PDA

View Full Version : மௌனமாய் மரணிக்கும் கதைகள் ....கலாசுரன்
01-02-2011, 01:00 PM
*
மனம் துவண்டுவிடாத
காலமொன்றின் நினைவுகள்
இறுக்கமாக மனதை
அணைத்துக் கொள்கின்றன

அந்த நினைவுகள்
இன்னும் இளமையாகவே
இருக்கின்றன

காலம்
எவ்வளவு வேகமாய்
உருண்டோடியிருக்கிறது
வீசிப்போன ஒரு தென்றலின்
ஸ்பரிசம் போன்றது அது.

அந்த
உயரமான பூவரசு மரத்தின்
வயது
என் இளமையின் இறுதியிலிருந்து
ஆரம்பித்த ஓன்று

இப்பொழுதும்
அதன் மேலான நினைவுகள்
அதன் கிளைகளில்
தாவி விளையாடுகின்றன

நடந்து சென்ற
அந்த ஒற்றையடிப் பாதையை
புற்கள் தின்ன
ஆரம்பித்திருக்கிறது

ஊன்றி நடப்பதற்கான
அந்த தடி
எப்போதும் என்னுடன்
பொடிநடை பழகவே
ஆசைப்படுகின்றது


சுவரோரமாய்க் கிடக்கும்
அந்த சாய்வு நாற்காலி
என்னையும்
என் சிந்தனைகளையும்
தாங்கிக்கொள்வதில்
ஒருபோதும்
மறுப்பு தெரிவித்ததில்லை


இந்தவிதமான
கதைகளைக் கேட்க்க
இந்த காகிதங்கள் தவிர
எவரும் விரும்புவதில்லை

அவைகளை சொல்வதற்கு
இந்தப் பேனாவும்
எந்த தயக்கமும்
இதுவரையிலும் காட்டிக்கொண்டதே இல்லை

என் இதழ்கள் மட்டும்
வெகு காலமாகப்
பேசிக்கொள்வது
மௌனித்த கற்பனைகளுடன் மட்டும்தான்

இனி என் பேனாவும்
ஊமையாகிவிடும்
என்
காகிதங்களும்
செவிடாகிவிடும்

கைகள் நடுங்க
ஆரம்பித்திருக்கின்றன ....!
*
***

கலாசுரன்.

கீதம்
01-02-2011, 10:53 PM
முதுமையின் தள்ளாட்டம்!
காகிதங்களின் காதில் பேனா ஓதிய
வாழ்வின் ரகசியங்கள் எதுவும் இனி
வெளிவராதபடி இழுத்துப்பிடிக்கப்பட்ட
வயோதிகக் கரங்களின் தடுமாற்றம்!

காலவோட்டத்தில் சிக்கி மீளும்
நினைவுகள் யாவும் இங்கே கவி வடிவாய்!

பாராட்டுகள் கலாசுரன் அவர்களே.

ஜானகி
02-02-2011, 02:42 AM
முதுமையின் சுமை மிகவும் பாரமானதுதான்....எண்ணங்களின் சிறகுகளில் பறந்து மனதை லேசாக்கிக் கொள்ளவேண்டியதுதான்.....

ரசிகன்
04-02-2011, 11:37 AM
கிளாஸ்!:) என் மரியாதைக்குரிய கலாசுரன்! :-)

அக்னி
05-02-2011, 01:56 PM
முதுமை தவிர்க்கமுடியாது...
ஆனால்,
தனிமையில் முதுமை
தவிர்க்க வேண்டியது...

என்ன கொடுமை என்றால்,
இது அவர்கள் மேல் திணிக்கப்படுவதுதான்...

திணிப்பவர்கள்.., நாளைய முதியவர்கள்...

கவிதையைப் படிக்கையில், அப்படியே அத்தனிமை மனதிற்படர்கின்றது.
ஏதோ ஒரு ஏகாந்தம் அடர்த்தியாய் அமர்ந்துகொள்கின்றது.

பாராட்டு மட்டுமல்ல, நன்றியும் சொல்லிக்கொள்கின்றேன்...
இந்த உணர்வைப் பதிவு செய்தமைக்காக...நடந்து சென்ற
அந்த ஒற்றையடிப் பாதையை
புற்கள் தின்ன
ஆரம்பித்திருக்கிறது

இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்...
மூப்பினால் வரும் இயலாமையைச் சொல்லும் அழுத்தமான வரிகள்...

கலாசுரன்
07-02-2011, 04:39 AM
முதுமையின் தள்ளாட்டம்!
காகிதங்களின் காதில் பேனா ஓதிய
வாழ்வின் ரகசியங்கள் எதுவும் இனி
வெளிவராதபடி இழுத்துப்பிடிக்கப்பட்ட
வயோதிகக் கரங்களின் தடுமாற்றம்!

கவிதை எழுதுகையில் நான் உணர்த்த மைய்யக்கருத்தை உட்க்கொண்டு பதிலளித்திருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி..!

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம்


உனகள் பின்னூட்டத்திற்கும் அந்த ஆலோசனைக்கும் மிக்க நன்றி ஜானகி

என் அன்பிற்கினிய ரசிகன் (சதிஸ்) இந்த உரையாடல்களை எனக்களித்தமைக்கும் இந்த நண்பர்களுடன் அறிமுகப்பட்டமைக்கும் உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. இலக்கிய நட்பின் வட்டங்கள் விரிவடையட்டும். என் மனதில் நீங்கள் என்றும் பத்திரமாக ரசித்தபடி எழுதிக்கொண்டிருங்கள் அது போதும்
:)

உங்கள் கூரான அவதாநிப்பிர்க்கும் சுடர்விடும் பாராட்டிற்கும் நன்றி பல.. அந்த வரிகளை நானும் மிகவும் ரசிக்கிறேன் அக்னி :)