PDA

View Full Version : அது ஒரு காலம்..



rambal
06-04-2003, 04:51 PM
அது ஒரு காலம்..
நீயும் நானும்
கை கோர்த்து நடந்த
மழைக்கால நேரத்து மாலை நேர
ஆள் இல்லா தெருக்கள்...

உனக்காகவும் எனக்காகவும்
மட்டுமே தோன்றுவதாக
நாம் கற்பனை செய்த
என் வீட்டு இரவு நேரத்து
மொட்டை மாடி நிலவு...

உன் கால்களை முத்தமிட
வருவதாகச் சொல்லி
என்னைக்கட்டிக்கொள்வாயே..
அந்த அந்தி நேர
கடல் அலை...

கூட்டமே இல்லாத
திரையரங்குகளில்
கல்லூரியைக் கட் அடித்துவிட்டு
நீயும் நானும் மட்டுமே
அமர்ந்து படம் மட்டுமே பார்த்த
மதியான பொழுதுகள்...

கூட்டம் அதிகம்
காரணமாக
நம் விழிகள் மட்டும் பேசிய
அலுவல் நேர காலை
பேருந்துப் பயணங்கள்...

கண் விழித்திருந்து
உன்னை ஈரகூந்தலிலும்
தாவணியிலும் காண வேண்டுமென
உன் தெருவிற்கு மறைமுகமாக
வந்துபோன
மார்கழி மாதத்து அதிகாலைப் பொழுதுகள்....

உன் வற்புறுத்தலின் பேரில்
செகண்ட் ஷோ சென்றுவிட்டு
வீட்டுச்சுவர் ஏறிக்குதித்த
நடு நிசிப் பொழுதுகள்....

அது ஒரு காலம்!

கண்களில் வழிந்த கனவுகளோடும்...
பருவம் தந்த வாளிப்போடும்..
காதல் தந்த தைரியத்தோடும்..
உலகை வலம் வந்ததொரு காலம்...

போனவாரம் உன்னை நான்,
நீயும் நானும்
கை கோர்த்து நடந்த
மழைக்கால நேரத்து மாலை நேர
ஆள் இல்லா தெரு ஒன்றில்
பார்த்தேன்...

நீ உன் குழந்தையோடு...
நான் என் காதலோடு...

இளசு
06-04-2003, 05:11 PM
ஒரு காட்சிப்பதிவு
கவித்துவமாய்...
அருமை ராம், பாராட்டுகள்.

மன உறவுகளின் எச்சம்
மலரும் நினைவுகள் மட்டுமே மிச்சம்...

பாதி வழியில் பாதைகள் மாறிட
இனி ஒருவழிப்பாதைகளில்
அவரவர் பயணம்
கண நேர சாலைசந்திப்புகளில்
முழுநினைவும் மின்னலாய் உதயம்

கண் சிமிட்டி மீண்டும் நடந்தும்
மனத்திரையில் நீடிக்கும் பிம்பம்..

மீனலோஷனி
06-04-2003, 08:19 PM
அருமை அருமை

காதலின் வலியை ஆழமாய் உணர்த்திய கவிதை

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ராம்

gans5001
07-04-2003, 03:33 AM
உள்ளத்தை தொடும் உன்னத வரிகள்

Narathar
07-04-2003, 04:55 AM
கூட்டமே இல்லாத
திரையரங்குகளில்
கல்லூரியைக் கட் அடித்துவிட்டு
நீயும் நானும் மட்டுமே
அமர்ந்து படம் மட்டுமே பார்த்த
மதியான பொழுதுகள்...


படம் பார்த்தீர்களா கேட்டீர்களா?
இல்லை இந்தக்காலத்து இளசுகள் சினிமாவுக்குச்சென்றால் பார்ப்பது படமில்லை!!!






நீ உன் குழந்தையோடு...
நான் என் காதலோடு...



அழகிய வரிகள்..........பாராட்டுக்கள்