PDA

View Full Version : அறிஞர்கள் காட்டும் தமிழ்கௌதமன்
14-01-2011, 03:46 PM
நன்றி: திருத்தமிழ் வலைத்தளம்

1. டாக்டர் ஜி.யு.போப் (DR.G.U.POPE) அவர்கள் தமிழைப் படித்து, தமிழிலே உள்ள கருத்துகளை ஆய்ந்தறிந்து, இந்த மொழி உயர்ந்த மொழி; ‏இது ஒரு செம்மொழி எ‎ன்றெல்லாம் எடுத்துக்கூறினார். ‏ஜி.யு.போப் அவர்கள் 50 ஆண்டுகாலம் தமிழுக்குத் தொண்டு செய்தவர். அவர் மறையக்கூடிய இறுதி நேரத்தில் ‏தம்முடைய கல்லறையில் "இங்கு ஒரு தமிழ் மாணவ‎ன் உறங்குகிறா‎ன்" என்று எழுதச் சொ‎ன்னவர். கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழ் நாட்டுக்கு வந்தவர் தமிழ்த்திருவாசகத்தைப் படித்துவிட்டு "எலும்பை உருக்கும் பாட்டு திருவாசகம்" எ‎ன்று உருக்கத்தோடு கூறியுள்ளார்.

2. பெர்சிவல் பாதிரியார் (REV.PERCIVAL) அவர்கள் தமிழைக் கற்றுணர்ந்தபி‎ன் "ஆற்றல்மிக்கதாகவும் சொல்லவ‎ந்த பல கருத்துகளைச் சில சொற்களால் புலப்படுத்தும் த‎ன்மையும் தமிழ்போல் வேறு எம்மொழியிலும் இல்லை" எ‎ன்று உறுதிபடக் கூறியுள்ளார்.

3. டாக்டர் ரோபர்டு கால்டுவெல் (DR.ROBERT CALDWELL) அவர்கள் தமிழை ஆய்ந்துபார்த்தும் பிறமொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது; பிறமொழி துணையி‎ன்றி இயங்கவல்லது; இந்திய மொழிகளில் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்தது எ‎ன்று கூறியுள்ளார்.

4. கமில் சுவெலபில் (KAMIL ZVELEBIL) எ‎ன்பவர் செக்நாட்டுத் தமிழ் அறிஞர். தமிழில் உள்ள ஏடுகளை எல்லாம் ஆய்ந்துபார்த்தும் சிலப்பதிகாரத்தை ஆய்ந்துபார்த்தும் தமிழி‎ன் உண்மையை; மேன்மையை உலகறியச் செய்தவர்.

5. ஈராசுப் பாதிரியார் (FATHER HERAS) எ‎ன்ற இசுபெயி‎ன் நாட்டு அறிஞர் ‏இந்தியாவில் நீண்டகாலமாக வரலாற்று ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர். கடல்கொண்ட குமரிக் கண்டத்தி‎ல் தோன்றிய தமிழர் நாகரிகம்தா‎ன் தென்னாட்டின் திரவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி (அராப்பா - மொகஞ்சதாரோ) நாகரிகமாக மிளிர்ந்து, பி‎ன்னர் சுமெரியர் - எகுபதியர் - கிரேக்கர் - உரோமானியர் - ஐரோப்பியர் நாகரிகரிகங்களாக மாறின என்று தம் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்.

6. ஆல்பர்ட் சுவைட்சர் (ALBERT SWITZER) எ‎ன்ற செருமானிய மெய்யியல் அறி‎ஞர் ஏசுநாதரின் மறுபிறவி எ‎ன்ற புகழுட‎ன் வாழ்ந்தவர். அவர் திருக்குறளில் மனம் தோய்ந்து பல குறட்பாக்களை மனப்பாடம் செய்திருந்தார். "சீரிய கோட்பாடுகளி‎ன் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த ஞானம் உலக இலக்கியத்தில் வேறு எந்த நூலிலும் இல்லை" எ‎ன்று சொல்லிச் செ‎ன்றுள்ளார்.

7. கவியரசர் இரவிந்திர‎நாத் தாகூர் (RABINDRANATH TAGORE) எ‎ன்பவர் புகழ்பெற்ற வடநாட்டுப் பாவலர். திருக்குறளைப் படித்தபி‎ன் அவர் கூறியதாவது, "பாரத நாடு முழுவதற்கும், ஏ‎ன் உலகம் முழுவதற்குமே மகா‎ன் வள்ளுவரி‎ன் கோட்பாடு பொருந்தும்". தமிழில் தோ‎ன்றிய திருக்குறளை அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

8. மாக்சு முல்லர் (MAX MUELLER) என்ற செருமானிய நாட்டுக்காரர் தலைசிறந்த மொழிநூல் வல்லுநராக விளங்கியவர். இவர் "தமிழ் மிகப் பண்பட்ட மொழி; தனக்கே உரிதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார்.

9. வீரமாமுனிவர் எ‎னும் பெசுகி பாதிரியார் (FATHER JOSEPH BESCHI) என்பார் இத்தாலி நாட்டிலிருந்து வந்த கிறித்துவ மதகுரு. பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், இப்ரு, இத்தாலி, பாரசீகம், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார் இவர் 20 ஆண்டுகள் தமிழ்ப் பயின்றார். இவரே தமிழில் முதன் முதலில் அகராதியை எழுதி வெளியிட்டவர். திருக்குற¨ளைக் கற்று அதன் சிறப்பில் தோய்ந்துபோய் இத்தாலியில் மொழிபெயர்த்தார். தமிழில் உரைநடை இலக்கியம் வளர்வதற்கும்; தமிழில் நிறுத்தக்குறிகள் புகுவதற்கும் இவர்தான் முன்னோடி.

10. மகாத்மா காந்தி (MAHATMA GHANDHI) உலகிற்கு அகிம்சையைக் கற்பித்துச் சென்ற இவருக்கு அந்த அகிம்சையைக் கற்றுகொள்ள தூண்டுகோளாக இருந்தது திருக்குறள்தான். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்றவர். அதனைக் அவரே இப்படி கூறியுள்ளார் "திருக்குறளை அதன் மூலத்திலிருந்து கற்பதற்காகவே நான் தமிழைக் கற்றேன்".

11. சுவாமி விவேகானந்தர் (SWAMI VIVEKANANDA) என்ற ஞானி இளமையிலேயே துறவுகோலம் பூண்டு இந்தியாவின் இமயம் தொடங்கி குமரி வரை பயணம் செய்து பின்னர் அமெரிக்கா வரையில் சென்று ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பியவர். "ஆரிய இனம் தோன்றுவதற்குத் தாய் இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இரத்தம் நம் உடலில் ஓடுகின்றது என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும்" என்றும் "இந்திய நாட்டின் ஞானநெறி தென்னாட்டிலிருந்து நமக்குக் கிடக்கப்பெற்றதாகும்" என்றும் இவர் சொல்லியிருக்கிறார்.

12. பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஆர்ட் (PROF. GEORGE L.HART) என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான இவர் அண்மையில் சொல்லியிருக்கும் கூற்றே வாழும் நற்சான்றாக இருக்கின்றது. இவர் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபோது "தமிழ் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்ட செம்மொழியாகும். ஒரு மொழி செம்மொழி (Classical Language) ஆகவேண்டுமானால் அது சில அடிப்படையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அத்தனைத் தகுதிகளையும் தமிழ்மொழி பெற்றுள்ளது" என இவர் கூறியுள்ளார்.

இவர்களோடு, டாக்டர் வி‎‎ன்சுலோ (DR.WINSLOW), இரைசு டேவிட்டு (RHYS DAVIDS), டாக்டர் பிலியோசா (DR.FILIOZAT), கில்பர்ட்டு இசுலெட்டர் (GUILBERT SLATER), பேராசிரியர் பரோ (PROF.T.BURRO), பேராசிரியர் பானர்ஜி (PROF.R.D.BANERJI) கே.எம்.முன்சி (K.M.MUNSHI), போ‎ன்றோர் தமிழைக் கற்றும் - தெளிந்தும் - ஆய்ந்தும் பல உண்மைகளை வெளிப்படுத்திக்காட்டி தக்க ஆய்வுச் சா‎ன்றுகளோடு தமிழி‎ன் தொன்மை; தலைமை; தெய்வத்தன்மை; உண்மையை நிறுவியுள்ளனர்.

தமிழி‎ன் சிறப்புகளைத் தமிழர் அல்லாத மேற்கண்டோர் உணர்ந்துள்ளது போல நம் தமிழர்கள் எ‎த்தனைபேர் உணர்ந்துள்ளனர்? அப்படியே உணர்ந்தவர்களில் தமிழுக்காக உண்மையாய் உழைப்பவர்கள்தாம் எத்தனை பேர்?

தமிழராய் பிறந்ததற்காகப் பெருமைபடுவோம்! தமிழை வளர்ப்பதற்காகப் பாடுபடுவோம்! தமிழனால் தமிழுக்கு வாழ்வு உண்டானால்... தமிழால் தமிழனுக்கும் வாழ்வு உண்டாகும்

Hega
14-01-2011, 04:58 PM
தமிழை தமிழரல்லாதோர் அறிந்த அளவு தமிழர் அறியல்லையே...

பகிர்வுக்காய் நன்றி...

கௌதமன்
14-01-2011, 05:08 PM
அண்ணலும் அருந்தமிழும்

இவ்வுலகில் கோடானுகோடி ஆத்மாக்கள் இருக்க ஒரே ஒருவர் மட்டுமே 'மகாத்துமா' என போற்றப்படுகிறார். அவர்தான் இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும், 'அகிம்சை' எனப்படும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து, உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பிய அமைதிப் போராளி மகாத்மா காந்தி அவர்கள். இவருடைய இயற்பெயர் மோகன்தாசு காந்தி. இவர் 2.10.1869 அன்று இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.

மகாத்மா காந்தி என்றாலே அவருடைய அறவழிப் போராட்டமும், 'அகிம்சையும்', அமைதிப் போரும், எளிமையும், இரக்க குணமும்தான் எல்லாருடைய கண்முன்னால் நிலழாடும். இத்தனை உயர்பண்புகளும் காந்தியிடம் உருவாகுவதற்குப் பல காரணியங்கள் இருக்கலாம். அவற்றுள் மிக முக்கியமாகத் தமிழும், திருக்குறளும், தமிழ்நாடும் பெரும் பங்காற்றியுள்ளன என்றால் நம்மில் பலருக்கு பெரும் வியப்பாக இருக்கலாம்.

காந்தி உருசிய நாட்டு அறிஞர் 'லியோ டால்சுடாய்' மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். ஒருமுறை 'லியோ டால்சுடாய்' எழுதிய ஒரு கட்டுரையில் திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து 'இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறட்பாவைப் பற்றி எழுதியிருந்தார்.

லியோ டால்சுடாய் மேற்கோள் காட்டிய குறட்பா காந்தியின் உள்ளத்தைத் தொட்டு, அவர் ஆன்மா(ஆத்மா)வில் கலந்தது. மிக உயர்வான கருத்தைச் சொல்லும் இப்படி ஒரு நூல் இந்தியாவில் உள்ளது என்பதை அறியாமல் இருந்த காந்தி மிகவும் வருந்தினார். திருக்குறள் நூலை எப்படியாவது படித்துவிட விரும்பினார். பெரும் முயற்சி மேற்கொண்டு திருக்குறளைத் தேடினார். திருக்குறள் தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஒரு அறநூல் என்பதை கண்டறிந்தார்.

ஆனால், தமிழ் தெரியாத காந்தி திருக்குறளைப் படிக்க முடியாமல் மொழிப்பெயர்ப்பு நூல்களைப் படித்து திருக்குறள் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்தார். திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படிக்க வேண்டும் என்று காந்தி ஆசைப்பட்டார். அதனால், தமிழ்மொழியைப் படித்தார்.

"திருக்குறளை அதன் மூலத்திலேயே படிப்பதற்காகவே, யான் தமிழ் கற்றேன்" என்று இதனை அவரே பதிவு செய்திருக்கிறார்.

கோட்டு சூட்டுடன் இருந்த காந்தியை வெள்ளாடைத் துறவிபோல மாற்றிய பெருமையும் தாய்த் தமிகழத்திற்கே உரியதாகும். அந்த வரலாற்று நிகழ்வு 1921இல் மதுரையில் நடந்தது. அரை நிருவாணமாகவும் கிழிந்த ஆடைகளுடனும் தன் இந்திய நாட்டு உடன்பிறப்புகள் இருப்பதைப் பார்த்த காந்தியின் மனம் தன் வழக்கமான குஜராத்தி பாணி உடையை துறந்து அரை நிருவாண கோலத்திற்கு மாறியது.

மேலும், தமிழ், தமிழ் நாடு, தமிழ் மக்கள் தொடர்பாகக் காந்தி செய்துள்ள பணிகளும் எழுதியுள்ள குறிப்புகளும் சில:-

1.தமிழை நன்றாகக் கற்றுக்கொண்ட காந்தி 'இந்தியன் ஒபினியன்' என்ற இதழை தமிழிலும் நடத்தினார். அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பெரியோர்களைப் பற்றி இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.

2.தமிழைக் கற்பதிலும், தமிழ்ப் பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அண்ணல் காந்தி தம் துணைவியார் கசுதூரிபாவையும், மகன் மணிலாலையும் தமிழகம் அனுப்பினார்.

3.தமது மூன்றாவது மகனான தேவதாசுக்கு இலட்சுமி என்ற தமிழ்பெண்ணை மணமுடித்து வைத்தார்.

4.திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, "திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே...." என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.

5.ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளைத் தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தார். அதோடு, அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார்.

6.அவரது சேவாகிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்தலும் நடந்த வழிபாடுகளிலும் பூசைகளிலும் திருவாசகப்பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

7.சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளிகூடம் ஒன்றையும் காந்திநடத்தினார்.

8.மதுரைமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டபோது, 'எனதுநீண்டநாள் ஆசை நிறைவேறியது' என நெஞ்சுருக எழுதிவைத்தார் மகாத்மா.


9.தமிழகத்தில் திலகருக்கு இணையாக நாட்டுபற்று உணர்வை; எழுச்சியை உருவாக்கிய வ.உ.சிதம்பரனார் பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவியிருக்கிறார்.

10.தென்ஆப்பிரிக்கச் சத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும், கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.

11.தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராகக் காந்தி 1896ல் தமிழகத்தில் பரப்புரை செய்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் "தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சகித்து கொள்ளாத இனத்தினர்" என்று பேசியுள்ளார்.


12.தென்ஆப்பிரிக்கவிடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்.....எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் எனக்கு உணர்வூட்டினார்கள். அவர்களெல்லாம் தியாகம் செய்ய எங்களுக்குப் புகழ்கிடைத்தது என்று எழுதியுள்ளார்.

13.காந்தியை முதன்முதலாக உலகத்திற்கு "மகாத்மா" என்று அடைமொழியிட்டு அறிவித்தவர் 'சுதேசமித்ரன்' இதழ் ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய ஐயர்தான்!

14.காந்தியை 'தேசத்தந்தை' என்று இந்தியாவிற்குத் தெரிவித்தவர்கள் தமிழக மாணவர்கள் தாம்!

15.காந்தி வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் வெளியாகியது இந்தியமொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான்!

16.காந்தியடிகள் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு அகிலமெல்லாம் சுற்றி, மூன்றாண்டுகள் முழுமுச்சாய் தவமிருந்து பதிவுசெய்தவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.தான்!

அண்ணல் காந்தியடிகளைப் போற்றி மதிக்கின்ற தமிழ் மக்கள், அந்த மகாத்மாவே போற்றிய தாய்தமிழை அறிந்து; புரிந்து; தெளிந்து உயிரினும் மேலாகப் போற்றிட வேண்டும்

M.Jagadeesan
14-01-2011, 09:31 PM
அண்ணலும் அருந்தமிழும்” என்ற தங்களுடைய கட்டுரையில் காந்தியடிகள்தமிழ் மொழியின்மீது கொண்டிருந்த காதலைக் காட்டியுள்ளீர்கள்! நன்றி.
“மகாத்மா” என்ற அடைமொழி தாகூரால் கொடுக்கப்பட்டது என்று படித்துள்ளேன்.