PDA

View Full Version : கட!உள்நாகரா
20-01-2011, 06:26 AM
வாதம் விவாதம் விட்டுக் கட!உள்
நேசம் விட்டேது கடவுள்?

தன்னை நம்பித் தன்கைப் பற்றத்
தன்னைக் காட்டுங் கடவுள்

அன்பை உணர அவகாச மின்றேல்
இல்லை நமக்குக் கடவுள்

பேரிலா அன்புக்கு பேர்பல சூட்டிப்
பேதமாய்ச் செய்வாயேன் கடவுள்

கட!உள் அன்புணர்! அதுவரை நினக்குக்
கடவுள் என்பது வெறுஞ்சொல்

வறுமையும் பசியும் உயிரை வாட்ட
வெறுஞ்சடங்கால் வசியுமோ கடவுள்

ஒருகல் மதிப்பாய் மறுகல் மிதிப்பாய்
ஒருமை சிறிதும் இல்லாய்

கல்லுக்குஞ் செம்புக்குங் காசுமேல் காசுமெய்
இல்லில்வாழ் ஏழைக்கில் சோறு

கேள்விகள் அற்று ஏகாரம் பெற்றால்
நானெனும் ஒன்றே கடவுள்

அஞ்ஞான நாகம் மெய்ஞ்ஞானம் பிதற்றும்
அன்பான நானோ மன்னித்தேன்

சுகந்தப்ரீதன்
20-01-2011, 10:27 AM
கட!உள் அன்புணர்! அதுவரை நினக்குக்
கடவுள் என்பது வெறுஞ்சொல்
ஒருசொல்லில் உறைந்திருக்கும் உம்மை
உணர்ந்து கொண்டால் அது இறைமை.!!

நன்றி நாகா அண்ணா..!!

ஜானகி
20-01-2011, 04:09 PM
உள்ளே கிடப்பதைத் தெரிந்துகொள்ள முடியாததால்தானே எல்லாக் குழப்பமும், பிரச்சனையும்... அந்த வித்தை மட்டும் தெரிந்துவிட்டால்..நானும் கடவுள் ....தான் !

சுடர்விழி
21-01-2011, 12:55 AM
”கட!உள் அன்புணர்! அதுவரை நினக்குக்
கடவுள் என்பது வெறுஞ்சொல்”--அருமையான வரிகள் பாராட்டுக்கள் !

நாகரா
21-01-2011, 05:09 AM
பின்னூட்டமிட்ட அன்பர்கள் சுகந்தவாசன், ஜானகி, சுடர்விழி உங்களுக்கு என் நன்றிகள்

நாகரா
21-01-2011, 05:11 AM
கடக்காமல் உள்ளே இல்லை கடவுள்
கட!உள் கடந்தால் உண்டு!

பொய்ம்மடம் கற்கோயில் வீண்சடங்கு எதற்கு
மெய்க்கடத் துள்மார்புள் கடவுள்

குருவென்னும் உருபின்னே உருண்டோடுங் கூட்டம்
குருவென்பார் இருதயத்தே ஒளிந்தார்

காலில் விழத்தான் சொல்லுமோ தலைகை
காலில் அருவாங் கடவுள்
(இரண்டாவது காலில் = கால் இல் = கால் இல்லாத)

உருவத்தில் உள்ளான் அருவத்தில் அடங்கான்
கருமத்தில் உழல்வான் தான்

கல்லில் வடிக்க லாகாக் கடவுள்
சொல்லி லும்பிடி படான்

ஆத்திக ஆடம்பரம் நாத்திக வீண்வாதம்
தாண்டிடு தேகம்நடு கட!உள்

சுருண்ட நாகம் விழித்து மேலேற
தெருண்ட நல்ல பாம்பு
(தெருண்ட = தெளிவுற்ற)

முதுகுத் தண்டும் மூளையும் போதிமரம்
இ(ரு)தயம் ஞானப் பழம்

நாகரா
22-01-2011, 03:41 AM
பழம்பெருங் கடவுளே நவமான புதியவன்
பழமென இனிப்பான் கட!உள்

கட!உள் மந்திர ஆணை ஏற்றே
கடவுளும் கடக்கிறான் உள்ளுள்

இதுவல அதுவல கடவுள் உதுபல
இதுக்களின் அதுக்களின் ஆதி
(உது = தமிழுக்கே உரித்தான மெய்ஞ்ஞானச் சுட்டு)

இதுவென அதுவென இறுகும் ஆணவம்
உதுவெனும் நடுநிலை ஆண்டவம்

நாகக் கண்ணாடியால் நானது பார்த்தால்
நாக வண்ணத்ததாய்த் தெரியும்
(நாகம் என்ற ஒரு வித வண்ண மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, நான் என்பதைப் பார்த்தால், நாக வண்ணத்ததாகவே "நான்" உனக்குப் புலப்படும்)

நாகக் கண்ணாடி கழற்றிப் பார்த்தால்
நானார் தூய படிகம்

அஞ்ஞானத் திருக்கும் நாகம் பேசும்
மெய்ஞ்ஞானம் எதற்கு நினக்கு

நெஞ்சுள் ளிருக்கும் நாதன் பேசும்
மெய்ஞ்ஞா னங்கேள்! கட!உள்

இங்குளான் அங்குளான் என்றே ஏய்ப்பார்
உங்குளான் நெஞ்சுளே கடவுள்(கட!உள்)

கடந்தால் உள்ளே நானார் யாமென
விரியும் ஒப்பில் அனகம்
(ஒப்பில் அனகம் = ஒப்பிட முடியாத அகம் புறம் என்று பிரித்திட முடியா அனகம் என்னும் அத்துவிதம், அத்வைதம்)

govindh
22-01-2011, 10:05 AM
முதுகுத் தண்டும் மூளையும் போதிமரம்
இ(ரு)தயம் ஞானப் பழம்

இதுவல அதுவல கடவுள் உதுபல
இதுக்களின் அதுக்களின் ஆதி
(உது = தமிழுக்கே உரித்தான மெய்ஞ்ஞானச் சுட்டு)

அற்புத வரிகள்....
அருமையான சொல் விளக்கங்கள்...
மிக்க நன்றி ஐயா.

நாகரா
23-01-2011, 04:46 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றிகள் கோவிந்த்

நாகரா
23-01-2011, 04:46 AM
சடங்குத் தடபுடல் தவிர்த்து உள்ளே
கடக்கும் அகத்தவம் செய்

செய்யது தவத்தால் அகமது திறக்கப்
பொன்னுரு முகமது நூர்
(நூர் = ஒளி என்று பொருள் படும் அரபு மொழிச் சொல்)

நூரதைக் காணாய் வேரதைச் சேராய்
தூலமே காண்பாய் நீ

தூலமே காணும் ஊனப் புலனால்
ஞானமோ காண்பாய் நீ

தூலஞ் சூக்குமந் தாண்டிய அதிசூக்கும
நூரே ஞால வேராம்

ஞால வேரைக் காட்டும் ஞானம்
நேசா தார மோனம்

நேசா தார மோனம் புரியா
நாகப் பிதற்றல் அஞ்ஞானம்

நேசா தாரஞ் சேரு நீயே
பேசா தாகுஞ் ஞானம்
(நேசாதாரம் = இருதயம், அனாகத சக்கரத்து மேலுள்ள அமுத கலசமாம் தைமஸ் சக்கரம்)