PDA

View Full Version : வலியின் தெய்வத்திற்கு ஒரு பாடல்



Kalai_21
12-01-2011, 09:37 AM
வலியின் தெய்வத்திற்கு ஒரு பாடல்

ரோகிகள் எப்போதும்
ஒரு கனவைத்தான் காண்கிறார்கள்
அது வலியைப் பற்றிய கனவு

விழித்திருக்கும்போதெல்லாம்
ரோகிகள் தங்களைப்பற்றியே பேசுகிறார்கள்
வலி வேறெதையும் பார்க்கவிடுவதில்லை

ரோகிகள்
முதலில்நினைத்தார்கள்
வலி
ஒரு முள் என்று

பிறகுதான்
அது ஒரு வெட்ட வெளியாக
இருப்பதைப் பார்த்தார்கள்

பற்றிக்கொள்ளவோ
மறைந்துகொள்ளவோ
எதுவுமே இல்லாத
வெட்டவெளி

சோதனைக் கூடத்தில்
ஒரு எலியைப் பரிசீலிப்பதுபோல
வலி உன்னைப் பரிசீலிக்கிறது

அது உன்னை
முதலில் முழுமையான
கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது

உன் தசைகளின், நரம்புகளின் ஊடே
அது வெகு நுட்பமாக
முன்னேறிச் செல்கிறது

ஒவ்வொரு மருந்தாகப் பயன்படுத்தி
உன் தாங்கும் திறனை சோதித்த பிறகு
உன்னை ஒரு மேசையின் மேலோ
படுக்கையின் மேலோ
அது கைவிடுகிறது

ஒவ்வொரு பருவத்திலும்
வலி ஒவ்வொருவிதமாக
அணுகுவதை ரோகிகள் கண்டார்கள்

கோடையில் அது
புற்றிலிருந்து வெளியேறும்
பாம்பைப்போல பசியுடன் வெளியேறுகிறது

மழைக் காலத்தில்
அது குளத்தின் நடுவே
முடிவற்ற அலைகளாகப் பரவுகிறது

பனிக் காலத்தில் வலி
இரவுகளை நீண்டதாக
மிக நீண்டதாக மாற்றிவிடுகிறது

வசந்தத்தில்
அது நிறமேயற்ற மலர்களை
எங்கெங்கும் பூக்க வைக்கிறது

நீ வலியை எப்படிப்
பின் தொடர்ந்து செல்கிறாய்?

அது ஒரு வாசனையாக
இருக்கும்போது
உனக்கு
ஆழ்ந்த குமட்டலைத் தருகிறது

அது ஒரு துர் நிழலாக
இருக்கும்போது
நீ அன்பிற்காக
மிகவும் ஏங்கத் தொடங்கிவிடுகிறாய்

அது ஒரு வேலையாக இருக்கும்போது
நீ உன் திறன்களை இழக்கிறாய்

அது ஒரு உறவாக இருக்கும்போது
வலி என்றால் என்னவென்று
முழுமையாகப் புரிந்துகொள்கிறாய்

ரோகிகள்
கடைசியில்
சிறந்த வலி நிவாரணிகளைக்
கண்டுபிடித்து விடுகிறார்கள்

ரோகி ஒருவன்
தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு
வலியைக் கடந்து செல்கிறான்

ரோகி ஒருத்தி
பைத்தியமாகிறாள் அல்லது
பைத்தியம்போல் நடிக்கிறாள்

இன்னும் சில ரோகிகள்
புதுப் புது கடவுள்களை அழைத்துக்
கண்ணீருடன்
தங்களைத் தொடும்படி கேட்கிறார்கள்

மிச்சமிருக்கும் ரோகிகள்
வலியே
இன்பம் என்று நிறுவுகிறார்கள்

நீ உன் வலியின் தெய்வத்தை
சந்திக்கும்போது
வலியைத் தாங்கிக் கொள்பவர்கள்
ஏன் அச்சமூட்டுபவர்களாக இருக்கிறார்கள்
என்று கேள்

நீ உன் வலியின் தெய்வத்தை
மண்டியிடும்போது
ஒரே வலிக்குப் பதில்
புத்தம்புது வலிகளை
அருளும்படி பிரார்த்தனை செய்

நீ உன் வலியின் தெய்வத்தின்
மறை நூலைப் படிக்கும்போது
வலியின் ரகசியப் புதிர்களை
எப்படியாவது கண்டு பிடி

நீ வலியின் தெய்வத்தைக்
கொல்லும்போது
வலியேயில்லாமல்
ஒருவரைக் கொல்வது
எப்படி என்று
அதனிடம் கற்றுக்கொள்
.
-மனுஷ்ய புத்திரன்

=========================================================

Courtesy: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3489

=========================================================