PDA

View Full Version : உறவு விழுதுகளில் ஊஞ்சலாடும் நினைவுகள் - 11கீதம்
21-01-2011, 05:06 AM
ஊஞ்சலாட்டம் - 1

அதிசய மரமொன்றைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்போகிறேன். நாம் அனைவரும் அறிந்ததுதான் அது! காலங்காலமாய் வளர்ந்து உறவுகளாம் கிளைகள் தழைத்து, அன்பெனும் நிழல் பரப்பி அடைக்கலம் தந்துதவும் அற்புத மரம் அது. மற்ற சாதாரண மரங்களைப் போலவே இதன் வேரும் மண்ணுக்குள் புக்கி மாய்ந்துபோயிருக்கும். ஆனால் வம்சவிருத்தியென்னும் விழுதுகள் படர்ந்து இன்னுமந்த மரத்தைத் தாங்கிநிற்கும். கூடவே மற்றும்பல மரங்களின் கிளைபற்றி மண உறவுப்பின்னலிட்டு முறுக்கேறியிருக்கும். ஆம், குடும்பமரம்தான் அந்த அதிசய மரம்!

ஆணிவேரறிய இயலா இவ்வதிசய மரத்தின் மூத்த விழுதுகள் பற்றி அறிந்தோர் வெகுசிலரே! அறியாதோரில் நானும் ஒருத்தி என்னும் நிதர்சனத்தை வேதனையோடும் வெட்கத்தோடும் தலைகவிழ்ந்து ஒப்புக்கொள்கிறேன். அதற்குப் பரிகாரமே இத்திரி உருவாக்கம்.

நான் அன்று உறவாடிய விழுதுகளில் இன்று நினைவுகளால் ஊஞ்சல் கட்டி ஆடப்போகிறேன். என்னுளம் பூத்தத் தருணங்களை உங்களோடு பகிரப்போகிறேன்.

என் கதைகளில் நடமாடிய பல பாத்திரங்கள் வாயிலாக சில உறவுகள் உங்களுக்கு முன்பே அறிமுகமாகியிருக்கலாம். அங்ஙனம் கதாபாத்திரங்களை உருவகிக்கத் தூண்டிய குணாதிசயங்களை நன்றியுடன் நோக்குகிறேன்.

சில விழுதுகளுடனான பிணைப்பு இன்று இத்துப்போயிருந்தாலும் இதம் தரும் நினைவுகள் இன்னும் பசுமையாய் உணர்வுகளில் ஊசலாட இதோ துவங்குகிறது உறவு விழுதுகளில் என் நினைவுகளின் ஊஞ்சலாட்டம்.

நானறிந்த மூத்த விழுது என் தாத்தாதான். என் அப்பாவின் அப்பா! நல்ல உயரம், அதற்கேற்ற பருமன், மாநிறம், மீசையில்லாத பளீர் முகம், படியவாரிய நரைமயிர், அழகுப் பல்வரிசை தெரிய வாய்விட்டுச் சிரிக்கும் ஓங்காரச் சிரிப்பு, பேச்சைத் துவக்குமுன்னர் எப்போதும் சிறு கனைப்பு அல்லது ஒரு செல்லச் செருமல்!

எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை அரைக்கை சட்டை மட்டுமே அணிவார். வீட்டிலிருந்தால் பெரும்பாலும் மேற்சட்டையோ பனியனோ இல்லாது வெறும் நான்குமுழ வேட்டி மட்டும். அதையும் லுங்கிபோல் ஓரங்களை மூட்டி அணிவார். இவைதான் இருபத்தெட்டு வருடங்களாய் நானறிந்த தாத்தா.

தாத்தாவுக்கும் எனக்குமான பிணைப்புக்கு முக்கியக் காரணம் அவரது பதின்மூன்று பேரப்பிள்ளைகளிலும் அவரை ' தாத்தா' என்று முதலில் அழைத்தது நான் என்பதால் இருக்கலாம். ஆம், தாத்தாவின் முதல் பேரக்குழந்தை நானே!

‘தாத்தா’ என்று நான் அழைக்க இன்னொருவர் இல்லாமை என் தரப்பிலிருந்து இப்பிணைப்புக்கு கூடுதல் வலு சேர்த்திருக்கலாம். அம்மாவின் திருமணத்துக்கு ஒரு வருடம் முன்புதான் அம்மாவின் அப்பா தவறிவிட்டிருந்தார்.

தாத்தா என்னைக் கொண்டாடிய கணங்களை இன்று நினைத்தாலும் பெருமையும் பெருமிதமும் பொங்கி வழிகிறது. அந்தப் பொன்னான கணங்களில் ஒன்றுதான் பின்வருவது.....

(ஊஞ்சலாட்டம் தொடரும்)

பாரதி
21-01-2011, 07:25 AM
உங்கள் விழுதுகளில் எங்கள் மனங்கள் ஊஞ்சலாடும்.

பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய சிறுவயதில் அறிமுகமாகி மனதிற்கு நெருக்கமானவர்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணவோட்டங்களில் வாழ்ந்து வருவார்கள். எனக்கு எனது தந்தைவழி தாத்தாவைக் காண கொடுத்து வைக்கவில்லை. நிழற்படங்களின் மூலம் மட்டுமே அவரைக் காண முடிந்தது. எனது பாட்டியாரையும் வெகு சிறு வயதிலேயே இழந்து விட்டேன்....ம்ம்ம்..

உங்கள் நினைவுகூறலில் முன்னோர்களைக் குறித்த அருமையையும் இனிமையையும் தரிசிக்க போவது மகிழ்வைத்தருகிறது. தொடருங்கள்... வாழ்த்துகிறேன்.

Akila.R.D
21-01-2011, 12:14 PM
படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா...

அதிர்ஷ்டவசமா நான் 2 கொள்ளு பாட்டிகளையும் பார்த்திருக்கேன்...
அவங்க மடியில் உட்கார்ந்து விளையாடுனது கூட ஞாபகம் இருக்கு...

உங்க எழுத்துல உங்க முன்னோர் பத்தி படிக்க ஆசையா காத்திருக்கேன்..

கீதம்
21-01-2011, 11:51 PM
உங்கள் விழுதுகளில் எங்கள் மனங்கள் ஊஞ்சலாடும்.

பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய சிறுவயதில் அறிமுகமாகி மனதிற்கு நெருக்கமானவர்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணவோட்டங்களில் வாழ்ந்து வருவார்கள். எனக்கு எனது தந்தைவழி தாத்தாவைக் காண கொடுத்து வைக்கவில்லை. நிழற்படங்களின் மூலம் மட்டுமே அவரைக் காண முடிந்தது. எனது பாட்டியாரையும் வெகு சிறு வயதிலேயே இழந்து விட்டேன்....ம்ம்ம்..

உங்கள் நினைவுகூறலில் முன்னோர்களைக் குறித்த அருமையையும் இனிமையையும் தரிசிக்க போவது மகிழ்வைத்தருகிறது. தொடருங்கள்... வாழ்த்துகிறேன்.

உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி பாரதி அவர்களே.

நேரம் சாதகமாய் அமையும்போதெல்லாம் தொடர்வேன். உடன் வருவதற்கும் உங்கள் அனுபவ நினைவுகளை உடன் அழைத்துவருவதற்கும் நன்றி.

கீதம்
21-01-2011, 11:55 PM
படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா...

அதிர்ஷ்டவசமா நான் 2 கொள்ளு பாட்டிகளையும் பார்த்திருக்கேன்...
அவங்க மடியில் உட்கார்ந்து விளையாடுனது கூட ஞாபகம் இருக்கு...

உங்க எழுத்துல உங்க முன்னோர் பத்தி படிக்க ஆசையா காத்திருக்கேன்..

கொடுத்துவைத்த பேத்தி! வேறென்ன சொல்ல? பின்னூட்டத்துக்கு நன்றி, அகிலா.

உங்கள் கொள்ளுப்பாட்டிகளின் மடியில் தவழ்ந்த நினைவுகளைக் கிளறி உங்களை மகிழ்வித்ததற்காக நானும் மகிழ்கிறேன் அகிலா. என் நினைவூஞ்சல் இன்னும் பல ஊஞ்சல்களை ஆட்டிவிடுவதில் எனக்கு அளவிலா ஆனந்தமே.

கீதம்
21-01-2011, 11:58 PM
ஊஞ்சலாட்டம் - 2

நினைவுத்தூளியில் ஆடிக்கொண்டிருக்கிறதே ஒரு பெண்குழந்தை... அதற்கு அப்போது இரண்டு வயது. குட்டித் தம்பி பிறந்துவிட்டான். அம்மா அப்பாவின் முழுக்கவனத்தையும் அந்தச் சுட்டிப்பையன் தன்பால் ஈர்த்துவிட... ஏக்கத்தில் தவித்த அந்தப்பாப்பாவை அணைத்தெடுத்துக்கொண்டவர் தாத்தாதான்.

தாத்தா வீட்டுக்கும் அப்பா வீட்டுக்கும் இடையில் இருந்த நான்கு கிலோமீட்டர்கள் தூரத்தை அர்த்தராத்திரிகளிலும் மிதிவண்டிகள் அநாயாசமாகக் கடக்கக் காரணம் அளவிடற்கரிய அன்புதான். தொலைபேசிகளும் அலைபேசிகளும் அறிமுகப்படுத்தப்படாத அந்நாட்களில் தூய அன்பே தூது சென்றது. எப்படியா? சொல்கிறேன்.

ஒருநாள் இரவு பத்து மணிக்குமேல் குட்டிப்பாப்பாவுக்கு காய்ச்சல் வந்துவிட... காய்ச்சலுக்கான காரணம் தெரியாமல் கவலைப்பட்ட அம்மா மருந்து கொடுத்து காய்ச்சலைக் குறைக்க முயன்றிருக்கிறார். காய்ச்சல் குறைந்த பாடில்லை, கூடவே குழந்தையின் ஓயாத அழுகையும்!

"என்னம்மா வேணும்? என்ன செய்யிது? ஏன் இப்படி ஓயாம அழறே?" இது அப்பா.

"தா…….த்தா……ட்டப் போ……. ணூ………ம்..." இது பாப்பா.

இந்நேரத்துக்கு அவ்வளவு தூரம் எப்படிப் போவது? அதுவும் காய்ச்சல் உள்ள குழந்தையை மிதிவண்டியின் முன்னிருக்கையில் அமர்த்திக்கொண்டு? சினிமாக் கொட்டகையில் படம் முடிந்து போகும் கூட்டமும் கலைந்திருக்கும். இப்படி அர்த்த ராத்திரியில் ஆளரவமற்ற சாலையில் குழந்தையுடன் செல்வது அத்தனை உசிதமில்லையே..... எதையாவது பார்த்து குழந்தை பயந்துவிட்டால்.....? மேலும் நான்கு கி.மீ. தூரம் சைக்கிளை மிதித்துச் சென்றுவிட்டு கையோடு திரும்ப மறுபடி மிதிக்கவேண்டும். காலை ஆறுமணிக்கு வேலைக்குச் செல்லவேண்டும். ஏற்கனவே தூக்கம் கெட்டுவிட்டது. இன்னும் உடல் சோர்வும் சேர்ந்துகொண்டால் பணியிடத்தில் சிரமம்தான். அப்பா சொன்னாரே என்று அவசரப்பட்டு திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளையும் பெற்று இருபத்தாறு வயதுக்குள் இத்தனை இன்னல் தேவையா என்று தன்னைத்தானே நொந்துகொண்டிருப்பாரோ அச்சமயம்?

அப்பா அமைதியாக சொன்னார், "பாப்பா... தூங்கு. காலையில் தாத்தாகிட்ட கொண்டுபோய் விடறேன்"

தாத்தாவின் மேலுள்ள பாசப்பேய் பிடித்தாட்டும்போது குழந்தை என்ன செய்யும்? ஒருமணி நேரத்துக்கும் மேலாகக் கெஞ்சியும் கொஞ்சியும் 'தா...த்தா....ட்டப்போ.....ணூ....ம்' பாடலின் பல்லவி மட்டும் மாறவே இல்லை.

இப்போது அப்பாவுக்கு எரிச்சல் துவங்கியது. சற்றே கடுங்குரலில் எச்சரித்தார். "இங்க பார், இப்ப போவ முடியாது. வாய மூடிக்கிட்டுத் தூங்கு, உன்னால பார், தம்பியும் முழிச்சிகிட்டு அழுவுறான். தூங்கு."

அப்பாவின் கோபத்தையும் மீறி பெருங்குரலெடுத்து பிடிவாதமாய் அவள் அழத்துவங்க... அரைத்தூக்கத்தில் விழித்து அலறும் கைக்குழந்தையை அசமடக்கும் முயற்சியில் அம்மா இருக்க....

வாசற்கதவு தட்டப்படும் சத்தம்.

குழந்தைகளின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தவர்தான் எவரோ உதவிக்கு வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கதவு திறக்க....

அங்கே நின்றிருந்தவர் தாத்தா!

"அப்பா! என்னப்பா, இந்த நேரத்தில?"

என்றுமில்லாத அதிசயமாக அகாலத்தில் வந்துநிற்பவரிடம் துயரச்செய்தியைத்தவிர வேறெதை எதிர்பார்க்கமுடியும்? திடுக்கிடலுடன் அப்பா கேட்க, தாத்தா பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்தார்.

எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் குழந்தை ஏங்கி ஏங்கி அழுமாமே! இங்கும் அப்படிதான். குழந்தை இன்னும் அழுது பெற்றோரைக் குற்றவுணர்வில் தள்ளியது.

அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அள்ளி மடியில் போட்டுக்கொண்டு, "ஏண்டா கண்ணு, ஏம்மா அழுவுறே? அம்மாடீ... சொல்லுமா... என்னாச்சும்மா?" என்றவர் குழந்தையின் உடற்கதகதப்பை உணர்ந்து அதன் முன்னெற்றியில் புறங்கை வைத்துப் பார்த்துவிட்டு கோபமாக அப்பாவைக் கேட்டார்,

"என்னப்பா, இதுதான் நீ புள்ள வளர்க்கிற லட்சணமா? இப்படிதான் அழவுட்டு காய்ச்சல் வரவழைக்கிறதா?"

அப்பாவும் அம்மாவும் நடந்ததைச் சொல்லி, தாத்தா திடீரென வந்த காரணத்தைக் கேட்க...

"என்னமோப்பா.... எனக்குத் தூக்கமே வரல.... புள்ள என்னை தாத்தா.... தாத்தா....ன்னு கூப்புடறமாதிரியே இருந்திச்சு.... அதான் விருட்டுனு கிளம்பிவந்துட்டேன். உங்க அம்மா கூட கேட்டது, இந்நேரத்துக்குப் போய் தூங்குறவங்களை தொந்தரவு பண்ணப்போறீங்களான்னு. நீ சும்மா இருன்னு சொல்லிட்டு வந்துட்டேன். பாதி தூரம் வந்தபின்னால திரும்பிடலாமான்னு தோணுச்சு. ஆனா..... மனசு கேக்கல.... அதான் வந்தேன், வந்தது எவ்வளவு நல்லதாப்போச்சி. இல்லைனா விடிய விடிய புள்ளய அழவுட்டு ஜன்னி கண்டிருக்கும்!"

தாத்தா பேசிக்கொண்டிருந்தார். அவர் மடியில் உதட்டோரம் எச்சில் வழிய சிறு கேவலுடன் ஆழந்து உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை. காய்ச்சல்? அது போயே போச்!

தாத்தா அப்பாவிடம் கடுமையாகப் பேசினாலும் அந்தக் கடுமைக்குப் பின்புலமாய் இருந்தது பேத்தி மேலிருந்த அளவிலா பாசம்தானே! அந்தப் பாசத்திற்குரியவள் நானென்பதை சொல்லவும் வேண்டுமோ?

நினைவு தெரிந்த நாளாய் என் காதுகளை பலமுறை பலர் வாயால் தஞ்சமடைந்த நிகழ்வு இது! அதன்பின் நிகழ்ந்தவை யாவும் என் நினைவேட்டில் என் சுயநினைவுடன் நானே பொறித்துக்கொண்டவை!

ஊஞ்சலாட்டம் தொடரும்)

மதி
22-01-2011, 12:42 AM
உறவுகளும் நினைவுகளும்.. இதமான ஊஞ்சலாட்டங்களை உங்கள் வார்த்தைகளாக கேட்கிறோம். நடந்ததை அழகாக கோர்த்து எழுதுகிறீர்கள்..

தொடருங்கள் அக்கா..!

govindh
22-01-2011, 09:09 AM
ஊஞ்சலாட்டம்.....
உற்சாகத்தையும்....மகிழ்வையும் அளிக்கிறது...

வேர்களையும்....விழுதுகளையும்....
நினைத்துப் பார்க்கும்-அதிசய மரம்....
இனிய தொடர் - வாழ்த்துக்கள்.

தாத்தா...பாட்டியை...காணக் கொடுத்து வைக்கவில்லை....
(தாத்தா பெயர் தான் - எனக்கும்)

உறவுகளின் நினைவுகளுடன்
ஊஞ்சலாட்டம் தொடரட்டும்....
பாராட்டுக்கள்.

உமாமீனா
22-01-2011, 09:28 AM
அழகான பதிவு ஊஞ்சலாட்டம் மனதை நெகிழ வைத்தது

கீதம்
22-01-2011, 10:13 AM
உறவுகளும் நினைவுகளும்.. இதமான ஊஞ்சலாட்டங்களை உங்கள் வார்த்தைகளாக கேட்கிறோம். நடந்ததை அழகாக கோர்த்து எழுதுகிறீர்கள்..

தொடருங்கள் அக்கா..!

நினைவூஞ்சலை இனிதாய் ஆட்டுவிக்கும் ஊக்கப்பின்னூட்டத்துக்கு நன்றி மதி.

கீதம்
22-01-2011, 10:17 AM
ஊஞ்சலாட்டம்.....
உற்சாகத்தையும்....மகிழ்வையும் அளிக்கிறது...

வேர்களையும்....விழுதுகளையும்....
நினைத்துப் பார்க்கும்-அதிசய மரம்....
இனிய தொடர் - வாழ்த்துக்கள்.

தாத்தா...பாட்டியை...காணக் கொடுத்து வைக்கவில்லை....
(தாத்தா பெயர் தான் - எனக்கும்)

உறவுகளின் நினைவுகளுடன்
ஊஞ்சலாட்டம் தொடரட்டும்....
பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கோவிந்த். உங்கள் தாத்தா பாட்டியைக் காணாத வருத்தம் உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தக்காலத்தில் பல இல்லங்களில் (முதியோர் இல்லங்களையும் சேர்த்து) தாத்தா பாட்டிகள் இருந்தும் அவர்களின் பெருமை உணரப்படாமலே போய்விடுகிறதே! அவர்களை எண்ணினால் வேதனைதான் மிஞ்சுகிறது.

கீதம்
22-01-2011, 10:20 AM
அழகான பதிவு ஊஞ்சலாட்டம் மனதை நெகிழ வைத்தது

நெகிழ்ச்சியுடனான உங்கள் பின்னூட்டத்துக்கு என் மனமார்ந்த நன்றி.

ஜானகி
22-01-2011, 03:58 PM
நமது தாத்தாக்கள் பூங்காவிலும் கோவிலிலும் கூடி நினைவுகளை அசை போட்டதுபோல, மன்றத்தில், நமது தாத்தாக்கள், பாட்டிகள் பற்றி நினைவூஞ்சலா....

சுவை தான்... தொடரட்டும்...

பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்ததால், பாட்டிகளிடம் சீராடும் பாக்கியம் எனக்குக் கிடைகவில்லை..

என் தந்தையின் தந்தையுடன் தான் நான் பழகியிருக்கிறேன்..மிகச் சில காலம்...6 முதல் 12 வயது வரை.

மகான் ரமணருடன் 10 வருட காலம் ஆசிரம வாழ்க்கை நடத்திய என் தாத்தா, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் உடையவர்.

நேரம் தவறாமை, கட்டுப்பாடான வாழ்க்கைமுறை, மௌனம் காத்தல்.... இவை தான் அவரைப் பற்றி எனக்கு நினைவில் வருவது.

கணக்குப் பாடத்தில் சந்தேகம் கேட்டால், நான் பள்ளியிலிருந்து திரும்பும் போது, தரையில், முத்து முத்தான கையெழுத்தில், 2, 3 வகைகளில், விடையுடன் எழுதி வைத்திருப்பார். அவருடைய மாணவனான என் ஆசிரியருக்குத் தெரிந்துவிடும்...என் தாத்தா சொல்லிக்கொடுத்தது என்று.

நான் பள்ளியிலிருந்து திரும்புமுன், வானம் சிறிது கருத்தாலும், கையில் இரு குடையுடன் என் தாத்தா ஆஜராகிவிடுவார்...அன்று தோழிகளின் கேலிக்கு ஆளானதால் கோபம் வரும் எனக்கு....இன்றுதான் தெரிகிறது...அந்தப் பாசத்தின் பிண்ணனி..

விறகு வெட்டுவதிலிருந்து, கொடை ரிப்பேர், கடிகார ரிப்பேர், செருப்பு தைத்தல், சுண்ணாம்பு அடித்தல்.....எல்லாம் அத்துபடி...ஆனாலும் சத்தமில்லாமல் செய்வார்.

ரமணாசிரமத்திலும் எல்லா வேலைகளையும் செய்வாராம்..அவரது கையெழுத்து மணி மணியாக, ரமணரின் கையெழுத்துப் போலவே இருக்கும்.

ரமணருடன் 10 வருடங்கள் இருந்த மகானை அப்போது நான் அறிந்துகொள்ளமுடியவில்லை... இப்போது அந்தக் காலம் வராதா என்று இருக்கிறது..

ரமணாசிரமத்தில் அவருடைய படத்தைப் பார்க்கும்போது... நினைவு தெரிந்து கொஞ்ச காலம் அவருடன் இல்லாமல் போய்விட்டோமே என்றிருக்கிறது...

கொடுத்துவைத்தது அவ்வளவு தான்...

அவருடைய ஆசிகள் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரங்கராஜன்
22-01-2011, 04:20 PM
செளக்கியமா கீதம் அக்கா,

உன்னும் தொடருங்கள் உங்களின் அனுபவங்களை , வாழ்த்துக்கள்..

ரொம்ப நாள் கழித்து உங்களின் எழுத்துகளை படித்ததால், தமிழ் எழுத்துகள் எல்லாம் ரொம்ப சுத்த தமிழி்ல் இருப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது..

பாரதி
26-01-2011, 08:20 AM
எண்ண அலைகளுக்கு எல்லையில்லை என்பதால்தான் உங்கள் தாத்தாவிற்கு உங்கள் அழைப்பும் ஏக்கமும் தெரிந்திருக்கிறது. இவ்வகையான நிகழ்வுகளுக்கு விஞ்ஞானபூர்வமாக விடையில்லை என்றாலும் கூட வியப்பை அளிக்கிறது என்பது உண்மைதான்.

தொடருங்கள். நன்றி.

கீதம்
28-01-2011, 05:45 AM
நமது தாத்தாக்கள் பூங்காவிலும் கோவிலிலும் கூடி நினைவுகளை அசை போட்டதுபோல, மன்றத்தில், நமது தாத்தாக்கள், பாட்டிகள் பற்றி நினைவூஞ்சலா....

சுவை தான்... தொடரட்டும்...

பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்ததால், பாட்டிகளிடம் சீராடும் பாக்கியம் எனக்குக் கிடைகவில்லை..

என் தந்தையின் தந்தையுடன் தான் நான் பழகியிருக்கிறேன்..மிகச் சில காலம்...6 முதல் 12 வயது வரை.

மகான் ரமணருடன் 10 வருட காலம் ஆசிரம வாழ்க்கை நடத்திய என் தாத்தா, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் உடையவர்.

நேரம் தவறாமை, கட்டுப்பாடான வாழ்க்கைமுறை, மௌனம் காத்தல்.... இவை தான் அவரைப் பற்றி எனக்கு நினைவில் வருவது.

கணக்குப் பாடத்தில் சந்தேகம் கேட்டால், நான் பள்ளியிலிருந்து திரும்பும் போது, தரையில், முத்து முத்தான கையெழுத்தில், 2, 3 வகைகளில், விடையுடன் எழுதி வைத்திருப்பார். அவருடைய மாணவனான என் ஆசிரியருக்குத் தெரிந்துவிடும்...என் தாத்தா சொல்லிக்கொடுத்தது என்று.

நான் பள்ளியிலிருந்து திரும்புமுன், வானம் சிறிது கருத்தாலும், கையில் இரு குடையுடன் என் தாத்தா ஆஜராகிவிடுவார்...அன்று தோழிகளின் கேலிக்கு ஆளானதால் கோபம் வரும் எனக்கு....இன்றுதான் தெரிகிறது...அந்தப் பாசத்தின் பிண்ணனி..

விறகு வெட்டுவதிலிருந்து, கொடை ரிப்பேர், கடிகார ரிப்பேர், செருப்பு தைத்தல், சுண்ணாம்பு அடித்தல்.....எல்லாம் அத்துபடி...ஆனாலும் சத்தமில்லாமல் செய்வார்.

ரமணாசிரமத்திலும் எல்லா வேலைகளையும் செய்வாராம்..அவரது கையெழுத்து மணி மணியாக, ரமணரின் கையெழுத்துப் போலவே இருக்கும்.

ரமணருடன் 10 வருடங்கள் இருந்த மகானை அப்போது நான் அறிந்துகொள்ளமுடியவில்லை... இப்போது அந்தக் காலம் வராதா என்று இருக்கிறது..

ரமணாசிரமத்தில் அவருடைய படத்தைப் பார்க்கும்போது... நினைவு தெரிந்து கொஞ்ச காலம் அவருடன் இல்லாமல் போய்விட்டோமே என்றிருக்கிறது...

கொடுத்துவைத்தது அவ்வளவு தான்...

அவருடைய ஆசிகள் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்கள் தாத்தாவுடனான உங்கள் அனுபவங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, கேட்கும் எங்களுக்கும் நெகிழ்ச்சி தரும் நினைவுகள்தாம். மனம் திறந்த பதிவுக்கு நன்றி ஜானகி அவர்களே.

தாத்தா பாட்டிகள் நம்முடன் இருக்கும்போது அவர்களின் பெருமையை நாம் உணர்வதே இல்லை. வயதானவர்கள் வாயைத் திறந்தாலே "ஆரம்பிச்சிட்டாருப்பா" என்று கேலி பேசும் இளையதலைமுறைகளுக்கு மூத்த தலைமுறையின் பல அனுபவப்பாடங்கள் இலவசமாகவே கிடைக்கும் பாக்கியம் இயலாமலேயே போய்விடுகிறது.

கீதம்
28-01-2011, 05:52 AM
செளக்கியமா கீதம் அக்கா,

உன்னும் தொடருங்கள் உங்களின் அனுபவங்களை , வாழ்த்துக்கள்..

ரொம்ப நாள் கழித்து உங்களின் எழுத்துகளை படித்ததால், தமிழ் எழுத்துகள் எல்லாம் ரொம்ப சுத்த தமிழி்ல் இருப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது..

பின்னூட்டத்துக்கு நன்றி ரங்கராஜன்.

நீங்கள் நினைப்பதுபோல் பிரமை எதுவும் இல்லை. விரும்பியே இப்படி ஒரு முயற்சி.

உங்களைப்போல் (நகைச்)சுவைபட எழுத எனக்கு வராது. குறைந்தபட்சம் தூய தமிழில் எழுதியாவது சுகப்படலாமே என்ற நல்லெண்ணம்தான். :)

கீதம்
28-01-2011, 05:54 AM
எண்ண அலைகளுக்கு எல்லையில்லை என்பதால்தான் உங்கள் தாத்தாவிற்கு உங்கள் அழைப்பும் ஏக்கமும் தெரிந்திருக்கிறது. இவ்வகையான நிகழ்வுகளுக்கு விஞ்ஞானபூர்வமாக விடையில்லை என்றாலும் கூட வியப்பை அளிக்கிறது என்பது உண்மைதான்.

தொடருங்கள். நன்றி.

வியப்பான சம்பவம்தான். அதனால்தான் பகிரத்தோன்றியது. பின்னூட்ட ஊக்குவிப்புக்கு நன்றி பாரதி அவர்களே.

கீதம்
28-01-2011, 05:59 AM
ஊஞ்சலாட்டம் – 3

பிறகு சொல்வதற்கென்ன? இரவும் பகலும் தாத்தா வீட்டில் ஆத்தா, இரண்டு சித்தப்பாக்கள், இரண்டு அத்தைகள் புடைசூழ ராஜகுமாரியாய் பவனி வருவதுதான் வேலை. தாத்தா அப்போது மத்திய அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதை நெருங்கிக்கொண்டிருந்தார்.

அன்று வீட்டில் மீன்குழம்பு. மதிய உணவுக்காக வழக்கம்போல் தாத்தா வீட்டுக்கு வந்திருக்கிறார். "பாப்பா சாப்பிட வாம்மா" என்று அழைத்து அவரது தட்டில் பரிமாறப்பட்ட மீனை முள் நீக்கி வாஞ்சையுடன் எனக்கு ஊட்ட, நான், "எனக்கு மீனு வேணாம், கத்திரிக்காதான் வேணும்" என்றேன். கொடுப்பதைச் சாப்பிடாமல் அந்த வயதில் எத்தனை நாக்கு ருசி பாருங்கள்! எல்லாம் தாத்தா கொடுக்கிற இடம்தான்!

அடுத்த நொடியே தாத்தாவிடமிருந்த பறந்தது ஆணை. "யாரங்கே, உடனடியாய் என் பேத்திக்குக் கத்தரிக்காய் சமைத்துக் கொடுங்கள்"

கிட்டத்தட்ட அப்படிதான் ஆனது நிலைமை. அணைக்கப்பட்டிருந்த விறகடுப்பு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு... அவசர அவசரமாய் ஒரு கத்தரிக்காய் நறுக்கப்பட்டு... உப்பு சேர்த்து அவிக்கப்பட்டு... பின் குழம்பிலிடப்பட்டு... இவ்வாறாக பல பாடுபட்டு இறுதியாக என் நாவுபட்டு... தன் பிறவிப்பயனை அடைந்தது அன்று ஒரு கத்தரிக்காய்!

கத்தரிக்காய் வேகும்வரை பணியிடம் செல்லாமல் 'இன்னுமா வேகல? இன்னுமா வேகல?' என்று ஆத்தாவையும் கத்தரிக்காயையும் ஒருசேர மிரட்டிக்கொண்டிருந்தார் தாத்தா.

தாத்தா வேலைக்குப் போனபிறகு ஆத்தா என் கன்னத்தில் இடித்து, "ஏண்டி, மீனு வேணாம்னு கத்திரிக்கா கேட்டே, ஆக்கித் தந்தாச்சி, கத்திரிக்கா இருக்கையிலே மீனு கேட்டா என்னாடி பண்ணியிருப்பாரு உங்க தாத்தா? தூண்டிலை எடுத்திட்டு ஏரிக்கர பாக்கப் போயிருப்பாரோ? போனாலும் போவாரு, சொல்லமுடியாது" என்று அலுத்துக்கொண்டார்.

தாத்தா அடிக்கடி 'பாப்பா' என்று அழைப்பார். பாப்பா என்றதும் நான் போய் அவர்முன் நிற்பேன். பின்னாளில்தான் தெரிந்தது, ஆத்தாவின் பெயர் பாப்பம்மாள் என்பதும் அதைத்தான் சுருக்கி 'பாப்பா' என்று அழைக்கிறார் என்பதும். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவோ என்னவோ தாத்தா என்னை 'அம்மாடீ' என்று அழைக்கத் தொடங்கினார். நான் பிறந்ததும் என் பெயரைத் தெரிவு செய்தவரே அந்தப்பெயரால் என்னை ஒருநாளும் அழைத்ததில்லை என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

இப்போது தாத்தா பணி ஓய்வு பெற்றுவிட்டார். முழுநேரமும் என்னுடன் கழிக்க விரும்பியபோது எனக்குப் பள்ளியில் சேர்க்கும் வயது வந்துவிட்டது.

என்னைப் பள்ளியில் சேர்க்க முடிவெடுத்து அப்பாவும் அம்மாவும் தாத்தாவிடம் சொல்ல, தாத்தாவுக்குப் பேரதிர்ச்சி. பிள்ளையால் அவ்வளவு தூரம் நடந்து பள்ளிக்கூடம் போகமுடியுமா? (அப்போது வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் இருந்தது கால் கி.மீ. தூரம் என்றால் அதுவே அதிகம்.) இன்னும் ஒரு வருஷம் கழித்து அனுப்பினால் என்னவென்று கேட்க, அத்தை கேலி பேசினார்.

"ஆமாம்ப்பா, நீங்க தோளிலேயே தூக்கிகிட்டுத் திரிஞ்சா மட்டும் வயசு ஆகாதா? அவளை தலையைச் சுத்தி காதைத் தொடச் சொல்லுங்களேன்"

அந்தச் சமயம் இருந்த நடைமுறை இதுதான். முறையான பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் வாய்வழி சொல்லும் தேதியே பள்ளிப் பதிவேட்டில் குறிக்கப்படும் நிலை. பலரும் தங்களுக்குச் சாதகமாக வயதைக் கூட்டியோ குறைத்தோ பள்ளியில் சேர்க்கமுனைவர். பெரும்பாலும் ஐந்து வயது பூர்த்தியாகிவிட்டது என்பதை நிரூபிக்கும் ஒரே வழி இதுதான் வலது கையை தலைக்குமேல் உயர்த்தி, இடது காதை எந்த சிரமமும் இல்லாமல் தொடவேண்டும். அப்படித் தொடும் குழந்தைகளே முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இப்போதெல்லாம் குழந்தைகள் இரண்டரை வயதிலேயே பள்ளியில் சேர்க்கப்பட்டு பொதி சுமக்கும் பிராணிகளைப் போன்று முதுகில் மூட்டை மூட்டையாய்ப் புத்தகங்களைச் சுமக்கவேண்டியுள்ளது. அன்று ஐந்து வயதில் பள்ளி சேர்க்க அத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் என் தாத்தா.

என்னைப் பள்ளியில் சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் பள்ளியில் சேர்க்கும் தினத்தன்று தாத்தா உடன்வர மறுத்துவிட்டார். முதல் நாள் பிள்ளையைத் தனியாய் விட்டு வரும்போது பிள்ளை அழுவதை என்னால் பார்க்க முடியாது என்று காரணம் சொன்னாராம். ஆனால் அதற்காக ஒரு துளியும் நான் அழவில்லை. நாளெல்லாம் தாத்தாதான் புலம்பிக்கொண்டிருந்தாராம்.

என் பள்ளி வாழ்வின் முதல் நாள். ஆசையுடனும் அளவிலாத எதிர்பார்ப்புடனும் பள்ளி சென்ற என்னை வருத்தி அழவைத்த சம்பவங்கள் இரண்டு. அந்த முதல்நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. என் மனமுடைபட்ட இரு சம்பவங்களுக்கும் மூலகாரணம் என் தாத்தாதான் என்றால் நம்புவீர்களா?

(ஊஞ்சலாட்டம் தொடரும்)

மதி
28-01-2011, 06:10 AM
உண்மை சம்பவத்தை இத்தனை சுவாரஸ்யமாகவும் எழுதலாமா?? அந்த இரு சம்பவங்களும் என்னனு தெரிஞ்சுக்க காத்திருக்கிறோம். சீக்கிரம் தொடருங்க..!

பாரதி
28-01-2011, 06:41 AM
தாத்தா உங்கள் மேல் வைத்திருந்த அளவற்ற பாசம் உங்கள் வரிகளில் விளக்கமாய் வழிகிறது! நீங்கள் கொடுத்து வைத்தவர்.
அபியும் நானும் படம் போல நீங்கள் பள்ளி சென்றபின் நடந்தவற்றை அறிய காத்திருக்கிறேன். தொடருங்கள்.

govindh
28-01-2011, 07:24 AM
தாத்தா பாசம் - அனுபவ எழுத்துக்கள் வெகு அழகு.
தொடருங்கள்.

Akila.R.D
28-01-2011, 09:43 AM
தாத்தா அப்படி என்ன பண்ணிட்டாரு?...
சீக்கிரம் சொல்லுங்க அக்கா....

M.Jagadeesan
28-01-2011, 10:42 AM
பொதுவாகவே தாத்தாக்களுக்குத் தன் குழந்தைகளைவிடப் பேரன்,பேத்தி
களிடம் பிரியம் அதிகமாகவே இருக்கும்.

ரங்கராஜன்
02-02-2011, 02:50 PM
அழகான மாடப்புறாவின் மென்மையான இறகால், இதயத்தை வருடுவதைப் போல இருக்கிறது உங்கள் தாத்தாவின் பாசத்தை விவரிக்கும் உங்கள் எழுத்து..... வாழ்த்துக்கள் அக்கா.......

கீதம்
03-02-2011, 07:38 AM
பின்னூட்டமிட்டு ஊக்குவித்து என்னைத் தொடர்ந்து எழுதச்செய்வதற்கு நன்றிகள் நண்பர்களே.உங்கள் ஆதரவுடன் என் நினைவுகளின் ஊஞ்சலாட்டம் தொடர்கிறது.

கீதம்
03-02-2011, 07:42 AM
ஊஞ்சலாட்டம் – 4

நான் படித்த பள்ளி கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்ட ஒரு கட்டுக்கோப்பான பள்ளி. அன்பும் அரவணைப்பும் அள்ளி அள்ளித் தந்த பள்ளி.

ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியெனத் துள்ளித் திரிந்துகொண்டிருந்துவிட்டு புதிய சூழலில் தனித்துவிடப்படவிருப்பதையெண்ணி பயமும் தயக்கமுமாக மருண்ட மான்குட்டியென பள்ளிவளாகம் புகுந்த நாள். தொடர்ந்து பத்து வருடங்கள் எனக்கு ஏட்டுப்பாடமும் வாழ்க்கைப்பாடமும் சொல்லித்தரவிருக்கும் பள்ளியும் அதுதானென அறியாது அச்சத்துடன் நுழைந்த நாள்.

சிரித்தபடி சிலர், சிணுங்கியபடி சிலர், கண்மையைக் கரைத்தழுதபடி சிலர் என்று பலரையும் பார்த்தபிறகே சமாதானமானது மனம். மணியடித்ததும் அம்மா கையசைத்து விடைகொடுக்க, வகுப்பு துவங்கியது.

டீச்சர் யார் பெயரைச் சொல்கிறாரோ அவர் எழுந்து 'ஆஜர் டீச்சர்' என்று சொல்லவேண்டும் என்று அறிவித்துவிட்டு ஒவ்வொரு பெயராய் அழைக்க ஆரம்பித்தார். என் பெயரைப் படித்துவிட்டு, தலையைத் தூக்கிப் பார்த்தார்.

"என்னாடி இது ரயில் வண்டியாட்டம் இவ்ளோ நீளப் பேரு? யாருடி ஒனக்கு இந்தப் பேர வச்சது?" என்று கேலி செய்ய, சுற்றி இருந்த பிள்ளைகளும் சிரித்தனர்.

அவமானம் பிடுங்கித்தின்ன, சன்னக்குரலில், "எங்க தாத்தா" என்றேன். மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

இதுபோன்ற சூழல்களுக்குப் பழக்கப்படாததால் அழுகை வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டு முகம் சுருங்கி ஆர்வமெலாம் வற்றி அமர்ந்திருந்த வேளை அவமானத்தின் அடுத்த படையெடுப்பு அம்மா வடிவில்! காலை பதினொரு மணியளவில் கையில் ஃப்ளாஸ்குடன் வகுப்பு வாசலில் வந்து நிற்கிறார்.

"வீட்டுல இருக்கும்போது தெனமும் இந்நேரத்துக்கு ஹார்லிக்ஸ் குடிக்கிற புள்ள, பசி வந்தா சொல்லத்தெரியாம தவிக்கும், நீ எடுத்திட்டுப் போய்க்குடுன்னு அவங்க தாத்தா ஒரே பிடிவாதம். சொன்னாலும் கேக்கல, அதான் குடுத்திட்டுப் போவலாம்னு வந்தேன்."

அடங்கியிருந்த சிரிப்பலை மீண்டும் எழும்பி என்னை மூழ்கடித்தது. இதுபோல் பள்ளி இடைவேளைகளில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு அம்மா திருப்பி அனுப்பப்பட்டார். தாத்தாவின் பாசத்துக்கு பள்ளியில் நான் பலிகடாவாக்கப்பட்டேன். தாத்தா மேல் முதல்முறையாக கோபம் வந்தது.

வீட்டுக்கு வந்ததும் தாத்தாவிடம், "ஏன் தாத்தா, எனக்கு இந்தப் பேரு வச்சீங்க? எல்லாரும் ரயில்வண்டி மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்றாங்க" என்று சொல்லிக்குறைபட....

"இந்தப் பேருக்கு என்ன கொறச்சல்? யாரது கிண்டல் பண்றது? ஒங்க டீச்சர் பேரு என்ன? எப்படியிருப்பாங்க? எங்கயிருந்து வராங்க?" என்று கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்.

தாத்தா டீச்சரிடம் சண்டைக்கு வந்துவிடுவாரோ என்ற பயத்தாலும் உண்மையிலேயே அந்தநாளில் எனக்கு டீச்சரைப் பற்றி அவர் பெயர் உட்பட எதுவும் தெரியாததாலும் தாத்தாவின் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆனால் தாத்தாவின் கோபம் கண்டு அந்தச் சூழலிலும் எனக்கு சிரிப்பு வந்தது. இத்தனை நீளப் பெயர் வைத்துவிட்டு இவர் மட்டும் ஒருநாளும் அந்தப் பெயரால் அழைப்பதேயில்லையென்று. முன்னோரை நினைவுபடுத்தும் பெயரும் இல்லை. பின் எதற்கு அப்படியொரு பெயர்?

'அம்மாடீ' என்றழைத்தால் அது நான்தான். எனக்குப் பின் மேலும் நான்கு பேத்திகள் பெற்றபோதும் என்னை மட்டுமே அப்படி அழைத்தார்.

பல வருடங்களுக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வொன்றும் நினைவுக்கு வருகிறது. நான் முதல் பேத்தி என்பதால் முதல் கொள்ளுப்பேத்தியை அவர் மடியில் தவழவிட்ட பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.

என் மகளையும் அவர் 'அம்மாடீ' என்றே அழைத்தார். இது எனக்கோ வேறெவருக்குமோ பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கவில்லை. அன்பின் மேலீட்டின் அளவீட்டு அடைமொழி அது என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தேன். ஆனால் மூன்று வயதில் என் மகள் கேட்டக் கேள்வி தாத்தாவை மட்டுமல்ல, எங்கள் அனைவரையும் வாயடைக்கச் செய்தது.

நாயகன் படத்தில் ஒரு வசனம் வருமே...' நீங்க நல்லவரா? கெட்டவரா?' என்று. அதுபோல் அவள் கேட்டாள், "பெரிய தாத்தா.... நீங்க இப்ப அம்மாடீன்னு கூப்புட்டீங்களே, அது சின்ன அம்மாடியா? பெரிய அம்மாடியா?"

தாத்தா அழைத்தது தன்னையா? என்னையா? என்கிறாள். இப்படியெல்லாம் எனக்குக் கேட்கத் தோன்றவில்லையே தாத்தா 'பாப்பா' என்று என்னையும் பாட்டியையும் அழைத்த காலத்தில்!

தாத்தா கொள்ளுப்பேத்தியின் பேச்சு சாதுர்யத்தை மெச்சி சிரித்துக்கொண்டார். ஆனாலும் இறுதிவரை என்னையும் அவளையும் 'அம்மாடீ' என்றே அழைத்தார்.

(ஊஞ்சலாட்டம் தொடரும்)

பாரதி
03-02-2011, 11:13 AM
வயது குறைவென்று ஒரே வகுப்பில் இரண்டு வருடம் என்னைப் படிக்க வைத்த என் தாயின் செயல் இப்போதும் நினைவிற்கு வருகிறது!

தொடர் வண்டியின் தாளகதி போல இனிமையான நினைவுகளை தரத்தூண்டிய உங்கள் தாத்தாவிற்கும் நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 07:31 AM
நினைவின் நினைவுகள் மீண்டும் நனவுகளாக உங்கள் பதிவினில் தொடருங்கள் கீதம் அவர்களே....

கீதம்
16-02-2011, 04:32 AM
பின்னூட்டத்துக்கு நன்றி பாரதி அவர்களே.

ஊக்கத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
16-02-2011, 04:45 AM
ஊஞ்சலாட்டம் - 5

சிலநாட்கள் கழித்து, டீச்சர் என்னைத் தனியாக அழைத்துக் கேட்டார், "ஏண்டி, இவளே, நீ அவரு பேத்தியா? சொல்லக்கூடாது?"

நான் ஏன் சொல்லணும்? நினைத்துக்கொண்டேன், கேட்கவில்லை. பிறகுதான் தெரிந்தது, தாத்தாவுக்கு எங்கள் வட்டாரத்தில் எத்தனைச் செல்வாக்கு என்பது. பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் பொதுச்சேவையையே முழுநேரப் பணியாக எடுத்துக்கொண்டதால் பலரும் பலவிதங்களில் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருந்தனர்.

பணி ஓய்வு பெற்றபின் அதில்வந்த தொகையைக்கொண்டு திருச்சி புறநகரில் மனை வாங்கி வீடு கட்டினார். போதுமான பணமில்லாததால் மின்சாரமிழுக்கப்படாத வீட்டில் பலவருடங்கள் வசித்தார். ஆனால் ஊரில் ஒரு தெருவிளக்கு எரியவில்லையென்றாலும் உடனே மனு எழுதிக் கையோடு எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகம் சென்றுவிடுவார். இதற்காகவே இரவு எட்டு மணிக்குமேல் தினமும் தெருக்களை ரோந்து வருவார்.

அப்பொழுதுதான் அங்குமிங்குமாக வீடுகள் உருவாகிக்கொண்டிருந்தன. பல இடங்கள் முட்புதர்க்காடுகளாகவே காட்சியளித்தன. அங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகம். தாத்தா வீடு கட்டுவதற்கென வாங்கிப் போட்டிருந்த கருங்கற்குவியலுக்கு அடியில் பாம்பு முட்டைகளைப் பார்த்ததை இன்று நினைத்தாலும் பகீரென்கிறது. பின்னே? அதற்குப் பக்கமிருந்த மணற்குவியலில்தானே சிறுபிள்ளைகள் நாங்கள் விளையாடுவோம். நாங்கள் என்பது நான், என் தம்பி, எங்கள் அத்தை பிள்ளைகள் இருவர் ஆகிய நால்வரும்.

தாத்தா வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் எனக்குப் பரிச்சயமான நாட்கள்! மணல் மேட்டில் அமர்ந்துகொண்டு அக்கம்பக்கச் சிறுமிகளுடன் கதைபேசிய காலங்கள்! தாத்தா கிணற்றிலிருந்து நீரிறைத்து வாளியுடன் தலையில் ஊற்றிக்குளிப்பதை, அதிசயமாய் வேடிக்கை பார்த்து ரசித்த நாட்கள் அவை!

அரசுக்குடியிருப்பில் நேரம் வரையறுக்கப்பட்டு குழாயில் வரும் தண்ணீரைப் பிடித்துவைத்துப் புழங்கிய எங்களுக்கு வேண்டுமென்னும்போது நீரிறைத்துக் கொள்ளலாம் என்னும் கிணற்றைப் பார்க்கவே வியப்பாகவும் மலைப்பாகவும் இருந்தது.

கிணற்று விளிம்பை இருகைகளாலும் பிடித்து எம்பித் தொங்கியபடி உள்ளே எட்டிப்பார்த்து நீரில் அலையும் பிம்பத்தைக் காண்பதும் உள்நோக்கி ஒலியெழுப்பி எதிரொலி கேட்பதும் அந்த வயதில் ஒரு வித்தியாசமான அனுபவம். கிணற்றுநீரில் பிம்பத்தைப் பார்க்கும்போதெல்லாம் சிங்கத்தை முயல் ஏமாற்றிக் கொன்ற கதையும் நினைவுக்கு வந்து பயங்காட்டும்.

தாத்தா பார்த்துவிட்டால் அவ்வளவுதான். நாக்கை மடித்துக் கடித்தபடி கோபத்துடன் பக்கத்திலிருக்கும் செடியொன்றின் கிளையை ஒடித்து இலைகளை உருவிக்கொண்டு எங்களைத் துரத்துவார். ஆனால் யாரையும் அடிக்கமாட்டார். அவர் அப்படி பெருத்த ஆரவாரத்துடன் சத்தமிட்டு வருவதே அச்சத்தை உண்டாக்கும். கிணற்றடிக்கு குழந்தைகள் வரக்கூடாது என்பது தாத்தாவின் எழுதப்படாத சட்டம். எட்டிப்பார்க்கிறேன் என்று தவறி விழுந்துவிட்டால் என்னாவது என்கிற அக்கறையுணர்வே காரணம் என்று அந்த வயதில் புரியவில்லை. தாத்தாவுக்குத் தெரியாமல் செய்வதே சாமர்த்தியமென்று நினைத்துக்கொண்டிருந்தோம்.

எங்கள் ஆவல் புரிந்தபின், தாத்தாவே இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவினார். ஆசைப்படும்போதெல்லாம் அவரே அருகிலிருந்து பாதுகாப்பாய் நாங்கள் எங்கள் ஆசையைத் தணிக்க உதவினார். தடுப்பாரில்லாததாலோ என்னவோ சிலநாளில் எங்களுக்கு அந்த ஆசை விட்டுப்போனது.

தாத்தா ஓய்வுபெற்றபின் தான் முன்னிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பொதுச்சேவையில் அவர் கொண்டிருந்த தீவிர நாட்டமும் ஓய்வு ஒழிச்சல் பாராத உழைப்பும் எந்தப் பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொண்டு முன்னிற்கும் பாங்கும் அவரை ஊர்த்தலைவராக இரண்டுமுறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கவைத்தது. அவருடைய முயற்சியாலேயே அந்தப் புறநகருக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பேருந்து வசதி வந்தது.

சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மக்கள் நடந்தே நகரம் வருவதை அறிந்த அவர் அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் சொல்லில் அடங்காது. சாலை சரியில்லையென்ற சாக்குப்போக்கெல்லாம் அவரிடம் எடுபடவில்லை. கரடுமுரடான சாலையை தார்ச்சலையாக சீரமைத்தார். நியாயவிலைக்கடையொன்றை கொண்டுவந்தார். உயர்நிலை நீர்த்தேக்கத் தோட்டியொன்று அவரால் உருவானது. ஊருக்குள் செம்மண் சாலை வசதி உண்டானது.

உள்ளூர் கோவிலின் நிர்வாகக் கமிட்டியின் செயலாளராகவும் இருந்தார். சிறிய அளவில் ஒரே ஒரு விநாயகர் சிலையுடன் இருந்த கோவிலை பெரியதாகக் கட்டி அம்மன், முருகன், நவக்கிரகம், அனுமன் போன்ற பிற தெய்வங்களையும் கொணர்ந்து கும்பாபிஷேகமும் செய்த பெருமை அவருக்கானது. தாத்தாவுக்கு தீவிரமான கடவுள் பக்தி இல்லாதபோதும் மற்றவர் உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர்.

தீபாவளிப் பண்டிகையின்போது எங்கள் அனைவரையும் வரிசையாய் உட்காரவைத்து தலையில் எண்ணெய், சிகைக்காய் வைத்துவிடுவார். குளித்துமுடித்து வந்ததும் புதுத்துணி, பட்டாசு கொடுத்து ஆசிர்வதிப்பார்.

பொங்கல் பண்டிகையின்போது கொல்லையில் தாத்தாதான் அடுப்பு வெட்டுவார். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இடத்தில் இரண்டடி நீளமும் ஒரு அடி அகலமும் ஒரு அடி ஆழமும் கொண்ட குழியை கடப்பாரை, மண்வெட்டி கொண்டு வெட்டுவார். குழியிலிருந்து எடுத்த மண்ணைக்கொண்டு யானைக்கவளம் அளவுக்கு ஆறு உருண்டைகள் செய்வார். அந்த ஆறு உருண்டைகளையும் அந்தச் செவ்வகக்குழியின் மேற்புறம் முக்கோணவடிவில் பொருத்தி உடனடி விறகடுப்பை உருவாக்கிவிடுவார். அதில்தான் பொங்கற்பானையை ஏற்றுவார். குழிக்குள் விறகும் சக்கைகளும் போட்டு எரிக்க மேலே பொங்கல் பொங்கிவரும். எங்களுக்கு இவை யாவும் அன்று வேடிக்கையான விஷயங்கள். தாத்தா எவர் உதவியுமின்றி தனித்தே இந்தக்காரியங்களைச் செய்வார். பொங்கல் முடிந்ததும் மீண்டும் அந்த உருண்டைகள் உடைக்கப்பட்டு உள்தள்ளப்பட்டு குழி மூடப்பட்டுவிடும். அடுத்த பொங்கலுக்குதான் திறப்பு விழா.

அவரது தளராத உடல் உறுதியும் மன உறுதியும் இறுதிவரை வியக்கவைத்தவை.

தாத்தா பிறந்தது மன்னை தாலுகாவைச் சேர்ந்த சேராங்குளம் என்னும் ஊராகும். அங்கிருந்து நாகப்பட்டிணம் ரயில்வே பணிமனையில் அவரது தந்தைக்கு பணி கிடைக்க குடும்பத்துடன் நாகைக்கு இடம்பெயர்ந்தனர். இப்படியாக அந்தத் தலைமுறையிலிருந்து குலத்தொழிலான விவசாயம் என்பது மறந்தே போனது. இருப்பினும் மாடுகளைப் பூட்டி ரேக்ளா பந்தயங்களில் ஈடுபடுவதும், சிலம்பம் சுழற்றுவதும் தாத்தாவின் இளவயதுப் பொழுதுபோக்குகள். அவர் மட்டுமல்ல, அவரது சகோதரர்கள் நால்வருமே சிலம்பப் பயிற்சியை முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்தனர். (தாத்தாவிடமிருந்து ஆர்வம் தொற்றி என் அப்பாவும் சித்தப்பாக்களும் கூட சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டு கற்றுத் தேர்ந்தனர்.)

சிலம்பம் அறிந்திருந்தது அவருக்கு அதீத பலத்தைக் கொடுத்தது. எவன் என்னை என்ன செய்துவிடமுடியும் என்பதுபோன்ற மிதப்பும் என்னால் ஆகாதது எதுவும் இல்லை என்கிற கர்வமும் அவருடைய பேச்சில் தெரியும். திறமை இருக்குமிடத்தில் தோன்றும் செருக்கு அது, பாரதிக்கு இருந்த ஞானச்செருக்கைப்போல்! அதில் தவறில்லை என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். ஊர்ப்பிரச்சனைகளில் தலையிட்டு தீர்த்துவைப்பதில் சமர்த்தர். இவரிடம் சொல்லிவிட்டால் போதும், அதன்பின் அது பற்றிக் கவலைப்படத்தேவையில்லை, கச்சிதமாய் நிறைவேற்றிவிடுவார் என்ற நம்பிக்கை அவரைத் தேடி வருவோருக்கு இருந்தது. வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு வேலையெதுவும் செய்யாமல் திரியும் பெரியமனிதர்களிடையே உண்மையாகவே உழைத்தார். பம்பரமாய்ச் சுழன்று பகுதி மக்களின் நலத்துக்காக நாளெல்லாம் பாடுபட்டார்.

தாத்தா, தனது பத்தொன்பதாம் வயதில் நாகை பணிமனையில் இரும்பு வார்ப்புலையில் தொழிலாளியாக சேர்ந்தார். அந்தப் பணிமனை மூடப்பட்டதும் பொன்மலைக்கு இடம்பெயர்ந்தார். தாத்தாவின் சகோதரர்கள் இருவர் ரயில்வே பணிமனையில் பணியாற்றினார்கள். தாத்தா, அப்பா, சித்தப்பா, என் அம்மாவழித் தாத்தா, என் தாய்மாமன்கள் இருவர் என எங்கள் குடும்பமே ரயில்வேயில் ஊழியம் செய்துகொண்டிருந்தது. இரண்டு தலைமுறைகளுக்குப் பின் இன்றைய தலைமுறையில் சொல்லிக்கொள்வதற்கு மருந்துக்கும் ரயில்வே பணியில் ஒருவரும் இல்லை என்பது வியக்கவைக்கும் உண்மை.

தஞ்சையின் பேச்சுவழக்கு தாத்தாவின் பேச்சில் புலப்படும். எண்பது என்பதை அவர் எம்பளது என்று சொல்லும் அழகே அழகு. அப்போது மேலதிகாரிகளாய் இருந்த துரைமார்களின் பழக்கத்தால் பள்ளிக்கல்வி முறையாகக் கற்காத அவரது பேச்சில் அதிசயிக்கத்தக்கவிதமாய் ஆங்கிலக்கலப்பு அவ்வப்போது தலைகாட்டும். வேலையில் கொண்ட சிரத்தையால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்றார். கடும் உழைப்பும், ஆர்வமும் அவரையும் ஒருநாள் மேலதிகாரியாக்கியது.

மாட்டுத்தரகிலும் நுண்ணிய தேர்ச்சி பெற்றிருந்த அவருக்கு மாடுகளின் மீதான ஈர்ப்பு எப்போதுமே இருந்தது என்பதை அவர் அரசுப்பணியிலிருந்தபோதும் அரசுக்குடியிருப்பில் இருந்துகொண்டு பசுக்களை வைத்துப் பராமரித்ததைக்கொண்டே அறியலாம். நாய் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார். உயர்தர நாய்கள் எதுவும் வளர்த்ததில்லை. சாதாரணமானவைதாம். ஆனாலும் அவற்றிடம் அவர் காட்டும் பிரியம் அலாதியானது.

இதைப்போலொரு மனிதரை முன்பே அறிமுகப்படுத்தியிருக்கிறேன், நினைவிருக்கிறதா உங்களுக்கு? அப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22394)கதையில் வரும் ஆறுமுகம் என்னும் பாத்திரத்தில் ஊற்றப்பட்டது தாத்தாவின் குணாதிசயம்தான்.

இப்படியான ஒரு அரும் மனிதரை என் பாசமிகு பாட்டனாராகப் பெற்றதற்கு என்ன பாக்கியம் செய்தேன் என்றெண்ணி மருகுகிறேன். என்னுடன் தாத்தா கழித்த விசேடத் தருணங்கள் பல. நான் வளர்ந்தபிறகும் என்னுடனான பிணைப்பு வலுத்தே இருந்தது. அவருடைய பழம்பேச்சுகளுக்கு அக்கறையுடன் நான் செவிமடுத்தக் காரணமாக இருக்கலாம். அவை முன்பே எனக்குப் பலமுறை சொல்லப்பட்டிருந்தபோதும் அது மறு ஒலிபரப்பு என்பதை அவரிடம் சுட்டிக்காட்டி அவர் ஆர்வத்தைக் குலைக்காமல் சுவாரசியத்துடன் கேட்டுக்கொண்டதும் காரணமாக இருக்கலாம்.

எது எப்படியோ..... என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை... பாசத்தின் பிணைப்பை கடைசிவரை இறுகப்பற்றியிருந்தேன் என்பதில் எனக்கு அளவிலாப் பெருமிதமே.... அவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அருந்தருணங்களை என் வாழ்வில் அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார். எனினும் இப்போதைக்கு அந்நினைவுகளுக்கு சிறு ஓய்வு விட்டு அடுத்த விழுதைப் பற்றி அதில் ஊஞ்சலாட விழைகிறது மனம்.

(ஊஞ்சலாட்டம் தொடரும்)

ரங்கராஜன்
16-02-2011, 06:25 AM
நல்ல பேத்தி, அதைவிட நல்ல தாத்தா...

இருவருமே கொடுத்து வைத்தவர்கள் தான்

வாழ்த்துக்கள் கீதம் அக்கா...

Nivas.T
16-02-2011, 07:28 AM
ஆஹா இந்தத் திரிய கவனிக்களையே

என்ன ஒரு அழகான பாசத்தின் நினைவலை தொகுப்பு

தாத்தா... இதுவும் ஒரு மந்திரச் சொல்தான்

என்வாழ்வில் எனக்கு கிட்டாத ஒரு உறவு

உங்கள் உறவின் விழுது அழகு

தொடருங்கள்

govindh
16-02-2011, 08:09 AM
உற்சாகம் பொங்கும் ஊஞ்சலாட்டம்....
பாசக் கதை - அருமையான தொடர் நினைவுகள்...
வாழ்த்துக்கள்.

தொடருங்கள்....

கீதம்
03-03-2011, 03:58 AM
பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியதற்கு நன்றி ரங்கராஜன், நிவாஸ், கோவிந்த். தொடர்ந்துவருவதற்கும் நன்றி.

கீதம்
03-03-2011, 04:01 AM
ஊஞ்சலாட்டம் - 6

அடுத்த உறவை அறிமுகப்படுத்துமுன் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன்.

அவர் பெருஞ்செல்வந்தர் இல்லை. ஆனாலும் மாடு மனை என்று ஓரளவு வசதியாகவே இருந்தார். ஒரே மகள். சரியான துடுக்குக்காரி. வாய்த்துடுக்கு மட்டுமல்ல, செயலிலும்தான்.

அப்பாவோ கண்டிப்பானவர். தன் பெண்ணை நாலு எழுத்தாவது படிக்கவைத்துவிடவேண்டுமென்பதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம். அந்தச் சிறுமிக்குப் படிப்பில் துளியும் ஆர்வமில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் தன் வயதுப் பையன்களோடு சேர்ந்துகொண்டு மரமேறுவதும், மாங்காய் திருடுவதும், கொடுக்காப்புளி பறிப்பதும், குளத்தில் கும்மாளம் போடுவதுமாய் இருந்தாள்.

சிறுமி பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடம் என்றால் பெரிய கட்டடமெல்லாம் இல்லை, திண்ணைப்பள்ளிக்கூடம் தான். அதில் கரும்பலகையும் கிடையாது. தரையில் மணலைக் குவித்து அதில் வாத்தியார் எழுதிக்காட்ட மாணவர்களும் அதுபோலவே அதன்மேல் எழுதிப்பழகவேண்டும்.

படிப்பில் நாட்டமில்லாத இவளைப் படிக்கவைக்க வாத்தியார் பெரும்பாடுபட்டார். இவள் அப்பாவுக்கு பதில் சொல்லவேண்டுமே....

சுட்டுவிரலைப் பிடித்து மணலில் அழுத்தி எழுதவைக்க..... விரல் வீங்கிச் சிவந்துவிடும். அப்படியும் எழுதாமல் படிக்காமல் அழும்பு செய்பவளை என்ன செய்வது? கல் உப்பைக் கொட்டி அதில் முழந்தாளிடச் சொல்வார். முட்டியெல்லாம் இரத்தம் வடிய வீடு திரும்புவாள். ஆனால் வீட்டில் யாரிடமும் சொல்வதில்லை. சொன்னால் உதை விழும் என்பது தெரியும்.

அவளுக்கு அப்போது பத்துப் பதினோரு வயதிருக்கும். பள்ளிவிட்டு வரும் வழியில் சிறுவர்களோடு சேர்ந்துகொண்டு யார்வீட்டு மாமரத்திலோ ஏறி மாங்காய் திருட.... வாத்தியார் பார்த்துவிட்டு நேரே இவள் வீட்டுக்கு வந்துவிட்டார்.

"பிள்ளே... உம்ம பொண்ணை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க. மரமேறி நிக்குது. விழுந்தா கைகாலு போயிடும். அப்புறம் எவன் கட்டுவான்? பொம்பளப் புள்ளயா லட்சணமா இருக்கச் சொல்லுங்க..."

வந்தவேலை முடிந்துவிட்டதென்று அவர் போய்விட்டார்.

அப்பா எதுவும் பேசவில்லை. ஆனால் அப்பா கையிலிருந்த புளியமிளாறு பேசாத பேச்செல்லாம் பேசியது. அம்மா எவ்வளவு தடுத்தும் அப்பாவின் ஆத்திரம் அடங்கவில்லை.

அழுதுகொண்டே உறங்கிப்போன அவளுக்கு மறுநாள் அம்மா அறிவுரை சொல்லி பள்ளிக்கு அனுப்பினாள். அவளும் பள்ளிசென்றாள். நேற்று அப்பாவிடம் வாங்கிய அடி கணுவுக்கு கணு வலித்து நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. வாத்தியாரைப் பார்க்கும்போதெல்லாம் கோபம் மூண்டது. கூடப் படித்தப் பிள்ளைகள் அவள் அப்பாவிடம் அடிவாங்கியதைச் சொல்லி கேலி பேசினர். வகுப்பு முடியும்வரை காத்திருந்தாள், உள்ளுக்குள் கறுவிக்கொண்டே.

வகுப்பு முடிந்து அனைவரும் கலைந்ததும் கால்செங்கல் அளவுக்கு ஒரு கல்லை எடுத்து வாத்தியாரைக் குறிவைத்து அடித்தாள். முன்பே மாங்காய் அடித்துப் பழகியவள் அல்லவா? குறி தப்பவில்லை. அது அவரது நெற்றிப்பொட்டைத் தாக்க.... குபுக்கென இரத்தம் வெளிக்கிளம்பி வழிந்தோடியது.

தெய்வத்துக்கு நிகரான குருவை இப்படிக் காயப்படுத்தலாமா? ஊரே திரண்டுவிட்டது. கூட்டத்தைப் பார்த்து மிரண்டவள், புத்தகப்பையை எறிந்துவிட்டு எங்கோ சிட்டாய்ப் பறந்து மறைந்தாள்.

பெருத்த அதிர்ச்சியுடன் இருந்த ஆசிரியருக்கு கைவைத்தியம் செய்து கட்டுபோட்டதும் நேராக சிறுமியின் வீட்டுக்கு வந்துவிட்டார்.

"பிள்ளே.... உம்ம பொண்ணு பண்ணியிருக்கிற காரியத்தைப் பாத்தீரா? பொண்ணா அது? பிசாசு! அதை நீங்க வீட்டிலே வச்சிக்கிறதுதான் உத்தமம். அதுக்கு படிப்பு ஏறாது, தறுதல.... பொண்ணை கண்டிச்சு வளரும்யா...."

ஆற்றாமையோடு சொல்லிவிட்டுப்போக, கூடியிருந்தவர்களும் தங்கள் பங்குக்கு அவளைப் பற்றி புகார் சொல்ல..... ஆவேசமானார் அப்பா.

"ஏய், இன்னைக்கு அவள உண்டு இல்லைன்னு ஆக்கறேன் பாரு. எங்க போயிடுவா? வரட்டும், காலை ஒடிச்சிடறேன். குருவை மதிக்கத் தெரியாத பொண்ணுன்னு பேரெடுக்குறதவிட...நொண்டின்னு பேர் எடுக்கட்டும். காலம்பூரா நானே கஞ்சி ஊத்துறேன். வரட்டும்... அவ...."

அம்மா அரண்டுபோனாள். எப்படியாவது இன்று ஒருநாள் இவர் கண்ணிலிருந்து குழந்தையை மறைத்துக் காப்பாற்றவேண்டுமே என்று தெருவுக்கும் கொல்லைக்கும் நடையாய் நடந்தாள். அப்பாவோ கண்கள் கனலாய்ச் சிவந்திருக்க...புளியமிளாறுடன் வாசல்புறம் உலாத்திக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க கூண்டுக்குள் அடைபட்ட புலி அங்குமிங்கும் உலாத்துவதைப் போலவே இருந்தது.

அம்மா பதற்றத்துடன் எல்லா சாமியையும் கும்பிட்டு 'அது பண்ணுறேன், இது பண்ணுறேன்’னு ஆயிரத்தெட்டு நேர்த்திக்கடன்களைப் பட்டியலிட்டுக்கொண்டிருந்தாள்.

நேரம்தான் ஆனதே தவிர சிறுமியைக் காணவில்லை.மணி ஆறானது, ஏழானது....

அப்பா கொஞ்சம் கொஞ்சமாய்த் தளரத் தொடங்கினார். பயத்தில் எங்காவது பதுங்கி இருந்துவிட்டு பிறகு வருவாள் என்ற நினைப்பு வலுவிழக்கத் தொடங்கியது. அப்பாவின் சீற்றம் கொஞ்சங்கொஞ்சமாய் பதற்றமாய் உருப்பெறத்தொடங்கியது.

உதறலுடன் வேலையாட்களை அழைத்துக்கொண்டு, ஆளுக்கொரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு அக்கம்பக்கம், சந்துபொந்திலெல்லாம் தேடத்துவங்கினார். ஊர்மக்களும் சேர்ந்து தேடினர். கிணறு, குளம் எல்லாமும் அலசப்பட்டது. எங்கும் அகப்படா நிலையில், அப்பா...

"அம்மா.... நீ எங்க இருந்தாலும் வந்திடும்மா.... நான் உன்ன அடிக்கமாட்டேம்மா.... முனீசுவரன் ஆணையா அடிக்கமாட்டேம்மா...." என்று பித்துப்பிடித்தவர்போல் புலம்பத் தொடங்கிவிட்டார். எதுவும் பயனில்லாமல் உச்சுக் கொட்டியபடி ஊர் கலைந்தது. மீண்டும் தேடுதல் முயற்சியைக் காலையில் தொடர எண்ணி அப்பா ஆட்களை அனுப்பிவிட்டு வீடுதிரும்பினார்.

கவலையுடன் வழிபார்த்திருந்த அம்மா, சோர்ந்துபோன முகத்துடன் வரும் அப்பாவைப் பார்த்தே நிலையைப் புரிந்துகொண்டு தலையில் அடித்துக்கொண்டு அழத்துவங்க....

வீட்டுக்குள் 'தொம்'மென்ற சத்தம் கேட்டு இருவரும் திடுக்கிட்டனர். சத்தம் வந்த திசையில் விளக்கைக் கொண்டுசெல்ல..... சுவருக்கும் பத்தாயத்துக்குமிடையில் இருந்த குறுகிய இடைவெளியில் மயங்கிச் சரிந்துகிடக்கிறாள் சிறுமி. காற்றோட்டமில்லாத அவ்விடத்தில் கிட்டத்தட்ட நான்குமணிநேரத்துக்கும் மேலாய் ஒளிந்திருந்ததில் வியர்த்து, உடல் முழுவதும் தெப்பமாகி மூச்சுவிடமுடியாமல் மூர்ச்சையாகி விழுந்திருக்கிறாள்.

அப்புறமென்ன? பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒரு பெரிய கும்பிடு போட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டாள். பருவம் அடைந்ததும் வரன் பார்க்கத் தொடங்கினார் அப்பா.

மாப்பிள்ளையை அப்பாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அம்மாவுக்கு இதில் விருப்பமில்லை. முனகிக்கொண்டே இருந்தாள்.

“மாப்பிள்ளைக்கு முப்பது வயசாம். இவளுக்கு இப்பதான் பதினஞ்சு ஆரம்பிச்சிருக்கு. இன்னுங்கொஞ்சம் சின்னவயசாதான் பாருங்களேன்..."

"அடி, போடி விவரங்கெட்டவளே.... மாப்பிள்ளைக்கு என்னடி குறைச்சல்? கடுக்கணும் குடுமியுமா ஜோரா இருக்காருடி. அப்பா அம்மா கெடையாது. மூணே தங்கச்சிங்க. மூணையும் நல்ல எடத்தில கட்டிக்குடுத்தாச்சி. அதனாலதான் வயசு கொஞ்சம் ஆயிடுச்சி. ஆனால் என்ன? ரயில்வே மாப்பிள்ளைடி....அரைக்காசானாலும் அரசாங்க உத்தியோகம்! கவர்மெண்டு மாப்பிள்ளை கசக்குதா உனக்கு?"

"அதுக்கில்ல.... வயசு....."

"உன் பொண்ணு ஜாதகம் யோக ஜாதகம்னு ஜோசியனே சொன்னான், தெரியுமா? பாரு.... கவர்மெண்டு காசுல ஊரைச் சுத்தலாம், வீடு குடுக்குறானாம், குழாயில தண்ணி கொண்டுவரானாம், பாம்பே கக்கூஸாம், எல்லாத்துக்கும் மேல வைத்திய செலவுகூட இனாமாம். அதுவும் இங்கிலீசு வைத்தியம். பாத்துக்கோ..... இதுக்கு மேல உனக்கு என்னாடி வேணும்?"

அம்மாவின் அரைகுறை சம்மதத்துடன் திருமணம் இனிதே நடைபெற்றது. பதினைந்து வயதில் பெரியமனுஷியாக்கப்பட்டு, ஏதேதோ ஆசைக்கனவுகளோடு திருமண பந்தத்தில் காலடி எடுத்துவைத்தவளை ஆலத்தி கரைத்து எதிர்கொண்டழைத்தவை துயரங்கள் மட்டுமே....

(ஊஞ்சலாட்டம் தொடரும்)

Nivas.T
03-03-2011, 04:50 AM
நல்ல கதை

கண்கள் முன் காட்சிகளை நிலைப்படுத்துகிறது

தொடரட்டும் விழுதின் பயணம்

பாரதி
03-03-2011, 08:13 AM
நீங்கள் அறிமுகப்படுத்தும் இந்த உறவு யாராக இருக்கலாம் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது. அவ்வயதிற்கு உரிய காரியங்களை செய்திருந்தாலும், அவருடைய துணிவைப் பாராட்டலாம் போல தோன்றுகிறது.
சொல்லும் பாங்கு அருமை. தொடருங்கள்.

பூமகள்
03-03-2011, 11:40 AM
இப்படியொரு சுட்டிக் குழந்தையா??!!

அக்குழந்தைக்குத் திருமணமா??

விவரிக்கும் விதம் அருமை.. தொடருங்கள். :)

Ravee
03-03-2011, 03:21 PM
http://www.kids-pages.com/folders/puzzles/Happy_Family/big-family.jpg

ஆகா அக்காவின் எழுத்துக்கள் அபாரம் ..... நான் இருநூறு முறைக்கு மேல் படித்த செர்யோஷா , என் அப்பா சிறுவனாய் இருந்த போது, குழந்தைகளும் குட்டிகளும் , பாட்டிசைக்கும் பையன்கள் என்ற ருஷ்ய சிறுவர் இலக்கிய நாவல்களை திரு சோமசுந்தரம் அய்யாவின் மொழி பெயர்ப்பில் படித்ததை போன்ற சந்தோசம் ... தாத்தா பாட்டி சொந்தங்கள் எனக்கு கிடைக்காதவை ... உங்களுடன் அந்த சந்தோசங்களை பகிர்ந்து கொள்கிறேன் அக்கா .... :)

அன்புரசிகன்
03-03-2011, 10:40 PM
பழயனவற்றை இன்னொருவர் சொல்ல அதை கேட்பது எவ்வளவு அழகான தருணம். உங்கள் காட்சி விபரிப்புக்கள் மிக அழகாக உள்ளது. உங்கள் தாத்தா இப்படித்தான் இருப்பார் என்ற உருவமைப்பு முதல் கொண்டு அத்தனையும் காட்சியாக அமைத்தது உங்கள் எழுத்துக்கள்.
தொடருங்கள்.

கீதம்
04-03-2011, 04:07 AM
நல்ல கதை

கண்கள் முன் காட்சிகளை நிலைப்படுத்துகிறது

தொடரட்டும் விழுதின் பயணம்

ஊக்கத்துக்கு நன்றி நிவாஸ்.

கீதம்
04-03-2011, 04:09 AM
நீங்கள் அறிமுகப்படுத்தும் இந்த உறவு யாராக இருக்கலாம் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது. அவ்வயதிற்கு உரிய காரியங்களை செய்திருந்தாலும், அவருடைய துணிவைப் பாராட்டலாம் போல தோன்றுகிறது.
சொல்லும் பாங்கு அருமை. தொடருங்கள்.

யாரென்று நீங்கள் சரியாகவே யூகித்திருப்பீர்கள். நன்றி பாரதி அவர்களே.

கீதம்
04-03-2011, 04:10 AM
இப்படியொரு சுட்டிக் குழந்தையா??!!

அக்குழந்தைக்குத் திருமணமா??

விவரிக்கும் விதம் அருமை.. தொடருங்கள். :)

நன்றி பூமகள். திருமணத்துக்குப் பின் அவள் நிலை? தொடர்ந்து சொல்வேன்.

கீதம்
04-03-2011, 04:12 AM
http://www.kids-pages.com/folders/puzzles/Happy_Family/big-family.jpg

ஆகா அக்காவின் எழுத்துக்கள் அபாரம் ..... நான் இருநூறு முறைக்கு மேல் படித்த செர்யோஷா , என் அப்பா சிறுவனாய் இருந்த போது, குழந்தைகளும் குட்டிகளும் , பாட்டிசைக்கும் பையன்கள் என்ற ருஷ்ய சிறுவர் இலக்கிய நாவல்களை திரு சோமசுந்தரம் அய்யாவின் மொழி பெயர்ப்பில் படித்ததை போன்ற சந்தோசம் ... தாத்தா பாட்டி சொந்தங்கள் எனக்கு கிடைக்காதவை ... உங்களுடன் அந்த சந்தோசங்களை பகிர்ந்து கொள்கிறேன் அக்கா .... :)

குடும்பப் புகைப்படத்துடன் பாராட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி ரவி. என் இனிய நினைவுகளை உங்களுடனும் பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே...

கீதம்
04-03-2011, 04:15 AM
பழயனவற்றை இன்னொருவர் சொல்ல அதை கேட்பது எவ்வளவு அழகான தருணம். உங்கள் காட்சி விபரிப்புக்கள் மிக அழகாக உள்ளது. உங்கள் தாத்தா இப்படித்தான் இருப்பார் என்ற உருவமைப்பு முதல் கொண்டு அத்தனையும் காட்சியாக அமைத்தது உங்கள் எழுத்துக்கள்.
தொடருங்கள்.

நன்றி அன்புரசிகன். உங்கள் அனைவரின் ஊக்கமிகுப் பின்னூட்டம் என்னைத் தொய்வின்றி தொடரச் செய்யும்.

கீதம்
04-03-2011, 04:17 AM
ஊஞ்சலாட்டம் – 7

திருட்டிபடும் அழகுடன் சின்ன மரப்பாச்சி போல் நடந்து திருமணமேடையேறி, ஐயனார் போல் கம்பீரமாய் இருந்த மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்த அவளைப் பார்த்து அம்மா நிரம்பவே கவலைப்பட்டாள்.

அழகென்றால் அவள் அத்தனை அழகு. சுண்டினால் இரத்தம் வரும் சிகப்பழகு. கருத்த சுருள்மயிர். எப்போதும் துருதுருவென அலைபாயும் வண்டுக்கண்கள். நடக்கும்போது தடுக்கிய ஆறு கஜப் புடவையை அள்ளி இடுப்பிலும் செருகத் தெரியாது விழித்துநின்றவளின் எதிர்காலம் கண்டு கலங்கி உதவினாள் அம்மா. கொசுவத்தோடு அவள் குழந்தைப்பருவமும் சுருட்டிச் செருகப்பட்டு புகுந்தகம் அனுப்பப்பட்டாள்.

ஒரு சிறு பதுமைபோல் வளையவந்தவள் அவள் கணவனின் பார்வையில் ஒரு கேளிக்கைப் பதுமையாகவே காட்சியளித்தாள். இவள் சென்ற மூன்றாம் மாதமே துன்பச்சூறாவளி சுழல ஆரம்பித்துவிட்டது.

ஒரே வருடத்தில் ஒருவர் பின் ஒருவராய் மூன்று நாத்தனார்களும் இளம்வயதில் கைம்பெண்களாகி குழந்தைகளுமில்லாமல் வாழ்வில் எந்தப் பிடிப்புமற்று எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் அண்ணனே கதியென்று அவர் காலடியில் அடைக்கலமான சோகத்தை என்னவென்று சொல்வது?

இவள் காலடி எடுத்துவைத்தவேளை என்று பழி சுமத்தப்பட்டது. தங்களை மூளியாக்கிய இவள் மட்டும் அண்ணனோடு குலவி வாழ்வதாவென்ற ஆங்காரம் மேலிட சில திரைமறைவு நாடகங்கள் அரங்கேறின. இவள் நடத்தையில் களங்கம் கற்பிக்கப்பட்டது.

இளம் வயதும், இயல்புக்கு மீறிய அழகும், எவருடனும் சுமுகமாகப் பழகும் குணமும், புன்னகை தவழும் முகமும் அவதூறுகளுக்கு உடந்தையாயின. சந்தேக நோய் பீடித்த கணவனுடன் அவள் காலம் கழியத்துவங்கியது. தன் பிடியினின்று நழுவிப் போய்விடுவாளோவென்னும் பயம் உச்சத்தில் மிளிர, கணவனின் அகோர ஆக்கிரமிப்பும் அடியும் உதையும் அவளை நரகத்தில் தள்ளியது. அந்த சுயசிந்தனையற்றக் கணவன் தன் ஆளுமையை மெய்ப்பிக்கும் பொருட்டு அவளை ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாய் மாற்றினான்.

மகளின் தலையில் தானே கொள்ளிவைத்ததையுணர்ந்த அவள் அப்பா படுத்தப் படுக்கையாகி இறந்தும் போனார். தாய் நிர்க்கதியாகி, மகளை நாடிவர... அவளைப் பார்க்கவும் முடியாத துர்பாக்கியத்துக்கு ஆளாகி, வருந்தி வாழ்க்கையை இழந்தார்.

கணவனுடன் வாழ்ந்த முப்பத்தொன்பது வருடத் தாம்பத்யத்தில் பதினான்கு பிள்ளைகளைப் பெற்று அதில் சரிபாதியை வளர்த்துப் பறிகொடுத்தாள். அது தவிர கர்ப்பத்தில் கலைந்தவை கணக்கற்றவை. மகளே தனக்குப் பிரசவம் பார்க்கும் கொடுமையை எந்தத்தாய்தான் தாங்குவாள்? இவள் தாங்கினாள். வேறுவழி?

பிள்ளைகள் வளர்ந்து தாயை துன்பச் சூறாவளியிலிருந்து மீட்டனர். கொதித்திருந்த வயிற்றைக் குளிர்வித்தனர்.

அதீத அழுத்தமும் வெப்பமும் கரியை வைரமாக்குவதுபோல் அவள் அடைந்த துயரங்களும், வேதனைகளும் அவளை உறுதிமிக்க மனுஷியாக்கின. உடல் உறுதியும் மன உறுதியுமே அவளை எழுபத்தெட்டு வயதுவரை சோர்வின்றி வாழவைத்தன.

உண்மையில் கணவனின் மறைவுக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட தன் ஐம்பத்தைந்தாவது வயதிலிருந்தே அவள் தன் வாழ்க்கையை வாழத் துவங்கினாள். குறும்புப்பேச்சும், குழந்தைத்தனமும் மீண்டும் அவளிடம் குடிகொண்டன.


நிபந்தனையற்ற அன்பைப் பொழிவதில் அவளுக்கு நிகர் அவளே... தான் சாகும் தருவாயில் தன் இளைய மகனிடம் ஒருவேண்டுகோள் வைத்தாள். என்ன தெரியுமா? அத்தையைக் கைவிட்டுவிடாதே என்பதுதான் அது. தன் மூன்று நாத்தனார்களில் இறுதியாய் எஞ்சியிருந்த இளைய நாத்தனாரைத்தான் குறிப்பிட்டாள்.

அவள் இறந்தபோது எழுந்த அந்த முதியவளின் ஓலம் அனைவரையும் கலங்கடிக்கக்கூடியதாய் இருந்தது.

"ஐயோ.... அண்ணீ..... நீ இருந்து நான் போயிருக்கக்கூடாதா...? எனக்காக ஒப்பாரி பாட நீதானே இருந்தே.... உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லையே..... அன்னைக்கு நான் உனக்கு செஞ்ச கொடுமைக்கெல்லாம் இன்னைக்கு நீ என்னைப் பழிவாங்கிட்டியே....என்னை மன்னிச்சிடு தாயீ......."

எத்தனை வருடத்துக்குப் பின் கேட்கப்பட்ட பாவமன்னிப்பு? அவள் என்றோ மன்னித்துவிட்டாள் என்பது அவள் சொல்லாமலேயே விளங்கியிருக்கவேண்டும்.

புருஷன் இறந்தபிறகு புறக்கணிக்காமல், பிள்ளைகள் வளர்ந்தபிறகு தள்ளிவைக்காமல் ஆதரவற்ற தன் நாத்தனார்களைத் தன்னுடன் வைத்துக் காப்பாற்றி, எஞ்சியிருக்கும் ஒருத்தியையும் தான் இறந்தபின் கைவிட்டுவிடக்கூடாது என்று பிள்ளைகளிடம் கேட்டுக்கொள்கிறாள் எனில்.... அவள் போற்றப்படவேண்டிய தெய்வம் அல்லவா? அந்தத் தெய்வம் என் அம்மாச்சி(அம்மாவின் அம்மா) என்பதில் எனக்கு எத்தனைப் பெருமிதம்! அவரோடு நான் கழித்த உவப்பான தருணங்கள் இனி ஊஞ்சலாடும்….

Nivas.T
04-03-2011, 04:54 AM
இது தான் உண்மையான பெண்ணடிமை

நீங்கள் கூறும் அந்த காலகட்டத்தில்
இதுபோல் நிகழ்வுகள் ஏராளம்.
ஆனால் பெண்களுக்கு ஆண்களை விட
பெண்கள் தான் எதிரியாக இருந்தனர்

பொறமை, மூடநம்பிக்கை, அறியாமை இவைதான் மூலகாரணங்கள்.

தொடருங்கள் அம்மாச்சியின் அன்பு மழையை நினைய காத்திருக்கிறோம்

பூமகள்
04-03-2011, 06:54 AM
அம்மாச்சி - நான் அம்மாயி என்று அழைப்பேன்.. ஒரு கணம் என் கண்ணில் நீர்த்திரையோடியது.. அந்த ஒளி வீசும் முகமுடைய அம்மாயி என் மனக்கண்ணில்..

என் அம்மாயி பற்றி இத்தனை ஆழம் அறிந்திருக்கவில்லை நான்.. உங்கள் இப்பதிவு அந்த வேட்கையைத் தூண்டுகிறது.. அவரோடு கேட்டு அறிந்து கொள்ள காலம் கை கொடுக்கவில்லை.. எங்கள் கை விட்டு போய் சில வருடங்கள் ஓடிவிட்டன.. ஆனால் இன்னும் அவர்களின் பாசம் ஆல மர வேராய் மனதில்..

அம்மாச்சிக்கு இந்த பேத்தியின் அன்பு..

பாராட்ட வார்த்தைகள் இல்லை கீதம் அக்கா. தொடருங்கள்.

govindh
04-03-2011, 08:32 AM
"சின்ன மரப்பாச்சி போல் நடந்து திருமணமேடையேறி, ஐயனார் போல் கம்பீரமாய் இருந்த மாப்பிள்ளையின் "...........நல்ல உவமை...

"கொசுவத்தோடு அவள் குழந்தைப்பருவமும் சுருட்டிச் செருகப்பட்டு"....
ரத்தினச் சுருக்கம்...

அன்பு உறவுகளின் பண்புக் கதை....
பாராட்டுக்கள்.

தொடருங்கள்....
தொடர்ந்து வருகிறோம்....

ஜானகி
04-03-2011, 10:09 AM
" அம்மாச்சி " அவர்களின் உலகத்திற்கே போய், அவர்கள் உள் மனதைப் படம் பிடித்து எழுதியது போல, மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது..... தொடருங்கள்....

அடுத்தவரின் கதையைப் படிப்பதில் தான் என்ன சுவாரசியம்...?

புடவையின் கொசுவம்... இனி உங்கள் எழுத்துக்களை நினைவூட்டும்......அபாரமான உவமை...

tamilkumaran
04-03-2011, 12:02 PM
கண்கலங்கி விட்டது உங்கள் அம்மாச்சியின் வாழ்வை அறிந்து.

கீதம்
04-03-2011, 09:47 PM
இது தான் உண்மையான பெண்ணடிமை

நீங்கள் கூறும் அந்த காலகட்டத்தில்
இதுபோல் நிகழ்வுகள் ஏராளம்.
ஆனால் பெண்களுக்கு ஆண்களை விட
பெண்கள் தான் எதிரியாக இருந்தனர்

பொறமை, மூடநம்பிக்கை, அறியாமை இவைதான் மூலகாரணங்கள்.

தொடருங்கள் அம்மாச்சியின் அன்பு மழையை நினைய காத்திருக்கிறோம்

உண்மைதான் நிவாஸ். எங்கே இவள் முந்திக்கொள்வாளோ என்ற பயத்தில் அவர்கள் முந்திக்கொண்டார்கள், இவளின் நற்குணம் அறியாமலேயே. பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.

கீதம்
04-03-2011, 09:59 PM
அம்மாச்சி - நான் அம்மாயி என்று அழைப்பேன்.. ஒரு கணம் என் கண்ணில் நீர்த்திரையோடியது.. அந்த ஒளி வீசும் முகமுடைய அம்மாயி என் மனக்கண்ணில்..

என் அம்மாயி பற்றி இத்தனை ஆழம் அறிந்திருக்கவில்லை நான்.. உங்கள் இப்பதிவு அந்த வேட்கையைத் தூண்டுகிறது.. அவரோடு கேட்டு அறிந்து கொள்ள காலம் கை கொடுக்கவில்லை.. எங்கள் கை விட்டு போய் சில வருடங்கள் ஓடிவிட்டன.. ஆனால் இன்னும் அவர்களின் பாசம் ஆல மர வேராய் மனதில்..

அம்மாச்சிக்கு இந்த பேத்தியின் அன்பு..

பாராட்ட வார்த்தைகள் இல்லை கீதம் அக்கா. தொடருங்கள்.

மனம் நிறைந்த நன்றி பூமகள்.

அம்மாச்சியின் மடியில் படுத்துக்கொண்டு அவரைக் கதை சொல்லச் சொல்லி கேட்கும்போதெல்லாம் 'நான் எந்தக் கதை சொல்லுவேன், நான் பிறந்த கதையா? வளர்ந்த கதையா? வாக்கப்பட்ட கதையா? ' என்றுதான் ஆரம்பிப்பார். நாங்கள் உடனே...'எங்களுக்கு அந்தக் கதையெல்லாம் வேணாம். வேற கதை சொல்லுங்க' என்போம். சற்று விவரம் தெரிந்த காலத்தில் 'உங்க கதையைச் சொல்லுங்க' என்று கேட்டு அவர் வாயால் கேட்டதுதான் பள்ளிக்கூடக் கதையெல்லாம். திருமணவாழ்க்கை பற்றிய விவரங்களை என் அம்மா, பெரியம்மா, சித்தி, தாய்மாமன்கள் இவர்களிடமிருந்து சிறுகச் சிறுகத் திரட்டியிருந்தேன்.

அவர்களைப் பற்றிய நினைவுகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன் பூமகள்.

கீதம்
04-03-2011, 10:06 PM
"சின்ன மரப்பாச்சி போல் நடந்து திருமணமேடையேறி, ஐயனார் போல் கம்பீரமாய் இருந்த மாப்பிள்ளையின் "...........நல்ல உவமை...

"கொசுவத்தோடு அவள் குழந்தைப்பருவமும் சுருட்டிச் செருகப்பட்டு"....
ரத்தினச் சுருக்கம்...

அன்பு உறவுகளின் பண்புக் கதை....
பாராட்டுக்கள்.

தொடருங்கள்....
தொடர்ந்து வருகிறோம்....

நன்றி கோவிந்த்.

'ஐயனார் போல்' என்னும் உவமையால் தாத்தாவைக் குறிப்பிட்டதே அம்மாச்சிதான்.

இன்னமும் உருட்டும் விழிகளுடன் கம்பீரமாய் நிற்கும் ஐயனாரைப் பார்த்தால் நான் அறியாத அந்தத் தாத்தாவை நினைந்து சற்றே கலங்குவேன்.

கீதம்
04-03-2011, 10:11 PM
" அம்மாச்சி " அவர்களின் உலகத்திற்கே போய், அவர்கள் உள் மனதைப் படம் பிடித்து எழுதியது போல, மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது..... தொடருங்கள்....

அடுத்தவரின் கதையைப் படிப்பதில் தான் என்ன சுவாரசியம்...?

புடவையின் கொசுவம்... இனி உங்கள் எழுத்துக்களை நினைவூட்டும்......அபாரமான உவமை...

மிகவும் நன்றி ஜானகி அவர்களே....

கதை என்றால்தான் குழந்தையிலிருந்தே ரசிக்கத்துவங்கிவிடுகிறோமே....

நம் முன்னோர்கள் வாழ்ந்த கதையை நாம் தெரிந்துவைத்திருப்பதில் நமக்குப் பெருமைதானே.....

கீதம்
04-03-2011, 10:14 PM
கண்கலங்கி விட்டது உங்கள் அம்மாச்சியின் வாழ்வை அறிந்து.

நன்றி தமிழ்க்குமரன் அவர்களே.

இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தவர் அதற்குப் பின்னாளில் வாழ்ந்த வாழ்க்கைதான் நமக்குப் பாடம். எனக்கு ஏதேனும் மனத்துயரம் வரும்வேளையில் அவரை நினைத்தால் எல்லாமே மறைந்து மனம் இலேசாகிவிடும். அத்தனைத் தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணி அவர்.

M.Jagadeesan
05-03-2011, 02:14 AM
மனித தெய்வங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்கள் சென்றபிறகு
தான் அவர்களுடைய அருமை புரிகிறது.வாழ்த்துக்கள் கீதம்!

கலையரசி
05-03-2011, 09:21 AM
இன்று தான் இத்தொடரைப் படித்தேன். முன்னோர்களின் வாழ்க்கையை இவ்வளவு தூரம் அறிந்து வைத்திருந்து, அதைக் கதை வடிவில் சொல்லும் விதம் பிரமாதம்!
எல்லோர்க்கும் இந்தத் தாத்தா, பாட்டி அன்பு கிடைப்பதில்லை. அந்தத் துர்பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி. என் அன்னை பத்து வயதாயிருக்கும் போதே அவரது அப்பா காலமாகிவிட்டாராம். எனக்கு நினைவில் இருப்பது பாட்டி மட்டுமே. அவருடன் சென்று நாகூர் ஆண்டவர் கோயிலில் புறாக்களுக்குக் கம்பு இறைத்தது மட்டுமே என் நினைவில் இருக்கிறது. வேறு எனக்கும் அவருக்குமான பாசப் பிணைப்பென்று எதுவும் ஞாபகமில்லை.
அப்பா வழியில் அவரது அம்மாவும் என் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவர் என் பெரியப்பா குழந்தைகள் மீது தான் பாசமாக இருப்பாராம். நான் வளர்ந்த பிறகு தான் தாத்தா இறந்தார். ஆனால் அவர் எங்கள் யாரிடமும் பாசத்தைப் பொழியவில்லை. அதனால் அவர் இறப்பும் என்னைச் சிறிதும் பாதிக்கவில்லை.

இப்போதோ நிலைமை படு மோசம். நியூக்ளியர் குடும்பத்தில் குழந்தைகளுக்குச் சுத்தமாகப் பெரியவர்களின் அரவணைப்பும் அன்பும் கிடைக்க வாய்ப்பேயில்லை. அப்படியே கிடைத்தாலும் பெரியவர்களின் பேச்சையோ, அறிவுரையையோ குழந்தைகள் சட்டை செய்வதில்லை. காரணம், பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

”வயசானாலே இப்படித்தான், கிழம் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கும், நீ பாட்டுக்குப் போய் ஒன் வேலையைப் பாரு,” என்று இகழ்ச்சியாகத் தம் மாமனாரைப் பற்றியோ மாமியாரைப் பற்றியோ, தம் தாயார் வாயால் சொல்லக் கேட்கும் எந்தக் குழந்தை தாத்தா & பாட்டி சொல்லுக்குக் கட்டுப்படும்?

உன் அம்மாச்சியின் குழந்தைப் பருவ வாழ்க்கை மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால் அவருக்கு வாய்த்த வாழ்க்கையைப் பற்றி அறிந்த போது மனம் துன்பத்துக்குள்ளானது. இறக்கும் போது கூட தமக்குத் துன்பம் இழைத்த நாத்தனாரைப் பற்றி நினைத்திருக்கிறார். பகைவனுக்கருளும் அவரது நல்ல உள்ளம் நினைத்து நினைத்துப் போற்றுதலுக்குரியது!
சுவையாய் எழுதும் விதம் பாராட்டத்தக்கது! ஊஞ்சலாட்டத்தைத் தொடர்க!

கீதம்
07-03-2011, 09:55 PM
மனித தெய்வங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்கள் சென்றபிறகு
தான் அவர்களுடைய அருமை புரிகிறது.வாழ்த்துக்கள் கீதம்!

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

கீதம்
07-03-2011, 10:00 PM
இன்று தான் இத்தொடரைப் படித்தேன். முன்னோர்களின் வாழ்க்கையை இவ்வளவு தூரம் அறிந்து வைத்திருந்து, அதைக் கதை வடிவில் சொல்லும் விதம் பிரமாதம்!
எல்லோர்க்கும் இந்தத் தாத்தா, பாட்டி அன்பு கிடைப்பதில்லை. அந்தத் துர்பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி. என் அன்னை பத்து வயதாயிருக்கும் போதே அவரது அப்பா காலமாகிவிட்டாராம். எனக்கு நினைவில் இருப்பது பாட்டி மட்டுமே. அவருடன் சென்று நாகூர் ஆண்டவர் கோயிலில் புறாக்களுக்குக் கம்பு இறைத்தது மட்டுமே என் நினைவில் இருக்கிறது. வேறு எனக்கும் அவருக்குமான பாசப் பிணைப்பென்று எதுவும் ஞாபகமில்லை.
அப்பா வழியில் அவரது அம்மாவும் என் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவர் என் பெரியப்பா குழந்தைகள் மீது தான் பாசமாக இருப்பாராம். நான் வளர்ந்த பிறகு தான் தாத்தா இறந்தார். ஆனால் அவர் எங்கள் யாரிடமும் பாசத்தைப் பொழியவில்லை. அதனால் அவர் இறப்பும் என்னைச் சிறிதும் பாதிக்கவில்லை.

இப்போதோ நிலைமை படு மோசம். நியூக்ளியர் குடும்பத்தில் குழந்தைகளுக்குச் சுத்தமாகப் பெரியவர்களின் அரவணைப்பும் அன்பும் கிடைக்க வாய்ப்பேயில்லை. அப்படியே கிடைத்தாலும் பெரியவர்களின் பேச்சையோ, அறிவுரையையோ குழந்தைகள் சட்டை செய்வதில்லை. காரணம், பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

”வயசானாலே இப்படித்தான், கிழம் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கும், நீ பாட்டுக்குப் போய் ஒன் வேலையைப் பாரு,” என்று இகழ்ச்சியாகத் தம் மாமனாரைப் பற்றியோ மாமியாரைப் பற்றியோ, தம் தாயார் வாயால் சொல்லக் கேட்கும் எந்தக் குழந்தை தாத்தா & பாட்டி சொல்லுக்குக் கட்டுப்படும்?

உன் அம்மாச்சியின் குழந்தைப் பருவ வாழ்க்கை மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால் அவருக்கு வாய்த்த வாழ்க்கையைப் பற்றி அறிந்த போது மனம் துன்பத்துக்குள்ளானது. இறக்கும் போது கூட தமக்குத் துன்பம் இழைத்த நாத்தனாரைப் பற்றி நினைத்திருக்கிறார். பகைவனுக்கருளும் அவரது நல்ல உள்ளம் நினைத்து நினைத்துப் போற்றுதலுக்குரியது!
சுவையாய் எழுதும் விதம் பாராட்டத்தக்கது! ஊஞ்சலாட்டத்தைத் தொடர்க!

உங்களுடைய சிறுவயதில் தாத்தா பாட்டியின் அன்பு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன் அக்கா. அந்த விஷயத்தில் நான் பாக்கியசாலி என்பதை நினைத்துப் பூரித்துப் போகிறேன். உங்கள் குழந்தைகளுக்கு அந்தக் குறை இல்லாமல் தங்கள் தாத்தா பாட்டியுடன் வளர்ந்து அவர்களின் அன்பைப் பெற்றிருப்பதை எண்ணி நீங்கள் பெருமைப்படலாம்.

ஊக்கம் தரும் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி அக்கா.

கீதம்
07-03-2011, 10:37 PM
ஊஞ்சலாட்டம் 8

இப்போது இன்னும் ஒரு கதை சொல்லப்போகிறேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு கதை எழுதத் தோன்றிய சமயம் முதலில் எழுதியது இந்தக்கதைதான். நிலாச்சாரல் இணைய இதழில் வெளிவந்தது. இதில் நீல மையால் குறிப்பிடப்பட்டவை யாவும் என் நிஜவாழ்வில் நிகழ்ந்தவை.என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்
இந்தக் கோடை விடுமுறைக்குப் புதிய இடம் எங்காவது செல்ல வேண்டுமென்ற குழந்தைகளின் நச்சரிப்பையும் ஆர்வத்தையும் பார்த்து யோசித்ததில், வெகு நாட்களாய் என் மாமனும், மாமியும் என்னை வரச்சொல்லி அழைத்துக் கொண்டிருந்த, என் அம்மாச்சி வாழ்ந்த கிராமத்திற்குச் செல்வதென்று முடிவாயிற்று.

சிறுபிள்ளைப் பிராயத்தில் வருடந்தோறும் எனது கோடை விடுமுறையைக் கழித்த, அந்தக் கிராமத்தை நினைக்கும்போதே ஆங்காங்கே மின்னுகின்றன, சில ஞாபக மின்னல்கள்.

நினைவு தெரிந்த நாளாய் நானறிந்த ஓர் உற்சாக ஊற்று, என் அம்மாச்சி! அம்மாச்சிக்குத் திருமணமாகும்போது, அவருக்கு வயது பதினைந்தாம்; நான் அறிந்திராத தாத்தாவோ, அவரைவிட பதினைந்து வயது மூத்தவராம்! இல்லற வாழ்வின் இலக்கணமாய், ஈன்ற பிள்ளைகள் பதினால்வர் ஆயினும், வாழ்க்கைப் போராட்டத்தில் வென்றவர் எழுவரே!

என் அம்மாச்சியை நினைத்தாலே நெஞ்சம் நிறைவது, வெற்றிலைச் சிவப்பேறிய பற்கள் தெரிய வாய் விட்டும் மனம் விட்டும் அவர் சிரிக்கும் சிரிப்புதான். இப்படியும் ஒரு பெண்மணியா என வியக்க வைக்கும் அவரது வாழ்க்கை. பிள்ளைகள் தலையெடுக்கு முன்னேயே, கணவனையிழந்து கைம்பெண்ணாய் நின்றபோதும், மன உறுதியை இழக்காது போராடி தன் மக்களைத் தடம் மாறாமல் வளர்த்து, தரணியில் தலை நிமிர்ந்து வாழச் செய்தவர் அவர்.

தளர்ந்த வயதிலும், தளராத நையாண்டியும், நயமான சாதுர்யப் பேச்சும் எவர்க்கும் எளிதில் கைவராத கலை, அது என் அம்மாச்சிக்கு இறுதி வரை இருந்தது என்பதே ஒரு மலைப்பான உண்மை!

அவரோடு நான் கழித்த தருணங்கள் அத்தனையும் என் மனதில் பசுமரத்தாணிகள். என் இரண்டங்குலக் கூந்தலோடு, இடுமயிர் வைத்துப் பின்னலிட்டு, இறுதியில் குஞ்சலங்கட்டி அழகு பார்த்தவர் என் அம்மாச்சி. குஞ்சலம் ஆட வேண்டுமென்று, நான் ஆட்டி, ஆட்டி நடந்த நடையில், கொத்துக் கதம்பத்தோடு இடுமயிர்ப் பின்னலும் எங்கோ அவிழ்ந்து விழ, அதைக் கூட உணராமல் நான் விளையாடிக் கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் இதழ்க் கோடியில் எழுகிறது, ஒரு புன்னகை!

யார் யாரிடமோ சொல்லி வைத்து, தாழம்பூ கொணர்வித்து, எனக்குப் பூத்தைத்து விட்ட அழகென்ன! பூ எதுவும் கிடைக்காத பொழுதுகளில், இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அரசாங்க மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு பொரிய மகிழமரத்தின் அடியில் கொட்டிக் கிடக்கும் பூக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, மண் துடைத்து ஊசி நூல் கொண்டு சரம் சரமாய்க் கோர்த்து, எனக்குச் சூட்டி அழகு பார்த்த அன்பென்ன!

அம்மாச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ஒளவையார்தான் என் ஞாபகத்துக்கு வருவார். எனக்குத் தெரிந்து, ஒளவையாராய் என் மனதில் உருவகப்படுத்தியிருந்த கே.பி. சுந்தராம்பாளைத் தோற்றத்தில் சற்று ஒத்திருந்தார். அம்மாச்சியின் உடற்கட்டும், புடவைக்கட்டும், திருநீற்றுப்பூச்சும், அவரையே ஒத்திருக்க, பஞ்சு மிட்டாய் போன்ற நரைத்த, அடர்த்தியான, நெளிமயிரில் மட்டும் வித்தியாசப்படுவார்.

அவ்வளவு பரந்த தலைமயிரைக் கொண்டையிட்டு, கொண்டையூசி கொண்டு கட்டுக்குள் அவர் கொண்டு வருவதைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான செயல்களில் ஒன்று. அப்போதெல்லாம் எனக்கு, இறுக்கிப் பிடித்தால், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் பஞ்சு மிட்டாயின் நினைவுதான் வரும்.

அவரிடம் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம், அவர் வெற்றிலை போடும் அழகுதான். அதனினும் அழகு, அந்த வெற்றிலை வாசத்தோடு என் கன்னத்தில் அவரிடும் சில முத்தங்கள்! ஒவ்வொரு முறையும் அவர் முத்தமிட்ட பின்னால் மறைவாகச் சென்று வெற்றிலை எச்சில் பட்ட கன்னங்களைத் துடைத்துக் கொள்வேன்.

வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அவரைக் காண்பதே அரிது. அவரது வெள்ளி நிற வெற்றிலைப் பெட்டி பல அறைகளைக் கொண்டது. ஒவ்வொரு அறையிலும் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு, கொட்டைப் பாக்கு, புகையிலை, பாக்குவெட்டி என்று தத்தம் இடத்தில் அழகாய் அமர்ந்திருக்கும். அந்த வெற்றிலைப் பெட்டியைப் பார்த்த மாத்திரத்தில், அம்மாச்சியும் இதற்குச் சமீபமாக இங்குதான் எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கை எழும்.

என்னை அலங்காரம் செய்து அழகு பார்த்த அவரே என்னைச் சில சமயங்களில் அழவும் வைத்திருக்கிறார். ஒரு நாள் தெருவில் முந்திரிப் பழங்கள் விற்கக் கண்டேன். அவற்றின் வடிவிலும், பொன்னிறத்திலும் மயங்கி, வாயில் நீரூற, அம்மாச்சியிடம் அவற்றை வாங்கித் தருமாறு கேட்டேன். அவரோ, 'வேண்டாமம்மா, சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும்' என்று எவ்வளவோ மறுத்தும், நான் விடாப்பிடியாய்க் கெஞ்சிக் கூத்தாடி, அதில் வெற்றியும் பெற்று, இரண்டு பழங்கள் உண்டிருப்பேன். அதன் பிறகு என் குரல் போன இடம் தெரியவில்லை. வீட்டுக்கு வருவோரிடமெல்லாம், இந்தக் கதையைச் சொல்லிச் சிரித்தால், எனக்கு அழுகை வராதா என்ன!

ஆட்டுக்குத் தழையொடிக்கச் சென்ற அவரை, நானும் பின் தொடர்ந்ததில், கருவேலமுள் காலில் குத்திக் கடுகடுத்ததால் அழுத என்னைத் தன் மடியில் இருத்தி, என் காலை விறகடுப்புச் சூட்டில் ஒத்தியெடுத்து, என் வேதனையைத் தணித்ததும் அவரே; கீழே விழுந்து அடிபட்டு ஆறாமலிருந்த காயங்களுக்கு, கற்றாழைச் சோற்றைத் தணலில் வாட்டியெடுத்து, ஓடி ஓடி ஒளிந்த என்னைத் தேடிப் பிடித்துப் பற்றுப்போட்டு, என்னை அழ வைத்தவரும் அவரே!

எனக்குத் திருமணமான மறுவருடம் அம்மாச்சி காலமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, இப்போதுதான் அந்த மண்ணை மிதிக்கிறேன்.

இத்தனை வருடங்களில் ஊர் மிகவும் மாறிவிட்டிருந்தது. பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்கு வர முன்பெல்லாம் மாட்டு வண்டியைத்தான் நம்பியிருந்தோம். இப்போது, தடுக்கி விழுந்தால் ஆட்டோ கிடைக்கிறது. கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் அரிதாய்க் காணப்பட, மாடி வீடுகள் பெருகி, அவற்றின் மேலே டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்திருந்தன.

ஆடு, மாடு, கோழி போன்ற ஜீவன்களும் அரிதாகக் கண்ணில் பட, கிட்டத்தட்ட எல்லோரது வீட்டிலும் அல்சேஷன், டாபர்மென், பாமெரெனியன் போன்ற செல்ல நாய்கள் தென்பட்டன. அம்மாச்சியின் வீடு கூட இப்போது மாமாவின் வீடாகி விட்டது. கூரையும், சாணி மெழுகிய தரையும் காணாமற் போயிருந்தன; நவ நாகரிக வேலைப்பாடுடன் கூடிய பிரமாதமான வீடாக அது இருந்தது.

அம்மாச்சியின் புகைப்படம் ஒன்று சாமியறையில் எப்போதும் எரியும் விளக்குடன் காணப்பட்டது. மற்றபடி, அம்மாச்சி வாழ்ந்ததற்கான சுவடு வேறெங்கும் தென்படவில்லை. கொல்லைப்புறம் சென்று பார்த்தபோது, என் அம்மாச்சி எனக்காக ஊஞ்சல் கட்டிக் கொடுத்த புளியமரத்தைக் காணாமல் பகீரென்றது. அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டிருந்தது. அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; யாருக்கோ தானமாகத் தந்து விட்டதாக மாமி சொன்னார்.

என் கணவர் நாளேட்டில் மூழ்கியிருக்க, என் பிள்ளைகளும், மாமாவின் மகன்களும் தொலைக்காட்சியில் ஐக்கியமாகியிருக்க, நான் மட்டும் எதையோ இழந்ததுபோல் தவித்துக் கொண்டிருந்தேன். அது, அம்மாச்சியின் வீடாகவோ, ஊராகவோ எனக்குத் தோன்றவில்லை. கடந்த காலத்தின் நினைவுகளிலிருந்து மீளவும் இயலாமல், நிகழ்காலத்தின் நிஜங்களை ஏற்கவும் இயலாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.

மாமாவிடம் வேலை பார்க்கும் வேணுவுக்கு, வயிற்று வலியென்று அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு ஆள் வந்து சொல்ல, பார்த்து வருகிறேன் என்று மாமா கிளம்பினார். "நானும் உடன் வருகிறேன், எனக்கு ஊரைப் பார்க்க வேண்டும்" என்றேன்.

ஆச்சரியமாகப் பார்த்தாலும், மறுக்காது என்னை அழைத்துச் சென்றார். நான் சிறுமியாய் இருந்தபோது, இதே ஊ¡ரில் என்னை சைக்கிளின் பின்புறம் வைத்துக்கொண்டு எத்தனை முறை வலம் வந்திருக்கிறார்! அந்த ஞாபகம் எனக்கு இப்போது வந்திருக்கும் என்று நினைத்திருக்கலாம்.

மாமாவுடன் ஸ்கூட்டரில் சென்று, மருத்துவமனை வாசலில் இறங்கினேன். மாமாவிடம், "நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் போய்ப் பார்த்து வாருங்கள்" என்றேன். சற்று யோசித்தவர், "சரி, பத்திரமாய் இரும்மா, உடனே வந்து விடுகிறேன்" என்று கூறி உள்ளே செல்ல, நான் அந்த மகிழ மரத்தைத் தேடினேன்.

அந்த வளாகமே, நான் அறிந்த, அறியாத பல்வேறு மரங்களால் சூழப்பட்டு, சோலைவனம் போல் கட்சியளித்தது. சூர்யகிரணங்களை உள்ளே வரவிடாமல் தடுப்பதைப் போன்று, ஒன்றுடன் ஒன்று கிளைகளால் கை கோர்த்து அந்த இடத்தையே நிழலால் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. காகங்களின் கரையலும், மற்ற பறவைகளின் கீச்சொலியும் மனதிற்கு இதம் கூட்ட, மகிழம்பூவின் வாசம் என்னை வழி நடத்திச் செல்ல, அந்தப் பெரிய மரத்தைக் கண்டுபிடித்தேன்.

எத்தனை வருட மரமோ! அடி பெருத்து, கிளை பரப்பி, எங்கணும் பூக்களை உதிர்த்து அமைதியாய் நின்று கொண்டிருந்தது. 'நீயாவது இருக்கிறாயே என் அம்மாச்சியின் நினைவோடு பின்னப்பட்ட ஞாபகச் சின்னமாக!' என மனம் நெகிழ்ந்து மண்டியிட்டு அதன் பூக்களைச் சேகரிக்கத் துவங்கினேன்.

அந்தப் பக்கம் வருவோர் போவோர் யாரும் அந்த மரத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சினை. உட்புற நோயாளிகளுக்கு உதவிக்கு வந்தவர்களில் யாராவது பெண்கள் மட்டும் போகிற போக்கில் ஒன்றிரண்டு பூக்களை எடுத்து, கொண்டைக்குள் அல்லது பின்னலுக்குள் செருகிக் கொண்டு சென்றனர்.

சீண்டுவாரின்றி சிதறிக் கிடக்கும் பூக்களைப் பார்க்கும்போது, என்னென்னவோ கற்பனைகள் மனதில் விரிந்தன. அமாவாசையன்று, இரவு வானத்தில் ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரக் கூட்டங்களைப் போன்று ஒரு கணம் தோன்றியது. மறுகணம், மரங்கள் யாவும் சாமரம் வீச, மலர்ப் படுக்கையொன்று மிக வேகமாக யாருக்கோ தயாராகிக் கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.

காற்று வீசும் ஒவ்வொரு முறையும், மரத்திலிருந்து சில மலர்கள் கீழே விழுவதையும், ஏற்கெனவே விழுந்து கிடந்தவற்றுள் சில உருண்டு வேறிடம் நோக்கி ஓடுவதையும் பார்க்கும்போது, வாழ்க்கையின் நிலையாமை பற்றிய நினைவு உள்ளே எழுந்தது.

இப்படி ஏதேதோ எண்ணங்கள் தோன்றிய வேளை, அருகினில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து நோக்க, இடுப்பைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் ஒரு மூதாட்டி. முன்பே பரிச்சயமானவர் போல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவர், "மேலுக்கு சுகமில்லம்மா, மூட்டுக்கு மூட்டு வலிக்குது. இங்க வந்தா, ஒண்ணுமில்ல, வயசாயிட்டுதுன்னு சொல்லி ஏதோ களிம்பு கொடுத்தாங்க" என்றார். பேசும்போதே மூச்சிரைத்தது. பேசியவர், அங்கேயே அமர்ந்து, பூக்களைப் பொறுக்கித் தன் சேலைத் தலைப்பில் சேகரிக்கத் தொடங்கினார்.

எனக்குதான் உதவுகிறாரோ என்று ஐயப்பட்டு, "உடம்பு முடியாதபோது, ஏன் பூ எடுத்துக் கொண்டிருக்கிறீங்க?" என்றேன்.

"வீட்டுல என் பேத்தியிருக்கு, பூவுன்னா அவ்வளவு இஷ்டம் அதுக்கு, இது நல்ல வாசமா இருக்கில்ல. அதுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்றார்.

எனக்குக் கண்ணில் நீர் முட்டியது. துக்கம் தொண்டையை அடைக்க, கைக்குட்டையில் சேகரித்து வைத்திருந்த பூக்களை அம்மூதாட்டியின் சேலைத் தலைப்பில் கொட்டினேன்.

"ஏனம்மா, உனக்கு வேணாமா?" என்றார். "உங்க பேத்திக்குக் கொடுங்க, அவளும் ஒரு நாள் என்னைப் போல இங்கே வந்து பூ எடுப்பாள்" என்றேன். என் பேச்சின் அர்த்தம் புரியாமல், கண்களால் நன்றி தெரிவித்துச் சென்றாள்.

அந்த மகிழமரத்தை நிமிர்ந்து நோக்கினேன். 'சில வருடங்கள் கழித்து, அந்தப் பேத்தி நிச்சயம் உன்னைப் பார்க்க வருவாள். அதன்பின் வேறொரு பாட்டியின் நினைவாக, வேறொரு பேத்தி வருவாள். காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்' என்று மனதார வாழ்த்தி நின்றேன்.

காற்றடித்து, சில மகிழம்பூக்கள் என்மேல் விழுந்தன. என் அம்மாச்சியே மலர்தூவி என்னை ஆசிர்வதிப்பதுபோல் உணர்ந்தேன்.


******************************


என்ன உறவுகளே... கதை பிடித்திருக்கிறதா? என்னுடைய பின்னோக்கிய பயணத்தில் உடன்வந்து என்னை உற்சாகப்படுத்தி என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி. இன்னும் சிலநாள் இந்த ஊஞ்சல் நம் மனதில் இதமாய் ஆடும்....

M.Jagadeesan
07-03-2011, 10:55 PM
நம்முடைய இளமைக்கால நினவுச்சின்னங்களில் மாறாதிருப்பவை மரங்களும்,கோவில்களுமே.தங்களுடைய ஊஞ்சலாட்டத்தைப் படித்த*
போது குறிப்பிட்ட மகிழமரம்,எங்கள் ஊர் சிவன் கோவிலின் தல விருட்
சம்.பல நூறு ஆண்டுகளைக் கடந்து இன்னும் அது பலருடைய இளமைக்கால நினைவுகளைப் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.

அன்புரசிகன்
07-03-2011, 11:10 PM
ஊரிலுள்ள ஒரு வளவினுள் இருந்து பார்ப்பது போல் ஒரு பிரமை.. அத்தனை அழகாக காட்சி விபரிப்புக்கள் இருந்தது. அவற்றில் ஒரு ஏக்கத்தவிப்பு என்ற கலவையுடன்.
அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

ஜானகி
08-03-2011, 02:02 AM
மகிழம்பூ வாசம் கிராமத்து மண் வாசனையுடன், எங்கள் நாசியையும் எட்டியது.... நன்றி.

மதி
08-03-2011, 03:48 AM
நெகிழ வைக்கும் கதை. தொடருங்கள் உங்கள் நினைவுகளை.!

கீதம்
08-03-2011, 06:09 AM
நம்முடைய இளமைக்கால நினவுச்சின்னங்களில் மாறாதிருப்பவை மரங்களும்,கோவில்களுமே.தங்களுடைய ஊஞ்சலாட்டத்தைப் படித்த*
போது குறிப்பிட்ட மகிழமரம்,எங்கள் ஊர் சிவன் கோவிலின் தல விருட்
சம்.பல நூறு ஆண்டுகளைக் கடந்து இன்னும் அது பலருடைய இளமைக்கால நினைவுகளைப் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.

உண்மைதான். நம் மூதாதையரைப்போலவே மரங்களும் நம் வாழ்வில் மறக்கமுடியா அம்சங்கள். பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

கீதம்
08-03-2011, 06:11 AM
ஊரிலுள்ள ஒரு வளவினுள் இருந்து பார்ப்பது போல் ஒரு பிரமை.. அத்தனை அழகாக காட்சி விபரிப்புக்கள் இருந்தது. அவற்றில் ஒரு ஏக்கத்தவிப்பு என்ற கலவையுடன்.
அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி அன்புரசிகன்.

கீதம்
08-03-2011, 06:12 AM
மகிழம்பூ வாசம் கிராமத்து மண் வாசனையுடன், எங்கள் நாசியையும் எட்டியது.... நன்றி.

மிகவும் நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
08-03-2011, 06:14 AM
நெகிழ வைக்கும் கதை. தொடருங்கள் உங்கள் நினைவுகளை.!

நன்றி மதி. இதோ... அடுத்த ஊஞ்சலாட்டம் தொடர்கிறது.

கீதம்
08-03-2011, 06:17 AM
ஊஞ்சலாட்டம் 9

மாமியார் பதவியையும் அன்பால் ஆட்சி செய்தவர், அம்மாச்சி. மற்ற மருமகள்கள் தங்கள் எல்லையை மீறாமல் மாமியார் என்ற மரியாதையுடன் எட்டி நிற்க, எங்கள் இளைய மாமாவின் மனைவி மட்டும் அம்மாச்சியின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமானார். அம்மாச்சியின் மடியில் இடம் பிடிப்பதில் எங்களோடு போட்டி போட்ட அவரை நினைத்தால் வியப்பாக உள்ளது.

மகள்களைவிடவும் மருமகளுக்கு ஒரு இணுக்கு அதிகமாகப் பூ நறுக்கும் அதிசய மாமியாரை அடைந்தது அவரது பாக்கியம்தானே! அந்த அன்புதான் தன் மூன்று பிரசவங்களின்போதும் தாய்க்குப் பதில் மாமியாரைத் தன்னருகில் வைத்துக்கொள்ளத் தூண்டியது.

மாமிக்கு தன் மாமியார் எங்கும் போகக்கூடாது. தன்னுடனேயே இருக்கவேண்டும். ஒருநாள் இல்லையென்றாலும் வீடு வெறிச்சொடிவிட்டதென்று புலம்புவார்.

அம்மாச்சி எங்கள் வீட்டுக்கு வந்தால் மூன்றாம் நாள் கடிதம் வரும். பெரும்பாலும் அதன் சாராம்சம் இப்படிதான் இருக்கும்.

'அத்தை, நீங்க இல்லாமல் பிள்ளைகளுக்கு ஜுரம் வந்திட்டுது. பெரியவனுக்கு சாப்பிட்டது ஒத்துக்கலை, ஒரே வாந்தி, சின்னவன் கீழ விழுந்து அடிபட்டிருக்கு. உடனே வாங்க'

அம்மாச்சி அலுத்துக்கொள்வார். 'என்னை பஸ் ஏத்தும்போதே கடுதாசி எழுதி போஸ்ட் பண்ணிடுவான்னு நினைக்கிறேன். ஒருநாள் என்னை விடமாட்டேங்கறாளே... நான் இல்லைன்னா வீட்டை எப்படி நிர்வாகம் பண்ணுவான்னு தெரியலையே... அடுத்த நடை என்ன பண்றேன் பாரு...

அம்மாச்சி சொன்னது போல் அடுத்தமுறை வரும்போது மாமாவின் பிள்ளைகள் இருவரையும் கையோடு அழைத்துவந்துவிட்டார்.

'இப்ப என்ன பண்ணுவா?'

ஆச்சர்யப்படுத்தும் விதமாய் மூன்றாம்நாள் கடிதம் வந்தது.

படித்துப் படித்து நாங்கள் சிரித்ததில் வயிற்றுவலியே வந்துவிட்டது. அப்படி என்ன எழுதியிருந்தார் என்கிறீர்களா?

'அத்தை, நீங்க இல்லாமல் எதுவுமே சரியா இல்லை. நம்ம கன்னுக்குட்டி ரெண்டுநாளா கழியுது. நீங்க உடனே வாங்க'

மாமியாரை வரவழைக்க ஒரு காரணம். பிள்ளைகுட்டி இல்லையென்றால் கன்றுக்குட்டி! பிறகென்ன? வந்த சூட்டோடு கிளம்பிவிடவேண்டியதுதானே!

வேடந்தாங்கலைப் போல் எங்கள் அனைவரின் கோடைக்கால சரணாலயம் எங்கள் அம்மாச்சி வீடுதான்.

"சாப்பாடு ஆச்சா.... எல்லாரும் வந்து பாயில வரிசையா படுங்க..."

மதிய உணவுக்குப் பின் என்றைக்காவது வழக்கத்துக்கு மாறாய்… பேரப்பிள்ளைகளுக்கு அம்மாச்சி உத்தரவிட்டால் அதற்குப் பின் நிச்சயம் ஏதோ சதிவேலை இருக்கும்.

"போங்க அம்மாச்சி, எங்களுக்குத் தூக்கம் வரல, நாங்க வெளையாடப்போறோம்." ஒத்த குரலில் பாடுவோம்.

நாங்கள் என்றால் மொத்தம் பத்து பேர். நான், தம்பி, பெரியம்மா பிள்ளைகள் மூவர், சித்தியின் பெண்கள் மூவர், மாமாவின் பிள்ளைகள் இருவர் என்று ஒரு பெரிய பட்டாளமே இருப்போம். எங்கள் பட்டாளத்தைக் கண்டு அம்மாச்சிக்குப் பயம் எதுவும் கிடையாது. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். எங்கள் அம்மாச்சிக்கு ஒரு சின்ன வெங்காயம் போதும், எங்களை நடுங்க வைக்க. எங்கள் கண்ணெதிரிலேயே ஒரு சின்ன வெங்காயம் நசுக்கப்பட்டு அவரது முந்தானையில் முடிச்சிடப்படும்.

"இப்ப எல்லாரும் வந்து படுக்கிறீங்க, இல்ல.... வெங்காயத்த கண்ணுல புழிஞ்சுவிட்டுடுவேன்."

அம்மாச்சி சொல்லும் தோரணையே செய்துவிடும் முனைப்புடன் இருக்கும். பிறகென்ன மறுபேச்சு? படுத்தாலும் தூக்கம் வராது. விளையாடவேண்டிய நேரத்தில் தூங்கு, தூங்கு என்றால் எங்கே இருந்து தூக்கம் வரும்?

ஒருவர் மாற்றி ஒருவர் அரைக்கண்ணால் அம்மாச்சி போய்விட்டாரா என்று பார்ப்போம். ம்கூம். அவர் எங்கள் தலைமாட்டைவிட்டு அசையவும் மாட்டார். கால்களை நீட்டி அமர்ந்து வெற்றிலை போட்டுக் குதப்பிக்கொண்டு எங்களையே நோட்டம் விட்டுக்கொண்டிருப்பார். இத்தனை முஸ்தீபுகளும் எதற்கு என்கிறீர்களா?

தன் மகள்களையும் மருமகளையும் மதிய காட்சிக்குத் திரையரங்கு அனுப்பத்தான் இத்தனை ஏற்பாடும். வயதின் வெவ்வேறு அடுக்குகளில் இருக்கும் குழந்தைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாய் படம் பார்க்கமுடியாது என்பதாலும், பத்துப் பேருக்கு டிக்கட் செலவு எகிறிவிடும் என்பதாலும், எங்கள் அம்மாச்சி செய்யும் தந்திர ஏற்பாடு என்பது பின்னாளில்தான் தெரிந்தது.

அப்படி இப்படி புரண்டு படுத்து வேறு வழியில்லாமல் தூங்கி எழும்போது ஒரு பெரிய பாத்திரத்தில் காப்பி ஆற்றிக்கொண்டிருப்பார். ஒவ்வொருவரும் அவரவர் அம்மாக்களைத் தேட...சில சின்னக்குழந்தைகள் அழ.... எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் அம்மாச்சியிடமிருந்து பதில் வரும்.

"அழுவாம காப்பி குடிங்க.. அம்மா துணி துவைக்க கொளத்துக்குப் போயிருக்கு...தோ... இப்ப வந்திடும்..."

இப்படிச் சொல்லிச்சொல்லியே நேரத்தைப் போக்கிவிடுவார். கொஞ்சநேரத்தில் அம்மாக்கள் ஒவ்வொருவராக பூனை போல் பின்வாசல் வழியே வீட்டுக்குள் நுழைந்து உடைமாற்றி எதுவுமே நடக்காததுபோல் வந்து இணைந்துகொள்வர். அம்மாச்சியின் சாமர்த்தியத்தை நினைத்தால் வியப்புதான் வருகிறது.

மாலை வேளைகளில் ஒவ்வொரு பேத்தியாய் அலங்கரித்து பூமுடித்துவிடுவதே அவருக்கு வேலை. பூமுடித்தல் பற்றி கதையில் சொல்லியிருக்கிறேனே.

அப்போது மின்சாரம் கிடையாது. நித்தமும் நிலாச்சோறுதான். சோறு, குழம்பு, காய் எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பிசைந்து அரிச்சந்திரன் கதை, விக்கிரமாதித்தன் கதை என்று பல கதைகளையும் சொல்லிக்கொண்டே பெரிய பெரிய கவளங்களாக எங்கள் கைகளில் தர... சாப்பிட்ட சுகத்தை இன்று நினைத்தாலும் மனம் சொக்குகிறது. திரும்பிவாராக் காலங்கள் என்றபோதும் தேயாத நினைவுகள் அல்லவா அவை!

அம்மாச்சி வீட்டில் பூஸ் என்ற பூனையும் கருப்பு என்னும் நாயும் இருந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள், இரண்டும் நெருக்கமான நண்பர்கள். அன்பே உருவான அம்மாச்சியின் வளர்ப்பு என்பதால் அவற்றுக்குள்ளும் அன்பு ஊற்றெடுத்ததோ என்னவோ?

ஒருநாள் வெளியில் சென்ற பூஸ் குறவர்களின் சுருக்கில் மாட்டி இறந்துவிட்டது. அதைக் கொண்டுவந்து கொல்லையில் புதைக்க... கருப்பு அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து கால்களால் பிறாண்டிக்கொண்டே இருந்தது. மூன்றுநாள் சரிவர சாப்பிடாமலும் இருந்த அதைத் தேற்றியது அம்மாச்சிதான்.

ஒரு பூனைக்கே அந்தப்பாடு படுத்திய கருப்பு அதை வளர்த்த புண்ணியவதியைப் பறிகொடுத்தபோது எப்படித் துடித்திருக்கும்? உறவுகள் அழுதும் புலம்பியும் துக்கத்தை வெளிப்படுத்த... கருப்பு அமைதியாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது.

இறுதி ஊர்வலத்தின்போது இறுதியாகச் சென்ற அது மறுபடி வீட்டுக்கு வரவே இல்லை. மறுநாள் பால் தெளிக்கச் சென்றவர்கள் அழைத்தபோதும் அந்த இடத்தைவிட்டு நகரமறுத்து அங்கேயே கிடந்து உயிரையும் விட்டது அந்த வாயில்லா ஜீவன். நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தியவருக்கு அதன் உயிரையே காணிக்கையாக்கிவிட்டது. ஐந்தறிவு ஜீவனையும் தன் அன்பால் ஆட்டிப்படைத்த அந்த மனுஷியின் அன்பைப் புரிந்துகொள்ளாத கணவரை எண்ணிப் பரிதாபமே மேலிடுகிறது.

"அம்மாச்சி, இது என்ன?"

கையிலிருக்கும் வடுவைக்காட்டிக் கேட்டபோது சொன்னார்.

"உங்க தாத்தா சுருட்டால சூடுவச்சது"

"உங்க வாத்தியாரை கல்லால அடிச்சீங்கல்ல... அந்தத் தாத்தாவையும் அது மாதிரி அடிச்சிருக்கலாமில்ல....?"

புரியாதவயதில் தம்பி கேட்க, அம்மாச்சி பதில் சொல்லாமல் சிரித்தார். பதில் சொல்லமுடியாத கேள்வியல்லவா அது?

(தொடரும்)

மதி
08-03-2011, 06:39 AM
அன்பே உருவானவர் உங்க அம்மாச்சி.. அவர் மேல் கருப்பு கொண்டிருந்த அன்பும் அதீதமானது. கொடுத்து வைத்தவர் தான் நீங்கள். அன்பானவர்களே உங்களை என்றும் சூழ்ந்திருக்கிறார்கள்.:)

Nivas.T
08-03-2011, 06:45 AM
சுகமான நினைவுகள்

வாழ்வில் அதைத்தவிர தொடர்வது ஒன்றுமில்லை

நீளட்டும் உங்கள் நினைவலைகள்

govindh
22-03-2011, 12:40 PM
அன்பின் ஆளுமை...
பாசப் பிணைப்பு...
உன்னதமான உணர்வலைகள்....
உற்சாகமான ஊஞ்சலாட்டம்...
அழகு...அருமை...

தொடருங்கள்...

கீதம்
22-03-2011, 08:38 PM
அன்பே உருவானவர் உங்க அம்மாச்சி.. அவர் மேல் கருப்பு கொண்டிருந்த அன்பும் அதீதமானது. கொடுத்து வைத்தவர் தான் நீங்கள். அன்பானவர்களே உங்களை என்றும் சூழ்ந்திருக்கிறார்கள்.:)

நன்றி மதி. அதில் எனக்கும் அளவிலாப் பெருமைதான்.:)

கீதம்
22-03-2011, 08:39 PM
சுகமான நினைவுகள்

வாழ்வில் அதைத்தவிர தொடர்வது ஒன்றுமில்லை

நீளட்டும் உங்கள் நினைவலைகள்

நன்றி நிவாஸ். சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்வேன்.:icon_b:

கீதம்
22-03-2011, 08:41 PM
அன்பின் ஆளுமை...
பாசப் பிணைப்பு...
உன்னதமான உணர்வலைகள்....
உற்சாகமான ஊஞ்சலாட்டம்...
அழகு...அருமை...

தொடருங்கள்...

பின்னூட்டத்துக்கு நன்றி கோவிந்த். சிலநாட்களில் தொடர்வேன்.

கீதம்
27-08-2011, 03:12 AM
கடைத்தெரு போலவே பரபரப்பாகக் காட்சியளிக்கும் நகரின் பிரதான சாலையில் அந்தப் பரபரப்புக்குச் சற்றும் பொருந்தாத வகையில் இருகரம் விரித்து வாஞ்சையுடன் அழைப்பது போல் இரண்டாய்ப் பிளந்து இருபக்கமும் ஒடுங்கி நின்று அழைத்தது அப்பெரும் மரக்கதவு. கதவின் கரங்களுக்கிடையே நின்று உள்ளே பார்க்க, சற்றுத் தொலைவில் அதே அளவு இருக் கதவுகள் விரிந்து புறஞ்செல்லும் வழியைக் காட்டின. அந்த இருக்கதவுகளுக்குள்ளும் ஒரு சிறு உலகம் கணிசமான மாந்தரால் இயங்கிக்கொண்டிருந்தது.

நீளவாக்கில் ஓடும் நடை! முற்றமென்றும் உருவகிக்கலாம். இருபுறங்களிலும் இடைவெளிகளற்று நெருக்கியடித்துக்கொண்டு வரிசைக்குப் பன்னிரெண்டாக மொத்தம் இருபத்து நான்கு வீடுகள். வீடுகளா அவை? ம் அப்படித்தான் சொல்லவேண்டும். அவற்றிற்கு கனத்த உத்தரங்கள் தாங்கிய நாட்டு ஓடுகள் வேயப்பட்ட உயரமான மேற்கூரை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் மேலும் கீழும் இரண்டாய்ப் பிரிக்கப்பட்ட கனத்த மரக்கதவும் இருக்கிறது. அதைவிட்டால் காற்று உள்ளே வர சன்னல்களோ சாளரமோ இல்லை. உள்ளே இருந்துகொண்டு கதவை மூடிவிட்டால் வெளியில் இரவா பகலா என்பது விளங்காது. குளியலறைக் கழிவறை வசதிகள் இல்லை. சாமான்கள் அடுக்க ராக்கைகள் இல்லை. படுக்கத் தனியறை இல்லை, சமையல் செய்த புகை வெளியேற வழியேதுமில்லை. சாப்பிட்டத் தட்டு அலம்ப சிறுமுற்றம் இல்லை.

அதனால் என்ன? மக்கள் அதில் வசிக்கிறார்களே! அங்கே சமைக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள், குடும்பம் நடத்துகிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இத்தனையும் நடக்கும் அந்த இடத்தை வீடு எனலாம்தானே? ஆனாலும் அவை மக்கள் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட வீடுகள் அல்ல.

என்ன குழப்புகிறேனா? அவை யாவும் தானிய மூட்டைகளும் இன்னபிற சரக்குச் சாமான்களும் பத்திரப்படுத்துவதற்காக அந்தக்காலத்தில் ஆட்சியிலிருந்த பிரெஞ்சியரால் கட்டப்பட்ட சேமிப்பறைகள். இப்போது பிரெஞ்சியரும் ஆட்சியில் இல்லை. மக்களுக்கு வசிக்கப் போதுமான இடங்களும் இல்லை. அதனால் தானிய அறைகளைத் தங்கும் அறைகளாக்கிக்கொண்டனர். குடிநீர் வசதியில்லை, சாக்கடை வசதி இல்லை. ஆனாலும் குடியும் குடித்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கே சண்டை சச்சரவுகளுக்குக் குறைவேதுமில்லை. சாயங்கால அரட்டைக் கச்சேரிகளுக்கும் குறைவில்லை.

ஆம், அந்தப் பண்டசாலை இப்போது பணமில்லாதவர்களின் சோலையாகிவிட்டது. பண்டசாலையின் பயன்பாடு குறைந்ததும், அதைச் சீரமைக்கும் செலவு கட்டுப்படியாகாமல் போனதும் மெல்ல மெல்ல அது அரசின் கண்பார்வையிலிருந்து நழுவிப்போனது. தானிய மூட்டைகள் இருந்த காலத்தில் சத்தமின்றி எவர் உத்தரவுமின்றி மெல்ல மெல்ல குடியேறிய பெருச்சாளிகளின் சாமர்த்தியத்துக்கு நிகரான திறம் படைத்தவர்கள் தாங்களும் அவ்வழியில் மெல்ல முன்னேறினர். அவர்களே அவ்விடங்களுக்குப் பாத்தியதைப் பெற்றவர்களாயினர். நிதி நிலைமை சீரடைந்து வேறிடம் செல்ல முயல்கையில் அவ்வீட்டை, குறிப்பிட்டத் தொகைக்கு விற்றுச் செல்லத் துவங்கினர். அவர்கள் போகும்போது அடுத்தவர்க்கு....! இப்படியே அவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருகாலகட்டத்தில் ஒவ்வொருவரிடமும் கைமாறிக்கொண்டே இருந்தன.

ஒரு சமயம் அவளும் அங்கே வாழ நேர்ந்தது. அதில் ஏகப் பெருமை அவளுக்கு. ஒரு சிறு மாளிகையின் அரசியென தன்னை நினைத்து மனத்துள் மகிழ்ச்சிப் பெருக்குக் கொண்டாள். பிறந்ததிலிருந்து எந்த சுகத்தையும் பெரிதாய் அனுபவித்திராத அவளை, திருமணத்துக்குப் பின் கணவன் அழைத்துச் சென்ற அந்த வீடே சொர்க்கபுரியாகத் தோன்றியது. அவள் முகத்தில் எப்போதும் பொலியும் புன்னகை கண்டு வெட்கியோ என்னவோ பொன்னகைகள் அவளை நெருங்கியதே இல்லை.

குழந்தை வளர்ப்புக்கெனவே பிறவியெடுத்தவள் போல் தன் சிறுவயதிலிருந்தே ஊரார் குழந்தைகளை தன் இடுப்பில் சுமந்தும், சோறூட்டியும் மகிழ்ந்த அவள், தன் உயிர் சுமக்கும் கருவின் வரவை ஆவலுடன் பார்த்திருந்தாள். அதற்கு கனவிலேயே கண்ணெழுதிப் பார்த்துக் களித்திருந்தாள். குலதெய்வத்துக்கு நேர்ந்த முடி எடுக்கும் வரை ஆணோ பெண்ணோ உச்சியில் குடுமி கட்டிப் பூச்சூட்டி மகிழ்ந்திருந்தாள்.

ஆசையுடன் கொஞ்சிக்கொண்டிருக்கும்போது, தன் தாயைக் கண்டதும் தாவியோடும் அக்கம்பக்கக் குழந்தைகளைப் போல் இது எவரையும் கண்டு இவளை விட்டு ஓடப்போவதில்லை. இரவல் பொம்மையை இதுகாறும் விளையாடி வந்தவளுக்கு சொந்தமாய் ஒரு பொம்மை விளையாடக் கிடைத்ததைப் போல் பெரும் பித்தம் தலைக்கேறி பூரித்திருந்தாள்.

அந்த நாளும் வந்தது. அத்தனைச் சிரமங்களையும் தாண்டி அவதரித்தது அரைகுறையாய் உருப்பெற்ற ஓர் ஆண்குழந்தை. செத்துப் பிழைத்தவளுக்குப் பேரிடியாய் வந்தது, பிழைத்துச் செத்துப் போனது உன் பிள்ளையெனும் செய்தி! ஊனமுற்ற சிசுவைக் கண்டு உள்ளம் பேதலிப்பாளென்றே பயந்து தாயின் பார்வை படும் முன்னே தன்னுள் பதுக்கிக் கொண்டாள் பூமித்தாய்.

இவளோ இன்னும் பித்தானாள்.... புரண்டு அழுதாள்... பெற்றுப் பறிகொடுக்கவோ இத்தனை பாரம் சுமந்தேன் என்று பாழும் வயிற்றில் அடித்துக்கொண்டுப் புலம்பினாள். புத்திரச் சோகத்தின் பெருவேதனை அறிந்திருந்த அவள் அன்னையோ பெண்ணின் தலை வருடிப் பேசாமடந்தையாய் நின்றாள்.

தொடரும்...

கீதம்
13-09-2011, 04:49 AM
மகனின் மறுவரவை எதிர்நோக்கிய அசட்டுக்கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய இவள் அல்லலுற்றாள். பிள்ளை வளர்ப்பில் பேருவகைக் கொண்டிருந்தவள், தான் பெற்றெடுத்தக் குழந்தைகளை வளர்க்கவும் நேரமின்றிப் பெற்றெடுத்தாள் வரிசையாய் பெண்மகவுகள் நான்கினை. இனியும் விட்டால் இவளுக்குப் பரலோகமே பாக்கியமென்றுணர்ந்த மருத்துவர் தயவால் கணவனின் ஒப்புதலின்றியே இவள் கர்ப்பவாசலின் கதவடைக்கப்பட்டது.

வயிற்றில் ஒன்று, இடுப்பில் ஒன்று, முந்தானையில் தொங்கிக்கொண்டு ஒன்று, காலைக் கட்டியபடி ஒன்று என்று நான்கு குழந்தைகளையும் வளர்க்க அவள் பட்ட சிரமம் சொல்லிமாளாது. அத்தனைத் துயரிலும் அவள் கைக்கொண்ட நகைச்சுவையுணர்வு மட்டும் எப்படி கைவிட்டுப் போகவில்லையென்பது இன்றும் எனக்கிருக்கும் வியப்பு! உதிரத்தோடு பிறந்ததோ அந்த உன்னத குணம்!

ஒரு திரைப்படத்தின் கதையை இவள் வாயால் கேட்கவேண்டும். படத்தை நேரில் பார்ப்பதை விடவும் சுவாரசியம் மிகுந்தவை இவளது கதை சொல்லும் பாங்கு. சுவையற்ற நகைச்சுவைக் காட்சிகளும் இவள் சொல்லும் விதத்தில் ரசிக்கவைக்கும். சம்பவங்களை விவரிப்பதிலும் கூடுதல் சுவை மிளிரும்.

முன்பின் அறியாதோரிடமும் மலர்ந்த முகத்துடன் பழகும் குணமும், உரிமையோடு பிறருக்கு உதவும் தயாளமும் இன்னும் பல உள்ளங்கள் இவளை உயரத்திலேயே வைத்திருக்கக் காரணம்.எந்த சூழலிலும் இன்முகம் காட்டுவது இவளுக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

கணவனின் சொற்ப சம்பாத்தியத்தில் பிள்ளைகளை வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கியவள், அத்துடன் ஓய்ந்துவிடவில்லை. சொன்னேனே... குழந்தை வளர்ப்புக்கென்றே பிறவியெடுத்தவள் என்று! அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு இவளே ஆயாவானாள்.

இடுப்பிலிருக்கும் குழந்தையை இவள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு அதி உரிமையோடு ஒருத்தி சொல்லிப் போவாள், "எக்கா.... இந்த சனியனை கொஞ்சம் வச்சிக்க, மனுசியை வேலை பாக்கவுடாம பாடாப் படுத்துது. நையி நையின்னு அழுதுகிட்டு எந்நேரமும் இடுப்புலேயே வச்சிக்கச் சொல்லுது... "

தொம்மென்று குத்தவைக்கப்பட்டக் குழந்தை இவளைக் கண்டதும் அழுதபடியே தவழ்ந்துவந்து சேலைபற்றிக்கொள்ளும். விளையாட்டுக் காட்டி, சமாதானப்படுத்தி, புழுதி போர்த்தியிருக்கும் உடலைக் குளிப்பாட்டி, பவுடர் பூசி, பொட்டு வைத்து, ஏற்கனவே இவள் வீட்டில் துவைத்து தயாராக இருக்கும் அதன் சட்டையைப் போட்டு, கடைக்குச் சென்று காய் வாங்கிவந்து சமைத்து, குழாயடி சென்று துணி துவைத்து, காயவைத்து சுடுசோறு குழையச் செய்து பருப்பு மசித்து ஊட்டி, (இத்தனையும் அக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டேதான் நடக்கும்) மீண்டும் அதன் முகம் துடைத்து, காலைக்கடன், மதியக்கடன், மாலைக்கடன் என்று அது கழிக்கும் எல்லாக்கடன்களையும் நேர் செய்து, அதான்... சுத்தப்படுத்தி, தயாராய் இருக்கும் ஏணையில் தூங்கவைத்துவிடுவாள்.

குழந்தையின் தாயோ, வேலைகளை முடித்து, மதிய உணவு, உறக்கம் முடித்து, எழுந்து வாசலில் பிற பெண்களுடன் அரட்டை அடித்துக்கொண்டும், பேன் பார்த்துக்கொண்டும் பொழுதைப் போக்கிவிட்டு, மாலையில் கணவன் வீட்டுக்கு வரும் சமயம் வந்து குழந்தையைத் தூக்கிச் செல்வாள். அப்போதுதான் அவளுக்கு குழந்தையின் நினைவு வரும். அப்போதுகூட இவள் சொல்வாள், "என்ன அவசரம் உனக்கு, அவ இன்னுங்கொஞ்சம் நேரம் இருக்கட்டுமே... அழுதா கொண்டுவந்து தாரேன்." குழந்தையாவது, அழுவதாவது! இவளிடம் இருக்கும்போது அழுகையென்ற ஒன்று இருப்பதையே அது மறந்து போயிருக்கும்.

அந்தப் பண்டசாலையின் ஒவ்வொரு குழந்தையையும் வளர்த்தாள். இவளை நம்பித்தான் குழந்தை பெற்றுகொள்கிறார்களோ என்று கூட எண்ணத்தோன்றும். பெண்கள் வளர்ந்துவிட, திருமணம் செய்யும் பொறுப்பும் கூட, முதன்முறையாக அந்தப் பொந்திலிருந்து வெளிவந்தாள். இடம் வாங்கி வீடு கட்டும் அளவுக்கு வசதி வந்திருந்தது. சொந்தவீட்டிலும் தூளி ஒன்று எப்போதும் நடுவீட்டில் ஆடிக்கொண்டிருந்தது. உள்ளே உறங்கும் குழந்தைகள் மட்டுமே மாறிக்கொண்டிருந்தன. தூளியும், தாலாட்டும் இவள் பண்பும் துளியும் மாறாமல் தொடர்ந்துகொண்டே இருந்தன.

மூத்த மகளைத் திருமணம் செய்துகொடுத்தாள். மாப்பிள்ளையின் அலுவல் காரணமாக அடிக்கடி இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தத்தால் பேரக்குழந்தைகளை இவளே வளர்க்க முன்வந்தாள். அந்தப் பிள்ளைகள் வளர்ந்ததும் அடுத்தப் பெண்ணின் பிள்ளைகள். அடுத்தது அடுத்தப் பெண்ணின் பிள்ளைகள். பிறந்தது முதல் பள்ளி செல்லும்வரை அவற்றை வளர்த்து, பணிக்குச் செல்லும் மகள்களிடம் ஒப்படைத்தாள்.

எட்டு வருடங்கள் காத்திருந்து, கடும் எதிர்ப்புகளை சந்தித்து, வேற்றுமதத்துக்கு மாறி, காதலில் வெற்றி கொண்ட மகளை மட்டும் இவளால் மன்னிக்க இயலவில்லை. சினமும் சீற்றமும் அவளைத் தள்ளியே வைத்திருந்தன. பெற்றமனத்தை பெருந்துயருக்கு ஆளாக்கிப் போனவளைப் பழித்தும் தூற்றியும் சஞ்சலத்திலாழ்ந்திருந்தாள். எத்தனையோ சமாதான முயற்சிகள் சக்தியிழந்திருந்த வேளையில் ஒருநாள் அவளைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

நடுவீட்டில் வழக்கம்போல் தூளி ஆடிக்கொண்டிருந்தது. தூளிக்கயிற்றைப் பிடித்தபடி எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவள், குழந்தை சிணுங்கி விழித்ததும் எடுத்து மடியில் இருத்தி, என்னிடம் அறிமுகப்படுத்தினாள்.

"யாருன்னு தெரியலையாம்மா? என் பேரன் அப்துல்லாதான்."

ஆச்சர்யத்துடன் நோக்க, அவளோ, தொடர்ந்து பேரனின் குறும்புகள் பற்றிப் பேசிக் களித்திருந்தாள். நரை விழுந்து, உடல் தளர்ந்துபோன நிலையிலும், தவழ்ந்தோடும் பாலகனின் பின்னால் திரிந்து பால்சோறு ஊட்டினாள்.

சட்டென்று என்னுள் நிழலாடியது ஒரு நினைவு. சிறுவயதில் நானும் தம்பியும் அம்மாச்சி வீட்டுக்குப் போகும்போதெல்லாம், காலவரையறையற்றுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருப்போம். அப்பா அம்மாவின் கட்டுப்பாடுகள் செல்லுபடியாகாத இடமல்லவா அது! விளையாட்டு மும்முரத்தில் சாப்பிடவர மறுக்கும் சமயங்களில் கிண்ணத்தில் சோறுபோட்டு எடுத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும் இடத்துக்கே வந்து சித்தி எங்களுக்கு ஊட்டிய நாட்களை நினைத்துக்கொண்டேன். இப்போது ஏன் அந்த நினைவு வரவேண்டும்? ஏனெனில்... என் அன்புக்குரிய சித்திதானே இவள்!

மதத்துவேஷத்தை வென்றுவிட்ட மழலையை மனத்துக்குள் மெச்சிக்கொண்டே, விடைபெற்று வெளிவந்தபோது ஒரு சந்தேகம் எழுந்தது.

வென்றது மழலையா? இவள் மனத்துக்குள் இன்னும் மாறாமலிருக்கும் தாய்மையுணர்வா?

ஜானகி
13-09-2011, 05:01 AM
நமிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் ரத்தினங்களை, தியாகச் செம்மல்களை, இனிமேலாவது நாம் புரிந்துகொண்டு, போற்றவேண்டும்...அவர்களின் அநுபவங்களை உள்வாங்கி, பாடம் கற்கவேண்டும்....நன்றி.

கலையரசி
13-09-2011, 05:29 AM
கீதா,

இத்தொடரின் மீதிப்பாகங்களை இன்று தான் படித்தேன். அம்மாச்சியும் மகிழம்பூக்களும் அருமையான கதை. இதனை மீண்டும் படித்தவுடன் ஒருவர் இதைத் தன் கதை என்று மன்றத்தில் போட்டு அதன் விளைவாக நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.
அம்மாச்சியின் நினைவாக சுடுகாட்டிலேயே இருந்து உயிரை விட்ட அந்த வாயில்லா ஜீவனின் பாசம் மனதை நெகிழ வைத்தது. சுருட்டால் சூடு வைத்த அவரது கணவரை நினைக்கும் போது அடிமனதில் கோபம் பொங்குகிறது. இன்னும் பல வீடுகளில் இன்றுங் கூட பெண்கள் வாய் பேசாமல் இது போன்ற கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு உழன்று கொண்டிருக்கிறார்கள்.
சித்தியின் தாய்மையைப் பற்றீய பதிவும் நன்றாயிருந்தது. மொத்தத்தில் உறவுகளின் நினைவுகள் படிக்கும் அனைவரையும் ஊஞ்சலாட்டித் தாலாட்டுகிறது.
அருமையான தொடர் கீதா! பாராட்டுக்கள்.

கீதம்
13-09-2011, 06:36 AM
நமிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் ரத்தினங்களை, தியாகச் செம்மல்களை, இனிமேலாவது நாம் புரிந்துகொண்டு, போற்றவேண்டும்...அவர்களின் அநுபவங்களை உள்வாங்கி, பாடம் கற்கவேண்டும்....நன்றி.

கருத்தாழமிக்கப் பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அம்மா.


கீதா,

இத்தொடரின் மீதிப்பாகங்களை இன்று தான் படித்தேன். அம்மாச்சியும் மகிழம்பூக்களும் அருமையான கதை. இதனை மீண்டும் படித்தவுடன் ஒருவர் இதைத் தன் கதை என்று மன்றத்தில் போட்டு அதன் விளைவாக நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.
அம்மாச்சியின் நினைவாக சுடுகாட்டிலேயே இருந்து உயிரை விட்ட அந்த வாயில்லா ஜீவனின் பாசம் மனதை நெகிழ வைத்தது. சுருட்டால் சூடு வைத்த அவரது கணவரை நினைக்கும் போது அடிமனதில் கோபம் பொங்குகிறது. இன்னும் பல வீடுகளில் இன்றுங் கூட பெண்கள் வாய் பேசாமல் இது போன்ற கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு உழன்று கொண்டிருக்கிறார்கள்.
சித்தியின் தாய்மையைப் பற்றீய பதிவும் நன்றாயிருந்தது. மொத்தத்தில் உறவுகளின் நினைவுகள் படிக்கும் அனைவரையும் ஊஞ்சலாட்டித் தாலாட்டுகிறது.
அருமையான தொடர் கீதா! பாராட்டுக்கள்.

விட்டுப்போயிருந்த பாகங்களைப் படித்ததோடு விமர்சனம் எழுதி ஊக்குவிப்பதற்கு நன்றி அக்கா. நீங்கள் சொன்னதுபோல் 'என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்' கதைப் பதிவு தொடர்பான நினைவுகள் வந்துபோகின்றன. :)