Log in

View Full Version : தாமதித்தத் தருணங்கள்

கீதம்
11-01-2011, 05:33 AM
நான் சொல்லவிழையும் வார்த்தைகள் யாவும்
வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
வேறெவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!

விழுந்தழும் குழந்தைக்காய்
நீளும் என் கரங்களை முந்தியபடி
வேறோர் கரம் தொட்டுத்தூக்கித்
தோளோடணைத்துக்கொள்கிறது!

தவறொன்றைச் சாடும்நோக்கில்
தக்க வரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கையில்
வீரியமாய் வந்துவிழுகின்றன
விரோதியின் சாட்டுகள்!

என்னுள் தவங்கிடக்கும் ஏராளக் கருவிதைகள்
என்னைவிட வலுவாய்…. ஆழமாய்……
வேறெந்தக் கரத்தாலோ விதைக்கப்பட்டு
அறுவடையும் செய்யப்பட்டுவிடுகின்றன!

நாளை கொடுக்கலாமென்று
நான்காய் மடித்துவைக்கப்பட்ட கடிதமொன்று
மீண்டும் பிரிக்கப்படும் தேவையற்றுப் போனது
ஒரு நாளின் வித்தியாசத்தால்!

சற்றே தள்ளிப்போடப்பட்ட நட்பின் சந்திப்பொன்று
சாலைவிபத்தில் மரணித்துப்போனதொரு நிகழ்வே
தாமதித்தத் தருணங்களின்
ஒட்டுமொத்தத் துயரசாட்சியானது!

தவறவிட்டத் தருணங்களையெண்ணி
மனதிலே மாபெரும் வலிசுமந்து
சுயபுலம்பலை முன்னிறைத்து வீதியில் நடக்கிறேன்,
விரைந்து முந்துகிறது,
முன்பே மனம் பிறழ்ந்தவனின்
வேதனைகப்பிய பிதற்றல்கள்!

ஆயாசத்துடன் ஆகாயம் பார்க்க...
வான்கிழித்துச் சிதறுகின்றன நீர்த்துளிகள்,
அப்போதும் என் விழிகளை முந்தியபடி!

பிரேம்
11-01-2011, 10:19 AM
கவிதை அருமையா இருக்கு மேடம்..நா சும்மால்லாம் சொல்லல..உண்மையாத்தான் சொல்றேன்..
எப்டித்தான் இப்டியெல்லாம் திங் பண்றாங்களோ..!

றெனிநிமல்
11-01-2011, 10:47 AM
சில தாமதங்கள் கூட சரித்திரங்களாக மாறியுள்ளன
அன்றைக்கு நீங்கள் சந்தித்த தாமதங்கள்
இன்றைக்கு உங்களுக்கு மிக நெருங்கிய ஆசான் அல்லவா!

கௌதமன்
11-01-2011, 03:19 PM
தாமதம் என்பது உலகில் எல்லோருக்குமானது. பொதுவானது. அறிவியலின்படி உண்மையானது. நாம் இந்த நொடியில் பார்க்கும் சூரியனோ, சந்திரனோ அல்லது வெறு ஏதாவது விண்மீனோ அந்த நொடிக்குண்டானதல்ல. தாமதமாகவே அதன் ஒளி அல்லது தோற்றம் நம்மை வந்து அடைகின்றது. அது நம்மை சேரும் தருணத்தில் அதன் உண்மையான நிலை மாறியிருக்கும்....

இந்த பிரபஞ்ச மாற்றங்கள் நம்மை வந்து சேரவே தாமதமாகும் போது நமது தாமதங்கள் கவனிக்கப்படுமா..?
கவனித்து கவிதை வடித்த நண்பர் கீதம் அவர்களுக்கு பாராட்டுகள்!
உங்கள் வாக்கியக் கோர்வைகள் நல்லக் கவிதைக்கான அழ்கைக் கொடுக்கிறது.

நன்றி!!

ஜானகி
11-01-2011, 04:11 PM
தாமதத்தின் இழப்பைவிட, அனுபவத்தின் பாடம் வலிமையானது, உபயோகமானது.

நிதானம் என்றுமே இரட்டிப்பு பலன் அளிக்கும், தாமதமானால் கூட.

நிதானித்து வந்த உங்கள் வரிகள் எவ்வளவு தீர்க்கமாக இருக்கின்றன ?

செல்வா
13-01-2011, 04:49 AM
அது சரி... தாமதம் பற்றிய கவிதை என்றதால் தாமதித்து வந்ததோ...?

நல்லாருக்கு..... அக்கா. வாழ்த்துக்கள்...!

கீதம்
13-01-2011, 09:52 PM
கவிதை அருமையா இருக்கு மேடம்..நா சும்மால்லாம் சொல்லல..உண்மையாத்தான் சொல்றேன்..
எப்டித்தான் இப்டியெல்லாம் திங் பண்றாங்களோ..!

மிகவும் நன்றி பிரேம். அதது அந்தந்த வயசில தானா வரும், உங்களுக்கு 'நாங்கள் வாலிபர்கள்' என்ற சிந்தனை வாலிபவயதில் வந்ததுபோல்!:)

கீதம்
13-01-2011, 09:56 PM
சில தாமதங்கள் கூட சரித்திரங்களாக மாறியுள்ளன
அன்றைக்கு நீங்கள் சந்தித்த தாமதங்கள்
இன்றைக்கு உங்களுக்கு மிக நெருங்கிய ஆசான் அல்லவா!

தாமதத் தருணங்கள் யாவும் தவறவிட்ட வாய்ப்புகளாகிவிட்டால் அது காலம் கடந்தும் வலிசுமந்து நிற்குமே!

பின்னூட்டத்துக்கு நன்றி றெனிநிமல் அவர்களே!

கீதம்
13-01-2011, 10:01 PM
தாமதம் என்பது உலகில் எல்லோருக்குமானது. பொதுவானது. அறிவியலின்படி உண்மையானது. நாம் இந்த நொடியில் பார்க்கும் சூரியனோ, சந்திரனோ அல்லது வெறு ஏதாவது விண்மீனோ அந்த நொடிக்குண்டானதல்ல. தாமதமாகவே அதன் ஒளி அல்லது தோற்றம் நம்மை வந்து அடைகின்றது. அது நம்மை சேரும் தருணத்தில் அதன் உண்மையான நிலை மாறியிருக்கும்....

இந்த பிரபஞ்ச மாற்றங்கள் நம்மை வந்து சேரவே தாமதமாகும் போது நமது தாமதங்கள் கவனிக்கப்படுமா..?
கவனித்து கவிதை வடித்த நண்பர் கீதம் அவர்களுக்கு பாராட்டுகள்!
உங்கள் வாக்கியக் கோர்வைகள் நல்லக் கவிதைக்கான அழ்கைக் கொடுக்கிறது.

நன்றி!!

உன்மைதான். இறந்துபோன விண்மீன்கள் கூட, இன்னமும் வானில் மின்னுவதைக் கண்டுகொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை தாமதங்கள் ரசிக்கத்தக்கவையே!

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கெளதமன்.

கீதம்
13-01-2011, 10:06 PM
தாமதத்தின் இழப்பைவிட, அனுபவத்தின் பாடம் வலிமையானது, உபயோகமானது.

நிதானம் என்றுமே இரட்டிப்பு பலன் அளிக்கும், தாமதமானால் கூட.

நிதானித்து வந்த உங்கள் வரிகள் எவ்வளவு தீர்க்கமாக இருக்கின்றன ?

பின்னூட்ட அலசலுக்கு நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
13-01-2011, 10:09 PM
அது சரி... தாமதம் பற்றிய கவிதை என்றதால் தாமதித்து வந்ததோ...?

நல்லாருக்கு..... அக்கா. வாழ்த்துக்கள்...!

பின்னூட்டத்துக்கு நன்றி, செல்வா.

நல்லவேளை, இந்தக் கருவில் எழுத எவரும் முந்திக்கொள்ளவில்லை.

உங்களைப்போன்ற கவிஞர்கள் பலரும் விடுமுறையில் இருப்பது எனக்கு எத்தனை சாதகமாயிற்று, பார்த்தீங்களா?:lachen001:

சுடர்விழி
15-01-2011, 11:16 PM
தாமதம் பற்றிய கவிதை அருமை கீதம்.....தாமதத் தருணங்களை அழகான வரிகளில் கவிதையாய் வடித்துள்ளீர்கள்...பாராட்டுக்கள் தோழி !!

கீதம்
26-01-2011, 09:52 AM
தாமதம் பற்றிய கவிதை அருமை கீதம்.....தாமதத் தருணங்களை அழகான வரிகளில் கவிதையாய் வடித்துள்ளீர்கள்...பாராட்டுக்கள் தோழி !!

பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றி சுடர்விழி.

ஆளுங்க
26-01-2011, 12:57 PM
மிக அருமை!!

dellas
26-01-2011, 02:05 PM
சாலையில் என் வாகனம்.
அதை முந்தப்பார்க்கும்
இன்னொரு வாகனம்.!!!
கவனிக்காத அவசரத்தில்
அந்த-வாகனம் இழந்தது ஓட்டியை.!!!
சற்றே தாமதித்ததால்
உயிரோடு நான் வாகனத்தில்.!!!

இந்த தாமதம் நிதானம். அழகிய கவிதை. இனிய பாராட்டுக்கள்.

CEN Mark
26-01-2011, 02:28 PM
[QUOTE=கீதம்;508863]நான் சொல்லவிழையும் வார்த்தைகள் யாவும்
வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
வேறெவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!

என்னுள் தவங்கிடக்கும் ஏராளக் கருவிதைகள்
என்னைவிட வலுவாய்…. ஆழமாய்……
வேறெந்தக் கரத்தாலோ விதைக்கப்பட்டு
அறுவடையும் செய்யப்பட்டுவிடுகின்றன!

உங்கள் கவியே என் பதில்களாய்.
படைபாளருக்கு நெடிய நேரமும், ஆழ்ந்த சிந்தனையும் ஷன நேரத்தில் நிகழும் காட்சிகளும்,பதிவுகளும் கோர்வையாய் விழவேண்டும். அது உங்களுக்கு சாத்தியப்படுகிறது.

என் வார்த்தைகள் யாவும்
வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
உங்களால் கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!

நல்ல கவிதையை மனம் திறந்து பாராட்டவும் ஒரு மனநிலை வேண்டும். கவி நன்று.

கீதம்
26-01-2011, 10:25 PM
மிக அருமை!!

நன்றி aalunga அவர்களே.

கீதம்
26-01-2011, 10:29 PM
சாலையில் என் வாகனம்.
அதை முந்தப்பார்க்கும்
இன்னொரு வாகனம்.!!!
கவனிக்காத அவசரத்தில்
அந்த-வாகனம் இழந்தது ஓட்டியை.!!!
சற்றே தாமதித்ததால்
உயிரோடு நான் வாகனத்தில்.!!!

இந்த தாமதம் நிதானம். அழகிய கவிதை. இனிய பாராட்டுக்கள்.

நிதானத் தாமதமென்பது
நிலைபெற்றிடும் அழகு.
நீண்டத்தாமதமென்பதோ
நிறைவேறாக் கனவு!

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி டெல்லாஸ் அவர்களே.

கீதம்
26-01-2011, 10:34 PM
உங்கள் கவியே என் பதில்களாய்.
படைபாளருக்கு நெடிய நேரமும், ஆழ்ந்த சிந்தனையும் ஷன நேரத்தில் நிகழும் காட்சிகளும்,பதிவுகளும் கோர்வையாய் விழவேண்டும். அது உங்களுக்கு சாத்தியப்படுகிறது.

என் வார்த்தைகள் யாவும்
வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
உங்களால் கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!

நல்ல கவிதையை மனம் திறந்து பாராட்டவும் ஒரு மனநிலை வேண்டும். கவி நன்று.

படைப்பாளிகளின் மனோபாவமே பெரும்பாலும் இப்படித்தானோ?

மனம் திறந்த பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி சென்மார்க் அவர்களே.