PDA

View Full Version : கறுப்பழகு



dellas
30-12-2010, 09:34 AM
பகலவன் தன் வெம்மையான கதிர்களை தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த முன்பகல் வேளை. வயல் வரப்பில் நான் நடந்து போகிறேன். இருமருங்கிலும் இரண்டு மாத வயதுள்ள நெற்பயிர்கள் இளம்காற்றில் அசைந்தாடுகின்றன. நேற்று பெய்த பின்னிரவு மழையால் உண்டான மண்வாசனை என் சுவாசத்தில் நிறைகிறது . நடந்து சென்ற நான் சற்று குனிந்து என் கைகளால் அசைந்தாடும் நெற்பயிர்களை தொடுகிறேன். அதன் குளிரூட்டும் ஈரம் என் உள்ளங்கையை நனைக்கிறது. ஒரு குழந்தையை தொட்டுணரும் அம்மாவின் உணர்வு எனக்கு உண்டாகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக நாற்றின் உயரம் கண்டு வரப்பை உயர்த்தி, தகுந்த உரமிட்டு, நல்லவர் மத்தியில் நல்லவர்போல் கலந்து, உழைப்பவர்களின் வியர்வையை உறிஞ்சி வாழும், அடையாளம் காணவரிய பொல்லாதவரின் குணம்கொண்ட களைகளை களைந்து, பூச்சி மருந்திட்டு , அதனால் செழித்து வளரும் இப்பயிர்களை காணும்போது மனது நிறைகிறது.

அப்பாவின் சொற்படி இன்று இரண்டாம் முறையாக பூச்சி மருந்து தெளிக்க வேண்டும். இந்தமுறை நல்ல மகசூலை எதிர்பார்க்கலாம். தங்கையின் திருமண கடன்கள் ஓரளவு தீர்ந்து கொண்டு வருகிறது. அப்பாவிற்கும் முன்போல் வேலை செய்ய இயலவில்லை.
கையோடு கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை சரியான விகிதத்தில் தண்ணீரோடு கலந்து, அதற்கான கலனில் எடுத்துக்கொண்டு, என் பணியை நான் தொடர்கிறேன். நேரம் போவது தெரியவில்லை .இப்போது வெப்பத்தினால் எனக்கு வியர்க்கிறது. தலையில் சுற்றியிருந்த துண்டினால் அதை துடைத்துவிட்டு தொடர்கிறேன்.எங்கள் நிலத்தை அடுத்து இருக்கும் சாலையில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள். காலையிலும், மாலையிலும் மாணவர்களால் இந்த சாலை கலகலப்பாக இருக்கும்.

பதினெட்டாவது வயதிலிருந்தே ஆறு வருடங்களாக இந்த வேலையை நான் விரும்பி செய்கிறேன்.சாலையில் இளம்பெண்கள் கடந்து செல்கையில், என்மனதில் நேற்றுவரை எந்த சலனமும் இல்லை. ஆனால் நேற்று கல்லூரிக்கு செல்லும் என் நண்பன் ஒருவன், நான் அதிர்ஷ்டக்காரன் என்றும், காலை மாலை இரண்டு வேளைகளில் அனைத்து பெண்களையும் பார்க்கும் வாய்ப்பு கொண்ட ஒரே ஆள் நான்தான் என்றும் சொல்லிப்போனான். இப்போது என் மனதில் ஒரு தாழ்மை உணர்ச்சி தோன்றுகிறது. வெய்யில் பட்டு கறுத்துப்போன என் உடல், எப்போதும் வியர்வையோடு வாசம் செய்யும் தொழில், இதை யாராவது கவனிப்பார்களா..? நிச்சயமாக இருக்காது..அப்படியே கவனித்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்.? அதனால் முடிந்தவரை சாலையில் இளம்பெண்கள் வரும்போது தூரமாக போய்விடவேண்டும்...

...சீ ...என்ன சிந்தனை இது...யார் என்னைப்பற்றி என்ன நினைத்தால் என்ன .. எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும்..அவர்கள் என்னைக் கவனிக்கிறார்களா என்பதில் எனக்கிருந்த ஆர்வம் அதிகமாகிறது. யாரும் என்னைப் பார்ப்பதுபோல் எனக்கு தோன்றவில்லை..

எனக்கு தூக்கம் வரவில்லை.. ஏன் என்னை யாரும் பார்க்கவில்லை. அவர்கள் பார்ப்பதுபோல் என் உருவம் இல்லையா..அவர்கள் பார்பதற்காக நான் என்ன செய்ய வேண்டும்..? நெடுநேரம் சிந்தனைக்கு ஒரு தீர்வு கண்டவனாய் உறங்கிபோனேன்.

கடந்த ஒரு வாரமாக காலை மற்றும் மாலை வேளைகளில் நான் இந்த பேருந்து நிறுத்தத்தில் நான் நிற்கிறேன். வந்து போகும் இளம்பெண்களில் யாரவது என்னைப் பார்க்கமாட்டார்களா என்ற ஏக்கத்தில் என்மனது தவிக்கிறது. இதுவரை இல்லாத ஒரு வேதனை என் மனதை வாட்டுகிறது. நானும் இந்த இளைஞர்களைப்போல் கல்லூரிக்குப் போயிருக்க வேண்டுமோ?... அவர்களைப்போல் ஒய்யாரமாக நடக்கத் தெரிந்திருக்க வேண்டுமோ?? ..ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டுமோ ???.. பெண்களை எப்படி கவர்வது என்பது தெரியவில்லையே..

நான் போகாததால் வயல் வேலைகளை பார்க்க சென்றிக்கும் என் அப்பாவின் நினைவு வருகிறது. ஐயோ ..நான் என்ன செய்கிறேன் ...அப்பாவுக்கு முடியாதே...இரண்டும் கெட்டான் மனநிலையில் தவிக்கிறேன்..பேருந்து நிறுத்தத்திலிருந்து நேராக வயலுக்கு செல்கிறேன்..அடிக்கிற வெயிலையும் பொருட்படுத்தாது தன் கூன் முதுகால் வளைந்தபடி அப்பா வாய்க்கால் வரப்பை சீர்செய்து கொண்டிருந்தார்...ஓடிச்சென்று அப்பாவின் கையிலிருக்கும் மண்வெட்டியை வாங்குகிறேன் ...மெதுவாக நிமிர்ந்த அப்பா என்னை நோக்கி புன்முறுவல் பூக்கிறார். என் கண்கள் பனிக்கின்றன ..என் தலையை தன் மார்பில் சாய்த்த அப்பாவின் கண்களும் பனிக்கின்றன.

என் தலையை கோதிவிட்டு,

'மகனே, உழைப்பாளிகளின் வியர்வை , வெய்யில் பட்டு கறுக்கும் அவர்களின் தேகம் இவை இரண்டையும் விட அழகானது உலகில் எதுவுமே இல்லை.இவை இரண்டும் உள்ளவனே நாட்டின் தலை மகன்.'

என் முகம் பார்த்து கனிவாய்ச் சொன்னவர் மெதுவாக வீடு நோக்கி திரும்புகிறார்.

அணிந்திருந்த மேல் சட்டையை கழட்டிவிட்டு , வெய்யிலுக்கு என் உடம்பை காட்டி, மண்வெட்டியோடு வரப்பை நான் சரிசெய்து கொண்டிருக்கிறேன்..என் முகத்தில் வியர்வைத் துளிகள் பூக்கின்றன...

பாலகன்
30-12-2010, 10:46 AM
உழைப்பின் மேன்மையை எடுத்துச்சொன்ன விதம் அருமை
தாய்க்கு தலைமகனின் கடமையை மறந்துபோய் விட்டில்பூச்சியாய் மாய நினைத்தவனின் ஏக்கங்களை அருமையாக வெளிக்கொணர்ந்தமைக்கு பாராட்டுக்கள்

ஜனகன்
30-12-2010, 11:30 AM
கிராமத்து நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தீர்கள்.

அத்தனையும் வாழ்வில் கண்டு ரசித்து வந்ததை போல எழுதியுள்ளீர்கள்.

பாதை மாற உங்கள் பயணம் பாராட்டுக்குரியது.

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துகின்றேன் டல்லஸ்.

dellas
30-12-2010, 12:58 PM
மனதில் படுவதை எழுதி விடுகிறேன். குறை இருப்பின் சுட்டுங்கள். மாற்றிக்கொள்கிறேன் நிறை இருப்பின் பாராட்டுங்கள் . பாராட்டிற்கு நன்றி.

கீதம்
05-01-2011, 11:04 PM
சலனக்களை இழையோடி உழைப்பின் பயிரைக் கெடுக்காவண்ணம் ஊடே புகுந்து மீண்டும் அவனை அவனாய் மீட்டெடுத்த பாசமும் அதைக் கதையாக்கிய விதமும் அழகு. பாராட்டுகள் டெல்லாஸ் அவர்களே.

சிறிய வேண்டுகோள்: நேரம் கிடைக்கும்போது மற்றப் படைப்புகளையும் படித்து கருத்துரமிடுங்களேன். உங்களைப்போன்ற நல்ல படைப்பாளிகளின் பார்வையில் அவை மேலும் மெருகேறும்.

dellas
06-01-2011, 04:27 AM
நன்றி கீதம் அவர்கட்கு. கண்டிப்பாக செய்கிறேன்

கீதம்
06-01-2011, 10:48 PM
என் வேண்டுகோளை ஏற்று மற்றவர் படைப்புகளைப் படித்துக் கருத்திடுவதற்கு மிகவும் நன்றி, டெல்லாஸ் அவர்களே. தமிழ்மன்றத்தின் சிறப்பே பின்னூட்டங்கள்தாம். அவை பெருகப் பெருகப் படைப்பாளியின் ஆர்வமும் பெருகும். மீண்டும் என் மனமார்ந்த நன்றி.