PDA

View Full Version : மகாநதிவல்லம் தமிழ்
10-01-2011, 02:43 PM
மகாநதி...
புரிந்தவைகளை தீர்மானமாக மறுக்கும்...
மறுப்புகளிலிருந்தே மறுபடியும் புரியவைக்கும்
உயிரும் உணர்வுமற்று
அசைவுகளை உண்டாக்கும்..
அசைவுகளை அடையாளம் காட்டியே
உயிர்களை உருவாக்கும்...

சைகைகளின் ஒலிவடிவாய்
மொழிகளை பிரசவிக்கும்..
மொழிகளின் சப்தத்தினால்
நிசப்தத்தின் பெருமைபேசும்...

உயிரற்றதொரு நாள் வரும் என்ற
உணர்வினூடே
வாழ்தலின் சுகம் காட்டும்..

நாளாய் கிழமையாய்
நாட்காட்டியில் பிடித்து விட்டோமென்று
கணக்கில் திருப்திபடுவோரை
கண்டு நகை காட்டும்...

எப்போதிலிருந்து எப்பொதுவரையென்ற
விடைதெரியா கதைசொல்லி
கணக்கற்ற தன் கரங்கள் கொட்டி சிரிக்கும்...

பூமிக்கும் வானுக்குமிடையே
காற்றாய் நீராய் நெருப்பாய்
வெவ்வேறாய் காட்சி தரும்..
பின்னெல்லாம் கலந்து
யாதுமாகி நிற்கும்...
சிலநேரம்
எதுவுமற்றும் தோணும்...

கீதம்
10-01-2011, 10:55 PM
ஊற்றுக்கண் தோன்றி ஓடையென ஓடி, சின்னதாய், கொஞ்சம் பெரிதாய் இன்னும் பெரிதாய் அகன்று கிளைபரப்பி இன்னுமின்னும் ஓடி முடிவில் மகாநதியாகிக் கடலில் சங்கமிக்கும்வரை எத்தனை எத்தனை பேச்சுகள், பிதற்றல்கள், பிரஸ்தாபங்கள்? அத்தனையும் சொல்லிப்போகும் அற்புதக் கவிநதி. பாராட்டுகள் வல்லம் தமிழ்.

ஜானகி
11-01-2011, 12:35 AM
வாழ்க்கையெனும் ஓடம்... என்றான் ஒரு கவி......

ஓடத்தின் ஓட்டத்தை திசைப்படுத்தும் சக்தி, நதியா... அல்லது எங்கும் நிறைந்த பரம்பொருளா ?

எதுவோ......பயணிகளான எங்களுக்கு கிடைத்தது சுகமான ராகம் !

பாரதி எட்டிப் பார்க்கிறான் !

வல்லம் தமிழ்
11-01-2011, 04:25 PM
மரமும் நானும்...

நீள வளர்ந்தால்
பாதை மறையுமென
நெடுஞ்சாலைதுறையினர்
நீக்கி எறிந்தனர்...

பக்கம் படர
சுற்றுச்சுவர் பாழாகுமென
வீட்டு உரிமையாளர்
வெட்டித்தள்ளினார்...

தாழ படர
கீழே வடைதட்டி விற்பவர்
கைகள் இடிக்குமென
கழித்து கட்டினார்...

அனைவரையும் அனுசரித்து
எவரையும் பாதிக்காமல்
எப்பக்கம் படர்வதென
புரியாத பதைபதைப்பில்
சாலையோர மரமும்
மரத்தடியில் நானும்...

வல்லம் தமிழ்
12-01-2011, 03:13 PM
குழந்தைகள்
விடிகாலை! இளங்குருத்து!
முதல் தூறல்! புது நாத்து!
கீறிய நிலம்! வீரிய விதை!
எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஒவியம் !

பசிக்கையில் கிடைக்கும் பல்சுவை விருந்து !
பசியால் விளைந்த பசிநீக்கும் மருந்து !

இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜம் !

அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம் !
அவரவர் கடவுளின் அற்புத தரிசனம் !

இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்
ஆனால்...
குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது
ஏனெனில்.....

கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?

ஜனகன்
12-01-2011, 07:01 PM
உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றன.பாராட்டுகள் வல்லம் தமிழ்.

கீதம்
12-01-2011, 09:43 PM
மரமும் நானும்...

நீள வளர்ந்தால்
பாதை மறையுமென
நெடுஞ்சாலைதுறையினர்
நீக்கி எறிந்தனர்...

பக்கம் படர
சுற்றுச்சுவர் பாழாகுமென
வீட்டு உரிமையாளர்
வெட்டித்தள்ளினார்...

தாழ படர
கீழே வடைதட்டி விற்பவர்
கைகள் இடிக்குமென
கழித்து கட்டினார்...

அனைவரையும் அனுசரித்து
எவரையும் பாதிக்காமல்
எப்பக்கம் படர்வதென
புரியாத பதைபதைப்பில்
சாலையோர மரமும்
மரத்தடியில் நானும்...


எப்பக்கம் படர்ந்தாலும்
எதிர்க்கேள்வி கேட்பாரில்லை!
மனம்போல் நீள்வதும் சுருங்குவதுமாய்
மரத்தின் நிழல் மட்டும் விதிவிலக்காய்!

ஆதங்கம் தெறிக்கும் கவிக்குப் பாராட்டுகள்.

வல்லம் தமிழ்
14-01-2011, 03:45 PM
ஊற்றுக்கண் தோன்றி ஓடையென ஓடி, சின்னதாய், கொஞ்சம் பெரிதாய் இன்னும் பெரிதாய் அகன்று கிளைபரப்பி இன்னுமின்னும் ஓடி முடிவில் மகாநதியாகிக் கடலில் சங்கமிக்கும்வரை எத்தனை எத்தனை பேச்சுகள், பிதற்றல்கள், பிரஸ்தாபங்கள்? அத்தனையும் சொல்லிப்போகும் அற்புதக் கவிநதி. பாராட்டுகள் வல்லம் தமிழ்.
மிக்க நன்றி!தொடர்ந்து இதில் என்னுடைய கவிதைகள் மட்டும் வெளியிட அனுமதி வேண்டும்....

வல்லம் தமிழ்
14-01-2011, 03:50 PM
வாழ்க்கையெனும் ஓடம்... என்றான் ஒரு கவி......

ஓடத்தின் ஓட்டத்தை திசைப்படுத்தும் சக்தி, நதியா... அல்லது எங்கும் நிறைந்த பரம்பொருளா ?

எதுவோ......பயணிகளான எங்களுக்கு கிடைத்தது சுகமான ராகம் !

பாரதி எட்டிப் பார்க்கிறான் !
அன்புள்ள ஜானகி,வணக்கம்! என்னை எவ்வளவோ பேர் பாராட்டி இருக்கிறார்கள்,ஆனால் உங்களுடைய `பாரதி எட்டி பார்க்கிறான்` என்ற வரிகள் எனக்கு இந்த பிறவியில் கிடைத்த பாரத ரத்னா-அதற்கு எனக்கு தகுதி இல்லை என்றாலும் மனசுக்குள் அன்று முழுதும் ஒரே மத்தாப்பு வெளிச்சம்!மிக்க நன்றி!

கீதம்
14-01-2011, 10:51 PM
மிக்க நன்றி!தொடர்ந்து இதில் என்னுடைய கவிதைகள் மட்டும் வெளியிட அனுமதி வேண்டும்....

தவறுக்கு வருந்துகிறேன், இனி இத்திரியில் உங்கள் படைப்புகளுக்கான பாராட்டுகள் தவிர என்னுடைய பிதற்றல்கள் இடம்பெறாது.

அருமையான உங்கள் கவித்தொகுப்பு தொடர்ந்து எம்மை மகிழ்விக்க விரும்புகிறேன்.

வல்லம் தமிழ்
20-01-2011, 02:05 PM
மௌனம் என்ன மொழி?

அனைத்து நதிகளிலும்
அன்பே பிரவகிப்பதால்
மதங்களைக் கடப்பதைக் காட்டிலும்
மதங்களில் கரைவதன் மூலம்
மனிதத்தில் சங்கமிப்போம்
மகா சமுத்திரமாய் ஆர்ப்பரிப்போம் !


உணர்வுகளை சொல்லவல்ல
ஊடகமே மொழி !
மனங்களை இணைப்பதொன்றே
மகத்தான அதன் பணி !
ஊடகத்தின் பெயரால்-நமக்குள்
கோடுகிழிக்க வருவோரிடத்து
மௌனமாயிருங்கள்..-கேளுங்கள்
மௌனம் என்ன மொழி ?

வியர்வையாய் சிந்த வேதனைப்பட்டால்
கட்டாயம் ஒருநாளதை கண்ணீராய் சிந்தவேண்டிவரும்
என்பதாலேயே
வியர்வைக்கும் கண்ணீருக்கும் ஒரே சுவை..!
ஆகவே அருமை நண்பர்களே..
உழைத்தவன் கைகளில் உரிமைகள் தருவோம்
அவரை ஏய்த்து
பிழைப்பவர் செயலை பிழையென்றே கொல்வோம்..!

தீண்டிடில் தின்றிடும் தீயது சாதா தீ!
தீண்டாமை தின்றிடும் தீயெது சாதி!
தீண்டியும், தீண்டாதும்
திகுதிகுவென எரியும் தீ அது அறிவுத் தீ!
அக்கினிக் குஞ்சில் உயர்வெது தாழ்வெது?
அறிவுத்தீயில் முதலெது முடிவெது?
அறிவுத்தீயால் அழிப்போம் சாதியை..அது கொடியது..!

கனவுச்சுடரால் சமைப்போம் வழியை
அறிவுச்சிறகால் அளப்போம் வெளியை
பறப்போம் கலப்போம்
பள்ளம் மேடற்ற சமூகம் படைப்போம்..!

மத மொழியின வர்க்கபேதம் தகர்த்து
அனைவரும் சமமெனும்
ஆனந்த சமூகம் படைப்பது
மனிதரனைவரின் பொறுப்பு..!
ஏனெனில்..
சக மனிதரனைவரும்
சகோதரனே என்பதற்கு
சாட்சியாய் கிடக்கிறது
உனக்குள்ளே ஊறித் ததும்பி நிற்கும்
உதிரச் சிவப்பு..!

ஜானகி
20-01-2011, 03:54 PM
[கவிதைப் போட்டியில் நுழையாத] நல்லதொரு கவிதைத் தீ....நாட்டுப் பற்றைப் தூண்டிவிடும் உரிமைப் போராட்டத் தீ...ஆன்மீகத்தைத் எழுப்பிவிடும் மௌனத் தீ.... பரவட்டும் எங்கும்....பரப்பட்டும் ஒளியை எங்கும்...

கீதம்
20-01-2011, 09:57 PM
வீரிய வார்த்தைகளாலொரு சமூகச்சாடற்கவிதை! பாராட்டுகள் வல்லம்தமிழ் அவர்களே.

சுடர்விழி
21-01-2011, 12:49 AM
அத்தனை கவிதையும் அருமை நண்பரே !!கருத்தாழமிக்க கவிதைகள் நெஞ்சைத் தொட்டன....மனம் திறந்த பாராட்டுக்கள் !!

வல்லம் தமிழ்
21-01-2011, 01:39 PM
[கவிதைப் போட்டியில் நுழையாத] நல்லதொரு கவிதைத் தீ....நாட்டுப் பற்றைப் தூண்டிவிடும் உரிமைப் போராட்டத் தீ...ஆன்மீகத்தைத் எழுப்பிவிடும் மௌனத் தீ.... பரவட்டும் எங்கும்....பரப்பட்டும் ஒளியை எங்கும்...
நன்றி !நன்றி !நன்றி !

வல்லம் தமிழ்
21-01-2011, 01:41 PM
வீரிய வார்த்தைகளாலொரு சமூகச்சாடற்கவிதை! பாராட்டுகள் வல்லம்தமிழ் அவர்களே.
தொடர்ந்து தாங்கள் தரும் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

வல்லம் தமிழ்
21-01-2011, 01:42 PM
அத்தனை கவிதையும் அருமை நண்பரே !!கருத்தாழமிக்க கவிதைகள் நெஞ்சைத் தொட்டன....மனம் திறந்த பாராட்டுக்கள் !!
மிக்க நன்றி!

கௌதமன்
21-01-2011, 01:49 PM
இது கவிதையல்ல, ஒரு அக்கினிக்குஞ்சு;
அணைக்க வேண்டியது தான்; அள்ளி
அணைக்க வேண்டியது தான்.

இது கவிதையல்ல, ஒரு அறிவாயுதம்;
தாக்க வேண்டியது தான்; இதைநம
தாக்க வேண்டியது தான்.

சிறந்த கவிதைக்கு பாராட்டுகள் வல்லம் தமிழ்

ஜானகி
21-01-2011, 02:33 PM
ஆகா... இப்படியெல்லாம் எங்களுக்குப் பாராட்டத் தெரியவில்லையே....கவிதைக்கு ஏற்ற பாராட்டு...தொடரட்டும்...நாங்கள் ரசிப்பதற்கு...

வல்லம் தமிழ்
03-02-2011, 02:00 PM
குழந்தைகள்
விடிகாலை! இளம் குருத்து!

முதல் தூறல்! புது நாத்து !

வீரிய விதை ! கீறிய நிலம் !

எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஓவியம் !

ஒளிர் கதிர் ! வளர் நிலவு !

இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜங்கள்..!

அவரவர் கடவுளின் அற்புத தரிசனம்...!

அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம்..!

பசியில் கிடைக்கும் பல்சுவை விருந்து
பசியால் விளைந்த பசி நீக்கும் மருந்து...!

இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழ்ந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்

ஆனால்....

குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது...

ஏனெனில்

கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?

வல்லம் தமிழ்
06-02-2011, 11:56 PM
படிக்க யாருமற்ற பாழ்வெளியில் பாவம் வெகு நாட்களாய் தனிமையில் காய்கிறது இந்த பிள்ளை நிலா...

கௌதமன்
07-02-2011, 12:43 AM
பாழ்வெளியில் அல்ல எங்கள் ஆழ்மனத்தில்
பரந்து நிற்கிறது இந்த பிள்ளைநிலா
பிள்ளைநிலா கண்ட சுகத்தில்
பின்னூட்டமிடத் தோன்றவில்லை

பாராட்டுகள் வல்லம் தமிழ்!

வல்லம் தமிழ்
07-02-2011, 01:16 PM
மிக்க நன்றி கௌதமன்!

வல்லம் தமிழ்
15-02-2011, 02:34 PM
நிலவெரியும் இரவு
நேர்மேலே நட்சத்திரம்
உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..
கனவெழுதி கரைந்து போகும்
கன்னங்கள் கோடாகும்
நினைவிருக்கா உனக்கும் கூட..
உன் இமைபிரியும் சத்தம் கூட
எழுப்பிவிடும் என்னை-என்
உயிர் பிரியும் வலி கூடவா
உணரவில்லை உனக்கு..?

கௌதமன்
15-02-2011, 05:06 PM
கவியெழுத கைகொடுப்பதால்
பிரிவின் வலியும் சுகம்தான்
இல்லையா
வண்ணத்தமிழ் தந்த வல்லம்தமிழ்?

கீதம்
15-02-2011, 07:27 PM
அன்பின் வலியை வெளிப்படுத்திய கவிதை அருமை. பாராட்டுகள் வல்லம்தமிழ்.

வல்லம் தமிழ்
25-02-2011, 11:48 AM
பாராட்டிய நல்ல இதயங்களுக்கு நன்றி!

வல்லம் தமிழ்
12-03-2011, 02:49 PM
உயிர்களின் பசியடக்கும்
பயிர்களின் தாய்ப்பாலே..!

வானம் வழங்கிய அருட்கொடையே!
வறட்சி வென்றிடும் நீர்ப்படையே..!

எதிர்பார்ப்புகளற்ற காரியமாற்ற
எங்கள் உதாரணமே..!

மேகம் கிடுகிடுக்க மின்னல் ஒளிவிளக்காய்
வானம் விட்டு வரும் வசந்த பூ விதையே..!

ஆறுகள் பெருக்கெடுத்து
கடல் தோறும் கரை புரளும்
அலைகளின் பிறப்பிடமே..!

விதைகளை விருட்சமாக்கும்
விந்தை செய் விண்துளியே..!

கருணையின் வடிவமாய்
கசிந்துருகி வழியும் நீர்ச்சரமே..!

வறண்ட உலகைக் கண்டு
வானம் வடித்த கண்ணீரே..!

விதைத்து காத்திருக்கும்
விவசாயியின் வியர்வையை
அர்ச்சித்து தூவும்
அர்ச்சனை பூக்களே..!

நிலத்தில் நீ விழுந்தால்
நெல் முத்தாகிறாய்..
சிப்பிக்குள் நீ சிந்தினால்
நல்முத்தாகிறாய்..
முத்து முத்தாய் நீ முத்தமிட்டு தான்
மொத்த பூமியும் சுகப்படுகிறது..!

இயற்கைக்கு மாறாய் நீ
இந்த வருடம்
அதிகம் பொழிந்தாய் என
ஆனந்தப்பட்டோமே...
இப்போதல்லவா புரிகிறது-அது
ஆழிப்பேரலையால் அல்லல்படப்போகும்
மனிதகுலத்தை எண்ணி நீ
வடித கண்ணீர் என்று..!

நற்பெண்டிரின் நாக்குக்கு கட்டுப்படும் நாயகியே..!
வழங்கி வாழ்வளித்து
பொழியும் இடந்தோறும்
பொலிவை உண்டாக்கும்
தண்ணீர் குலத்தின் தலைமகளே..!

அழித்து அபகரித்து
ஆறாத்துயர் கூட்டும்
ஆழிப்பேரலையை-இனி
தண்ணீர் குலம் விட்டே
தள்ளி வைப்பாய் என் தாயே..!

பூமியின் அழுக்கினை
போக்கிட பொழிந்தாய்-இனி
மனிதரின் மன அழுக்கை
மாய்த்திட அவர்தம் மனதுக்குள் பொழி தாயே..!

அகிலத்தின் உயிர்ச்சத்தே..!
அனைத்துலகின் தத்துவமே..!
மகாசக்தி! தேவி ..!
மாரி உன்னை வணங்கி நின்றேன்
எங்கள் மனக்குறையை கேட்டருளாய்..

நீ வழங்கிய அருட்கொடையால்
நிறைந்துவரும் நதிப்போக்கை
நிறுத்தி அணை கண்டார்..
அந்த அணைகள் நிறைந்தழிந்து
தளும்பி சீற்றமுடன் தமிழகம்
தழுவும் வகையில் இனி
தாயே நீ பொழிக!
தமிழர் தாகம் தணித்திடுக.

ஆளுங்க
21-03-2011, 02:35 PM
அருமை நண்பரே!!

வல்லம் தமிழ்
27-03-2011, 03:01 PM
அருமை நண்பரே!!
நன்றி நண்பரே!

நாஞ்சில் த.க.ஜெய்
27-03-2011, 05:45 PM
கவிதை எனும் சொற்றாடலை எவ்வாறெல்லாம் சமூகத்தின் பார்வையில் ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் எனும் விதம் ...புது அனுபவம்...தொடருங்கள் வல்லம் தமிழ் ...

வல்லம் தமிழ்
22-04-2011, 02:16 PM
கிறுக்கு...
என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
எல்லாவற்றுகுள்ளும்
எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்...

உண்மையில்
எல்லாமென்பது இல்லை..
இல்லைகளுக்குள்ளும்
இருக்கும் என்னை
தேடியலையும் தேடுதலின்
மூச்சு வாங்குதலே
எல்லாமுமாக இருக்கிறது...

விரித்துவைத்த வெள்ளைதாளின் மீது
காற்றினால் அசைகிறது பேனா..
பின்
என் கையிலும் அசைகிறது-கற்பனையினால்...

காற்றினால் அசையும் அசைவை
ஏதாவதொரு கணத்தில்
என் கையிலும் கொண்டுவர முடிந்ததெனில்....
அற்புதம்...அற்புதம்...
நானும் காற்றும் கலந்தே எழுவோம்..
பாய்வோம்....

எழுத்துகளும், வரிகளுமற்ற
எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளது
உண்மையான கவிதை...
அதை
வரிகளாலும் வார்த்தைகளாலும்
வருடி வருடி
அடையாளப்படுத்த விழையும்
அற்ப முயற்சிகளே
இதுவரை வெளிவந்த அனைத்து கவிதைகளும்..
இது உட்பட...

வல்லம் தமிழ்
22-04-2011, 02:24 PM
கவிதை எனும் சொற்றாடலை எவ்வாறெல்லாம் சமூகத்தின் பார்வையில் ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் எனும் விதம் ...புது அனுபவம்...தொடருங்கள் வல்லம் தமிழ் ...

நன்றி! நண்பரே!