PDA

View Full Version : எனதாக நீயானாய்



M.Rishan Shareef
02-01-2011, 05:20 AM
எனதாக நீயானாய் (http://mrishanshareef.blogspot.com/2011/01/blog-post.html)

ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்
செழிக்கிறேன் நானும்

காலங்காலமாக மென்மையில்
ஊறிக்கிடக்கும் மனமதில்
எக் கணத்தில் குடியேறினேனோ
இசைத்த கீதங்களின் ஒலியிலெனது
இடர்கள் தீர்ந்தன
உற்சாகத்தின் வீரியமிக்க விதைகள்
உன் நம்பிக்கையின் கரங்களால்
ஊன்றப்பட்ட நாளதில்தான்
தூய சுவனத்தின் மழையென்னை
முழுதும் நனைக்கப் பெய்ததையுணர்ந்தேன்

கலக்கின்றதுயிரில்
செவிகளுக்குள் நுழைந்த
உனதெழில் பாடல்களினூடு
ஆளுமைமிகு தொனி

இரைத்திரைத்து ஊற்றியும்
வரண்டிடா அன்பையெல்லாம்
எங்கு வைத்திருக்கிறாய் உயிர் சகா
காணும்போதெல்லாம் எழுமுன் புன்னகையின்
கீற்றில்தான் உதிக்கிறது எனதுலகு

மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்
வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்த
சோலையில் விளையாடும்
வசந்தகாலத்தின் காலையொன்றில்
நானினி வாழ்வேன்
ஒலிக்கும் இன்னிசையின் பிண்ணனியில்
நீயிருப்பாய் என்றென்றுமினி

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# வல்லினம் இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# காற்றுவெளி இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# வார்ப்பு
# திண்ணை

Hega
02-01-2011, 09:23 PM
நானினி வாழ்வேன்
ஒலிக்கும் இன்னிசையின் பிண்ணனியில்
நீயிருப்பாய் என்றென்றுமினி

ஒலிக்கும் இன்னிசையின் பின்னனியில் என்று வருமோ..

அழகான கவிதை . நன்றி


நீயிருப்பாய் என்றுமினி
சென்றவிடமெல்லாம்
கன்றினைபோல் தொடர்ந்து
நன்று என்று
நற்பெயர் வாங்கும் வரை
என்றுமினி நீயிருப்பாய்.

M.Rishan Shareef
01-06-2011, 02:04 PM
அன்பின் Hega,

//ஒலிக்கும் இன்னிசையின் பின்னனியில் என்று வருமோ..

அழகான கவிதை . நன்றி //

பிண்ணனி தானே சரி?
கருத்துக்கு நன்றி நண்பரே :-)