PDA

View Full Version : விடைபெறவியலா வினாக்கள்கீதம்
21-01-2011, 11:44 PM
உன் விபரீதச் செயல்களுக்கான
மூலகாரணம் பற்றிய வினாக்களுக்கு
நீ ஒருபோதும் முக்கியத்துவம் தருவதேயில்லை!
பின்விளைவுகளெனத் தொடரும்
முறிந்துபோன மனங்களின் எண்ணிக்கை பற்றியோ
முடங்கிப்போன செயல்பாடுகளின் நல்லாதாயங்கள் பற்றியோ
மீண்டுமொரு விவாதத்தை முன்வைப்பதை
முற்றிலும் நீ ஏற்பதுமில்லை!

உன்னிடம் எழுப்பப்பட்ட வினாக்கட்டடங்களை
நீ எட்டி உதைத்துத் தரைமட்டமாக்கியிருக்கிறாய்,
எச்சில் உமிழ்ந்து ஏளனம் செய்திருக்கிறாய்,
ஏவியவர் மேலேயே எடுத்தெறிந்து வீசியிருக்கிறாய்!
ஆனால் அவற்றுக்கான விடைகளை
என்றுமே எடுத்துரைத்ததில்லை!

நீ விடைகள் அளிக்கவிரும்பாத
வினாக்கள் பற்றிய கவலை எனக்கெப்போதும் உண்டு.
உன்னிடம் விடைபெற முயன்று பிரியாவிடைபெற்றவர்களின்
விசேசப்பிரதிநிதியாக உன்முன் நிற்கிறேன்,
எதுவும் வீண்போகவில்லை,
உன் விநோதகுணம் பற்றி விவரமாகவே அறிந்துகொண்டேன்!

பதில் தரவியலாக் கேள்விகள் எதுவும்
உன் முன்வைக்கப்படவில்லை என்பதை
மற்றவர்களைப்போலவே நீயும் அறிந்திருக்கிறாய்!

பதில் சொல்வதன் மூலம்...
உன் ஆழ்மனக்கிடக்கைகளை,
உன் அந்தரங்கக் கிடங்கின் இருட்டுமூலைகளை,
உன் அனர்த்தம் நிறைந்த புரிதல்களின் பட்டியல்களை,
மூச்சுவிடத்திணறும் உன் குறுகிய மனவோட்டங்களை...
அடுத்தவர் அறிந்துகொள்வதைத் தவிர்க்கிறாய்!
இதுபோன்ற அளவீடுகளால் உன் சுற்றுப்புறப் பரிமாணங்கள்
அனுமானிக்கப்பட்டு அறுதியிட்டுரைக்கப்படுவதை
அடியோடு வெறுக்கிறாய்!

இருளுக்குள் ஒளியும் நிழல்போல
பாதுகாப்பாய் உன்னை... உன் இருப்பை...
நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறாய்!

அகோரக் குணங்காட்டும் கத்தல்களாலும்
ஆவேசம் மென்றுதின்னும் மெளனங்களாலும்
சுள்ளென்று காட்டும் முகத்திருப்பங்களாலும்
சூழ்ந்து நிற்கும் உறவுகளைச் சோர்வுறச்செய்கிறாய்!

மலச்சிக்கல் கொண்டவனை விடவும்
அதீதமான அசெளகரியத்துடன்
மனச்சிக்கல் கொண்டு தவிப்புடன் நெளிகிறாய்!

நிர்வாணமாய் நிற்பவனிடத்தில் பிடுங்க எதுவுமற்று
விரக்தியுடன் திரும்ப யத்தனிக்கிறேன்,
நீயோ வழக்கத்துக்கு மாறாக
என்னிடம் எதையோ கேட்டு என் பதிலுக்காய்
என் முகம்பார்த்துக் காத்திருக்கிறாய்!

மதி
22-01-2011, 12:51 AM
அட.. இவ்வளவு அழகாக சிக்கலான மனநிலையை படம் பிடித்துக் காட்ட முடியுமா??
ஏறக்குறைய தற்சமயம் நானும் இப்படி தான்.. விலகி செல்ல ஆரம்பித்தாகிவிட்டது.. விலகல் கூட தற்காலிகம் தான். பின்ன எங்க போனாலும் யார்கிட்ட பேசினாலும் தவறாமல் வருது “எப்போடா கலியாணம்?” :eek::eek::eek:

யோசிக்க வைத்த கவிதைக்கு நன்றி..!!

கௌதமன்
22-01-2011, 07:20 AM
பள்ளிப் பாடங்களின் படிக்காத பகுதியின்
கேள்விகளுக்கும் பதிலளிக்க பழகியிருக்கிறோம்.
வாழ்க்கைப் பாடத்தைத் தினமும் படித்தும்
கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறோம்.

விடை சொல்ல முடியாத கேள்விகளை ஒவ்வொருவரும்
ஏதாவொரு சந்தர்ப்பத்தில் எதிர்கொள்கிறோம்
ஒரு புன்னகையின் மூலமோ, கவனிக்காதது போலவோ,
கவனித்தும் ஒரு மௌனத்தையோ, எதிர் கேள்வியையோ,
கண்கள் சிவக்கும் ஆத்திரத்தையோத்தான்
எப்போதும் பதிலாகத் தருகிறோம்.

எப்போதும் விடை சொல்லும் ஒருவனிடம்
கேள்விக் கேட்க வினாக்கள் நம்மிடம் இல்லை.
விடை சொல்ல விரும்பாத ஒருவனிடமே
நாம் கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.
பெரும்பான்மையான விடைகிடைக்கா கேள்விகளுக்கு
விடை தெரிந்தேதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கவிதையின் மற்றொரு பக்கத்தை சிந்திக்கத் தூண்டிய கீதம் அவர்களுக்கு நன்றி!

வளமான வார்த்தைகளை கவி மாலையில் கோர்த்தற்கு மற்றுமொரு நன்றி! [நல்லாதாயங்கள், மூலகாரணம், வினாக்கட்டடங்களை, ஆழ்மனக்கிடக்கைகளை, புரிதல்களின் பட்டியல்களை, .. இன்னும்பல ]

கீதம்
22-01-2011, 10:29 AM
அட.. இவ்வளவு அழகாக சிக்கலான மனநிலையை படம் பிடித்துக் காட்ட முடியுமா??
ஏறக்குறைய தற்சமயம் நானும் இப்படி தான்.. விலகி செல்ல ஆரம்பித்தாகிவிட்டது.. விலகல் கூட தற்காலிகம் தான். பின்ன எங்க போனாலும் யார்கிட்ட பேசினாலும் தவறாமல் வருது “எப்போடா கலியாணம்?” :eek::eek::eek:

யோசிக்க வைத்த கவிதைக்கு நன்றி..!!

எதில்தான் சிக்கல் இல்லை? எதிராளியின் தரப்பிலிருந்து பார்த்தால் என் குணம் அவனுக்கு விநோதம். கவிதையின் இன்னொரு வாயிலைத் திறந்துவிட்டதற்கு நன்றி, மதி.

கீதம்
22-01-2011, 10:35 AM
பள்ளிப் பாடங்களின் படிக்காத பகுதியின்
கேள்விகளுக்கும் பதிலளிக்க பழகியிருக்கிறோம்.
வாழ்க்கைப் பாடத்தைத் தினமும் படித்தும்
கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறோம்.

விடை சொல்ல முடியாத கேள்விகளை ஒவ்வொருவரும்
ஏதாவொரு சந்தர்ப்பத்தில் எதிர்கொள்கிறோம்
ஒரு புன்னகையின் மூலமோ, கவனிக்காதது போலவோ,
கவனித்தும் ஒரு மௌனத்தையோ, எதிர் கேள்வியையோ,
கண்கள் சிவக்கும் ஆத்திரத்தையோத்தான்
எப்போதும் பதிலாகத் தருகிறோம்.

எப்போதும் விடை சொல்லும் ஒருவனிடம்
கேள்விக் கேட்க வினாக்கள் நம்மிடம் இல்லை.
விடை சொல்ல விரும்பாத ஒருவனிடமே
நாம் கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.
பெரும்பான்மையான விடைகிடைக்கா கேள்விகளுக்கு
விடை தெரிந்தேதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கவிதையின் மற்றொரு பக்கத்தை சிந்திக்கத் தூண்டிய கீதம் அவர்களுக்கு நன்றி!

வளமான வார்த்தைகளை கவி மாலையில் கோர்த்தற்கு மற்றுமொரு நன்றி! [நல்லாதாயங்கள், மூலகாரணம், வினாக்கட்டடங்களை, ஆழ்மனக்கிடக்கைகளை, புரிதல்களின் பட்டியல்களை, .. இன்னும்பல ]

விடைபெறவியலா வினாக்களைப் பற்றி மட்டுமே சொல்லும் கவிதையின் பின்னூட்டமாய் விடை பகரவியலா வினாக்கள் பற்றிச் சொல்லி இன்னொருபக்கம் காட்டுகிறீர்கள். முன்னிலையிருப்பவனின் மோனநிலை இப்போது என் சிந்தனையில்.

என் கவிக்கருக்கள் யாவும் என் கோணத்தினின்றே பார்க்கப்படுபவை. அதன் பல்வேறு கோணங்களையும் அலசும் கவிதைகளுக்கும் விமர்சனங்களுக்கும் என் தரப்பிலிருந்து எப்போதுமே வரவேற்பு உண்டு. உங்கள் கோணம் கண்டு வியக்கிறேன். மகிழ்வுடன் நன்றி கூறுகிறேன், கெளதமன்.