்தில், நம்
மன்றத்தில் எல்லோருக்கும். யாரையும் மனதில் நினைக்காமல்
உண்மையிலேயேப் பொதுவாக சொன்னேன்.
ப்ளீஸ்...சிரியுங்களேன். எனக்கு எப்படியோ இருக்கிறது.
-அன்புடன் இக்பால்.

Nanban
02-12-2003, 12:36 PM
:D:D:D
கோபமில்லை.......
தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம் - தவறில்லை......
நாம் முகம் பார்க்கும் கண்ணாடிகள் நம் முதுகைக் காட்டுவதில்லை.
இன்னொருவர் உதவினால் தான் நம் முதுகை நாம் பார்க்க முடியும்.
நீங்கள் தவறாக எதுவும் எழுதி விட்டதாக நான் நினைக்கவில்லை.......
அன்புடன்.......

இக்பால்
02-12-2003, 01:48 PM
நண்பர் நண்பன் நிச்சயம் தவறு எனப் படும்பொழுது அது யாராக
இருந்தாலும் ஒரு உண்மையான சகோதரனாக இருந்து எடுத்துச்
சொல்வேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே.
-அன்புடன் இக்பால்.

சேரன்கயல்
02-12-2003, 02:14 PM
குறியீடுகளைப் பற்றிய இக்பால் அண்ணனின் சந்தேக துளிகளுக்கு நண்பன் கொடுத்த குறுவிளக்கம் திருப்தியே...
ஆனாலும் கவிதையில் எளிமையை ரசிக்கும் வர்க்கத்திலிருப்பதால் நானும் தலையைச் சொறிந்துகொள்கிறேன்...
சில வேளைகளில் குறியீடுகள் கவிதை படைக்கும் கவிஞருக்கு வசப்பட்டு, வசதிப்பட்டு, திருப்திபடவும் அமைவதுபோல படிக்கும்போது (என் போன்ற) பலரை திண்டாடவும் வைத்து விடுகிறது...நமது இலக்கிய வடிவங்கள் பலவும் இன்றைக்கு நமது இளம் தலைமுறையினருக்கு புரியாமல் போவது போல...கோனார் உரையை வைத்துக் கொண்டு கவிதைகள் படிக்கும் அளவுக்கு பல கவிஞர்கள் எழுதுகின்றனர்...அணிசேர்ந்து அழகு சேர்க்கும் வார்த்தை ஜாலங்கள் இப்படி குறியீடுகளில் இலக்கை அடைவதில் வீரியமில்லாமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கமும் உண்டு...
உங்களது தோள் பற்றிய கவிதையை படிக்கும்போது சட்டென எழும் உணர்வுகள்...பல கவிஞர்களது குறியீடு வித்தையில் கலங்கி விடுகிறதே என்பதுதான் என் தனிப்பட்ட கவலை...

சேரன்கயல்
02-12-2003, 02:15 PM
இனிய இளசு...
புதிய முயற்சியா இல்லை மறைத்து வைத்திருந்த அஸ்திரமா...
புது நடையில் இளவரசி வலம் வந்திருப்பது மகிழ்ச்சியே...
(இளசுக்குனு ஒரு டச் இருக்கே அதை விட்டுடாதீங்க...)

Nanban
02-12-2003, 02:20 PM
சித்திரமும் கைப்பழக்கம்.......
தொடர்ந்து பயணிக்கும் பொழுது, இருள் விலகும், பாதைகள் புரியும்......
தோள்கள்....... திட்டமிட்டு எழுதவில்லை......
ஆனால் அதிலும் குறியீடுகள் இருக்கின்றன......
சமீபகாலமாக, நிறைய ... (நண்பர் இக்பால் சொன்னதைப் போல ஜாடைமாடையாக) குறியீட்டுக் கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன...... பிறர் மனதை புண்படுத்தா வண்ணம்.... கவிதைப் பக்கத்தில் இருக்கும் முதல் இரண்டு பக்கத்திலுள்ள கவிதைகளையும் படித்து விடுங்கள்...... குறியீட்டின் பயன்பாடு புரியும்.........
எந்தக் குறியீடுகளும் இல்லாது நிறையக் கவிதைகளை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்........ படியுங்கள்.......
அன்புடன்.........

சேரன்கயல்
02-12-2003, 02:24 PM
குறியீடுகளே வேண்டாம் என்று சொல்லவில்லை நண்பர் நண்பன்...
உங்களைக் குறிப்பிட்டும் இந்த கருத்தைப் பதிக்கவில்லை...குறியீடுகளைப் பற்றி கரிசனைகள் எழுந்த காரணம், என் மனதில் இருந்ததையும் பதித்தேன் அவ்வளவே...
இலை மறை காயின் அழகு சொல்லியா தெரியவேண்டும்...

இளசு
02-12-2003, 07:41 PM
அன்பு நண்பர்களுக்கு
யாரையும் இப்பதிவு குழப்பி இருந்தால்
முதலில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
நான் சொல்லவந்ததை நேரிடையாகவே சொல்லியதாகத்தான்
எண்ணிப் பதித்தேன்.
ஒரு பருவப்பெண்.
மதித்துப் பழகிய வயதில் மூத்தோர்
தவறாய்ப் பார்வை தந்தால் -
தடுப்புக்காய் சில விலகல்கள்...முயற்சிகள்..= கேடயம்.
சமவயதுள்ளவரின் விரும்பத்தகாத அணுகுமுறையை
விரட்டி அடிக்க சில முறைத்தல்கள், சிடுசிடுப்புகள் = கத்தி
இரண்டும் இல்லாமல்
இயல்பாய் சமுதாயத்தில் - கல்லூரியில், அலுவலகத்தில்
நடமாடவே அவளுக்கு ஆசை.
அவள் பெண் என்னும் போகப்பொருளாய் எண்ணும்
பலரால் ஆயுதங்களையும் சுமந்தே வாழ்கிறாள்.
அதன் சுமையில் தன்னையும் வாழ்வையும் அடிக்கடி வெறுக்கிறாள்.
நதி என்பது ஆத்மநட்போ, குருவோ, சுயத்தெளிவோ...
அங்கே அவள் சுமைகளை இறக்கிவைக்கிறாள்.
நட்புக்கோ, குருவுக்கோ - அது கூடுதல் சுமையில்லை.
ஆனால் அவள் மனம் கனமின்றி இலகுவாகி முன் நோக்கி நடக்கிறாள்.
இதுதான் - இது மட்டுந்தான் நான் சொல்லவந்தது.

puppy
02-12-2003, 09:20 PM
நன்று இளசே.....கவிதை.....நான் கருத்து பதித்துவிட்டேன் என்று நினைத்து இருந்தேன்...ஆனால் தினமும் படித்து மட்டுமே சென்று இருக்கிறேன்......படிக்கும் போது மனம் இலகுவாக கருத்து சொல்ல மறந்துவிட்டேன்னு நினைக்கிறேன்.......

அலை...
03-12-2003, 01:23 AM
அலைத் தம்பி...என்ன...என்னைப் போய் இப்படிச் சொல்லுகிறீர்கள்?
நான் உங்கள் அண்ணா அல்லவா? கெட்டது எனத் தெரிந்தால்
ஏன் எனக் கேட்பேன்? வேண்டாம் என்பேன். நல்லது எனப் பட்டால்
பாராட்டுவேன். என்னிடம் எந்த ரகசியமும் இல்லைங்க தம்பி.
என்னை நேரில் பார்த்தது, பழகியது இல்லை அல்லவா...அதுதான்.
-அன்புடன் அண்ணா.

மண்ணிக்கவும் அண்ணா...சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்...உண்மையை சொன்னால்..இளசு சொன்ன விளக்கத்துக்கும் நான் புரிந்துகொண்ட கருத்தும் வேறு வேறு...
நானும் குழம்பித்தான் போயிருந்தேன் போல..ஆனால் அதையும் சத்தமாக சொல்ல உங்களைப் போல நல்ல மனசு இல்லை...
அன்புடன்
அலை

இக்பால்
03-12-2003, 07:55 AM
இளசு அண்ணா...கருத்தாழமான கவிதையாக இருக்கிறது.
நல்ல கருத்துக்கள். உண்மையில் இந்த அளவில் புரிந்து
கொள்ளாமல்தான் விளக்கம் கேட்டேன். பாராட்டுக்கள்
இளசு அண்ணா.-அன்புடன் இளவல்.

kavitha
12-03-2004, 07:16 AM
இளசு அண்ணா,
மிக அருமையான கவிதை. உட்பொருள் அபாரம்.
ஆனால் உங்கள் விளக்கத்திற்கு பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது.
நட்பை பற்றியோ, குருவை பற்றியோ எங்குமே குறிப்பிட வில்லையே தாங்கள்!
வெறும் குறியீடுகள் பொருளை உணர்த்துமா?
பொருளுக்கு பின் கவிதை இன்னும் படிக்க அருமையாக உள்ளது. இதையே இலை மறை கனியாக விளக்கி இருக்கலாம். கவிதையை மட்டும் படிக்கையில் இலை தான் தெரிகிறது.

samuthira
12-03-2004, 09:07 AM
நல்ல கவிதை, ஆழமான கருத்து,
கவி சொன்னது போல் , உங்கள் விளக்கம் மேலும் சுவை தான் கூட்டியது..,