PDA

View Full Version : ஒரு நாவலும் சில நொண்டி சாக்குகளும்ரங்கராஜன்
29-01-2011, 05:39 PM
ஒரு நாவலும் சில நொண்டி சாக்குகளும்


வணக்கம் உறவுகளே...

நீண்ட நாளுக்கு பின் நான் எழுதிய நமக்கு தெரியாத மனிதர்கள் என்ற திரியை படித்து பாராட்டிய அத்தனை உள்ளங்களுக்கும், உறவுகளுக்கும்....... நேரமின்மையால் பாராட்டாமல் சென்ற உறவுகளுக்கு..... ஆரம்ப சில வரிகளை படித்தவுடன், இவனுக்கு வேற வேலை இல்லை என்ற சென்ற உறவுகளுக்கும்........ மன்றத்தை திறந்து என் திரியை பார்த்தவுடன்,,,, உடனே திரியை மூடி விட்டு, கணிணியை ஆஃப் செய்து விட்டு (லேப் டாப்பாக இருந்தால் டமார் என்று மூடிவிட்டு), கணிணி மெயின் ஸ்விட்ஸை ஆஃப் செய்து விட்டு,....... வீட்டிற்கு வெளியே சென்று மின்கம்பியின் FUSEஐ கூட ஆக்ரோஷமாக பிய்து கடாசிய உறவுகளுக்கும்............ மிகவும் நன்றிகள்...... (சும்மா தமாஸு).

நம் எழுத்தை மற்றவர்கள் நேரத்தை செலவழித்து படிப்பதை விட பெருமை வேறு என்ன வேண்டும்.......

சரி இந்த முறை நான் சொல்ல வந்தது, என்னுடைய நீண்ட நாள் தொல்லை ஒன்றைப் பற்றி, கடந்த சில மாதங்களாகவே நான் நாவல் எழுதும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.... உடனே உங்கள் மனதில் தற்போது சில கேள்விகள் எழும்....

1. உன்னை யார் இறங்கச் சொன்னது...

2. என்ன தைரியத்தில் நீ இறங்கினாய்...

3. எவன் படிப்பான்.

4. தமிழ் அவ்வளவு கேவலமா போச்சா உனக்கு.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் எனக்கும் விடை தெரியாது தான். ஆனால்

எழுத வேண்டும் என்ற வெறி மட்டும் கடந்த பல மாதங்களாக என் மனதில் இருக்கிறது. மேலே உள்ள கேள்விகளுக்கு நான் சினிமா வசனம் போல, எடிசன் இப்படி நினைச்சி இருந்தா மின்சாரம் கிடைத்திருக்குமா, கிரகாம்பெல் இப்படி நினைச்சி இருந்தா டெலிபோன் கிடைத்திருக்குமா, சிவக்குமார் இப்படி நினைச்சி இருந்தா சூர்யா கிடைத்திருப்பாரா என்றெல்லாம் பதில் செல்ல விரும்பவில்லை.....

எனக்கு வெறி இருக்கிறது, அந்த வெறி என்னை நெறிப் படுத்தும் என்ற நம்பிக்கையில் நாவலை தொடங்கி விட்டேன். தொடங்கி விட்டேன் என்றால் பேப்பரிலோ, கணிணியிலோ அல்ல, மனதளவில்......... இத்தனை காலங்களும் என்னை பல விஷயங்களில் இந்த நாவல் ஆட்கொண்டு இருந்தது.......தூங்கும் போது, பல்துளக்கும் போதும், குளிக்கும் போதும், வண்டி ஓட்டும் போதும், அலுவலகத்தில் இருக்கும் போதும், இதுவரை பல நூறு தடவை காட்சிகளை, வசனங்களை, கதாபாத்திரங்களை, அவர்கள் செய்யும் வேலைகளை மாற்றி விட்டேன்....... எடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு வேலைகளையும் சிந்திக்கும் போதே நடந்து விடுவதால்......... அந்த நாவலின் ஸ்டோரி போர்டு உருவாக்குவது பெரும் பாடாக உள்ளது.

பலமுறை நாவலை ஆரம்பிக்க வேண்டும் என்று லேப்டாப்பை திறந்துக் கொண்டு, அதன் திரையையே முறைத்துக் கொண்டு பல மணி நேரம் அமர்ந்து இருக்கிறேன். வார்த்தைகளின் வறட்சியால் அல்ல, நன்றாக ஆரம்பிக்க வேண்டுமே என்பதால் தான். நான் எழுதும் வார்த்தைகள் நமக்கே பிடிக்கவில்லை என்றால் எப்படி படிப்பவர்களுக்கு பிடிக்கும்..... அதனால் அந்த விஷயத்தில் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன்.

காலைப் பொழுதில் படித்தால் நல்லது என்று படிக்கும் காலத்தில் எல்லாரும் சொல்லுவார்களே என்று பலமுறை காலையில் எழுந்து லேப்டாப்பை திறந்து விடுவேன். கதை வருவது போல இருக்கும் போது, என் வீட்டின் அழைப்பு மணி டிங்டாங் என்று அடிக்கும்.... திறந்து பார்த்தால், வீட்டை சுத்தப்படுத்தும் வேலைக்காரம்மா வந்து இருக்கும்.......

மன்னிக்கவும் வேலைக்காரம்மா என்று சொல்வதற்கு...... மேலும் மன்னிக்கவும் வீட்டை சுத்தப்படுத்த என்று சொல்வதற்கு........ காரணம் அது செய்யும் வேலைக்கு வீ........... சு..........அவ்வளவு தான்.... அந்த அழகில் தான் அது வீட்டை சுத்தப்படுத்தும். தினமும் அதனுடன் சண்டை தான், நான் என்ன சொல்றேனே, அதை பொறுமையா கேட்டு விட்டு அதற்கு நேர் எதிராக தான் செய்யும்.

பாத்திரங்களை கழுவும் போது, அந்த இடத்தில் நாம் இருந்தால், பாகிஸ்தான் இந்தியா எல்லைப் பகுதியில் யுத்தம் நடைபெறும் சத்தம் கேட்கும். அதுவும் நான் இரவுப்பணி முடித்து விட்டு தூங்குகிறேன் என்று அதற்கு தெரிந்துவிட்டாள் போதும், நைட்ரிஜன் பாம், அட்டாமிக் பாம், என்று எல்லாவிதமான கொலை ஆயுதங்களையும் அந்தம்மா பயன்படுத்தும்........

ஆகவே இந்தம்மா காலிங்பெல் அடித்தவுடன் நானே, லேப்டாப்பை மூடி வைத்து விடுவேன். அந்தம்மாவின் பெயர் குப்பம்மா, நான் அதை மேகீ என்று தான் கூப்பிடுவேன்....... காரணம் வீடு எவ்வளவு குப்பையாக இருந்தாலும், எத்தனை அழுக்கு பாத்திரம் இருந்தாலும், இரண்டு நிமிடத்தில் மேகீ மாதிரி முடித்து விடும். அந்த அழகில் சுத்தம் படுத்தும், எப்படி சின்ன வயதில் வாத்தியார் கிளாஸில் எழுந்து எதாவது பாடத்தை சத்தமாக படிக்க சொன்னால், சில வரிகளை விட்டு விட்டு படிப்போமே, அந்தமாதிரி.... ஹாலில் நாம் இருந்தால், அதை மட்டும் பெறுக்கி விட்டு, மீதி அறைகளில் போய் சும்மா அட்டன்டன்ஸ் போட்டு விட்டு வந்து விடும் அந்தம்மா.

நாவல் எழுதுவதற்கும்,,,,,,, மேகீக்கும் என்ன சம்பந்தம் ......நொண்டி குதிரைக்கு வழக்கினதெல்லாம் சாக்கு என்று சொல்வதைப் போல இருக்கு உன்னுடைய காரணங்கள் என்று நீங்கள் நினைப்பது எனக்கும் புரிகிறது. உண்மையில் சிந்தனை என்பது மனம் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, அது சூழ்நிலையும் சம்பந்தப்பட்ட விஷயம் தான். கொடைகானலுக்கு போயிட்டு சில நாள் இருந்து இதை எழுதி விட்டு வரலாம் டா என்று சசியையும், ஆதியையும் நான் பலமுறை கூப்பிட்டேன்.. அவர்கள் இருவரும் கால்ஷீட் காலியில்லாத நடிகைகள் மாதிரி பல நாட்களாக பிகு காட்டிக் கொள்கிறார்கள். சினிமா பாணியில் என்னடா இது கொடைகானலுக்கு போகவேண்டும் என்று கூறுகிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அங்கே போக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதற்கு காரணம் இரண்டு விஷயம் ஒன்று குளிர், மற்றோன்று இருள்.........(அப்ப மூடிட்டு ஏசி ரூம்ல லேட்டை அமுத்திட்டு எழுதுடா என்று சொல்லக்கூடாது). இந்த இரண்டையும் எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது.... மன்ற படைப்பாளிகள் எல்லாரும் நான் சொல்லும் முறையை கையாண்டு பாருங்களேன்..

நல்ல குளிர் பிரதேசத்தில், இரவு 7 மணிக்கு, அதாவது ஒரு ஒட்டலின் பால்கனியில் (முக்கியமாக FIRST FLOOR), பால்கனியில் இருந்து பார்த்தால் தூரத்தில் உள்ள மலை தொடர்ச்சியும், மண் பரப்பில் பைன் மரங்கள், உங்களைச் சுற்றி முழுவதும் இருட்டு...... வசதியான மெத்தைப் போட்ட நாற்காலி, எதே உங்கள் கழுத்தும், இடுப்பும் வலிக்காத வகையில் சரி அளவிலான மேஜை மீது லேப்டாப்......... காதையும், கழுத்தையும் மறைத்த மாதிரியான மப்ஃலர்.......... இப்போ உங்களின் கற்பனை வளம் எப்படி இருக்கும்........ கவிஞனுக்கும், கதாசிரியனுக்கும் இதை விட சொர்க்கம் என்னவாக இருக்க முடியும்.......

OPTIONAL : ஒரு கையில் சிகரெட், ஒரு கையில் மது...

இப்படி ஒரு சூழ்நிலையில் கற்பனை காட்டாறு எப்படி இருக்கும், ஆனால் திறமையான கவிஞனுக்கும், கதாசிரியனுக்கும் இது தேவையில்லை தான். திருமண விழா கூட்டத்திற்கு நடுவிலே அமர்ந்து சில பாடல்களை கண்ணதாசன் எழுதி கொடுத்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்...

நாம் ஆரம்ப புள்ளியில் இருக்கும் போது, கண்ணதாசன் போன்ற கோடிகளைப் பற்றி பேசவேண்டியது அனாவசியம் என்று தோன்றுகிறது. இந்த நாவலை முக்கியமாக தொடர முடியாததற்கு காரணம் ஆதி என்ற ஆதன்...... தினமும் நாங்கள் இருவரும் சில நிமிடங்கள் அதாவது 60 நிமிடங்கள் அல்லது 120 நிமிடங்கள் பேச வேண்டிய கட்டாயம் இருவருக்கும் இருக்கிறது. உலக விஷயங்களில் இருந்து உள்ளூர் கிழவிகள் வரை பேசுவோம். சமீபகாலமாக எங்கள் பேச்சில் நிறைந்து இருப்பவர்கள் மிஷ்கினும், சாரு நிவேதாவும், திமுக, அதிமுகவும் தான்.

இப்போது முன்னதாக சொன்ன இருவரும் பின்னதாக சொன்னவர்களைப் போல திட்டிக் கொள்வதால், சில ஸ்வாரஸ்யமான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன எங்களுக்குள். அவன் சாரு நிவேதாவின் தீவிர விசுவாசி (இதை குறிப்பிட்டால் அவன் என்னை கொலை செய்து விடுவான்) ஏன்டா அந்தாளு உனக்கு பிடிக்குமா டா என்று கேட்டால்,

ச்சே ச்சே ச்சே
இல்லவே இல்லை
இந்த டீயில் திடமில்லை,
திடமிருந்தால் சுவையில்லை,
சுவையிருந்தால் மனமில்லை

என்பதை போல ஆவேசமாகவும், அவசரமாகவும் அதை மறுப்பான். அந்த மாஜி இரு நண்பர்களின் பிரச்சனையில் நான் சில சமயம் நடுநிலையாக, அதாவது சில சமயம் மிஷ்கினுக்காகவும், சில சமயம் சாருக்காவும் ஆதரவாக பேசுவேன்....... ஆனால் ஆதனோ, நூல் பிடித்தாற்போல சாருக்கு மட்டும் தான் ஆதரவா பேசுவான்.

டேய் டேய் உனக்கு அவன பிடிக்கும் தானே..... என்று கேட்டால்

மறுபடியும் ஆரம்பித்து விடுவான் அந்த 3 ரோஸஸ் பாட்டை

ச்சே ச்சே ச்சே
இல்லவே இல்லை
இந்த டீயில் திடமில்லை,
திடமிருந்தால் சுவையில்லை,
சுவையிருந்தால் மனமில்லை....

சரி நான் விஷயத்திற்கு வருகிறேன், இந்த பேச்சினால் தான் நான் நாவலை எழுத முடியவில்லை என்று கூற வரவில்லை, ஆனால் அவன் பேசும் போது சில சமயம், இலக்கியங்களைப் பற்றியும், அவனுக்கு பிடித்த இஸங்களைப் பற்றியும் பேசுவான். எனக்கு அதையெல்லாம் கேட்டால் தூக்கி வாரிப் போடும், பயமாகவும் இருக்கும், அவன் பேசுவது எதையும் நான் படித்ததில்லை, ஏன் பார்த்துக்கூட இல்லை...

என்சீர் விருத்தம் என்பான், மாத்திரை என்பான், இஸங்கள் என்பான், இதிகாசம் என்பான், டால்ஸ்டாய் என்பான், நேர் எதிர், நேர் நேர், காந்தி நேர் , சுபாஷ் சந்திரபோஸ் நேர் என்பான்......... இதையெல்லாம் கேட்க எனக்கு தலை சுத்தும்......

இதையெல்லாம் தெரியாமல் எப்படி நாம் நாவலை எழுதுவது என்று வெட்கம் என்னை பிடுங்கி திங்கும்.... இதனாலே பலமுறை என்னுடைய நாவல் எழுதும் முயற்சி என்னைவிட்டு தூரம் சென்று பீரோவிற்கு அடியில் படுத்து்க கொள்ளும், இருந்தாலும் எனக்கு அந்த வெறி இன்னும் அடங்கவில்லை.....

சமீபத்தில் சசியிடம் பேசிக் கொண்டு இருந்தேன், ம்ம் சொல்ல மறந்துவிட்டேன், நம் கவிஞர் சசி அவரின் முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டு விட்டான். தொகுப்பின் பெயர் : இன்னும் ஓர் இரவில், அவனின் சொந்த பதிப்பகத்தின் மூலமாகவே புத்தகத்தை வெளியிட்டுள்ளான். விரைவில் அனைவரையும் அந்த புத்தகம் சென்றடையும் என்று நாம் வாழ்த்துவோமாக......

என்னுடைய நாவலையும், அவன் பதிப்பகத்தின் மூலமாகவே பதிப்பிக்கலாம் என்ற முடிவை நான் அவனைக் கேட்காமல் எடுத்து விட்டு, அவனை மிரட்டி சம்மதிக்க வைத்துள்ளேன். அவனும் முழுமனதுடன் சம்மதித்துள்ளான்....

நான் கண்டிப்பாக நாவலை எழுததான் போகிறேன், எனக்கு ஆதன் சொன்ன அளவிற்கு தமிழ் தெரியாது, கவித்துவமான வார்த்தைகளால் அலங்காரம் செய்ய தெரியாது, ஆனால் வாழ்க்கை தெரியும், அனைத்து மக்கள் வாழ்கின்ற வாழ்க்கையும் புரியும்.... வாழ்க்கையின் விளிம்பில் நின்று வாழ்க்கையை பார்த்து இருக்கிறேன், மனிதர்களின் உணர்வுகள் புரியும், தெரியும்..... எந்த மொழி பயின்றால் என்ன இவற்றை தானே நாம் படைப்புகளில் கொண்டு வரப்போகிறோம்........ அப்புறம் என்ன, எனக்கு தெரிந்த தமிழில் அவற்றை நான் சொல்லி விடுகிறேன்,,,,,, என் நாவலில்

இந்த திரியில் என்னுடைய வார்த்தைகள் கொஞ்சம் தலைகனத்துடன் இருப்பதைப் போல தோன்றலாம், நாவல் எழுதும் வரை கொஞ்சம் அந்த குணம் இருக்கட்டும், அப்போ தான் நாவலை முடிக்க முடியும்........

இல்லையென்றால்

AIM ON THE STARS LAND ON THE MOON என்ற கதையாகி விடும், என்ன பொறுத்தவரை,

AIM ON THE STARS LAND ON THE STARS தான், ஸ்டார்ஸி்ல் இறங்கி எரிந்தாலும் பரவாயில்லை........

நாவலின் தலைப்பு : நதியில் ஒரு சருகாய்

ஜனகன்
29-01-2011, 08:16 PM
நாவல் எழுதுவதற்குப் பில்டம் எல்லாம் பிரமாதமாய் இருக்கு. உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு நான் அடிமை.

அழகான தமிழ் நடையுடன், மிகவும் எதார்த்தமாக நல்ல கருத்துக்களுடன் ஆரம்பித்துள்ளீர்கள்.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ரங்கராஜன்.

கீதம்
29-01-2011, 09:34 PM
நாவலின் தலைப்பே ஆயிரம் கதை சொல்கிறது. இப்போதிருக்கும் இதே உத்வேகத்துடன் முழுமூச்சில் நாவலை எழுதிப் பதிப்பிக்க என் வாழ்த்துகள் ரங்கராஜன்.

கரு உருவானாலும் அதை சுவைபட கதையாக்குவது எத்தனைக் கடினம் என்பதை படைப்பாளிகள் அனைவரும் உணர்வர். எனவே சோர்வடையாமல் தொடர்ந்து எடுத்த காரியத்தை முடிக்கவும்.

சசிதரனின் கவிதை வெளியீட்டுக்கும் என் வாழ்த்துகள்.

Hega
29-01-2011, 09:46 PM
நதியில் ஒரு சருகாய் நாவலின் ஆரம்பமே பிரமாதமாய் இருக்கிறது.

தொடருங்கள்.

பாரதி
29-01-2011, 10:18 PM
சசியின் கவிதை வெளியீடு மகிழ்ச்சியான செய்தி. முழு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

உங்கள் நாவல் மிகச்சிறந்த முறையில் அமையவும் விரைவில் வெளிவரவும் வாழ்த்துகிறேன்.

p.suresh
30-01-2011, 12:03 AM
[QUOTE=ரங்கராஜன்;510958]ஒரு நாவலும் சில நொண்டி சாக்குகளும்

நொண்டி என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.மாற்றுத்திறனாள சகோதரர்களை அது காயப்படுத்தும்

மதி
30-01-2011, 01:01 AM
பல உண்மைகளை சொல்லியிருக்க.. :) நாவலின் கதை அதே தானா? இல்லை அதையும் மாத்தியாச்சா ???

Mano.G.
30-01-2011, 01:04 AM
என்னுடை சிக்னேச்சுரலில்
திட்டமிட தவறாதே
திட்டமிட்டு தவறாதே

என எழுதியுள்ளேன்

இப்பொழுதே திட்டமிட தொடங்கியுள்ளாய்
அதன் வெற்றியை கொண்டாட நானும் வருவேன்

ரங்கராஜன்
30-01-2011, 02:26 AM
பாராட்டிய அனைத்து உறவுகளுக்கு என்னுடைய நன்றிகள்.....

கண்டிப்பாக உங்கள் அனைவரின் பெயரை காப்பாற்றுவது போல என்னுடைய நாவல் இருக்கும்,,,,,,இருக்க வேண்டும்.

உங்கள் அனைவரின் அறிவுரைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நன்றி.

ரங்கராஜன்
30-01-2011, 03:18 AM
[QUOTE=ரங்கராஜன்;510958]ஒரு நாவலும் சில நொண்டி சாக்குகளும்

நொண்டி என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.மாற்றுத்திறனாள சகோதரர்களை அது காயப்படுத்தும்


திரு சுரேஷ் அவர்களே...

முதலில் சில விஷயங்களை புரிந்துக் கொள்ளுங்கள், எந்த ஒரு படைப்பாளியும், உடல் அளவில் தினமும் சவால்களுடன் வாழ்பவர்களை புண்படுத்தவும் மாட்டான், காயப்படுத்தவும் மாட்டான். இதையெல்லாம் மீறி நான் ஒரு மனிதன் கண்டிப்பாக, நான் அவர்களை புண்படுத்த இவ்வாறு எழுதவில்லை, நொண்டி என்பது சில இடங்களில் பிரயோகிக்கப்படும் வழக்கு மொழி, இந்த தலைப்பிற்கு அதுதான் சரியான வார்த்தையாக இருக்கும் அதனால் அதை என்னால் மாற்ற முடியாது.......... மன்னித்துக் கொள்ளவும்.

மற்றபடி இந்த தலைப்பு உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னித்துக் கொள்ளவும்.

கௌதமன்
30-01-2011, 04:25 AM
தைரியமாக ஆரம்பிங்க..

தேவை கொடைக்கானலில் ரூமோ, மதுவோ, சிகரெட்டோ இல்லை.

ஒரு டிரிகர், ஒரு உந்து விசை. கிடைச்சுட்டா அது பாட்டுக்கு தோட்டாக் கணக்கா போகும். நிறுத்துவதற்கு தான் கஷ்டம்.
அந்த விசை எப்ப வேணுமானாலும் வரும்.

(நண்பர் ஆதன் சாரு பிரியர் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஜெயமோகனைச் சொன்னாலும் அடிக்க வருவாரோ. மிஸ்கினைக் காட்டிலும் ஜெயமொகனைத் தான் சாரு காட்டு காட்டுனு காட்டுவார். அதான் கேட்டேன்.)


ஆல் த பெஸ்ட்.

ஆதி
30-01-2011, 04:38 AM
"நதியில் ஒரு சருகாய்" கீதமக்கா சொன்னது போல் எவ்வளவு அர்த்தங்களை பொதித்து வைத்திருக்கிறது ?

நாவல் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா..

:D :D ஏலேய் எத்தனை தடவ சொன்னாலும் நம்ப மாட்டியா ? எனக்கு சாரு, ஜெயமோகன், எஸ்.ரா நு எல்லாரையும் தான் டா பிடிக்கும்..

மிஸ்கின் மீதுள்ள கோவம், மிஸ்கினின் ஆனவம், நீயே விஜய் வீடியில் பார்த்த இல்லையா ? அப்புறம் மிஸ்கினின் தமிழர்கள் மீதான விமர்சனம்...

எந்த கூட்டம் மிஸ்கினை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறதோ அவர்களைத்தானே அவர் அப்படி விமர்சித்திருக்கிறார்...

சாருவோட நாவல்களை காமப்புத்தகம் நு சிலர் சொல்வாங்க, அது அப்படியல்ல என்பது என் வாதம், ஜெயமோகனும், எஸ்.ராவும் போல* சாரு எதனுடனும் எந்த சாமதானமும் செய்து கொள்ளாமல் இயங்குபவர் என்பதை நீ ஏற்றுக் கொள்வாய் என்று நம்புகிறேன்..

வசந்தபாலன் அடுத்தப்படத்தில் வாய்ப்புத்தருகிறேன் என்று சொல்லி இருந்த போதிலும், வாய்ப்பு போய்விட கூடாது என்பதற்காக அங்காடித்தெருவை தூக்கி வைத்துக் கொண்டாடாமல், அந்த படந்தின் மேலு தனக்குள்ள நெருடல்களை வெளிப்படையாய் சொன்னார், இதை எஸ்.ராவும், ஜெயமோகனும் செய்வதில்லை என்பது உனக்கு நன்றாகவே தெரியும் :)

ஆதி
30-01-2011, 05:17 AM
//நண்பர் ஆதன் சாரு பிரியர் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஜெயமோகனைச் சொன்னாலும் அடிக்க வருவாரோ. மிஸ்கினைக் காட்டிலும் ஜெயமொகனைத் தான் சாரு காட்டு காட்டுனு காட்டுவார். அதான் கேட்டேன்.//

கௌதம் எனக்கு சாருவை எவ்வளவு பிடுக்குமோ, அவ்வளவு ஜெயமோகனைப் பிடிக்கும்

samuthraselvam
31-01-2011, 07:44 AM
சசி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...!


ஒரு படைப்பு வெற்றிபெற நிறைய காரணங்கள் அடித்தளமாய் அமைந்திருக்கும். சில கதைகள் கதையில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களுக்காக, சில படைப்பாளிகளுக்காக, சில கதையின் கருவுக்காக, சில கதையின் எதார்த்த நடைக்காக, நகைச்சுவைக்காக இப்படி....

உன்னுடைய படைப்புகள் அனைத்திலும் நகைச்சுவையோடு கூடிய எதார்த்தம் இருக்கிறது. அந்த நகைச்சுவையால் கதையின் தீவிரம் மாறுவதில்லை. அந்தளவு தனித்திறமை பெற்றது உனது எழுத்தாற்றல்.

நிச்சயமாய் இந்த நாவல் உன்னால் எழுதப்பெற்று வெற்றியடையும். தலைப்பு அசத்தல்.. உனது நாவல் நதியாக எங்கள் அனைவரையும் அதில் சருகாய் கதையின் போக்கில் இழுத்துச்செல்...


வாழ்த்துக்கள் அண்ணா..!:icon_b:

(ஆனா என்ன கொஞ்சம் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்)

ரங்கராஜன்
31-01-2011, 08:58 AM
அன்பு உறவுகள் அனைவரின் வாழ்த்துகளுக்கு நன்றி......

நன்றி லீலுமா

உன்னுடைய வாழ்த்துகள் விரைவில் நிறைவேறும் என்று நம்புவோமாக, அப்புறம் எழுத்துப்பிழையைப் பற்றி சொல்லி இருக்கிறாய்,,,,,,, அதை போல்டான எழுத்துகளாலே சொல்லி இருக்கலாமே, ஏன் மறைத்து சொல்கிறாய்

மன்றத்தில் பதிக்கும் போது ஏற்படும் எழுத்துப்பிழை, வார்த்தைகளின் சரியான உச்சரிப்போ, ஸ்பெல்லிங்கோ தெரியாமல் ஏற்படுவதில்லை...... மனவோட்டத்தின் வேகத்தால் ஏற்படுவது........நான் முதல் லைனை தட்டச்சு செய்துக் கொண்டு இருக்கும் போது மனது மூன்றாவது வரியை யோசித்துக் கொண்டு இருக்கும்........ இது பலருக்கும் இருக்கும் பிரச்சனை எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.....

இந்த தவறை நான் நியாப்படுத்தவில்லை, இருந்தும் இந்த தவறால் படிப்பவர்களின் ஆர்வமும், வேகமும் குறைந்து போகும் என்ற உண்மையை நான் அறிவேன். இதற்கு முக்கிய காரணம் நான் எழுதியவுடன், நான் எழுதியதையே திரும்பி படிக்க மாட்டேன்.......... அதைவிட போரான விஷயம் உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை என்பது என்னுடைய கருத்து.......

இருந்தும் இனிமேல் தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்...

பின்குறி்ப்பு : கவலை வேண்டாம் நாவலில் அந்த தப்பு கண்டிப்பாக வராது....

நன்றி.....

அமரன்
31-01-2011, 08:35 PM
சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் என்ன வித்தியாசம்..
கமலுக்கும் ரஜினிக்கும் என்ன வித்தியாசம்..
கவித்துவத்துக்கும் அன்றாடத்துக்கும் அதே வித்தியாசம்..

உன்னிடம் கவித்துவக் களஞ்சியம் இல்லாமல் இருக்கலாம். அன்றாடம் உள்ளது. அதை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கும் மொழி வளம் உள்ளது.

கவித்துவம் படிக்கப் படிக்கப் பிடிக்கும்.
அன்றாடம் படித்ததும் பிடிக்கும்.

ஜமாய் கண்ணா..

வாழ்த்துகள்!