PDA

View Full Version : நமக்கு தெரியாத சில மனிதர்கள்....ரங்கராஜன்
22-01-2011, 06:11 PM
நமக்கு தெரியாத சில மனிதர்கள்.. (அ) நம்மில் சிலருக்கு தெரியாத மனிதர்கள்.


நலமா உறவுகளே..
மன்றத்திற்கு வந்து சில நாட்கள் ஆகிறது, ஒவ்வொரு முறையும் என்னுடைய மடிக்கணிணியை திறக்கும் போது, என்னை அறியாமல் என்னுடைய கை FAVORITES ஆப்ஷனில் உள்ள மன்ற தளத்திற்கு தான் வரும், வந்தவுடன் சில பதவுகளை மேலோட்டமாக பார்த்து விட்டு அப்படியே கிளம்பி விடுவேன். ஏன் இப்படி வேலை பளு எல்லாம் ஒண்ணும் இல்லை, மனது ஒருவிதமான காலி நிலையில் இருந்தது. எதையும் படித்து பார்க்கும் நிலையிலும் இல்லை, பதிக்கும் நிலையிலும் இல்லை.. ஆனால் இரண்டு நாளுக்கு முன் நான் சந்தித்த சில சம்பவங்கள், என்னை இப்போது எழுத வைத்துள்ளன. இது சுவாரஸ்யமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் போர் அடிக்காது என்று நினைக்கிறேன்.

இந்த பதிவின் தலைப்பை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த மனிதர்களை சிலர் பார்த்து இருப்பீர்கள் சிலர் பார்த்து இருக்க மாட்டீங்க...... அதனால் தான் இவ்வறை நான் கூறினேன்.

இப்போது நான் கூற இருப்பது ஒரு கிராமத்தை பற்றிய சில விஷயங்களை. அதுவும் நகரத்தில் இருக்கும் என்னைப் போன்ற ஆட்களை இது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.

என்னுடைய மிக மிக நெருங்கிய நண்பன் ஒருவன் பெயர் ..., பெயரா முக்கியம் ஆள் தான் முக்கியம். வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் சந்திக்கிறோம், பேசுகிறோம், சிரிக்கிறோம், வெறுக்கிறோம்...... ஆனால் நாம் நாமாக இருப்பது என்பது சிலரிடம் தான். அந்த சிலரில் பலரை பின்னுக்கு தள்ளிவிட்டு என் இதயத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவன் அவன்.

நீண்ட நாளாய் என்னை அவனுடைய கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு இருந்தான். (நான் பலமுறை அவனுடைய கிராமத்திற்கு சென்று வந்தாலும்,... சென்று நீண்ட நாள் ஆனதால் என்னை அவன் அழைத்துக் கொண்டு இருந்தான்). நானும் நேரம் ஓதுக்கி அவன் கிராமத்திற்கு சென்றேன். செங்கல்பட்டில் இருக்கும் என்னுடைய வீட்டிற்கு அவன் இருசக்கர வாகனத்தி்ல் வந்தான், என்னை அழைத்துக் கொண்டு போக.

அவன் கிராமத்திற்கு கிளம்புவதற்கு முன் அவன் வீட்டிற்கு ஸ்வீட் எதாவது வாங்கிச் செல்லலாம் என்று, இனிப்பகத்திற்கு வண்டியை ஓட்டச் சொன்னேன். கடையில் வண்டி நின்றது.

என்ன ஸ்வீட் டா வேணும்"

"எதும் வேண்டாம் டா, வா போகலாம்"

"அத அங்கையே சொல்லி இருந்தால் அப்படியே போய் இருக்கலாம் இல்லையா, என்ன வெங்காயத்திற்கு கடை வரை வண்டிய ஓட்டிட்டு வந்து இப்ப வேணாம்னு சொல்ற"

அவன் இந்த பதிலை எதிர்பார்த்து இருக்கவில்லை என்பது, அவன் ஒரு நிமிட புருவ உயர்த்தலிலும், பின்னர் உதட்டோர சிரிப்பிலும் எனக்கு விளங்கியது. (அவன் எதிர்பார்த்த வசனம் : பரவாயில்லை மச்சி என்ன வேணும்னு சொல்லு... என்பது தான்).

அவன் சிரித்ததை பார்த்து நானும் சிரித்தேன்.

"நமக்குள் என்ன இந்த பார்மாலிட்டிஸ்" என்றான்.

"அதே தான் நானும் கேட்கிறேன், நமக்குள் என்ன பார்மாலிட்டிஸ்"

"எதாவது வாங்கு மச்சி"

"அமிர்தான்ஜன் நாலு பாட்டில் வாங்கவா"

"அது இங்கு கிடைக்குமா"

"தெரியிதுல்ல, சொல்லு"

"பெங்கால் ஸ்வீட் வாங்கு"

தோல் சீவப்பட்ட உருளைக்கிழங்கு போல இருந்த அந்த ஸ்வீட்டை பார்த்தேன், அதன் தலையில் ஓரே போட்டு போட்டு, உள்ளே பல கலரில் பல இனிப்பகளை அடைத்து வைத்து இருந்தார்கள், அந்த ஸ்வீட்டை பார்ப்பதற்கு ஆக்ஸிடன்ட் ஆன வெள்ளைக்காரனின் மொட்டைத் தலை மாதிரி இருந்தது. அடிப்பட்டு ரத்தம் வந்துக் கொண்டிருந்த அந்த மொட்டைத் தலையின் விலை 300 ரூபாய் கிலோ என்று இருந்தது.

அவனை பார்த்தேன், "இதுக்கு பேசாமல் உன்னை கேட்காமல், நானே எதாவது இனிப்பை வாங்கி கொடுத்து இருக்கலாம்" என்றேன்.

அவன் சிரித்தான். எல்லாத்திற்கு சிரிப்பான், சிரிப்பை தவிற அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. சிரிப்புக்கு அப்புறம் என்னை நல்லா தெரியும் அவனுக்கு எங்கள் நட்பில் எந்த ஒரு மதிப்புக்குரிய விஷயத்திற்குமே மதிப்பில்லாத போது, காசையா நாங்கள் மதிப்போம். நான் அப்படி சொன்னாலும், அவனுக்கு தெரியும் என் மனதைப் பற்றி. நான் பெங்கால் ஸ்வீட் வாங்கித் தந்தாலும் வாங்கிக் கொள்வான், சக்கரையை வாங்கித் தந்தாலும் வாங்கிக் கொள்வான், புலிசாதத்தை சக்கரைப் பொங்கல் என்று தந்தாலும் வாங்கிக் கொள்வான்.... அப்படி ஒரு நண்பன்.

"டேய் அண்ணிகள் எல்லாம் தனியா இருக்காங்கலா, இல்லை ஒண்ணா இருக்காங்கலா"

"தனியா தான் இருக்காங்க"

"சரி அப்ப அவங்களுக்கு தனியா வாங்கி்க் கொள்ளலாம்"

"வேண்டாம் டா, அவங்க தனியா இருக்காங்க"

"அதான் தனியா வாங்கிக் கொள்ளலாம்"

"உனக்கு புரியலை மச்சி, அந்த இரண்டு அண்ணிகளுமே, வீட்டிற்கு பக்கத்தில் தனி தனியாக அண்ணன்களுடன் இருக்கிறார்கள்"

"அப்ப இரண்டு ஸ்வீட் பாக்ஸ் தனியா வாங்கணும்மா"

"ஆமா"

"சுத்தம், உங்க வீட்டு பசுமாடு, கோழி, நாய் எல்லாம் உங்க கூடதான் இருக்கா, இல்லை அதுவும் தனியா குடுத்தனம் நடத்துதா... அதுங்களுக்கு எதாவது வாங்கனுமா"

மறுபடியும் சிரிப்பு, அனைத்து பொட்டலங்களையும், தனி தனியாக வாங்கிக் கொண்டு, சுமார் 25 கிலோ மீட்டர் தூரம், கையில் பிளாஸ்டிக் கவர்கள் சரசரக்க இருசக்கர வாகனத்தில் அவனின் வீட்டை நோக்கி சென்றோம். அழகான கிராமம்.

அழகு என்பது பார்ப்பவர்களின் பார்வையில் தானே இருக்கிறது, பார்க்கும் பொருளில் இல்லையே. அதனால் அழகான கிராமம். வீட்டை அடைவதற்கு முன்பு, தண்ணீர் நிரம்பிய அழகிய குளம், அவற்றை கடந்து இருபக்கமும் வயல்களை கடந்து, சின்ன ஓடையை கடந்து (ஓடையை இருசக்கர வாகனத்தில் கடக்கும் போது, அழகாக குட்டி மீன்கள் அனைத்தும் ஓதுங்கி எங்களுக்கு வழிவிட்டன, அதை பார்க்க கொள்ளை அழகாக இருந்தது).

வீட்டை அடைந்தோம், மதியம் 1 மணி சணி வாசத்துடன் அருமையான காற்று, கூரை வீட்டின் முன்பக்கத்தில் வியர்க்க விறுவிறுக்க நண்பனின் அம்மா சமைத்துக் கொண்டு இருந்தாள். என்னை பார்த்தும்

"ஏம்மா இப்ப தான் வழித்தெரிஞ்சிதா" என்று தனக்குரிய கிராமிய ராக பாஷையில் நலம் விசாரித்தாள், கையில் ஒரு சொம்பு தண்ணீரை நீட்டியபடியே. வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு தண்ணீர் தரும் பழக்கம் எல்லாம் இப்போது கிட்டத்தட்ட ஓழிந்தே போய் விட்டது.

நகரத்தில் எல்லாம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு வித்தியாசமான வரவேற்புகள் தான் கொடுக்கப்படுகிறது.

பெல் அடித்தவுடன், கதவை கால்வாசிக்கூட திறக்காமல், நாய் சங்கிலிப் போட்ட கதவின் பின்பக்கத்தில் இருந்து

"யார் வேணும்"

"உங்க வீட்டுக்க...."

"அவரு இல்ல, வெளியே போய் இருக்கார்............ டம்மார்ர்ர்ர" கதவை இதைவிட வேகமாக சாத்தமுடியாது.

வந்தவன்,.,... "உங்க வீட்டுக்காரர், ஆக்ஸிடன்டில் போய்டார்" என்று கூட சொல்ல வந்து இருக்கலாம் இல்லையா......

இன்னும் சிலர் கதவை திறக்காமலே, அந்த பக்கத்தில் இருந்து இப்போது தான் வயசுக்கு வந்த மாதிரி

"யாரு......."

"சார் இல்லைங்களா.........."

"எந்த சாரு........"

உன் வீட்டு கதவை தட்டி, பக்கத்து வீட்டு சாரையா கேட்பாங்க மூதேவி என்று சொல்ல தோன்றினாலும், அமைதியாக அவரின் பெயரை சொன்னவுடன். கதவு திறக்கப்படும்.

"சத்த உக்காருங்கோ, தப்பா நினைச்சுக்காதீங்கோ, இப்பெல்லாம் திருட்டு பயம் அதிகமா இருக்கு அதனால் தான்"

இதுக்கு கதவை திறக்காமல், நம்மை அப்படியே அனுப்பி இருந்தால் பராவாயில்லை என்று தோன்றும் நமக்கு...... இல்லையென்றால்,

"இப்ப மட்டும் என்ன நான் திருட தான் வந்து இருக்கேன், கையிட்டு உன் நகையை என்று கத்தியை காட்ட தோன்றும்"

தண்ணீர் நீட்டிய என் நண்பனின் தாயிடம் ஸ்வீட்டை தந்து விட்டு, அண்ணி எங்கடா என்றேன். பின்னாடி சில பத்து அடிகள் தள்ளி அவரின் வீடு இருந்தது. அவனின் சின்ன அண்ணனும், சின்ன அண்ணியும் பெரிய மரத்து கொடாளியால் பிளந்துக் கொண்டு இருந்தனர். என்னை பார்த்தும், வீ்ட்டிற்கு சென்று சொம்பில் தண்ணீர் கொடுத்த படி.

"ஹாய் குண்டு எப்ப வந்த"

"நேத்து ராத்திரியில் இருந்து இங்க தானே இருக்கேன்"

"ஏய் இப்ப தானே வண்டியில வந்த, நான் பார்த்தேனே"

"அப்புறம் என்ன கேள்வி"

"சும்மா தான் கேட்டேன், இன்னும் மாறவே இல்ல குண்டு நீ"

"நீ மட்டும் என்ன அண்ணி எல்பிஜி கேஸ் சிலிண்டர் மாதிரி தானே இருக்க"

"பாருங்க இவன் இப்படி சொல்றான்" என்று அண்ணிடம் புகார் சொல்ல.

"பரவாயில்லை அவனாவது தைரியமா சொல்றானே" என்றார்.

அதற்கு அண்ணனை செல்லமாக தட்ட அண்ணி கொடாளியை தூக்கினாள். அவளிடம் ஸ்வீட் பாக்ஸை கொடுத்து விட்டு, பெரிய அண்ணியை தேடினேன். வயலில் களைப்பிடிங்கிக் கொண்டு இருந்தாள். சந்தோஷமாக வரவேற்றபடி அவள் வீட்டினுள் ஓடிச் சென்று தண்ணீர் கொடுத்தாள்.

இதற்கு மேல் தண்ணீர் குடிச்சா, வயிறு வெடித்து விடும், இப்பவே ஜெல்லி சாக்லெட் மாதிரி உடம்பு இருபக்கமும் சரிந்து விளையாடியது. அவள் மனது நோககூடாது என்பதற்காக கொஞ்ச வாயை நனைத்துக் கொண்டேன்.

நண்பன் கொஞ்சம் டவுன் வரை போயிட்டு வரேன், என்று என்னை விட்டு சென்றான். சிறிது நேரம் அண்ணிகளுடன் பேசினேன், அண்ணன் மரத்தில் இருந்து பத்துக்கு மேற்பட்ட இளநீர்களை கொண்டு வந்தார். வெட்டி குடி குடி குடி என்று என்னை துன்புறுத்தினார். வயிறு முட்ட குடித்து இருந்தேன், கொஞ்சம் நான் அசைந்தால், காது மற்றும் மூக்கின் தூவாரம் வழியாக தண்ணீர் வழியும் அளவிற்கு என்னுள் அன்று தண்ணீர் நிரப்பப்பட்டது. ஒரு இடத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு ஊரெல்லாம் சிந்திக் கொண்டு போகும் தண்ணி லாரியாக நான் என்னை உணர்ந்தேன்.

இவர்களிடம் தப்பித்துக் கொண்டு அவன் தோப்பில் நடுவில் உள்ள மர நிழலில் உள்ள கோவிலுக்கு சென்றேன். பலமுறை நான் அங்கு சென்று இருந்தாலும், முதல் முறையாக நண்பன் இல்லாமல் அந்த அமைதியான பொழுதில் இருந்தேன். கோவில் ஓரத்தில் ஓரு வயதான பெண்மணி இருந்தாள், வேர்கடலை உறுத்திக் கொண்டு,

"என்ன அத்த சவுக்கியமா" (நண்பனின் வயதான அத்தை)

"வா நைனா எப்ப வந்த"

"இப்ப தான் அத்த"

பர்ஸை திறந்து இருபது ரூபாய் கொடுத்தேன், வெத்தல பாக்கு செலவுக்கு வச்சிக்கோ, சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டு வெத்தலைப் பாக்கு போட்டு பழுப்பேறிய பற்களுடன் சிரித்தாள்.

"சாப்பிட்டியா அத்த"

"ம்ம"

"என்ன சாப்டே"

"பழையது"

"ஏன்"

"ஏன்னா"

"சாப்பாடு சாப்பிடலையா"

"எதுக்கு"

"எதுக்குன்னா, பசிக்குமே"

"அதான் பழையது சாப்பாட்டே நைனா"

"காலையில என்ன சாப்பிட்ட"

"காலையில தான் பழையது சாப்பிட்டேன்"

"மதியம் எப்ப சாப்பிடுவ"

"க்கும் மூணு வேளையும் சாப்பிட நான் என்ன ஆபிஸ்லையா வேலை செய்யறேன்"

"என்ன அத்த இப்படி சொல்ற, சரி இதோட எப்ப தான் சாப்பிடுவ"

"சாய்திரம் 7 மணிக்கு தான்"

"தினமும்மா"

"பொறந்ததில் இருந்து இப்படி தான்"

கணவனை இழந்து மகனை வேறு எதோ இடத்தில் வேளைக்கு அமர்த்திய அவளின் தினசரி வாழ்க்கை இது தான், காலை 11 மணிக்கு பழையது, அதோடு இரவு 7 மணிக்கு. உண்ட உணவு செறிக்கும் அளவிற்கு உழைப்பு, ஏக்கர் கணக்கில் குனிந்துக் கொண்டு பயிர்களுக்கு நடுவில் இருக்கும் களைகளை பிடுங்கினால் 75 ரூபாய் கிடைக்கும். மாசத்தில் அத்தனை நாளும் வேலை இருக்காது, எப்படியும் உருண்டு புரண்டு 700 ரூபாய் மேல் தெத்தி விடுகிறாள்.

மாத சம்பளம். இதுதான் நிஜம், அவளின் நிஜம், முகத்தில் அறையும் நிஜம்.

இந்த நிஜத்துடன் உலகத்தில் எதோ ஒரு மூலையில் இருக்கும் பில்கேட்ஸ், அம்பானிகளுடன் ஒப்பிட நான் விரும்பவில்லை. சில ஆயிரங்கள் சம்பளம் வாங்கும் என்னுடன் அவளை ஒப்பிட விரும்புகிறேன்.

என்னுடைய மாத போன் பில் 1500 ரூபாய் .. அவளின் இரண்டு மாத சம்பளம்.

ஒருமுறை ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டால் 100 ரூபாய்... அவளி்ன் சம்பளத்தின் கிட்டதட்ட பத்து சதவீதம்.

குடிக்க சென்றால், மினிமம் 600 ரூபாய் ... அவளின் சம்பளத்தில் கிட்டதட்ட 90 சதவீதம்.

நான் வாங்கும் பிரஷ்.... 75 ரூபாய்

செருப்பு...... 1500 ரூபாய், ஜீன்ஸ் 2000 ரூபாய், உள்ள நாற்றத்தையும், உடல் நாற்றத்தையும் மறைக்கும் வாசனை திரவியம், 600 ரூபாய்,

நினைக்கவே மனது ஒரு மாதிரியாக இருந்தது. இது என்னுடைய செலவுகள்.... கண்டிப்பாக மன்றத்தில் இருக்கும் அனைவரும் என்னைவிட அதிக சம்பளம் வாங்குபவர்களாகவும், அல்லது அதிகமாக வாங்குபவர்களுக்கு மனைவியாகவும் தான் இருப்பீர்கள்.... உங்களுடைய செலவுகளை என்னுடனோ அல்லது என்னைப் போல சம்பளம் வாங்குபவர்களுடன் ஓப்பிட்டால், நாங்கள் அந்த அத்தையின் நிலை, தான் உங்களுக்கு.

ஓரே உலகத்தில் தான் இருக்கிறோம், ஓரே காற்று தான், ஓரே தண்ணீர் தான். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு. நாம் வாழும் சமயத்தில் நமக்கு தெரியாத எத்தனையோ மனிதர்கள் என்ற என்னத்தோடு அமர்ந்திருந்தேன்.

அருகில் தேங்காய் மட்டையை இரண்டு பேர் உறித்துக் கொண்டு இருந்தனர். ஒருவர் வயதானவர், மற்றோருவர் இளைஞன், வயதானவர் சட்டையில்லாமல், தலையில் முடியில்லாமல், குயில் நிறத்தில் வியர்வை சொட்ட சொட்ட தேங்காயை உறித்துக் கொண்டு இருந்தார். பழனி படிக்கட்டைப் போல அவரின் வயிற்றில் அத்தனை மடிப்புகள், கஜினி அமர்கானை விட ஒரு படிக்கட்டு அவரிடம் அதிகமாகவே இருந்தது. அவரின் உழைப்பின் அனுபவம் அந்த படிக்கெட்டில் இருந்தது. காலையி்ல் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை உறித்து சோர்ந்த அவர்கள், உணவு உண்பதற்காக இடைவேளை விட்டனர். அருகில் இருந்த மோட்டரில் முகத்தை கழிவினர். கை, கால்களை துடைத்தனர், அதை பார்க்கும் போது, எனக்கென்னவோ, நான் காலையில் இருந்து தேங்காய் உறித்து, களைப்பு போக முகத்தில் தண்ணீர் தெளித்தது போல இருந்தது.

அருகில் உள்ள மரத்தின் கிளையில் மாட்டி வைத்திருந்த ஒரு முழம் அளவு உள்ள வாலியை எடுத்து என்ன அருகில் அமர்ந்தனர். இளைஞன் அருகில் இருந்த தேக்கு மரத்தில் ஏறி இருப்பதிலே பெரிய இலையாக பறித்து, அதை தண்ணீரில் கழுவி இருவரும் அதில் சாப்பிட அமர்ந்தார்கள். பக்கத்திலே வாழை தோப்பு இருந்தும் ஏன் இவர்கள் இதில் போய் சாப்பிடுகிறார்கள்.


"அதான் வாழைத் தோப்பு இருக்கே ஒரு பெரிய இலையை கிழிச்சி சாப்பிட வேண்டியது தானே"

"இல்லங்க, ஒரு பெரிய இலை இரண்டு ரூபாய்க்கு போகும், எதுக்கு அத வீணாக்குனும்மேனு"

இந்த காலத்தில் இரண்டு ரூபாயை யாரும் மதிப்பதில்லை, குறைந்தது ஐந்து ரூபாய் தான் மதிப்பு. இன்னும் சில மாதங்களில் குறைந்த பட்சம் ரூபாயே ஒரு ரூபாய் தான். ஐம்பது பைசா, நால்னா எல்லாம் மத்திய அரசு திரும்ப பெறப்போகுது. ஏற்கனவே பஸ் நடத்துனர், ஓட்டல் சர்வர்கள் எல்லாம் பில்லில் மீதி இரண்டு ரூபாய் இருந்தாலே, நம்மைக் கேட்காமலே அவர்களே உரிமையுடன் எடுத்துக் கொள்ளும் வேளையில், அந்த பெரியவரின் பதில் கொஞ்சம் என்னை யோசிக்க வைத்தது.

அவர்களிடம் இல்லை அதனால் அவர்கள் செலவழிப்பது இல்லை, என்னிடம் இருக்கிறது நான் செலவழிக்கிறேன் என்ற வாதம் இதில் சரிப்பட்டு வருவதாக எனக்கு படவில்லை. இப்போ உன்னிடம் இருக்கு எப்போதும் அது இருக்குமா என்ற கேள்வி என்னுடன் எழுந்தது.

நீ சேர்த்து வைத்து எவனோ அனுபவிக்க நீ ஏன் சம்பாதிக்க வேண்டும், இருக்கும் வரை நீ சம்பாதிப்பதை நீயே சாப்பிட்டு விட்டு போ என்று என்னுடைய மூளை முன்னதான வாதத்திற்கு பதில் சொன்னது.

சேமிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது.

நீ பட்டினி கிடந்து உன்னுடையவர்களுக்கு பசியாற்றுவதில் ஒரு திருப்தி இருக்கிறது. (அந்த அத்தை இந்த பொங்கல் அப்ப தான் வாங்கிய 700 ரூபாய் சம்பளத்தில் 500 ரூபாய்க்கு அவளின் மகனுக்கு புது துணி வாங்கித் தந்தாளாம்). மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறினாள்.

"நீ புதுதுணி வாங்கிளையா அத்த"

"எனக்கு என்னாத்துக்கு புதுத்துணி, இருக்கிறதே கட்ட முடியல நைனா, வயல்ல இறங்குறதுக்கு என்ன பட்டுப்புடவையா கட்டிக்குனு போகமுடியும்"

"உன் புள்ள சம்பளம் வாங்கி உனக்கு வாங்கித் தரலையா"

"அவன் சம்பளம் வாங்கி அவனுக்கு சட்டத்துணி வாங்கிக்குனான்"

"அப்புறம் எதுக்கு நீ எடுத்து குடுத்த"

"பின்ன யாருக்கு எடுத்துகுடுக்க ஒத்த புள்ளைய வச்சிக்குனு"

யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்..

"இந்த ஜெனரேஷன் பசங்க எல்லாம் ரொம்ப செல்பிஷ்ஷா இருக்காங்க, ஏனோ தெரியலை அவங்க ஜீன்லையே அந்த செல்பிஷ்னஸ் ஊறி விட்டது"

நண்பன் அதற்கு வந்து விட்டான்,

"டேய் அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க டா"

வீட்டிற்கு சென்றால், மணக்க மணக்க சிக்கன் குழம்பு. வாழையிலையில் சாப்பாட்டைப் போட்டு ஒரு பிடிபிடித்தோம் நானும் நண்பனும்.

சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டை விட்டு கிளம்பும் போது, அனைவரிடமும் சொல்லி விட்டு வந்தேன். கோவிலுக்கு அருகில் தன் வேலையை செய்துக் கொண்டு இருந்த அத்தையிடம்.

"அத்த நான் வரேன்"

"சாப்டியா நைனா"

"ம்ம்"

"என்ன சாப்ட"

"சிக் சிக்... சாம்பார் அத்த"

"அப்படியா, சரி இந்த வேர்கடலை வீட்டுக்கு கொண்டு போ" என்று எனக்காக ஏற்கனவே கட்டி வைத்திருந்த சிறு மூட்டையில் உரித்த வேர்கடலையை கொடுத்தாள் மகிழ்ச்சியுடன்.

அதை வாங்கி்க் கொண்டு,

"டேய் மச்சி ஏண்டா அவங்களுக்கு பழையதை போடுறீங்க, நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டியது தானே டா, சிக்கன் எல்லாம் செஞ்சு இருக்கீங்க இல்ல, கொஞ்சம் அவங்களுக்கும் கொடுக்கலாம் இல்ல"

"சரி நீ ஏன் அவங்க கிட்ட சாம்பார்னு சொன்ன"

"பின்ன அவங்க பழையதை சாப்பிட்டு இருக்காங்க, அவங்களை வெறுப்பெத்துற மாதிரி நான் சிக்கன் குழம்புன்னு எப்படி சொல்றது டா"

"டேய் லூசு, உனக்காக கோழியை உறிச்சி, கிளின் பண்ணி கொடுத்துட்டு தான்டா அவங்க பழையதை சாப்பிட்டு போனாங்க"

அவன் கூறியது அப்போதான் எனக்கு உறுத்தியது, சாப்பிடும் போது அந்த அத்தையையும் சாப்பிட கூப்பிட்டு இருக்கலாம், நான் மட்டும் வந்து சாப்பிட்டு விட்டு கருத்து சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை, அவள் நான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்தும் எனக்கு வேர்கடலை மூட்டையை கொடுக்கிறாள். அதுதான் அன்பு, பாசம்....... இவற்றை பார்க்கும் அந்த கருத்து உண்மைதான்னு புரியுது.

"இந்த ஜெனரேஷன் பசங்க எல்லாம் ரொம்ப செல்பிஷ்ஷா இருக்காங்க, ஏனோ தெரியலை அவங்க ஜீன்லையே அந்த செல்பிஷ்னஸ் ஊறி விட்டது"

இப்படி நமக்கு தெரியாத பல மனிதர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பாலகன்
22-01-2011, 06:40 PM
மிகவும் நெகிழ்ச்சியா இருக்கிறது நண்பரே உங்களுக்கு வேர்கடலை கொடுத்த அந்த அத்தையை நினைக்கும்போது.

உண்மைதான் நீங்கள் சொன்னதுபோல இந்தகால சந்ததியினர் மிகவம் குறுகிய மனப்பான்மையுடன் தான் வாழ்கின்றனர். தன்னலம் தான் அதிகம்

அருமையான பகிர்வு.

கீதம்
22-01-2011, 10:12 PM
இதுதான் மனிதர்களைப் பற்றிய அசல் பதிவு. மனம் பாதித்த நிகழ்வை பூசி மெழுகாமல் அப்படியே படம்பிடித்து எங்கள் பார்வைக்கு பதிந்ததற்காக நன்றி சொல்வதா? அதை உங்கள் பாணியில் சுவைபடப் பகிர்ந்ததற்காகப் பாராட்டுவதா? தெரியவில்லை.

எந்த உறுத்தலும் இல்லாமல் உங்களால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிட முடிந்ததா? முடிந்தது எனில் இதுபோலொரு பதிவு உங்களிடமிருந்து வெளிவந்திருக்காது.

என் உறவு விழுதுகளிலும் இதுபோன்ற மனிதர்களுடனான என் ஊஞ்சலாட்டம் காத்திருக்கிறது. நீங்கள் முந்திக்கொண்டீர்கள். என் தாமதத் தருணங்களை எண்ணி இம்முறையும் என்னை நொந்துகொள்கிறேன்.

பாராட்டுகள் ரங்கராஜன். உங்கள் பார்வை பதிக்கும் பதிவின் சுவையே தனிதான். தொடருங்கள் மனிதர்களின் அறிமுகத்தை!

மதி
23-01-2011, 12:38 AM
உன்னை இப்படியொரு பதிவு எழுத வைத்த அத்தைக்கு நன்றி.. உண்மை தான். இந்த தலைமுறையினரின் தன்னலம்.. !!!

பாரதி
23-01-2011, 02:11 PM
பிறருக்கு உதவுவதிலேயே எப்போதும் மகிழ்ச்சி அடையும் உள்ளங்கள்....!!!

”நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்ற வாசகத்தை நினைவூட்டும் மனிதர்களை வணங்கத்தான் வேண்டும்.

நல்ல மனிதர்களை கண்டது மட்டுமின்றி கண்களால் அறியச்செய்த உங்களுக்கும் நன்றி ரங்கராஜன்.

M.Jagadeesan
23-01-2011, 02:17 PM
அப்பழுக்கற்ற உள்ளங்களை கிராமங்களில்தான் பார்க்கமுடியும்.கிராமத்து
அத்தை அப்படிப்பட்ட ஒரு படைப்பு! நிஜமான ஒரு நிகழ்வை நேரில் பார்த்தது போல இருந்தது!

ஆளுங்க
23-01-2011, 03:49 PM
நீங்கள் எழுதிய பதிவு மனதைத் தொட்டது!!

"வாழ்வின் முக்கிய தேவை" என்று சொல்லி நேற்று நான் வாங்கிய பொருள் என்னைப் பார்த்து சிரிக்கிறது!!

கௌதமன்
23-01-2011, 04:32 PM
[B][SIZE="4"]நினைக்கவே மனது ஒரு மாதிரியாக இருந்தது. இது என்னுடைய செலவுகள்.... கண்டிப்பாக மன்றத்தில் இருக்கும் அனைவரும் என்னைவிட அதிக சம்பளம் வாங்குபவர்களாகவும், அல்லது அதிகமாக வாங்குபவர்களுக்கு மனைவியாகவும் தான் இருப்பீர்கள்.... உங்களுடைய செலவுகளை என்னுடனோ அல்லது என்னைப் போல சம்பளம் வாங்குபவர்களுடன் ஓப்பிட்டால், நாங்கள் அந்த அத்தையின் நிலை, தான் உங்களுக்கு.

ஓரே உலகத்தில் தான் இருக்கிறோம், ஓரே காற்று தான், ஓரே தண்ணீர் தான். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு. நாம் வாழும் சமயத்தில் நமக்கு தெரியாத எத்தனையோ மனிதர்கள் என்ற என்னத்தோடு அமர்ந்திருந்தேன்.


நம்மில் பெரும்பாலோரின் தேவையைத் தீர்மானிப்பது நமது வருமானம். 1500 ரூபாய்க்கு காலணியும், 2000 ரூபாய்க்கு ஆடையும், நறுமணப் பொருளும் இல்லாமலேக் கூட நம்மால் வாழ முடியும். ஆனால் இதை வாங்கும் அளவுக்கு நமக்கு வருமானம் இருந்தால் இந்தப் பொருள்களெல்லாம் அடிப்படையாகத் தேவைப்படும் பொருளாக மாறிவிடுகிறது. ஆனால் இது எல்லாம் இல்லாத மக்கள் சந்தோஷமாக இல்லை என்று நாம் கருதினால் அது நமது அறிவீனம். எவனொருவன் குறைந்த வருமானத்திலும் அதிக நிம்மதியோடு வாழ்கிறானோ அவன் வாழ்க்கையைப் புரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்று பொருள். அவனைப் பார்த்து வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் பொறாமைப் படுவதற்கு நிறையக் காரணம் இருக்கிறது.

எவன் ஒருவன் படுத்தவுடன் தூங்கிவிடுகிறானோ அவனே ஆசிர்வதிக்கப் பட்டவன்.

உங்கள் கதையில் வரும் அத்தை ‘ ஆசிர்வதிக்கப் பட்டவர்’. அவரைக் கண்டுப் பொறாமைதான் பட முடியும்.

நன்றி ரங்கராஜன்!

ரங்கராஜன்
25-01-2011, 04:52 AM
இதை படித்து, அருமையான யோசனைகளையும், வாழ்வியலில் உள்ள அற்புதங்களையும் பகிர்ந்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கு நன்றி......

Mano.G.
25-01-2011, 07:16 AM
தம்பி உன்னுடைய சிறுகதை போலுள்ள
உண்மை சம்பவத்தை வாசித்தவன்,
அதன்னூடே நடந்த சம்பவங்களும்
நிகழ்வுகளும் அதோடு உன்னுடைய உவமைகளும்
மனதை சற்றே பாதிப்புர செய்தன

உன்னிமிடருந்து மேலும் எதிர்பார்க்கும்

மனோ.ஜி

aren
25-01-2011, 11:23 AM
இப்படியும் சில அத்தைகள் இன்னும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் தம்மால் முடிந்ததை தாமே செய்துகொண்டு, அவர்கள் நீடூடி வாழவேண்டும்.

றெனிநிமல்
25-01-2011, 11:49 AM
உங்கள் நேரத்தை செலவு செய்து எங்கள் பார்வைக்காக
சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.

அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்களோடு....

எழுத்துப் பாணியும் அழகாவே உள்ளது.