PDA

View Full Version : ஆவிரங்கராஜன்
31-01-2011, 05:50 PM
வணக்கம் உறவுகளே....

நேற்று இரவு நான் படுக்கையில் படுத்தபடி எதையோ யோசித்துக் கொண்டு இருந்தேன்... போன வருடம் வரை படுத்தவுடன் தூங்கி விடுவேன்...... ஆனால் வயது ஆக ஆக தூக்கம் தொலையும் என்று கூறுவதைப் போல இப்போது எல்லாம், படுத்தவுடன் தூக்கம் வர மறுக்கிறது. புத்தகத்தை படித்தோ, இணையதளத்தில் மேய்ந்தோ, தொலைக்காட்சியில் தொலைந்தோ நேரத்தை விரயம் செய்த பின் தான்.... வேறு வழியில்லாமல் தூக்கம் வருகிறது.

எனக்கு ஞாயிறு அன்று மதியம், 2ல் இருந்து 10 மணி ஷிப்டு, திங்கள் காலை 6 மணியில் இருந்து 2 வரை ஷிப்டு..... இந்த இடைப்பட்ட நேரம் தான் என் வாழ்நாளிலே கொடுமையான நேரம் என்று குறிப்பிடுவேன்..... அலுவலகத்தில் இருந்து வந்ததும், சுத்தப்படுத்தி விட்டு படுக்கைக்கு சென்று விடுவேன்......... படுக்கும் போது மணி 11 ஆகி விடும்.

12, 1, 2 , 3, 4, 5 ஆறு மணி இருக்கிறது, காலையில் சீக்கிரம் எழுந்துக் கொள்ள வேண்டும் என்று கண்ணை மூடுவேன். தூக்கமே வா, தூக்கமே வா என்று வேண்டிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டு இருப்பேன்... அப்போ தான் மூளை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தக்காளியைப் போல பிரஷ்ஷாக இருக்கும்..... சம்பந்தமில்லாத விஷயங்கள் எல்லாம் நினைவிற்கு வரும்....

நம்முடன் கல்லூரியில் படித்த அந்த பெண் இப்போ எப்படி இருப்பா.....

நேத்து காய்கறி வாங்க நூறு ரூபாய் கொடுத்தோமே சில்லரை சரியா வாங்கினோமா....

இன்ஷூரன்ஸ் பணம் கட்டியாச்சா......

காருக்கு பெட்ரோல் போட்டாச்சா,,,,,,,,,,, ஏப்ரல் ஃபூல் நம்மகிட்ட தான் கார் இல்லையே.... என்று என்னையே நான் ஏமாற்றிக் கொண்டு தூங்காமல் விழித்துக் கொண்டு இருப்பேன்..... இப்படியே 2 மணி வரை விழித்து, மேலே குறி்ப்பிட்டு்ள்ள பல உலக விஷயங்கை பற்றி எனக்குள் விவாதித்து அப்புறம் என்னை அறியாமல் தூங்கி விடுவேன்... இமைகளை மூடி விட்டு திறந்தால் 5 மணி ஆகி விட்டது என்று அலாரம் காதோரமாய் காரி துப்பும்...... நானும் அதை காரி துப்பியபடியே, அதை திட்டிக் கொண்டு எழுந்து அப்படியே பாத்ரூமிற்குள் சென்று பல் துளக்கும் பேஸ்டை தலையில் போட்டு, தலைக்கு போடும் ஷாம்பூவை பிரஷ்ஷில் வைத்து தேய்த்து விட்டு அலுவலகத்திற்கு போய் சேர்ந்து வேலை தொடங்குவேன்....

குறிப்பாக காலை அந்த 6 மணியில் இருந்து 10 மணிக்குள் வரும் பாருங்க அந்த தூக்கம், ஆஹா என்ன சுகம் என்ன சுகம்....... அப்படியே கணிணியை கவுத்து போட்டு தலைக்கு வைத்து தூங்கி விடலாமா என்பது போல இருக்கும். முப்பது பொங்கல், சில பல தூக்க மாத்திரைகள் சாப்பிட்டது போல ஒரு விதமான கஞ்சா நிலையில் இருப்பேன் அந்த குறிப்பிட்ட நேரத்தில், அந்த சமயங்களில் போன் வந்தால் கூட அதை எடுத்து ஹலோ சொல்ல கையும், வாயும், நாக்கு சரியான நேரத்தில் ஒத்துழைக்காது........

இதற்கு எல்லாம் காரணம் அந்த முன்னாம் நாள் ஞாயிறு இரவு, அப்படி ஒரு இரவு தான் நேற்று....... மற்ற ஞாயிறுகளை விட இது கொஞ்சம் மோசம் தான், 3.30 மணி வரை சுத்தமாக தூக்கம் இல்லை. அதன் பின் கண் இழுத்துக் கொண்டு சென்றது, திடீரென என் படுக்கைக்கு பக்கத்தில் இருந்த ஜன்னல் வழியாக நாய் உச்ச சத்தத்தில் குரைக்கும் சத்தம் கேட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அந்த சத்தத்தை அவாய்டு செய்ய முடியவில்லை..... அப்படியே அந்த நாயின் மென்னியை பிடித்து திருக வேண்டும் என்பது போல கோபம் வந்தது.

"நாயே நாயே நாயிற்கு பொறந்த நாயே" என்று திட்டிக் கொண்டே, தள்ளாடிய படி ஜன்னல் துணியை விளக்கி விட்டு வெளியே பார்த்தேன். ஜன்னல் திறந்து இருந்தது, என் வீடு முதல் மாடியில் இருப்பதால், கீழே இருக்கும் மரம் செடி கொடிகளுக்கு நடுவே நாய் எங்கே குரைக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கும் இருட்டு, தூக்க கலக்கத்தில் உள்ள கண்கள் என்பதால், சத்தம் வந்த இடத்தை நோக்கி, கூர்ந்து கவனித்தேன். அப்போது நான் பார்த்த காட்சி என்னை சில்லிட வைத்தது.... ஒரு நாய் இருட்டில் சிவப்பு நிற கண்களுடன் ஜன்னலில் இருந்து எட்டிப் பார்க்கும் என்னை பார்த்து ஆக்ரோஷமாக குரைத்துக் கொண்டு இருந்தது. இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கிறீர்களா, நான் எட்டி பார்த்தேன் என்றால், ஜன்னலில் இருந்து நாய்க்கு தெரியும் படி எட்டி பார்க்கவில்லை. துணியை விளக்கி விட்டு வெறும் ஒற்றை கண் வழியாக பார்த்தேன்.

ஆனால் அதற்கு முன்பு இருந்து அந்த நாய் என் ஜன்னலைப் பார்த்து தான் குரைத்துக் கொண்டு இருந்தது. ஜன்னல் துணியை நான் விளக்கி பார்த்தேன், அப்போது முன்பை விட இன்னும் அதிகமாக குரைத்தது. திடீரென, அமைதியான நாய், அந்த இருட்டில் யாருடைய கட்டளைக்கோ கீழ்படிவது போல தலையை ஆட்டியது, தூரம் சென்று எதையோ எடுத்து வந்து எஜமானரிடம் கொடுப்பது போல எதையோ காற்றில் வீசியது. திடீரென மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டது. இந்த காட்சிகளை பார்த்த சில நிமிடங்களிலே வெள்ளை நிற மி்ன்னல் வெட்டு அந்த இடத்தில் இருந்து தோன்றி மறைந்தது.

எனக்கு அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, வயிற்றில் இருந்து பட்டாம்பூச்சிகள் பறந்து தொண்டை வழியாக வெளியேறின. ஜன்னலை இழுத்து சாத்தி விட்டு வந்து படுக்கையில் சரிந்தேன். சாதாரண நேரத்திலே எனக்கு தூக்கம் வராது, அதுவும் இந்த மாதிரி மின்னல் வெட்டை எல்லாம் பார்த்த பின், சுத்தம் ..... இதற்கு காரணம் நான் பார்த்தது ஆவியை..... இது நான் இரண்டாவது முறையாக பார்ப்பது..... ஆவியை நேராக முன்னதாக நான் வேலை செய்த அலுவலகத்தில் பார்த்து இருக்கிறேன். அலுவலகத்தின் பெயரை முக்கியமல்ல, இதைப் பற்றி நம் மன்ற உறவுகள் சிலரிடம் விவரித்துள்ளேன். அவர்களும் அந்த அலுவலகத்தின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்....

அலுவலகத்தில் அன்று இரவு மணி சரியாக, 1 மணி இருக்கும் நான் கணிணியின் முன்னாடி அமர்ந்தபடி தீவிரமாக சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தேன். திடீரென விழுந்து அடித்துக் கொண்டு இருவர் வேகமாக எங்கள் அறைக்கு ஓடி வந்தனர். பக்கத்து அறையில் இருந்து வந்தவர்கள் எவ்வளவு வேகமாக வந்து இருந்தாலும் அந்த அளவு வியர்வை வர சாத்தியமில்லை, அதுவும் ஏசி ரூமில்.... வந்தவர்கள் பேச்சு வராமல் அமைதியாக எங்களை பார்த்தபடி வெறித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

"அட சனிய புடுச்சவங்களா, ஏன்டா இப்படி அர்த்த ராத்திரியில் ஊரையே எழுப்புற மாதிரி ஓடி வருகிறீர்கள்" என்றேன்.

என் அறையில் நான், என்னுடைய சீனியர் இரண்டு பேர், அப்புறம் ஒரு ஜூனியர். மொத்தம் நான்கு பேர். ஓடி வந்த இருவரும்

"சார் சார் பேயை பார்த்தோம் சார், கொலுசு போட்டுக்கிட்டு ஜல் ஜல்லுனு போது சார்"

"எங்க போது" என் சீனியர்.

"தெரியிலை சார்" அவர்கள்.

"கேட்க வேண்டியது தானே, சரி அது விசிட்டர் பாஸ் வாங்குச்சா" இது நான். அறையில் இருந்தவர்கள் மட்டும் சிரித்தார்கள், வந்தவர்களுக்கு இன்னும் வியர்த்து கொட்டிக் கொண்டே இருந்தது.

"போங்கடா போங்கடா புள்ள குட்டிகளை படிக்க வையுங்கடா" என்று தேவர் மகன் கமல் பாணியில் சொல்லி விட்டு, மும்முரமாக சீட்டு விளையாட தொடங்கினேன். அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை, அப்படியே சீட்டில் அமர்ந்தனர். நான் சீட்டு விளையாடுவது போல பாவணை செய்தாலும், அவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்குமோ என்று சிந்தித்து்க கொண்டு இருந்தேன். காரணம் அவர்கள் கண்கள் பொய் சொல்லவில்லை, வியர்வை நடிப்பில்லை, தொண்டை நடுங்குவது பளிங்கு போல தெரிந்தது. திடீரென மின்சாரம் துண்டித்துப் போனது, இதுவரை இந்த மாதிரி ஆனதே இல்லை, மின்சாரம் இல்லை என்றால் ஜெனரேட்டர்களின் மூலமாக மின்சாரம் வரும். ஆனால் இப்போது கும் இருட்டாக இருந்தது, திடீரென நான்கு கைகள் வந்து என்னை கட்டிப்பிடிப்பதை போல உணர்ந்தேன்.

"ஆஆஆஆஆ"

"சார் சார் நாங்க தான் சார்" என்றனர் ரூமிற்குள் ஓடி வந்த இருவரும்.

"போடாங்க யுவர் மம்மி, அறிவு இருக்காடா, ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு"

"இல்ல சார் பயமா இருந்தது, அதான்......"

"பயமா இருந்தா ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிச்சிக்க வேண்டியது தானே டா, என் தாலியை ஏன் அறுக்குறீங்க"

"என்னப்பா ஆச்சு" என் சீனியர்...

"சார் இந்த இரண்டு பேரும் என்னை வந்து கட்டிப் பிடிக்கிறாங்க சார்"

"எந்த இடத்துல பிடிச்சாங்கப்பா"

"சார் நீங்க வேற, லைட்டர் இருந்தா கொளுத்துங்க சார்"

லைட்டர் கொளுத்தப்பட்டது, வெளிச்சத்தில் பார்த்தேன், அவரை ஒட்டி பிடித்தபடியே மற்றோரு சீனியரும் என் ஜூனியரும் நின்றுக் கொண்டு இருந்தனர்.

"அடக்கருமமே, நீங்களும் ஜோடியோடு தான் நிக்கிறீங்க போல இருக்கே"

அனைவரும் கூட்டாக சேர்களை போட்டபடி அமர்ந்தோம். அந்த அறை கண்ணாடியால் ஆனது என்பதால் சில இடங்களில் இருந்து வந்த வெளிச்சம் கொஞ்சம் இருந்தது. எங்கள் அனைவரின் கண்களும் இரட்டிற்கு பழக்கமாகி விட்டது. அந்த இருவரும் மறுபடியும் அதை சொல்ல ஆரம்பித்தனர்.

"டேய் சும்மா இருங்க, மறுபடியும் அதை ஆரம்பிக்காதீங்க"

"சார் சார் நான் போய் சொல்லவில்லை, எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேன்"

"சரி சொல்லு"

"எங்க அம்மா மேல சத்தியமா"

"அட சனியனே, மெட்டர சொல்றா"

"நானும் இவனும் அந்த அறையில் அமர்ந்து இருந்தோமா (என்று எதிரே இருக்கும் அவன் அறையை நோக்கி கையை காட்டினான்). அப்போ திடீரென கொலு சத்தம் கேட்டது, சரி பேசினதுல நேரம் போனதே தெரியவில்லை, விடிஞ்சிடுச்சு போல, காலை ஷிப்டு லேடீஸ் ஸ்டாப் யாரோ வராங்க என்று நினைத்து இருந்தோம்"

"ம்ம்"

" அப்படி நினைச்சிட்டு நாங்க மறுபடியும் பேச தொடங்கினோம்....ரொம்ப நேரமா அந்த கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது, அதாவது அந்த வழி நெடுக்க திரும்ப திரும்ப நடப்பது போல, எங்களுக்கு கடுப்பாகி எவடா அவ இப்படி நடக்குறதுனு கண்ணாடி வழியா எட்டி பார்த்தோம்"

"ம்ம்"

"யாரும் காணலை"

"நல்ல விஷயம் தானே"

"அப்புறம் தான் மணியை பார்த்தோம், 1 மணி ஆகி இருந்தது. இந்த நேரத்தில் கண்டிப்பா யாரும் லேடீஸ் வர மாட்டாங்க டா எதாவது பூச்சாயா இருக்கும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, வெள்ளையா ஒரு உருவம் எங்களை கடந்து போச்சு சார், அதுவும் அதே சத்தத்தோட, எங்களை திரும்பி பார்த்தபடியே போச்சு சார், பயந்து நாங்க இங்க ஓடி வந்துட்டோம்"

"அட்ரஸ் வாங்கி வச்சிக்க வேண்டியது தானே, சார் இந்த பசங்க பீலா விடுறாங்க சார், அப்படியே வந்துச்சாம், அப்படியே பாத்துச்சாம், கொலு சத்தம் கேட்டுச்சாம்......... எனக்கு ஒரு சந்தேகம் ஏன் பேயி எப்ப பார்த்தாலும் கொலுசு மட்டும் போடுது, எந்த சேட்டு ஆவி கிட்ட இருந்து அதை வாங்கி இருக்குமோ.... அடுத்த முறை நீ எதாவது ஆவியை பார்த்தா நெக்லஸ், பிரேஸ்லட், ஒட்டியாணம் மாதிரி காஸ்லி ஐட்டமா வாங்க சொல்லு சரியா" என்று நான் சிரித்தேன், மற்ற யாரும் சிரிக்க வில்லை..

"டேய் தம்பி அதெல்லாம் இருக்குடா" சீனியர்

"இருந்துட்டு போகட்டும், நீங்கெல்லாம் இந்த ஆபிஸில் இருக்கும் போது, அது இருக்க கூடாதா" என்று சிரித்தேன், இதற்கு யாரும் சிரிக்கவில்லை. ஒரு ஜோக்கை அடித்து விட்டு, அடித்தவனை தவிற யாருமே சிரிக்கவில்லை என்றால் அதை விட துயரமான தருணம் எதுவும் இல்லை.

என்னை தவிற மற்ற அனைவரும் சுவாரஸ்யமான பயம் தொற்றிக் கொண்டது. சின்ன வயதில் அவர்கள் அனுபவப்பட்ட, கேட்ட, திரித்த பேய் கதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தார்கள். சிலர் வா அருகில் வா, அமாவாசை இரவில், யார் போன்ற பேய் கதைகளையும் சுட்டு சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அதை கேட்க கேட்க எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது, பயம் என்பது தொற்று வியாதி. பயத்தால் எனக்கு தொண்டையும், அடிவயிறும் ஒரே நேரத்தில் முட்டியது.

"சரி சரி தண்ணி குடிக்கனும் போல இருக்கு வாங்க, அப்படியே எல்லாரும் போயிட்டு வரலாம்"

"எதுக்கு எல்லாரும், எங்களுக்கு தாகம் இல்லை"

"சரி பரவாயில்லை கூட வாங்க"

"பேய் இல்லைனு சொன்ன"

"நான் இல்லாத போது நீங்க பயந்துடுவீங்களேனு சொன்னேன்"

அனைவரும் சிரித்துக் கொண்டு எழுந்தார்கள், பள்ளி நாட்களில் சுற்றுலாவிற்கு செல்லும் குழந்தைகள் போல ஒருவரின் கையை பற்றிக் கொண்டு தண்ணி குடிக்கும் இடத்திற்கு அனைவரும் நடந்தோம்.

"முதல்ல ரெஸ்ட்ரூம் போயிட்டு போலாமே"

"அடப்பாவி இதுக்கு தான் கூப்பிட்டியா எங்களை" என்று அப்படியே படகு ரெஸ்ட்ரூமை அடைந்தது. எனக்கு முன்னாடி முண்டி அடித்துக் கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர். நான் சொன்னேன், அவர்கள் சொல்லவில்லை என்று புரிந்தது. பாத்ரூம் கதவை திறந்து அவர்கள் செல்வதற்கு அதே பகுதியில் இருந்து ஒரு வெள்ளை நிற உருவம் என்னை நோக்கி வந்து என்னை கடந்து சென்றது, அதே கொலுசு சத்தத்துடன், அருகே மிக மிக அருகே.... அதை நான் பார்த்தேன்........

பயம் உடல் முழுவதும் தொற்றிக் கொண்டது, இதற்கு நான் என்ன ரியாக்ஷ்ன் கொடுப்பது என்றே எனக்கு தெரியவில்லை. நியாயப்படி பார்த்தால், ஆஆஆ என்று கத்த வேண்டும். அதே கேட்ட பேய் வந்து பளார் என்று என் கன்னத்தில் ஒன்று விட்டு

"ஏண்டா நாயே காதுக்கிட்ட வந்து கத்துகிறாய்" என்று திட்டினால் என்ன செய்வது என்று அமைதி காத்து விட்டேன்.

போன மின்சாரம் திரும்ப வந்தது....திடீரென மின்சாரம் வந்ததற்கே உள்ளே இருந்த ஜூனியர்கள் சிலர் பயத்தில் கத்தினார்கள். அலறியபடியே உள்ளே சென்ற நான் அமைதியாக பார்த்தேன்.

"என்ன சார் நீங்க போலையா"

"நின்னுடுச்சு டா"

"ஏன் சார் ஒரு மாதிரி இருக்கீங்க, விடுங்க சார் நாங்க எதாவது வெறும் வெளிச்சத்தை பார்த்து இருப்போம், பயப்படாதீங்க சார், போய் வேலையை பாருங்க காலையில் பேசிக்கலாம்"

"இல்ல டா அது உண்மை தான், நான் இப்ப தான் அதை பார்த்தேன்"

ஐந்து பேரும் என்னை பார்த்தார்கள். சிறிது நேரம் அனைவரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றோம். எங்களை அறியாமலே ஒருவரின் கையை மற்றவர்கள் பற்ற ஆரம்பித்தோம், ரூம் வரை கண்களை மூடியபடியே வந்தோம், பின்னாடி நடந்து வந்த ஜூனியர் ஒருவன் கேட்டான்.

"சார் அத சொன்னீங்களா"

"யார்கிட்ட"

"பேய்கிட்ட"

"என்னன்னு"

"ஒட்டியாணத்திற்கு மாற சொல்லி"

"செருப்பால அடிப்பேன் நாயே பேசாம வாடா"

பயத்திலும் அனைவரும் சற்று லேசாக சிரித்தோம்......

இந்த முழு நினைவும் அந்த ஞாயிறு நினைவிற்கு வந்ததது. மணியை பார்த்தேன் கடிகார முள் நான்கை தொட்டது, இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது...... தூக்கம் வருது....... காலையில் அலுவலகம் செல்ல வேண்டும்.... பிறகு சந்திக்கலாம் உறவுகளே......

ஜனகன்
31-01-2011, 06:55 PM
என்னுடைய கருத்து, பில்லி, சூனியம், ஆவி என்று எதுவும் இல்லை. அப்போது கடவுள் மட்டும் இருக்கிறாரா என்ற கேள்வி எழலாம். கடவுள் என்ற விஷயமே மனித இனத்தை ஒழுக்கத்தோட வாழுவதற்கும், மனசாட்சிக்கு பயப்படாவிட்டாலும் இப்படி ஒரு விஷயம் இருந்தால் என்று அனைவருக்கும் பொதுவான ஒழுக்க நெறிக்கும், நல்ல வாழ்க்கைக்கும் வழி வகுக்கும் என்று ஆரம்பித்து இருக்கலாம். அதற்காக நமக்கு தெரியாத விஷயங்களை,நம்மால் நிருபிக்க இயலாத விஷயங்களைப் பற்றி 100% இல்லாமல் எதுவும் சொல்லிவிட முடியாது.

நம் நாட்டில் என்னதான் பலவித முன்னேற்றங்கள் வந்து விட்டாலும் நீங்கள் சுட்டி காட்டியிருக்கும் ஆவி போன்றே இன்னும் சில விஷயங்களில் நம் சமுதாயம் அப்படியேதான் உள்ளது என்பதை நம்மால் மறுக்கமுடியாது.

கதை மிகவும் அருமை, உங்கள் நகைச்சுவை உணர்வுக்கும்,ஆவி பற்றி அழகாக எடுத்து கூறியமைக்கும் எனது வாழ்த்துக்கள்.

அமரன்
31-01-2011, 08:17 PM
பேய் இருக்கோ இல்லையோ சுவாரிசியம் இல்லாமல் இல்லை உன் எழுத்தைப் போலவே!

நகையோடும் வகையில் நடைபோடும் ஆவியாய்.. பிடித்து விட்டாய்.

அடிக்கடி எழுதுப்பா.

மதி
01-02-2011, 12:20 AM
பேய்க்கதை...!! இந்தளவுக்கு ஞாயிறு ராத்திரி உன்ன பாடா படுத்துதா..?? நான் முழிச்சிருந்தா இனி 11 மணிக்கு மேல கூப்பிடுறேன்.. தூக்கம் தானா வரும்..!!

ரங்கராஜன்
01-02-2011, 01:33 AM
நன்றி ஜனகன், அமரன், மதி

நீங்கள் இதை நம்பமாட்டீங்க என்று எனக்கு முன்பே தெரியும்..... காரணம் நானும் இந்த நிகழ்வின் முடிவு வரை (ஜனகன், குறித்துக் கொள்ளவும் கதையில்லை,,, நிகழ்வு) நானும் ஆவி இருக்கிறது என்று நம்பவில்லை...... பார்த்தவுடனே தான் எழுதினேன்.

அப்புறம் அமரன்,கோஸ்டு காச்சர்ஸ், கோஸ்டு ச்சேஸர்ஸ் போன்ற சில நிறுவனங்களே உள்ள இடத்தில் இருக்கிறீர்கள்........ நீங்களுமா ஆவியை நம்பவில்லை....

அப்புறம் மதி...... நீ போன் செய்றீயா, அதுக்கு பேயே தேவலை....

நன்றி...

மதி
01-02-2011, 03:22 AM
அப்புறம் மதி...... நீ போன் செய்றீயா, அதுக்கு பேயே தேவலை....

நன்றி...
என்னிக்கும் அந்த பயம் இருக்கட்டும்.. !!:icon_b:

samuthraselvam
01-02-2011, 05:46 AM
என்னடா தூங்கு மூஞ்சி எப்ப பார்த்தாலும் 'எனக்கு தூக்கம் வருது தூக்கம் வருது'ன்னே சொல்லிகிட்டு இருக்கேன்னு நினைச்சேன்.. இப்ப தான் புரியுது...

உனக்கு ஸ்லீப்லெஸ் டிஸீஸ் இருக்குமோ?

ஆனா நாலு வார்த்தை மூச்சு விடாம பேசிட்டு நாப்பது கொட்டாவி விடும் ஆள் உன்னைத் தவிற வேறு யாரும் இருக்க முடியாது...

தலைப்பை மாத்திடு "கொட்டாவியை வர வைக்கும் கெட்டாவி"ன்னு ஹா ஹா...:lachen001:

பாரதி
01-02-2011, 09:02 AM
ஆவி என்றதும் ஆனந்த விகடன் என்று நினைத்தேன்..:)

ஆவியை அல்லது பேயைப்பார்த்த மிக மிக அருகே பார்த்த நீங்கள் அதைக்குறித்து இன்னும் சற்று விளக்கமாக எழுதி இருக்கலாம். அப்புறம் ஏன் அலுவலகத்தின் பெயரைக்குறிப்பிடக்கூடாது என்று எழுதி இருக்கிறீர்கள்?

எழுதுவதை மற்றவர்கள் இரசித்து படிக்கும் படி எழுதும் அரிய கலையை கை வரப்பெற்ற உங்களை வாழ்த்துகிறேன்.

Mano.G.
01-02-2011, 10:07 AM
அந்த அலுவலக பேய் விஷயத்தை
என்னிடம் சொன்னத் போது நான் நம்பல
இருந்தாலும் சுவாரசியம , அனுபவிச்சு
சொன்னத நம்பாமலும் இருக்க முடியல

இதே போல எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது . அத என்னோட சுய சரிதையில சொல்லரேன்.

வாழ்த்துக்கள் தம்பி

கீதம்
01-02-2011, 10:16 PM
தான் அனுபவித்த அதே உணர்வை நூறு சதம் அப்படியே அடுத்தவரும் அனுபவிக்கும் விதத்தில் எழுதுவதென்பது தனிக்கலை. சொல்லப்போனால் அது ஒரு வரம். அந்த வரம் வாய்க்கப்பெற்றவர் நீங்கள்.

பய அனுபவத்தையும் இத்தனை சுவையாக எழுத முடியுமா என்று வியக்கிறேன். எனக்கு இதுவரை இதுபோன்ற அனுபவங்கள் ஏற்படாதது என் பாக்கியமே என்று எண்ணும் அளவுக்கு உங்கள் பதிவின் தாக்கம் இருந்தது. ஆவி பற்றி அறியாததால் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் எழுதிய விதம் அபாரம்.

நாஞ்சில் த.க.ஜெய்
02-02-2011, 10:21 AM
அருமையான சிரிக்க வைத்த எழுத்து நடை இந்த நடையில் பேயின் நடை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது ..நானும் நம்புறேன் ஆனால் நம்பமாட்டேன் நானும் காணும் வரை உங்களை போல நண்பரே ....இந்த பதிவில் வரும் பேயின் உருவம் கூட எங்கோ பதிவிட்டதாக சிந்தனை ..

joy001
03-02-2011, 01:12 PM
அப்படியே ஷகயிட்டேன் நண்பரே படிக்கும் போது சிரித்து கொண்டு படிதேன்
அருமையான தொகுப்பு தொடர்ந்து பதிவிடுங்கள்....

ராஜாராம்
04-02-2011, 02:07 PM
(சந்திரமுகி திரைப்படத்தில்,வடிவேலு ரஜினியிடம் கேட்பதுபோல்)

"பேய் இருக்கா?இல்லையா?....யாரும் பாத்திருக்காங்களா?இல்லையா?சொல்லுப்பா,,,,,......!!!!!!!

ஆளுங்க
07-02-2011, 12:20 PM
நீங்கள் பார்த்தது கண்டிப்பாக ஏதோ காட்சிப்பிழையாக இருக்க வேண்டும் .

சூரியன்
08-02-2011, 02:10 PM
அண்ணா மறுபடியும் அந்த ஆவியை பார்த்தல் என்னோட நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்க:cool:

உமாமீனா
09-02-2011, 08:37 AM
ஆவி என்றுடன் ஆனந்தவிகடன் சம்மந்த பட்ட விசயமோனு நினைத்தேன் - ஏனுங்க ஆவின்னா? அப்படின்னா என்ன கண்ணு?

நம்பிட்டோம்ல அப்டியே பயந்துட்டேன்..

உங்கள் கதை நடை அருமை தொடருங்கள்

sarcharan
10-02-2011, 09:52 AM
ரங்கராஜன், நீங்க தான் டக்ஸா?