PDA

View Full Version : யாரோ கவனிக்கும்போது



Kalai_21
08-01-2011, 02:23 PM
யாரோ கவனிக்கும்போது


யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
காதலர்கள் அந்த இடத்திலிருந்து
நகர்கிறார்கள்

ஒரு இளம் பெண் தனது உடலில்
குறுகுறுப்பை உணர்கிறாள்

பேருந்தில் ஒருவன்
செல்போனை அணைத்துவிடுகிறான்

இரண்டு பேர் மிகவும் தாழ்ந்த குரலில்
சண்டையிடத் தொடங்குகிறார்கள்

குழந்தைகளின் இயல்பு
திடீரென மாறி விடுகிறது

அழகற்ற ஒருத்தி
மனம் உடைந்து அழுகிறாள்

ஒரு சிறு பையன்
சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்

மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்

இளைஞர்கள் மிகவும் உயரமான
இடத்திலிருந்து குதிக்கிறார்கள்

ஒரு மூதாட்டி மீண்டும்
அதே கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்

பூச்சாடியில் மலர்கள்
சரி செய்யப்படுகின்றன

கலைந்த முகங்கள்
நேர்த்தியாக்கப்படுகின்றன

பத்திரிகையில் ஒரு திருத்தம்
வெளியிடப்படுகிறது

மருந்துக்கடையில் ஒருத்தி
எதையோ வாங்க மிகவும் நாணமடைகிறாள்

அரவமற்ற சாலையில்
ஒருவன் வேகமாக நடக்கத் தொடங்குகிறான்

குடிபோதையில் நிராதரவாய் கிடந்த யாரோ
முனகத் தொடங்குகிறான்

மதிய வெயிலில் தியானித்த காகம்
சட்டென எழுந்து பறக்கிறது

ரயிலில் குருட்டுப் பிச்சைக்காரி
இன்னும் உருக்கமாகப் பாடுகிறாள்

யாரோ பாதிப் புணர்ச்சியில்
திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார்கள்

ஒரு கொலைகாரன்
தன்கத்தியை மறைத்து வைக்கிறான்

கோமாளிகள் இன்னும் சிரிக்கவைக்கப்
போராடுகிறார்கள்

சொற்பொழிவாளன் மேலும்
குரலை உயர்த்துகிறான்

ஒரு தவம்
கலைகிறது

குடியரசு தின அணிவகுப்பில்
நாட்டின் தலைவர் கொட்டாவியை
அடக்கிக்கொள்கிறார்

ஒரு வேசி
மெலிதாகப் புன்னகைக்கிறாள்

ஏழ்மையை மறைக்க
ஒருவன் வீணே பொய் சொல்கிறான்

மைதானத்தில் அவசர அவசரமாக
ரத்தக்கறைகள் கழுவப்படுகின்றன

கடையில் அவ்வளவு மெலிதான
ஆடையை ஒருத்தி தேர்ந்தெடுக்கிறாள்

சிலர் பணத்தைப்
பத்திரப்படுத்துகிறார்கள்

சரித்திரத்தில் இடம்பெறுவதற்கான
தீவிரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன

முற்றாக நம்பிக்கையிழந்தவர்கள்
ஏதேனும் உதவி கிடைக்கலாம்
என்று மீண்டும் நம்பத் தொடங்குகிறார்கள்

யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
எல்லோருமே
தங்கள் சுதந்திரத்தைக்
கொஞ்சம் இழக்கிறார்கள்

-மனுஷ்ய புத்திரன்

Courtesy: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3585

கௌதமன்
08-01-2011, 02:55 PM
கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக மன்றத்தில் பழையத் திரிகள் பின்னூட்டங்களால் புதிப்பிக்கப்படுகிறது.

கவனிக்கிறார்கள் என அறியப்படும்போது கவிதைகள் இன்னும் மெருகூட்டப்படுகிறது.

சுதந்திரம் பறி போனாலும், கவனிக்கப்படும்போது தவறுகள் தற்காலிகமாகவாவது திருத்தப்படுகிறது.

நண்பர் கலை!
நீங்கள் மனுஷ்ய புத்திரனை நன்கு கவனிக்கிறீர்கள்!!
பகிர்தலுக்கு நன்றிகள்!!!

உமாமீனா
01-02-2011, 11:53 AM
நானும், எனக்கும் மனுஷ்ய புத்திரன் எழுத்துக்கள் என்றால் கொள்ளை ப்ரியம்