PDA

View Full Version : பொன்னனும் பொங்கலும்M.Jagadeesan
13-01-2011, 03:21 PM
பொன்னனுக்கு அறுபது வயது ஆகிறது. பொன்னன் உயிரைக் கவர்ந்துபோக எமன்
பொன்னன் வீட்டிற்கு வருகிறான்.அப்பொழுது பொன்னனுக்கும்,எமனுக்கும் நடந்த
உரையாடல் இது.

எமன்:
புறப்படு! பொன்னா புறப்படு! இப்
புவியில் வாழ்ந்தது போதும் புறப்படு!
ஆயுள் முடிந்த காரணத்தினால் உன்னை
அழைத்துப் போக வந்துள்ளேன்!

பொன்னன்:
ஆகும் வயது அறுபதுதான் இது
சாகும் வயதா? எண்ணிப்பார்!
அடுத்த கடமை ஒன்றுளது அது
முடித்த பின்னே வருகின்றேன்!

எமன்:
என்ன கடமை? என்றே நீ
எடுத்துரைப்பாய் என்மகனே!

பொன்னன்:
அன்பு மகனுக்கு மணம்செய்து
அழகு பார்க்கத் துடிக்கின்றேன்!
அதுவரை கொஞ்சம் பொறுத்திடுவாய்!
அடுத்த ஆண்டு வந்திடுவேன்!

அடுத்த ஆண்டு அதேநாளில் பொன்னன் உயிரைக் கவர்ந்து செல்ல எமன் வருகிறான்

எமன்:
அப்பா! எமன்நான் வந்துள்ளேன் உன்
ஆயுள் முடிக்க வந்துள்ளேன்! இம்முறை
தப்பாது உயிரைக் கவர்ந்திடுவேன்
தடுத்துக் கொள்ள முயலாதே!

பொன்னன்:
ஐயா! எமனே கொஞ்சம் கேள்!
அருமை மருமகள் வயிற்றினிலே
ஆசைப் பேரன் இருக்கின்றான்!
அவனைப் பார்த்த பின்னாலே
அடுத்த ஆண்டு வந்திடுவேன்!

எமன்:
அடுத்த ஆண்டு
மாட்டுப் பொங்கலன்று வந்திடுவேன் எருமை
மாட்டின்மீது வந்திடுவேன்!

அடுத்த ஆண்டு மாட்டுப் பொங்கலன்று எருமைமாட்டின் மீதேறி எமன் வருகிறான்.

பொன்னன்:
எருமைமீது வந்திருக்கும் என்
அருமை எமனே! கொஞ்சம் கேள்!
பேரன் ஒருவன் பிறந்துள்ளான் அவன்
பேசும் மழலைக் கேட்டபின்னே
அடுத்த ஆண்டு வந்திடுவேன்
அதுவரைக் கொஞ்சம் பொறுத்திடுவாய்!

எமன்:
வாய்தா எதுவும் கேட்காதே! நான்
வந்த காரியம் முடித்திடுவேன்
"போய் வா!" என்று நீ சொல்வதற்குப்
பிச்சைக்காரன் நான் அல்ல!

எமன் பொன்னன் மீது பாசக்கயிற்றை வீசி உயிரைப்பறிக்க முற்படுகின்றான்.உயிரின்
மீதுள்ள ஆசையால் பொன்னன் எமனுடன் போராடத் துணிந்துவிட்டான்.

பொன்னன்:
நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!
காலா! உன்னைச்சிறு புல்லெனவே மதிக்கின்றேன் என்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கின்றேன்.
மார்க்கண்டேயன் கதையை மறந்துவிட்டாயா?
திருக்கடவூரிலே சிவன்
விட்ட உதையால் எமனே நீ
பட்ட பாட்டை யானறிவேன்
யானுமோர் சிவபக்தன் ஆனதால்
என்னைச் சீண்டிப் பார்க்காதே!

எமன்:
எவன் வந்தாலும் விடமாட்டேன் அந்தச்
சிவன் வந்தாலும் விடமாட்டேன்!

அப்பொழுது பொன்னன் மனைவி பொன்னம்மா அங்கு பொங்கலுடன் வருகிறாள்.
அவள் எமனைப் பார்த்து சொல்கிறாள்:

"ஐயா! எமனே! பொறுத்தருள்வீர்!
அவரை உம்முடன் அனுப்பிவைப்பேன்!
எங்கள் விருந்தாய் வந்துள்ளீர்!
பொங்கல் கொஞ்சம் சாப்பிடுவீர்!

பொன்னம்மா கொடுத்த பொங்கலை எமன் விரும்பிச் சாப்பிடுகிறான்.சாப்பிட்ட சிறிது
நேரத்தில் வாயைத்திறந்து பேசமுடியாமல் அவதிப்படுகிறான்.திடீரென்று வயிற்றைப்
பிடித்துக்கொள்கிறான்.வேகமாக வாசலுக்குச் சென்று எருமை மீதேறி ஓட்டம் பிடிக்கி
றான்.காரணம் தெரியாமல் பொன்னன் விழிக்கின்றான்.தன் மனைவி பொன்னம்மாவி
டம் எமன் ஓடிய காரணம் கேட்கின்றான்.

பொன்னம்மா:
அன்பரே! என்னைப் பொறுத்தருள்வீர்!
அடியேன் தவறு செய்துவிட்டேன்!
பாலென்று எண்ணி பெவிகாலை
பொங்கலில் கலந்து தொலைத்திட்டேன்!

பொன்னன்:(மகிழ்ச்சியுடன்)
நாயகன் உயிரைக் காப்பாற்றிய
நவீன நளாயினியே!
ஆயிரம்முறை நன்றி சொல்வேன் என்
ஆவியைப் போகாமல் காத்ததற்கு!

கௌதமன்
13-01-2011, 05:01 PM
பொங்கலின் புதியதொரு பயனைக் காட்டிய நண்பருக்கு பாராட்டுகள்!
எமன் மட்டுமல்ல நாமும் எச்சரிக்கையாய் இருப்போம்!
நன்றி!

nambi
13-01-2011, 05:41 PM
எமனை இப்படியும் ஏமாற்றலாமா? நன்று! சரி பொன்னம்மாவின் பெவிகால் பொங்கலை மறதியாக பொன்னனுக்கு கொடுக்கமால் இருந்தால் சரி.....?:D

கீதம்
13-01-2011, 10:23 PM
இனிக்க மறந்த பொங்கல் இங்கே நகைக்கவைத்துவிட்டதே! எமனுக்கே எமனாக பொங்கல் படைத்த நவீன நளாயினி வாழ்க!

பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
13-01-2011, 11:21 PM
நண்பர்கள் கெளதமன், நம்பி,கீதம் ஆகியோருக்கு நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
14-01-2011, 04:04 AM
எமனுக்கே எமன் ஆன நவீன தமிழச்சி .....அவள் மறதி காத்த அவளவன் உயிர் .....அருமை புன்னகை கவிதை .....
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

M.Jagadeesan
14-01-2011, 05:16 AM
[QUOTE=t.jai;509240]எமனுக்கே எமன் ஆன நவீன தமிழச்சி .....அவள் மறதி காத்த அவளவன் உயிர் .....அருமை புன்னகை கவிதை .....
என்றும் அன்புடன்
த.க.ஜெய்[/QUஓடே]

நன்றி! ஜெய் அவர்களே!