PDA

View Full Version : புத்தகங்கள் ..ஞாபகங்கள்..



கௌதமன்
16-01-2011, 05:41 PM
புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? என்னால் நிச்சயம் முடியாது.

என்னுடைய சிறுவயதிலேயே புத்தகங்களால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டேன். ஆரம்பக் காலங்களில் அதாவது ஏழு அல்லது எட்டு வயதில் படக்கதைகள் என்னை அதிகம் ஈர்த்தன. லயன் மற்றும் முத்து காமிக்ஸ் வெளியிட்ட இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர்(ஸ்பைடர் மேன் அல்ல), லாரன்ஸ் & டேவிட், இயந்திர மனிதன் ஆர்ச்சி போன்ற எண்ணற்ற கதைகள், அமர் சித்திர கதைகளில் அனுமன், அபிமன்யு கதைகள், ராணி காமிக்ஸில் ஜேம்ஸ் பாண்டின் அழகியைத் தேடி தொடங்கி பல்வேறு கதைகள், தினமலரின் வெள்ளிக்கிழமை மலரான சிறுவர் மலரில் வெளிவந்த பிள்ளையார், அனுமன், நரகாசுரன் போன்ற கதைகள் என்னுடைய படிக்கும் ஆர்வத்தையும் புத்தகங்களின் தேடுதலையும் தூண்டின.

இதே காலகட்டத்தில் வெளிவந்த மாத / வார புத்தகங்களான பூந்தளிரும், அம்புலிமாமாவும் படக்கதைகளைத் தாண்டிய மொழியின் மீதான என் வாசிப்பை அத்கப்படுத்தியது.

என்னுடைய தாத்தா ஏற்படுத்தித் தந்த, நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து படிக்கும் பழக்கத்தில், ஏழாவது அல்லது எட்டாவது படிக்கும் காலகட்டத்தில் எழுத்தாளர் கல்கி எனக்கு அறிமுகமானார். பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் அந்த வயதிலேயே ஒரே மூச்சில் படிக்கும் அளவுக்கு கல்கி எனக்கு விறுவிறுப்பு நடையை அறிமுகப்படுத்தினார். கல்கியும், தேவனும் நிரந்தரமாக மனதில் இடத்தைப் பிடித்தனர்.

என்னுடைய சித்தி வார பத்திரிக்கைகளான குமுதம், கல்கி, ஆனந்த விகடனில் வரும் தொடர் கதைகளை சேகரித்து தைத்து புத்தகமாக்கி ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு புத்தகங்களை வைத்திருந்தார். கல்கியின் அரும்பு அம்புகள், தியாக பூமி போன்ற கதைகளையும் அவற்றிருந்து படிக்க முடிந்தது. அப்படியே லக்*ஷ்மி எழுதிய பல கதைகள் படித்திருக்கிறேன்.

பதின்ம வயதுகளில் ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், சுபா, தேவிபாலா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய பல புதினங்களைப் படித்திருக்கிறேன். பாக்கெட் நாவல், கிரைம் நாவல், மாலைமதி போன்ற பத்திரிக்கைகள் எப்போதும் கைகளில் இருந்த காலங்கள் அவை.அவற்றுள் சில கதைகள் சற்று மறைத்து வைத்து படிக்க வேண்டிய கதைகளாகவும் இருந்தன.

பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றோர் கதாபாத்திர படைப்பு மூலமாக மனிதர்களின் வாழ்க்கையை பற்றிய அறிவும், பிரச்சனைகளை சந்திக்கின்ற உத்வேகத்தையும் அளித்தார்கள்.

சுஜாதா என்க்கு சிறிது தாமதமாகத்தான் அறிமுகமானார். பதின்ம இறுதி வயதுகளில் அவரது கொலையுதிர் காலம் படிக்க நேர்ந்தது. என்னுடைய மொத்த வாசிப்பையே மாற்றியவர் என்றால் அவர் சுஜாதாதான். கொலையுதிர் காலத்துக்குப் பிறகு சுஜாதாவின் புதினங்களை தேடித்தேடி படிக்கும் அளவுக்கு சுஜாதாவின் மீது காதல் வந்தது. அவர் பத்திரிக்கையில் தொடாதத் துறை இல்லை. சிறுகதை, தொடர் கதை, புதினங்கள், கவிதைகள், கேள்வி பதில், அறிவியல் கட்டுரைகள், கற்றதும் பெற்றதும் போன்ற அவர் வாழ்க்கையோடு தொடர்புடைய அனுபவ தொடர்கள் போன்ற எல்லாவற்றிலும் அவரால் சுவாரஸ்யத்தைப் புகுத்த முடிந்தது. காந்தளூர் வசந்தகுமாரன் முழுதுமாக வந்திருந்தால் தமிழின் முதன்மையான சரித்திரக் கதையாக இருந்திருக்கும்.

மொழியறிவு என்று பார்த்தால் எனது ஞாபகத்தில் கலைஞர் முதலில் இருக்கிறார் [நண்பர்களே! தயவு செய்து இதில் அரசியல் அடிதடி நடத்தி விடாதீர்கள்]. சொற்களின் அடுக்கினாலும், தமிழின் அழகாலும் படிப்பவர் மனதில் பரவசத்தை ஊட்டியவர். அவர் வசனம் எழுதிய மனோகரா போன்ற படங்களும், நடிகர் திலகம் நடித்த பல படங்களில் இடம்பெற்ற ஓரங்க நாடங்களும் தமிழ் மீது தீராத ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

கண்ணதாசன், நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து, இன்குலாப், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் போன்றோர் தொடங்கி தபூ சங்கர் வரை எழுதிய கவிதை நூல்கள் என் தமிழ் ஆர்வத்தையும், கவிதை ரசிப்பையும் அகலப்படுத்தியது.

நான் படிக்க விரும்பும், இன்னும் படிக்க ஆரம்பிக்காத தமிழின் இணையற்ற எழுத்தாளர்களான ஜெயகாந்தன், புதுமைபித்தன், அகிலன், நா.பா. போன்றவர்கள் எழுதிய பல புத்தகங்கள் வரிசையில் நிற்கிறது.

தற்காலத்தில் நவீனங்கள் படைக்கும் ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் போன்ற எழுத்தாளர்கள் தமிழ் வாசகர்களை புதிய தளத்துக்கு இட்டுச் செல்கிறார்கள்.

மன்றத்தோழர்களும் தங்கள் புத்தக, தமிழ் வாசிப்பு அறிமுகத்தை இத்திரியில் பதியுமாறு விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

கௌதமன்
17-01-2011, 01:07 PM
சமீப காலங்களில் நான் அதிகம் விரும்பிப்படிப்பது ஆராய்ச்சிக் கட்டுரை நூல்கள். குறிப்பாக அறிஞர் மா.சோ.விக்டர் எழுதிய உலகாளவிய தமிழ் என்ற புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படிக்க நேர்ந்தது. அதன் சாராம்சம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்த நாள் மீண்டும் கண்காட்சிக்கு சென்று அவரின் மற்ற படைப்புகளை வாங்கிச் சென்றேன். உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள், குமரிக்கண்டம், தொல்காப்பியச் சிந்தனைகள், வானியலும் தமிழரும், தமிழரின் எண்ணியல், தமிழும் சமற்கிருதமும் ஒன்று & இரண்டு, க போன்ற நூல்களை (நல்லேர் பதிப்பகம்)வாங்கி நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறேன்.அந்தப் புத்தகங்களில் தரப்பட்டுள்ளக் குறிப்புகளிலிருந்து பாவாணரைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது.

பாவாணர் மொழிஞாயிறு என்ற பட்டத்துக்கேற்றவாறு பன்மொழிப் புலமையும், ஆழ்ந்த மொழியறிவும் பெற்றிருந்தார். அவரது படைப்புகள் தமிழ் இணைய பல்கலைக்கழ்கத்தில் இலவசமாக தரவிரக்கம் செய்யும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழன்பர்களால் நடத்த்ப்பெறும் நூலகம் என்ற இணையத்தளத்திலும் தேவநேயம் என்ற தலைப்பின் கீழ் 15 பகுதிகளாக அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது. அவரது 25க்கும் மேற்பட்ட படைப்புகளை இணையத்திலிருந்தே பெற்றேன். பாவாணரைப் ப்டிக்கத் தொடங்கியபிறகு தமிழைப் பற்றிய புதிய பார்வையைப் பெற்றேன். குமரிக்கண்டத்தைப் பற்றிய பாவாணரின் நம்பிக்கையும், முதற்றாய்மொழி பற்றிய அவரது ஆழ்ந்த ஆராய்ச்சியும், வேர்ச்சொற்கள் மூலமாக அதை மெய்ப்பிக்க முயலும் அவரது சான்றுகளும் உள்ளபடியே அவரது அயராத உழைப்பைக் காட்டுகிறது.

இன்றையக் காலகட்டத்தில் குமரிக்கண்டத்துக்கு மாற்றுக்கருத்தாக ஜெயகரன் எழுதிய புத்தகத்தின் சாராம்சமும், அதற்கு மாற்றாக உள்ளப் பதிவுகளும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அதையும் அவ்வப்போது படிக்கிறேன்.

சிந்துவெளி எழுத்துப்பற்றிய ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், அதற்கு மாற்றாக இரா.மதிவாணன் எழுதிய கட்டுரைகளும் படிக்கத் தூண்டுபவை.

CEN Mark
17-01-2011, 03:18 PM
[QUOTE=கௌதமன்;509634]

அப்பா! இன்னும் இருக்கிறதா என்ன? படிப்படியாக உங்கள் வாசிப்புத்திறன் எதைநோக்கி செலுத்தப்பட்டிருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறதா? நீங்கள் தற்போது அடுத்தகட்டத்திற்கு செல்கிறீர்கள். உங்களின் ஆய்வுக்கட்டுரைக்காக காத்திருக்கிறேன்.

CEN Mark
17-01-2011, 03:26 PM
[QUOTE=கௌதமன்;509569]புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? என்னால் நிச்சயம் முடியாது.








மொழியறிவு என்று பார்த்தால் எனது ஞாபகத்தில் கலைஞர் முதலில் இருக்கிறார். சொற்களின் அடுக்கினாலும், தமிழின் அழகாலும் படிப்பவர் மனதில் பரவசத்தை ஊட்டியவர். அவர் வசனம் எழுதிய மனோகரா போன்ற படங்களும், நடிகர் திலகம் நடித்த பல படங்களில் இடம்பெற்ற ஓரங்க நாடங்களும் தமிழ் மீது தீராத ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.



பத்தவச்சாச்சா? திரி இன்னும் கொஞ்சநாளுக்கு எரியுமே?

CEN Mark
17-01-2011, 03:33 PM
[QUOTE=கௌதமன்;509569]புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? என்னால் நிச்சயம் முடியாது.


பதின்ம வயதுகளில் ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், சுபா, தேவிபாலா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய பல புதினங்களைப் படித்திருக்கிறேன். பாக்கெட் நாவல், கிரைம் நாவல், மாலைமதி போன்ற பத்திரிக்கைகள் எப்போதும் கைகளில் இருந்த காலங்கள் அவை.அவற்றுள் சில கதைகள் சற்று மறைத்து வைத்து படிக்க வேண்டிய கதைகளாகவும் இருந்தன.

அவைகள் புதினங்களல்ல.

கௌதமன்
17-01-2011, 03:35 PM
அவைகள் புதினங்களல்ல.

அவர்கள் எழுதியது நாவல்கள் என்றால் அதன் தமிழ்ப்பதம் புதினம் என்பது தவறா?

நாஞ்சில் த.க.ஜெய்
17-01-2011, 06:46 PM
மிகவும் பயனுள்ள பதிவு ...புதிதாய் தொடர்பவர்கள் இதுவரை காணாத புத்தக பெயர்களை காண்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்வர் .இதில் புதினங்கள் தவிர்த்து அறிவியல்பூர்வமான ,இயற்கை மற்றும் வாழ்வியல் தொடர்பான புத்தக அனுபவங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் ...நாவல் என்பதன் தமிழ் பதம் புதினம் தான் அதில் சந்தேகம் வேண்டாம் நண்பரே !

leomohan
18-01-2011, 12:41 PM
நல்ல திரி. விரைவில் நானும் பங்கு கொள்கிறேன்.

கௌதமன்
18-01-2011, 01:17 PM
மிகவும் பயனுள்ள பதிவு ...புதிதாய் தொடர்பவர்கள் இதுவரை காணாத புத்தக பெயர்களை காண்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்வர் .இதில் புதினங்கள் தவிர்த்து அறிவியல்பூர்வமான, இயற்கை மற்றும் வாழ்வியல் தொடர்பான புத்தக அனுபவங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் ..

நன்றி நண்பரே!

நான் படித்த புத்தகங்களில் ஞாபகம் வருவனவற்றைத் தொகுத்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் தலைப்புகளிலும் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். அதையும் வரும் பதிவுகளில் தொகுக்கிறேன்.

வருத்தம் தரும் செய்தி: எனது குழந்தைகள் படிக்க நான் சிறு வயதில் படித்து மகிழ்ந்த லயன் / முத்து / ராணி காமிக்ஸ்கள் இப்போது வருவது இல்லை. வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

Kalai_21
19-01-2011, 12:07 PM
பயனுள்ள பதிவு ... வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-01-2011, 01:16 PM
என் கருத்திற்கு மதிப்பளித்து அறிவியல் பூர்வமான தவல்களை தொகுக்க முன்வந்ததற்கு நன்றிகள் நண்பரே! நான் தங்களிடம் எதிபார்த்ததும் அதுதான்.இதுபோல் மற்றவர்கள் அவரவர் துறையில் நீண்டகாலமாக இருப்பவர்கள் அவ்வாறு பதிவுகள் இட்டால் என்போன்றோர்கள் மிகவும் பயன்பெறுவர் ...இன்றைய விஞ்ஞான உலகில் வழக்கொழிந்து விட்ட பழைய கதை புத்தகங்கள் மீதான ஆர்வம் வரவேற்க்கதக்கது .நானும் உங்களை போன்ற ஆர்வலன் தான் அதுபோன்று இன்று வர வாய்ப்பில்லை என்றே நினைகிறேன் .இந்த பழைய புத்தகங்களில் ஒரு சில தொகுப்பினை scribd (http://www.scribd.com)என்ற தளத்தில் கண்டேன் ..இனிமேல் அது போல் வரவேண்டுமெனில் கணிணியில் தான் வரவேண்டும் அதற்க்கு நாம் தான் முயற்சிசெய்ய வேண்டும் அசை படங்களாக ...

கௌதமன்
19-01-2011, 01:24 PM
அறிவியலைப் பொறுத்தவரை நல்ல புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன. தமிழில் சுஜாதா எழுதிய சில புத்தகங்கள் சாமான்யர்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் எளிதாக உள்ளன. தமிழில் அறிவியல் கற்பனைக் கதைகள் எனப்பார்த்தாலும் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற சுஜாதாவின் புத்தகங்களே ஞாபகத்துக்கு வருகின்றன.


A brief history of time என்ற ஸ்டீஃபன் ஹாகின்ஸின் புத்தகம் சிறப்பான ஒன்றாகும். இணையத்தில் நண்பர் ஒருவரின் தளத்தில் A brief history of time புத்தகத்தின் தமிழாக்கம் (fuelcellintamil.blogspot) ஒலிப்பதிவாக பதிக்கப்பட்டுள்ளது. படிக்கவேண்டிய சிரமம் கூட இன்றி ஒலியாக்கத்தையே பார்வையாளர்கள் கேட்கலாம். ஸ்டீஃபன் ஹாகின்ஸின் சமீபத்திய புத்தகமான The Grand Design என்ற புத்தகம் சிறப்பான வரவேற்பை விமர்சகர்களிடையே பெற்றுள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. (டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஸ்டீஃபன் ஹாகின்ஸின் பிரபஞ்சத் தோற்றம் பற்றிய நிகழ்ச்சியில் அதன் விளக்கங்களை காணொளியாகக் காணலாம்)


நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ரிச்சர்டு ஃபெயின்மேனின் இயற்பியல் தொடர்பான விரிவுரைகள் (Feynman’s lectures on physics) சிறப்பான புத்தகங்களாகும் (மூன்று பாகங்கள்). தமிழ்ப்பதிவாக இல்லை. இவைத் தவிர அடிப்படை இயற்பியல் சம்பந்தமான ஏராளமான ஆங்கிலப் புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கும் (டோரண்ட் கோப்பாக தரவிரக்கம் செய்யலாம்). MIT Open Courseware – ல் காணொளிப் பதிவாக உள்ள இயற்பியல் சம்பந்தமானப் பதிவுகள் (கிட்டத்தட்ட 100 மணி நேரப்பதிவுகள்) மூன்று தலைப்புகளில் உள்ளன. என்னைப் பொறுத்த வரையில் உலகின் சிறந்தப் பதிவுகளில் ஒன்றாகும். ஒரு அறிவியல் வகுப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அது அமையும். NPTEL –ல் IIT-Madras –ஐ சேர்ந்த விரிவுரையாளரின் இயற்பியல் தொடர்பான வகுப்புகளும் சிறப்பானதாகும். கணக்கு, இயற்பியல், வேதியல், உயிரியல் சம்பந்தமான பாடங்களை இப்போது காணொளி காட்சிகளாக இணையம் மூலமாகவே படிக்கலாம். அதுவும் உலகின் தலைசிறந்த பல்கலைகழக ஆசிரியர்களால் நடத்தப்பெறும் வகுப்புகள் பதிவுகளாக இணையத்தில் ஏராளம் உள்ளன். நேரடியாகவோ அல்லது தரவிரக்கம் செய்தோ அதைக் காணமுடியும். அதுவும் இலவசமாக. (தேவைப்படுவோர் விரும்பினால், பின்னூட்டத்திலோ அல்லது தனிமடலிலோ தெரியப்படுத்தினால் இணைய முகவரிகளை இணைக்கிறேன். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.)


தமிழில் அறிவியல் புத்தகங்கள் எனப்பார்த்தால் மிகக் குறைவாகவே உள்ளன். ருஷிய பதிப்பகமான மிர் பதிப்பகத்தின் புத்தகங்களின் தமிழாக்கம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸினால் வெளியிடப்பட்டன. அதில் சிறப்பான சில புத்தகங்கள் சிறு வயதில் படித்திருக்கிறேன். இப்போது கிடைக்கிறதாவெனத் தெரியவில்லை. பௌதிக கணக்குகள் என்ற தலைப்பில் வெளியான புத்தகம் அந்த சமயத்தில் அதிகம் கவர்ந்த ஒன்று. நியூட்டானியன் ஃபிஸிக்ஸ் எனப்படும் இயற்பியலின் ஒரு பிரிவை ஆசிரியர், மாணாக்கரின் உரையாடல் போல கணக்குகள், வரைபடங்கள் மூலம் அப்புத்தகம் சிறப்பாக விவரித்திருக்கும்.



சமீபத்தில் நான் படித்த தமிழில் அறிவியல் புத்தகங்கள் எனப்பார்த்தால் வான சாஸ்திரம், 2060 எப்படி இருக்கும், உடல் இயந்திரம், கண்டு பிடித்தது எப்படி பாகம் 1 & 2, உயிரின் ரகசியம், கோள்கள் எட்டு, பூமிப் பந்தின் புதிர்கள், வானியல் விஞ்ஞானிகள், கற்பனைக்கும் அப்பால் போன்ற சில புத்தகங்களே ஞாபகத்தில் வருகின்றன.



வரலாற்று நூல்கள் எனப்பார்த்தால் தமிழில் உண்மை கதாபாத்திரங்களைக் கொண்ட புனை கதைகள் தான் அதிகம் வெளிவந்துள்ளன (எடுத்துக்காட்டாக பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, கடல்புறா, யவன ராணி, ரோமாபுரி பாண்டியன், சேரமான் காதலி போன்றவை). உண்மைக்கு நெருக்கமாக எழுதப்பட்ட நூல்களில் மதன் எழுதிய விகடன் பதிப்பகம் வெளியிட்ட மொகலாயர் படையெடுப்பும், ஆட்சியமைப்பும் பற்றிய வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகம் ஒரு நல்ல புத்தகம்.



நம்மைச் சுற்றி நடக்கும் சாதாரண மக்களின் வாழ்வியல் தொடர்பான சம்பவங்கள், நம்மைப் போன்று சாதாரண மக்களுக்கு எந்தவித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் எழுத்தாளர்களின் பார்வை அப்படிப்பட்டதன்று. எடுத்துக்காட்டாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து, தேசாந்திரி போன்ற புத்தகங்களில் சகமனிதர்களின் வாழ்க்கையையும், சம்பவங்களையும் அழகாக தொகுத்து வாசகர்களுக்கும் அவர்களின் வலியும், வாழ்க்கையும் உணரச் செய்கிறார். இவர் எழுதிய உலக சினிமாக்கள் பற்றிய புத்தகமும் கதாவிலாசம், உபபாண்டவம் புத்தகங்களும் சிறப்புக்குரியது.


அரசுடைமையாக்கப்பட்ட புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இணையத்தில் இலவசமாக படிக்கக் கிடைக்கின்றன. மன்றத்தோழர்கள் பெரும்பான்மையோர் அதை பயன்படுத்துகின்றனர் என்றே நினைக்கிறேன். காகித புத்தகத்தில் படிப்பதில் உள்ள சௌகரியம் இணையத்தில் கிடைக்கும் மின்புத்தகத்தை படிப்பதில் இல்லை. ஆனாலும் தமிழைப் படிப்பதற்காக எதையும் பொறுக்கலாம்.

ஆளுங்க
19-01-2011, 04:43 PM
அறிவியல் தமிழ் புத்தகங்கள் மிக குறைவே!!
நாம் ஏன் முன்னோடியாக சில எழுத கூடாது?

கௌதமன்
19-01-2011, 05:05 PM
அறிவியல் தமிழ் புத்தகங்கள் மிக குறைவே!!
நாம் ஏன் முன்னோடியாக சில எழுத கூடாது?

கைகளை நீட்டுங்கள் பற்றிக்கொள்கிறேன். நம் அலைவரிசை ஒத்துப் போகிறது. தமிழில் கலைச் சொற்கள் தான் கைகொடுக்க மறுக்கிறது. எடுத்துக்காட்டாக மன்றத்தில் ஒருத் திரியில் ஆங்கில வார்த்தைகளுக்கான் தமிழ் மொழியாக்கத்துக்கு உதவி கேட்டிருந்தேன். இன்னும் கிட்டவில்லை.

mechanics
dynamics
kinematics
kinetics

இயந்திரவியல் படித்ததனால் இதன் வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழும், ஆங்கிலமும் அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் இதை எப்படி தமிழாக்கம் செய்வார்கள். நான் முயன்றேன் முழு திருப்தி வரவில்லை. நீங்கள் முயற்சி செய்யுங்களேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
26-01-2011, 05:34 PM
mechanics = இயந்திரவியல்
dynamics =விசை இயக்கவியல்
kinematics = இயக்கவியல் ,தனிநிலை இயக்கம் சார்ந்த
kinetics = இயக்கதாக்கியல் ,இயக்க விளைவியல்

என்ற வார்த்தைகள் சரியாக இருக்கும் என் நினைக்கிறேன் .சரிதானா கௌதம் அவர்களே

கௌதமன்
02-02-2011, 04:08 PM
ஓரளவு சரிதான். இருந்தாலும் ஆங்கிலத்தில் (மூலம் ஆங்கிலம் அல்ல) உள்ளதைப் போன்று சுருக்கமான சொற்களாக வேறு தமிழ் சொற்கள் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

கௌதமன்
02-02-2011, 04:13 PM
mechanics = இயந்திரவியல்
dynamics =விசை இயக்கவியல்
kinematics = இயக்கவியல் ,தனிநிலை இயக்கம் சார்ந்த
kinetics = இயக்கதாக்கியல் ,இயக்க விளைவியல்

என்ற வார்த்தைகள் சரியாக இருக்கும் என் நினைக்கிறேன் .சரிதானா கௌதம் அவர்களே

அனைத்துக்கும் பொதுவாக இயக்கவியல் என்றேதான் அகராதிகள் சொல்லுகின்றன. ஆனாலும் அவற்றுக்கிடையே குறிப்பிட்ட பொருள் வேறுபாடு உண்டே.

கண்ணன்
02-02-2011, 08:41 PM
இந்தத் திரி பல நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. நான் படிக்க ஆரம்பித்ததுபோது எனக்கு 5-6 வயது இருக்கலாம். எங்கள் வீட்டிலிருந்து ஒரு பத்தடி வைத்தால் எங்கள் கிராமத்தின் சிறிய நூலகம். அப்பொழுது அம்புலிமாமாதான் எனக்கு பிடித்த புத்தகம். விக்கிரமாதித்தன்களும் பல அரச/அரசகுமாரிகள் மனதை சுண்டி இழுத்தனர். அப்பொழுது அம்புலிமாமா புதன்கிழமைகளில் நூலகம் வரும். புதன் மாலை, பள்ளிவிட்டு வந்ததும் நூலகம்தான் கதி. அம்புலியிலிருந்த்து விகடனும், கல்கண்டும் வாசிக்கத் தொடங்கினேன். விகடன் என் சகோதரிகளுக்காகவும், கல்கண்டு என் தந்தைக்காகவும் வீட்டில் தருவிக்கப்பட்டன. பின்பு, பக்கத்து வீட்டிலிருந்து ராணியும், ராணி முத்துவும் படிக்கத் தொடங்கினேன். இதற்கிடையே, படப்புத்தக மோகம் என்னை ஆட்டிப்பிடித்தது. சிறிது, சிறிதாக சேமித்து இருப்புக்கை மாயாவி புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். பின்பு நண்பர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு, படப்புத்தக “நூலகம்” ஆரம்பித்தோம். ஒரு இரண்டு வருடங்களாவது படப்புத்தக மோகம் நீடித்தது.

பின்பு, புதினங்கள் படிக்க ஆரம்பித்தேன். பாலகுமாரன், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் வாரப்பத்திரிகையில் வரும் எல்லா தொடர்கதைகளையும் ஒன்று விடாமல் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய சகோதரிகளின் நாட்டம் காரணமாக நானும் லக்*ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி மற்றும் அ.ரமணண் படித்தேன்.

உயர்நிலை சென்றவுடன், புதிய நூலகர் தயவு (என்ன நீ, இப்படி ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத சாமாச்சாரங்களைப் படித்துக்கொண்டிருக்கிறாய். இவைகளைப் படி) காரணமாக மணிக்கொடி எழுத்தாளர்கள், ஜெயகாந்தன், தி.ஜா படிக்க ஆரம்பித்தேன். தி.ஜா எழுத்துக்கு அடிமையாகிவிட்டேன். ஜெயகாந்தனின் பொதுவுடமை எனக்கு அப்போது சரியாக விளங்கவில்லை. கல்லூரி நாட்களில் அகிலன், கல்கி, தி.ஜா, க.நா.சு (பொய்த்தேவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று), அசோகமித்திரன், இ.பா.சாரதி, தகழியின் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள், கி.ரா, இப்படி சென்றது. நண்பிகளை இம்ப்ரஸ் செய்ய சிட்னி ஷெல்டனும், ஆர்ச்சரும் தூக்கிக்கொண்டு அலைந்தேன்.

இப்பொழுதும், படிக்காத நாட்கள் மிகக்குறைவு. படுக்கைக்கு சென்று தூங்கு முன் ஒரு சில பக்கங்களாவது படிக்கவேண்டிய நிலை. சமீபத்தில் படித்தது, தோப்பில் முகம்மது மீரான், சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை, Guns, Germs, Steel, Number the Language of Science.

ஞாபங்களை தூண்டியதற்கு மிக்க நன்றி கௌதமன்.

-கண்ணன்

கௌதமன்
03-02-2011, 04:16 PM
நன்றி கண்ணன்!

தீவிரமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களின் இளமைக் கால வாசிப்புகள் பெரும்பாலும் இரும்புக்கை மாயாவியில் தொடங்கி கிட்டத்தட்ட இதே வரிசையில் தான் அமைகிறது என்று எண்ணுகிறேன்.

என் வருத்தமெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு வாசிக்கும் சுகம் அறியப்படாமலேயேப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

குணமதி
04-02-2011, 12:55 AM
அருமை.

எல்லாம் சரி, மு.வ. வின் நூல்களை, புதினங்களைப் படித்ததில்லையா? பார்த்ததில்லையா?

தமிழில் அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொற்களை அறிய, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான 'அருங்கலைச்சொல் அகரமுதலி' (Dictionary of Technical terms) பெரிதும் உதவும்.

கண்ணன்
04-02-2011, 04:03 PM
அருமை.

எல்லாம் சரி, மு.வ. வின் நூல்களை, புதினங்களைப் படித்ததில்லையா? பார்த்ததில்லையா?

தமிழில் அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொற்களை அறிய, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான 'அருங்கலைச்சொல் அகரமுதலி' (Dictionary of Technical terms) பெரிதும் உதவும்.

மு.வ.வின் ஒரு புதினம் (பெயர் ஞாபகமில்லை), என்னுடைய பள்ளித் தமிழ் பாடமாக இருந்தது (nondetail?). என்னமோ தெரியவில்லை, அவருடைய எழுத்துக்களில் அதிக நாட்டம் செலுத்தவில்லை.

மற்றுமொரு புத்தகம். அறிவியல் சம்பத்தப்பட்ட மாத பத்திரிகை. நூலகத்தில் அதிகம் படித்ததுண்டு...ஆனால் ஞாபகமில்லை.

-கண்ணன்