PDA

View Full Version : கருவாச்சிdellas
31-01-2011, 05:10 PM
கருவாச்சி என் அத்தை மகள். முதலாவதாக எங்கள் கிராமத்திலிருந்து நகரத்தில் கல்லூரிப் படிப்பிற்காக நகரம் சென்ற பெண்களில் ஒருத்தி.அவள் பெயர் செண்பகம் ஆனால் எங்கள் வீட்டில் எல்லோரும் அவளை கருவாச்சி என்றே அழைப்பார்கள். தினமும் பேருந்தில் போய் வர வேண்டும். காலை ஏழு மணிக்கு சென்றார்கள் என்றால் மாலை ஐந்து மணிக்குதான் திரும்புவார்கள். அவர்கள் கூட்டமாக பேசிக்கொண்டு வரும்போது எங்கள் கிராமமே பிரகாசமாக ஆனதுபோல் தோன்றும்.

எங்கள் கிராமத்தின் தேவதைகள் அவர்கள்.

எங்கள் அப்பாதான் எங்கள் ஊர்த் தலைவர். அவரின் கடும் முயற்சியால்தான் இந்த பெண்களின் கல்லூரிப் படிப்பு சாத்தியமானது. நகரத்தில் பெண்பிள்ளைகள் படிக்க போனால் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற அவர்களின் பயத்தை போக்கி , சம்மதிக்க வைத்தது அவர்தான். ஊரில் உள்ள வாலுப் பசங்களுக்கு எங்க கருவாச்சி ஒரு சிம்ம சொப்பனம். பெரியவர்களுக்கு மரியாதை தருவதாகட்டும், விடுமுறை நாட்களில் சிறுவர்களை ஆலமரத்தடியில் கூட்டி வைத்து பாடம் சொல்வதாகட்டும், குறும்புக்கார வாலிபர்களை எதிர்த்து பேசுவதாகட்டும். எல்லாவற்றிலும் அவள் முதலிடம்தான்..

நகரத்தில் படிக்கப் போனதிலிருந்து அவர்களின் ஒப்பனை முதல் பேச்சு நடையிலும் வித்தியாசமிருந்தது. கருவாச்சி என்னைவிட ஐந்து வயது இளையவள். ஆனாலும் அவள் மீது எனக்கு இப்போது பாசத்தோடு மரியாதையும் உண்டாகி இருந்தது. சிறு வயது முதலே என்னோடும் என் தம்பி தங்கையோடும் தீராத பாசம் கொண்டவள். என் தங்கை இப்போது அவளின் விசிறி ஆகிவிட்டாள்..கல்லூரி முடித்தபின் வேலை தேடும் என் தம்பியிடம் ,தங்கை சண்டையிடாத நாட்களே கிடையாது. கருவாச்சி வந்தால் போதும் , இருவரும் அடங்கி விடுவார்கள்.

என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்

'எப்போதுதான் நீ மருமகளாக வந்து இவர்களின் சண்டையை நிறுத்தப் போறியோ?'

அதற்கெல்லாம் கருவாச்சியின் ஒற்றை சிரிப்புதான் பதில்.

அம்மாவின் இந்த வார்த்தை கேட்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டாகும். ஒரு புன்னகையோடு நானும் முடித்துக் கொள்வேன். அப்பாவுடன் நானும் விவசாயம் தான் செய்கிறேன். அமோக விளைச்சல் இல்லாவிட்டாலும் கையை உறுத்தாத வருமானம் இருந்தது. சேமிப்பாக ஒரு தொகை அறுவடை தோறும் வங்கியில் சேர்ந்து கொண்டுதான் வந்தது. அப்பா தம்பியிடம் ஒருமுறை மட்டும் எங்களோடு விவசாயம் பார்க்க சொன்னார். அவன் விரும்பாததால் வற்புறுத்தவில்லை.

இரண்டு ஆண்டுகள் கடந்தது. மாமா கல்யாண பேச்சை துவங்கினார். அப்பா நேரடியாகவே கேட்டார்.

' கருவாச்சி எனக்கு மருமகள் என்பதில் எனக்கு மாற்று இல்லை. ஆனால் மெத்த படித்த அவளுக்கு என் இரண்டாவது மகன்தான் பொருத்தம். மூத்தவன் இருக்க இரண்டாமவனுக்கு எப்படி கல்யாணம் நடத்த .? அவனுக்கும் ஒரு வேலை கிடைக்கட்டும் . மூத்தவனுக்கும் கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் ' என்றார்.

நான் இடை மறித்தேன் ' கருவாச்சிக்கு இதில் உடன்பாடு என்றால் கல்யாணத்தை முடிக்க வேண்டியது தானே அப்பா. மாமாவிற்கும் ஒரே பெண். தம்பிக்கும் பொருத்தமாக இருக்கும். அவனுக்கு வேலை கிடைக்காவிட்டால் நம்முடன் வந்து விவசாயம் பார்க்கட்டும். எனக்கு என்ன பெண் கிடைக்காமலா போய்விடும்.? நல்ல காரியத்தை ஏன் தள்ளிப்போட வேண்டும்.' என்றேன்.

தம்பி சம்மதம் தெரிவிக்கவே அப்பா மேற்கொண்டு கல்யாண வேலையை பார்க்க சொல்லிவிட்டார்.

அடுத்த மாதமே கல்யாணம் நடந்தது. கல்யாண கோலத்தில் கருவாச்சியும் தம்பியும் நல்ல பொருத்தம். மனம் நிறைய இருவரையும் வாழ்த்தினேன்.

மாதங்கள் கடந்தது. தம்பிக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. விவசாயம் செய்வதிலும் விருப்பம் இல்லை. வெறுமனே வீட்டிலிருந்து சாப்பிடுகிறோமே என்ற வருத்தத்தில் அவன் வாடினான். எந்த சமாதானமும் அவனை மகிழ்விக்கவில்லை. மதுவிற்கு அடிமையானான். நேரம்கழித்து வீட்டிற்கு வர ஆரம்பித்தான். கருவாச்சியோடு காரணமில்லாமல் சண்டையிட்டான். எல்லாரையும் எதிர்த்து பேசினான். கோபத்தில் அப்பா அவனை தனிக்குடித்தனம் வைத்தார். அதுவே அவனுக்கு வினையானது. கேள்வி கேக்க ஆளில்லாமல் திரிந்தான். இறுதியில் போதையில் சாலையில் வரும்போது ஏதோ ஒரு வாகனம் மோதி உயிரை மாய்த்தான்.

பெரும் துயரம். கலகலவென வளைய வந்துகொண்டிருந்த கருவாச்சி வெள்ளை ஆடையில் வீட்டில் முடங்கினாள். யாருக்கும் எதுவும் தோன்றாமல் நாட்களைக் கடத்தினோம்.

மீண்டும் ஒரு வருடம் கடந்து விட்டது. தங்கையின் கல்யாண பேச்சு எழுந்தது. ஒரு நல்ல வரன் இருப்பதாக மாமாவே வந்து சொன்னார். நாங்கள் மாப்பிள்ளை பார்த்து விட்டு வந்தோம். மாபிள்ளையின் தூரத்து சொந்தத்தில் ஒரு வாலிபன் எனக்கு அறிமுகமானான். அவனுடன் பேசியதில் என் கவலைக்கு ஒரு தீர்வு கிடைத்தது.

அடுத்த நாள் அந்த வாலிபன் எங்கள் வீட்டிற்கு வந்தான். அப்பாவிடம் நான் அறிமுகம் செய்தேன்.

' அப்பா உங்களுக்கு இப்போது இரண்டு பெண்கள் . இளையவளுக்கு நீங்கள் வரன் தேடினீர்கள் மூத்தவளுக்கு நான் ஒரு வரன் கொண்டுவந்திருக்கிறேன்.' என்றேன்.

அப்பா என்னை அர்த்தமாகப் பார்த்தார். பின்

'நல்லது மகனே உன் விருப்பம் போல செய்' என்றார்.

வந்தவன் தொடர்ந்தான்,'உங்கள் மகன் விபரம் சொன்னார். எனக்கு முழு திருப்தி . அது போல் என் அத்தை மகளை நீங்கள் மருமகளாக ஏற்க வேண்டும்.'

அப்பா புருவத்தை உயர்த்தினார்.

' ஆம், என் மாமா இறந்தபின் அத்தை தன் ஒரே மகளோடு எங்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். சிறுவயது முதல் ஒன்றாக இருந்ததால் அத்தையின் விருப்பபடி எங்கள் இருவருக்கும் கல்யாணம் செய்வதில் விருப்பம் இல்லை. உங்கள் மகன் அவளை கல்யாணம் செய்வதாக ஒத்துக்கொண்டார். மூன்று கல்யாணத்தையும் ஒரே நாளில் முடிக்க அவர் விருப்பப படுகிறார்' என்றான். மேலும்,

' நான் பட்டம் வாங்கியவன் அரசுப்பணியில் இருக்கிறேன், என் பெற்றோருக்கும் இதில் சம்மதமே. நீங்கள் விரும்புகையில் முறைப்படி அவர்களை வந்து பேசச் சொல்கிறேன்' என்றான்.

அப்பா மெல்ல வந்து என் தோழ்களைப் பற்றி ' உன் முடிவு நல்லதாகவே இருக்கும் ' என்றார்.

மூன்று மேடைகள் , மூன்று கல்யாணம் , எல்லோருக்கும் போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு வேலை இருந்தது.

மணப்பெண்கள் மூன்று பேரையும் அழைத்து வந்தார்கள். அதில் எனக்ககான பெண் ஒருகால் விந்தி விந்தி நடந்து வந்தாள். அனைவரும் என்னை அதிர்ச்சியோடு பார்த்தார்கள். நான் புன்னகை மாறாமல் மணமேடையில் இருந்தேன்.

தங்கையும், கருவாச்சியும் விடைபெறும் நேரம் வந்தது.
மாமா என்னை கையெடுத்து கும்பிட்டார். நான் அவரின் கைகளைப் பிடித்து இறக்கிவிட்டேன். தங்கை கண்ணீர் விட்டபடி, குனிந்து வணங்கினாள். அவளை நான் தூக்கி உச்சி முகர்ந்தேன். கருவாச்சி என்னருகில் வந்தாள். அவள் கண்கள் கலங்கியது. வெடித்து அழுதாள்.. என் கண்களும் கலங்கியது. என் கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றினாள்.. மெதுவாக கைகளை விலக்கிய நான்.

' போய்வா கருவாச்சி'

என்று விடை கொடுத்தேன்.

நான் கைகளை அசைத்துக்கொண்டு நிற்கிறேன். கண்ணீரின் வழியே என் தங்கையும், கருவாச்சியும், கைகளை அசைத்துப் போவது மங்கலாகத் தெரிகிறது. கருவாச்சியின் முகத்தில் ' எனக்காக இவ்வளவும் செய்தீர்களே' என்ற கேள்வியைக் கண்டேன்.

என் உள்மனம் பதில் சொல்கிறது.

' கருவாச்சியே நீ என் அத்தை மகள் மட்டுமல்ல, என் காதலியும் கூட'

ஜனகன்
31-01-2011, 06:23 PM
நல்ல கதை டெல்லஸ்,
சமூகத்தில் இது போலே நல்ல ஆண்மக்களை கொண்ட சமுதாயம் உருவாக வேண்டும்.

கதாபாத்திரங்களின் மன பிரதிபலிப்பும் அருமை.

அந்த கடைசி பாராவில் கலக்கிட்டீங்க.படிக்க ரொம்ப நல்லா இருந்தது.வாழ்த்துக்கள்

dellas
01-02-2011, 05:29 AM
நன்றி ஜனகன் .

M.Jagadeesan
01-02-2011, 07:47 AM
மனதை நெகிழவைத்துவிட்டது. பாராட்டுக்கள்! டெல்லாஸ்.

ஜானகி
01-02-2011, 09:11 AM
படிக்க நிறைவாக இருந்தது. வாழ்த்துக்கள்.

dellas
01-02-2011, 09:52 AM
நன்றி ஜகதீஸ். நன்றி ஜானகி.

கௌதமன்
02-02-2011, 04:36 PM
இன்னுமொரு கருவாச்சி காவியம்

[ஒரு சந்தேகம்! நெஞ்சில் காதலியாக இன்னும் இருப்பவளை ஏன் அடுத்தவருக்கு மணம் முடித்து வைக்க வேண்டும். ...]

பாராட்டுகள் டெல்லாஸ்

dellas
02-02-2011, 04:48 PM
நல்ல கேள்வி கெளதம். ஆனால் உங்களுக்கே இதன் பதில் தெரியும். காதலியின் மகிழ்ச்சியில் தான் அவன் காதல் வாழ்கிறது. படித்தவனைத்தான் அவளுக்கு விருப்பம்.

கௌதமன்
02-02-2011, 04:53 PM
நல்ல கேள்வி கெளதம். ஆனால் உங்களுக்கே இதன் பதில் தெரியும். காதலியின் மகிழ்ச்சியில் தான் அவன் காதல் வாழ்கிறது. படித்தவனைத்தான் அவளுக்கு விருப்பம்.

அப்படி எங்குமே அவள் சொல்லவில்லை. அப்படியிருந்தாலும் முதல் திருமணத்தில் படித்தவனை மணம் செய்து அவள் அப்படி என்ன வாழ்க்கை வாழ்ந்து விட்டாள். இப்போது இரண்டாவது மணம் புரிந்தவன் ஒரு நிர்ப்பந்தத்தில் தானே மணம் செய்கிறான். அன்பினால் அல்ல. கொஞ்ச நாள்களில் அவனும் மாறிவிட்டால் பட்ட மொத்த பாடும் பாழாகி விடுமே என்கிற ஆதங்கம் தான் எனக்கு.

dellas
03-02-2011, 05:37 AM
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என நம்புவோம்.